அத்தியாயம் 10
“நித்யாம்மா, வீடு வந்திருச்சு…” டிரைவர் ரவியின் குரலில் பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த நித்யா கலைந்தாள்.
வண்டி நின்றதில் குழந்தைகளும் உறக்கம் கலைந்து கண்ணைத் தேய்த்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தனர்.
பூஜை செய்த பொருட்களை எடுத்துக் கொண்டு இறங்கினாள் நித்யா. பிள்ளைகள் அவளுக்கு முன்பே இறங்கி வீட்டுக்கு ஓடி இருந்தனர்.
“சரி ரவிண்ணா, நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க.”
“சரிங்கமா, ஏதாச்சும் வேலை இருந்தால் கூப்பிடுங்க” என்ற ரவியும் காருடன் கிளம்பிவிட நித்யா வீட்டுக்கு வந்தாள்.
முன்னிலிருந்த மத்திய வயசு ஹவுஸ் ஓனர் பெண்மணி, “நித்யாம்மா, பூஜை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? கோவில்ல கூட்டம் ஜாஸ்தியா?” எனக் கேட்க, அவருக்கு பதில் சொல்லியபடி விபூதி பிரசாதத்தை நீட்ட வாங்கி நெற்றியில் தொட்டுக் கொண்டார்.
“ஹா, அப்புறம் உன்னைத் தேடி யாரோ ஒரு டைரக்டர் வந்திருந்தாரு. அவர் பேரு…” என யோசித்தவர், “ஒரு நிமிஷம் உள்ள வா மா. அவர் தான் பேசிட்டு இருந்தார். கேட்டுச் சொல்லறேன்…” எனவும் நித்யா யோசனையுடன் உள்ளே சென்றாள்.
பேச்சு சத்தம் கேட்டு பெட் ரூமிலிருந்து வெளியே வந்த ஹவுஸ் ஓனர், இவளைக் கண்டதும் மலர்ந்தார்.
“வாம்மா, தரிசனம் எல்லாம் நல்லா ஆச்சா?”
“ஆமா சார், யாரோ என்னைத் தேடி வந்திருந்ததா மேடம் சொன்னாங்க” என்றாள் அவரைக் கேள்வியுடன் பார்த்து.
“ஆமாம் மா, இயக்குநர் பாரதி செல்வன்னு சொன்னார். மணி பாரதி சார்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்தாராமே. உங்களைப் பேசச் சொல்லிக் கார்டு கொடுத்திட்டுப் போனார்.” என்றவர் மேஜை மீதிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுக்க, வாங்கிக் கொண்டாள் நித்யா.
“நன்றி சார், நான் அவருக்குப் போன் செய்து பேசிக்கறேன்…” என்றவள், ‘நம்ம வீட்டு அட்ரஸ் அவருக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்’ என நினைத்தபடியே மாடிப்படியேறி வீட்டுக்குச் சென்றாள்.
குழந்தைகள் பசியோடிருக்க, சிம்பிளாய் சமையலை முடித்து அவர்களைச் சாப்பிட வைத்தாள்.
“அம்மா, நாளைக்கு ஸ்கூல்ல ஃபீஸ் கட்டணும், புக் வாங்கணும்.” என்ற நிமிஷாவிடம் யோசனையுடன் தலையாட்ட, “யூனிபார்ம் கூட வாங்கணும் மா. இந்த வருஷம் புது யூனிபார்ம்னு பிரண்ட்ஸ் சொன்னாங்க” என்றான் நிதிஷ்.
“சரிப்பா, நீங்க சாப்பிடுங்க” என்றவளிடம், “நீங்களும் எங்களோடவே சாப்பிடுங்க மா…” என்றான் மகன்.
அவளும் அவர்களுடனே பேருக்குச் சாப்பிட்டு எழுந்தாள்.
நிமிஷாவும், நிதீஷும் பெரிய இண்டர்நேஷனல் ஸ்கூல் ஒன்றில் தான் படித்து வந்தனர். அந்த ஸ்கூலில் திரைத்துறையைச் சார்ந்த நிறையப் பிரபலங்களின் பிள்ளைகளும் படித்தனர். ஒவ்வொரு வருடமும் இருவருக்கும் ஃபீஸ் மட்டுமே சில லட்சங்கள் கட்ட வேண்டி வரும். வீட்டிலிருந்து ஸ்கூல் சற்று தூரம் என்பதால் இருவரும் காரில் தான் சென்று வருவார்கள்.
