Epilogue

பாஷித் மாறும் அமீராவின் வலீமா விருந்தது தடல்புடலாக நடந்துக் கொண்டிருந்தது. ரஸீனாவும் நவ்பர் பாயும் உம்ராஹ்விலிருந்து திரும்பிய மறுகணமே வலீமா விருந்துக்கான ஏற்பாட்டைத்தான் செய்தார்கள்.

பாடசாலை விடுமுறை முடியும் முன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற குடும்ப சுற்றுலா வேறு செல்ல வேண்டும் என்ற ரஹ்மானின் திட்டம் இருக்க வலீமா விருந்தை விரைவில் கொடுக்க வேண்டியும் இருந்தது.

அதன்படியே விமர்சையாக சொந்தபந்தங்களை அழைத்து வலீமா விருந்தை வழங்கிக்கொண்டிருந்தார் நவ்பர் பாய்.

அமீராவின் வீட்டினரை அழைக்க பாஷித்துக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. அழைக்காவிட்டால் தங்களுடைய சொந்தபந்தங்கள் கேட்கும் கேள்விக்கு பதில்சொல்ல வேண்டி இருக்கும் என்று ரஹ்மான் எடுத்துக் கூற ஒப்புக்கொண்டவன் அமைதியானான்.

இருந்தாலும் ஒரு சிலர் பெற்றோர் உம்றாஹ்வில் இருக்கும் நேரத்தில் அவசர அவசரமாக நிக்காஹ் செய்யும் அளவுக்கு அப்படி என்ன நேர்ந்தது என்று கேள்விகளை ஷஹீ, ரஸீனா, ரஹ்மான், பாஷித் என்று மாறி மாறி குடைந்து பாத்திருக்க, “பொண்ண பார்த்ததும் பிடிச்சு போச்சு, உம்மாட ஒரே நிய்யத்து பாஷித் கல்யாணம் அதான் நிக்காஹ் பண்ணிட்டோம்” என்று அனைவரும் ஒரே மாதிரியான பதிலையே கூறி இருந்தனர்.

அமீராவின் குடும்பத்தார் என மின்ஹாவும் பெற்றோரும் மாத்திரம்தான் வருகை தந்தனர். தனது மகள் வாழ வேண்டிய வாழ்க்கை என மின்ஹாவின் அன்னை பொருமினாலும் தந்தையோ தங்கை மகள் ஒரு நல்ல இடத்தில் வாழ்க்கை பட்டத்தை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருக்க, மின்ஹா மட்டும் மணமேடைக்கு சென்று அவள் சார்பாக பரிசேன ஒரு கவரை கொடுக்க வாங்க மறுத்த அமீராவின் கையில் வலுக்கட்டாயமாக திணித்து விட்டு இறங்கி சென்றாள். 

ஜெசிலாவும், ரஹ்மாவும் தான் மணப்பெண்ணின் மலர் தோழிகளாக நின்றிருந்தனர். ஜமீலாவின் வீட்டிலிருந்து வந்த இரு சிறுமிகளுக்கும் புதிதாய் வீட்டில் இருக்கும் அமீராவை அறிமுகப்படுத்த உடனே ஒட்டிக் கொண்டவர்கள் அவளை விட்டு விலகவே இல்லை. ரஹ்மா சாச்சி என்றும், ஜெசி மாமி என்றும் அவள் பின்னால் வால் போல் சுற்றித்திரிய அவளுக்கும் பேச்சுத் துணையோடு அந்த வீட்டில் சகஜமாக பழக சந்தர்ப்பமும் அமைந்தது.

இன்றும் அது போலவே அவளருகில் பசி மறந்து நின்றிருந்தவர்கள் ஜெமிலா அழைத்தும் வரவில்லை. ஷஹீ அழைத்தும் வரவில்லை. பேகம்தான் சென்று இருவருக்கும் சோறூட்டி விட்டாள்.

