அத்தியாயம் -12(2)
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு சமரனுக்கு அழைத்தவன் எங்கு இருக்கிறான் கேட்டான். வீட்டை நெருங்கி விட்டதாக சொல்லவும், அனன்யா இங்கு இருக்கும் விவரம் சொன்னவன், “இவளை வீட்ல விட்ரு டா” எனக் கேட்டுக் கொண்டான்.
இருவரும் முன் பக்கம் கேட் அருகில் செல்லவும் சமரனின் கார் வரவும் சரியாக இருந்தது. பெரிதான பேச்சுக்கள் இல்லை. ஸ்ருதியை இறக்கி விட்டு அனன்யாவுடன் கிளம்பினான் சமரன்.
ஜிவின் உறங்கிப் போயிருந்தான்.
“இந்த மழைல ஊசி போடலைனா என்ன கெட்டுப் போச்சு?” என திட்டிக் கொண்டே ஸ்ருதியோடு வீட்டுக்கு வந்தான் அசோக்.
“நாங்க கிளம்பறப்போ அவ்ளோ மழை இல்லை, முன்னாடியே போட வேண்டிய தடுப்பூசி, அப்போ இவனுக்கு கோல்ட்’ன்னு டிலே ஆகிடுச்சு” என்றவள் அறைக்கு சென்று விட்டாள்.
இரவு வீடு வரவில்லை என் அம்மாவுக்கு சொல்லிக் கொண்டிருந்தான் அசோக்.
குழந்தையை படுக்கையில் கிடத்தி ஆடை மாற்றிக் கொண்டு சமையலறை சென்றாள் ஸ்ருதி.
“இப்போதான் வந்த, அதுக்குள்ள என்ன? வா சமரன் வரட்டும் நாங்க பார்த்துக்கிறோம்” என்றான் அசோக்.
“அப்படிலாம் வர முடியாது. ‘அக்கா அவருக்கு நல்ல பசி, சாப்பிட ஏதாவது கொடுங்கக்கா’ அப்படினு உன் ஆளுகிட்டருந்து மெசேஜ் வந்திடுச்சு” என ஸ்ருதி சொல்ல, அசோக்கின் முகம் கனிந்தது.
‘சாப்பிட்டு தூங்கு, நான் இருக்கேன் பார்த்துப்பேன்’ என காதலிக்கு செய்தி அனுப்பி வைத்தான்.
ஏற்கனவே எல்லாம் தயார் செய்து விட்டுத்தான் சென்றிருந்தாள் ஸ்ருதி. ஆகவே சீக்கிரமாகவே உணவு மேசைக்கு உணவு வந்து விட்டது. சமரனும் வந்து விட மூவரும் சேர்ந்துதான் சாப்பிட்டனர்.
அத்தையின் இன்றைய கோவம், தன்னுடைய நிலை என அனைத்தையும் பகிர்ந்து கொண்டான் அசோக்.
“கல்யாணம் பண்ணிட்டு போய் மாமா முன்னாடி நில்லுங்க, ஏத்துக்காம எங்க போயிட போறார்?” எனக் கேட்டாள் ஸ்ருதி.
“உன் விஷயம் வேற ஸ்ருதி. உன்னோட சூழ்நிலைக்கு அப்படி கல்யாணம் நடந்தது. நீ சொல்ற மாதிரி கல்யாணத்துக்கப்புறம் எங்களை அப்பா ஏத்துப்பார்ன்னாலும் அப்படி தெரியாம செய்ய அத்தை ஒத்துக்க மாட்டாங்க. கல்யாணம் முடிஞ்சி அப்பா கூட சேர்ந்துதான் இருக்க போறோம், அப்பாவும் அனுவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கணும். அவர் சம்மதிச்சு ஊர் அறிய அவளை கல்யாணம் செய்தாதானே அவளுக்கு மரியாதை?” எனக் கேட்டான் அசோக்.
“நீ இன்னும் உன் அப்பாவோட ஃபெட் அப் ஆகல போல. அப்ப இன்னும் ட்ரை பண்ணு” என கிண்டல் போல ஸ்ருதி சொல்ல, “அவன் சீரியஸா பேசிட்டு இருக்கான், சும்மா இரு ஸ்ருதி” என மனைவியை அடக்கினான் சமரன்.