‘இப்போதுள்ள சூழ்நிலையில் தன்னால் அத்தனை ஃபீஸ் கட்டி, காரில் எல்லாம் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி வைக்க முடியுமா?’ என யோசித்தவளுக்குச் சற்று மலைப்பாகவே இருந்தது.
முடியாதென்று மூளை உரைக்க, என்ன செய்வதென்று யோசித்தாள்.
அவளது யோசனையைக் கண்ட நிமிஷா அன்னையின் அருகே வந்து அமர்ந்தாள்.
“அம்மா, அப்பாக்கு போன் பண்ணிச் சொல்லட்டுமா? நாளைக்கு ஃபீஸ் கட்டணும்னு…” என்றதும் சட்டென்று திரும்பினாள்.
“வேணாம் நிமி, இனி அவரை அநாவசியமா தொந்தரவு பண்ணக் கூடாது. நம்ம தேவையை நாம தான் பார்த்துக்கணும்.” பட்டென்று சொன்னவள் பிள்ளைகளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தாள்.
“நிதி, நீயும் இப்படி வந்து உக்காரு…” எனவும் மகனும் அன்னையின் மறுபுறம் வந்து அமர்ந்து கொண்டான்.
“நிதி, நிமி ரெண்டு பேரும் நல்லாப் புரிஞ்சுக்கோங்க. இனி நாம பினான்ஷியலா அப்பாவை எந்த விஷயத்துக்கும் டிபன்ட் பண்ணக் கூடாது. அவரைப் பார்க்கணும்னு தோணினால் நீங்க போயி பார்க்கலாம். பேசலாம். ஆனா பண விஷயமா அவர்கிட்ட எதையும் எதிர் பார்க்கக் கூடாது”
“ஏன்மா, அவர் நம்ம அப்பா தான?” என்ற மகனின் கேள்வியில், ஒளித்து வைத்திருந்த கண்ணீர் மீண்டும் துளிர்க்கப் பார்க்க, கஷ்டப்பட்டுத் தன்னை நிதானித்தவள் புன்னகைத்தாள்.
“ஆமாடா கண்ணா, நம்ம அப்பாதான்… ஆனா, இனி நீங்க ரெண்டு பேரும் என்னோட பொறுப்பு. உங்களுக்கு என்ன தேவை இருந்தாலும் நான் மட்டும்தான் பார்த்துக்கணும். அப்பாவைத் தொந்தரவு பண்ணக் கூடாது” என்ற அன்னையிடம் இன்னும் கேட்பதற்கு நிறையக் கேள்விகள் இருந்தாலும், அவளைச் சங்கடப்படுத்த விரும்பாமல் அந்தக் கேள்விகளைத் தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டான் நிதிஷ்.
“ஓ, சரிம்மா…” என நிதீஷ் சொல்ல,
“அதனால தான் நாம அப்பாவை விட்டுத் தனியா இந்த வீட்டுல வந்து இருக்கோமா மா…” என்றாள் நிமிஷா.
மகளின் தலையை ஸ்னேகமாய் வருடிய நித்யா, “ஆமாம் மா…” எனவும் அவளும் யோசனையில் ஆழ்ந்தாலும் அடுத்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
“இப்ப நமக்குக் கொஞ்சம் மோசமான சமயம். இதைக் கவனமா கடந்து வரலைனா காணாமல் போயிருவோம். நம்மளோட பணக்கார வாழ்க்கை முறை எல்லாம் விட்டுட்டு எளிமையா வாழ்ந்து பழகணும். அதுக்கு அம்மாவோட நீங்க ரெண்டு பேரும் துணை நிக்கணும்…” எனவும் புரியாமல் இருவரும் பார்த்துக் கொண்டனர்.
அம்மாகிட்ட நிறையப் பணம் இல்லை. கார் இல்லை. அதனால நிறைய ஃபீஸ் கட்டி உங்களை அதே ஸ்கூல்ல படிக்க வைக்கறது ரொம்பச் சிரமம்.” என நிறுத்தவும்,
“நாங்க என்னமா பண்ணனும்?” ஒருசேரக் கேட்ட இருவரையும் கண்ணீரோடு அணைத்துக் கொண்டாள் அன்னை.
