அத்தியாயம் -8(3)

அடுத்து என்ன சொல்வானோ என பரிதவிப்போடு அவள் பார்த்திருக்க, “சமரைதான் அவ லவ் பண்ணினா. உடைஞ்சு போயிட்டேன்னு சினிமால டயலாக்லாம் வரும்ல… லிட்ரலி என்னோட நிலைமை அப்ப அப்படித்தான்” என்றவன் அடுத்து நடந்தவைகளையும் சுருக்கமாக சொன்னான்.

எதையுமே நினைக்க முடியவில்லை அவளால். ஒரு விதமாக அவனுடைய வலியை உணர முற்பட்டுக் கொண்டிருந்தாள்.

“இப்போ டூ ஹண்ட்ரட் பெர்சண்ட் நான் வெளில வந்திட்டேன். உன்னை பத்தி உன் நினைப்ப பத்தி எதுவும் தெரியாம லூசு மாதிரி இருந்திருக்கேன். உம்மேல ஸ்ருதிக்கு டவுட், எங்கிட்டேயும் சொன்னா, ஆனா என்னால உறுதியா எதுவும் சொல்ல முடியலை. அவந்திகா கல்யாணத்தன்னிக்குதான் மண்டைய பொளக்குற வெயில் நேரத்துல, உன்னை பார்த்து ‘இவதான் என் வாழ்க்கை’னு புரிதல் வந்துச்சு” என சொல்லி அவளது கண்களை உற்று பார்த்தான்.

அவள் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள, “யாருக்காகவும் விரும்பினவங்கள இழக்கிறது கொடுமையான வலி, வெளில வந்து லைஃப் லீட் பண்றதுதான் புத்திசாலித்தனம்னாலும் கம்ப்லீட்டா அதிலிருந்து வெளில வர்ற அந்த பிராசஸ் இருக்கே…” என்றவன் ஒரு பெருமூச்சோடு நிறுத்தினான்.

“திரும்ப ஏமாற வச்சிடாதன்னு சொல்ல போறீங்கதானே? விரும்ப சொல்லி இப்படியா இக்கட்டு கொடுப்பாங்க?” எனக் கேட்டாள்.

இல்லை என்பது போல தலையசைத்தவன், “விரும்ப சொல்லி இக்கட்டு கொடுக்கல, வந்த விருப்பத்தை மறைக்காம வெளிப்படையா இருன்னுதான் சொல்றேன்” என்றான்.

“எப்படியோ! உங்க பழைய கதை சொல்லி கம்பல் பண்றீங்கதானே?”

 “எனக்காக என் பழைய கதை சொல்லலை அனும்மா, உனக்காக” என்றான்.

அவள் அவனை கேள்வியாக பார்க்க, “அது… அந்த வேதனை… நம்ம நேசிக்கிறது நமக்கு இல்லவே இல்லைனு தெரிய வரும் போது ஏற்படுற அந்த மனவலி… அதையெல்லாம் உனக்கு நான் தர விரும்பல அனன்யா” என்றான்.

வேகமாக ஏதோ சொல்ல அவள் வாய் திறக்க, “உடனே பரிதாப பட்டு கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியாடான்னு சைல்டிஷ்’ஷா கேள்வி கேட்க கூடாது” என்றான்.

அவள் வாயை மூடிக் கொள்ள, “சத்தியமா பரிதாபம் இல்லை. ரெண்டு வாரம் முன்னாடி வரை உன்னை வேற விதமா பார்த்தது இல்லைதான், ஆனா இப்போ அப்படியில்லை அனன்யா. லவ் எப்ப வந்துச்சுன்னு தெரியாதுன்னு சொல்ற லவ்வர்ஸ்தானே பார்த்திருக்க, எனக்கு அப்படியில்லை. எனக்காக என்னை மிஸ் பண்ண போறோம்னு ஒரு பொண்ணு அழறா, உன் அன்பை உணர்ந்த அந்த செகண்ட்…” என்றவன் பேச்சை நிறுத்தி விட்டான்.

அவளும் எதுவும் பேசாமல் தவிப்பும் தடுமாற்றமுமாக இருந்தாள். சில நொடிகள் மௌனத்தில் கரைந்தது.

