என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -3
அத்தியாயம் -3
அனன்யாவுடன் படித்த மேகா எனும் மாணவிக்கு ஒருவன் பல நாட்களாக காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். மேகா சம்மதிக்காமல் போக திராவக வீச்சு செய்ய முயன்றிருக்கிறான். அவளுக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த அனன்யாவுக்கு அவன் என்ன செய்ய போகிறான் என சரியான கணிப்பு இல்லை என்ற போதும் ஏதோ தவறு என புரிந்திருக்க நொடியில் மேகாவை இழுத்து நிறுத்தி விட்டாள்.
அதில் அனன்யாவின் மீது லேசாக திராவகம் சிதறி விட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் பாக்யாவுக்கு செய்தி கிடைக்க என்ன செய்வதென அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.
விவரம் தெரிந்த யாரின் உதவியாவது வேண்டுமே என நினைத்தவருக்கு ஸ்ருதி, அசோக் இருவரின் நினைவுமே வந்தது. ஸ்ருதி கர்ப்பவதி என்பதால் அசோக்கிற்கு அழைத்து விட்டார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையை அசோக் அடைந்த போது நண்பகல் பனிரெண்டு ஆகி விட்டது. வழியிலேயே சமரனிடம் பேசியிருந்தான். பெரிய காயம் இல்லை, தான் அங்குதான் இருக்கிறேன் என சமர் சொல்லியிருந்தாலும் ஒருவித பதட்டத்தோடுதான் வந்து சேர்ந்திருந்தான்.
அனன்யாவின் வலது கையில் மணிக்கட்டுக்கு மேலாக திராவகம் பட்டிருந்தது. சிகிச்சை வழங்கப்பட்டு வலி நிவாரணி கொடுக்க பட்டிருந்தாலும் அவள் அனுபவிக்கும் எரிச்சல் அவளது முகத்தில் தெரிந்தது.
அசோக் வந்ததும் பாக்யாவுக்கு தெம்பாக இருந்தது. தாக்குதல் நடத்தியவன் பின்புலம் கொஞ்சம் சரியில்லை, ரௌடி குடும்பம் என்றே சொல்லலாம், அதனால்தான் இத்தனை தைரியம். கைது செய்யப் பட்டு விட்டதாக சொன்னான் சமரன்.
“வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடவாடா?” எனக் கேட்டான் அசோக்.
“அவசியம் இல்லைடா, பார்த்திட்டு இன்னிக்கே வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. அதுக்கப்புறம் வீட்டுக்கு பக்கத்துல காட்டினா போச்சு. பாவம் பயந்து போயிருக்காங்க உன் அத்தை, நீ கூட இரு. அரெஸ்ட் பண்ணி வச்சிருக்க அந்த ராஸ்கலை கவனிக்க வேண்டியிருக்கு” என்ற சமரன், இங்கு காவலுக்கு போலீசாரை நிறுத்தி விட்டு அசோக்கிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான்.
கண்ணப்பன் குடும்பம் ஏதோ கல்யாணத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்தனர். வந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என இருந்து விட்டார் பாக்யா.
அந்தப் பெண் மேகா அவளது பெற்றோர் இன்னும் சில உறவினர்கள் நின்றிருந்தனர். மிகவும் பயந்து போயிருந்தாள் அந்தப் பெண். அழுகை நிற்கவே இல்லை. அனன்யாவின் கையை பார்த்து பார்த்து அழுதாள்.
அனன்யாவுக்கு மன உளைச்சல் கொடுக்கும் என்பதால் அசோக்தான் மேகாவையும் அவளுடன் இருந்தவர்களையும் கிளம்ப சொன்னான். மேகாவின் பெற்றோர் பாக்யாவுக்கு இன்னொரு முறை நன்றி சொன்னார்கள். நாளை வந்து அனன்யாவை பார்ப்பதாக சொல்லிக் கொண்டு விடை பெற்றார்கள்.
அவந்திகாவுக்கு இன்னும் எதுவும் தெரியாது என சொன்னார் பாக்யா. இப்போது எதுவும் சொல்ல வேண்டாம், நேரில் பொறுமையாக சொல்லுங்கள் என சொல்லி விட்டான் அசோக்.