“நீங்க ரெண்டு பேரும் நல்லாப் படிக்கிற பிள்ளைங்க. படிப்புதான் உங்களுக்கு எல்லாமே. ஆனா, அதைப் பெரிய ஸ்கூல்ல படிச்சா தான் முடியும்னு இல்ல, சாதாரண ஸ்கூல்ல படிச்சாலும் முடியும்.”
“எங்களை வேற ஸ்கூல்ல சேர்த்தப் போறீங்களாம்மா?”
“ம்ம்… உங்களுக்குக் கஷ்டமா இருக்கா?”
“அதெல்லாம் இல்ல மா, எங்கிருந்தாலும் நல்லாப் படிக்கிறவங்க படிச்சுப்பாங்கன்னு நீங்க எப்பவும் சொல்லுவிங்க தானே.” என வெளியே சொன்னாலும் அப்பிஞ்சுகளின் மனம் இத்தனை நாள் படித்த பள்ளியை விட்டு வருவதில் வருந்தவே செய்தது.
“ம்ம், கார்லயோ ஸ்கூல் பஸ்லயோ உங்களை அனுப்ப முடியாது. டெய்லி சாதாரணமா பஸ்ல போயிட்டு வரதுக்குப் பழகிக்கணும்…”
“சரிம்மா”
“இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்ல. யாரு கடைசி வரை கூட வருவாங்கன்னு சொல்ல முடியாது. ஆனா படிச்ச படிப்பும், பழகின தொழிலும் தான் எப்பவும் நமக்குக் கை கொடுக்கும்”
முழுமையாய் புரியாத வயதென்றாலும் அன்னை சொல்வதற்கு இருவரும் தலையாட்டினர்.
“கோபம் ஒரு நோய். அதை யாரு கிட்டயும் காட்டவோ, நமக்குள்ள வச்சுக்கவோ செய்யாதீங்க. அது மத்தவங்களை அழிக்கிறதோட, நம்மையும் தளர வச்சு மொத்தமாய் அழிச்சிடும்.
ஆனா, புன்னகை ஒரு கவசம். எப்பவும் சிரிச்சிட்டே இருங்க. அது நமக்கு ஒரு நம்பிக்கையை, புத்துணர்வைத் தரும். நம்ம கிட்டப் பேசுறவங்களும் பாசிடிவ்வா ஃபீல் பண்ணுவாங்க.” பிள்ளைகளுக்குச் சொல்வதாய் நினைத்துத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் நித்யா.
“சரிம்மா…” என்ற பிள்ளைகள் காலையில் நேரமே எழுந்ததால் கொட்டாவி விட்டனர்.
“சரி, ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் தூங்குங்க.” என்றவள் மீண்டும் சிறிது நேரம் யோசித்தாள்.
சட்டென்று அந்தக் கார்டு கொடுத்த பாரதி செல்வன் நினைவு வரவும் போன் செய்து பேசினாள்.
அவர் சினிமாவில் நடிக்க விருப்பமுள்ளதா? எனக் கேட்க இப்போதைக்கு இல்லையென்று கூறியவளிடம் அப்படி நடிக்க விருப்பம் இருந்தால் தன்னை அழைக்குமாறு கூறினான் பாரதி செல்வன். சரியென்று பேசி முடித்து வைத்தாள்.
‘மறுபடியும் சினிமாவில் நடிப்பதா? ஏறத்தாழ 12 வருடங்களுக்கு மேலாகி விட்டது நித்யஸ்ரீ திரையில் தலை காட்டி. கல்யாணத்துக்குப் பிறகு 6 மாதங்கள் வரை புக்காகி இருந்த படங்களை முடித்துக் கொடுத்தவள், அதன்பின் வேறு படங்களை ஒத்துக் கொள்ளவில்லை. நடிப்புக்கு முழுக்குப் போடுவதாய் நாளிதழ்களில் அறிவிப்புக் கொடுத்து விலகிக் கொண்டாள். இப்போது மீண்டும் நடிக்கச் செல்வதில் அவளுக்கு விருப்பமில்லை.