முர்ஸீதும், முனவ்வரும் வேறு கோட் சூட் அணிந்து இவர்கள் பக்கத்தில் சிறிது நேரம் நின்றிருந்தவர்கள், இவர்களின் தலையில் உள்ள பூக்களை கழட்ட முயற்சி செய்வதும், கையிலுள்ள மலர்களை பறிக்க முயற்சி செய்வதுமாக இருக்க, அவர்களின் தொல்லைகளை சமாளிக்க முடியால் ஆண்கள் இருக்கும் தளத்துக்கு அனுப்பி வைக்க முபாரக்கை பாடாய் படுத்தலாயினர்.

அஸ்ரப் தனது மனைவியை வலீமாவுக்கு அழைத்து வந்திருக்க,

“வா சியாமா” ஷஹீ அழைத்து சென்று ஒரு கதிரையில் அமர்த்தி நலம் விசாரிக்க

“நீ எப்படி இருக்க, ஷஹீ”

“உன் குழந்தை பொறந்த பிறகு உன்ன வீட்டு பக்கம் காணவே முடியிறதுல்ல. என்னாலையும் வர முடியல. எங்க உன் குழந்தை?”

“உம்மாகிட்ட விட்டு வந்தேன் ஷஹீ”

“சரி நல்லா சாப்பிடு. நான் அந்த பக்கம் போறேன்” ஷஹீ சியாமாவிடமிருந்து விடை பெற்று மற்ற விருந்தினரை கவனிக்க சென்றாள்.

அஸ்ரப் தனது மாமன் மகளையே விரும்பி மணத்திருந்தான். 

சிறு வயதிலிருந்தே சியாமாவை பிடிக்கும் அவளை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று கூறிக்கொண்டு திரிய எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றாலும், காலேஜ் முடித்து விட்டு வேலை எதுவும் இல்லாமல் இருப்பதால் மகளை கொடுக்க விருப்பமில்லாமல் இருந்தார் சியாமாவின் வாப்பா. ரஹ்மானோடு சேர்ந்து மொபைல் ஷாப் வைப்பதாக சொல்லவும் இதெல்லாம் தங்களுக்கு சரிப்பட்டு வராது என்றிருந்தவர் குறிகிய காலத்திலையே அவர்களின் அசுர வளர்ச்சியை கண்டு மகளை மணமுடித்து கொடுக்க சம்மதித்தார்.

கல்யாணமாகி மூன்று வருடங்களாகியும் சியாமாவுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கம் தலை தூக்க மருத்துவம் பார்க்க ஆரம்பித்தவளுக்கு இரண்டு தடவை கரு களைந்து மூன்றாவதாகத்தான் பிறந்தாள் யுஸ்ரா. ஆறு மாதங்களே ஆனா குழந்தையை எங்கையும் அழைத்து செல்ல அஞ்சி சியாமாவும் எங்கேயும் செல்வதில்லை. ரஹ்மானின் வீட்டு விசேஷத்துக்கு வராவிட்டால் முடியாதே! அதனால் உம்மாவிடம் குழந்தையை விட்டு விட்டு அஷ்ரப்போடு வந்திருந்தாள் சியாமா.

ஹாஜரா ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள். இரண்டு குழந்தைகளை சுமந்தத்தை விட இந்த குழந்தை சுமப்பது ரொம்பவே கஷ்டமாகவும், வித்தியாசமாகவும் இருக்க பெண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணலானாள்.

எட்டு மாதங்களும் முடிந்த நிலையில் அய்நாவும் அவர்களுடனையே தங்கி இருந்தாள். அதற்கு காரணம் ஹாஜராவின் பிரசவம் காரணம் என்று நினைத்தால் ரொம்பவே தவறு. முர்ஸீத் மற்றும் முனவ்வரை பார்த்துக்கொள்ளத்தான்.

வாப்பா மற்றும் ஆதில் வீட்டில் தனியாக இருப்பதால் ஹனா கணவன் குழந்தைகளோடு வந்து கொஞ்சம் நாட்களுக்கு தாங்கிக்கொள்ள அய்நாவால் ஹாஜராவுடன் நிம்மதியாக இருக்க முடிந்தது.

