அத்தியாயம் 9

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தன. தூரத்திலிருந்தே பானுவை பார்த்துக்கொண்டிருந்த ரஹ்மான் அவளிடம் சென்று பேச முயற்சிக்கவில்லை. அவன் மனதில் அச்சம் குடிகொண்டிருந்தது. பிடிக்கவில்லை என்று சொன்னவள் கல்யாணத்துக்கு சம்மதம் கூறிய பின்னும் அவனை முறைத்து பார்பதிலையே குடும்பத்துக்காகத்தான் திருமணத்துக்கு சம்மதித்தாள் என்று நன்றாகவே புரிந்தது. வீராப்பாக குடும்பத்துக்காக சம்மதித்தேயானால் இந்த திருமணம் வேண்டாம் என்று பானுவிடம் சொல்ல நினைத்தாலும் தன்னால் அதை ஒருகாலமும் சொல்ல முடியாது.

தன்னை வெறுத்தாலும் அவள் வேண்டும் என்று மனம் கூவ, அவளை நெருங்காமல் தூரத்திலையே இருந்து ரசிக்கலானான். அவளிடம் பேசப்போய் மனம் நோகும் படி பேசி விடுவாளோ! என்ற அச்சம் ஒரு புறம் கல்யாணத்துக்கு சம்மதித்தற்கான காரணம் என்ன சொல்வாளோ! என்ற அச்சம் ஒரு புறம் அவனை வாட்ட, எட்டி நிற்பதே மேல் என்று நினைத்தவன் நெருப்பாய் தகிக்கும் அவளை எவ்வாறு அணுகுவது என்ற வழி தெரியாமல் தவிக்கலானான்.

இப்போதே ஓரளவு சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றான். படிப்புக்கேத்த வேலையையும் பார்த்தால் போதிய வருமானம். மேற்படிப்பெல்லாம் பானுவை பார்க்க மட்டும் தான். வீட்டுக்கு தெரியும் படிக்கிறான் என்று எங்கு படிக்கிறான் என்றுதான் தெரியவில்லை. வீட்டில் ரஹ்மானை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். சுதந்திரமானவன். காதல் ஒன்றை தவிர அவனை பற்றி குறை கூற ஒன்றுமில்லை.

அவன் வாழ்க்கை அவன் பானுவுடன் என்று முடிவாகி விட்டது. அவள் தன் மீது இத்தனை கோபம் ஏன் கொள்கிறாள் என்று இன்னும் புரியவில்லை. கல்யாணமானால் அருகில் இருந்து தன்னை புரியவைக்கலாம், காதலை உணர்த்தலாம் ஆனால் அதற்கு இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

காலேஜுக்கு பஸ்ஸில் தான் போய் வந்துக் கொண்டிருந்தாள் பானு. பஸ் தரிப்பிடத்துக்கு அரைகிலோ மீட்டர் அளவு நடக்க வேண்டும் பின் அங்கிருந்து காலேஜ் பஸ் எடுத்தால் ஐந்து கிலோ மீட்டரில் காலேஜ் வந்து விடும்.

சில நேரம் முபாரக் பஸ் தரிப்பிடத்துக்கு வண்டியில் அழைத்து செல்வான். இல்லையென்றால் நடராஜா சர்வீஸ்தான். நடந்தேதான் போகவேண்டி இருந்தது. ஹிதாயாயாவும் தமிழ் இலக்கியம் தேர்வு செய்து அதே கல்லூரியில் சேர்ந்திருந்தாள் அதனால் இருவரும் ஒன்றாகத்தான் போய் வந்தார்கள்.

சிலநேரம் இருவரில் ஒருவர் வர தாமதமானால் அரசு பேரூந்தில் செல்ல வேண்டி இருக்கும் அல்லது காலேஜ் பஸ் ஏதாவது பிரச்சனை பண்ணிவிடும். அல்லது மழை வந்தால் குடை பிடித்தும் தொப்பலாக நனைத்து கொண்டு நடக்கிறாள். எந்த மரத்தின் கீழோ, கூரையின் கீழோ நிற்க மாட்டாள். அவள் நனைவதால் வண்டியை உருட்டிக்கொண்டு தானும் நனைந்து காய்ச்சலில் படுத்த நாட்கள் ஏராளம். ரமழான் மாதம் முழுவதும் நோன்பு வைத்துக்கொண்டு வெயிலில் பானு நடப்பாள் என்பதை நினைக்கும் பொழுதே நெஞ்சை உருக்க என்ன செய்யலாம் என்று யோசனையில் விழுந்தவனிடம்

“ஏன் உன் வண்டியில் கூட்டிட்டு போயேன்” என்று மனம் கேலி செயலானது.

