அத்தியாயம் 11

அந்த ஊரில் மாலையானால் சிறுவர்கள் விளையாட்டு மைதானத்தில் கூடுவதும் மஹரிப்பிக்கு அதான் சொல்லும் வரை விளையாடுவதும் வளமையானதே! அதுவும் பாடசாலை விடுமுறை நாட்களில் காலையிலிருந்து மாலை வரை விளையாட்டு மைதானம் சிறுவர்களால் நிறைந்து இருக்கும்.

அன்றும் அப்படித்தான் காலையிலிருந்தே மைதானத்தில் கிரிக்கட் ஆடிக்கொண்டிருந்தனர் சிறுவர்கள். அதில் பன்னிரண்டு வயது ரஹ்மானும் பன்னிரண்டு வயது முபாரக்கும் அடங்கும். இருவரும் வெவ்வேறு பாடசாலைகளில் படிப்பதால் அவ்வளவு பழக்கமும் கிடையாது. மாலையில் மதரஸாவில் சந்தித்தாலும் வெவ்வேறு பிரிவில் இருந்ததால் நண்பர்களும் கிடையாது.

தந்தையின் செயலால் இறுகிப்போன முபாரக் யாராவது ஏதாவது சொன்னால் அவர்களை அடிக்கும் மனநிலையில் சாதா இருந்தான். ஆனால் ரஹ்மான் எப்பொழுதும் அக்மார்க் புன்னகையில் வளம் வருபவன். போதாததுக்கு பானுவை நினைத்தாலே! அவன் முகம் மலரும்.

அன்று அனைவரும் சேர்ந்து கிரிக்கட் விளையாட ரஹ்மான் பந்து வீச, முபாரக்தான் பேட்டிங் செய்துகொண்டிருந்தான். ஸ்டம்பில் பந்து லேசாக உரசிச் செல்ல, அவுட் என்று யாரோ கத்த, “இல்ல இல்ல” என்று முபாரக் கத்த, விக்கட் கீப்பர்   முபாரக்கின் தந்தையை பற்றி ஏதோ சொல்ல அது முபாரக்கின் காதில் விழ அந்த சமயம் பார்த்து ரஹ்மான் வேறு “பக்” என்று சிரித்து விட்டான்.

உண்மையில் முபாரக் குழந்தை போல் “இல்லை இல்லை” என்றதை கண்டுதான் ரஹ்மான் சிரித்தான். ஆனால் முபாரக் அது விக்கட் கீப்பராக இருந்தவன் சொன்னதை கேட்டு சிரிப்பதா நினைத்து பேட்டாளையே ரஹ்மானை தாக்க முனைய ரஹ்மானும் முபாரக்கை தாக்கினான். இருவரும் உருண்டு புரண்டு சண்டை போட்டு, சட்டையையும் கிழித்துக்கொண்டு புழுதியோடும், இரத்த காயங்களோடும் தான் வீடு சென்றனர்.

அன்றிலிருந்து ரஹ்மான் சிரிப்பதைக் கண்டால் தன்னைத்தான் கேலி செய்து சிரிப்பதா நினைப்பான் முபாரக். “சரியான சிடுமூஞ்சி கோமாளி மாதிரி இருக்கான் அவன் முகத்தை பாத்தாவே சிரிப்பு வருது” முபாரக்கை கண்டால் வேண்டுமென்றே சிரிப்பான் ரஹ்மான்.

இப்படியே யாரோ சொன்னதுக்காக, இருவரும் இன்றுவரை முட்டி, மோதிக்கொண்டு இருக்கின்றனர். முபாரக் பானுவின் அண்ணன் என்று ரஹ்மான் அறிந்திருந்தாலும் அந்த வயதில் பானுவின் மீது இருக்கும் ஈர்ப்பு காதலாக மாறும் என்று அறிந்திருந்தால் முபாரக்கோடு சுமூகமான உறவை ஏற்படுத்த முயற்சி செய்திருப்பானோ என்னவோ!

முபாரக் பானுவின் கையை பிடித்துக்கொண்டு பாதையில் நடப்பதை கண்டாலே பொறாமையில் வயிறெரிப்பவன், முபாரக் பானுவின் மீது செலுத்தும் அன்பு மற்றும் உரிமையை கண்டு கோபம் கொண்டு அவனை எதிரியாக கருதி கோபத்தை இவ்வாறு சிரித்தே வெறுப்பேத்தி இருக்க இன்று முபாரக் மனதில் ரஹ்மான் பற்றிய நல்லெண்ணம் சிறிதும் இல்லாமல் போய் இருந்தது.