அனன்யாவின் அருகில் சென்றவன் அவளது கைக் காயத்தை பார்த்தான். எப்படியோ பெரிதாக ஏதுமில்லை, ஆனால் ஆகியிருந்தால்? என நினைக்கும் போதே அவனது மனம் பதைத்தது.
“ரொம்ப வலிக்குதா அனன்யா?” என வருத்தம் தொனிக்க கேட்டான்.
“இல்ல பரவாயில்லை” என்றாள்.
“பெருசா எதுவுமில்லை, சீக்கிரம் சரியாகிடும்” என ஆறுதலாக அவன் சொல்ல தலையாட்டிக் கொண்டாள்.
“கண்ண மூடி தூங்கு” என்றான்.
காயம் காந்திக் கொண்டிருக்க எங்கிருந்து உறங்குவாளாம், ஆனால் அவன் ஆறுதலாக அவளிடம் பேசுவதும் பதைப்போடு அவளை பார்ப்பதும் பெயருக்காக அல்லாமல் உள்ளத்தில் இருந்து நடக்கிறான் என்பது அவளுக்கு புரிய லேசாக புன்னகை செய்து வைத்தாள்.
பட படவென பேசுபவளின் இந்த அமைதி அவனுக்கு பிடிக்கவே இல்லை.
மகளுக்கு பருக ஏதாவது வாங்கி வருகிறேன் என கிளம்பினார் பாக்யா. அத்தையை இருக்க சொல்லி விட்டு அவனே சென்றான். இருவருக்கும் இளநீர் வாங்கி வந்து கொடுத்தான்.
அதன் பின் அவன்தான் பார்த்துக் கொண்டான். போலீசாரின் செய்முறைகள், மருந்து ஏதேனும் வாங்கி வருவது, மதிய உணவு என எல்லாம் அசோக்தான். ‘சொல்லாமல் கொள்ளாமல் எங்கடா போய் விட்டாய்?’ என்ற அப்பாவிடம் நண்பன் ஒருவனை பார்க்க வந்ததாக பொய் சொல்லி சமாளித்தான்.
சில நாட்களுக்கு முன்பு கூட ஞாயிறு அன்று வீட்டில் தங்கவில்லை, இன்றும் எங்கோ சென்று விட்டு நண்பன் கதை சொல்கிறான் என யோசனையான புகழேந்திக்கு மகனின் செயல் நெருடலாக இருந்தது.
மாலையில் அனன்யாவையும் அத்தையையும் அசோக்தான் அவனது காரில் வீட்டுக்கு அழைத்து சென்றான்.
தங்கையை பார்த்த உடன் என்னவென விசாரித்து விஷயம் தெரிந்ததும் பயந்து போய் விட்டாள் அவந்திகா. அழுத அக்காவை அனன்யாதான் சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.
“இப்படியே உம்மனாமூஞ்சியாட்டம் இல்லாம உன் மாமா பையனை கவனி, பாவம் ஒரு நாள்லேயே ஓடி ஓடி ஓஞ்சு போயிட்டார், இளைச்சு போன மாதிரி வேற இருக்கார்” என அனன்யா சொல்லவும் அசோக்கை சங்கடமாக பார்த்தாள் அவந்திகா.
இப்படி வெளிப்படையான கிண்டல் பேச்சை எதிர் பார்த்திராத அசோக் முதலில் திகைத்து பின் சிரித்தான்.
“தப்பா எடுக்காதீங்க, வாய்தான் கொஞ்சம் ஓவரே தவிர ரொம்ப நல்லவ” என சமாதானமாக சொன்னாள் அவந்திகா.
“பரவாயில்லை, அனன்யாதான் எதுவும் சரியா சாப்பிடல, அவங்களையே கவனிங்க” என்றவன் அத்தை எங்கே என எட்டிப் பார்த்தான். வீடு வந்த உடனே அறைக்கு சென்றிருந்தார் பாக்யா. மகள்களும் உள்ளே சென்று அம்மாவை பார்க்க சோர்வாக படுத்திருந்தார்.
வற்புறுத்தி அவரை மருத்துவமனை அழைத்து சென்றான். சத்துக் குறைபாடுதான் என சொல்லி மருந்துகள் எழுதிக் கொடுத்து, குறைந்த இரத்த அழுத்ததுக்கும் என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி விட்டனர்.