“இவ்ளோ யோசிக்கிற நீ தடாலடியா அனன்யாவை மதுரைக்கு வேலைக்கு கூப்பிட்ருக்க கூடாது. பாக்யாம்மா நிலையையும் யோசி, அனன்யாவுக்கு உடனே கல்யாணம் செய்யணும்னு அவங்களுக்கு எந்த அவசரமும் கிடையாது. உன் அப்பா எவ்ளோ நாள் சம்மதிக்காம இருப்பார்? ஸோ… வெயிட் பண்ணு” என்றான் சமரன்.
கையில் எடுத்த உணவை தட்டில் வைத்து விட்ட அசோக், “எவ்ளோ நாள் வெயிட் பண்ணனும்டா? சொல்ல ஈஸியா இருக்கும், எனக்கு…” என்றவன் ஒரு பெருமூச்சோடு மீண்டும் உணவை உட்கொள்ள ஆரம்பித்தான்.
கனத்த மனதோடுதான் மூவரும் உறங்க சென்றனர். நடு இரவில் சமரனுக்கு விழிப்பு வந்தது. உள்ளுணர்வின் உந்துதலில் அசோக்கை வந்து பார்த்தான். அனத்திக் கொண்டிருந்த அசோக்கின் நெற்றியில் கை வைத்து பார்த்த சமரன் திடுக்கிட்டு போனான். அவனுக்கு நல்ல காய்ச்சல்.
மாத்திரை போட்டுக் கொள்ள செய்து நண்பன் பக்கத்திலேயே அமர்ந்து விட்டான். அசோக்கிற்கு அப்போதைக்கு காய்ச்சல் விட்டாலும் விடியற்காலையில் மீண்டும் நல்ல காய்ச்சல்.
ஸ்ருதியிடம் சொல்லி விட்டு மருத்துவமனை அழைத்து வந்து விட்டான். சிகிச்சை செய்து சமரனே அவனது காரில் மதுரையில் அவனது வீட்டில் விட்டு வந்தான்.
இங்கு அனன்யாவுக்கும் சளி பிடித்துக்கொண்டது. அவளை வேலைக்கு செல்லக் கூடாது என கண்டிப்போடு பாக்யா சொல்லியிருக்க, அவளும் அம்மாவின் பேச்சை மீறவில்லை. அசோக்கிற்கு காய்ச்சல் என அறிந்து கவலை கொண்டனர்.
அசோக் தன் வீட்டில் எதையும் மறைக்கவில்லை, அனன்யாவை விட சென்றதிலிருந்து எதனால் காய்ச்சல் என்பது வரை அனைத்தையும் சொல்லி விட்டான்.
அதிருப்தியாக தன் மகனை பார்த்தார் புகழேந்தி.
“புள்ள எவ்ளோ கஷ்ட படுறான்னு பாருங்க, பார்த்து நீங்க ஒருத்தராவது நல்லா சந்தோஷமா இருங்க” என குதர்க்கமாக சொன்னார் விஜயா.
“என்னடி இப்போ ரொம்ப சத்தம் போடுற? கட்டிக்க சொல்லு அந்த பொண்ணையே” என இரைந்து விட்டு எழுந்தார் புகழேந்தி.
அம்மாவும் மகனும் இது உண்மையா என திகைக்க, “என் பேச்சை கேட்க மாட்டீங்கன்னு ஆகிடுச்சு, உங்க இஷ்டத்துக்கு என்னவோ பண்ணிக்கோங்க. ஆனா ஒன்னு… எதுக்கும் என்னை முன்னாடி வந்து நில்லுன்னு சொல்லக்கூடாது” என்றார்.
அவர் சம்மதித்து விட்ட மகிழ்ச்சி அப்படியே வடிந்து போனது இருவருக்கும்.
“எப்படியோ கல்யாணம் நடக்கட்டும்னு இருந்தா இவ்ளோ நாள் ஏன் வெயிட் பண்றான் இவன்? ஒரே புள்ளைக்கு எல்லாம் முறையா நாமதான் செஞ்சு வைக்கணும்” என்றார் விஜயா.
