அத்தியாயம் 12

ஒட்டியாணத்தைக் கையில் எடுத்த நித்தியாவின் விழிகள் வியப்பில் குண்டு பல்பாய் விரிந்தது.

“இ..இது… இது…” எனத் திகைப்புடன் இழுக்க,

“ஆமா, இது… இது… அதே ஒட்டியாணம் தான்” எனச் சிரித்த ராமைக் கண்களில் காதல் வழியப் பார்த்தாள் அவன் மனைவி.

“என்னக்கா? நீயும் மாமாவும் ஏதோ ரகசிய பாஷை பேசிட்டு இருக்கீங்க? என்ன விஷயம்?” என்றாள் சத்யா.

“அது ஒண்ணுமில்ல சத்யா. போன வாரம் நாங்க நகைக்கடை திறப்புவிழா ஒண்ணுக்குப் போயிருந்தோம். அங்க இந்த ஒட்டியாணம் ஒரு பொம்மை இடுப்புல போட்டிருந்ததைப் பார்த்து எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ரொம்ப அழகாருக்கேன்னு தொட்டுத் தொட்டுப் பார்த்துட்டு இருந்தேன்…” என்றவள் முடிக்கும் முன் இடைப் புகுந்தாள் சத்யா.

“ஸ்டாப், ஸ்டாப்… இதுக்கு மேல நீ எதையும் விம் போட்டு விளக்க வேண்டாம். எனக்குப் புரிஞ்சிருச்சு.” என்றவளை அனைவரும் சிரிப்புடன் பார்க்க, நித்யா தங்கையிடம் “உனக்கு என்ன புரிஞ்சுதுன்னு சொல்லு பார்ப்போம்…” என்றாள்.

“நகைக்கடைல நீ அந்தப் பொம்மையோட ஒட்டியாணத்தை வெறிக்க வெறிக்கப் பார்க்கறதைப் பார்த்து மாமா அதையே உன் பிறந்தநாள் பரிசா வாங்கிட்டு வந்திட்டார், அதானே…” என்றவளை நோக்கிப் புன்னகை சிந்திய நித்யாவின் முகம் கணவனைப் பார்க்க, அவள் இதழ்களோ,

“ம்ம்… எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது… அடுத்த நிமிஷம் நான் என்ன நினைப்பேன், தும்முவேனா இருமுவேனான்னு எல்லாம் எனக்குத் தெரியுமோ இல்லியோ, என்னைப் பத்தி உன் மாமாக்கு நல்லாவே தெரியும்…” காதலுடன் சொன்னவளின் கையைப் பிடித்து ஹாலிலிருந்த மேஜைக்கு அழைத்துச் சென்ற ராம்,

“பேசினது போதும்… வந்து கேக் வெட்டுங்க ஸ்ரீமா…” எனச் சொல்ல, கேக் வெட்டி சந்தோஷமாய் கொண்டாடினர். அந்தப் பெரிய வீட்டின் கீழிருந்த அலுவலக அறையில் ரசிகர்கள் நிறைந்திருக்க, எல்லாருக்கும் இனிப்பு வழங்கி உணவுக்கும் ஏற்பாடு செய்தனர்.

நித்யாவின் அன்னை, அண்ணன்களுக்குக் கூட ராம், நித்யாவின் இடையிலிருந்த அன்னியோன்யத்தைப் பார்த்து ஆச்சரியமாகவே இருந்தது. முழு மனதாய் ராமை தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும், அவனை ஒதுக்கி வைக்க முடியாத அளவுக்கு அவனது வளர்ச்சி இருந்தது.

ராமின் அன்னைக்கு மருமகளை மிகவும் பிடிக்குமென்றாலும், கல்யாணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் மருமகளின் வயிற்றில் இன்னும் ஒரு வாரிசு உருவாகவில்லை என்பது பெரும் குறையாக இருந்தது. கிராமத்தில் அவரது உறவினர்களும் அடிக்கடி இதைப் பற்றி விசாரிக்க மறைமுகமாய் மருமகளிடம் அதைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

“அம்மா, குழந்தை எல்லாம் கடவுள் கொடுக்கிற வரம். அதை எப்பக் கொடுக்கணும்னு நினைக்கிறாரோ அப்பக் கொடுக்கட்டும். நீங்க தேவை இல்லாம ஸ்ரீ கிட்ட இதைப் பத்திப் பேசி அவங்களை வருத்தப்பட வைக்க வேண்டாம்…” என்ற மகனின் வார்த்தையைக் கேட்டு அவனை முறைத்தார் அன்னை.