“வந்தா கூட்டிட்டு போக மாட்டோமா?” அதை அடக்கியவன் வழியை கண்டு பிடித்த நிம்மதியில் இருந்தான். ஆனால் அவன் எது செய்தாலும் தப்பாகவே வந்து விடிய இதுவும் பானுவின் பார்வையில் தப்பாகத்தான் விழுந்தது.

வளமை போல் பானுவை வண்டியில் பின் தொடர்ந்து விட்டு காலேஜினுள் செல்பவன் அவள் அவளின் வகுப்பறையை அடைந்த பின்தான் தனது வகுப்புக்கே செல்வான். இடைவேளையின் போதும் அவளை தூரத்திலிருந்தே பார்த்து விடுவான். அவனுக்கு பசி, தாகம் எல்லாம் அவள் பசியாறுவதில்லையே மறந்து விடும். என்றுமே அவள் கண்முன் செல்ல நினைத்ததில்லை.

அன்றும் இடைவேளை நேரத்தில் பானுவை பார்க்க கண்டீன் பக்கம் சென்று கொண்டிருந்தவனுக்கு பானுவின் பெயர் காதில் விழ அங்கேயே நின்று கவனித்தவன் இரண்டு மாணவர்களில் ஒருவன் பானுவை விரும்புவதாக சொல்ல, மற்றவன் அவனை போய் பானுவிடம் பேச சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான். 

இப்படியொரு விஷயத்தை அவன் நினைத்தும் பாத்திருக்கவில்லை. காலேஜ் வந்தால் இவ்வாறான விஷயங்கள் எல்லாம் சாதாரணம் ஆனால் ரஹ்மானால் அதை பொறுக்க முடியவில்லை. “என் பானுவை ஒருவன் ரசிப்பதா?” என்ற கோபம். தன்னை வெறுக்கும் அவள் மனம் இன்னொருவனை விரும்பி விடுமோ என்ற அச்சம்.

அது எதுவானாலும் அவனை சிந்திக்க விடாது அந்த இருவரையும் தும்சம் பண்ணத்தான் மூளை சொல்ல, கைகள் பரபரக்க, இருவரையும் என்ன காரணத்துக்காக அடிக்கிறான் என்று யோசிக்கக் கூட விடாமல் அடிக்க அவனிடமிருந்து அவர்களும் தப்பி ஓடி அவ்வறையை விட்டு வெளியே வர கூட்டமும் கூட பானுவும் அந்த இடத்துக்கு ஹிதாயாவோடு வந்தாள்.

ரஹ்மானை கண்டு அதிர்ச்சியடைந்தவள் மயக்கம் போடாத குறைதான். அவள் உள்மனம் சொன்னது இந்த அடிதடிக்கு பின்னால் தன் பெயர்தான் நிச்சயமாக இருக்கும் என்று. ஹிதாயாவின் கையை இறுக்கப் பற்றிப்பிடித்தவள் நகர முற்பட விஷயமறிந்த அங்கே வந்த காலேஜ் முதல்வர் போட்ட சத்தத்தில் அசையாது அங்கேயே நின்று விட்டாள்.

“என்ன பிரச்சினை இங்க?” அவர் குரல் அதிகாரமாகவும், சத்தமாகவும் ஒலித்து அவ்விடமே அமைதியாக

“இவன் யாருன்னே தெரியல சார் எங்க டிபார்மண்டும் கிடையாது. எப்படி உள்ள வந்தான்னும் தெரியாது. வந்தவன் என்ன எதுன்னு ஒன்னும் சொல்லாம தாறுமாறா அடிக்க ஆரம்பித்தான்” அடி வாங்கிய ஒருவன் கூற இரத்த காயங்களோடு மற்றவனும் ஆமோதித்தான்.

ரஹ்மானின் புறம் திரும்பியவர் “யார் மேன் நீ பார்க்க ரௌடி மாதிரி இருக்க எப்படி உள்ள வந்த?” என்றவர் அவன் ஐடி கார்டை கண்டு “நீயும் இங்க ஸ்டூடண்டா? எந்த டிபார்ட்மென்ட்?” ரஹ்மான் கூற “உனக்கிங்கே என்ன வேல?”

