அத்தியாயம் 1

“எங்க உம்மா அவ?” வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செருப்பை கழட்டி வீசியவாறு வீட்டினுள் நுழைந்த முபாரக் அன்னையிடம் தங்கையை பற்றி விசாரிக்க,

“இப்போ தான்பா… வந்தா… என்னப்பா விஷயம்? இவ்வளவு கோபமாக இருக்க?” அன்னை பேகம் பதட்டமடைந்தாள்.

அன்னை கேட்டும் பதில் சொல்லாமல் தங்கையை தேடிச்சென்று பின் கட்டு பக்கமாக முகம் கழுவி விட்டு வந்த ஷஹீராவை பெல்ட்டை உருவி தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தான் முபாரக்.

“டேய் என்னடா பண்ணுற? விடுடா அவள…” அன்னை கத்துவது அவன் காதில் விழவே இல்லை.

அண்ணன் எதற்காக அடிக்கிறான் என முதலில் திகைத்த ஷஹீரா பின் புரிந்துக் கொண்டவளாக பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

“பாருங்க எப்படி நிக்குறானு பாருங்க… செய்யிறதையும் செஞ்சிட்டு மண்ணு மாதிரி நிக்குறத… இவள இப்படியே விட்டா குடும்ப மானத்தையே சந்தி சிரிக்க வச்சிடுவா… செத்து தொலைடி…” என்றவன் ஷஹீராவின் கழுத்தை பிடித்து சுவறில் மோத, தலை பலமாக மோதியதில் நெற்றி வெடித்து நெற்றியிலிருந்து இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.

முபாரக்குடன் போராடிய பேகம் கத்த, மாடியில் குடியிருக்கும் ஷஹீராவின் தாய்மாமனின் மனைவி மஸீஹா, மகன் ஹஸன் மற்றும் மகள் ருகையா ஓடிவர, விஷயம் மாமா அக்பருக்கு போக, ஊர் பூரா விஷயம் பரவ அவன் காதிலும் ஷஹீராவை அடித்த செய்தி விழ, பதறியடித்துக் கொண்டு ஷஹீராவின் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.

எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமே அவன்தான். அவன் ரஹ்மான். அப்துல் ரஹ்மான்.

ரஹ்மான் அடுத்த தெருவில் குடியிருப்பவன். கறிக்கடை வைத்திருக்கும் நவ்பர் பாயின் மகன். ஜீன்ஸும், குர்த்தாவும், தாடியும், கண்ணுக்கு சுர்மாவும், கழுத்தில் கர்ச்சீப்பும், தலையில் ஒரு தொப்பியும் ஷஹீராவின் கண்களுக்கு பார்க்க ரவுடி போல் தோற்றமளிப்பவன். பாண், பராக் கஞ்சா மட்டும் தான் போடவில்லை. அவன் போடாவிட்டால் என்ன போடுவதாக முபாரக் சொல்ல ஷஹீரா நம்பி விட்டாள். அவள் மனதில் அவனை பற்றி ஒரு விம்பம், கெட்டவன் என்ற விம்பம் உருப்பெற்றிருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன் அவன் தோற்றமே! வேறு காலேஜ் மாணவனாக கலக்கிக் கொண்டிருந்தான்.  எஞ்சினியரிங் முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறான். அதுவரைக்கும் சும்மா இருக்காமல் தந்தையோடு கறிக்கடையில் அவருக்கு உதவியாகவும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றான். அது போக ஆட்டோ ஓட்டுவது, மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்ப்பது என்று எல்லா விதமான வேலைகளையும் பார்ப்பவன்.

அவனுக்கு வேலை கிடைக்க வில்லையென்று அவன் சொல்வதும் வீட்டார் நம்புவதும் வாடிக்கையானது. வேலை கிடைத்தாலும் வெளியூரில் ட்ரைனிங், ஒரு வருடம் வேலை பார்க்க வேண்டும் என்றால் செல்வானா? அவனின் உயிரிலும் மேலான பானுவை விட்டு செல்வானா? எப்படி செல்வான்?

கூடப்பிறந்தவர்கள் ஒரு தம்பி, ஒரு அக்கா. அக்காவை திருமணம் செய்து கொடுத்து விட்டாயிற்று, தம்பி காலேஜ் செல்பவன். அன்னை குடும்பத்தலைவி. இதுதான் அவன் குடும்பம். அவன் ஒரே பலவீனம் பானு. ஷஹீரா பானு.

நேற்று, இன்று முளைத்த காதலல்ல அது. சின்ன வயதில் கூட விளையாடம் பொழுதே அவனுக்கு பானுவை பிடிக்கும். பானுவை மட்டும்தான் பிடிக்கும்.

