அத்தியாயம் -7(2)

அனன்யாவை மண்டபம் முழுக்க தேடி விட்டான் அசோக். அவனது கண்களுக்கு தென்படவே இல்லை. எங்கே போனாள் என கொஞ்சம் பதற்றமாக, கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான். அணைத்து வைக்க பட்டிருப்பதாக செய்தி வந்தது. அவளுடைய கல்லூரி நண்பர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க சாதாரணமாக கேட்பது போல விசாரித்து பார்த்தான். அவர்களுக்கும் தெரியவில்லை.

மண்டபத்தின் பின்னாலிருந்து மொட்டை மாடி செல்ல படிகள் இருந்தன. கடைசி முயற்சியாக அந்த படிகளில் ஏறினான்.

தண்ணீர் டேங்க்கில் சாய்ந்து அமர்ந்திருந்த அனன்யா முழங்காலில் முகம் புதைத்திருந்தாள். அழுகிறாள் என்பது அப்பட்டமாக தெரிந்தது. அசோக் வந்ததை உணரவே இல்லை அவள். அவன்தான் அவளை அப்படி பார்த்து விட்டு விக்கித்து போனவனாக நின்றிருந்தான்.

சில நிமிடங்கள் கடந்தும் அனன்யாவின் நிலையில் மாற்றமில்லை. அவன்தான் சுதாரிப்புக்கு வந்து அவளை நெருங்கினான். காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தவள் அவனை கண்டு விட்டு திகைத்துப் போனவளாக எழுந்து நின்றாள்.

இவனிடம் என்ன சொல்வது என நினைத்தவளுக்கு தொண்டை வறண்டு போனது.

“அக்காவை பிரிய போறோம்னு நினைச்சு அழுகையா வந்தது, அதான் இங்க வந்திட்டேன்” என சமாளிப்பாக சொன்னாள்.

அவளது உடல்மொழியும் கண்களும் பொய் சொல்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தின. யோசித்துப் பார்க்கையில் ஸ்ருதி தன்னுடன் பேசுவதற்கு முன் அவள் பக்கத்தில் அனன்யா அமர்ந்திருந்தது போன்ற பிம்பம் கலங்கலாக நினைவு வந்தது.

அனன்யாவின் ஒதுக்கம், அவ்வப்போது வெளிப்படும் அளவுக்கு மீறிய அக்கறை, தன்னுடன் இவளிருக்கும் போது நடந்து கொள்ளும் விதம், ஸ்ருதி தங்களை சந்தேகமாக பார்ப்பது என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.

அசோக்கை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த அனன்யா அங்கிருந்து செல்ல பார்த்தாள்.

“நில்லு!” என அழுத்தமாக அவன் சொல்லவும் பட படக்கும் இதயத்தோடு நின்றவள் கண்களை மூடி தன்னை நிதான படுத்திக் கொள்ள பார்த்தாள்.

“ஸ்ருதி என்ன சொன்னா உங்கிட்ட?” பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற தொனியில் கேட்டான்.

நெற்றி தேய்த்து விட்டுக் கொண்டவள், “எனக்கு அக்காகிட்ட போகணும், நான் போறேன்” என்றாள்.

“போலாம், எனக்கு பதில் சொல்லிட்டு போலாம்” என்றான்.

“என்ன சொன்னாங்க…” நினைவு படுத்திக் கொள்வது போல நடித்தவள், “ஆமாம் உங்க கல்யாணத்தை பத்தி சொன்னாங்க, நான் கூட உங்களுக்கு கங்கிராட்ஸ் சொல்லணும்னு நினைச்சேன். நீங்க சொல்லவே இல்லை, அவங்க சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணும் என்ன?” என்றாள்.

இயல்பாக பேச முயற்சி செய்தாலும் அவளிடம் காணப் படும் வித்தியாசத்தை அவளால் மறைக்க முடியவில்லை.

அவனது அழுத்தமான பார்வையில் திணறியவள், “நான் போறேன்…” என சொல்லி கிட்டத்தட்ட அங்கிருந்து ஓடினாள்.

“ஸ்டே ஹியர்!” என உறுமலாக சொன்னான் அசோக்.

நின்ற அனன்யாவின் விழிகளில் கண்ணீர் உடைப்பெடுத்துக் கொண்டது. அவன் பார்த்து விடக்கூடாதே என வேக வேகமாக கண்களை துடைத்துக் கொண்டாள். ஆனால் மீண்டும் மீண்டும் கண்ணீர் வந்தது.

நிதானமாக நடை போட்டு அவள் முன்னால் அவன் வந்து நிற்கும் வரையில் அந்த கண்ணீர் நிற்பதாக காணோம். அந்த அழுகையில் அவன் ஸ்தம்பிக்க, அவனுக்கு முகம் காட்ட மறுத்து திரும்பிக் கொண்டாள்.

