என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -11

அத்தியாயம் -11(1)

இரண்டு மாதங்களாக புகழேந்தி அதி தீவிரமாக தன் மகனுக்கு பெண் பார்த்தும் யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. ஸ்ருதி இல்லை என்றான பிறகு அப்போதிலிருந்தே பெண் பார்க்கிறார்தான்.

மகனுக்கு பெண் பொருத்தமில்லை, ஜாதகம் பொருந்தவில்லை, ஆண் பிள்ளை இல்லாத வீடாக இருக்கிறது என் மகனை வீட்டோடு இழுத்து விடுவார்களோ என பல காரணங்களுக்காக இவர்தான் வந்த வரன்களை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார்.

இப்போது என்னவென்றால் அசோக் வேண்டாம் என பெண் வீட்டினர் மறுக்க, தன் மகனின் திருமணம் குறித்து அவருக்கு பயம் வந்து விட்டது.

கணவரின் பயத்தை கண்டு கொண்ட விஜயா நயமாக, “உங்க தங்கச்சி பொண்ண பார்க்கலாமா?” எனக் கேட்டார்.

“நீ பேசாம இருடி, மதுரையிலேயும் இங்க சுத்தி உள்ளவங்களும்தான் தர மாட்டேங்குறாங்க? நான் தூரமா பார்க்கிறேன். சென்னை கோயம்புத்தூர் திருநெல்வேலின்னு பார்க்கிறேன், இல்லாட்டியும் கேரளா ஆந்திரா பாம்பேன்னு பொண்ணு பார்க்கிறேன்” என வீம்பாக சொன்னார்.

“அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கு?”

“என்னை என் அப்பாவை மீறி என் கூட பொறந்தவ போனா, கடைசில என்ன நிலைக்கு ஆளானா? உன் தம்பி பொண்ணு யாரையும் மதிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டாளே… அவ கதி என்னாச்சு, ஒரு சொந்தமும் அவகிட்ட பேசுறது இல்லை. என் மகன் கவுரவமா அந்தஸ்தா வாழுவான், வாழ வைப்பேன்”

 “உங்க தங்கச்சிக்கு நடந்ததுக்கு நீங்களா காரணம் கண்டு பிடிக்காதீங்க. பாக்யா விதி அதான்னா யாரால என்ன செய்ய முடியும்? ஸ்ருதி சமரனை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு அவள நீங்களும் சில பேரும் தள்ளி வச்சீங்க, அதனால என்ன இப்போ? நீங்கல்லாம் பேசலைன்னு குறைஞ்சு போயிட்டாளா? உங்க உறவு இல்லாம சோறு தண்ணி இறங்காம இளைச்சு போயிட்டாளா? கண்ணுக்கு நிறைவா குடும்பம் பண்றா. என் அண்ணன் பசங்க கொடுத்து வச்சவங்க, புள்ளைங்க மனசை மதிக்கிற பெத்தவங்க கிடைச்சிருக்காங்க. என் புள்ளை என்ன பாவம் பண்ணினானோ… என் வயித்துல பொறந்து, காலா காலத்துல ஒரு கல்யாணம் நடக்க மாட்டேங்குதே அவனுக்கு…” என புலம்பித் தீர்த்து விட்டார் விஜயா.

“ச்சீய் வாய மூடுடி, இல்லைனா போய் தனியா நின்னு புலம்பு” என எரிச்சலாக சொல்லி எழுந்து சென்று விட்டார் புகழேந்தி.

வெளி மாநிலம் வரை பெண் பார்க்க தயாராக இருக்கும் அப்பாவின் எண்ணத்தை அம்மாவின் மூலமாக அறிந்த அசோக்கிற்கு ஆயாசமாக வந்தது. அலுவலகம் செல்ல தயாரானவரை பேச வேண்டும் என சொல்லி இருக்க சொன்னான்.

“உங்க சம்மதத்துக்காக காத்து நிக்கிறது அவ்ளோ பெரிய குத்தமாப்பா? எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றேன், என் ஆசைக்கு மதிப்பில்லையா? எத்தனை பொண்ணு பார்த்தாலும் என் மனசுக்கு பிடிச்ச பொண்ணை உங்களால பார்க்க முடியுமா? ஒன்னு செய்யலாம், எனக்கு கல்யாணமே வேணாம், இப்படியே இருந்திடுறேன்” கோவமாக கத்தாமல் நிதானமாவே சொல்லி விட்டு வெளியில் சென்று விட்டான் அசோக்.

புகழேந்தி கறுத்து சிறுத்த முகத்தோடு அமர்ந்திருக்க, “வெளியூர்ல வேற பொண்ணு பார்க்கிறேன்னு வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு கிளம்பிடாதீங்க, நானே அந்த பொண்ணு வீட்ல போய் பேசி கல்யாண பேச்சை நிறுத்திடுவேன்” என்றார் விஜயா.

“புள்ள பூச்சிக்கெல்லாம் எப்போடி கொடுக்கு முளைச்சது?” பற்களை நெறித்துக் கொண்டு கேட்டார் புகழேந்தி.