இன்றோடு அவர்களின் திருமண பந்தத்திற்கு விடுதலை கொடுத்து பத்து நாள்கள் ஆகி விட்டன. இந்த நாள்களில் பத்திரிகைகள் இவர்களின் அந்தரங்க வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்ட பல விதத்திலும் முயற்சி செய்ய, நித்யா யாரையும் சந்திக்கச் சம்மதிக்கவில்லை. அவர்களாகவே ஏதேதோ வதந்திகளைக் கற்பனையாய் இறக்கி வசூலைக் கூட்டிக் கொள்ள முயன்றனர். அதற்கும் அவள் எந்த மறுப்பும் சொல்லவில்லை.
திரைத் துறையில் இருக்கும், பெண்களை வேட்டையாடும் சில ஓநாய் கூட்டங்களும், பிணந்தின்னிக் கழுகாய் மற்றவர்களின் பிரச்சனையில் குளிர் காயக் காத்திருக்கும் கூட்டங்களும் அவளை நெருங்க முயலும் போதும் எச்சரிக்கையுடன் அனைவரையும் விட்டு எட்டியே நின்றாள் நித்யா. அவர்கள் தன்னிடம் அசிங்கமாய் நடந்து கொள்ள முயன்றதையும், உதவி செய்ய வருவது போல் உபத்திரவம் செய்ததையும் நினைத்து ராத்திரியில் படுக்கையைக் கண்ணீரால் நனைப்பதோடு விடியலில் எழுந்து அன்னை பராசக்தியிடமும் முறையிடுவாள்.
‘எதற்கு என்னை இப்படி ஒரு சூழ்நிலையில் நிறுத்தி அழகு பார்க்கிறாய்” என உரிமையுடன் கோபப்படவும் செய்வாள். மெல்லத் தெளிந்தவள் இப்போதுதான் யோசிக்கத் தொடங்கி இருக்கிறாள்.
மாலையில் அன்னை பராசக்திக்கு விளக்கேற்றிக் கண் மூடி அமர்ந்து தன் மனநிலையைச் சொல்லிக் கொண்டிருந்தவளை அலைபேசி அழைத்தது.
அவளது தோழி ஒருவள் அழைத்திருந்தாள். நித்யாவின் எதிர்காலத்தைக் குறித்துப் பேசி மிகவும் வருந்தினாள். என்ன உதவி வேண்டுமானாலும் அவளை அழைக்குமாறு கூறினாள்.
எத்தனையோ திரை நண்பர்கள் நித்யாவுக்கு உதவி செய்ய முன்வந்தனர். ஆனால், நித்யா முடிவு செய்து விட்டாள். யாருடைய உதவியையும் ஏற்பதில்லை என்று.
‘யாராலும், யாருக்காகவும் இறுதி வரை துணைக்கு வர முடியாது. இத்தனை நாள் பிறரின் ஒத்துழைப்பில், உதவியில் வாழ்ந்து வந்தது போதும். இது கடவுள் என்னைச் சோதிக்க ஏற்படுத்திய சூழ்நிலை. இதை நான் நிச்சயம் எனது முயற்சியால் மட்டுமே கடக்க வேண்டும்’ எனத் தீர்மானித்துக் கொண்டாள்.
மறுநாள் காலை ஒரு பர்தாவை எடுத்து அணிந்து கொண்டவள், பேருந்திலேயே பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று தனது சூழ்நிலையைச் சொல்லி வேறு பள்ளிக்கு அவர்களை மாற்றப் போவதாய் சொல்ல, பள்ளியிலோ ஃபீஸைக் குறைக்கிறோம் என்று, அங்கேயே படிப்பைத் தொடரச் சொல்ல நித்யா சம்மதிக்கவில்லை. அங்கே படிப்பவர்கள் எல்லாம் செல்வத்தில் திளைப்பவர்கள்.
‘என் பிள்ளைகள் இனி எளிமையான வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ள வேண்டும்’ எனத் தீர்மானமாய் இருந்தவள் அவர்களைக் குருகுலம் பள்ளியில் சேர்க்க நினைக்க, நல்ல மார்க் இருந்ததால் அவர்களுக்கு மெரிட்டிலேயே சீட் கிடைத்தது.
பர்தாவை நிரந்தரமான உடையாக அணிந்து கொண்டு தன்னை வெளி உலகிற்கு மறைத்துக் கொண்டவள், பள்ளிக்கு எந்தப் பேருந்தில் சென்று வர வேண்டுன்று அழைத்துச் சென்று பழக்கினாள்.