அவர்கள் வீடு வரும் போது சமரனும் ஸ்ருதியும் வந்திருந்தனர்.
முன்னர் நகை விஷயத்தில் இழுபறி செய்த எஸ் ஐ, திராவக வீச்சில் கைது செய்யப் பட்டிருப்பவனுக்கு சாதகமாக செயல் பட முனைவதை சொன்னான் சமரன். இன்ஸ்பெக்டர் கூட நேர்மையானவர் கிடையாது. கைதானவனுக்கு எதிராக சாட்சி கூற அனன்யா செல்ல வேண்டும். ஆகவே அனன்யாவுக்கு ஏதாவது சிக்கல் வரலாம்.
மேகா பற்றி கவலை இல்லை, அவளின் வீடு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது. அக்கம் பக்கம் ஆட்களும் இருக்கிறார்கள். அந்த பகுதி எஸ் ஐ’யும் தேவையான பாதுகாப்பு தருவார்.
பாக்யா பயந்து போக, “பயப்பட சொல்லலை மா, எச்சரிக்கை செய்றேன் அவ்ளோதான். என்ன பிரச்சனைன்னாலும் எனக்கு டைரெக்ட்டா கால் பண்ணுங்க. தைரியமா இருங்க” என்றான் சமரன்.
“என்னடா இது, அத்தை இங்க இருக்கிறது ஸேஃப்டிதானே?” என கவலையாக கேட்டான் அசோக்.
“வேற எங்க போவோம் நாங்க? அம்மா பல வருஷமா இங்க உள்ள ஸ்கூல்தான் இருக்காங்க. நான் படிப்பு முடிக்கிற வரைக்கும் இங்கேருந்து வேற இடம் மாற முடியாது” என்றாள் அனன்யா. ஆமோதிப்பது போல பார்த்தார் பாக்யா.
இங்கு இருப்பதில் பயமில்லை என்று சமரன் சொன்னாலும் உடன்பாடு இல்லாதவன் போலவே காணப் பட்டான் அசோக்.
ஸ்ருதிதான் அவனை கவனித்து விட்டு, பாக்யாவின் மனநிலையையும் கருத்தில் கொண்டு, தாங்கள் இருக்கும் பகுதிக்கே இவர்களின் ஜாகையை மாற்றி விடலாமா என யோசனை கேட்டாள்.
பாக்யாவுக்கு வேலைக்கு வந்து செல்ல கொஞ்சம் அலைச்சல், அனன்யாவுக்கு கல்லூரி செல்வதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. கண்ணப்பன் வீடும் அங்குதான் இருக்கிறது. ஆனால் இங்கு கொடுத்துக் கொண்டிருக்கும் வாடகைக்கு வீடு கிடைக்குமா என யோசனை செய்தார் பாக்யா.
வாடகை பற்றியெல்லாம் கவலை பட வேண்டாம் என அசோக் சொல்ல தயக்கமாக பார்த்தார் பாக்யா.
“ஸேஃப்டி முக்கியம் அத்தை, வேறெதுவும் பேசக்கூடாது!” என கட்டளையாக சொன்ன அசோக், “ஏற்பாடு பண்ணி தா டா” என சமரனிடம் சொன்னான்.
அவன் பேசுவதற்கு முன், “உன் ஃப்ரெண்ட்டுக்கு ஏது நேரம், நான் எதுக்கு இருக்கேன் பார்த்துக்கிறேன்” என்றாள் ஸ்ருதி.
“நீயா?” என்றான் அசோக்.
“நீ நினைக்கிற மாதிரி இவளே அலைஞ்சி வீடு தேட போறதில்லை. நிறைய ஃப்ரெண்ட்ஸ் வச்சிருக்காடா, நிறைய கான்ட்டாக்ஸ் இருக்கு. செஞ்சிடுவா” என சமரனும் மனைவியிடமே பொறுப்பை ஒப்படைத்தான்.
சமரனும் ஸ்ருதியும் கிளம்பி விட்டனர். அசோக் சிறிது நேரம் அங்குதான் இருந்தான்.