கோபம் வந்தால் கண்மண் தெரியாமல் பொறுமையை இழந்து அடிதடியில் இறங்குபவன் ரஹ்மான். அதுவும் வம்பு சண்டைக்கு போக மாட்டான் வந்த சண்டையை விடவும் மாட்டான். அவன் அடங்கி பொறுமையாக பேசும் ஒரே ஜீவன் பானு ஒருத்தியே! வீட்டாருக்கு அவன் குணம் நன்கு தெரியும் என்பதாலையே அவனை கோபப்படும் விதமாக யாரும் பேசுவதில்லை.

ஆனால் முபாரக் தந்தை இருக்கும் வரை அன்பானவன். தந்தை சென்ற பின்தான் முரடனாக மாறி அடிதடி என்று இறங்கி அன்புத் தங்கையையே அடிக்கும் அளவுக்கு செல்கிறான்.

இந்த இரண்டு வருடங்களில் முபாரக் வாழ்க்கையில் நன்றாகவே விளையாடி இருந்தாள் ஹாஜரா. ரஹ்மானை பார்க்க சென்ற இரண்டு தடவையும் டீயில் பேதி மாத்திரையை கலந்து கொடுத்திருந்தாள். ஆனாலும் முபாரக்கு அது அவள் செய்த சதி என்று தெரியவில்லை.

எவ்வழியிலையோ முபாரக்கின் அலைபேசி என்னை கண்டு பிடித்தவள் அடிக்கடி அவனுக்கு மிஸ் கால் கொடுத்து டாச்சர் பண்ணலானாள். தப்பி தவறியாவது அவன் அலைபேசியை இயக்கி விட்டால் சென்டர் கால் போல் பேசி வெறுப்பேத்துவாள்.

அக்பரின் மளிகை கடைக்கு அலைபேசி தொடர்பை ஏற்படுத்தி மளிகை பொருட்களை பற்றி விலாவரியாக விளக்கம் கேட்டு கடைசியில் ஒன்றும் வேண்டாம் என்று சொல்வாள் அல்லது கடைக்கு வருவதாக சொல்லி வைப்பாள். பாவம் முபாரக் அவள் தினமும் பேசினாலும் அவள் குரல் கூட அவன் மனதில் பதிந்திருக்க வில்லை. பதிந்திருந்தால் அவள் விளையாடுவதை கண்டு பிடித்திருப்பானே!

“சரியான டியூப் லைட்” என்று திட்டியவளின் மனதில் விபரீதமாக விளையாடிப் பார்க்கும் எண்ணம் வந்தது அது அவனை காதலிக்க வைப்பது. இரண்டு நாள் அலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தாமல் அமைதியாக இருந்தவள் புது நம்பர் வாங்கி “ஹாய்” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். ஆனால் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

“வாட்டஸ்அப் மெஸேஜ் கூட பார்க்க மாட்டானா?” கோபமாக நினைத்தவள் தன்னுடைய ப்ரொபைல் போட்டோவில் மருதாணி கைகளால் முகத்தை மறைத்து கண்களை மட்டும் காட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணினின் புகைப்படத்தை வைத்தவள் தான் அவனுடைய மளிகைக்கடையின் வழியாகத்தான் செல்வதாகவும் அடிக்கடி அவனை கண்டிருப்பதாகவும் தனக்கு அவனை ரொம்ப பிடித்திருப்பதாகவும் மீண்டும் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தாள்.

யாரோ தன்னோடு விளையாடுவதாக நினைத்த முபாரக் “டேய் நீ யார்னு தெரியல, யாரோ நல்லா தெரிஞ்சவன்தான்  விளையாடி பாக்குற என் கைல மாட்டினா மவனே! செத்த நீ” என்று பதில் அனுப்பி விட்டு காத்திருந்தான்.

வானே வானே வானே

நானுன் மேகம் தானே

வானே வானே வானே

நானுன் மேகம் தானே

 என் அருகிலே

கண் அருகிலே

நீ வேண்டுமே

மண் அடியிலும்

உன் அருகிலே

நான் வேண்டுமே

 சொல்ல முடியாத காதலும்

சொல்லில் அடங்காத நேசமும்

என்ன முடியாதஆசையும்

உன்னிடத்தில் தோன்றுதே!