“ஆமா, இப்படியே சொல்லிட்டு இரு… இங்க டவுனுல இருக்கற உங்களுக்கு இதைப் பத்தித் தெரியாது. நம்ம ஊருக்குப் போனா பாக்குறவக எல்லாம் மருமக உண்டாகி இருக்காளா? கல்யாணமாகி இவ்ளோ நாளாச்சே, எதுவும் குத்தம் குறை இருக்கப் போவுதோன்னு என்னைக் கேக்குறாங்க. நானும் ஒரு பேரனையோ, பேத்தியையோ கண்ணை மூடுறதுக்கு முன்ன கண்ணுல பார்க்கலாம். மீதி இருக்கற நாளை அதுங்களோட கழிச்சிட்டுப் போகலாம்னு காத்திட்டு இருக்கேன். சரி, ரெண்டு பேரும் ராசிப் பொருத்தம் எதுவும் பார்க்காம கல்யாணம் பண்ணதால தோஷம் எதுவும் இருந்தா, நம்ம ஜோசியரைப் பார்த்து அதுக்கு ஒரு பரிகாரத்தைப் பண்ணிட்டு வரலாம்னு நினைச்சா, அதுக்கும் நேரம் இல்லன்னு கூட வர மாட்டேங்கற…” என மனதிலுள்ள ஆதங்கத்தை மகனிடம் கொட்டிக் கொண்டிருக்க, அடுத்த அறையிலிருந்த நித்யா கேட்டிருந்தாள்.

கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.

அவளுக்கு மட்டும் அவளது ஆசைக் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் ஆசை இருக்காதா என்ன? கடவுள் தான் இன்னும் கண் திறக்கவில்லையே… தினமும் அவளது அன்னை பராசக்தியிடம், அவளும் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறாள்.

அத்தை சொன்ன இறுதி வார்த்தைகளைக் கேட்டவள் சட்டென்று இவர்கள் பேசிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

மனைவியின் கலங்கிய முகத்தைக் கண்ட ராம் பரிவுடன் அருகே வந்தான்.

“ஸ்ரீ… அம்மா ஏதோ மனசங்கடத்துல பேசிட்டு இருக்காங்க. நீங்க அதை நினைச்சு வருத்தப் படாதீங்க. குழந்தை உண்டாகறது எல்லாம் கடவுள் மனசு வைக்கும் போது தானா நடக்கும்…” என்றான் ஆறுதலாய்.

அவனை நோக்காமல் அத்தையிடம் சென்ற நித்யா, “அத்தை, நீங்க சொன்ன போல எங்க ரெண்டு பேருக்கும் தோஷம் ஏதாவது இருக்குமா?” எனக் கவலையுடன் கேட்க,

“நான் அப்படி சொல்லலமா. ஜாதகம் பார்த்து ஜோசியர் ஏதாச்சும் தோஷம் இருக்குன்னு சொன்னால்கூட நாம பரிகாரம் செய்தா சரியாகிடும்ல, அதுக்குதான் பார்க்கலாம்னு சொல்லறேன்…”

“நான் உங்ககூட வரேன் அத்தை… நாம போயி பார்க்கலாம்…”

“அதெல்லாம் எதுக்கு ஸ்ரீமா… அவரு ஏதாச்சும் சொல்லிட்டா தேவை இல்லாம மனசு வருத்தப்படும்…”

“இல்லீங்க, அத்தை சொல்லற போல ஜோசியரைப் பார்த்து என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கறது நல்லதுதானே…” எனப் பிடிவாதமாய் சொன்னவள் மறுநாளே அத்தையுடன் ஊருக்குக் கிளம்பிச் சென்றாள்.

வழக்கமாய் அவர்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் ஜோசியம் பார்க்கும் ஜோசியரிடம் சென்று ஜாதகத்தைக் காட்ட அவரும் கட்டம் கட்டமாய் வரைந்து, சோழியை உருட்டிப் பார்த்து, பெரிய புத்தகம் ஒன்றைப் புரட்டிவிட்டுத் தாடியை நீவியபடி யோசனையாய் அவர்களைப் பார்த்தார்.

“என்னங்கய்யா?” அவர் அமைதியைக் கண்டு மனம் பொறுக்காமல் அவசரமாய் கேட்டார் ராமின் அன்னை.