“பெத்த புள்ளைன்னு வரும் போது பூச்சிக்கு கொடுக்கு இல்லை கொம்பு கூட முளைக்கும்” என நொடிப்பாக சொன்ன மனைவியை அவரால் வெறிக்க மட்டும்தான் முடிந்தது.

திருமணத்திற்கு பின் அசோக்கிற்கு அவனது தொழிலில் உதவியாக இருக்கலாம் என முடிவெடுத்து விட்டாலும் புகழேந்தி மனம் மாறாமலேயே இருக்க, திருமணம் விரைவிலேயே நடக்கும் என்ற நம்பிக்கை அனன்யாவிடம் இல்லை. ஆகவே அதுவரை அம்மா வேலை பார்க்கும் பள்ளிக்கே வேலைக்கு செல்லலாம் என முடிவெடுத்தாள்.

தெரிந்ததும் அசோக் சம்மதிக்கவில்லை.

“நமக்கு கல்யாணம் ஆக வருஷக் கணக்காகும்னு முடிவு பண்ணிட்டியா?” என கொஞ்சம் கோவமாக கேட்டான்.

“எவ்ளோ நாள் ஆகும்னு கரெக்ட்டா உங்களால சொல்ல முடியுமா?” என அவள் பதில் கேள்வி கேட்க, அவனிடம் தீர்மானமான பதில் இல்லை.

“லேட் ஆகுறது பத்தி எனக்கு கவலை இல்லைங்க, மெதுவா நடக்கட்டும். அதுவரை போறேனே” என கெஞ்சலாக அவள் சொல்ல, அவன் யோசனையானான்.

“அக்கா கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள்ல என் கல்யாணத்தை அம்மாவால எப்படி நடத்த முடியும்? ஏதோ ஒரு வேலைக்கு போனா அம்மாக்கு ஹெல்ப்தானே?” என்றாள்.

“உன் கல்யாணத்துக்கு அத்தை எதுவும் செய்ய வேணாம். இப்படிலாம் பேசி கடுப்பேத்தாத அனு”

குரல் உயர்த்தாமலே கோவப்பட இவனால் மட்டுமே முடியும் என நினைத்துக் கொண்டவள், “என்னாலேயும் வீட்ல சும்மா இருக்க முடியல” என்றாள்.

“இங்க வர்றியா?” உடனே கேட்டு விட்டான்.

“இப்பவே எப்படி சரியா வரும்?” என தயங்கினாள்.

“ஏன் சரியா வராது?”

“உங்கப்பா சண்டை போடுவார்”

“போடட்டும், வாய மூடி கேட்டுட்டு இருக்கிறவதான் நீ”

“ஐய, என்கிட்ட இல்லை, உங்ககிட்டதான் முதல்ல சண்டை போடுவார்” என்றாள்.

“ஹோய், என்ன… அப்பா உங்கிட்ட எதுவும் பேசினா பதிலுக்கு சண்டை போடுற ஐடியால இருக்கியா நீ?”

“அப்புறம் சும்மா இருப்பாங்களா?” என் அவள் கேட்ட விதத்தில் சிரித்துக் கொண்டே அருகிலிருந்த காலண்டர் எடுத்து நல்ல நாள் பார்த்தான்.

“நாளைக்கு நாள் அமோகமா இருக்கு, மதுரை வந்திட்டு கால் பண்ணு, கூப்பிட வர்றேன்” என்றான்.

“நிஜமாதான் சொல்றீங்களா? அம்மா ஓகே சொல்ல வேணாமா? ஃபர்ஸ்ட் இது கரெக்ட்டா வருமான்னு நீங்க இன்னொரு முறை யோசிங்க” என்றாள்.

“எந்த முடிவா இருந்தாலும் செகண்ட் தாட்ஸ்க்கு இடமே இல்லை என்கிட்ட” என அசோக் சொல்ல, பதில் பேசாமல் இருந்தாள் அனன்யா.

“அத்தைகிட்ட நான் பேசிக்கிறேன். நாளைக்கு பார்ப்போம்” என சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.

மருமகனின் முடிவில் பாக்யாவுக்கு விருப்பமில்லை, சொல்லப் போனால் அண்ணன் என்ன சொல்வாரோ என பயமாக வேறு இருந்தது.

“என்னை நம்பினா அனுப்பி விடுங்க” என்ற ஒரு வரியில் அவரை சம்மதிக்க வைத்து விட்டான் அசோக்.

அவள் வேலைக்கு சேருவதற்கு முந்தைய நாள் இரவே பெற்றோரிடம் சொல்லி விட்டான்.

“என்னடா நினைச்சிட்டு இருக்க நீ? வரவே சொல்லிட்டு அறிவிப்பு கொடுக்கிறியா என்கிட்ட” என சத்தம் போட்டார் புகழேந்தி.

அப்பாவின் கையை பற்றிக் கொண்டவன், “அவதான் என் மனைவிங்கிறதுல எனக்கு வேற தாட்ஸ் கிடையாதுப்பா. உங்களை உங்க ஈகோவை எல்லாம் என்னால புரிஞ்சுக்க முடியுது, அவளை கவனிங்க, எனக்கு ஏத்த பொண்ணுதான்னு உங்களுக்கே தோணும்” என்றான்.