பானுவை பார்த்தவன் என்ன கூறுவதென்று மெளனமாக அதை கவனித்த அவர் அடிவாங்கிய இருவரையும், ரஹ்மானையும் பானுவையும் தன்னுடைய அறைக்கு வருமாறு கூற ரஹ்மானை முறைத்தவாறே ஹிதாயாவோடு நடந்தாள் பானு.

அவள் எண்ணமெல்லாம் “இவன் படிக்கிற விஷயமே எனக்கு தெரியாது அதும் எங்க காலேஜில் என்ன படிக்கிறான். நான் சேர்ந்தே ஒரு வருஷமாக போகுதே! இவன் எப்போ சேர்ந்தான்?” என்றிருந்தது.

கண்களை மெதுவாக திருப்பி ரஹ்மானின் ஐடி கார்டை பார்த்தவள் “அதான் தினமும் வரானா? அப்போ என்ன பார்க்க வரலையா? நான் தான் என்ன பார்க்க வராதா நினைச்சி கிட்டு இருக்கேன்” மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் “அவன் ஒதுங்கி இருந்தாலும் நீ கற்பனை பண்ணியே அவனை வில்லனாக்கு” என்ற மனதின் குரலுக்கு “அதான் புதுசா பிரச்சினையை இழுத்து விட்டிருக்கானே என்னானு தெரியல. இது வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நடக்குமோ?” மனம் அடித்துக்கொள்ள முதல்வரின் அறையினுள் நுழைந்தவள் ஒரு ஓரமாக நின்று கொண்டாள்.

காலேஜ் வாழ்க்கையில் காதல் எல்லாம் சகஜம் தான் பானுவால் தான் இந்த சண்டை என்று  புரிந்து கொண்டுதான் முதல்வர் அவளையும் அழைத்தார். ஆனால் ரஹ்மானிடம் கேட்ட முதல் கேள்வியே! இந்த பொண்ணை காதலிக்கிறாயா என்றுதான்.

அங்கே பானுவை கண்டு கண்களை கட்டு படுத்தும் வழி தெரியாமல் தானாகவே அவள் புறம் கண்கள் செல்ல அதை பார்த்த அனுபவம் மிக்க முதல்வர் அவளையும் அழைத்து அவளிடம் என்ன கேட்க போகிறாரோ! கேட்டால் அவள் மறுத்து அசிங்கப்படுத்தி விடுவாளோ! சண்டை நடந்த இடத்திலிருந்து முதல்வரின் அறையை அடையும் வரை ரஹ்மானின் சிந்தனையில் ஓடியது இதுதான்.

அவர் காதலிக்கிறாயா என்று கேட்டதும் சுதாரித்தவன் “வீட்டுல எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க. படிச்சி முடிஞ்சதும் கல்யாணம். நான் இங்க படிக்கிறது கூட அவளுக்கு தெரியாது. தினமும் அவளை பார்க்க அந்த நேரத்துக்கு போவேன். போகும் போது இவங்க ரெண்டு பேரும் என் பானுவை பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க கோவத்துல அடிச்சிட்டேன்” என்றான் அமைதியாக.

காலேஜ் வாசலுக்கு தன்னை பார்க்க வரவில்லை என்றும் சுணங்கிய மனம் தினமும் உன்னை பார்க்க இந்த நேரத்தில் வருகிறேன் என்று கூறியதும் மழைச்சாரல் தீண்டிச்செல்வதை போல் உணர “என் பானுவாமே! ரொம்ப தைரியம் தான்” ஏனோ கோபம் வருவதும் பதிலாக உள்மனம் ரஹ்மானை கணவனாக ஏற்றுக்கொள்ள தயாரானதை அறியாமளையே அவன் பேச்சை ரசிக்க ஆரம்பித்தாள் பானு.

“காதலிக்கும் பொண்ணையே இன்னொருவன் பார்த்தால் எந்த பையன் என்றாலும் அடிப்பான், இதுல கட்டிக்க போரவாளை பார்த்தா சிரிச்சி கிட்டா இருப்பாங்க” நெற்றியை சொறிந்தவர் பானுவை ஏறிட்டு “இவர் சொல்லுறது உண்மையா?” என்று வினவ “ஆமாம்” என்று தலையசைத்தாள் ஷஹீரா.

