அத்தியாயம் 11

“கட்… ஷாட் ஓகே…” இயக்குநர் ராம்சரண் சொல்லவும் அந்தக் காட்சி முடிய ஓய்வாய் தனது இருக்கையில் சோர்வுடன் அமர்ந்தான் ராம்சரண். புரடக்சன் பாயை அழைத்து ஒரு டீயை வாங்கிப் பருகிக் கொண்டே வேலை நடப்பதைப் பார்த்திருந்தான்.

அடுத்த காட்சி நடக்கும் இடத்திற்கு காமெரா மற்றும் படப்பிடிப்புச் சாதனங்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். அடுத்த சீனுக்கான காஸ்ட்யூம், மேக்கப், செட் பிராபர்ட்டி செட் செய்வது, லைட்டிங் என்று ஒவ்வொன்றையும் உதவி இயக்குநர்கள் கவனித்துக் கொண்டு, அவ்வப்போது ராமிடம் டவுட் கேட்டுச் செய்து கொண்டிருந்தனர். அன்று லஞ்ச் பிரேக் கூட இல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அடுத்த சீன் சாலையில் லாரியில், செல்லும் ஹீரோயின் அவளது தோழிகளுடன் நடனம் ஆடுவது போல் படம் பிடிக்கப்பட இருந்தது. அதனால் யூனிட்டே ஒரு சந்தோஷத்துடன் இருந்தது.

எல்லாம் ரெடியானதும் கலர்ஃபுல்லாய் கிளம்பித் தயாராகி வந்த ஹீரோயினும், சக ஆர்ட்டிஸ்டுகளும் பாடலுக்கேற்ப இடுப்பை வளைத்து லாரியின் மீதும், கீழே நின்றும் டான்ஸ் ஆடத் தொடங்க சாலையருகே நிற்பவர்கள் வேடிக்கை பார்ப்பது போல் அந்தக் காட்சி படமாக்கி முடிய மணி ஐந்தைத் தாண்டி இருந்தது. அத்தோடு பேக்கப் சொல்லி வீட்டுக்குக் கிளம்பினர்.

காரில் கண் மூடிப் பின் சீட்டில் சாய்ந்திருந்த ராமின் மனது, அவன் மணிபாரதியின் உதவி இயக்குநராய்ப் பணியாற்றிய நாள்களில் பயணம் செய்து கொண்டிருந்தது.

‘எத்தனை அழகான நாள்கள் அவை…’ என நினைத்தவனின் நினைவெல்லாம் நித்யாவே நிறைந்திருந்தாள்.

ஒரு நாள் சற்றுக் கவர்ச்சியாய் உடையணிந்து ஹீரோவுடன் நெருக்கமாய் நடிக்க வேண்டிய சீனில் நடிக்க மாட்டேனென்று அவள் அழுது கதறியது நினைவுக்கு வர இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

அவளது அன்னை நித்யாவை நடிக்கச் சொல்லித் திட்ட, முடியவே முடியாதென்று அழுதவளைக் கண்டு இறுதியில், இயக்குநரே அந்த சீனை சிறிது மாற்றி எடுக்கச் சம்மதிக்க வேண்டியிருந்தது.

‘ஸ்ரீ…’ இதழ்கள் அவன் மனம் நிறைந்தவளை மெல்ல உச்சரிக்கத் தன்மேல் உள்ள நம்பிக்கையில் எந்தக் கேள்வியும் கேட்காமல், தன்னைக் கல்யாணம் செய்யச் சம்மதித்து, வீட்டை விட்டுக் கிளம்பி வந்தவளை நினைத்து மனம் கனிந்தது. அன்றைய நினைவுகள் மனதில் மலரும் நினைவுகளாய் விரியத் தொடங்கியது.

அன்னையை முன்னெச்சரிக்கையாய் ஊருக்கு அக்காவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான் ராம். வீட்டைப் பூட்டிக் கொண்டு ஒரு டாக்ஸியில் நித்யாவின் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு அருகே வந்து பதட்டத்துடன் காத்திருந்தான். அவளும் அன்னை உட்பட அனைவர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு டாக்ஸிக்கு வந்து சேர்ந்தாள். வேகமாய் அங்கிருந்து கிளம்பினர். கார் எங்கும் நிற்காமல் சென்று கொண்டே இருந்தது.