எல்லாரும் திட்டம் போட்டு தனது மகளை ஒதுக்கி விட்டதாகவே எண்ணி மணப்பெண்ணை பார்த்து உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்த இன்னொரு ஜீவன் மஸீஹா தான். ருகையாவை திருமணம் செய்ய பாஷித் மறுத்து விட்டான் என்றதும் நேரடியாக ஷம்சாதிடமே சென்று பேசினாள் மஸீஹா.

ருகையா நல்ல பெண்தான். ஆனால் உறவு முறையில் குழப்பம் இருக்கையில் மஸீஹாவுக்கு புரிய வைப்பதில் திண்ணாடிய ஷம்ஷாதும் ரஸீனாவிடம் பேசுகிறேன் என்று விட்டாள். ஆனால் அதற்குள் ரஸீனா மின்ஹாவை பெண் பார்த்து விட்டு வந்து உம்ராஹ்வும் சென்றிருக்க வந்தவுடன் பேசலாம் என்றிருக்க, அதற்கிடையில் பெண் பார்க்க சென்ற பாஷித் அமீராவை நிக்காஹ் செய்துகொண்டான்.

ஷம்ஷாத் பேசி இருந்தால் ரஸீனாவால் மறுத்திருக்கவும் முடியாது. வேறு இடத்தில் பெண் பார்த்தது உம்ராஹ் சென்ற பின் தான் ஷம்ஷாத் அறிந்து கொண்டாள். அதன் பின் அவளும் ருகையாவை பற்றி வாய் திறக்கவில்லை. இங்கே நிக்காஹ்வும் நடந்து விட்டது.

மளிகைக்கடை அக்பரின் கடை என்றானாலும் அதை விரிவு படுத்தும் எண்ணமும், செயலும் முபாரக்கின் என்பதால் சம பங்கை அக்பர் அவனுக்கு கொடுத்திருக்க, அவனை பகைத்துக்கொள்ள மஸீஹா விரும்ப வில்லை. அக்பருக்கும் சரி ஹஸனுக்கும் சரி அவனின் தயவு தேவை.

அதே போல் ரஹ்மான் எல்லாவற்றுக்கும் உதவி செப்பவன். ருகையாவுக்கு ஒரு நல்ல வரன் பார்ப்பதிலிருந்து அவளை திருமணம் செய்யும் பொறுப்பை கூட அவன் ஏற்றுக்கொள்வான் அதனால் ஷஹீயை கூட வார்த்தையால் பந்தாட முடியாமல் பெருமூச்சு விட்டவாறு அமர்ந்திருந்தாள் மஸீஹா.

ரஹ்மான்- ஷஹீ, முபாரக்- ஹாஜரா மணமக்களோடுதான் அமர்ந்து உணவுண்டனர். அஸ்ரப் மற்றும் ஷியாமும் அவர்களோடு அமர்ந்து உணவுண்ண அவர்களின் மனைவிமார்களும் அங்கே தான் அமர்ந்திருந்தனர்.

“அஸ்ரப் நீ ட்ரிப் போக வரலைனா போர் அடிக்கும் டா” முபாரக் சொல்ல

மனைவியை ஒரு பார்வை பார்த்தவன் “கடையையும் பார்த்துக்கணுமில்ல நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க டா” என்றான். குழந்தையை காரணம் காட்டி சியாமா மறுக்க மனைவி இல்லாமல் செல்ல அஷ்ரபுக்கும் மனம் வரவில்லை. அதை புரிந்து கொண்டு ரஹ்மான் சரி என்று விட, முபாரக் சபையிலையே கேட்டு விட, கடையை காரணம் காட்டிவிட முபாரக்கும் சரி என்று ஏற்றுக்கொண்டான்.

“பவாஸ் நீ வருவாய் தானே!” ரஹ்மான் பவாஸை ஏறிட

“எனக்கு முன்னாடி என் மனைவியும் குழந்தைகளும் ரெடியாகிட்டாங்க” என்றவன் சிரிக்க அவன் மனைவி நுஸ்ரா அவனை முறைத்தாள்.