நல்ல முறையில் அத்தையின் திருமணம் நடந்திருந்தால் இப்போது அவன் குடும்பமே துணைக்கு நின்றிருக்கும், தன் வீட்டிற்கே அழைத்து சென்றிருப்பான். அது இப்போது முடியாத காரியம் என்றாலும் ‘இவர்கள் என் பொறுப்பு’ என்பது அவனது மனதில் ஆழமாக பதிந்து போனது.
அவந்திகா அமைதியாக இரவு சாப்பாடு தயார் செய்ய ஆரம்பித்தாள். சோர்வாக இருக்க அறையில் படுத்திருந்தாள் அனன்யா.
அசோக் அத்தையிடம் ஆறுதலாக பேசிக் கொண்டிருக்க, அவனது கையை பிடித்துக்கொண்டு அழுது விட்டார் பாக்யா.
“வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணி என் புள்ளைங்களுக்கு ஆதரவுன்னு ஆள் இல்லாம பண்ணிக்கிட்டேன்னு எம்மேலயே கோவமா வருது அசோக்” என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.
பொறுத்துக்கொள்ள முடியாத அனன்யா எழுந்து வெளியில் வந்து, “அவங்க ஒதுக்கலைன்னுதானே வெளில வந்த? இத்தனை வருஷம் கழிச்சு இப்ப என்னம்மா அதையெல்லாம் சொல்லி அழற? எதுவும் பிரச்சனை ஆகாது, அமைதியா இரு” என அதட்டலாகவே சொன்னாள்.
“நடு ராத்திரி யாராவது வந்து ஏதாவது பண்ணிட்டா என்னடி பண்றது? சமரன் சாருக்கு கால் பண்ணி அவர் ஆள் அனுப்புறதுக்குள்ள ஏதாவது அசம்பாவிதம் ஆகிப் போச்சுன்னா?” என பயத்தோடு கேட்டார் பாக்யா. மிரட்சியோடு தங்கையையும் அசோக்கையும் மாறி மாறி பார்த்தாள் அவந்திகா.
அந்தக் கவலை எல்லாம் அனன்யாவுக்கும் இல்லாமல் இல்லை. ஆனால் தைரியமாக காட்டிக் கொண்டவள், “ஏம்மா இவ்ளோ கற்பனை பண்ற? காலனிலதான் இருக்கோம், மெயின் கேட் பூட்டி இருக்கும் போது யார் வந்து என்ன செய்வா? அப்படி ஏதாவது ஆனாலும் பக்கத்துல உள்ளவங்க ஹெல்ப் பண்ணாம போயிடுவாங்களா? முதல் முறை சமாளிச்சா போதும், அப்புறம் போலீஸ்ல ப்ரொடக்ஸன் கேட்டுக்கலாம்” என்றாள்.
அதற்கும் பாக்யா பயந்து போனார்.
“ஏன் அத்தை இவ்ளோ கவலை? எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வேற வீடு மாறிடலாம்” என்றவனுக்கு அன்று இரவு அவர்களை தனியே விட்டு செல்லவே மனதில்லை.
பெண்கள் மூவரும் இது பற்றியே பேசிக் கொண்டிருக்க, “இன்னிக்கு நைட் நான் இங்கேயே ஸ்டே பண்றேன். நாளைக்கு அவந்திகாவோட பெரியப்பா வந்திடுவார்தானே? வீடு மாறுற வரை அவரை வந்திருக்க சொல்லுங்க” என யோசனை சொன்னான்.
பாக்யாவுக்கும் அவன் அன்று துணைக்கு இருந்தால் தேவலாம் எனதான் இருந்தது. ஆனால் அதிகம் தொல்லை செய்கிறோமோ என வேறு கவலை.
“என்னத்தை நான் தங்குறதுல எதுவும் உங்களுக்கு பிரச்சனையா?” அப்படி எதுவும் இருக்குமோ என நினைத்து உண்மையாகவே கேட்டான்.
“ஐயோ ராஜா, தங்கம்… அதெல்லாம் இல்லப்பா. உனக்கும் எவ்வளவோ வேலை இருக்கும்? இங்க வசதி பத்துமான்னு வேற யோசனை, வேற ஒன்னுமில்லப்பா” என்றார் பாக்யா.