நித்யாவிற்குத் தான் எங்கே செல்கிறோம் என்றெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. ராம் மீதிருந்த அபார நம்பிக்கையில் அவள் அதையெல்லாம் யோசிக்கவும் இல்லை. அவள் கவலை எல்லாம் அவள் வீட்டினர் அறியும் முன் வெகுதூரம் சென்றுவிட வேண்டும் என்பது மட்டுமே.

தான் சொன்ன வார்த்தையை நம்பி, தன் எதிர்காலத்தையே அவன் கைகளில் கொடுத்தவளை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற உறுதியோடு தான் ராம், பிரச்சனை என்று தெரிந்தும் இந்தக் கல்யாண ஏற்பாடைச் செய்திருந்தான்.

இரவு நெருங்கும் வேளையில் வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட காரை நிறுத்தினர். நித்யா இறங்கினால் யாராவது பார்த்து விடுவார்கள் என நினைத்து அவளை இறங்க விடாமல் இட்லியைப் பார்சல் செய்து வாங்கிக் கொண்டு காரிலேயே சாப்பிட்டனர்.

மதியம் சாப்பிடாததால் பசியோடு சாப்பிட்டவளைக் கனிவோடு பார்த்தான் ராம்.

“ராம், கட்டிச்சட்னி நல்லாருக்கு” சிரித்தவளிடம் புன்னகைத்தான்.

“நாம எப்படி ஒரு சூழ்நிலையில் பிரச்சனையோட ஓடிட்டு இருக்கோம். நீங்க கட்டிச் சட்னியை ரசிச்சு சாப்பிட்டு இருக்கீங்க”

“ஆமா, இனி எந்தப் பிரச்சனை வந்தாலும் நீங்க பார்த்துப்பிங்களே. நான் எதுக்காகக் கவலைப்படணும்?” எனக் கண்ணைச் சுருக்கிக் கன்னத்தில் குழி விழச் சிரித்தவளை பிரமிப்புடன் பார்த்தான் ராம்.

“என் மேல உங்களுக்கு அவ்ளோ நம்பிக்கையா?”

“ஆமா, இல்லன்னா என் சொந்த பந்தத்தை எல்லாம் விட்டுட்டு உங்களோட ஓடி, சாரி, காருல வருவனா?” எனச் சிரித்தவளின் கையை நெகிழ்வுடன் பற்றிக் கொண்டான் ராம்.

“நிச்சயம் உங்க நம்பிக்கையைக் காப்பாத்துவேன் ஸ்ரீ…” என்றவனைத் திகைப்புடன் பார்த்தவள், “இதென்ன புதுசா ஸ்ரீ…” என்றாள் சிரிப்புடன்.

“உங்களை எல்லாரும் நித்தி, நித்யான்னு கூப்பிடறாங்க. நானும் அப்படிக் கூப்பிடப் பிடிக்கல. அதான் எனக்கு மட்டும் ஸ்பெஷலா ஸ்ரீ… உங்களுக்குப் பிடிக்கலையா?” எனக் கேட்கவும் சற்றே நாணத்துடன் பார்த்தவள், “ம்ம்… பிடிச்சிருக்கு” என்றாள்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல என் பிரண்டு வீட்டுக்குப் போயிருவோம்… விடியக்காலைல கோவில்ல வச்சு நம்ம கல்யாணம்…” என்றான் ராம்.

“ம்ம்…”

“உங்க வீட்டுல எல்லாரையும் விட்டுட்டு வந்து இப்படித் தனியா யாருமில்லாமல் கல்யாணம் பண்ணிக்கிறது கஷ்டமா இருக்கா?”

“ச்சேச்சே… ஒரு விஷயத்துல இறங்கறதுக்கு முன்னாடி வேணும்னா பல விதமா யோசிக்கலாம். ஆனா இறங்கின பிறகு அதை எப்படி சரியா முடிக்கணும்ங்கற ஒரே யோசனைதான். எப்ப உங்க காதலை ஏத்துகிட்டேனோ அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன். நம்ம கல்யாணம் இப்படி எல்லாம் தான் நடக்க வாய்ப்பிருக்குன்னு…” என்றவளைத் திகைப்புடன் நோக்கினான் ராம்.

“நீங்க இவ்ளோ பேசுவீங்களா?”

“இன்னும் கூடப் பேசுவேன் ராம், தெரிஞ்சுக்க தான போறீங்க…” எனச் சிரித்தவளைக் கண்டு புன்னகைத்தான் ராம்.