காதலிக்கிறேன் என்று மட்டும் ரஹ்மான் தெனாவட்டாக கூறி இருந்தால் மறுத்திருப்பாளோ! என்னவோ! அடி கொடுத்து, வியர்வையில் குளித்து, கண்களால் அவளிடம் மறுத்து விடாதே என்று கெஞ்சும் அவன் பார்வை ஆழ் மனதை ஏதோ செய்ய மற்றவர்களின் முன் அவனை மட்டம் தட்டும் எண்ணம் வரவில்லை. அதனாலயே “ஆமாம்” என்று தலையசைத்திருந்தாள். 

“சரிம்மா நீ உன் கிளாசுக்கு போ” ரஹ்மானை பார்த்தவள் அமைதியாக வெளியேற, அடிவாங்கிய இருவரின் புறமும் திரும்பிய முதல்வர் “காலேஜ் சேர்ந்து ஒருவருஷம் கூட முடியல அதுக்குள்ளே காதல் வந்திருச்சோ? போன செமஸ்டருக்கு எத்துணை அறியார்?” என்று கேட்க அவர்களின் பதிலில் “முதல்ல படிக்கிற வழிய பாருங்க. அந்த பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாச்சுனு தெரிஞ்சிச்சில்ல. உங்க ரெண்டு பேரால ஏதாவது தொந்தரவுனு கம்பளைண்ட் வந்தது… உங்க பேரன்ட்ஸ் கிட்ட நான் பேச வேண்டி இருக்கும். இப்போ கிளாசுக்கு போங்க” மிரட்டலாக கூறியவர் ரஹ்மானின் புறம் திரும்பி “இங்க பாருப்பா கோபம் நல்லதுக்கில்ல இப்படி அடிதடில இறங்கினா.. பிரச்சினை பெரிதாகும் இந்த தடவ உன்ன வார்ன் பண்ணி விட்டுடுறேன். இன்னொரு தடவ இப்படி நடந்தா உன் மேல ஆக்சன் எடுக்க நேரிடும்” என்றவர் அவனை வெளியேறும் படி உத்தரவிட்டார்.

வெளியே வந்த ஷஹீரா ஹிதாயாவோடு நடக்க “என்னடி… பிரச்சினை?” ரஹ்மானைதான் ஷஹீரா திருமணம் செய்து கொள்ள போகிறாள் என்று ஹிதாயாவுக்கு தெரியும். அவன் பின் தொடர்வதும் இவள் முறைப்பது கூட அறிந்த விஷயம் தான். தோழியே சொல்வாள் என்று அமைதி காத்தவள் இன்று இப்படி ஆகவும் மனம் பொறுக்காமல் விசாரிக்க,

“ஒன்றுமில்லை அந்த பசங்க என்கிட்டே ப்ரொபோஸ் பண்ண பாத்திருக்காங்க அவருக்கு கோபம் வந்திருச்சு அடிச்சிட்டாரு”

“கொஞ்சம் இரு டி… நீயா சொல்வானு எதிர்பார்த்தேன் சொல்லுற மாதிரி தெரியல அதான் கேக்குறேன். ரஹ்மான் நாநாவ கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னியே! விருப்பத்தோடு சொன்னியா? வீட்டார் கட்டாய படுத்தினங்களா?”

“கட்டாய படுத்தல. நான் தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்”

“சந்தோசம். ஆனா நீ நாநாவ முறைச்சு பாக்குறதுல எங்க கட்டாய படுத்துட்டாங்களோனு நினச்சேன். ஆனா இப்போதான் புரியுது உன் பார்வையே அப்படிதான் இருக்குனு. அதுசரி நீ யார் தங்கச்சி… முபாரக் தங்கச்சினா பின்ன இப்படித்தானே இருப்பாங்க” ஹிதாயா நாக்கை துருத்தி கேலி செய்ய

“அடியேய் இங்க பாரு என்ன என்னவேனாலும் பேசு நாநாவ ஒன்னும் சொல்லாத சரியா?” ஷஹீ  தோழியை கடிய

“பின்ன என்னடி கல்யாணம் பண்ணிக்க போறவர் கூட நாலு வார்த்த சிரிச்சி பேசினோமா? நாலு சினிமா பாத்தோமா, பீச் போனோமான்னு இல்லாம இப்படி மொறச்சி கிட்டு திரியுற”   

“அதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு பார்த்துக்கலாம்”

“அத கொஞ்சம் சிரிச்சி கிட்டே சொல்லேன். பாவம் டி.. அந்த மனிசன். உன் நாநா எதுக்கு முறைக்குறானு தெரியல. நீ எதுக்கு முறைக்குறன்னு புரியாம கடைசிவரைக்கும் உங்க ரெண்டு பேர் நடுவுளையும் மாட்டிக்கிட்டு முழிக்க போறாரு” ஹிதாயா சொல்லி சிரிக்க

முதல் தடவையாக ரஹ்மானுக்கு, முபாரக்குக்கும் என்ன பகையாக இருக்கும் என்று எண்ணலானாள் பானு. ஹிதாயாவிடம் விடை பெற்றவள் ரஹ்மானை காண சென்றாள்.