“எனக்கு எந்த வசதி குறைச்சலும் இல்ல, பசிக்குது சாப்பிடலமா?” எனக் கேட்டு அத்தையை இலகுவாக்கியவன் அனன்யாவை பார்த்து, “நான் இளைச்சு போயிட்டேன்னுலாம் சொன்னீங்க, கவனிங்க என்னை” என்றான்.
அசோக்கின் செயல்களும் பேச்சும் அவளை மிகவும் கவர்ந்தது.
“அவந்தி… சட்னி செஞ்சிட்டியா? இட்லி ஊத்து, சின்ன சின்னதா ஊத்தாதே, உன் மாமா பையன் கன்னத்துக்கு போட்டியா இருக்கணும் இட்லி” என சத்தமிட்டவள், “என்ன இந்த கவனிப்பு போதுமா?” என அசோக்கிடம் கிண்டலாக கேட்டாள்.
அவனுக்கு வெட்கமாகிப் போக, என்ன சொல்ல என விழித்தான்.
“கழுதை! போடி உள்ள!” என பாக்யா அதட்டல் போட்டு மகளை அங்கிருந்து போக செய்தார்.
“தப்பா எடுத்துக்காத அசோக். இவ அப்பா கூட அமைதிதான், இவளுக்கு மட்டும் எங்கேருந்து இப்படி வாய் வந்துச்சுன்னே எனக்கு தெரியலை” என்றார்.
“இருக்கட்டும் அத்தை. முதல்ல முறைச்சுக்கிட்டு இருந்தாங்க, இப்போதான் உறவா நினைக்கிறாங்க, அதான் இந்த கிண்டல் எல்லாம். எதுவும் நினைக்கல நான்” என்றான்.
அவனது பேச்சு காதில் விழ, அனன்யா முகத்தில் தானாக புன்னகை பூத்தது.
நிஜமாகவே இட்லி குண்டு குண்டாகத்தான் இருந்தது. சாப்பிடுகையில் அனிச்சையாக தன் கன்னம் தொட்டு பார்த்துக் கொண்டவனை கவனித்து விட்ட அனன்யாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“எதுக்குடி சிரிக்கிற? புத்தி பேதலிச்சு போச்சா, ஒழுங்கா சாப்பிடு!” என பாக்யா அதட்டல் போட்டார்.
எங்கே ஏதாவது சொல்லி மானத்தை வாங்கி விடுவாளோ என அசோக் சங்கடமாக பார்க்க, அவன் எண்ணத்தை புரிந்து கொண்டவள் அப்படி ஏதும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட்டாள்.
அதே ஆடையோடுதான் இருந்தான் அசோக். வீட்டுக்கு வெளியில் சென்று அன்று இரவு நண்பன் வீட்டில் தங்குவதாக அம்மாவிடம் சொல்லி சமாளித்து விட்டு வந்தான்.
அறையில் படுத்துக் கொள்ள சொன்னதற்கு மறுத்து விட்டான். ஹாலில் படுக்க ஏற்பாடு செய்து கொடுத்தாள் அவந்திகா. புது இடம், வெட்கையாக வேறு இருக்க அவனுக்கு உறக்கம் வரவில்லை.
அறையிலும் சீலிங் ஃபேன் இருந்தாலும் அனன்யாவுக்காக ஒரு டவர் ஃபேன் வாங்கிக் கொடுத்திருந்தார் பாக்யா. கை எரிச்சலில் இடையில் விழித்த அனன்யா அம்மாவும் அக்காவும் உறங்கிப் போயிருப்பதை கவனித்து விட்டு ஹாலை எட்டிப் பார்த்தாள்.
அரை தூக்கத்தில் அவன் புரண்டு கொண்டிருப்பதை கவனித்தவள் டவர் ஃபேனை அவனுக்கு கொண்டு வந்து வைத்தாள். அரவத்தில் விழித்துக் கொண்டவன் அவளது செயலில் வியப்பாக பார்த்து விட்டு, “உன் கைக்குதான் சில்லுன்னு காத்து வேணும், ப்ளீஸ் எடுத்திட்டு போ” என்றான்.
உறக்க கலக்கமோ என்னவோ அவனையறியாமல் ஒருமையில் பேசியிருந்தான்.
“இங்க உள்ள ஃபேன் ஸ்லோவாதான் ஓடும், ரூம்ல ஒன்னும் பிரச்சனை இல்ல, நல்லா தூங்குங்க” என சொல்லி அறைக்கு சென்று விட்டாள்.
