அத்தியாயம் -8(2)

வேலை முடித்து வீட்டுக்கு வந்த பாக்யா, மகளுக்கு அழைத்து எப்போது வருகிறாய் என கேட்டார்.

வீட்டுக்கு போனால் அசோக்கிடம் வெளிப்படையாக எதுவும் பேச முடியாதே, ஆகவே ஸ்ருதி அக்காவுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன், வந்து விடுவேன் என சொல்லி விட்டாள்.

அவனிடம் பேசப் போவது ஸ்ருதியின் காதில் விழுந்து விடாமல் இருக்க, பின் பக்கம் சென்று விட்டாள்.

ஸ்ருதி சொல்லியிருந்ததில் இரவில்தான் அனன்யா அழைப்பாள் என நினைத்திருந்த அசோக், இத்தனை சீக்கிரம் அவளது அழைப்பை எதிர்பார்த்திருக்கவில்லை.

டிராவல்ஸ் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்துதான் அவளது அழைப்பை ஏற்றான்.

 எந்த நல விசாரிப்புகளும் இல்லாமல், “அவந்திகா கல்யாணத்தப்போ சில்வர் கலர்ல ஒரு ஜுவல் போட்ருந்தேனே, அது… அன்னிக்கு கூட மாடில அறுந்து போச்சே… ஸ்ருதி அக்காவோடது அது, இப்போ உங்ககிட்டதானே இருக்கு?” எனக் கேட்டாள்.

“நான் யாரோவா உனக்கு? என்ன இப்படி பேசுற நீ? இதை கேட்கத்தான் பத்து நாளா காத்திருந்தேனா? சளி புடிச்சு போய் நாக்குல டேஸ்ட் தெரியாம தினம் தூதுவலை ரசம் துவையல்னு சாப்பிட்டிட்டு இருக்கேன்” என்றவன் இரண்டு முறை இருமிக் காட்டி, “முந்தா நாள் லேசா ஜுரம் வேற தெரியுமா?” என்றான்.

அவளுக்கும் அவனது குரலில் வித்தியாசம் தெரியவும், “ஏன் என்னாச்சு?” என்றாள்.

“ஹப்பா எவ்ளோ அக்கறை?”

“ப்ச்… டாக்டர்கிட்ட போனீங்களா?”

“போகல, ஏன்னு காரணம் தெரியும், இதுக்கு என்ன மருந்துன்னும் தெரியும். எல்லாம் எனக்குதான் தெரியும், டாக்டருக்கு தெரியாது” என்றான்.

இப்படியெல்லாம் தன்னிடம் பேசியே இராத அசோக்கின் பேச்சில் திகைத்தாலும் என்ன சொல்கிறான் என தெரிந்து கொள்ள ஆவல் மிகுந்தது அவளுக்கு.

நமட்டு சிரிப்புடன் அசோக் அவளது பதிலுக்கு காத்திருக்க, அவனே சொல்லட்டும் என அவள் அமைதி காத்தாள்.

அழைப்பில் இருக்கிறாளா என ஒரு முறை சோதித்துக் கொண்டவன், “இப்பவே உன் வழிக்குத்தான் என்னை இழுக்குற ஹ்ம்ம்… இதுவும் நல்லாதான் இருக்கு” என்றான்.

அவளிடமும் விரிந்த சிரிப்பு, ஆனாலும் வாய் திறக்கவில்லை.

“என்ன அனன்யா? வாயாடியே வாயடைச்சு போற அளவுக்கு என்ன சொல்லிட்டேன் நான்?”

“நான் வைக்கிறேன் போனை”

“நல்லா வை, எதுவோ கேட்டியே… நீயே ஸ்ருதியை சமாளிச்சுக்க” என்றான்.

“அசோக்…” என கண்டிப்போடு அழைத்தாள்.

“வந்து… என் அத்தை பொண்ணு குரல் கேட்காமதான் எனக்கு உடம்பு முடியாம போச்சு. இப்பதான் எம்மேல கருணை வந்து மருந்து கொடுத்திருக்கா. ஆனா ஒரு வேளை கொடுத்தா போதுமா? மூனு வேளைக்கும் கொடுக்கணும், மனசிறங்க மாட்டேங்குறா அந்த அடங்காரி” என்றான்.