“ரெண்டு பேர் ஜாதகத்துலயும் சந்தான பாக்கியத்துக்கு குறை ஒண்ணும் இல்லை. ஆனா…” என அவர் இழுக்க,

“ஆனா என்னங்கய்யா? ஏதாவது பரிகாரம் பண்ண வேண்டி இருக்கா?”

“ம்ம், சின்னத் தடை ஒண்ணு இருக்கு. உங்க மருமகள் ஜாதகத்துல ராகு, கேதுவால புத்திர தோஷம் ஏற்பட்டிருக்கு. அதுக்குப் பரிகாரமா வெள்ளியில ஒரு சிறிய நாகம் செய்து மாரியம்மன் மற்றும் ஏதாவது ஒரு அம்மன் கோவில்ல உள்ள உண்டியல்ல போட்டா தோஷம் நீங்கிடும்…”

“ஓ! அவ்வளவுதானே, சிறப்பாய் பண்ணிடறோம் ஐயா…” எனப் பிரச்சனைக்குத் தீர்வு தெரிந்த சந்தோஷத்துடன் ராமின் அன்னை சொல்ல, ஜோசியரின் முகமோ இப்போதும் யோசனையில் இருந்தது.

“வேற ஏதாவது செய்யணுமாங்கய்யா?” என்றாள் நித்யா அவரது யோசனையான முகத்தைப் பார்த்து.

“ஹூம், ரெண்டு பேரு ஜாதகத்துலயும் கூட்டு திசை வருது. அது அத்தனை சரியில்லை…” என இழுக்க பெண்கள் இருவரின் முகமும் சற்று அச்சத்துக்கு மாறியது.

“அ..அதனால என்னாகுங்கய்யா?”

“ரெண்டு ஜாதகத்துல உள்ளவங்க கல்யாண வாழ்க்கையும் நிரந்தரமில்லை, பிரிவு வரலாம்னு ஜாதகம் சொல்லுது. கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு ரெண்டு பேரும் இராமேஸ்வரம் போயி தம்பதி ஸ்நானம் பண்ணிட்டு வந்திருங்க. அப்புறம் அவன் விட்ட வழி…” என்றவரைத் திகிலுடன் பார்த்தாள் நித்யா.

“நீ..நீங்க என்ன சொல்லறீங்கய்யா?” என்றாள் கலக்கத்துடன்.

“ஜாதகத்துல உள்ள கட்டத்தைப் பார்த்துக் கணிச்சதைச் சொன்னேன் மா. ஆனாலும் மனப் பொருத்தம் சரியாருந்தா எந்தச் சூழலையும் கடக்க முடியும்னு சொல்லுவாங்க. நீங்களும் கடவுளை வேண்டிட்டு இந்த ஸ்நானத்தைப் பண்ணிட்டு வாங்க, அப்புறம் அவன் விட்ட வழி…”

என அவர் ஜாதகத்தை மூடி வைக்க இருவரும் எழுந்தனர். அவருக்கான தட்சணையைக் கொடுத்து ஜாதகத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு காருக்கு வந்தனர்.

நித்யாவின் மனது ஜோசியரின் வார்த்தையில் கலங்கிப் போயிருக்க, ராமின் அன்னைக்கும் சற்று அச்சமாகவே இருந்தது. இருந்தாலும் இருவருக்குள் உள்ள நேசத்தை அறிந்திருந்தவர் மருமகளிடம் ஆறுதலாய் சொன்னார்.

“நீ எதுவும் யோசிச்சு வெசனப்படாதம்மா… கடவுளை விடப் பெரிய ஜோசியன் யாருமில்லை. அவன் கணிச்சபடி தான் இந்த உலகத்துல எல்லாம் நடக்கும். உங்க ஜாதகத்துல ஏதாச்சும் பிரச்சனை இருந்தாலும், உங்க மனப் பொருத்தம் எப்பவும் சேர்த்து வைக்கும். அதனால அதைப் பத்தி யோசிச்சுக் கலங்காம, ரெண்டு பேரும் அவரு சொன்ன போல எல்லாத்தையும் சரியாப் பண்ணிடுங்க…” என்றார்.