அறிவான குழந்தைகளும் அன்னையின் மனம் கோணாதவாறு எல்லாவற்றையும் விரைவிலேயே பழகிக் கொண்டனர். நித்யா நினைத்தது போலவே ஒரு எளிய வாழ்வுக்குத் தயாராகி விட்டனர். விடுமுறை முடிந்து அவர்களும் பள்ளி செல்லத் தொடங்கினர். ஒரு வாரம் அவர்களுடன் சென்று கவனமாய் சொல்லிக் கொடுக்க, அவர்களே தனியாய் சென்று வரத் தொடங்கினர்.
அத்தியாவசியத் தேவை இல்லாமல், எதற்கும் ரவியின் டாக்ஸியைக் கூட அழைக்காமல் பேருந்திலேயே சென்று வந்தாள்.
தனிமையில் தன் மனதை ஆக்கிரமிக்கும் நினைவுகளை விரட்டுவதற்காகவே விதவிதமாய் சமைக்கத் தொடங்கினாள். பிள்ளைகளுக்கு நல்லதை மட்டுமே சிந்திக்கச் சொல்லிக் கொடுத்தாள். ‘சினிமாக்காரி வளர்த்த பிள்ளைங்க எப்படி இருப்பாங்க’ என்று யாரும் தன்னைப் பார்த்துச் சொல்லி விடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள். நிறையப் புத்தகங்கள் படித்தாள்.
எப்போதாவது பிள்ளைகள் அப்பாவைக் காணச் சென்று வந்தனர். அவனை நலம் விசாரிப்பது தவிர அன்னை சொன்னது போல் எதுவும் அவனிடம் கேட்டுச் சங்கடப் படுத்தவில்லை.
“அம்மா நல்லாருக்காங்களா? அவங்களை நீங்கதான் நல்லபடியாப் பார்த்துக்கணும்” எனப் பிள்ளைகளிடம் எப்போதும் சொல்லுவான்.
ராம்க்கு சில நாள்களாய் உடம்பு சரியில்லை என்று ரவி சொல்லியிருந்தார். அதைக் கேட்டது முதல் நித்யாவின் மனதும் சரியில்லாமல் போனது. ஒரு வருடம் முன்புதான் பெரிய விபத்து ஒன்றைச் சந்தித்து மயிரிழையில் உயிர் தப்பித்து மீண்டு வந்திருந்தான். அந்த விபத்து அவர்கள் வாழ்வில் பெரும் அடியைக் கொடுத்திருந்தது. இதுவரை சேர்த்து வைத்த சம்பாத்தியங்கள், சொத்துக்கள் வைத்தியச் செலவுக்கெனக் கரைந்து போயிருந்தன.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் கணவனை மீட்டு வருவது ஒன்றே குறிக்கோளாய் போராடி, ஒரு மாதம் ஆசுபத்திரியில் இருந்தவனை நல்லபடியாய் மீட்டு வந்தவள் நித்யா தான். இப்போது அது சம்மந்தமான உடல் உபாதைகள் எதுவும் வந்துதான் கஷ்டப் படுகிறானோ எனக் காதல் கொண்ட மனம் தவித்தது. அவனை நேரில் காணாவிட்டாலும் போனிலாவது பேசத் தோன்ற பலமுறை யோசித்தவள் துணிந்து அழைத்து விட்டாள்.
போன் ஒலிக்கும் சத்தம் கேட்கையில் இவள் இதயத்துடிப்பும் சேர்ந்து ஒலிப்பது போல் தோன்றியது.
சில நொடிகளுக்குப் பிறகு அழைப்பு ஏற்கப்பட, ராமின் குரல் மென்மையாய் ஒலித்தது.
“ஸ்ரீம்மா…” சோர்வுடன் வந்தது குரல்.
அவன் குரலைக் கேட்டதும் இதயம் நழுவத் தொடங்க, இத்தனை நாள் முயன்று மூடுவிழா செய்திருந்த கண்ணீர்ச் சுரப்பிகள் மீண்டும் உடைப்பெடுத்துக் கொள்ள மௌனமாகவே நின்றாள்.
விவாகரத்தான இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் அவனது குரலைக் கேட்கிறாள். இதயம் வரை ஊடுருவி அவளை அழுத்தியது.
அவள் எதுவும் பேசாமல் இருக்க அவனே தொடர்ந்தான்.
