அத்தியாயம் 6
ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த தென்னந்தோப்பு ஒன்றில் தான் அன்று படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
உணவு இடைவேளை நேரத்தில் அந்தப் படப்பிடிப்புத் தளமே கலகலத்துக் கிடந்தது. டெக்னீஷியன்கள் அவர்கள் குழுவுடன் ஒரு இடத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, துணை நடிகர்கள் ஒரு குழுவாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்படத்தின் நாயகி நித்யஸ்ரீயும், நாயகன் ரவியும், டைரக்டர் பாஸ்கரும் ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். ஹோட்டலில் இருந்து கொண்டு வந்திருந்த உணவுகளை பாஸ்கரின் அசிஸ்டன்ட் மேஜையில் நிரப்ப, நித்யாவின் அசிஸ்டன்டான செல்வி நித்யாவின் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த அடுக்கு உணவுக் கேரியரைப் பிரித்து மேஜையில் நிரப்பினாள்.
“ரவிண்ணா, இன்னிக்கு வீட்டுல இருந்து அம்மா ஸ்பெஷலா சமைச்சுக் கொடுத்திருக்காங்க, சாப்பிட்டுப் பாருங்க. பாஸ்கர் சார் நீங்களும் எடுத்துக்கங்க…” கண்ணைச் சுருக்கி சிரிப்புடன் சொன்ன நித்யாவைக் கண்டு புன்னகைத்தனர் இருவரும்.
“இன்னிக்கு உங்க வீட்டுல என்ன விசேஷம் நித்யா மா?” கேட்டுக் கொண்டே ஒரு பாத்திரத்தை ரவி திறக்க இறால் பிரியாணி மணமணத்தது.
“இன்னிக்கு அம்மா, அப்பாவோட 30 வது கல்யாண நாள். எங்கம்மா சூப்பரா சமைப்பாங்க தெரியுமா?”
பெருமையுடன் சொன்னவள், அடுத்த பாத்திரத்தைத் திறக்க, வஞ்சிரம் மீன் வறுவல், இன்னொரு பாத்திரத்தில் சாதம், சாம்பார், ரசம், அவியல் என நிறையப் பதார்த்தங்கள் அதிக அளவிலேயே இருந்தது. எல்லாமே பார்த்ததுமே நாவில் சுவை அரும்பினைத் தூண்ட வைக்கும் உணவுகள்.
“அட, இன்னிக்கு உங்கம்மா இவ்ளோ உனக்கு சாப்பிடக் கொடுத்து விட்டிருக்காங்களே…” என ரவி சிரிக்க,
“போங்கண்ணா, எப்பப் பார்த்தாலும் ஜெயில் மாதிரி அளவு சாப்பாடு கொடுக்கிறவங்க, இன்னைக்கு ஏதோ மனசு வந்து இதெல்லாம் கொடுத்து விட்டிருக்காங்க, நீங்க கண்ணுப் போடாதீங்க…” எனச் சொல்லிக் கொண்டே அதை ரசனையுடன் ருசித்து சாப்பிடத் தொடங்கினாள் நித்யா.
“எல்லாமே ரொம்ப டேஸ்ட்டா இருக்கு நித்தி மா… உன் புண்ணியத்துல இன்னிக்கு எங்களுக்கும் நல்ல சாப்பாடு” எனப் பாராட்டிக் கொண்டே சாப்பிட்டார் பாஸ்கர்.
“என்னதான் சொல்லுங்க, வீட்டுச் சாப்பாடு வீட்டுச் சாப்பாடு தான் சார். அதும் எங்கம்மா சமைச்சா ஆஹான்னு இருக்கும்…” என ஊறுகாயைச் சப்புக் கொட்டியபடி ருசித்து சாப்பிட்டாள் நித்யா.
“செல்வி, நீயும் ஒரு பிளேட் எடுத்துப் போட்டு சாப்பிடு…” என அவளையும் அழைக்க, செல்வியோ டைரக்டர், ஹீரோவுடன் அமர்ந்து சாப்பிடக் கூச்சப்பட்டு, “நான் அப்புறம் சாப்பிடறேன் மேடம்…” எனத் தவிர்த்து விட்டாள்.