அதுக்கு அவள் அழகான வரிகளோடு ஒரு காதல் பாடலை பாடி அனுப்பி இருந்தாள்.

அவளது குரலின் இனிமையில் மனதில் இருந்த இறுக்கமெல்லாம் களைவது போல் உணர்ந்தான் முபாரக்.

அவளின் இனிமையான குரலில் ஈர்க்கப்பட்டவன் அவளுக்கு பதில் அனுப்ப அவளும் காலை மாலையென்று பாராது முபாரக்குக்கு குறுஞ்செய்தி அனுப்பலானாள்.

அவளின் பெயரை கூட கேட்க தோணாமல் “இந்த பாட்ட பாடுறீங்களா? அந்த பாட்ட பாடுறீங்களா” என்று ஹஜாராவை தொல்லை செய்ய ஆரம்பித்தான் முபாரக்

“ஏங்க நான் என்ன ரேடியோவா? இங்க என்ன நேயர் விருப்பம் ப்ரோக்ராமா நடக்குது?” கடுப்பானவள் கத்தி விட்டு அலைபேசியை தூக்கிப் போடுவாள்.

முபாரக்குக்கு பிடிச்ச கலர், நடிகர், விளையாட்டு, உணவு, பொழுதுபோக்கு என்று எல்லாவற்றையும் தோண்டி துருவி கேள்வி கேட்டே குடைந்தெடுத்து அவனை பேச வைத்திருந்தாள் ஹாஜரா.

அவளின் பிடிவாதம், அடாவடித்தனம், மிரட்டல், கோபம் எல்லாமே வித்தியாசமாக உணர வைக்க முதன் முதலாக முகமே அறியாத பெண்ணை ரசிக்கலானான் முபாரக்.

குறுஞ்செய்தியில் தொடங்கிய பழக்கம் ஆறு மாதம் கடந்த பின் தினமும் இரவில் அலைபேசியில் உரையாட ஆரம்பித்து ஒரு மாதமான பின்தான் ஹாஜரா கேட்டாள். 

“என் நம்பரை என்ன பேர்ல சேவ் பண்ணி வச்சி இருக்கீங்க”

“பாடும் குயில்” முபாரக்கும் பட்டென்று சொல்ல

“அப்போ என் பேர் தெரியல”

“நீங்க தான் சொல்லவே இல்லையே”

“நீதான் கேக்கவே இல்ல” மனதுக்குள் அவனை திட்டியவள் “கேட்ட உடன் ஊர் பேர், அட்ரஸ் எல்லாம் சொல்லிட்டுதான் மறுவேலை பார்ப்பேன்”

“என்னங்க சத்தத்தையே காணோம்?” மறுமுனையின் மௌனம் அவன் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது. அவளோ தன் மனதோடு பேசிக்கொண்டிருந்தாள்.

“ஹிஹிஹி இல்ல பாடும் குயில்னு பட்டம் குடுத்து இருக்கீங்களே! அப்படியே கூப்பிடா நல்லா இருக்கு” என்றவள் பெயரை கூறாது நழுவி விட்டாள். 

ஆறு மாதங்களாக அவர்களின் அலைபேசி உரையாடல்கள் தொடர்ந்தாலும் முதலில் அனுப்பியது போல் எந்த ஒரு குறுஞ்செய்தியையும் ஹாஜரா அனுப்பவும் இல்லை. முபாரக்கும் அவளை காதலிக்கும் எண்ணத்தில் பேசவில்லை. மனம் விட்டு பேச ஒரு தோழி கிடைத்த ஆறுதல் தான் அவனுள் இருந்தது. அவளிடம் பேசினால் நிம்மதியாக உணரலானான். அவள் குரலில் அவனுக்கு பிடித்தமான பாடலை கேட்டால் போதும் அவன் கவலைகள் கரைந்தோடும்.

இவ்வாறு சென்று கொண்டிருந்த இவர்களின் அலைபேசி உரையாடல் இருவீட்டாரும் அறிந்திருக்கவுமில்லை.