“ஆமா, நீங்க என்ன படிச்சிருக்கீங்க? உங்க ஃபாமிலி எல்லாம் எங்கிருக்காங்க? உங்க சொந்த ஊரு எது?” என இப்போதுதான் அவனை முதலில் காண்பதுபோல் மிகத் தாமதமாய் கேள்வி கேட்டாள் நித்யா.

“அட, எவ்வளவு சீக்கிரம் இதெல்லாம் கேட்டுட்டீங்க?” எனச் சிரித்தவன், “நான் பியூஸி படிச்சிட்டு டிப்ளமோ படிச்சேன். அப்பதான் சினிமா ஃபீல்டுக்கு வரணும்னு மனசுல ஆசை வந்துச்சு. வீட்டுல அதெல்லாம் வேண்டாம்னு திட்டினாங்க. நான் பிடிவாதமா இருக்கவும் என் சித்தப்பா தான், பையன் இவ்வளவு ஆசைப்படறான். ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போம்னு சென்னைல இருந்தா ஈஸியா இருக்கும்னு அங்க ஒரு சினிமா தியேட்டர்ல வேலை வாங்கிக் கொடுத்தார். நானும் நிறைய இயக்குநர் கிட்ட வேலை தேடிட்டு தான் இருந்தேன். அப்புறம்தான் மணிபாரதி சார் கிட்டச் சேர்ந்தேன்.

நம்ம சொந்த ஊரு மதுரை. அங்கதான் நம்ம சொந்த பந்தமெல்லாம் இருக்காங்க. நமக்கு ரெண்டு அக்கா இருக்காங்க. கல்யாணமாகி மதுரைல குழந்தை குட்டியோட இருக்காங்க.” என அவனது சொந்தமெல்லாம் அவளுக்கும் சொந்தமெனச் சொல்லாமல் சொன்னான்.

“ம்ம்… அவங்களுக்கெல்லாம் நம்ம கல்யாண விஷயம் தெரியுமா?”

“அம்மாக்கு மட்டும் மேலோட்டமா சொல்லி அக்கா வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கேன். நம்ம விஷயம் அக்காங்களுக்கு எல்லாம் தெரியும். அவங்க யாரும் எப்பவும் என் விருப்பத்துக்குக் குறுக்க நிக்க மாட்டாங்க.” என்றான்.

“சார், நீங்க சொன்ன ஏரியாவுக்கு வந்துட்டோம். அடுத்து எப்படிப் போகணும்?” டிரைவர் கேட்க, வெளியே பார்த்தவன் வலது பக்கத் தெருவில் செல்லுமாறு கூறினான். சாதாரண ஆள்கள் தாமசிக்கும் அந்த ஏரியாவில் ஒரு வீட்டின் முன் டாக்ஸி நின்றது.

வாசலில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் தான் ராமின் நண்பனாய் இருக்க வேண்டும். வேகமாய் இவர்களிடம் ஓடி வந்தான்.

“ராம், வழியில எந்தப் பிரச்சனையும் இல்லல்ல…”

“இல்ல செந்தில்… யாரு கண்ணுலயும் படாம வந்துட்டோம்…” என்றவன் டாக்ஸிக்குப் பணம் கொடுத்து அனுப்பினான்.

“சரி உள்ள வாங்க…” என அவர்களை அழைத்துச் சென்றான்.

அது இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட சாதாரண வீடு. வீட்டில் வேறு யாருமில்லை. செந்திலின் மனைவி பிரசவத்திற்குத் தாய் வீட்டுக்குச் சென்றிருந்தாள்.

இருவரும் வழியில் சாப்பிட்டதைச் சொல்லவும் காஃபி போட்டுக் கொடுத்தான் செந்தில்.

“ஸ்ரீ, நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நாங்க நாளைக்குக் கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடை எல்லாம் பண்ணிட்டு வந்துடறோம்…” என்றான் ராம்.

“மேடம், அந்த ரூமை நீங்க யூஸ் பண்ணிக்கங்க.” என அவன் ஒழித்து வைத்திருந்த அறையைக் காட்டினான் செந்தில்.

“வந்து கதவைத் தாழ் போட்டுக்கங்க. எங்க குரலைக் கேட்டால் மட்டும் கதவைத் திறங்க…” எனச் செந்தில் சொல்ல, “ஸ்ரீ, பத்திரமா இருங்க. அரைமணி நேரத்துல வந்திருவோம்…” என்றான் ராம்.