சாப்பிட்டு முடித்துக் கை கழுவி அமர்ந்தவர்களைத் தென்னந் தோப்பிலிருந்து வந்த தென்றல் காற்று சினேகமாய்ச் சிலிர்க்க வைத்தது.
“சிலுசிலுன்னு வீசுற இந்தக் காத்துக்கு அப்படியே ஓரமா ஒரு கயித்துக் கட்டிலைப் போட்டுப் படுத்தா எப்படி இருக்கும்?” எனச் சொல்லியவளுக்கு கண்கள் உறக்கத்துக்காய் ஏங்கியது.
முன்தினம் பொள்ளாச்சியில் ஒரு ஷூட்டிங் முடித்துவிட்டு, அப்படியே காலையில் இங்கே வந்திருந்தாள். இன்னும் வீட்டுக்குக் கூடச் செல்லவில்லை. அதனால் தான் வீட்டிலிருந்து விசேஷ சாப்பாடு அவளைத் தேடி இங்கே வந்திருந்தது.
“ஹஹா, உனக்கு எப்பவும், சாப்பாடு தூக்கம் தானா? வேற எந்த ஆசையும் இல்லையா?” ரவி அவளைக் கலாய்க்க,
“ப்ச்… எனக்குப் பெரிய ஆசை எதுவும் இல்லண்ணா. நாமெல்லம் எதுக்குக் கஷ்டப்படறோம்? நல்லா சாப்பிட்டுச் சந்தோஷமா வாழணும்னு தானே. அப்புறம், இப்படி பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டு என்ன பண்ணறது. என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு மனுஷனுக்கு அத்தியாவசியத் தேவை உணவும், தூக்கமும் தான். அதைத் தாண்டி இந்த உலகத்துல எனக்கு எதுவுமே பெருசில்லை.”
“ம்ம்… என்னமா இப்படிச் சொல்லற? பார்த்து… யாராச்சும் சாப்பாடு வாங்கித் தரேன்னு உன்னைக் கடத்திட்டுப் போயிடப் போறாங்க” என்ற ரவி கிண்டலாய் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
‘ஹூக்கும், இவங்க யாருக்குமே சாப்பாடோட அருமை தெரியறது இல்லை. எல்லாம் அளவு சாப்பாடு சாப்பிட்டு இப்ப உடம்பை மெயின்டெயின் பண்ணிட்டு, வயசான காலத்துல சுகர், பிரஷர்னு வந்தப்புறம் எதையும் தின்னாமலே செத்துப் போயிட வேண்டியதுதான்’ எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவளும் அடுத்த காட்சிக்கு மேக்கப் போட எழுந்து சென்றாள்.
அந்தக் காட்சியைப் படமாக்கி முடித்ததும், அடுத்த ஷூட்டிங்கிற்கு ஏவிஎம் ஸ்டுடியோவுக்குக் காரில் கிளம்பியவளின் காதில், செல்வி ஏதோ கிசுகிசுக்க அவள் முகத்தில் கோபமும், வருத்தமும் தெரிந்தது.
“என்ன செல்வி சொல்லற?”
“ஆமா மேடம், நம்ம பாரதி சார் யூனிட்ல இருக்கற ஒருத்தர் தான் நேத்து இப்படி நடந்ததுன்னு சொன்னாரு. நேத்து நீங்க வேற ஊருல இல்லைல. பாவம் ராம் சார். அம்மாவும், அண்ணன்களும் ரொம்பக் கேவலமாப் பேசி அசிங்கப்படுத்தவும், அவமானத்துல கூனிக் குறுகிப் போயிட்டாராம். மணி பாரதி சாருக்கும், ஏண்டா இவன் பேச்சைக் கேட்டு உங்க வீட்டுக்குப் போனோம்னு ஆகிருச்சாம். உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுப் போயிருக்கலாம்னு வருத்தப் பட்டாராம். அண்ணனுங்க அடிச்சதுல அவர் உதடு கிழிஞ்சு ரத்தம் வந்திருச்சாம். சட்டை எல்லாம் கூட இழுத்ததுல கிழிஞ்சு போயி வெளிய தள்ளி விட்டாங்களாம்” எனத் தன் காதுக்கு வந்த செய்தியை அப்படியே நித்யாவின் காதில் போட்டு விட்டாள் கலைச்செல்வி.