“அதுக்கு வேற ஆள பாரு!” என புகழேந்தி கத்த, “வாய கிளறாதீங்க, கோவத்துல ஏதாவது சொல்லிட போறேன்” என விஜயாவும் குரல் உயர்த்தினார்.
அசோக்கிற்கு உடல் மிகவும் தளர்ந்து விட்டது. சக்தியை திரட்டி எழுந்து நடந்து அறைக்கு சென்று விட்டான். மனைவியோடு நன்றாக சண்டை போட்ட பிறகு அலுவலகம் சென்று விட்டார் புகழேந்தி.
இரண்டு நாட்களாக அசோக் வீட்டில்தான் இருந்தான். காய்ச்சல் வருவதும் போவதுமாக இருந்தது. வைரஸ் காய்ச்சல், பயப்பட ஒன்றுமில்லை, சரியாகி விடும் என மருத்துமனையில் சொல்லியிருந்தனர்.
அன்றைய தினம் புகழேந்தி வீட்டிலிருந்து கிளம்பிய பிறகு பாக்யாவும் அனன்யாவும் அசோக் வீட்டிற்கு வந்திருந்தனர். இவர்களுடன் மதுரை வந்திருந்த ஸ்ருதி இங்கு வராமல் அவளது அம்மா வீட்டிற்கு சென்றிருந்தாள்.
விஜயா தன் நாத்தனாரை வா என அழைத்து விட்டு, வருங்கால மருமகளின் கை பற்றி உள்ளே அழைத்து சென்றார். அண்ணன் வீட்டில் இல்லை என்பதால் சற்று தைரியத்துடனே இருந்தார் பாக்யா.
அனன்யாவின் விழிகள் அசோக்கைதான் தேடிக் கொண்டிருந்தன. அவனது அறையை சுட்டிக் காட்டிய விஜயா, “முழிச்சிட்டிருந்தா இந்நேரம் பேச்சு குரல் கேட்டு இங்க வந்திருப்பான். தூங்குறான் போல, போய் பாருங்க” என்றார்.
அம்மாவும் மகளுமாக அசோக்கின் அறைக்கு செல்ல, அவர்களுக்கு குடிக்க ஏதாவது தயாரிக்க சமையலறை சென்று விட்டார் விஜயா.
அசோக் உறங்கிக் கொண்டிருந்தான். எழுப்பாமல் சத்தம் செய்யாமல் தாயும் மகளுமாக அவனை பார்த்த படி நின்றிருந்தனர். சில நிமிடங்களில் அங்கு வந்த விஜயா, “அவனை எழுப்பி விடலையா நீங்க?” எனக் கேட்டுக் கொண்டே மகனை எழுப்பி விட்டார்.
விழித்துக் கொண்டவன் எதிரில் அனன்யாவை கண்டு விட்டு கண்களை கசக்கி நன்றாக பார்த்தான்.
“எல்லாம் உன் வீட்டுக்காரி ஆகப் போறவதான்” என்றார் விஜயா.
ஒரு புன்னகையுடன், “வாங்கத்தை” என வரவேற்றுக் கொண்டே கட்டிலில் இருந்து இறங்கியவன் அனன்யாவிடம் கண்களால் நலம் விசாரித்தான்.
இவனுக்கு உடம்பு முடியவில்லை எனவும் அவளுக்கு மனம் சரியாகவே இல்லை. இன்று நேரில் அவனை காணவும் அவளது கண்கள் கலங்கிப் போயின.
அத்தை தன்னிடம் கேட்பதற்கு பதில் சொல்லிக் கொண்டே அனன்யாவின் முகத்தைதான் அடிக்கடி பார்த்தான்.
வேலையாள் பழச்சாறு எடுத்து வரவும் ஹால் செல்கிறோம் என பாக்யா செல்ல, அனன்யாவும் அம்மாவை பின்பற்றி சென்று விட்டாள்.
அசோக்கால் அறைக்குள் இருக்க முடியவில்லை. ஹால் வந்த மகனை பார்த்த விஜயா, “நான் சொல்லலை இப்ப வந்து நிப்பான்னு” என சிரிப்போடு சொன்னார்.