நித்யா தலையாட்ட, அவர்கள் சென்றதும் கதவைத் தாழிட்டு விட்டுத் தனது கையிலிருந்த சின்ன பாகுடன் அந்த அறைக்குச் சென்றாள். உடுத்திருந்த ஆடையல்லாது அந்தச் சின்ன பாகில் இன்னொரு செட் உடை மட்டுமே இருந்தது. அத்துடன் சிறிது பணம், நகையையும் உதவிக்கு இருக்கட்டும் என்று எடுத்து வந்திருந்தாள்.

அறைக்கதவைத் திறக்க ஒரு கட்டில், அலமாரி மட்டுமே இருந்தது. கட்டிலில் ஒரு புதிய டவலும், புதிய நைட் டிரஸ் ஒன்றும் அவளுக்கு உபயோகத்திற்கு வைத்திருந்தான் செந்தில். அட்டாச்டு பாத்ரூம் இருக்கவும் ஒரு நிம்மதியுடன் அதை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். ஒரு பெரிய பாரம் இறங்கியது போலிருந்தது.

கட்டிலில் அமர்ந்தவளுக்கு வீட்டின் நினைவு வந்தது. ‘இப்போது அங்கு என்னெல்லாம் பிரச்சனை ஆகியிருக்குமோ? எல்லாரும் என்னைக் காணாமல் தவிப்பார்களோ? போலீஸில் கம்ப்ளெயின்ட் கொடுப்பார்களோ?’ என் யோசித்தவள், ‘இல்லை, வெளியே எல்லாருக்கும் தெரியும்படி எதையும் செய்ய மாட்டார்கள். என்ன இருந்தாலும் எங்களை எல்லா இடத்திலும் தேட ஏற்பாடு செய்திருப்பார்கள் என நினைத்தபடி அமர்ந்திருக்க, தம்பி தங்கையை நினைத்துக் கொஞ்சூண்டு குற்றவுணர்வு எட்டிப் பார்த்தது. வீட்டில் அவளிடம் நேசத்தைக் காட்டுவது அவர்கள் இருவரும்தான்.

அன்னையும், அண்ணன்களும் தன் விஷயத்தில் நடந்து கொள்வதைப் பார்த்து, தன்னை உண்மையில் தன் அன்னை பெற்று எடுக்கவில்லையோ? எங்கிருந்தாவது குப்பைத் தொட்டியிலிருந்து தன்னை எடுத்து வந்திருப்பதால் தான் தனது விருப்பு வெறுப்பை யோசிக்காமல் சுயநலமாக இருக்கிறார்களோ? என்று கூட நித்யா யோசித்திருக்கிறாள்.

‘பாவம், என்னைப் படத்துல புக் பண்ண புரொட்யூசர்ஸ். நான் படத்தை முடிக்காம வந்ததால அவங்களுக்கு எல்லாம் மிகப் பெரிய நஷ்டம் வந்திருக்கும். எல்லாம் எப்ப சரி பண்ணப் போறமோ?’

யோசித்தபடி இருந்தவளுக்கு நீண்ட தூரக் கார் பயணம் அசதியைக் கொடுத்திருக்க உறக்கம் வந்தது. மெல்ல உறங்கத் தொடங்கியவளைக் கதவைத் தட்டும் ஓசை எழுப்பி விட, ராமின் குரல் கேட்டவள் கதவைத் திறந்தாள்.

“என்னாச்சு ஸ்ரீ, ரொம்ப நேரமாய் கதவைத் தட்டறோம்.” என்றவன் அவளை ஆராய்ச்சியாய் நோக்க, “கொஞ்சம் கண்ணசந்துட்டேன் ராம்…” என்றாள் அவள்.

“ஓ… சரி நீங்க தூங்குங்க, காலைல அஞ்சரைக்கு முகூர்த்தம். நாம நாலு மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பத் தொடங்கணும்.” என்றவன் ஒரு கவரை அவளிடம் நீட்டினான். காலைல குளிச்சிட்டு இந்தப் பட்டுப் புடவையைக் கட்டிக்கங்க. அவசரத்துக்கு தேடிப் பார்த்து வாங்க டைம் இல்ல…” எனச் சொல்ல வாங்கிக் கொண்டாள்.

அவள் அந்த அறையில் உறங்க, ராம் செந்திலுடன் மற்ற அறையில் படுத்துக் கொண்டான். நாலு மணிக்கு எழுந்தவன் கதவைத் தட்டி நித்யாவை எழுப்பிவிடக் குளித்து வந்தவள் அந்தப் பட்டுச் சேலையை எடுக்க பிளவுஸ் தைக்காமல் இருந்தது.