“அனன்யா…” தவிப்பாக அழைத்தான்.

வேகமாக திரும்பியவள் அவனை தாண்டிக் கொண்டு ஓட முற்பட அவன் மீது இடித்துக் கொண்டாள். அவளது கழுத்தில் மாட்டியிருந்த ஆபரணம் அவனது சட்டையில் சிக்கிக் கொண்டது. நிதானம் இல்லாமல் அந்த ஆபரணத்தை அவள் இழுக்க அறு பட்டு அவளது கையோடு வந்து விட்டது.

ஐயோ என மானசீகமாக அலறியவள் படிகளை நோக்கி நடக்க அவளது கை அவனது பிடியில் இருந்தது. அவள் விலக்க முனைய அவனது பிடி இறுகியது. திரும்பியவள் அவனை முறைக்க, “என்கிட்ட ஏன் சொல்ல மாட்டேங்குற அனன்யா?” எனக் கேட்டான்.

“என்ன… என்ன சொல்லணும் நான்?” வீம்பாக கேட்டாள்.

“உன் மனசுல உள்ளதை” என்றான்.

மீண்டும் அவளுக்கு கண்ணீர் வர, அவள் மீதே அவளுக்கு கோவமாக வந்தது.

“விடுங்க நான் போகணும்” என அடமாக சொன்னாள்.

“நானே கேட்டும் கூட சொல்ல மாட்டியா?” கெஞ்சலாக கேட்டான்.

அனன்யா தேம்ப ஆரம்பிக்க, அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவளை தன்னை நோக்கி மெதுவாக இழுக்க, அவளும் இசைந்து அவனருகில் அவனுக்கு மிகவும் நெருக்கமாக நின்றாள்.

“ப்ளீஸ் அனன்யா அழாத” என அவன் மென்மையாக சொல்ல, அவனது மூச்சுக் காற்று அவளது முகத்தை ஸ்பரிசித்தது.

அவளது கண்ணீரை துடைத்து விட்டவன், “என்கிட்ட சொல்லியிருக்கணும்தானே அனன்யா நீ? ஏன் எம்மேல என்ன கோவம் உனக்கு? அழக் கூடாது” என்றான்.

அழுத விழிகளோடு அவனை பார்த்தாள். கண்களாலேயே சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் அணைத்தானா அவள் சாய்ந்தாளா என இருவருக்குமே தெரியவில்லை.

நடந்ததும் நடப்பதும் புரிய அசோக்கின் முகத்தில் புன்னகை விரிந்தது. சற்று முன்பு வரையில் கூட இவள் மீது எந்த பிரத்யேகமான உணர்வையும் உணர்ந்திருக்கவில்லை. இப்போது இவள் தன்னை விரும்புகிறாள் என ஊர்ஜிதமாக தெரியவும் அவனை மீறி அப்படி ஒரு திருப்தி அவனுக்கு.

தன் வாழ்க்கை இன்னதென விளங்கி விட்டது போன்ற உணர்வு, இவளை கைப்பிடித்துக் கொண்டே தன் மிச்ச வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்து விட வேண்டுமென்ற ஆவல்.

மெல்ல அவனது மனம் உணர்வுகளில் இருந்து விடுபட்டு அமைதியாக, “ஸ்ருதி என்ன சொல்லிட்டான்னு இங்க வந்து இவ்ளோ அழுகை?” எனக் கேட்டான்.

பட்டென அவனிடமிருந்து விலகியவள், ‘எப்படி இவனிடம் நெருங்கினேன் நான்!’ என அதிர்ச்சியாக பார்த்தாள்.

“என்ன அனன்யா?” என அவன் குழப்பமாக கேட்க, ஒன்றும் சொல்லாமல் ஓடிச் சென்று விட்டாள்.

வெட்கத்தில் ஓடுவது போலில்லை அவளது ஓட்டம். ஏனோ ‘சொத்’ என ஆனது போலிருந்தது.

என்ன இருந்தாலும் என்னை அவள் விரும்புகிறாள் என்பது உண்மைதானே? இனி பார்த்துக் கொள்கிறேன் சண்டைக்காரியை என நினைத்துக் கொண்டான்.

மண்டபத்தின் பின் பக்கத்திலிருந்த ஓய்வறைக்கு சென்று, முகம் கழுவி தன்னை திருத்திக் கொண்டு தெளிந்த முகத்துடன்தான் மண்டபத்தின் உள்ளே சென்றாள் அனன்யா.