இந்த உளறல் எல்லாம் மனதுக்கு பிடித்திருந்தாலும் எப்போதும் போல ‘இது எப்படி நடக்கும்?’ என்ற நினைவும் வர, “ஸ்ருதி அக்காகிட்ட கொடுக்கணும். ப்ளீஸ் என்கிட்ட கொடுத்திடுங்க” என மட்டும் சொன்னாள்.

“ஸ்ருதிகிட்ட நானே கொடுத்துக்கிறேன்” என்றான்.

“அதெல்லாம் வேணாம், உங்ககிட்ட எப்படி வந்துச்சுன்னு கேட்பாங்க? நான் என்ன சொல்வேன்? ப்ளீஸ்…”

“அப்படிலாம் அதை சும்மா தூக்கி கொடுக்க முடியாது”

“அது அவங்களோடது, என்ன பேசுறீங்க நீங்க? சண்டே அவங்ககிட்ட கொடுக்கணும் நான்”

“சரி தர்றேன், ஆனா உடனே முடியாது. சண்டே வரை டைம் இருக்குதானே?”

தானே தள்ளி வைத்து காலக்கெடு கொடுத்ததை நினைத்து நொந்து கொண்டவள் சரி என ஒத்து வந்தாள்.

“இன்னும் நாலு நாள் மூனு வேளையும் கால் பண்ணி பேசு, சண்டே டான்னு உன் கைல அதை கொடுத்திடுறேன்” என்றான்.

அதெல்லாம் சரியாக வராது என இவள் பொரிய, அவன் முறுக்கிக் கொள்ள இறுதியில் அவள்தான் ஒத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

நான்கு நாட்களும் அவனுக்கு அழைத்து பேசினாள். முழுதாக ஒரு நிமிடம் கூட நீடிக்காத மேலோட்டமான பேச்சுக்கள்தான் என்ற போதும் இதுவாவது கிடைத்ததே என திருப்தி அடைந்து கொண்டான் அசோக்.

வேண்டுமா வேண்டாமா எனும் மனப் போராட்டத்தில் இருக்கும் அனன்யாவுக்கு அவனுடன் பேசுவது சுகமான அவஸ்தையாக இருந்தது.

சொன்னது போலவே ஞாயிறு மதியம் சாப்பிடும் நேரத்துக்கு அத்தை வீட்டிற்கு வந்து விட்டான். புகழேந்தி வெளியூர் சென்றிருக்க அம்மாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு அப்பாவை பற்றிய கவலை இல்லாமல் வந்திருந்தான்.

தோழியின் அக்கா திருமணத்திற்கு சென்று வந்திருந்த அனன்யா காட்டன் புடவை ஒன்றில் இருந்தாள். வரவேற்றவளை இரகசிய சிரிப்போடு அசோக் பார்க்க, அம்மா முன் ஒன்றும் சொல்ல முடியாமல் பல்லை கடித்தாள்.

“சாப்பிட வாப்பா” என பாக்யா அழைக்க, “நீயும் வா அனன்யா, சேர்ந்து சாப்பிடுவோம்” என்றான்.

கல்யாணத்திலேயே சாப்பிட்டு விட்டதாக சொன்னவள் அறைக்கு சென்று விட்டாள்.

அத்தையுடன் சேர்ந்து சாப்பிட்டான் அசோக். பின் ஓய்வாக அமர்ந்தார் பாக்யா. அவந்திகாவை அவளது கணவன் நன்றாக பார்த்துக் கொள்கிறான், மகிழ்ச்சியாக இருக்கிறாள், எனக்கும் நிம்மதி என பேசிக் கொண்டிருந்த பாக்யா திடீரென மகளின் பிரிவை நினைத்து கண்ணீர் வடித்து உடனே நிதானித்துக் கொண்டார்.

அத்தையிடம் ஆறுதலாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்த அசோக்கின் பார்வை அடிக்கடி அறையின் பக்கமாக சென்றது.

“ஒரு நாள் இராத்திரி கூட என்னை விட்டு எங்கேயும் இருந்தது இல்லை அவந்திகா. அவளுக்கு ஏத்தது போல இடம் அமைஞ்சதுல சந்தோஷம்தான். கொஞ்ச நாளைக்கு என்னவோ போல இருக்கும் அசோக், அப்புறம் சரியாகிடுவேன். நீ இவளை என்னான்னு கேளு” என அறைப் பக்கம் கை காட்டி சொன்னார்.

“ஏன் இவளுக்கு என்ன?”