அதைக் கேட்டதும் நித்யாவின் மனம் கோபத்திலும், தன் வீட்டார் அந்த அப்பாவி மனிதனிடம் நடந்து கொண்ட விதத்திலும் தவியாய் தவித்தது.
‘அவருக்கு என்னைப் பிடிச்சிருக்கு, வீட்டுக்கு வந்து உங்க பொண்ணைக் கட்டிக் கொடுங்கன்னு கேட்டிருக்கார். அவங்களுக்குப் பொண்ணைக் கொடுக்க விருப்பம் இல்லேன்னா அதைச் சொல்ல வேண்டியது தானே. அதைவிட்டு அவரை அடிக்கணுமா? பாவம், நான் விளையாட்டா அவர்கிட்ட வீட்டுல வந்து பேசுங்கன்னு சொன்னதை நம்பி வந்துட்டார் போலருக்கு. மணிபாரதி சார் எவ்வளவு பெரிய் டைரக்டர். அவர் என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பார்? அவரையும் கொஞ்சம் கூட மதிக்காம கோபமாய் பேசி இருக்காங்களே’ என மனதுக்குள் புலம்பினாள் நித்யா.
‘ச்சே. தேவை இல்லாமல் நானும் ராம் மனசுல ஆசையை வளர்த்து விட்டுட்டனே. பாவம், வெள்ளந்தியான மனுஷன். என்னை ரொம்ப நேசிக்கிறார். ஏதோ நடிகைங்கிற ஆசைல லவ் லெட்டர் எல்லாம் கொடுக்கிறார்னு நினைச்சா, உண்மையா என்னை விரும்புவார் போலருக்கே’ மனதுக்குள் பலதும் யோசித்து மருகினாள்.
உடனே வீட்டுக்குச் சென்று அன்னையிடம் நியாயம் கேட்க மனம் துடித்தாலும், ஷூட்டிங் இருந்ததால் உடனடியாய் அவளால் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை.
காட்சியைப் படமாக்க எல்லாத்தையும் தயார் செய்து வைத்த பிறகு நடிக்க வேண்டியவர் வர முடியாது எனச் சொன்னால் அதில் எத்தனை நஷ்டம், கஷ்டம் என அவளுக்கு நன்றாகவே தெரியும். எனவே தனது உணர்ச்சிகளைத் தனக்குள் ஒதுக்கிக் கொண்டு அந்தக் காட்சியில் நடித்து முடித்து வீட்டுக்குக் கிளம்புகையில் இரவாகத் தொடங்கி இருந்தது.
நித்யா கோபத்துடன் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைய, அங்கே ஹாலில் தந்தையும், தாயும் நடுநாயகமாய் நிற்க, அவர்கள் முன்னில் ஒரு கேக் வெட்டுவதற்காய் வைக்கப் பட்டிருந்தது. அவர்களைச் சுற்றிலும் நித்யாவின் உடன் பிறப்புகளும், பாட்டி தாட்சாயணியும், மேலும் சில முக்கிய உறவுகளும் கூடி இருந்தனர்.
“அடடே, நித்யா வந்துட்டாளே…” நித்யா காரிலிருந்து இறங்கி வருவதைக் கண்ட பாட்டி தாட்சாயணி புன்னகையுடன் பேத்தியை நோக்க், அனைவரின் பார்வையும் அவளை நோக்கித் தான் திரும்பியது.
“வாடிம்மா, நீ இன்னும் வரலைன்னு உங்கம்மாவும், அப்பாவும் கேக் வெட்ட மாட்டோம்னு அடம் பிடிச்சுட்டு நிக்குறாங்க, ரொம்பக் களைச்சுப் போயிருக்கியாடி குழந்தே. முகமெல்லாம் சோர்ந்து கிடக்கே” தனது தோல் சுருங்கிய கையால் அவளது கையைப் பரிவுடன் பற்றி ஆதரவாய் விசாரித்த பாட்டியைக் கண்டதும், ஏனோ அவளுக்குக் கண்கள் கலங்கின. இருந்தாலும் நொடியில் தன்னைச் சரி செய்து கொண்டவள் சிரிப்புடன் அவரை ஏறிட்டாள்.