“அந்த பொண்ணே வந்திடுச்சு பாரு, அசோக் பார்த்தானா இல்லயா? தேடிக்கிட்டு வேற எங்கேயோ சுத்துறான் போல, கால் பண்ணு ஸ்ருதி” என்றான் சமர்.

“ரூட் போட்டு கொடுத்தாலும் முட்டு சந்துக்குள்ளேயேதான் சுத்துவீங்கடா, சரியான தத்தி பசங்க நீங்கல்லாம்” ஸ்ருதி சலிக்க, “கல்யாணத்துக்கு முன்னாடி வரைதான் நாங்க அப்படி, அப்புறம் யார் தத்தின்னு உன்னை அம்மா ஆக்கின என் கண்ண பார்த்து சொல்லு ஸ்ருதி” என்றான் சமர்.

“சமர்!” சிவந்த முகத்தோடு அவள் அதட்டல் போடவும், “நான் தத்தி இல்லைனு சொல்லு அப்போ” என வம்பு செய்தான்.

சுற்றம் பார்த்து குரல் செருமிக் கொண்டவள், “ம்ம்…” என ஆமோதிப்பாக சொல்ல, போனால் போகிறது என மனைவியை அப்போதைக்கு விட்டு விட்டான்.

சற்று நேரத்தில் அசோக்கும் மண்டபதிற்குள் வந்தான்.

நண்பனின் முகத்தை கூர்ந்து பார்த்த சமரன், “முட்டு சந்துல நிக்கலடி அவன், என்னமோ பெருசா நடந்திருக்கு” என்றான்.

“எதை வச்சு சொல்ற?”

“அது ஒரு ஆம்பள மனசு ஆம்பளைக்குத்தான் தெரியும்” என அவன் சொல்ல, தலையில் அடித்துக் கொண்டாள் ஸ்ருதி.

இப்போது குழந்தை ஸ்ருதியின் கையில் இருக்க, சமரனே நண்பனை இழுத்துக் கொண்டு வந்து தங்களுடன் அமர வைத்துக்கொண்டான். இவர்கள் கவனித்து விடாமல் அசோக்கின் கண்கள் அனன்யாவை தேடிக் கொண்டிருந்தன.

சமரும் ஸ்ருதியும் இரகசியமாக சிரித்துக் கொண்டனர்.

“ஒருத்தவங்க சட்டையில கருப்பு மை இருக்குது…” என சின்ன குரலில் ராகமாக பாடினாள் ஸ்ருதி.

சட்டென சட்டையை குனிந்து பார்த்த அசோக் நெஞ்சுப் பகுதியில் இருந்த மையின் கரையை கண்டு அதிர்ந்து கை வைத்து மறைத்தான். பின் சமாளிப்பாக, “எப்படி கறை பட்டுச்சுன்னு தெரியலை” என்றான்.

“ஹாஹான்? அனன்யாவுக்கு வச்ச திருஷ்டி பொட்டு நடந்து வந்து உன் சட்டைல ஒட்டிக்கிச்சோ?” என ஸ்ருதி கேட்க, தன் முகத்தை எங்கு போய் மறைக்கலாம் என திணறினான் அசோக்.

நண்பனை ரசனையாக பார்த்திருந்த சமரன், “சரி விடு பாக்கெட்ல என்ன புடைப்பா இருக்கு?” எனக் கேட்டுக் கொண்டே கை விட்டு என்னவென எடுத்து பார்த்தான்.

அனன்யாவின் கழுத்திலிருந்து அறுந்து போயிருந்த ஆபரணம். அசோக் பிடுங்க முற்பட, சட்டென தன் கையில் எடுத்துக் கொண்டாள் ஸ்ருதி.

அசோக் பாவமாக பார்க்க, “என்ன பாஸ் இதெல்லாம்?” என தோரணையாக கேட்டாள் ஸ்ருதி.

“டேய் இவ்ளோ ஃபாஸ்ட் ஆகாதுடா” என சமரன் சொல்ல, தலை குனிந்து நெற்றியை கையால் தாங்கிக் கொண்டான் அசோக்.

நண்பனின் முகத்தை சமரன் நிமிர்த்த, “போதும் டா, விடுடா என்னை” என்ற அசோக்கிடம் வெட்கச் சிரிப்பு.

சமரன் திகைத்த நேரம் பார்த்து ஸ்ருதியின் கையிலிருந்த ஆபரணத்தை பறித்துக் கொண்டு ஓடாத குறையாக அங்கிருந்து சென்று விட்டான் அசோக்.

“என்னடி நடக்குது?” என மனைவியிடம் கேட்டான் சமரன்.

“ம்ம்… நம்ம குடும்பத்துல இன்னொரு லவ் மேரேஜ்!” கண்கள் சிமிட்டி சொன்னாள் ஸ்ருதி.