முபாரக்கை ஒரு வழி பண்ண வேண்டும் என்று திட்டம் தீட்டி அன்னையிடம் போராடி ரஹ்மானிடம் பேசி இங்கு உள்ள காலேஜில் சேர்ந்து அங்கேயே தங்கி படிக்கலானாள் ஹாஜரா. அதனால் தான் முபாரக் வந்தால் அவனை பழிவாங்கவென பேதி மாத்திரைகளையும் கையேடு வைத்திருந்தவள் இரண்டு தடவையும் தனது திட்டத்தில் வெற்றியும் பெற்றாள்.

ஆனால் அடிக்கடி அவன் அங்கு வருவதில்லை என்று புரிந்து கொண்டவள் அலைபேசி வழியாக தொல்லை செய்ய ஆரம்பித்து இன்பம் கண்டாள்.

ஹாஜராவுக்கு முபாரக்கை பார்த்தவுடன் பிடித்திருந்தது. அந்த வயதில் அது காதல் என்றெல்லாம் எண்ண தோன்றவுமில்லை. அன்றே அவன் காதலித்து ஏமாற்றுவேன் என்றது மனதை ரணப்படுத்தி இருக்க அவனை பழிவாங்க கிளம்பி இருந்தாள்.

அலைபேசி வழியாக அவனிடம் பேச ஆரம்பித்த பின் கொஞ்சம் கொஞ்சமாக அவனை புரிந்து கொண்டவள் அவனோடு தோழி போல் நன்றாக பழக, தந்தையை பற்றியும், அந்த சம்பவத்தால் தான் இழந்தவைகளையும்,  அவனின்  மனவேதனையையும் மனம் விட்டு பகிர்ந்துகொண்டான். அவனின் மனதிலுள்ள ரணத்தை உணர்ந்து கொண்டவள் தான் செய்து கொண்டிருக்கும் காரியம் மிகத் தவறானது என்று புரிந்து கொண்டு அன்றிலிருந்து அவனோடு பேசுவதை நிறுத்தி விட்டாள்.

ஹாஜராவிடமிருந்து வரும் அலைபேசி அழைப்புகள் திடீரென்று காணாமல் போக குழம்பிப்போனான் முபாரக். அவள் யார்? எங்கு இருக்கிறாள்? பெயர் கூட தெரியவில்லை. யாரிடம் போய் கேட்பது. அழைத்து அழைத்து பார்த்து அந்த எண் தொடர்பில் இல்லை என்று வரவும் நிம்மதி இழந்தான்.

நாளாக நாளாக அவளிடம் பேசியே ஆகா வேண்டும் என்ற எண்ணம் துளிர் விட்டு வேரூண்டி போய் இருக்க, அதற்கான வழிதான் தெரியவில்லை. அவளுடன் பேச ஆரம்பித்த பின் வீட்டில் இன்முகமாக நடந்து கொண்டவன் மீண்டும் பழைய படி எதற்கெடுத்தாலும் கோபப்படலானான். எல்லாவற்றுக்கும் எறிந்து விழலானான்.

யாரென்றே தெரியாத ஒரு பெண்ணுக்காக எதற்காக மனதில் இவ்வளவு  ஏக்கம் என்று தன்னை தானே கேட்டுக் கொண்டவனுக்கு மனம் சொன்ன பதில் அவன் அவளை விரும்ப ஆரம்பித்து ரொம்ப நாளாகிறது என்பதே!

“காதலா? அதுவும் முகம் தெரியாத பெண்ணின் மீதா? பெயர் தெரியாது. வயது தெரியாது. எங்கே இருக்கிறாள் என்பதும் தெரியாது. அவளுக்கு கல்யாணம் கூட ஆகி இருக்கும்” மனதோடு சண்டை போடலானான் முபாரக்.

“கல்யாணம் ஆகி இருந்தா புருஷன் கூட பேசாம உன் கூட எதுக்கு பேசுறா? ஆகி இருக்காது” தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் அவளை எவ்வாறு தேடுவதென்று யோசனையில் விழுந்தான்.

கடைக்கு வந்து செல்லும் எல்லா பெண்களையும் வயது வித்தியாசமில்லாமல் பார்க்கலானான். வெளியே ஒரு பெண் சென்றாலும் நின்று கவனிக்கலானான். அதை கண்ட வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் அக்பரிடம் முபாரக்குக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்குமாறு சொல்லிச் செல்ல அக்பர் அவனை முறைக்க, தனது ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கின ஹாஜராவின் மேல் கோபத்தின் உச்சிக்கே சென்றான் முபாரக்.