ரமழான் மாதம் வந்து விட்டது. கல்யாணம் பேசிய பின் வரும் முதல் ரமழானில் அவளுக்காக ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசை கொண்டு நகை வாங்கி வந்தவன் அன்னையிடம் கொடுத்து அக்காவுடன் சென்று கொடுக்குமாறு கூற

“நகை எல்லாம் வேணாம் ரஹ்மான். ஏதாவது துணி வாங்கிக் கொடுப்போம். காலேஜுக்கு போட்டுக்கொண்டு போவால்ல” 

“ஏன்மா…”

“அன்னைக்கி வாங்கின மாலையை கூட நடந்த பிரச்சினைல போட முடியல. பேகம் மைனி கிட்ட கேட்டேன். மாப்புள படிச்சி கிட்டே தொழில் பண்ணுறது நாலு பேர் கண்ண உறுத்துது இதுல கல்யாணத்துக்கு முன்னாடியே நகையெல்லாம் போட்டா கண்ணு பட்டுடும் வேணாம்னு சொல்லிட்டாங்க”

“மத்தவங்களுக்காக நாம வாழணுமா?” கொஞ்சம் கோபமாக ரஹ்மான் சொல்ல

“கடைசி வரைக்கும் சந்தோசமா வாழனும். ஊர் கண்ணு பட்டா ஏதாவது பிரச்சினை வந்து கிட்டே தான் பா  இருக்கும். நீ ஒன்னு பண்ணு கைல காசு இருந்தா நகை வாங்கி வை கல்யாணத்து பிறகு பானு இங்க வந்த பிறகு கொடுக்கலாம் சரியா. ஜமீலா வருவா கடைக்கு போய் ஜவுளி வாங்கிட்டு வா… அவளுக்கும் சேர்த்து வாங்குடா இல்லனா உன் அக்கா மூஞ்ச தூக்கி வச்சிப்பா…”

மருமகள் என்றாலே மகனை தன்னிடமிருந்து பிரிக்க நினைப்பவள் என்று நினைக்கும் அன்னைகளின் மனநிலையை தாண்டி வருபவளையும் மகளாய் நினைத்து மகனோடு சந்தோசமாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் அன்னையாக இருந்தாள் ரஸீனா.

அதுவும் அவள் மகனின் அன்புக்கு பாத்திரமானவள் என்று அறிந்த பின் பொறாமை கொள்ளாமல் முழுமனதாக ஏற்றுக்கொள்ளவும் நல்ல மனம் வேண்டும்.

“உங்களுக்கு ஒன்னும் வேணாமா?” அன்னையை கட்டிக்கொண்டு சொல்ல

“என் புருஷன் கிட்ட வாங்கிக்கிறேன்” மகனின் தலையை கோதியவாறே உள்ளே சென்றாள் ரஸீனா.

மாலை ஜமீலாவோடு ஜவுளிக்கடைக்கு சென்ற ரஹ்மான் பானுவுக்கு பார்த்துப் பார்த்து சுடிதார் வாங்க

தொண்டையை கனைத்த ஜமீலா “இதெல்லாம் ரொம்ப ஓவர் டா… கல்யாணமாகும் முன் எனக்கு ஒரு கார்ஷிப்பாவது வாங்கி தந்திருப்பியா? கட்டிக்க போறவளுக்கு பார்த்து பார்த்து வாங்குற”

“உனக்கு என்ன வேணுமோ வங்கிக்க…” ரஹ்மான் சிரித்தவாறே சொல்ல

“வாங்கிக்கத்தான் போறேன். நீ என்ன வாங்கித்தர போற அத சொல்லு முதல்ல” ஜமீலா தம்பியின் புறம் திரும்பி நின்றவாறே கேட்க

“மச்சான மயக்க அவருக்கு புடிச்ச கலர்ல நீ டிரஸ் எடுக்க போற. சோ நா எடுத்தா நல்லா இருக்காது. நீயே எடு. பானுக்கு எத்துனை எடுக்குறேனோ அத்துனை எடு ஆனா ஒன் கண்டிஷன்”

“என்ன?” ஜமீலா வெட்கத்தை மறைக்க தம்பிக்கு முகம் காட்டாமல் மறு பக்கம் திரும்பி துணியை பார்ப்பது போல பாசாங்கு செய்தாள்.