நித்யாவுக்கும் அவர் சொன்னதில் மனம் சற்றுத் தெளிய, அரைமனதுடன் தலையாட்டினாள். வெள்ளியில் நாகம் செய்து அவளது அன்னை பராசக்தியின் கோவில் உண்டியலில் போட்டு விட்டு மனம் உருகப் பிள்ளைக்காய் பிரார்த்தித்தனர். வேலை பிஸியில் இருந்தாலும் மனைவியின் சோர்ந்த முகமும், யோசனையும் கண்ட ராம் மறுக்காமல் அவளுடன் இராமேஸ்வரம் சென்று தம்பதி ஸ்நானமும் செய்து வந்தான்.

அதன் பின்பும் சில நாள்களாய் மனைவியின் முகத்தில் தேங்கி நின்ற குழப்பத்தைக் கண்டவன் அதைப் பற்றிப் பேச நேரமில்லாமல், குழந்தை தள்ளிப் போவதை நினைத்துக் கவலைப்படுகிறாள் என்றே நினைத்தான். அன்று சிறிது ஓய்வு கிடைக்கவே வீட்டில் இருந்தான்.

கணவன் வெளியூர் ஷூட்டிங்கில் இருந்ததால் அவனை வெகுவாய் மிஸ் செய்திருந்த நித்யா அன்று அவன் வீட்டிலிருக்கவும் உற்சாகமாய் இருந்தாள்.

“என்னங்க, இன்னிக்கு என்ன சமைக்கட்டும்? உங்களுக்கு என் கையால ஆசையா சமைச்சுக் கொடுத்து எத்தனை நாளாச்சு?” என அன்போடு கேட்டவளை அருகே இழுத்து மடியில் அமர்த்தினான்.

“எனக்கு நீங்க என்ன சமைச்சாலும் ஓகே தான்.” எனவும் அவன் கழுத்தில் கையை மாலையாய் போட்டுக் கொண்ட நித்யா,

“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது புருஷரே… உங்களுக்குப் பிடிச்சதை சமைச்சுக் கொடுத்தா எனக்கும் சந்தோஷமா இருக்கும்ல”

“அப்படியா?” எனக் கேட்டவன் அவள் மூக்கில் மூக்கால் உரச, அவன் கன்னத்தில் செல்லமாய் கடித்து வைத்தாள் நித்யா.

“ஆ… வலிக்குது ஸ்ரீ…” எனக் கன்னத்தைத் தேய்த்துக் கொள்ள அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், “நல்லா வலிக்கட்டும். ஒரு விஷயம் கேட்டா ஒழுங்கா பதில் சொல்லறீங்களா?” எனச் செல்லம் கொஞ்ச அவள் இடுப்பில் சட்டென்று அவன் கைகள் சில்மிஷம் செய்யவும் பட்டென்று விலகினாள் நித்யா.

“யோவ் டைரக்டரே, என்ன? பேசிட்டு இருக்கும்போதே இடுப்புல கை விளையாடுது. இதெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதிங்க ஆமா…” என மிரட்டுவது போல் சொல்ல ராம் சிரித்தான்.

“அதுசரி, நீங்க மட்டும் என்னைக் கடிச்சு வைப்பிங்க. எங்க கை மட்டும் சும்மா இருக்கணுமா?” என்றவன் அவளைப் பிடித்து அருகே இழுக்க அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் பெண்ணவள்.

“ராம்….”

“ம்ம்ம்…

“எனக்குச் சீக்கிரமே…” இழுத்தவள் தயங்கி நிறுத்தினாள்.

“சீக்கிரமே என்ன?”

“சீக்கிரமே அம்மா ஆகணும்னு ஆசையா இருக்கு…”

“ஹூம், மனசுல மட்டும் ஆசை இருந்து என்னத்தப் பண்ண? இடுப்புல கை வைச்சதுக்கே மேடம் சண்டைக்கு வரீங்க…” அவன் சலிப்பாய் கேட்கவும் அவள் முகம் நாணத்தில் சிவந்தது.

“ச்சீ போங்க… அது நான் விளையாட்டுக்கு…” எனச் சிணுங்க,

“ஹூம், நானும் கொஞ்சம் விளையாடலாம்னு தான் நினைக்கறேன்… நீங்கதான் தடை போடறீங்களே…” எனக் குறும்புடன் சொல்லவும் அவனை நாணத்துடன் பார்த்தவள்,

“சீக்கிரம் சமையலை முடிச்சிட்டு வரேன்… அப்புறம் எவ்ளோ நேரம் வேணும்னாலும் விளையாடலாம்…” என்றாள் வெட்கத்துடன் குனிந்து கொண்டே.

அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டவன், “சரி, எனக்குப் பிடிச்ச சாப்பாடு கேட்டிங்கல்ல… ஷூட்டிங்ல ஹோட்டல் சாப்பாடா சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு… சூடா தக்காளி ரசமும், நிறையச் சின்ன வெங்காயம் போட்ட முட்டை ஆம்லட்டும், அப்பளப் பூவும் சாப்பிடனும் போலருக்கு. அதான், எனக்கு ரொம்பப் பிடிச்ச சமையல்…” என்றான்.

“ஹூம், இதுக்குப் பேரு சமையலா? உங்களைப் போலவே உங்க பிடித்தமும் ரொம்ப சிம்பிளா இருக்கு ராம். நீங்க ரெஸ்ட் எடுங்க. சீக்கிரம் சமைச்சுட்டு வரேன்…” என்றவள் அடுக்களைக்குப் பறந்தாள்.

கணவன் சொன்னதைச் செய்தவள் கொஞ்சமாய் சாம்பாரும், ஒரு  பொரியலையும் எக்ஸ்ட்ராவாய் செய்து முடித்து ராமை சாப்பிட அழைக்கச் செல்ல அவன் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனை எழுப்பவும், ஒரு குளியலைப் போட்டு வந்தவன் திருப்தியாய் மனைவியின் சமையலைச் சாப்பிட்டான்.

இருவரும் அறையில் ஒய்வெடுக்க, ராம் புதிய படத்தின் ஷூட்டிங் பற்றியும், அதில் வரும் பாடல்களைப் பற்றியும் எல்லாம் அவன் நெஞ்சில் தலை வைத்துக் கட்டிலில் குறுக்கே படுத்திருந்த மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவள் ம்ம் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவள் எண்ணவோட்டம் வேறு எங்கோ இருப்பதை அறிந்து கொள்ள முடியாதவனா அவளது கணவன்?

“ஸ்ரீ…”

“ம்ம்ம்…”

“நான் பாட்டுக்கு சொல்லிட்டு இருக்கேன். நீங்க ம்ம் கொட்டிட்டு இருக்கிங்க. அப்படி இந்த மண்டைக்குள்ள என்ன யோசனை ஓடிட்டு இருக்கு?” என அவளது தலையைக் கோதியபடி கேட்க அவள் கண்கள் கலங்க எழுந்து அமர்ந்தாள்.

“ரா..ராம்…”

“என்னமா…”

“நாம எந்த ஓரு சூழ்நிலைலயாவது பிரிஞ்சிடுவோமா?” எனக் கேட்டபடி கண் கலங்கியவளைக் கண்டு குழப்பமாய் பார்த்தான்.

“என்ன ஸ்ரீ? ஏன் இப்படி ஒரு கேள்வி கேக்குறிங்க?”

“சொல்லுங்க ராம். அப்படி ஏதாவது ஒரு மோசமான சூழ்நிலை வந்தால் நம்ம பிரிஞ்சிடுவோமா?” எனப் பரிதாபமாய் கேட்டவளை ஆறுதலாய் நோக்கியவன், அவளை இழுத்துத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

“ஸ்ரீ… என்ன கேள்வி இது? நாம எதுக்குப் பிரியப் போறோம்? அப்படி பிரிய வேண்டிய சூழ்நிலையே வந்தாலும் நம்ம காதல் நம்மளைப் பிரிய விடாது. எதுக்கு இந்தக் குழப்பம் உங்களுக்கு?” எனக் கேட்க நித்யா அன்று ஜோசியர் சொன்னதைச் சொன்னாள்.

“ஓ! இதுக்குதான் ஜோசியமே பார்க்க வேண்டாம்னு சொன்னேன். இப்படிதான் அன்னைக்கு ஒருத்தர் நம்ம ரெண்டு பேரும் ரொம்ப காலம் ஒண்ணா வாழ மாட்டோம்னு சொன்னார்.”

“எ..என்னங்க சொல்லறிங்க? யாரு சொன்னாங்க?”

“ப்ச், அதெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு முன்ன ஒருத்தர் சொன்னார். இப்பென்ன? நாம சந்தோஷமா தானே இருக்கோம். அதெல்லாம் ஒரு கணக்கு மா. சில நேரம் தப்பாகவும் செய்யலாம். எனக்கு நம்ம காதல் மேல நம்பிக்கை இருக்கு. அது நம்மளைப் பிரிய விடாது. அவங்க சொன்னதை எல்லாம் நினைச்சிட்டு இருக்காம நீங்க சந்தோஷமா எப்பவும் போல இருங்க…” என்றான்.

