எல்லாம் இருக்கும் போது சார் தான் என்பதால், “சொல்லுங்க செல்வம்” என்றான் அகிலன்.

“அது அண்ணாச்சி, என்கிட்ட ஷேர் பத்தி பேசினார். அதான் உங்ககிட்ட கேட்டு”

“செல்வா, செல்வா என்ன பேசுற நீ? அதெல்லாம் ஒன்னுமில்லை” என்று அண்ணாச்சி பதறி போய் செல்வத்தின் கையை பிடித்து நிறுத்தினார்.

“என்ன ஷேர்?” அகிலன் அவன் பொறுப்புக்கு வந்து கூர்மையாக கேட்டான்.

“அது வேற தம்பி, செல்வா தெரியாம உங்ககிட்ட கேட்டுட்டான்” அண்ணாச்சி சமாளிக்க பார்க்க,

“நீங்க சொல்லுங்க செல்வா” என்று மீண்டும் அமர்ந்துவிட்டான் அகிலன்.

அண்ணாச்சி இவனிடம் கண்களால் கெஞ்ச, “என்கிட்ட வர பணத்துல இவருக்கு ஷேர் கொடுக்கணுமான்னு கேட்டேன்” என்றான் செல்வம்.

“இவருக்கு எதுக்கு ஷேர்?” அகிலன் கடுமையுடன் கேட்க,

“அண்ணாச்சி தான் கேட்டார். முன்னாடி அவங்க பங்காளிகளுக்குள்ள அந்த டீலிங் இருந்திருக்கு, என்கிட்டேயும் எதிர்பார்க்கிறார்” என்றான் தெளிவாக.

“ஓஹ். அதை நான் பார்த்துகிறேன். இனி எங்களுக்கு மட்டும் தான். கவனமா இருங்க செல்வா. உங்களோட பொறுப்பு எல்லாம்” என்ற அகிலன், ஒருமுறை அண்ணாச்சியை பார்த்தே செல்வத்துடன் கிளம்பினான்.

“பின்னாடி இதெல்லாம் வேற நடக்குதா? எப்படியும் வருமானம் எங்களுக்கு முழுசா வந்து சேராது தான்” என்றான் அகிலன் கார் ஓட்டி கொண்டே.

“சொத்து பாதுகாப்பா இருக்கிறது தானே உங்களுக்கு வேணும். அப்புறம் என்ன?” என்றுவிட்ட செல்வம், “இதுவும் அண்ணாச்சிக்கு ஒரு செக்கா இருக்கட்டும்ன்னு தான் அவர் முன்னாடியே உன்கிட்ட கேட்டேன். பார்த்துக்கோ” என்றான்.

“யப்பா சாமி. நீ சாதாரண செல்வா இல்லை. எதுக்கும் உன்கிட்ட நான் கொஞ்சம் உஷாரா இருந்துக்கிறேன்” என்றான் அகிலன் தலையை சிலுப்பி.

“ஏன் நீயும் அவங்களை மாதிரி என் முதுகுல குத்த போறியா என்ன?” என்று செல்வம் கேட்ட தீர்க்கத்தில்,

அகிலன் “டேய் என்னை விட்டுடு. அது சும்மா தான்” என்று கையை தூக்கி விட்டான்.

 இருவரும் நேரே அவனின் டீ கடைக்கு தான் வந்தனர். நாராயணன் மருத்துவமனையில் இருக்க, நாச்சி அவருடன் தான் இருந்தாள்.

அகிலனுக்கு சாப்பிட கொடுத்து, அவன் கிளம்பவும் மனைவியை பார்க்க மருத்துவமனை வந்தான்.

அங்கு தண்டபாணி சம்மந்தியை பார்த்து வெளியில் வந்தார். “ரொம்ப முக்கியம்” என்று நினைத்து கொண்டான் மகன்.

“நானே உன்னை பார்க்க தான் கிளம்பினேன்” என்றார் தந்தை.

“உன் அக்கா நம்ம வீட்ல தான் இருக்கா. லீவாம், இருந்து சொத்து எழுதிட்டே போறேன்னு கேட்கிறா” என்றார்.

செல்வம் புருவங்கள் சுருங்க, “உன் அண்ணாவும் அவளுக்கு சப்போர்ட். மெயின் ரோட்ல இருக்கவும் நம்ம சொத்துங்களுக்கு மதிப்பு ஏறி போச்சு. அவனோடதை பாதுகாக்க, உன்னோடதை தூக்கி கொடுக்க பார்க்கிறான். நேத்துல இருந்து என் உயிரை வாங்குறாங்க” என்றான் மனிதர் துண்டால் முகம் துடைத்து.