‘பிளவுஸ் இல்லாமல் எப்படிச் சேலை கட்டறது?’ என யோசித்தவள் தான் கொண்டு வந்திருந்த வேறு சேலையின்  பிளவுஸைப் போட்டு சம்பந்தமே இல்லாமல் இந்தச் சேலையைக் கட்டினாள். விதவிதமாய் நல்ல உடைகளைப் போட்டுப் பழகி இருந்தாலும், அவளுக்கு இப்படி அணிவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. கல்யாணம் நல்லபடியாய் முடிய வேண்டும் என்பதில் மட்டும் தான் கவனமும், பிரார்த்தனையும் இருந்தது.

இருள் பிரியாத நேரத்தில் கோவிலுக்குச் செல்ல ஆர்பாட்டமின்றி விடியலுக்குள் அவர்கள் கல்யாணம் நல்லபடியாய் முடிந்தது. மீண்டும் வீட்டுக்கு வந்து அவர்கள் உடைமையை எடுத்துக் கொண்டனர். செந்தில் டாக்ஸியை அழைத்து வர இருவரும் ஆந்திராவுக்குக் கிளம்பினர். அங்கே சில நாள்கள் ஒரு நண்பனின் வீட்டில் தங்கிவிட்டு மீண்டும் வேறு இடத்துக்குச் சென்றனர்.

சென்னையில் நித்யாவின் வீட்டு நிலமையைப் போனில் தெரிந்து கொண்டு அவர்கள் சற்றுத் தணியும் வரை காத்திருந்தனர். மீண்டும் தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள் கல்யாணமாகி ஒரு மாதத்திற்குப் பின் தான் மதுரையில் ராமின் வீட்டுக்குச் சென்றனர். அவனது வீட்டினர், எந்தக் கர்வமும் இன்றி எளிமையாய் எல்லாருடனும் பழகிய  நித்யாவை சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டனர்.

ராமின் சொந்த பந்தங்கள் வீட்டில் மாறிமாறி ரகசியமாகத் தங்கி இருந்தனர். நித்யாவை எல்லாருக்கும் பரிச்சயமிருந்ததால் அவர்களால் தைரியமாய் வெளியே எங்கும் நடமாட முடியவில்லை. அப்போதிருந்து யார் கண்ணிலும் படாமல் ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்துக்குச் செல்லப் பர்தா போடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள் நித்யா.

இரண்டு மாதங்கள் ஓடியிருக்க ராமின் அன்பும், அக்கறையும் அவளைக் கவனமாய் பார்த்துக் கொண்டதும், நித்யாவின் மனத்தில் கணவன் மேல் மிகுந்த காதலை வளர்த்திருந்தது.

அப்போதுதான் ஒருநாள் மதுரையில் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்காய் முதலமைச்சர் சக்கிரபாணி வருவதாகச் செய்தி வந்தது. அதைக் கேட்டது முதல் நித்யாவின் மனத்தில், ‘எத்தனை நாள்தான் இப்படி ஒவ்வொரு ஊராய் ஓடி ஒளிவது? அவரை நேரில் கண்டு தங்கள் பிரச்சனையைச் சொன்னாலென்ன?’ என்ற யோசனை வர ராமிடமும் சொன்னாள்.

அவனுக்கும் அது நல்ல ஐடியாவாகத் தோண, ராமின் சித்தப்பா அவருக்குத் தெரிந்த அரசியல் பிரமுகரிடம் பேசி இவர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். கட்சிக் கூட்டம் முடிந்து எல்லாரும் கிளம்பும் வரை காத்திருந்தனர். பிறகு ராமும், நித்யாவும் தன்னைக் காணக் காத்திருப்பதை உதவியாளர் மூலம் அறிந்த சக்கரபாணி இருவரையும் உள்ளே அனுப்பச் சொன்னார்.

“வணக்கம் சார்…” நித்யாவின் குரலைக் கேட்டு ஏதோ கோப்பில் கண்ணைப் பதித்தவர் நிமிர்ந்தார்.

“வாம்மா நித்தி, வாப்பா ராம்…” இருவரையும் வரவேற்க, முதலில் சென்று அவர் காலில் ஜோடியாய் விழுந்து வணங்கினர்.