“ம்மா!” என அதட்டிய அசோக், தனி சோஃபாவில் அனன்யாவை நன்றாக பார்த்துக் கொண்டே அமர்ந்து விட்டான்.
மகனின் தோளில் தட்டிய விஜயா, “நாங்க ரெண்டு பேர் கூட இருக்கோம்னு நினைப்புல இருக்காடா?” என அதட்டினார்.
“என்னம்மா நான் ஒழுங்காதான் உட்கார்ந்திருக்கேன்” என அசடு வழிய சொன்னான்.
“போ அவளை கூட்டிட்டு போய் வீட்ட சுத்தி காமி” என விஜயா சொல்லவும் ஆவலாக எழுந்து கொண்டான் அசோக்.
“அதெல்லாம் வேணாம் அண்ணி, நாங்க கிளம்பறோம்” என்றார் பாக்யா.
அனன்யாவும் அம்மாவின் வார்த்தையை எதுவும் மறுத்து பேசாமல் இருக்க, அசோக்கின் முகம் வாடிப் போனது.
“ஏன் பாக்யா, அவ வாழப் போற வீடு, பார்க்கட்டுமே, என்ன தப்பு?” எனக் கேட்ட விஜயா, மகனை பார்க்க, அவன் அனன்யாவை பார்க்க, அவள் அம்மாவை பார்த்தாள்.
“சரியா போச்சு, அவன் கூட போ, உன் அம்மாகிட்ட தனியா பேசணும் நான்” என பாக்யா எதுவும் மறுத்து சொல்ல முடியாத படி அனன்யாவை மகனோடு அனுப்பி வைத்தார் விஜயா.
திருமணம் விரைவில் நடக்கும், ஓரளவு இறங்கி வந்து கொண்டிருக்கிறார் உன் அண்ணன் என நாத்தனாரிடம் சமாதானமாக பேசிக் கொண்டிருந்தார் விஜயா.
ஸ்ருதி தன் பெற்றோரிடம் பேசி புகழேந்தியின் மனதை மாற்ற வேண்டி அவர்களை அழைத்துக் கொண்டு இங்கு வந்து கொண்டிருந்தாள். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னரே அக்காவின் கணவரை அழைத்து முக்கிய விஷயம் பேச வேண்டும், வீட்டிற்கு வாருங்கள் என செல்வராஜ் சொல்லியிருக்க, புகழேந்தியும் வந்து கொண்டிருந்தார்.
அசோக்கை விட்டு நன்றாக இடைவெளி விட்டு நடந்து கொண்டிருந்த அனன்யாவுக்கு ஏதேதோ சிந்தனைகள். அன்று இங்கு வந்த போது கோவமாக புகழேந்தி நடந்து கொண்ட விதம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.
இந்த வீட்டில் என்னால் நிம்மதியாக வாழ முடியுமா, அசோக்கை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வேனா, அம்மா தனியாகி போவாரோ… என யோசனைகள் செய்து கொண்டே பின் பக்கம் செல்கையில் அங்கிருந்த படியை கவனிக்காமல் இடறி விழப் போனாள்.
“அனு எங்க இருக்கு உன் கவனம்?” என கேட்டுக் கொண்டே அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான் அசோக்.
அவள் விலகப் போக, இந்த தனிமைக்காக காத்திருந்தது போலவே அவளை அணைத்துக் கொண்டான்.
லேசாக சுட்டுக் கொண்டிருந்தது அசோக்கின் தேகம்.
“என்ன அசோக் இது?” என கடிந்தாலும் அவனிடமிருந்து விலகி செல்லவில்லை அவள்.
“ப்ளீஸ் அனு, எதுவும் சொல்லாம அமைதியா நில்லு. உடம்பு மனசு ரெண்டுலேயுமே தெம்பே இல்லை எனக்கு. மருந்து மாத்திரை விட இப்ப எனக்கு ரொம்ப தேவைபடுறது நீதான், நீ மட்டும்தான் அனு” என சோர்ந்த குரலில் அவன் சொல்ல, அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.