அந்த நேரத்தில்தான் ஷஹீரா ரஹ்மானை சந்தித்து பேசினாள் என்ற செய்தியும் வந்தது. மனதில் ரணத்தை சுமந்துகொண்டு வீடு வந்தவன் தங்கையை விளாசி விட்டு தான் அதை போக்கிக் கொண்டான்.

பானு திருமணம் செய்து கொள்வோமா? என்று கேட்பாள் என்று நினைத்தும் பார்க்காத ரஹ்மான் அந்த நேரத்தில் மனம் குத்தாட்டம் போட்டாலும் மீண்டும் யோசித்துப் பார்க்க அவனால் சந்தோசப்பட முடியவில்லை.

அன்றும் குடும்பத்துக்காகத்தான் திருமணத்துக்கு சம்மதித்தாள் இன்றும் தனது அன்னைக்காகத்தான் பேசி விட்டு சென்றாள். தினமும் அவளை சைட்டடித்தும் சிறிதளவேனும் அவள் மனதில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா?

பாடசாலை செல்லும் பொழுது நான் பாக்குறதே அவளுக்கு தெரியாது. காலேஜ் போகும் போது முறைத்து விட்டு சென்றவள் பின் கோபமாக பார்த்து விட்டு செல்லலானாள். டெங்கு வந்து படுத்து குணமான பின் கண்களாளேயே நலம் விசாரிக்கவும் கொஞ்சம் மனம் இறங்கி விட்டாள் என்றெல்லவா எண்ணி இருந்தேன்.

ஆனால் நீ வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? நீ பார்த்தால் என்ன? பார்க்கா விட்டால் என்ன? என்பது போல் இருக்க அவளால் மட்டும் தான் முடியும். இப்படி ஒரு வதந்தி ஊர் பூரா பரவவில்லையானால் இப்படி வந்து பேசி இருக்கவே மாட்டாள்.

எல்லாம் நடப்பது நன்மைக்கே! வீட்டில் போய் பேசி வீட்டாரை சம்மதிக்க வைக்க வேண்டும். தந்தையை பற்றி கவலையில்லை அவர் இது போன்ற விஷயங்களை கருத்தில் கொள்ள மாட்டார். அன்னைதான் எல்லாவற்றையும் மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறார். இதில் அக்கா வேறு “ஒரு வேளை அப்படியும் இருக்குமோ!” என்று கேள்விக்குறியிலையே நிக்கிறாள் இவர்களை சமாளிக்க பாஷித்தால் மட்டும்தான் முடியும் முதலில் அவனிடம் பேச வேண்டும் என்ற முடிவோடு வீடு சென்று சேர்ந்தவனுக்குத்தான் முபாரக் பானுவை அடித்த செய்தி கிடைத்தது பதறியடித்துக் கொண்டு பானுவின் வீட்டை வந்தடைந்தான் ரஹ்மான்.

வாசல் கதவு திறந்து தான் இருந்தது. ஆனால் வாசலில் யாருமில்லை. வீடும் அமைதியாக இருக்கவே உள்ளே செல்லலாமா? வேண்டாமா என்ற எண்ணம் தோன்ற அழைப்புமணி இருந்தும் அதை அடிக்காமல் முபாரக்கின் பெயரை கூறி அழைத்தான் ரஹ்மான்.

வந்திருப்பது தான் தான் என்று பானு அறிய வேண்டும் என்றுதான் முபாரக்கின் பெயர் கூறி அழைத்தான் ரஹ்மான். அது அவள் காதுகளில் நன்றாகத்தான் விழுந்தது. அங்கங்கே கன்றி சிவந்து வீங்கிய காயங்களும், நெற்றியின் இரத்த கசிவும், பார்க்கவே யாரோ போல் இருக்க, அவன் முன் செல்ல ஏனோ பிடிக்கவில்லை. அந்த தோற்றத்தில் அவன் தன்னை பார்த்தால் கலங்குவானோ? பதறுவானோ? அல்லது முகத்தை சுளிப்பானோ? மனதில் பலவிதமான எண்ணங்கள் எழ,  அறையை விட்டு வெளியே வர அவள் மனம் முரண்டியது.

கலைந்த கூந்தலை கொண்டையிட்டு தலையை மறைத்தவாறு வெளியே வந்த பேகம் அவனை வரவேற்று அமரும் படி சொல்ல அமராமல் பிடிவாதமாக முபாரக் எங்கே என்று விசாரித்தான் ரஹ்மான்.