“அம்மாவோட போய் பானுவுக்கு ட்ரெஸ்ஸெல்லாம் கொடுக்கும் போது நீ செலெக்ட் பண்ணினதுனு சொல்லணும். நா கடைக்கே வரலன்னு சொல்லணும்”

“என் டா… ஆசையாசையா பார்த்து பார்த்து வாங்குற நோம்பையும் புடிச்சு கொண்டு கடகடயா ஏறி இறங்கி வாங்கிட்டு நான் வாங்கினதுனு என்னையும் பொய் சொல்ல சொல்லுற” தம்பியின் புறம் திரும்பி ஜமீலா யோசனையாகவே கேட்டாள்.

ஏற்கனவே வெறுப்பை உமிழ்ப்பவள் அன்று கொடுத்த சாக்லட்டை திரும்பியும் பார்க்கவில்லை என்று ஹஸன் கூறி இருக்க, நான் துணி வாங்கிக் கொடுத்தால் போட்டுக்கொள்வாளா? இதை ஜமீலாவிடம் சொல்ல முடியாதே!

“இல்லக்கா… அன்னைக்கி பேசினப்போ… என்ன வேணும்னு கேட்டேன்… கல்யாணத்துக்கு முன் எதுவும் வேணாம்னு சொல்லிட்டா அதான். நீ கொடுத்தா வாங்க மாட்டேன்னு சொல்ல முடியாதே!”

“சரிடா… நீ கொடுத்ததாக சொல்லி நான் கொடுக்குறேன்”

“அல்லாஹ்… புரிஞ்சிக்காம பேசுறாளே!” மானசீகமாக தலையில் கைவைத்தவன் “போடமாட்டா… நான் கொடுத்ததுனு சொன்னா போடமாட்டாளே” வாய் விட்டே புலம்ப

“என்ன டா சொல்லுற?”

“கல்யாணம் ஆகும் வர என் கிட்ட இருந்து எதுவும் வாங்க மாட்டலாம். அப்படி வாங்குறது அழகில்லையாம். ஏதேதோ சொல்லுறா… அவ மனச கஷ்டப்படுத்த கூடாதில்ல அதான் நீ வாங்கினதா கொடு ப்ளீஸ்” அக்காவின் நாடியை பிடித்து செல்லம் கொஞ்ச ஜமீலாவும் சிரித்தவாறே சரியென்று தலையசைத்தாள்.

பானுவுக்கு, ஜமீலாவுக்கும் துணிகளை வாங்கியவன் வீட்டாருக்கும் வாங்கியதோடு பேகத்துக்கும் வாங்கியவன் அதையும் ஜமீலாவின் கையில் கொடுத்தான். 

மூன்றாவது நோம்பன்று ரஸீனாவோடு ஜமீலாவும் மற்றும் பாஷித் நோன்பு திறக்க பேகத்தின் வீட்டுக்கு சென்றனர். ரஹ்மான் வரவில்லை. தலைவலி என்று காரணம் சொன்னான்.

அவனுக்கு போகணும் என்று ஆசைதான். போனால் முபாரக் ஒரு பக்கம் முறைத்துக்கொண்டு நிற்பான். பானுவிடம் பேசவும் முடியாது. பேச அனுமதி கிடைத்தாலும் அவள் பேசுவாளா? அவளும் வெறுப்பைத்தானே கக்குவாள். போய் ஏதாவது பிரச்சினையை இழுத்து விட்டு வருவதை விட வீட்டில் இருக்கலாம் என்று நினைத்தவன் செல்லாமல் வீட்டில் இருந்தான். அனனைவரும் விடை பெரும் பொழுது அக்காவிடம்  துணியை கொடுக்கும் பொழுது பானுவிடம் ஜமீலா வாங்கியதாக சொல்ல சொல்லி திரும்பாத திரும்ப ஞாபகப்படுத்தினான்.