“ஹேய் பியூட்டி, நீங்க எப்ப வந்தீங்க?” என எப்போதும் போலத் தன் பாட்டியை அழைக்க அவர் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை.
“நாங்க மதியமே வந்துட்டோம்டி. நீதான் அங்கயும், இங்கயுமா ஷூட்டிங்னு ஊரு ஊரா ஓய்வில்லாமச் சுத்திட்டு இருக்கே, எனக்கு என்னடிம்மா, வீட்டுல சும்மாதானே ஈஸி சேர்ல உக்கார்ந்திருக்கேன். உன் மாமனும், அத்தையும் மதியமே என்னையும் அழைச்சிட்டு வந்துட்டாங்க” எனக் கூற அதற்குள் மற்றவர்களும் நித்யாவைக் கண்டு நலம் விசாரிக்கத் தொடங்க சிரிப்புடன் பதில் சொன்னாள்.
‘ச்சே, ஷூட்டிங் முடிச்சு வீட்டுக்கு வந்தா இங்கயும் எல்லார் கிட்டயும் நடிக்க வேண்டிருக்கே’ என மனதுக்குள் புலம்பிக் கொண்டே அந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டாள்.
பெற்றோர் இருவரும் கேக் வெட்ட அண்ணன்கள் இருவரும் தங்கள் மனைவியுடன் ஜோடியாய் நின்று அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள, உறவினர்கள் வாழ்த்திப் பரிசளிக்க எதிலும் மனம் ஒட்டாமலே அங்கே நின்றிருந்தாள் நித்யா.
“என்னடி நித்தி, உன் அப்பா, அம்மா கல்யாண நாளுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கப் போற?” அவளது அத்தை ஆர்வமாய் விசாரிக்க, அப்போதுதான் தான் எதுவும் பரிசாக வாங்கி வரவில்லை என்பது புரிய, “அதுக்கென்ன அத்தை, நானே அவங்களுக்குப் பெரிய கிஃப்ட் தானே…” எனக் கண்ணைச் சுருக்கிச் சிரிக்க அனைவரும் சிரித்தனர்.
“அதும் சரிதான். உன்னால தான நம்ம குடும்பமே இப்ப நல்ல நிலமைக்கு வந்திருக்கு.” என அவரும் பெருமைப்பட்டுக் கொண்டார். பின்னே, அவர்களின் இரு பிள்ளைகளும் இண்டர்நேஷனல் ஸ்கூலில் படிப்பதற்குப் பணத்தை வாரிக் கொடுப்பது நித்யா தானே.
“சரி, எல்லாரும் பார்ட்டியை எஞ்சாய் பண்ணுங்க, நான் கொஞ்சம் பிரஷ் ஆகிட்டு வந்துடறேன்…” என நகரப் போனவளை ரோகிணியின் குரல் நிறுத்தியது.
“நித்தி…” அவரைத் திரும்பிப் பார்த்தவளை நெருங்கியவர், அவளை ஒரு ஓரமாய் அழைத்துச் சென்றார்.
“நித்தி, இன்னைக்கு ஒரு ஹிந்திப் பட டைரக்டர் கால் பண்ணி இருந்தார். உன்னோட மருதாணி படத்தை ஹிந்தில ரீமேக் பண்ணப் போறாங்களாம். அதுல நீயே நடிக்க முடியுமான்னு கேட்டார்.”
“ம்ம்.. நீங்க என்ன சொன்னீங்க?”