ஷஹீராவை அடித்தது கேள்விப்பட்டு முபாரக்கோடு சண்டை போடுவதற்காத்தான் வந்திருப்பான் என்ற எண்ணம் பேகம் மனதில் தோன்றினாலும் அவனின் அமைதியான முகமும், நிதானமான பேச்சும் நிம்மதியளிக்க அறையில் இருப்பதாக கூறியவள் அவனை அழைத்துவர செல்ல உள்ளே நுழைய வேண்டாம் என்றவன் தானே முபாரக்கின் அறையை நோக்கி நடந்தான்.

பேகத்தின் உள்ளம் பதை பதைக்க ஷஹீராவின் அறைக்குள் நுழைந்தவள் ரஹ்மான் வந்திருப்பதை கூறி முபாரக்கின் அறையில் நுழைந்ததையும் கூறியவள் சண்டையிட்டு கொள்வார்களோ என்று அச்சம் கொள்ள அன்னையை ஆறுதல் படுத்திய ஷஹீ நாநாவின் அறைக்கு செல்லலாமா? வேண்டாமா? என்ற சிந்தனையில் விழுந்தாள்.

ஆனால் உள்ளே சென்றவனின் ஓங்கி ஒலித்த குரலோ! உள்ளே இறந்தவனின் குரலோ! சத்தமாக வெளியே கேட்காததால் ஷஹீ அன்னையின் கையை பிடித்துக்கொண்டு அமைதியாக அமர்ந்து விட்டாள். 

உள்ளே சென்ற ரஹ்மானுக்கு காணக் கிடைத்தது கட்டிலில் படுத்துக்கொண்டு கையால் முகத்தை மறைத்துக் கொண்டிருக்கும் முபாரக்கைதான். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் பானுவை அடித்த முபாரக்கின் முகத்தில் கோபமும், ஆணவமும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. ஆனால் இன்றோ சோகமும் அளவில்லா வேதனையும் தான் குடியிருந்தது.

முபாரக்கையே கைகளை கட்டிக்கொண்டு பாத்திருந்த ரஹ்மான் “தங்கச்சி மேல இவ்வளவு பாசம் இருந்தா எதுக்கு அடிக்கிற? அடிச்சுட்டு ரூமுக்குள்ள வந்து முகத்தை மூடிக்கொண்டு அடிச்சது நினைச்சி அழுறியா?”

“நான் ஒன்னும் அழல” ரஹ்மானை அங்கே எதிர்பார்க்காதவன் அதிர்ச்சியடைந்து எழுந்து நின்றவாறே கண்களின் ஓரம் வழிந்த கண்ணீர் துளியை துடைத்தவாறே சொல்லலானான்.

பன்னிரண்டு வயதில் பார்த்த அதே குழந்தை முகம் இன்னும் மாறாமல் இருக்க ரஹ்மான் சிரித்து விட அவனை முறைத்தான் முபாரக்.

“அன்னைக்கும் இப்படித்தான் சின்ன புள்ள மாதிரி இல்ல இல்லனு தலையாட்டிகிட்டு சொன்ன. இன்னைக்கும் அப்படியே இருக்க உன் கோபம் மட்டும் இல்லனா நீ ரொம்ப நல்லவன்தான்” ரஹ்மான் ஆர்த்மார்த்தமாக சொல்ல

என்று என்று கேட்டவனுக்கு தங்களுடைய சண்டையை ஞாபகப்படுத்த “அப்போ அன்னைக்கி தில்ஷாத் சொன்னதுக்கு நீ சிரிக்கலயா?” யோசனையாக கேட்டான் முபாரக்.

“அவன் என்ன சொன்னான்? ஓஹ்.. அவன் வேற உன்ன கலாய்ச்சானா? இது வேறயா? இது தெரியாம இத்துணை வருசமா முறைச்சிகிட்டு திரிஞ்சிருக்கேன்” புன்னகையோடு ரஹ்மான் சொல்ல முபாரக் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

எத்தனை வருடங்களாக அர்த்தமற்ற சண்டை. சண்டைக்கு காரணமானவனோ வெளிநாட்டில் குடியேறி விட்டான். நினைக்கும் போதே வேடிக்கையாக இருக்க “சரி இப்போ எதுக்கு இங்க வந்திருக்க?” ஷஹீயை அடித்ததை கேள்விப்பட்டு சட்டையை பிடிக்கத்தான் வந்திருப்பான் என்று அறிந்தேதான் கேட்டான் முபாரக்.