மீண்டும் அவளுக்கே ஃபேனை வைக்க அறைக்கு செல்ல வேண்டும். அப்படி செல்ல தயக்கமாக இருக்க படுத்து விட்டான். சில நிமிடங்களில் உறங்கியும் விட்டான்.
காலையில் வீட்டில் இல்லா விட்டால் அப்பாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் விடியற்காலையே அலாரம் வைத்திருந்தவன் எழுந்து விட்டான்.
சொல்லிக் கொண்டு புறப்படலாம் என்றால் மூவரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.
என்ன செய்வது என்ற யோசனையோடே அவன் ஓய்வறை உபயோகித்து விட்டு வர அனன்யா எழுந்திருந்தாள். அவளிடம் விவரம் சொல்லி கிளம்ப போனான். ஐந்து நிமிடங்கள் காத்திருக்க சொன்னவள் வேகமாக காபி கலந்து எடுத்து வந்து தந்தாள்.
“பெட் காஃபி எல்லாம் எனக்கு பழக்கம் இல்லையே” என்றான்.
“பெட்ல இல்லையே நீங்க, சேர்’லதான உட்கார்ந்திருக்கீங்க, குடிங்க” என்றாள்.
“நைட் கொசுக்கடி இல்லையேன்னு நினைச்சேன், அதுக்கு பதிலா நீங்க கடிக்குறீங்களா?” எனக் கேட்டுக் கொண்டே வாங்கிக் கொண்டான்.
“தேங்க்ஸ்!” என உள்ளத்திலிருந்து சொன்னாள் அனன்யா.
தலையசைத்துக் கொண்டவன் “கை வலி பரவாயில்லையா?” என விசாரித்தான்.
பரவாயில்லை என்பது போல தலையாட்டியவள், “அது… அம்மாவை யாருமே கிடையாது நீ அப்படின்னு இவ்ளோ வருஷமா ஒதுக்கி வச்சிட்டாங்களேன்னு உங்க வீட்டு ஆளுங்க மேல கோவம். அதை உங்ககிட்ட காட்டியிருக்க கூடாது, ஸாரி!” என்றாள்.
“ஒரு நாள்ல தலைகீழா டைவ் அடிக்காதீங்க” என்றவன், “இப்ப நீங்க பேசிட்டு இருக்கிறது நிஜத்துலதானே நடக்குது?” என விளையாட்டாக கேட்டான்.
“இல்லையே கனவுதான். பாருங்க நான் இரத்தக் காட்டேரியா மாறி உங்க இரத்தத்தை குடிக்க போறேன்” என சொல்லி ஈ என பற்களை காட்டி, கண்களை பெரிதாக்கி, அவன் கழுத்தை நெறிப்பது போல பாவனை செய்தாள்.
அசோக் சன்னமாக சிரிக்க, “அவ்ளோ மோசமான இரத்தக் காட்டேரி இல்ல நான், ஓகே?” என கொஞ்சம் மிரட்டலாக சொன்னாள்.
“உண்மையை சொல்லனும்னா இரத்த காட்டேரி வந்து நின்னா கூட எனக்கு பயம் வராது, எப்ப என்ன பேசி என்னை டேமேஜ் பண்ணுவீங்களோன்னு உங்ககிட்டதான் பயமா இருக்கு” என சிரிப்போடு சொல்லிக் கொண்டே எழுந்து நின்றான்.
அம்மாவை எழுப்புவதாக அவள் சொன்னதற்கு மறுத்து விட்டான். அத்தையிடம் பிறகு கைப்பேசியில் பேசிக் கொள்வதாக சொல்லி விடைபெற்று வெளியே வந்தான்.
காலனிக்கு வெளியில்தான் காரை நிறுத்தியிருந்தான். வழியனுப்பி வைக்க அவளும் வெளியில் வந்தாள். இன்னும் முழுதாக விடிந்திருக்கவில்லை.
காரில் ஏறிக் கொண்டவன் அவளை உள்ளே செல்ல சொல்லி அவள் செல்லும் வரை காத்திருந்து பின்னரே காரை எடுத்தான்.
அசோக்கின் அக்கறை அனன்யாவை தித்திப்பாக உணர வைத்தது.