“இன்னும் ஒரு வருஷத்துக்கு சுத்தமா கால்ஷீட் இல்ல, அப்புறம் பார்த்திட்டுச் சொல்லறேன்னு சொன்னேன்…”
“ம்ம்…” என்றவளின் சோர்ந்த முகத்தை ஆழ்ந்து நோக்கியவர், “ஏன் ஒருமாதிரி இருக்க? உடம்புக்கு எதுவும் முடியலியா?” எனக் கேட்க,
“ப்ச், மாத்தி மாத்தி ஷூட்டிங் போயி போரடிக்குது மா… ரொம்ப டயர்டா இருக்கு…” சலிப்புடன் சொன்ன மகளை யோசனையுடன் பார்த்தவர்,
“சரி, நீ ரூமுக்குப் போயி ஃபிரெஷ் ஆகு. டின்னரை ரூமுக்குக் கொடுத்தனுப்பறேன். சாப்பிட்டுத் தூங்கு, நாளைக்குப் பேசிக்கலாம்” எனச் சொல்ல இப்போதைய வீட்டுச் சூழலில் அவளும் எதையும் பேச விரும்பவில்லை. எனவே, அமைதியாய் தலையாட்டி விட்டுத் தனது அறைக்குச் சென்றவள் அலுப்புத் தீரக் குளித்தாள்.
எப்போதும் அறையில் அவளது மேஜை மேல் வைத்திருக்கும் ஆதிபராசக்தியின் போட்டோவைப் பார்த்து மனமாரப் பிரார்த்தித்து, காயத்ரி மந்திரத்தை உச்சரித்தவள் நெற்றி நிறையத் திருநீறை எடுத்துப் பட்டை இட்டுக் கொண்டாள். அது அவளுக்கு மிகவும் பிடிக்கும். மனதை ஒருமுகப்படுத்தி அன்னையை வணங்கியதில், மனதிலுள்ள குழப்பங்கள் சற்றே தெளிந்தது போல் தோன்றியது.
அதற்குள் இரவு உணவு பணியாள் மூலமாக அறைக்கு வரத் திறந்து பார்த்தாள். ஒரு சின்னக் கப்பில் சிக்கன் பிரியாணியும், ஒரு சப்பாத்தியும் குருமாவும், ஒரு பவுலில் வெஜிடபிள் சூப்பும் இருந்தது.
அவளுக்குச் சிக்கன் பிரியாணி ரொம்பப் பிடிக்கும். ஆனால், எப்போதாவது தான் கண்ணில் காட்டுவார் ரோகிணி. இன்று வீட்டில் விசேஷம் என்பதால் இதையாவது கொடுத்திருக்கிறார். கீழே அனைவரும் விரும்பியதை வேண்டிய அளவு சாப்பிடும்போது தனக்கு மட்டும், இப்படிப் பத்தியும், பத்தாமல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவது போல் கொஞ்சமாய் உணவைக் கண்ணில் காட்டுவதில் நித்யாவுக்குக் எரிச்சலாய் வந்தது. எல்லாம் இந்த சினிமாவில் நடிப்பதால் தானே எனக் கோபம் வந்தது.
‘ச்சே, அடுத்து என்னோட எந்தப் படமும் நல்லா ஓடாம, யாரும் புதுப் படத்துக்கு என்னை ஹீரோயினா புக் பண்ணாம, நான் ஃபீல்டுல இருந்தே அவுட்டாகிடனும் தாயே. நான் கேக்கற எல்லாத்தையும் செய்து கொடுக்கிற நீ இதை மட்டும் ஏன் பண்ண மாட்டேங்கற? அப்பவாச்சும் நான் நிம்மதியா வீட்டுல உக்கார்ந்து மூணு நேரமும் நல்லாச் சாப்பிட்டு, நிம்மதியாத் தூங்குவேன்ல, இந்த விஷயத்துல மட்டும் எனக்கு உதவி பண்ணாம நான் நடிச்ச படத்தை எல்லாம் ஒரு வருஷம், 100 நாள்னு ஓட வச்சு உன் மகளைத் தின்ன விடாம பட்டினி போடறியே, இது நியாயமா?’ எனத் தனது அன்னை ஆதிபராசக்தியிடம் எப்போதும் போலப் புலம்பிக் கொண்டே சாப்பிட்டு முடித்தவளுக்கு அந்த உணவு அரை வயிறைக் கூட நிரப்பிய உணர்வே வரவில்லை.
