அத்தியாயம் -4(2)
முன்பெல்லாம் பாக்யாவுக்கு இரண்டு பெண்களை நினைத்து எப்படி கரை சேர்ப்போம் என பயமாக இருக்கும். இப்போது அசோக் இருக்கிறான் என நினைத்துக் கொண்டார்.
பொருளாதார ரீதியாக அவனிடமிருந்து எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை, ஆனால் என்னவாக இருந்தாலும் நான் இருக்கிறேன் என அவன் வந்து நிற்பது அவருக்கு வார்த்தையில் சொல்லி விட முடியாத படி நிம்மதியை கொடுத்தது.
அனன்யாவுக்கோ அடிக்கடி அசோக் பற்றிய நினைவு வந்தது. அவளது உள்ளத்தில் அவன் உயரிய இடத்தில் இருந்தான்.
ஸ்ருதிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஒரு மாதமாவது பிறந்த வீட்டில்தான் இருக்க வேண்டும் என முடிவாக சொல்லி விட்டார் லதா. மனமில்லா விட்டாலும் ஸ்ருதியின் பெற்றோருக்கும் ஆசை இருக்கும் என்பதால் மனைவியை ஒத்துக் கொள்ள செய்து அங்கேயே விட்டு விட்டான் சமரன்.
ஆகவே அவள் திரும்ப வரும் வரை பாக்யா வீட்டில் சாப்பாட்டுக்கு சொல்லியிருந்தாள் ஸ்ருதி. என்ன நினைப்பார்களோ என தயக்கத்தோடுதான் கேட்டாள். ஆனால் உடனே ஒத்துக் கொண்டு விட்டார் பாக்யா.
ஏன் அவர்களை எல்லாம் சிரமம் செய்கிறாய், நானே பார்த்துக் கொள்வேன் என சொல்லத்தான் செய்தான் சமரன்.
இரண்டு மூன்று மாதங்களில் ஸ்ருதி திரும்பி வந்து விடுவதால் இடையில் யாரை சமையலுக்கு என வேலைக்கு சேர்ப்பது என யோசனை, குறுகிய காலத்துக்கு யாரும் வரவும் மாட்டார்கள், வெளியில் கணவன் சாப்பிடுவதையும் அவள் விரும்பமில்லை. ஆதலால் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொள்ள செய்து விட்டாள்.
வார இறுதியிலோ இல்லை வார நாட்களிலும் கூட மகனையும் மனைவியையும் பார்க்க மதுரை சென்று விடுவான் சமரன்.
ஸ்ருதியையும் குழந்தையையும் பார்க்க பாக்யா வீட்டில் மூவருக்கும் அத்தனை ஆசை. ஆனால் அவர்கள் சென்று புகழேந்திக்கு தெரிந்து, புது விதமாக பிரச்சனைகள் வருமோ என நினைத்து இங்கு வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என இருந்து விட்டனர்.
கண்ணப்பன்தான் பெரும்பாலும் சமரனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வருவார். அவர் இல்லாத சில சமயங்களில் அவந்திகாவோ அனன்யாவோ செல்வார்கள்.
அன்று ஞாயிறு என்றாலும் முந்தைய நாளின் வேலைப் பளு காரணமாக தாமதமாகத்தான் எழுந்திருந்தான் சமரன். காலை சாப்பாடு கண்ணப்பன் மூலமாக அவனுக்கு கொடுத்து விட்டிருந்தார்கள்.
நெடு நாட்களாக தேடப் பட்டுக் கொண்டிருந்த குற்றவாளியின் இருப்பிடம் தெரிய வர, பதினோரு மணி போலவே சமரன் அவனது குழுவுடன் சென்று விட்டான். யாருக்கும் அறிவிக்கவெல்லாம் அவனிடம் நேரமில்லை. இது தெரியாமல் மதியம் அசைவ உணவு சமைத்து எடுத்து சென்றிருந்தாள் அனன்யா.
வேறு வேலையாக திண்டுக்கல் வந்திருந்த அசோக்கும் நண்பன் வீட்டில் இல்லாதது தெரியாமல் அவனை காண சென்றிருந்தான். வெளிக் கேட் திறந்துதான் இருந்தது. வீடு பூட்டப் பட்டிருந்தது.
யோசனையானவன் சமரனின் கைப்பேசிக்கு முயல, ‘நாட் ரீச்சபிள்’ என வந்தது. மீண்டும் மீண்டும் நண்பனின் கைப்பேசிக்கு முயன்று கொண்டே வெளியில் இருந்தே வீட்டின் பின் பக்கம் சென்று விட்டான்.