அவர்கள் இருவரும் அரேன்ஜ் மேரேஜ் தான். அந்த குரூப்பில் கடைசியாக கல்யாணம் செய்ததும் பவாஸ் தான். அவனின் கல்யாண பரிசாக தன்னுடைய ஷெட்டின் பங்கையும் ரஹ்மான் பவாஸுக்கே கொடுத்து விட அவனும் தொழிலில் முன்னேற்றம் கண்டான்.

ரஹ்மா ஓடி வந்து ரஹ்மானின் மடியில் அமர்ந்து கொள்ள ஜெசிலாவும் மறுபுறம் வந்து நின்று கொள்ள அவளையும் மடியில் அமர்த்தி கொள்ள ஷஹீ கணவனுக்கு ஊட்டி விட ஆரம்பிக்க குழந்தைகள் கைகொட்டி சிரிக்க,

“அட பழைய ஜோடியே ஊட்டி விடுறாங்க, புது ஜோடி நீங்க ரெண்டு பேரும் என்ன அமைதியா சாப்பிடுறீங்க?”  முபாரக் கேட்க

“நாங்க சொல்லும் வர இருக்காங்களோ என்னமோ” என்ற அஸ்ரப் “ரஹ்மான் நீ சொல்லு டா இல்லனா உன் தம்பி கேக்க மாட்டான் போல இருக்கே” என்று அவன் கைவரிசையை காட்ட ஆரம்பிக்க

“அதெல்லாம் நாங்க நிக்காஹ் பண்ண உடனையே ஊட்டி வீட்டுச்சாச்சு. யாரும் சொல்ல வேண்டியதில்லை” பாஷித் சொல்ல முழிக்கலானாள் அமீரா.

அவளை பார்த்தே பாஷித் சமாளிக்கிறான் என்று புரிந்து கொண்ட ஷஹீ “அதெல்லாம் நீங்க தனியா இருக்கும் போது தானே! இப்போ ஊட்டி விடுங்க நாங்களும் பாக்குறோம்” என்று கட்டாய படுத்த ஹாஜராவும் சேர்ந்துகொள்ள வேறு வழியில்லாது ஊட்டி விடலானான் பாஷித்.

இளசுகள் ஒன்று கூடி இருக்க பெரியவர்களின் கண்களும் அவர்களின் மீதுதான் இருந்தது. சந்தோசமான, நிறைவான வாழக்கை அமைந்து விட்டாலே நிம்மஹி தான்.

“என்ன ரஸீ சின்ன மகன் கல்யாணமும் முடிஞ்சிருச்சு. உம்றாஹ்வும் போயிட்டு வந்தாச்சு. வேறென்ன” நவ்பர் பாய் மனைவியை கிண்டலடிக்க

“மொத்த குடும்பமும் ஒண்ணா நின்னு ஒரு போட்டோ எடுக்கனும்ங்க”

“சரி வா உன் இந்த ஆசையையும் நிறை வேத்திடலாம்’ என்றவர் ரஸீனாவின் கை பிடித்து அழைத்து சென்று மணமக்களோடு ரஸீனாவின் மொத்த குடும்பமும் ஒரு புகைப்படம் மற்றும் நவ்பர் பாய் மொத்த குடும்பமும் ஒரு புகைப்படம் என எடுத்துக்கொண்டனர்.

குடும்பம் குடும்பமாக போட்டு எடுத்துக்கொண்ட பின்னரே அனைவரும் சந்தோசமாக மண்டபத்திலிருந்து மணமக்களோடு வீடு திரும்பினர்.

“என்ன விஷயம் அமீரா? என் கிட்ட எதையோ சொல்லணும்னு தவிக்கிற, என்ன இருந்தாலும் தயங்காம சொல்லு”

இரண்டு நாட்களாக அமீரா பாஷிதிடம் எதையோ சொல்ல முற்படுவதும் பின் சொல்லாமல் செல்வதுமாக இருக்க இன்று அவனே! கேட்டு விட

“அது வந்துங்க”

“அதான் வந்துட்டியே! சொல்லு” என்றவன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருக்க அந்த தோற்றமே அவளுக்கு உள்ளுக்கு குளிரெடுத்தது.