செல்வம் அவரை அழைத்து வந்து சாப்பிட வைத்தவன், என்ன, ஏது என்று முழுதும் கேட்டு கொண்டு, “நான் போன் பண்றேன். உங்களுக்கு அங்க முடியலைன்னா வந்துடுங்க” என்றான்.

“ம்ம். நீ சீக்கிரம் இதை என்னன்னு பார்த்து முடி. உனக்கு கொடுக்காம போனா உன் அம்மா என்னை மன்னிக்கவே மாட்டா” என்றவர் அவரின் XLவண்டியை உருட்டி கொண்டு கிளம்பினார்.

செல்வம் அவர் சென்ற பின்னும் சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தவன், மனைவியை தேடி கொண்டு வந்தான்.

நாராயணன் அறையில் நாச்சி, கமலா இருக்க, “வாங்க மாப்பிள்ளை” என்றார் கமலா.

செல்வம் தலையசைத்தவன், மனைவியிடம் “சாப்பிட்டியா?” என்று கேட்டான். உள்ளுக்குள் ஓர் எதிர்பார்ப்பு. மனைவி தன்னுடன் பேசுவாளா என்று.

முத்து பெண்ணோ, “இல்லை” என்று தலையசைக்க, ஏமாற்றமே.

“சரி வா சாப்பிட போலாம்” என்றழைத்தவன், “நீங்க சாப்பிட்டீங்களா அத்தை” என்று மாமியாரிடம் கேட்டான்.

“ஆச்சு மாப்பிள்ளை. நீங்க போங்க” என்றார் அவர் மகிழ்ந்து.

நாராயணனை கண்டு கொள்ளாமல் மனைவியுடன் கிளம்ப, “நீயா அடிபட்டு படுத்துகிடக்க, உன்னை விசாரிச்சுட்டு போறான்” என்று மாமனார் குதித்தார்.

“உங்க பொண்ணு உங்கிட்ட கேட்ட சீரை இப்போவரை கொடுக்காம அவரை குறை சொல்றீங்க” என்றார் கமலா. நாராயணன் புரிந்து அமைதியாகிவிட்டார்.

ரவி சாப்பிட்டானா என்று கேட்டு கொண்டு,  மனைவியுடன் சாப்பிட்டு முடித்தான் செல்வம். “டல்லா இருக்கீங்க?” மனைவி கையசைவில் கேட்டு அவன் நெற்றியை தொட்டு பார்த்தாள்.

“நல்லா இருக்கேன்” என்றவனுக்குள் பல எண்ணங்கள். முதலில் மனைவியும், அப்பாவும் நின்றனர்.

முத்து பெண் அவனையே பார்த்திருக்க, “என்ன சொல்றாங்க? எப்போ உன் அப்பா வீட்டுக்கு போறது?” என்று கேட்டான்.

நாராயணன் இன்றே செல்ல வேண்டும் என்று மருத்துவர்களிடம் நச்சு செய்து கொண்டிருந்ததில், செல்வத்திற்கு மகிழ்ச்சியே.

‘நைட் முத்து மாலைக்கு வேலை இருக்கு’ என்ற உல்லாசத்துடன் டீ கடை சென்றான்.

மாலை ரவியிடம் இருந்து போன் வர, எடுக்க கூட செய்யாமல் முத்து பெண்ணை கூட்டி வர பறந்துவிட்டான்.

அங்கு நாராயணனும் தயாராக இருக்க, “அவ்வளவு தானே. நாம கிளம்பலாம்” என்றான் மனைவியிடம் நேரே.

இன்று அவளை என்னவென்று கேட்டுவிட வேண்டும். கடந்த சில நாட்களாக எதுவும் சரியாக இல்லை. இவர்களுக்குள் நெருக்கமும் இல்லை.

தனிமையில் முத்து பெண்ணை அதிகமே எதிர்பார்த்தான். புது தம்பதிக்கான ஆசையும் எக்கச்சக்கமே.

மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் அவளின் கை பிடித்து கொள்ள, மனைவியோ அவனை கெஞ்சலாக பார்த்திருந்தாள்.

“என்னவாம்?” என்று கேட்டவன், அவளின் விரல்களை பிணைத்து கொண்டான்.