“அட, ரெண்டு பேரும் சந்தோஷமா நல்லா இருக்கணும், எழுந்திருங்க…” என வாழ்த்தியவர் அவர்களை அமரவைத்துக் குடிக்க ஜூஸ் கொடுக்கச் சொல்லிவிட்டு நடந்தவைகளைக் கேட்டு அறிந்து கொண்டார்.

“என்னம்மா நித்தி, நீயும் எனக்கு என் பொண்ணு கீதா போல தான. இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு முன்னாடியே என் காதுல போட்டிருந்தா, நான் உன் வீட்டுல பேசி ரோகிணியைச் சம்மதிக்க வச்சி நல்லபடியா கல்யாணத்தை முடிச்சுக் கொடுத்திருப்பேன்ல.” எனக் குறைபட்டுக் கொண்டார்.

“சாரி சார், நம்ம கட்சி ஆட்சிக்கு வந்ததுல இருந்து நீங்க ரொம்ப பிஸியாகிட்டீங்க. இந்த விஷயத்துக்காக உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சோம்…” என்றாள் நித்யா தயக்கத்துடன்.

“ம்ம்… என்ன பொண்ணுமா நீ? பிஸின்னு சொந்த வாழ்க்கையைப் பார்க்காம இருக்க முடியுமா? சரி போனது போகட்டும். இப்படி உங்களுக்குள்ள கல்யாணம் ஆனதை வெளிய சொல்லாமல் இருக்கறது தப்பு. ரோகிணிகிட்ட நான் பேசறேன். சீக்கிரமே உங்களுக்கு கிராண்டா ரிசப்ஷன் வச்சு எல்லாரையும் அழைச்சு சொல்லிடலாம். அது முழுக்க முழுக்க என் பொறுப்பு. உங்க கல்யாணத்துக்கான என்னோட பரிசு.” என்றார்.

இருவரும் சந்தோஷத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “ராம் தம்பி, நித்தி ரொம்ப நல்ல பொண்ணு. உன்னை நம்பி குடும்பத்துல எல்லாரையும் விட்டுட்டு வந்திருக்கா. அவளைக் கண் கலங்காமல் பார்த்துக்கணும்…” என்றார்.

“கண்டிப்பா பார்த்துக்கறேன் ஐயா…” என்றான் அவன் மிகவும் மரியாதையாய். ராமின் பணிவும், அவனைப் பற்றிக் கேட்டிருந்த விஷயங்களும் நல்ல விதமாய் இருக்க அவருக்கும் அவனைப் பிடித்துப் போனது.

“நீங்க நான் சென்னைக்குப் போகும்போது என்னோடவே வாங்க. இன்னும் லேட் பண்ணக் கூடாது. நியூஸ் பேப்பருக்கு எல்லாம் விஷயத்தைச் சொல்லிடலாம்.” என்றவர் அவரது மேனேஜரிடம் சொல்லி எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யச் சொன்னார்.

அடுத்து மளமளவென்று காரியங்கள் நடந்தன. ரோகிணியின் குடும்பத்தைச் சரிகட்டி ராம், நித்யா இருவருக்கும் பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்தார் சக்கரபாணி.

ராம், நித்யா இருவரையும் கொன்று போடும் கோபம் மனதில் இருந்தாலும் ரோகிணியும், நித்யாவின் அண்ணன்களும் சக்கரபாணி சொன்னதால் அடங்கிப் போக வேண்டியதாய் ஆனது. வேறு வழியில்லாமல் பிரச்சனை பண்ணாமல் அமைதியாகினர்.

ரிசப்ஷனுக்குத் திரைத்துறையின் முக்கியப் பிரமுகர்கள் அனைவருக்கும் அழைப்பு வந்திருக்க, சிறப்பாய் முதலமைச்சர் தலைமையில் நடந்தேறியது.

அன்று மாலையே நித்யா சொன்னது போல் நியூஸ் பேப்பரில், நித்யஸ்ரீ இதுவரை ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுத்துவிட்டுச் சினிமாவிலிருந்து ஒதுங்கப் போவதாய் நியூஸ் வெளியானது.

நித்யாவின் வீட்டுக்குச் சம்பிரதாயமாய் சென்றாலும் அவர்களால் மனதார இவர்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருவரும் புதியதாய் ஒரு குட்டி பங்களாவில் குடியேறினர்.