அவன் அவளது கையை பிடித்துக் கொண்டான். விலக்கிக் கொள்ள முனையவில்லை அவள்.

“சும்மா இனியும் விலகி விலகி போகக் கூடாது, உடனேலாம் கல்யாணம் வேணாம், ரெண்டு மாசமாவது போகட்டும்” என்றான்.

“விளையாடுறீங்களா? உங்கப்பா பேசின பேச்சுக்கு உங்க பக்கமே வரக்கூடாது நான். ரெண்டு மாசத்துல கல்யாணம் முடிப்பாராம். அவரை வர சொல்லுங்க இங்க. என் அம்மாகிட்ட வந்து முறையா பொண்ணு கேட்டாதான் கல்யாணம் பத்தியெல்லாம் யோசிப்பேன்” என்றாள்.

அவன் அவளது கோவத்தை ரசித்துக் கொண்டே அமைதியாக இருக்க, “ஒரு வருஷம் போகட்டுமே, இப்போதான் அக்காக்கு கல்யாணம் ஆகியிருக்கு, உடனே நானும் அம்மாவை விட்டு போனா…” என்றவள் குரலை தழைத்து, “அம்மாவை நம்மளோட வச்சுக்கிறது எல்லாம்… சான்ஸ் இல்லைல?” எனக் கேட்டாள்.

“ரொம்ப முறுக்குவன்னு நினைச்சேன். அவ்ளோ பெரிய சண்டைக்காரி இல்லைதான் நீ” என்றான்.

“நிஜமா இப்படி உங்க கூட பேசிட்டு இருப்பேன்னு ரூம்ல படுத்திட்டு இருந்தப்ப கூட நினைக்கல. சரியா வரும் வராது எப்படி ஸ்மூத்தா நடக்கும் எல்லா கேள்வியும் பயமும் இப்பவும் இருக்கு. ஆனா உங்களை ஹர்ட் பண்ண முடியாது என்னால” என்றாள்.

“அப்போ இவ்ளோ நாள் என்ன பண்ணிட்டு இருந்த?” எனக் கேட்டான்.

“ஆமாம் நான் பேசாததுல இவர் ரொம்பத்தான் ஹர்ட் ஆகிட்டார்!”

“நம்பலைனா போ. ஒரு வருஷம் வரை ஏன் மேரேஜ் தள்ளி போடணும்? எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சு” என்றான்.

“ஆறு மாசமாவது போகட்டுமே”

“வீட்ல சம்மதிக்க வைக்கணும், எவ்ளோ நாள்ல நம்ம கல்யாணம்ங்கிற நம்ம பிளான் மாறக் கூட வாய்ப்பிருக்கு. ஒரு வாரம் போகட்டும் அனன்யா. அதுவரைக்கும் நிம்மதியா லவ் பண்ணுவோம்” என்றான்.

“ஓ பண்ணலாமே. லவ் பண்றதுன்னா என்னென்ன செய்யணும்?” என நக்கலாக கேட்டாள்.

“எனக்கும் தெரியாது, நமக்கு என்ன தோணுதோ அப்படி ஒரு ஃப்ளோவா நாமளா லவ் பண்ணுவோம்” என்றான்.

“டீ போட்டு எடுத்து வர்றேன், இருங்க” என சொல்லி எழுந்தாள்.

“அத்தை தூங்குற வரைக்கும்தானே நாம இப்படி பேச முடியும்? இரேன் அனன்யா” என அவன் கேட்க, “டென் மினிட்ஸ்தான்” என சொல்லிக் கொண்டே அமர்ந்தாள்.

என்ன சொல்ல நினைத்தானோ சொல்லி விட்டான். எதிர்ப்பு தெரிவிக்காமல், மல்லுக்கட்டாமல் உடனே அவள் தன்னோடு இணக்கமானதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் பக்கத்தில் இருக்க வேண்டும் என தோன்றுகிறதே தவிர, என்ன பேச என புரியவில்லை.