“நிஜமா தான் சொல்லறீங்களா? நீங்க என்னை விட்டு எப்பவும் பிரிய மாட்டிங்க தானே?” குழந்தை போல் கேட்டவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன் அவள் காதோரம் ஏதோ கிசுகிசுக்க, அவள் வெட்கத்துடன் அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

நடிகை நித்யஸ்ரீ எப்போதோ காணாமல் போயிருக்க, இப்போது ஒரு குடும்பத்தின் தலைவியாய் வெறும் நித்யா ராமாக அவளது கனவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அவர்கள் வாழ்வில் அடுத்த சந்தோஷமாக நித்யா கருவுற்றாள். அந்த சமயத்தில் ராமின் தயாரிப்பில் வெளிவந்த படமொன்று சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளிக் குவித்தது.

முதலமைச்சர் சக்கரபாணியை ஒரு விழா ஒன்றில் சந்திக்க, இருவரையும் ஒருநாள் வீட்டுக்கு வந்து பார்க்குமாறு கூறினார் அவர். அடுத்த தேர்தலும் நெருங்கிக் கொண்டிருந்தது.

அவர் சொன்னதை மதித்து, நித்யாவின் தோழி கீதாவும் வெளிநாட்டில் இருந்து இங்கே வீட்டுக்கு வந்திருக்க, அவளைக் காண்பதற்குமாய் சேர்த்து ராமும், நித்யாவும் முதலமைச்சர் சக்கரபாணியின் வீட்டுக்குச் சென்றனர்.

அங்கே அவர்களை அன்புடன் உபசரித்தவர், அவனது படங்களைப் பற்றிப் பெருமையுடன் பேசினார்.

“பரவால்ல, ஜனரஞ்சகமா மக்களுக்குப் பிடிக்குற போல நல்ல படங்களை எடுத்து ஏழை எளிய மக்கள் கிட்டயும் நல்லா ரீச் ஆகி இருக்கீங்க ராம். ரொம்ப நல்ல படங்களா எடுக்கறிங்க”

அவர் பாராட்டு சந்தோஷமாய் இருந்தாலும் சற்றுக் கூச்சத்தில் நெகிழ்ந்தவன், “ரொம்ப நன்றி சார்…” என்றான்.

“ஆமாப்பா, இவர் மட்டும் எலக்ஷன்ல நின்னா நிறைய சாமான்ய மக்களோட ஓட்டு இவருக்குதான். கண்டிப்பா ஜெயிச்சிருவாரு…” கீதாவும் அவனை மனமாரப் பாராட்டினாள்.

“ஐயோ! அரசியல் எல்லாம் நமக்கு ரொம்பத் தூரங்க. அதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது…”

“இல்ல ராம், கீதா சொன்னது நல்ல ஒரு யோசனை தான். நீங்க ஏன் நம்ம கட்சில சேரக் கூடாது?” என்றார் சக்கரபாணி.

“எனக்குச் சினிமான்னா உசுருங்கய்யா… அதுல இன்னும் பெருசா சாதிக்கணும்னு ஆசைப்படறேன்…”

“ஆமா சார், இவருக்கு சினிமால மத்தவங்களை நடிக்க வச்சுதான் பழக்கம். அரசியலுக்கு வந்தா இவரே நடிக்க வேண்டியதாய் போயிடும். இவர் சுபாவத்துக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது…” நித்யாவும் சிரித்தபடி கூறினாள்.

“சரி, நம்ம கட்சிக்கு ஆதரவாய் தேர்தல் பிரச்சாரமாச்சும் செய்யலாம் தான? அதுல பிரச்சனை இல்லியே?” என அவர் கேட்க,

“அதுக்கென்னங்க ய்யா! நம்ம கட்சிக்குப் பிரச்சாரம் பண்ணறதுல எனக்குச் சந்தோஷம் தான்…” என்றவனை அன்றே இருவரையும் அவரது கட்சியில் மெம்பராய் சேரச் சொன்னார் சக்கரபாணி.

மதியம் அவர் கொடுத்த விருந்தை உண்டுவிட்டு கீதாவின் குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டே நித்யா கிளம்பினாள். இருவரும் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, மெம்பராவதற்கு வேண்டிய விவரங்களைக் கொடுத்து விட்டுக் கிளம்ப, அங்கே நித்யாவின் அண்ணன்கள் இருவரும் வந்தனர்.