ஆனால் ரஹ்மானோ ஊரில் பரவிய வதந்தியால் இரு வீட்டில் நடக்கும் பிரச்சினைகளையும், பானு தன்னை இன்று சந்தித்து இதற்க்கு ஒரே தீர்வு கல்யாணம் தான் என்று கூறியதாகவும் கூற என்ன வதந்தி பரவியது என்று ரஹ்மானையே கேட்டான் முபாரக்.

“ஆமா நீ இந்த வீட்டுலதானே இருக்க, வீட்டுல நடக்குறது எதுவும் தெரியாதா? இல்ல கவனிக்க மாட்டியா?” கிண்டலாகத்தான் ரஹ்மான் கேட்டான் ஆனால் முபாரக் தான் எந்த உலகத்தில் இருந்தோம் என்று புரிய நொந்து விட்டான்.

“சரி வா…” என்றவன் வாசலுக்கு சென்று அமர்ந்து கொள்ள முபாரக்கும் பின்னால் வந்து அமர்ந்து கொண்டான். பேகமும் வர அறையில் அமர்ந்திருந்த பானுவோ இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஏற்கனவே பேசி முடிவெடுத்ததுதான். இருந்தாலும் தொடர்ந்து நடந்த அசம்பாவிதங்களால் இப்படியொரு வதந்தி பிரச்சினை வரும்னு நினைக்கல. சீக்கிரம் கல்யாணம் நடந்தா எல்லா பிரச்சினையும் நல்ல படியா தீரும்னும் தோணுது. நான் வீட்டுல பேசுறேன். ஆக வேண்டிய எல்லா வேலைகளையும் ஒண்ணாவே பார்க்கலாம்” என்றவன் பேகத்திடம் குடிக்க தண்ணீர் கேட்க அவளும் எடுத்துவர சமயலறைக்குள் சென்றாள்.

அவள் உள்ளே செல்லும் வரை காத்திருந்தவன் “நான் என் பானுவை பார்க்கணும்?” முபாரக்கின் முகத்தை நேராகவே பார்த்துக் கேட்டான் ரஹ்மான்.

பேகத்திடம் கேட்டிருந்தால் மறுக்காமல் அனுமதி அளித்திருப்பாள். ஆனால் ரஹ்மானுக்கு முபாரக்கின் சம்மதமும் தேவை அத்தோடு பானுவின் மீது கை வைப்பது இதுதான் கடைசித் தடவையாக இருக்க வேண்டும். இதுதான் நான் உன்னிடம் அனுமதி கேட்கும் கடைசித் தடவையும் கூட என்று சொல்ல வேண்டும் அதற்காகத்தான் அனுமதியை அவனிடம் வேண்டி நின்றான் ரஹ்மான்.

முபாரக்குக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. கல்யாணத்துக்கு முன் தனியாக சந்தித்து பேச அனுமதி கொடுக்க அவன் மனம் இடமளிக்கவில்லை. காரணமில்லாத சண்டை என்று புரிந்ததால் கல்யாணமும் பழிவாங்கவல்ல என்று புரிந்தது. போதாததற்கு புதிதாய் முளைத்த காதல் வேறு ரஹ்மானின் மனநிலையை நன்கு உணர்த்தி இருக்க

“வேற டென்ஷன்ல ஷஹீய போட்டு அடிச்சிட்டேன். நீ போய் பேசினா சமாதானமாவா” என்றவன் அனுமதி கொடுத்ததோடு கண்களாளேயே மன்னிப்பும் வேண்டி நிற்க இந்த முபாரக் ரஹ்மானுக்கு புதிது என்றாலும் பானுவின் மீது கை வைத்தவனை சும்மா விட முடியுமா?

“அவ கிட்ட பேசத்தானே போறேன் அவ மட்டும் “ஹ்ம்”னு சொல்லட்டும் மாறுகால், மாறுகை இருக்காது. அவளுக்காகத்தான் இவ்வளவு நேரமா பொறுமையாக இருதேன்” மிரட்டியவாறே பானுவின் அறையில் நுழைந்திருந்தான் ரகுமான்.