புண் பட்ட நெஞ்சைப் புகை விட்டு ஆற்றுவது போல், பாதிக் காலியான வயிற்றைத் தண்ணீர் குடித்து ரொப்பிவிட்டுப் படுக்கையில் விழுந்தாள். மனம் மீண்டும் ராமில் வந்து நின்றது.
‘ராம் எங்கிட்ட எவ்வளவு அன்பா சாப்பிட்டிங்களா? தூங்கினிங்களான்னு அக்கறையா விசாரிப்பார். என் முகம் சோர்வா இருந்தாக் கூட அவரே புரிஞ்சுகிட்டு ஜூஸ், ஃபைவ் ஸ்டார்னு வாங்கிட்டு வந்து கொடுப்பார். இந்த அம்மா கூட இத்தனூண்டு சாப்பிடக் கொடுத்துட்டு, மறுபடி வேணுமானு கூடக் கேக்க மாட்டாங்க. நான் இப்படி ஒல்லிக் குச்சியாவே இருக்க வேண்டியது தான். என்கூட ஸ்கூல்ல படிச்ச ரமாவும், சுஜாவும் கல்யாணமாகி, குழந்தை பெத்து எவ்வளவு அழகா வாழ்க்கையை ரசிச்சு வாழறாங்க. எனக்கு மட்டும் எதுக்கு இந்த மிலிட்டரி வாழ்க்கையைத் தந்த கடவுளே. எல்லாப் பொண்ணுங்களையும் போல ஒரு இயல்பான வாழ்க்கை நான் வாழவே முடியாதா?’ என யோசித்தவளுக்கு இந்த ஆடம்பரமான, அவசர வாழ்க்கை மீது வெறுப்பாய் வந்தது. எளிமையாய் ஒரு இயல்பான வாழ்க்கை வாழ மனம் ஏங்கியது.
வெயிலில் படர முடியாத கொடி போலத் தவித்தவள் மனம், ராமின் அக்கறையிலும், அன்பிலும் அவனைப் பற்றிப் படர்ந்திட நினைத்தது. இதானே இயற்கையும். அவளுக்கு நடிப்பதற்கு நன்றாக வந்தாலும், பிடித்தாலும், இந்த அரிதார வாழ்க்கை பிடிக்கவே இல்லை. எல்லாவற்றையும் உதறிவிட்டு ஒரு சின்ன வீட்டில் நிம்மதியான வாழ்க்கை வாழவே மனதுக்கு ஆசையாக இருந்தது.
மறுநாள் காலையில் நித்யாவுக்கு ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்துக்கு சிறப்பு விருந்தினராய் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. மதியத்துக்கு மேல் தான் ஷூட்டிங் என்பதால் சற்று சாவதானமாய் காலையில் எழுந்தவள் குளித்து சாமிக்கு ஸ்லோகம் சொல்லி முடித்துக் கீழே வந்தாள்.
அவளைக் கண்ட ரோகிணி, அடுக்களையை நோக்கிக் குரல் கொடுத்தாள்.
“பார்வதி, நித்திக்கு பிரஷ் ஜூஸ் போட்டு எடுத்திட்டு வா” என்ற அன்னை அவளது கால்ஷீட் டைரியைப் பார்த்துக் கொண்டிருக்க, அமைதியாய் சோஃபாவில் அமர்ந்திருந்தாள் நித்யா. சிறிது நேரத்தில் ஜூஸ் வர பருகத் தொடங்கினாள். நித்யாவுக்கு டீ தான் பிடிக்கும் என்றாலும், அதைக் குடிக்க அனுமதியில்லை.
மற்ற யாரையும் கீழே காணவில்லை. அன்னையிடம் அன்று நடந்ததைப் பற்றிக் கேட்டுவிட நித்யாவின் மனது துடித்தது. அவள் அன்னை ரோகிணியிடம் அப்படியெல்லாம் மனதிலுள்ளதைச் சட்டென்று பேசி விட முடியாது. அவர் ஒரு தீர்மானம் எடுத்து விட்டால் அத்தனை சீக்கிரம் அதிலிருந்து மாற மாட்டார்.
“அம்மா… என்ன பார்க்கறீங்க?”