அங்கு நீண்ட வராண்டா உண்டு, அடைப்பு ஏதும் இல்லாமல் திறந்துதான் இருக்கும். சமரனை தொடர்பு கொள்ள முடியாமல் போக அங்கேயே அமர்ந்து விட்டான்.
அசோக்குக்கு வேறு ஏதோ அழைப்பு வரவும் அதை ஏற்று பேசிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில்தான் அனன்யா வந்தாள். வெளியில் அசோக்கின் பைக்கை பார்த்து விட்டவள் அவனும் இருக்கிறானா என ஆவலோடுதான் காம்பவுண்ட் உள்ளே வந்தாள்.
வீடு பூட்டியிருக்க அசோக்கின் பேச்சுக் குரல் கேட்கவும் அவளும் வீட்டின் பின் பக்கம் சென்றாள். அவளை கண்டவன் புன்னகையுடன் ‘வா’ எனும் படி தலையசைத்து பேச்சை தொடர்ந்தான்.
சில நொடிகள் அவனை பார்த்திருந்தவள் தோட்டம் பக்கமாக வேடிக்கை பார்க்கலானாள். ஸ்ருதியின் கை வண்ணத்தில் நிறைய பூச்செடிகள் இருந்தன. தினமும் மனைவியின் கட்டளை படி செடிகளுக்கு தண்ணீர் விட்டு விடுவான் சமரன். இன்று மறந்து விட்டான் போலும்.
துப்பட்டாவை மாலை போல அணிந்து கொண்டவள் செடிகளுக்கு தண்ணீர் விட ஆரம்பித்தாள். கைப்பேசியில் பேசி முடித்த அசோக் எழுந்து அவளிடம் வந்து நின்றான்.
“நீங்க வர்றதா சொல்லவே இல்லை?” என சாதாரணமாக கேட்பது போலிருந்தாலும் எங்கள் வீட்டுக்கு வரவில்லை, வருவதாக சொல்லவும் இல்லையே என்பதில் சின்ன கோவம் அவளிடம் தெரிந்தது.
“எதுவும் பிளான் இல்லை அனன்யா, இவன் தனியா இருக்கானேன்னு பார்த்திட்டு போகலாம்னு நினைச்சேன்” என்றான்.
“ஸாரை பார்த்திட்டு அப்படியே போயிருப்பீங்க, என்ன?” அவனது முகத்தை பாராமல் கேட்டாள்.
“சண்டை போடுறீங்களா?” என அவன் கேட்கவுமே சுதாரித்து விட்டவள், “என்னை சண்டைக்காரின்னே முடிவு கட்டிட்டீங்களா?” என்றாள்.
“ஓ நீங்க அப்படி இல்லயா?” என அவன் கேட்கவும் அவள் கண்டனமாக பார்க்க, அவன் கண்களால் சிரித்தான்.
அசோக்கிற்கு சமரன் அழைத்தான். அவனுடன் பேசி முடித்தவன், “சமர் வர நைட் ஆகிடுமாம். நான் கிளம்புறேன்” என்றான்.
அவள் கோவமாக முகத்தை திருப்பிக் கொள்ள, “சண்டே ஒரு நாள்தான் அத்தை மதியம் தூங்குறாங்க. நான் வந்தா அவங்களுக்கு இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட்டும் போயிடும்” என்றான்.
தங்களை தவிர்க்க நினைக்கிறானோ, தவிர்த்தால்தான் என்ன தவறு? அவன் எங்களுக்கு செய்வதே அதிகம்தான், அதில் இப்படி எல்லாம் நான் ஏன் எதிர்பார்க்கிறேன் என்றெல்லாம் நினைத்தவள், “சரி போயிட்டு வாங்க” என உள்ளே சென்ற குரலில் சொன்னாள்.
“நீங்களும் கிளம்புங்க” என்றவனிடம் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு செல்வதாக சொன்னாள். அவளை தனியே விட விரும்பாதவன் அங்கேயே அமர்ந்து விட்டான். அவளுக்கும் அவன் இருப்பது தெரிய, மனம் இதமாகி விட்டது.
கைகளை சுத்தம் செய்து கொண்டவள், “சாப்பிடுறீங்களா?” எனக் கேட்டாள்.
அவனுக்கும் நல்ல பசிதான், சரி என தலையாட்டினான். வேகமாக ஓடி சென்று சாப்பாடு இருந்த வயர் கூடையை எடுத்து வந்தாள். தட்டு இல்லாமல் போக அங்கிருந்த வாழை மரத்திலிருந்து இலை ஒடித்து கழுவி எடுத்து வந்து வைத்தாள்.