அவர்களின் வாழ்வு காதலோடு இனிமையாய் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் இனிமையாய் கழிய ராமின் காதலில் உருகித்தான் போனாள் நித்யா. இதுவரை கடமையே என்று வாழந்தவளைக் காதலே என்று வாழும்படி மாற்றினான் ராம். இரண்டு மாதங்கள் கஷ்டப்பட்டதுக்கு சொர்கத்தை பூமியில் காட்டினான் ராம். அவளுக்குத் தும்மல் வருவதாய் இருந்தால் கூட ராமுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும் எனும் அளவுக்கு அவளது அசைவுகள் ஒவ்வொன்றிலும் அக்கறையாய் இருந்தான்.

நித்யா ஒப்புக் கொண்ட படங்களை முடிக்கும் முனைப்பில் இருக்க, ராமும் ஆல்ரெடி புக்காகி இருந்த புதிய படங்களுக்கான  அடுத்தகட்ட ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினான். அடுத்தடுத்து நித்யாவுக்கு வாய்ப்புகள் வர, அவள் மறுத்துவிட்டாள். அவளுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்பதை உணர்ந்த ராமும் மனைவியை வற்புறுத்தவில்லை.

“ராம்…”

“சொல்லுங்க ஸ்ரீ…”

“என்னை ஒரு நடிகையா தான் உங்களுக்குப் பிடிக்கத் தொடங்குச்சு. இப்ப நான் நடிப்பை விட்டுட்டேன்னு உங்களுக்கு என் மேல கோபமோ வருத்தமோ இல்லியா?” இருவரின் தனிமையில் கணவனின் தோள் சாய்ந்து கேட்டாள் நித்யா.

“எனக்கு உங்க நடிப்பு ரொம்பப் பிடிக்கும் தான். ஆனா, என் மனைவிக்கு நடிக்கறதில் விருப்பம் இல்லையே. அவங்க விருப்பம் என்னவோ அதான் என் விருப்பமும்… இத்தனை காலம் தன்னை கவனிச்சுக்காம சினிமா, சினிமான்னு ஓடினது போதும். உங்களுக்கு என்ன பண்ணனும்னு தோணுதோ, அதைப் பண்ணிட்டு ஃப்ரீயா இருங்க…” என்றவனைக் காதலுடன் அணைத்துக் கொண்டாள் நித்யா.

காலையில் நேரமே எழுந்து நித்யா பராசக்திக்கு விளக்கு வைப்பதை வாடிக்கையாய் வைத்திருந்தாள். அப்போது தான் அன்றைய பொழுது அவளுக்கு அழகாய் தொடங்குவது போல் இருக்கும். மனைவியாய் ராமின் தேவைகளையும் குறையின்றிப் பார்த்துக் கொண்டாள். வீட்டில் வேலை செய்ய ஆள்கள் வந்தனர். இருந்தாலும் சமையலை ஆசையுடன் நித்யாவே செய்தாள். கார் வாங்கினர். வாழ்க்கைத் தரம் உயரத் தொடங்கியது.

அவர்கள் வாழ்க்கை அடுத்தடுத்து முன்னேற்றப் பாதையில் செல்ல ராம் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எல்லாம் வெள்ளி விழா, வைரவிழாப் படங்களாய் அமைய இயக்குநர் ராமின் மவுசு ஏறிக் கொண்டே போனது.

ஆனால், எத்தனை பணம் வந்தாலும் ராம் என்னும் மனிதன் அவனது இயல்பைத் தொலைக்காமல் அவனாகவே இருந்தான். குடி, சிகரெட், நடிகைகளுடன் நெருங்கிப் பழகுவது என எந்தக் கெட்ட பழக்கமும் அவனை நெருங்க விடவே இல்லை.

அவனது ஒழுக்கமும், சக மனிதர்களை இயல்பாய் மதிக்கும் பண்பும் அப்படியே இருந்தது. தன்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யவும் செய்தான். தன்னோடு, தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த நினைத்த ராமுக்கு எல்லா வகையிலும் அவன் மனைவி நித்யாவும் துணையிருக்க இருவரின் காதலும் அதிகமானது. அவர்களின் காதல் வாழ்க்கையைக் கண்ட நித்யாவின் பிறந்த வீட்டினரும் மெல்ல அவர்களை ஏற்றுக் கொள்ளத் தொடங்கி இருந்தனர்.