நவ்பர் பாய் ஷம்ஷாத்தின் வீட்டுக்கு போய் இருக்க ரஹ்மான் மட்டும்தான் வீட்டில் இருந்தான். இதுபோல் தனியாக என்றும் இருந்ததில்லை. கேசட்டில் குர்ஆன் ஓதுவது மட்டும் ஒலித்துக்கொண்டிருக்க, வீடே வெறிச்சோடி கிடந்தது. மஹ்ரிப்புக்கு பின் அன்னை வீட்டில் இருந்தால் குர்ஆன் ஓதுவாள் அந்த சத்தம் கேட்டுப் பழகி இன்று ஏனோ வெறுமையாக உணர்ந்தான்.

இஷாவுக்கும் அதான் சொல்ல போகிறார்கள் போனவர்கள் வரும் வழியையும் காணவில்லை. தராவீஹ் தொழுகைக்கும் நேரமாகிறது. வீட்டை பூட்டிக்கொண்டு செல்லலாம் என்று பார்த்தால் மாற்று சாவியை அன்னை கொண்டு சென்றிருக்கவில்லை.

தம்பியை அழைத்து விசாரிக்க அவனும் இப்போதைக்கு வரும் வழி தெரியவில்லை என்று கூற பள்ளி செல்ல நேரமானதால் சாவியை தந்து விட்டு செல்கிறேன் அன்னையை வீட்டுக்கு அழைத்து வருமாறு கூறியவன் பானுவின் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.

பானுவின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் தம்பியை அழைக்க, மாடியிலிருந்து அவனைக் கண்டு இறங்கி வந்த அக்பர் வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்து செல்ல சங்கடமாகவே உள்ளே நுழைந்தவனுக்கு காணக் கிடைத்தது ஜமீலாவோடு சிரித்து பேசிக்கொண்டு நிற்கும் பானுவைதான்.

கொண்டு சென்ற சுடிதாரை அளவு சரியா என்று போட்டு பார்க்குமாறு ஜமீலா கூறி இருப்பாள் போலும் அந்த கடல் நீல நிற வண்ண அனார்கலி சுடியை போட்டுக்கொண்டு வந்தவள் ஜமீலாவிடம் காட்டிக்கொண்டிருக்க பேகமும், ரஸீனாவும் அவளுக்கு அளவெடுத்து தைத்தது போல் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தனர்.

உள்ளே நுழைந்த ரஹ்மானின் கண்கள் அவளை விட்டும் எங்கும் செல்லவில்லை. ரஹ்மானை எதிர்பார்க்காத பானுவும் அவன் பார்வையை கண்டு உள்ளே செல்வதா அங்கேயே நிற்பதா என்று தடுமாறி நின்றவள் ஜமீலா கையை பிடிக்கவும் அங்கேயே நின்று விட்டாள்.

ரஹ்மானின் பார்வையை கண்டு ஜமீலாவுக்கு சிரிப்பு வர சத்தமாக பேசி தம்பியை வரவேற்க சுதாரித்தவன் பேகத்திடம் நலம் விசாரித்து விட்டு அன்னையிடம் சாவியை கொடுத்து விட்டு விடை பெற முயல

“இருங்க மகன் ஏதாவது குடிச்சிட்டு போலாம். நோம்பு திறக்க வர வேண்டியதுதானே!” பேச்சு கொடுத்தாள் பேகம்.

“கொஞ்சம் தலைவலி அதான் வரல பள்ளிக்கு போகணும் நேரமாகுது. நான் வரேன். பாஷித் எங்க?” ஜமீலாவிடம் கேள்வி கேட்டாலும் பார்வை முழுவதும் பானுவின் மீதே இருந்தது.

“மஹ்ரிப்புக்கு பள்ளிக்கு போனவங்க இன்னும் வரல இஷா தொழுது வருவங்கலாய்க்கும்” பேகம் முபாரக்கையும் சேர்த்தே சொன்னாள்.

இவன் பள்ளிக்கெல்லாம் போவானா? என்ற பார்வைதான் பானுவிடம். அப்பொழுதுதான் கவனித்தாள் அவனின் வித்தியாசமான உடையை. மஸ்ஜிதுக்கு செல்ல வெள்ளை லுங்கியும், வெள்ளை ஷர்ட்டும் அணிந்து தலையில் தொப்பியும் அணிந்திருந்தான். சதா ஜீன்ஸ் டி ஷர்ட்டில் அலைபவனை இந்த உடையில் பார்த்ததும் தன்னையறியாமல் புன்னகைத்தாள் பானு. 