“அது மாப்பிள்ளை. நாச்சியும், நீங்களும் நம்ம வீட்டுக்கு வரணும். ஒரு இரண்டு நாள் எங்களோட இருந்துட்டு வாங்க” என்றார் கமலா.

“என்ன, ஏன்? நான் வரலை. நாச்சியும் இங்க இருந்தா இல்லை” செல்வத்திடம் மறுப்பு.

“இல்லை மாப்பிள்ளை. கல்யாணம் முடிச்சதுல இருந்து நீங்க அங்க வரவே இல்லை. அதான். கூட அவங்க அப்பாக்கும் பொண்ணு இருந்தா கொஞ்சம் தெம்பா இருக்கும்”

“தெம்பா இருக்க சூப் வைச்சு கொடுங்க. போதும்”

நாராயணன் மருமகனை கடுப்பாக பார்க்க, “எப்போவும் இவர் எனக்கு வில்லன் தான்” என்று மருமகனும் அவரை கண்கள் இடுக்கி பார்த்தான்.

“மாப்பிள்ளை. ஒரு இரண்டு நாள்டா. ப்ளீஸ்” என்று ரவி இருவருக்கும் இடையில் வந்து நின்றான்.

“நாங்களும் நாச்சியை மிஸ் பண்றோம்டா. சட்டுன்னு கல்யாணம் முடிச்சு வந்திட்டா. இப்போவாவது வந்து எங்களோட இருக்கணும்ன்னு, கொஞ்சம் பாருடா” என்றான் அண்ணன்.

மனைவியை பார்க்க, அவளுக்கும் அந்த ஆசை எட்டி பார்த்தது போல. மறைத்து, நீங்க சொல்றது தான் என்பது போன்றே இருந்தாள்.

அப்பாவை இப்படி விட்டு வர கஷ்டப்படுவா, எல்லாம் இவரால. திரும்ப மாமனார் பக்கம் பார்வை போக, “மாப்பிள்ளை” என்று ரவி கண்களால் கெஞ்சினான்.

‘முத்து மாலை தப்பிச்சிடுச்சு’

“சரி” என்றான் செல்வம்.

“தேங்க்ஸ்டா மாப்பிள்ளை. வா போலாம்” என்று நண்பனின் கை பிடிக்க,

“கை உடைஞ்சிட்டா  பரவாயில்லையா?” என்று கேட்டுவைத்தான் செல்வம்.

“சரி, சரி நீ பாரு” என்று ரவி கையை உருவிக்கொள்ள, மாமியாரும் மருமகனை கேட்டு பார்த்துவிட்டார்.

மருத்துவர்கள் நாராயணன் பிடிவாதத்தில் கிளம்ப சொல்லிவிட, எல்லாம் வெளியே வந்தனர். மாமனார் காருக்கு செல்லும் முன், “வீட்டுக்கு வாங்க” என்றார் மருமகனிடம். அதுவும் மகளுக்காக தான்.

செல்வம் தலை மட்டும் ஆட்டி மறுத்துவிட, முத்து பெண்ணுக்கு தான் இப்போது தடுமாற்றம்.

‘தனியா இருப்பாரே’ என்று அவனின் அருகிலே நிற்க,

“வா நாச்சி” என்றழைத்தார் கமலா.

“இதோம்மா” என்றவள், இன்னமும் கணவனின் தோளில் தான் உரசி நின்றிருந்தாள்.

ரவியும் காரை எடுத்துவிட, வேறு வழி இல்லாமல் காரில் அமர்ந்தவளுக்கு கதவை மூடிவிட்ட செல்வம், அவளின் காதில், “முத்து மாலைக்கு நிறையவே ரெஸ்ட் கொடுக்கிற, பார்த்துகிறேன் உன்னை” என்றான்.

முத்து பெண்ணுக்கு அவனை புரிந்துவிட, கண்ணில் இருந்து மறையும் வரை கணவனை பார்த்தே சென்றாள்.

மறுநாள் காலை செல்வத்தின் போன் ஒலிக்க அகிலன். “என்னடா?” என்று எடுக்க,

“உன்னை அவர் பார்க்கணுமாம்டா” என்றான் ஒருவித பதட்டத்துடன்.

“யாரைடா சொல்ற?” செல்வம் புரியாமல் கேட்க,

“டேய். அவர்டா. எங்க அடுத்த CM கேண்டிடேட். அவர்தான் உன்னை பார்க்கணுமாம். இப்போவே, உடனே நீ கிளம்பணும்” என்றான் அகிலன் பரபரப்பாக.