“ஹூம், நீங்க இப்படி கடைசி வரைக்கும் கட்சியோட அடிமட்டத் தொண்டனாவே சேவை செய்துட்டு இருங்க. இப்ப வந்தவங்க எல்லாம் சீக்கிரம் போஸ்டிங் வாங்கி மேல வந்திருவாங்க போலருக்கு…” என ஒருவன் உரசிப் பார்க்க அவர்கள் குழம்பினர்.

“என்னடா சொல்லறிங்க?”

“ஆமாண்ணே, உங்க தங்கையையும், மாப்பிள்ளையையும் நம்ம கட்சில மெம்பரா சேரச்சொல்லி பெரியவரு வற்புறுத்திச் சேர வச்சிருக்காரு. இனி நம்ம கட்சி தேர்தல் பிரச்சாரம் எல்லாம் அவங்க தலைமைல சூடு பிடிக்கப் போகுது. நாம எப்பவும் போல போஸ்டர் ஒட்டிட்டுப் பின்னாடி நின்னு கோஷம் போட்டுட்டே இருக்க வேண்டியது தான்…” என ஒருவன் பொறாமையில் சொல்ல,

“உங்களுக்கு யாரு சொன்னா?”

“அதெல்லாம் பெரிய வீட்டுல இருந்து விஷயம் எங்க காதுக்கு வந்திருச்சு. யாரு சொன்னாலும் விஷயம் உண்மைதான…”

“சரி, அவங்க கொஞ்சம் மக்களுக்குத் தெரிஞ்ச முகமா இருக்கறதால தலைவரு யூஸ் பண்ணிக்கலாம்னு நினைச்சிருப்பாரு. இதுக்குப் போயி பெருசா பேசிட்டு இருக்கிங்க…”

அவர்களை அப்படிச் சொல்லி விரட்டினாலும் சகோதரர்கள் இருவர் உள்ளத்திலும் அந்த விஷயம் புகையத் தொடங்கியிருந்தது.

பொதுவாகவே தங்கை நித்யாவை சக்கரபாணிக்கு மிகவும் பிடிக்கும். இப்போது அவளது கணவன் என்பதால் தான் ராமுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறாரோ? எனத் தோன்றியது.

நித்யாவுக்குச் சந்தோஷமாய் இருந்தது.

“ராம், நமக்குக் குழந்தை உண்டான ராசி தான் இப்படில்லாம் நடக்குது… நாம அரசியலுக்கு வர்றமோ இல்லியோ, இப்படி ஒரு தலைமைப் பதவில இருக்கற ஒருத்தர் நம்மளை மதிச்சு கட்சில சேரச் சொல்லுறதுலாம் பெரிய விஷயம். அவருக்கு எப்பவுமே என்னை ரொம்பப் பிடிக்கும். இப்ப உங்களையும் பிடிச்சிருச்சு போலருக்கு…” என அகமகிழ்ந்தாள் நித்யா.

“நமக்கு இப்ப அரசியலை விட உங்க ஹெல்த் தான் முக்கியம் ஸ்ரீ. டாக்டர் ரொம்ப கவனமா இருக்கணும்னு சொல்லிருக்காங்க. அதை மறந்துடாம பார்த்து இருங்க…”

“அதுக்குதான் என்னைப் பார்த்துக்க நீங்க இருக்கிங்களே…” என அவன் தோளில் சாய்ந்து கொண்டவளைப் புன்னகையுடன் பார்த்தான் ராம்.

நித்யாவின் வயிற்றில் அழகாய் வளரத் தொடங்கின இரட்டைக் கண்மணிகள். தேர்தல் பிரச்சார சமயத்தில் ராமுக்கு வெளியூர் ஷூட்டிங்கும், வெளிநாட்டு ஷூட்டிங்கும் இருக்கவே சரியாய் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவன் கலந்து கொண்டு பேசிய சில இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

அந்தளவிற்கு ராம் மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறத் தொடங்கியிருந்தான். நாள்கள் இனிதே நகர நித்யா சிசேரியனில் இரட்டைப் பிள்ளைகளை நல்ல படியாகப் பெற்றெடுத்தாள். அவர்கள் வாழ்வில் சந்தோஷம் இரட்டிப்பானது.

– லதா பைஜூ