“சரி நான் வரேன்” என்றவன் வெளியேற அவனை வலுக்கட்டாயமாக அமர செய்த பேகம் தானே சென்று குடிக்க பாலுதாவும், உண்பதுக்கு கட்லட்டும் கொண்டு வந்து கொடுத்தவள் குடிக்க இறைச்சி காஞ்சி கோப்பையொன்றையும் கொண்டு வந்து வைத்து விட்டு “கட்லட் பானு செய்தாள். சர்வத் பானு செய்தாள்” என்று முகம் கொள்ளா புன்னகையில் சொல்ல அவை இரண்டையும் மட்டும் ருசி பார்க்கலானான் ரஹ்மான்.

அன்னைக்கு உதவுவது போல் சமயலறைக்குள் நுழைந்து கொண்டவள் ரஹ்மான் சாப்பிடும் அழகை மறைந்து நின்று பார்த்து “நோம்பு திறக்க வரவுமில்லை. வீட்டுல மாமி ஒன்னும் செஞ்சி வைக்கல போய்தான் சமைக்கணும்னு சொன்னாங்க, அப்போ ஒன்னும் சாப்டாமதான் வந்தானா? சாப்பிடுற வேகத்தை பாத்தா தண்ணியும் ஈச்சபழத்தையும் மட்டும் சாப்பிட்டுட்டு வந்துட்டான் போல. வெயில்ல நின்னு என்ன சைட் அடிச்சு கிட்டு இருந்தா தலைவலி வராம இருக்குமா? அறிவு கெட்டவன். நோம்பு வச்சியும் பாக்குறத விடமாட்டேங்குறான்” அதிகாலையில் சாப்பிட்டு விட்டு நோம்பு வைத்தான் என்றதும் ரஹ்மான் மீது பரிதாபப்பட்டவள் அவள் விஷயத்தில் கரிசனம் காட்ட கொஞ்சமேனும் மனம் இழக்காமல் வசைபாடலானாள்.   

அனைவரிடமும் விடை பெற்று வெளியே வந்தவன் அக்பரோடு தீவீரமாக பேசிக்கொண்டிருப்பதை ஜன்னல் வழியாக கண்ட பானு தோளை குலுக்கி விட்டு தொழுவதற்காக அறைக்குள் நுழைந்தாள்.    

வெளியே ரஹ்மான் அக்பரிடம் பானு இனிமேல் பஸ்ஸில் காலேஜ் செல்ல வேண்டாம் என்றும். மழை, வெயில் என்று  பாராமல் அவள் வீட்டிலிருந்து நடந்து செல்கிறாள். சில நேரம் காலேஜ் பஸ் தவறினால் அரச பேரூந்தில் இறுகிக் கொண்டு செல்ல நேரிடுகிறது. அதனால் மாற்று ஏற்பாடாக ஒரு ஆட்டோவை பேசி இருப்பதாகவும். அது தன்னுடைய மாமி ஷம்ஷாத்தின் மகன் வந்து அழைத்து செல்வான் என்றும் கூற பூரித்து போனார் அக்பர்.

“தனியா ஒன்னும் போகல. அவ பிரெண்டு ஹிதாயா பஸ் ஸ்டாண்டுக்கு வருவா அங்க இருந்து ரெண்டு பேரும் போவாங்க”

ஷம்ஷாத்தின் மகன் என்றாலும் ஷஹீக்கு அந்நியன் அவள் தனியாக ஆட்டோவில் போய் வருவதை பார்த்து நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்று அக்பர் பயந்து விடுவாரோ என்று விளக்கமாகவே கூறினான் ரஹ்மான்.

ஆட்டோக்கு காசு கொடுக்கணும் என்று அக்பர் கேட்க “அதெல்லாம் ஒன்னும் வேணாம். வண்டி நான் வாங்கிக்கொடுத்ததுதான். எனக்கு ஒரு உதவியா இந்த சவாரியை மட்டும் போக சொல்லி இருக்கேன்” என்று கூற அக்பர் ரஹ்மானை வியந்து நோக்கினான்.

ஆனால் அக்பர் அதை பற்றி வீட்டி பெருமையாக கூற அன்று காலேஜில் நடந்த சம்பவத்தை மனதில் கொண்டுதான் ரஹ்மான் இந்த ஏற்பாட்டை செய்தான் என்று அவனை தவறாகவே கருதினாள் பானு.