கொலு கொலு கன்னங்கள், பெரிய கண்கள், சிவந்த ரோஜா இதழ்கள், ஐந்து வயதில்லையே இரட்டை ஜடையில், கையில் மருதாணியிட்டு தலையில் முக்காடு போட்டு அவனை பார்த்து அழகாக சிரித்து ஈத் முபாரக் சொன்னது அந்த குட்டி பொம்மை. 

அன்று மனதில் பதிந்தவள் தான். வயது வந்த பின் ஷஹீரா வீட்டோடு இருந்து விட அவனின் பிடித்தம் காதலாக மாற ஆரம்பித்ததை உணர்ந்தான் ரஹ்மான்.

பதின் வயதில் மனதில் ஆசைகளை சுமந்த வண்ணம் ஷஹீராவின் வீட்டின் முன்னால் சைக்கிளில் வட்டமிடுபவன் அவளை ஒரு தடவையாவது பார்த்து விட்டுத்தான் வீடு செல்வான். அந்த வயதில் அவன் அறிந்த காதல் அதுதான். அதை அவளிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு இல்லை.

அவள் பாடசாலை செல்லும் போதும், வரும் பொழுதும் பின் தொடர்பவன் என்றுமே அவளை நெருங்கவோ! பேசவோ! முயற்சி செய்யவுமில்லை. 

சிறு வயதில் அன்னையோடும், தாய் மாமனோடும், பாடசாலை சென்றவள், அண்ணனோடு செல்லலும் பொழுதோ! அண்ணன் பாடசாலை வாழ்க்கையை முடித்த பின் தோழியோடு செல்ல ஆரம்பித்த பின் ஒரு ஜீவன் தன் பின்னால் வருவது அவள் அறியாமலையே போனாள்.

தனி உலகில் றெக்கைக்கட்டி பறந்துக்கொண்டிருந்தவன் காலேஜ் சென்ற பின் ஜோடி ஜோடியாக சுற்றுவதைக் கண்டு அவள் சிறு பெண் என மூன்று வருடங்கள் பொறுமை காத்தவன் ப்ளஸ் டூ படிக்கும் ஷஹீராவிடம் தன் காதலை சொல்லவென கிளம்பினான்.

கண் இரண்டில் மோதி

நான் விழுந்தேனே

காரணம் இன்றியே

நான் சிரித்தேனே

என் மனமும் ஏனோ

என்னிடம் இல்லை

வேண்டியே உன்னிடம்

நான் தொலைத்தேனே

என் உயிரின் உயிரே

என் இரவின் நிலவே

உன் அருகில் வரவே

நீ தருவாய் வரமே

ஊருக்குள்ளே கோடி பொண்ணு

யாரையும் நினைக்கலையே

உந்தன் முகம் பார்த்த பின்னே

எதுவும் பிடிக்கலியே

அந்த “லவ்வர்ஸ்” என்ற பெயர் பலகை தாங்கிய கடையின் கதவை அஷ்ரப் திறக்க உள்ளே இருந்து திறந்தான் ரஹ்மான்.

வெளியே இருந்து உள்ளே நுழைந்த அஷ்ரப் “என்னடா மச்சான் இங்கயெல்லாம் வந்திருக்க யாரை லவ் பண்ணுற?” அஷ்ரப் ரஹ்மானின் பாலிய சிநேகிதன்.

“போயும் போயும் இவன் கண்ணுலயா படனும்” மனசுக்குள் திட்டியவன் “அக்காக்கு பர்த்டே வருது கார்ட் வாங்க வந்தேன்”

பெரிய சிவப்பு ரோஜா மலர்களோடு ஐ லவ் யு என்றிருந்த அட்டை கண்ணை கவர “எப்படி ஐ லவ் யு அக்கானா?” எங்க காட்டு பாப்போம்” என்றவன் பறித்தெடுத்து பார்க்க நல்ல வேலை அதில் எந்த பெயரையும் ரஹ்மான் எழுதி இருக்கவில்லை.

“நீ எல்லாம் ஒரு நண்பனா டா. துரோகி… காலம் காலமா பிரெண்டோட லவ்வுக்கு நண்பன்தானேடா ஹெல்ப் பண்ணுவான். நான் பண்ணுறேன் டா ஹெல்ப்” அஷ்ரப் வாயை விட

“சரி வா போலாம்” என்றவன் அவனை அழைத்துக் கொண்டு நேராக சென்றது ஷஹீரா படிக்கும் பாடசாலைக்கு.

“டேய் ஸ்கூல் பொண்ணையா லவ் பண்ணுற? கருமம், கருமம்”

“ப்ளஸ் டூ. அடுத்த வருஷம் காலேஜ் போவா..”

“ம்ம்.. பொண்ணு யாரு? பேரென்ன?”