“எப்படி இருக்கிங்க? பசங்க நல்லாருக்காங்களா?” எனவும் அதற்கும் அவளது மௌனமே பதிலானது. அவள்தான் அழுகையைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தாளே.
“உடம்பைப் பார்த்துக்கங்க, எதுக்காகவும் தளர்ந்து போயிடாம தைரியமா நில்லுங்க…” என்றவனின் வார்த்தைகள் ஆறுதலுக்கு பதில் சிறு கோபத்தை மூட்டினாலும் அடக்கிக் கொண்டாள்.
“உங்க உடம்புக்கு என்னாச்சு?” என்றாள் தன்னைக் கட்டுப்படுத்தி.
“ப்ச்… பயப்பட ஒண்ணும் இல்ல. கொஞ்சம் பிரஷர் அதிகமாகி இருக்காம். அதுனால அப்பப்ப தலை சுத்துது.”
“ம்ம்… சரியா மாத்திரை போடுங்க. உடம்பைப் பார்த்துக்கங்க. நான் வச்சிடறேன்” என்றவள் பதிலை எதிர்பாராமல் வைத்து விட்டாள்.
கண்ணீர் கரகரவென இறங்கிக் கன்னம் நனைக்கச் சுவரில் சாய்ந்து நின்றவள் நீண்ட பெருமூச்சினை வெளியேற்றினாள். சில நிமிடங்கள் அப்படியே இருக்க, அவளுக்கே அது பிடிக்கவில்லை. முகத்தைக் கழுவிவிட்டு அமர்ந்தவள், கஷ்டப்பட்டு யோசனையை வேறு பக்கம் திருப்பினாள்.
மனம் சண்டித்தனம் செய்ய, இப்படியே இருந்தால் சரிவராது என்றுணர்ந்தவள் கல்கியின் புத்தகம் ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள். அவளது காயப்பட்ட மனதுக்கு அது மருந்தாய் வருடிச் சென்றது.
‘யாரோ ஒருவர் உங்களைப் பற்றி விமர்சித்துக் கொண்டே இருக்கிறார். சற்றும் யோசிக்காமல் துடைத்தெறிந்து விட்டுப் போங்கள். அசிங்கங்களை யாரும் அங்கங்களில் அப்பிக் கொண்டு அலைவதில்லை. ச்சீ என்று முகம் சுழிப்பவர்களைக் கண்டு கோபம் வருமாயின் கொஞ்சம் உங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
உன் கால்களில் சங்கிலி பூட்டும் தகுதி இங்கே யாருக்கும் வழங்கப்படவில்லை. உன் கைகளில் விலங்கிடும் அளவிற்கு யாருமிங்கே குற்றமற்றவர்கள் அல்ல.
உயரப் பறக்க நினைத்தால் உன்னைத்தான் முதலில் குறி வைப்பார்கள். எழுந்து நிற்க நினைத்தால் உன்னைத்தான் ஏறி மிதிப்பார்கள். சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் உன்னைத்தான் சாகும் அளவிற்கு நோகடிப்பார்கள்.
நீ வாழலாம்… நீ சாதிக்கலாம்… உன்னை அழகாக்கிக் கொள்ளலாம்… உனக்குப் பிடித்தவற்றை நேசிக்கலாம்… ஆனால், யாரையும் ஜெயித்து விடக் கூடாது. நீ சிரித்தால் சிரிக்கும் உலகம் நீ அழுதால் உனக்காய் அழாது. உன்னை வெறுக்கும். உன்னை விமர்சிக்கும். உன்னைக் கொல்லும். உன்னை வாழவும் வைக்காது…
உன்னுடைய கண்ணீருக்குச் சொல்லிக் கொடு. உறுதியற்றவர்களுக்காக உடைந்து அழாதே என்று…’ அதை வாசிக்கையில் அவள் கண்கள் நிறைந்து கண்ணீரைப் பொழிந்தன.
வாசிப்பைத் தொடர்ந்தாள்.