அன்று ராம் இயக்கிய புதுப் படம் ஒன்று ரிலீஸாகி இருக்க, மனைவியை அழைத்துக் கொண்டு தியேட்டருக்குப் படம் காணச் சென்றான். ராம்சரண் முன்பு டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்த, அதே பழைய தியேட்டரைக் கண்ட நித்யா கணவனை நோக்கிச் சிரித்தாள்.

“என்ன ராம், மலரும் நினைவுகளா?”

“அப்படியும் வச்சுக்கங்க, இங்கதான் முதன் முதலா நாம நேர்ல சந்திச்சோம். இந்தத் தியேட்டரை நம்ம சந்திப்பின் ஞாபகார்த்தமா சொந்தமா வாங்கிட்டா என்ன?” என்றான் விளையாட்டாய்.

“அதுக்கென்ன? நீங்க நினைச்சா வாங்க முடியாதா என்ன?” என நித்யா விளையாட்டாய் சொல்ல ராம் நிஜமாலுமே அதற்கான முயற்சியில் இறங்கினான். சிட்டியில் மெயின் ஏரியாவில் நல்ல வசூலைக் கொடுத்த அந்தத் தியேட்டரின் உரிமையாளர் வெளிநாட்டில் செட்டிலாவதற்காய் தியேட்டரை விற்க நினைக்க, அந்தச் சந்தர்பத்தை உபயோகித்துக் கொண்ட ராம் அதைச் சொந்தமாக்கி நித்யாவின் பேரில் ரெஜிஸ்டர் செய்தவன் அதற்கான பத்திரத்தை அவளிடம் நீட்டி, “இது உங்களுக்கான என் முதல் பரிசு…” என்றபோது திகைத்துப் போனாள் நித்யா.

அவனுக்கும் தான் ஏதாவது பரிசு கொடுக்க நினைத்தவள், ஒருமுறை ராம் புதிய மாடல் கார் ஒன்றைப் பார்த்துவிட்டு, “கார் ரொம்ப அழ்காருக்குல்ல…” எனச் சொல்ல அதே போன்ற புதிய கார் ஒன்றை அவனது பிறந்தநாள் பரிசாக வழங்கி அசத்தினாள் நித்யா.

அடுத்து ராம் சொந்தமாகவே படம் தயாரிக்க நினைக்க நித்யாவும் தனது சம்பாத்தியங்களை படம் தயாரிப்பதில் முதலீடு செய்ய, நித்யாவின் தயாரிப்பில் ராமின் படம் வெளியாகியது. முதலீடு செய்த பணத்தை விடப் பல மடங்கு அதிகமாய் திரும்பி வந்தது. இன்னும் இரண்டு தியேட்டரைச் சொந்தமாக்கினான் ராம். சாலிகிராமத்தில் ஒரு இடத்தை வாங்கி, கணவன் மனைவி இருவருமாய் பார்த்துப் பார்த்து ஒரு பங்களாவைக் கட்டினர்.

கீழே வண்டி பார்க்கிங், முதல் தளத்தில் ராமின் அலுவலகம், அதற்கு மேல் வீடு என்று அழகாய் கட்டி அதில் குடியேறினர்.

கல்யாணமான பின் வந்த நித்யாவின் மூன்றாவது பிறந்த நாளை முன்னிட்டு அவள் குடும்பத்தினரையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தனர்.

நித்யாவின் தங்கை சத்யாவும், தம்பியும் மாமா என்று ராமிடம் நன்றாகப் பேசுவார்கள். அன்று மாலை மனைவிக்கு ஒரு பரிசுப் பெட்டியுடன் வந்த ராம், “இது என்ன பரிசுன்னு சரியாச் சொல்லுறவங்களுக்கு நான் ஒரு பரிசு கொடுக்கறேன்” என விளையாட்டாய் சொல்ல சத்யாவும், அவன் தம்பியும், ஏன் நித்யாவின் அண்ணிகளும் கூட ஆவலுடன் ஏதேதோ பொருள் பெயரைத் சொல்லி, அதுதான் அந்தப் பரிசுப் பெட்டியில் உள்ளது எனச் சொல்ல, “யாருமே சரியாகச் சொல்லவில்லை” என்றான் ராம்.

இறுதியில் அதை நித்யாவிடம் கொடுத்து அவள் திறந்து பார்க்க, தங்க ஒட்டியாணம் ஜொலித்துக் கொண்டிருந்தது. நித்யா உட்பட அனைவரும் அதைக் கண்டு அசந்து போனார்கள்.

ஒரு காதல் இடைவேளை…

-லதா பைஜூ