“அது… நீ கொஞ்ச நாளைக்கு மலையாளப் படத்துல மட்டும் நடிக்க வேண்டி இருக்கும். அதான், மொத்தம் எத்தனை படம் புக் ஆகிருக்கு, தமிழ் படத்துக்கு அப்ப கொடுத்த தேதியை எப்போதைக்கு மாத்த முடியும்னு பார்த்திட்டு இருக்கேன்.” குனிந்தபடியே அதில் பார்த்துக் கொண்டு ரோகிணி சொல்ல நித்யா குழம்பினாள்.
“எதுக்குமா டேட் மாத்தணும்? எல்லாம் சரியா தான கொடுத்து இருக்கீங்க?” என்ற மகளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்க, அது அவள் இதயம் வரை ஊடுருவியது.
“டேட் எல்லாம் சரியா தான் இருக்கு, ஆனா நடக்கற எதுவும் சரியா இருக்கற மாதிரி தெரியலியே” என்றவருக்கா தெரியாது. மகளின் முகம் பார்த்தே அகம் படிப்பதில் அவர் வல்லவராயிற்றே. எப்படி இருந்தாலும், ராம் வீட்டுக்கு வந்தபோது நடந்தது அவள் காதுக்கும் சென்று விடுமென்று யோசிக்கக் கூட முடியாதவரா என்ன?
அன்னையின் கேள்வி முதலில் நித்யாவுக்குப் புரியாமல் இருந்தாலும், பிறகு புரிந்து விட்டது.
“அன்னைக்கு என்ன நடந்துச்சு மா?” நேரடியாய் விஷயத்துக்கு வந்தாள் மகள்.
மகளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவர், “என்ன தைரியத்துல அந்த ராம் உன்னைப் பெண் கேட்டு வீட்டுக்கு வந்தான்?” எனக் கேள்வியை மகளிடம் திருப்பினார் அன்னை.
“இதுல என்ன இருக்கு? அவருக்கு என்னைப் பிடிச்சிருக்கு. முறைப்படி பெண் கேட்டு வந்திருப்பார்”
“ஓ! உனக்கு அவன்மேல காதல் எதுவும் இல்ல?”
அவர் கேள்விக்குப் பட்டென்று பதில் சொல்ல முடியாது யோசித்தவள், “அப்படி இல்ல, எனக்கும் அவரைப் பிடிக்கும்”
“பிடிக்கும்னா, எந்த வகைல பிடிக்கும். நம்ம வீட்டுல ஒரு நாய் வளர்த்தறமே ஜிம்மி, அது போல அவனை உனக்குப் பிடிக்குமா? இல்ல, குழந்தைங்க பொம்மையைப் பார்த்து ஆசைப்படுமே, அதுபோல அவனை உனக்குப் பிடிக்குமா? எந்த வகைல பிடிக்கும்?’ என இளக்காரமாகக் கேட்ட அன்னையை முறைத்தாள் மகள்.
“அம்மா, ஏன் இப்படிப் பேசறீங்க?”
“பின்ன? பின்ன எப்படி என்னைப் பேசச் சொல்லற? நம்ம தகுதி என்ன? தராதரம் என்ன? சினிமாத் தியேட்டர்ல டிக்கட் கிழிச்ச நாய்க்கு, நம்ம வீட்டுல சம்மந்தம் கேக்குதோ?” கோபத்துடன் கொக்கரித்த அன்னையைக் கண்டு பயம் வந்தாலும்,
“மா, நாமளும் பிறந்தப்பவே இத்தனை வசதி எல்லாம் இல்லையே, எல்லாம் இப்ப வந்தது தான. அவரும் பெரிய டைரக்டராகி நிறைய சம்பாதிச்சுப் பெரிய ஆளா வருவார்”
“ஜோசியம் பார்த்தியா? இல்ல கனவு கண்டியா? மொசப் புடிக்கற நாயி எதுன்னு மூஞ்சியப் பார்த்தா தெரியாதா?”