“என் ஸ்கூல்லேயே கம்ப்யூட்டர்ல செய்ற மாதிரி ஆஃபீஸ் ஒர்க் இருக்கு. அங்க வர மாட்டாளாம்”

“நான் கேட்கிறேன் அத்தை” என்றவன், அனன்யாவின் பெயரை சொல்லி இரண்டு முறை அழைத்தான்.

“கூப்பிட்டுட்டே இருக்கான், என்னடி செய்ற? மரியாதை தெரியலையா உனக்கு?” என சத்தம் போட்டார் பாக்யா.

அலுத்துக் கொண்டே அவள் வெளியில் வர, இவன் எழுந்து வெளியில் சென்று விட்டான்.

அப்படியே வெறும் தரையில் படுத்த பாக்யா, “போ அசோக் என்னமோ பேசணுமாம், போய் என்னன்னு கேளு” என்றார்.

மறுக்க முடியாமல் அவளும் திண்ணைக்கு சென்றாள். ராம்போ அமைதியாக படுத்திருக்க, அதன் அருகில் நாற்காலியில் அமர்ந்திருந்தவன் அவளை தன்னருகில் வரும் படி தலையசைத்தான்.

அவள் அடமாக தள்ளியே நிற்க, “எனக்கொன்னும் இல்லை, சத்தமா பேசினா அத்தை காதுல விழுந்தாலும் விழும்” என்றான்.

முணு முணுப்பாக அவனை திட்டிக் கொண்டே அருகில் வந்து நின்றாள்.

“எனக்கு எந்த பொண்ணும் பார்க்கல, ஸ்ருதி சொன்னதெல்லாம் சும்மா” என்றான்.

 இவளுக்கே அந்த சந்தேகம் இருக்க, இப்போது ஊர்ஜிதமாக தெரியவும் நிம்மதி என்றாலும் காட்டிக் கொள்ளாமல், “எப்படி இருந்தா எனக்கென்ன?” எனக் கேட்டாள்.

அவன் முகம் சுண்டிப் போக, அது அவளை பாதித்தது. புடவை தலைப்பை கையில் சுற்றிக் கொண்டே என்ன பேச என பார்த்திருந்தாள்.

“அந்த சேர் எடுத்து போட்டு இப்படி பக்கத்துல உட்காரேன்” என மென்மையாக அவன் சொல்ல, அப்படியே செய்தாள்.

“இந்த விஷயத்தை என்னை கட்டிக்க போற பொண்ணுகிட்ட சொல்லணும்னுதான் இருந்தேன். நீ என் அப்பா பேசினதெல்லாம் நினைச்சு அந்த கோவத்தை ரோஷத்தை எல்லாம் என்கிட்ட காட்டுற. இன்னிக்கே உங்கிட்ட சொல்லணும்னு ஐடியா இல்லை, ஆனா இப்ப சொல்லணும்னு தோணுது” என்றான்.

அவனது பீடிகை பலமாக இருக்கவும் என்னவோ ஏதோ என பயந்து போனவள், “ப்ச்… ஏன் இவ்ளோ டல்’லா பேசுறீங்க? எதுவும் சொல்ல வேணாம் நீங்க, உங்களுக்கு தப்பா எதுவும் நடக்காது” என்றாள்.

லேசாக சிரித்தவன், “எஸ், எனக்கு தெரியும் கண்டிப்பா எனக்கு நல்லது நடக்கும்னு” என கண்களால் அவளை காட்டி சொன்னான்.

“விஷயத்தை சொல்லாம ஏதேதோ பேசினா நான் எந்திரிச்சு போயிடுவேன்” என்றாள்.

வேலை சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நம்பிய பாக்யா உடல் அசதியில் உறங்கிப் போய் விட்டார். தனி வீடு அது, ஆகவே அவர்களை கவனிக்க என யாரும் ஆட்கள் இல்லை.

“கொஞ்சம் பொறுமையா கேளு அனன்யா. எனக்கு தெரியலை நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு, ஆனா உனக்கு தெரிஞ்சிருக்கணும்” என்றவன் ஸ்ருதிக்கும் அவனுக்கும் வீட்டினர் திருமணத்திற்கு பேசி வைத்திருந்ததை சொன்னான்.

அனன்யா திகைத்துப் போக, “யாரை தப்பு சொல்றது? நாலு வருஷமா…” என்றவன் குரலை செருமி, “ஸ்ருதியை விரும்பினேன் நான்” என்றான்.