சுடு சாதம் போட்டு நாட்டுக் கோழி குழம்பும் வறுவலுமாக பரிமாறினாள். காரத்தில் அவனது கண்கள் கலங்கிப் போயின. ஆனாலும் ரசித்து சாப்பிட்டான். வறுவலை எல்லாம் அவனது இலையில் வைத்து விட்டவள் அந்த பாத்திரத்தை கழுவி அதில் குடிக்க தண்ணீர் பிடித்து கொடுத்தாள்.
சில முறை அத்தை வீட்டில் சாப்பிட்டிருந்தாலும் அங்கு செய்யப் படும் உணவுப் பக்குவம் ஓரளவு இவன் நாவிற்கு பழக்கம். இன்று வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தவன், “யார் சமையல் இது அனன்யா?” எனக் கேட்டான்.
“நான்தான் சமைச்சேன், யூ டியூப் பார்த்து செஞ்சேன்” என பெருமையாக கூறினாள்.
“எக்ஸாம் பக்கத்துல வச்சுகிட்டு படிக்காம இதெல்லாம் ஏன் செய்ற?”
“ரிலாக்ஸ் பண்ணிக்க என்ன செய்றது நான்? அதான் சமைச்சேன். நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லலை, ஒரே கேள்வியா கேட்குறீங்க?”
“ஹையோ செம செம! இப்படி சாப்பாடு கிடைக்கும்னா வாரா வாரம் அத்தை வீட்டுக்கு வரலாம் போலயே. போலீஸ்காரனுக்கு கொடுத்து வைக்கல, எனக்குன்னு எழுதியிருக்கும் போது அவனால எப்படி சாப்பிட முடியும்?” என அவன் பேசிக் கொண்டிருக்க, அவளின் கன்னங்கள் இரண்டும் பூரிப்பில் உப்பி போயின.
எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி அவளது தோளில் வந்தமர்ந்தது.
“பாரேன், உன்னை பூன்னு நினைச்சிட்டோ!” என கிண்டலாக சொன்னான் அசோக்.
அவள் ஆசையாக பட்டாம்பூச்சியை பார்க்க, சில நொடிகளில் பறந்து சென்று விட்டது.
“இது பூ இல்லை புயல்னு தெரிஞ்சி பறந்து போச்சு” என இன்னும் கிண்டல் செய்தான்.
“நானும் என்னை பூன்னு சொல்லிக்கல, அப்புறம் புயலும் இல்லை” என பொய் கோவத்தோடு சொன்னாள்.
“ஹப்பா என்னா கோவம்? நீதான் காரம்னா உன் சமையல் அதை விட காரம்” என்றவன் அவளை ஒருமையில் பேசியது உணர்ந்து, “வந்து…” என தடுமாறி சிரித்தான்.
“இன்னும் மரியாதை எல்லாம் வேணுமா? அதான் வா போன்னு வந்திடுச்சே, அப்படியே கூப்பிடுங்க. மரியாதையா பேசி உங்களை சின்ன பையனாவும் என்னை உங்களை விட பெரிய பொண்ணாவும் காட்டி யாரை ஏமாத்த பார்க்குறீங்க?”
“ஹப்பா என்னா பேச்சு? லா படிக்கலாம்னு யாரும் சஜ்ஜஸ்ட் பண்ணினது இல்லயா உனக்கு?”
“ப்ச்… இல்லையே”
இப்படி பேசிக் கொண்டே வயிராற உண்டு விட்டான். பாத்திரங்களை வெறும் தண்ணீரில் கழுவி கூடையில் வைத்து விட்டு அவள் திரும்ப, உண்ட களைப்பில் தூணில் சாய்ந்திருந்தான் அசோக்.
“இப்படியே பைக்ல போனா எதிர்காத்துல தூங்கினாலும் தூங்கிப் போயிடுவீங்க, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு கிளம்புங்க” என சொல்லிக் கொண்டிருந்தவளின் முகம் நொடியில் மாறி விட்டது.
அசோக் கண்கள் மூடிக் கொண்டிருக்க அவளின் முக மாற்றத்தை அவனால் காண முடியவில்லை. அதிர்ச்சியில் அவளுக்கு பேச்சு வரவில்லை, அவனுக்கு ஏதும் ஆகி விடக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாக இருந்தது.
ஓடி வந்தவள் அவனை நோக்கி ஊர்ந்து வந்து கொண்டிருந்த தேளை வெற்றுக் கையால் தள்ளி விட, அவளது கையில் கொட்டி விட்டது தேள். ஆ என அவள் அலறவும்தான் கண்கள் திறந்தான் அசோக்.
மூச்சு வாங்க அவள் கையை உதறிக் கொண்டிருப்பதையும் சற்று தள்ளி கிடந்த தேளையும் கண்டவன் திகைப்பின் உச்சத்திற்கு சென்று விட்டான்.