“அம்மா, ஏன் இப்படி நாய்னு எல்லாம் அவரைக் கேவலமாப் பேசறீங்க? ஒரு வீட்டுல கல்யாண வயசுல பொண்ணு இருந்தா நாலு பேரு பொண்ணு கேட்டு வரத்தான செய்வாங்க?” அன்னையிடம் கோபமாய் பேசினால் வேலையாகாது எனத் தெரியுமாதலால் அமைதியாகவே பேசினாள் நித்யா.
“அதுக்காக, ரோட்டுல போறவனும், பிச்சை எடுக்கறவனும் எல்லாம் என் வீட்டுப் படியேறி வந்து என் பொண்ணைக் கேப்பானா?”
“எப்படி இருந்தாலும் யாராச்சும் ஒருத்தருக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து தான ஆகணும்?” எனச் சிரித்தாள் மகள்.
“ஏன்? கல்யாணம் பண்ணாம வாழ முடியாதா? எதுக்கு அந்தக் கருமத்தைப் பண்ணனும்? கல்யாணம் பண்ணவங்க எல்லாம் இங்கே என்னத்தை சாதிச்சோம்? இப்ப உனக்குக் கிடைக்கிற பணமும், புகழும் கல்யாணமானால் கிடைச்சிருக்குமா? குழந்தை, புருஷன்னு தலையில சுமையை ஏத்திட்டு, எப்பப் பார்த்தாலும் அவங்களுக்காக வாழறதெல்லாம் ஒரு வாழ்க்கையா?”
“ஓ! அப்ப நீங்க ஏன் மா கல்யாணம் பண்ணீங்க?”
“தெரியாமப் பண்ணிட்டேன், அதுக்குதான் இப்ப அனுபவிக்கறேன்.”
“அப்படின்னா, என்னை நீங்க யாருக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டிங்களா?” நித்யா அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“இங்க பாரு நித்தி, தேவையில்லாத விஷயத்தைப் பேசி டைம் வேஸ்ட் பண்ணாத. உனக்கு கல்யாணம்லாம் வேண்டாம். இப்ப கிடைக்கற வாய்ப்பைப் பயன்படுத்தி லைஃப்ல நல்லா செட்டில் ஆகப் பாரு. அதை விட்டுக் கல்யாணத்தைப் பத்தி எல்லாம் யோசிக்காத” அன்னை சொன்னதைக் கேட்டவளுக்கு அடுத்து என்ன பேசவென்றே தெரியவில்லை.
தன்னைப் பொன் முட்டையிடும் வாத்தாக தான், அன்னை நினைக்கிறாள் என்பது புரிய வாழ்க்கையே வெறுத்துப் போனது.
“என்ன? நான் சொன்னது புரிஞ்சுதா? இனி செட்டுல யாரு கூடவும் இளிச்சுப் பேசாத. அப்புறம் இப்படிதான் வந்து நிப்பானுங்க. அந்த ராம் இனி உன் பக்கமே திரும்ப மாட்டான். அந்தளவுக்கு அவனை கவனிச்சு தான் அனுப்பிருக்கோம். இருந்தாலும், கொஞ்ச நாள் நீ சென்னையை விட்டுக் கேரளாவுல இருக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன். சரி, அதைப் பார்த்துக்கலாம். இப்பப் போயி தயார் ஆகு. அந்த அரங்கேற்றத்துக்குப் போயிட்டு வந்துடலாம். உனக்கான டிரஸ் எடுத்து வச்சிருக்கேன், மாத்திட்டு வா” என்றவர் அத்துடன் செய்திகள் முடிவடைந்தன என்பது போல் அங்கிருந்து எழுந்தார்.
நித்யா தான் சிறிது நேரம் மனதில் எந்த உணர்வுகளும் இல்லாமல் மரத்துப் போய் அப்படியே நின்றிருந்தாள். அன்னை சொன்ன வார்த்தைகள் அவள் மனதைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன. தனது அண்ணன்கள் இருவருக்கும் மணமுடித்து வைத்த அன்னை, தன்னைப் பணம் ஈட்டும் ஒரு பொருளாக மட்டுமே நினைப்பதில் மனம் கசந்து போனது.
ஒரு காதல் இடைவேளை…
-லதா பைஜூ