“ஒண்ணுமில்ல” என்றவள் அறையை விட்டு வெளியே செல்ல முற்பட அவள் கையை பிடித்து கட்டிலில் அமர்த்தியவன்

“என்ன விஷயம் சொல்லு” கையை விடாமல் பிடித்திருக்க குரலிலும் பிடிவாதம்

தயங்கியவள் ஒருவாறு மின்ஹா மணமேடையில் பணம் கொடுத்ததை கூறி அதை என்ன செய்வது என்று அவனிடமே கேட்டும் வைக்க அவள் முகத்தையே பார்த்திருந்தான் பாஷித். அது அவளுக்கு மேலும் அச்சத்தையே விளைவித்தது.

ரஹ்மானும் வலீமா அன்று காலையில் பாஷித்தை   அழைத்து பேசியதுதான் “அந்த பொண்ணு மின்ஹா வந்து அமீராகாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்கிறாள். எனக்கென்னமோ! அவள் அன்று வேண்டுமென்றே தான் பேசி இருப்பாள் என்று தோன்றுகிறது. நீ என்ன சொல்கிறாய்”

“அவ நல்லதே செய்திருக்கட்டும். ஆனாலும் அவ சங்கார்த்தம் வேணாம்” என்று விட்டான் பாஷித். அவனுக்கு முதல் பார்வையிலையே மின்ஹாவை பிடிக்கவில்லை. அவளுக்குத்தான். ஆனால் பாஷித் போட்டோ பார்க்காதது போல் மின்ஹாவும் பார்த்திருக்கவில்லை. பெண் பார்க்க வந்த ரஸீனா மின்ஹாவை விட்டு விட்டு அமீராவிடம் பேசிக்கொண்டிருக்க, அவளும் அமீராவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைக்கலானாள்.

அதன் படியே பாஷித்தும் கேட்க, அவன் கோபத்தை தூண்டி விட்டு அவள் நினைத்தைதை நடாத்தியும் விட்டாள்.

“ஒஹ் அவ கொடுத்தா… நீ வாங்கிட்ட. கொடுத்ததாலதான் வாங்கின. கொடுக்கலானா வாங்கி இருக்க மாட்ட இல்ல”

“என்ன லூசு மாதிரி உளறுறான்” மனதில் நினைத்தாலும் வெளியே சொல்ல முடியாமல் மருண்ட பார்வை பார்த்து வைத்தாள் பாஷிதின் மனையாள். 

“சரி இப்போ வாங்கிட்டியே என்ன பண்ண உத்தேசம்”

“நீங்க என்ன செய்ய சொல்லுறீங்களோ!” தலை குனிந்தவாறு மெதுவாக கூறினாலும் தெளிவாகத்தான் கூறினாள்.

“என் கிட்ட கேட்டுத்தான் வாங்கினியா?” கணவனை தலை உயர்த்தி பார்த்தவள் என்ன செய்வதென்று புரியாமல் விழிக்க அவன் குரலின் கடுமை விழியோரம் கசிய ஆரம்பித்திருந்தது.

“நீங்க நினைக்கிற மாதிரி மின்ஹா ஒன்னும் கெட்டவ இல்லங்க அந்த வீட்டுல என்ன நல்ல முறையா நடத்துறது மின்ஹா மட்டும்தான்” என்று கூறியவள் அன்று ஸ்கூட்டியை ஓட்ட கற்று கொடுக்கும் பொழுதுதான் அவனை சந்தித்ததாகவும் கூறினாள்.

“அவளுக்கு ட்ரைவர் வேல பாக்க உன்ன வச்சிருக்க பாத்திருக்கா” என்றவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு எட்டிப்பார்த்திருக்க சிரித்தும் விட்டான்.