பதிலுக்கு சண்டையிட்டால் இவரும் சண்டை போடலாம். இப்படி பேசுபவனிடம் குரல் உயர்த்த முடியவில்லை. அவரும் அவன் பாணியிலேயே, “எவ்ளோ நாள் பழக்கம்டா அந்த பொண்ணு? பார்த்து பார்த்து வளர்த்த உன் அப்பா வேணாம்னு சொன்னா விட மாட்டேன்னு இவ்ளோ அடம் பண்ணுவியா?” எனக் கேட்டார்.

“உங்களாலதான் வருஷக் கணக்கா மனசுல ஒரு ஆசையை வளத்தேன் ப்பா. நடைமுறை புரிஞ்சு அந்த ஆசையை வேரோட பிடுங்கி எறிஞ்சேன். நாள் கணக்கு வருஷக் கணக்கெல்லாம் இல்லப்பா ஆசைக்கு. இந்த ஆசையையும் பிடுங்கி எறின்னு நீங்க சொன்னா…” என்றவன் அப்படி ஒன்று நடந்தால் எப்படி உணர்வான் என கற்பனை செய்தானோ என்னவோ, அவன் கண்களில் தெரிந்த வேதனை புகழேந்தியின் கடின இதயத்தை அசைத்துதான் பார்த்தது.

“என்னிக்கா இருந்தாலும் அவதான் என் வைஃப், அதுக்குண்டான மரியாதையோட அவளை நடத்துவீங்கன்னு நம்புறேன் ப்பா” என்றவன் உறங்க சென்று விட்டான்.

கணவரை முறைத்துக் கொண்டிருந்த விஜயா, “இத்தனை வருஷத்துல எதையும் நடத்தி வைங்கன்னு ஆசை பட்டு உங்ககிட்டு கேட்ருக்கேனா, இல்லதானே?” என்றார்.

மகனை நினைத்து ஒரு வித வருத்தத்திலும் குற்ற உணர்விலும் இருந்த புகழேந்தி, மனைவியை ஆற்றாமையாக பார்த்தார்.

பட் என சத்தம் வரும் படி கைகளை வேகமாக குவித்து கும்பிடு போட்ட விஜயா, “தயவுசெஞ்சு என் புள்ளையை சந்தோஷமா வாழ விடுங்க!” என ஆத்திரமாக சொல்லி எழுந்து சென்று விட்டார்.

எத்தனை முயன்றும் தன் மகன் தன் பேச்சை கேட்கிறான் இல்லையே. வீட்டினரை அவமதித்து சென்றவளின் பெண்ணை மகனுக்கு கட்டி வைப்பதா? ‘எப்படி இருந்தவன், மகன் விஷயத்தில் வாயை மூடிக் கொள்ள வேண்டியதாகிற்றே’ என ஊரார் சிரிக்க மாட்டார்களா என்றெல்லாம் யோசித்து புகழேந்திக்கு தலைவலிக்க ஆரம்பித்தது.

அடுத்த நாள் மகன் சொன்னது போலவே அனன்யாவை அலுவலகம் அழைத்து வந்து நிறுத்தவும் உள்ளுக்குள் நொந்து போனார். அவளை திட்டி அனுப்பி விடும் கோவம் மூண்டாலும் ‘இவதான் என் வைஃப்’ என உறுதியாக சொல்லியிருந்த அசோக்கின் வார்த்தைகள் இவரை மோசமான வார்த்தைகள் விடுவதிலிருந்தும் நடத்தைகள் செய்வதிலிருந்தும் காப்பாற்றி நிறுத்தியது.

அனன்யாவுக்குமே அந்த அலுவலக சூழல் வித்தியாசமாக இருந்தது. முதல் நாள் என்பதால் பெரிதாக வேலைகள் இல்லை, நடப்பவற்றை கவனி என மட்டும் சொல்லியிருந்தான் அசோக்.

சில பெரிய ஊர்களிலும் ஒரு அறை கொண்ட சிறு அலுவலகங்கள் உள்ளன. இவர்களுடையது பெரிய டிராவல்ஸ் நிறுவனம் கிடையாது, வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம். ஆட்கள் இருந்தாலும் அசோக் அல்லது புகழேந்தியின் மேற்பார்வை அவசியம். வெளியூர் பயணமெல்லாம் எப்போதும் அசோக்தான்.

இந்த முறை புகழேந்தி தான் செல்கிறேன் என சொல்லி விட்டார். அனன்யா இங்கு வந்திருப்பதால் இப்படி செய்கிறார் என அசோக்கிற்கு தெரியாமல் இல்லை. ஆனால் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் அவர் விருப்பத்திற்கே விட்டான்.

அடுத்த ஒரு வாரம் புகழேந்தி மதுரையில் இல்லை. ஆகவே அலுவலகத்தில் இலகுவாக உணர்ந்தாள் அனன்யா. தினமும் ஒன்றரை மணி நேரம் பயணித்து வந்து போவது மட்டும்தான் சிரமமாக இருந்தது.