அவளையே பார்த்தான். நான்கு நொடிகளுக்கு ஒரு முறை அசடு வழிய சிரித்தான். அவள் சிரிப்பை அடக்கிக் கொள்ள, அவனுக்கும் சிரிப்பாக வந்தது. “இது சரியா வராது” என சொல்லி மீண்டும் எழப் போனாள்.

விடாதவன், “புடவைல அழகா இருக்க” என்றான்.

“அப்போ சுடிதார் நைட்டில எல்லாம் அசிங்கமா இருக்கேனா?” எனக் கேட்டாள்.

“தெரியலை அனன்யா. உன்னை ரசிக்கிறது எல்லாம்… அவந்திகா கல்யாணம் அப்போ நார்மலா எல்லார் போலவும் புடவைல நல்லாருக்கான்னு உன்னை பார்த்தேன், இன்னிக்குத்தான் எனக்கானவ இவங்கிற எண்ணத்தோட, இப்படி ரொம்ப நுணுக்கமா பார்க்கிறேன், இனிமே சுடிதார் நைட்டில நீ இருக்கப்ப கூட பார்த்திட்டு சொல்றேன்” என்றான்.

‘ஐயோ வெட்க பட வைக்கிறானே!’ என மனதில் அலறினாலும் கெத்து குறையாமல், “ஐய! எல்லாத்திலேயும் அழகாதான் இருப்பேன்னு அசடு வழிய வேணாமா? லவ் பண்றதுல ஃபர்ஸ்ட் டே’வே சொதப்பாதீங்க” என்றாள்.

“அதெப்படி அப்படி சொல்ல முடியும்? ஆராயாம எதையும் சொல்லக் கூடாது” என்றான்.

இப்போது வெட்கத்தை மறைக்க முடியாமல் அவள் திரும்பிக் கொள்ள, இன்னும் அவளுக்கு நெருக்கமாக நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவன், அவளின் கையை பிடித்துக்கொண்டான்.

“சும்மா சும்மா கை பிடிக்காதீங்க” என கடிந்தாலும் இப்போதும் அவனிடமிருந்து தன் கையை விலக்கிக் கொள்ள முனையவில்லை அவள்.

“ஏதாவது கேளேன் அனும்மா?” என்றான்.

“என்னை கல்யாணம் செய்துக்கணும்னு நீங்க எதையும் யாரையும் இழந்திட கூடாது, சரியா?”

ம் போட்டுக் கொண்டே, அவளது மோதிர விரலை சொடக்கு எடுப்பது போல செய்தான், பின் மெல்ல வருடி விட்டான்.

“என்ன செய்றீங்க?” என கண்டித்தவள் கையை இழுத்தாள். விடாதவன், பாக்கெட்டிலிருந்து மோதிரம் எடுத்தான்.

 மறுப்பாக பார்த்தவள், “இதெல்லாம் இப்பவே அவசியமா?” என்றாள்.

“ஒய் நாட்?” எனக் கேட்டவன் அவளது விரலில் மோதிரத்தை அணிவித்து விட்டான்.

கலக்கத்தோடு மோதிரத்தையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

“அத்தைகிட்ட என்ன சொல்லி வேணா சமாளி, கழட்டாம போட்டுக்கணும்” என்றவன், இன்னொரு மோதிரத்தை எடுத்து அவள் மடியில் வைத்து விட்டு தன் கையை அவள் முன் நீட்டி சிரித்தான்.

அவள் இன்னுமே அதிர்ந்து பார்த்தாள். மாட்டேன் என பார்வையால் சொன்னாள். அவன் முறைத்தான். அவளும் முறைக்க, கண்களால் கெஞ்சினான். மனமிறங்கவில்லை அவள்.

கண்களையும் முகத்தையும் சுருக்கிக் கொண்டு இரைஞ்சலாக அவன் பார்த்தான். யாசித்தான் என்றே சொல்லலாம்.

அனிச்சையாக மோதிரத்தை கையில் எடுத்துக் கொண்டாள். எடுத்த பின் மனம் பட படத்தது. தன்னை திடப் படுத்தி அவனது கை பிடித்து, விரலில் மோதிரத்தை அணிவித்து விட்டவளின் ஆனந்தக் கண்ணீர் அந்த மோதிரத்திலேயே பட்டு சிதறியது.