‘உன் இதயத்திற்குச் சொல்லிக் கொடு. இதயமற்றவர்கள் முன்பு மண்டியிட்டு விடாதேயென்று… உன் வலி உன்னைக் கொல்லும்… உன் காயம் உனக்குத்தான் வலிக்கும்… நிராகரிப்பின் எல்லை வரை சென்றாலும் நம்பிக்கையை விட்டு விடாதீர்கள். நம்பிக்கை இழந்த கிளை தான் விரைவில் முறிந்து போகும்…
யாரோ ஒருவரை ஜெயிக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் தோற்கக் கூடாதென்று பந்தயத்தைத் துவங்குங்கள். ஒருவேளை, நீங்கள் தோற்கலாம்… பிறரால் தோற்கடிக்கப் படலாம்… வாய்ப்புகள் கிடைக்காமல் கூடப் போகலாம்… இவ்வளவு தானா? என்று ஏதாவது ஒரு இடத்தில் உங்களைக் காலம் நிறுத்தும்… காதலித்தவர்கள் நிறுத்துவார்கள்… நம்பியவர்கள் நோகடிப்பார்கள்… தோள் கொடுத்தவர்கள் துரோகம் செய்வார்கள்… அதுதான் இறுதியென்று மட்டும் அங்கேயே நின்று விடாதிருங்கள்…
காய்ந்து மக்கியெரித்த பின் சாம்பலாகியும் கூட, இறைவனின் நெற்றியில் பூசிக் கொள்ளும் விபூதியைப் போல் தான் வாழ்வும்…
அடிகளைத் தாங்கு… வலியை உணர்ந்து கொள்… வாழ்க்கையைத் துவங்கு… சாம்பலுக்கு இருக்கும் துணிச்சல் கூட சாதிக்க நினைக்கும் உனக்கு இல்லாமலா போய்விடும்…’
அதற்கு மேல் படிக்க முடியாமல் அலைபேசி சிணுங்கியது.
சாரதாதான் அழைத்திருந்தார்.
“நித்திமா, என்ன முடிவு பண்ணிருக்க?”
“என்ன முடிவு சாருமா?” என்றாள் புரியாமல்.
“என்னோட டீவி சீரியல்ல நடிக்கறது பத்தி…” எனவும் யோசித்தாள்.
அடுத்து வருமானத்திற்கு என்ன செய்வதென்ற கேள்வி மட்டும் இத்தனை நாளில் பெரிதாகிக் கொண்டே இருந்தது. அவள் படித்த படிப்புக்கு ஏதாவது சாதாரண வேலைக்குச் செல்ல நினைத்தாலும் அவளது முகம் எல்லாருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். யாருடைய பரிதாபத்தையும் எதிர் கொள்ள அவள் விரும்பவில்லை.
கையிருப்பு வேறு குறையத் தொடங்கிய நிலையில் அடுத்து எதையாவது செய்தே ஆக வேண்டிய நிலை.
“என்ன நித்தி, பதிலே காணோம்?” என்றார் சாரதா.
“எ..என்னால மறுபடியும் நடிக்க முடியுமா சாருமா” என்றாள் சற்றுக் குழப்பத்துடன்.
“அதை நான் பார்த்துக்கறேன். சே எஸ் ஆர் நோ…” என்றார் அவரும் விடாமல் அவளிடம்.
“ம்ம்… ஒண்ணுமே செய்யாமல் இருக்கறதுக்கு எதையாவது செய்யலாம்னு தான் தோணுது. ஆனா, இத்தனை வருஷத்துக்கு அப்புறம், என்னால நடிக்க முடியுமான்னு…” என அவள் தயங்க,
“அதெல்லாம் என் பிரச்சனை, நான்தான் பார்த்துக்கறேன்னு சொல்றேன்ல…” என்றார் சாரதா.
சற்று முன் படித்த வரிகள் மனதில் வர, “ம்ம்… நான் நடிக்கிறேன் சாருமா…” என்றாள் நித்யஸ்ரீ நம்பிக்கையுடன்.
“ம்ம்… வெரி குட். நாளைக்கு என்னை ஆபீஸ்ல வந்து பாரு. மத்த டீடைல்ஸ் நேர்ல பேசிக்கலாம். வச்சிடறேன்” என்றவர் அழைப்பைத் துண்டிக்க மீண்டும் நித்யாவுக்கு யோசனையானது.
‘சீரியலில் நடிப்பது என்றால் தினமும் ஷூட்டிங் இருக்கும். அப்பப் பிள்ளைகளை எப்படிப் பார்த்துக்க முடியும்? வளர்ற பசங்களைக் கவனிக்காமல் விட்டால் சரியாகாது. என்ன பண்ணலாம்?’ என யோசித்தவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.
ஒரு காதல் இடைவேளை…
– லதா பைஜூ