“ஸ்கூட்டிக்கு ட்ரைவரா?” அவன் சிரிப்பதை கண்டு “கிண்டல் பண்ணுறீங்களா?” என்றவாறு அவனை அடிக்க ஆரம்பிக்க

“என்னையே அடிக்கிறியா? உன்ன… ” எனறவாறே அவளை இடுப்போடு சேர்த்தனைத்தவன் இதழோடு இதழ் பொருத்தி இருந்தான்.

இங்கே ரஹ்மானின் அறையில் சுற்றுலா பயணம் செல்ல துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான் ரஹ்மான். அவனின் சின்ன சிட்டு, செல்ல மகள் வாப்பாவுக்கு உதவி செய்து கொண்டிருக்க, ஷஹீ கட்டிலில் அமர்ந்து வயிற்றில் கை வைத்தவாறு அவர்களை பாத்திருந்தாள். 

வாப்பாவை போலவே அவன் சொல்லும் பொழுது ஒவ்வொன்றாக எடுத்து வைப்பதும், சரி பார்ப்பதும், அடுக்குவதும். சுறுசுறுப்பாக தயாராகிக்கொண்டிருந்தாள் ரஹ்மா.

“என்ன பானு போர் அடிக்குதா?”

“என்னதான் எந்த வேலையும் பார்க்க விடாம உக்கார வச்சிருக்கீங்களே! அந்த துணிய வாச்சும் போடுங்க மடிச்சு தரேன்”

ரஹ்மாவின் கைகளில் துணியை கொடுக்க அவளும் உம்மாவிடம் கொடுத்து வயிற்றில் முத்தமிட்டு தம்பியிடம் செல்லம் கொஞ்சி விட்டே வாப்பாவிடம் வருவாள்.

மகளின் செயலை ரசித்தவாறு சின்ன சிரிப்பினூடே தன் வேலையை செய்து கொண்டிருந்தான் ரஹ்மான்.

அனைத்தையும் பெட்டியில் அடுக்கி பெட்டியை மூடி விட்டு எடுத்து வைக்க தந்தையை பிடித்துக் கொண்ட ரஹ்மா

“போங்க வாப்பா தம்பி வெளிய வந்த உங்க கூட பேசவே மாட்டான். நீங்க கிஸ் பண்ணுறதும் இல்ல. பேசுறதுக்கு இல்ல. வாங்க வந்து பேசுங்க” என்றவள் வலுக்கட்டாயமாக இழுத்து வர ஷஹீதான் முழிக்கலானாள்.

“இதெல்லாம் உன் வேலையா?” ரகசியமாக மனைவியிடம் சொன்னவன் “நான் அப்பொறம் பேசுறேன் மா” என்று சொல்ல

“நோ நோ… பேசுங்க” என்றவள் அவன் கையை ஷஹீயின் வயிற்றில் வைத்து, தானும் பேச குழந்தை முதன் முதலாக துடிக்க ஆரம்பித்திருக்க மூவருமே அதை உணர்ந்து பரவசமடைந்தனர்.

ரஹ்மா ஷஹீயை கட்டிக்கொள்ள ரஹ்மான் இருவரையும் சேர்த்தணைத்து ரஹ்மாவின் கன்னத்திலும், ஷஹீயின் நெற்றியிலும் முத்தமிட,

“தம்பிக்கு, தம்பிக்கு” கேட்டு வாங்கினாள் ரஹ்மா. மனைவியின் வயிற்றில் ரஹ்மான் குனிந்து முத்தமிட வாப்பாவின் தோள்களில் ஏறி இருந்தாள் ரஹ்மா.

ரஹ்மான் பானுவை தன் உயிரிலும் மேலாக நேசித்தான். அந்த நேசத்தால் பொறுமையாக அவளை அணுகி தன் காதலையும் புரியவைத்து, காதலிக்கவும் வைத்து வாழ்க்கையில் வெற்றியும் அடைந்து விட்டான். ஷஹீயின் ஆசைபடி ஆண் குழந்தையே! பிறக்கட்டும் என்று வாழ்த்தி விடை பெறுவோமாக.

நன்றி

வணக்கம்

MILA

                                                                                                                                                     நிறைவு