தான் நினைத்ததை போல் இல்லாது உண்மையிலயே ஷஹீயின் மீது விருப்பப்பட்டுதான் திருமணம் செய்துகொள்ள போகிறான் என்று தங்கையை அடித்ததற்காக தன்னையே மிரட்டி விட்டு செல்லும் ரஹ்மானை புன்னகைத்தவாறே பாத்திருந்தான் முபாரக்.

வாசலில் நடந்த சம்பாஷணையை முழுவதுமாக கேட்டுக்கொண்டிருந்த ஷஹீராவோ! ரஹ்மான் அறைக்குள் நுழையவும் சட்டென்று சென்று ஜன்னல் புறம் திரும்பி அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள். 

சுவரில் மோதியதில் நெற்றி புடைத்து வெடித்து சிவந்திருக்க வலியாளையும் அழுததினாளையும் முகமும் கொஞ்சம் வீங்கி இருந்தது. ரஹ்மான் முபாரக்கை மிரட்டி விட்டு வரவும் தான் சட்டென்று எழுந்தவள் முகத்தை மறைத்து நிற்கலானாள்.

உள்ளே வந்த ரஹ்மான் பானு முதுகு காட்டி நிற்பதைக்கண்டு “பானு” என மெதுவாக அழைக்க “ம்” என்ற சத்தத்தை தவிர அவளிடமிருந்து வேறு சத்தம் வரவில்லை.

உண்மையில் முக வீக்கத்தால் அவளால் பேச கூட முடியவில்லை. கன்னங்கள் வலிப்பதோடு எறியவும் செய்ய அவன் பேசியது கேட்டது எனும் விதமாகத்தான் “ம்” என்றாள். 

ரஹ்மான் அதை வெக்கம் என்று எடுத்துக்கொளவதா? வேறு வழியில்லாது நிற்கின்றாளா? ஒன்றும் புரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவள் பேசட்டும் என்றிருக்க பானு முயற்சி செய்து அமரும் படி கூற அவளின் குரல் ஒரு மாதிரி இருக்கவே ஏதோ சரியில்லை என்று நொடியில் தோன்ற யோசிக்காமல் அவளின் தோளில் கைவைத்தவன் பானுவை தன் புறம் திருப்பி இருந்தான்.

முபாரக் பெல்டால் விளாசியத்தில் தோள்பட்டையிலும் அடி பலமாக விழுந்திருக்க, ரஹ்மான் பிடித்து திருப்பியதில் வலியால் கதறி விட்டாள்.

கத்த கூட முடியாமல் அவள் துடித்த துடிப்பில் சர்வமும் நடுங்க கையை விலக்கிக் கொண்ட ரஹ்மான் பானுவின் முகத்தைக் கண்டு மேலும் அதிர்ந்தவன் “அவன…” என்றவாறு முபாரக்கை தேடிச்செல்ல ரஹ்மானின் கையை பிடித்த பானு தலையசைத்து வேண்டாம் என்று தடுத்தாள்.

மனதுக்குள் இதம் பரவ, அவன் முகம் கண்டவனின் கண்கள் கணிந்தன. நெற்றிக் காயத்தை ஆராய பேகம் ஏதோ மருந்திட்டிருந்தாள் போலும் அதுவும் சிவப்பு நிறத்தில் இருக்க மேலும் சிவந்திருந்தவளை மெதுவாக கட்டிலில் அமர்த்தியவாறே

“ரொம்ப அடிச்சானா?” வினவ தன் கையை மெதுவாக விலக்கிக் கொண்ட ஷஹீ.

தலையை குனிந்தவாறே “இல்ல” எனும் விதமாக தலையசைத்தாள் பானு.

அவள் தலை குனிந்திருந்த விதமே அவள் பொய் சொல்கிறாள் என்று புரிய முபாரக்கின் மேல் வெறியே வந்தது. 

அவளுக்கு இப்பொழுது தேவை ஓய்வு அதை புரிந்து கொண்டவன் வலிநிவாரணி போட்டாயா என்று விசாரிக்க அதற்கும் ஆமாம் எனும் விதமாக தலையசைத்தாள்.

“சரி நீ ரெஸ்ட் எடு. நான் வீட்டுக்கு போய் பேசிட்டு போன் பண்ணுறேன்” என்றவன் விடை பெற்று சென்றான்.

ரஹ்மான் கிளம்பும் பொழுது முபாரக் வீட்டிலையே இல்லை. அதனால் எந்த பிரச்சினையோ வாய் சண்டையோ! நிகழவில்லை.