“பானு. ஷஹீரா பானு”

“யாரு? முபாரக் தங்கச்சியா?. மச்சான் நான் இந்த ஆட்டத்துக்கு வரல. சொன்னா கேளு அவன் உனக்கு செட் ஆகா மாட்டான் விட்டுடு”

அந்த ஏரியாவின் பி.பி.சி. என பெயர் எடுத்தவன் அஷ்ரப் யார் யாரை லவ் பண்ணுறாங்க, யார் சிங்கிள். யார் யாருக்கு ரூட்டு விடுறாங்க எல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பவன். அதிகமான காதலர்களை சேர்த்து வைத்த பெருமை அவனையே சேரும்.  காதலை சேர்த்து வைப்பது மாத்திரமன்றி தற்பெருமை பாட ஊர் பூரா செய்தியும் பரவி விடும் என்பதால் அவனை கண்டதும் ரஹ்மான் மிரண்டன்.

“நான் என்ன அவனையா லவ் பண்ணுறேன்? அவன் தங்கச்சியாத்தானே லவ் பண்ணுறேன். நீ பொத்திகிட்டு இரு”

“ஏன் டா… பிரெண்டு தங்கச்சிகளெல்லாம் தங்கச்சின்னு சொல்லுறீங்க, எனிமி தங்கச்சிகளா பாத்து லவ் பண்ணுறீங்க? சத்திய சோதனை. உனக்கும் அவனுக்கும் சின்ன வயசுல இருந்தே ஆகாதில்லல? பழிவாங்க அவன் தங்கச்சிய தூக்க பாக்குறியா?” அஸ்ரப் யோசனையாக கேட்க

காரி உமிழ்வதை போல் பாவனை செய்தவன் “என்ன என்ன பொட்டானு  நினைச்சியா? அவன் மேல இருக்குற கோபத்தை பொம்பள புள்ள மேல காட்ட? லவ் டா மாச்சான் லவ். அவளை சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணுறேன்” சொல்லும் போதே மனதில் தோன்றிய பரவசம் முகத்தில் ஜொலித்தது.

ஒரு கணம் நண்பனின் வாயை மறந்து காதல் மயக்கத்தில் ரஹ்மான் உளறிவிட

ரஹ்மானின் முகத்தை பார்த்திருந்தவன் “என்ன இளவெடுத்த லவ்வோ! பிரச்சினை வராத இடத்துல வந்து தொலைக்க மாட்டேங்குது. எனக்கும் என் மாமா பொண்ணு மேல லவ் அந்த ஆளு என்னடானா முதல்ல ஒழுங்கா ஒரு வேலைக்கு போ அப்பொறம் லவ் பண்ணுனு டாச்சர் பண்ணுறாரு”

“விடு மச்சான் வேல கிடைச்சா எல்லாம் சரியாகிடும்”

இவர்கள் பேசிக்கொண்டிருக்க ஷஹீரா பாடசாலை விட்டு வெளியே வந்து தோழி ஹிதாயாவோடு இவர்களை கடந்து செல்ல

“வண்டிய எடுடா…” என்ற ரஹ்மான் அவர்களை பின் தொடர்ந்தான்.

மூன்று தெரு தள்ளித்தான் பாடசாலை இருந்தது. சீருடையில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல தன்னவளை பின் தொடர்வதும் பெரிய சோதனையாகவே இருக்க இதில் தனியாக எப்படி பேசுவது?

ஷஹீராவின் வீட்டுக்கு செல்லும் பாதையின் வளைவில் தோழிகள் இருவரும் விடை பெற்று பிரிந்து செல்ல அங்கையே அவளை மடக்கி பிடித்தான் ரஹ்மான்.

“ஹாய். அஸ்ஸலாமு அலைக்கும்” வண்டியில் இறங்கியவாறு சொல்ல

சின்ன வயதில் ஒன்றாக விளையாடியது அவள் ஞாபகத்தில் இல்லை. அவனை பல தடவை கண்டிருக்கிறாள் இன்னாரின் மகன் என்றும் அண்ணனுக்கும் அவனுக்கும் ஆகாது என்பதுவரை தெரியும். இவன் எதற்காக தன்னிடம் பேச முற்படுகிறான் என்ற பதட்டம் ஷஹீராவை தொற்றிக்கொண்டது.

“ஏம்மா ஷஹீரா… ஸலாம் சொன்னா பதில் சொல்லனும் அது கூட தெரியாதா?”

“ஒரு அந்நிய ஆண் ஒரு அந்நிய பெண்ணுக்கு ஸலாம் சொன்னால் பதில் சொல்வது கட்டாயமில்லை” அதையும் மனதில் நினைத்தவள் கேட்ட அஷ்ரபை பார்த்தாள். அவனும் இன்னாரின் மகன் என்று அறிந்து கொண்டவள் அவர்களை கடந்து செல்ல முற்பட

“பானு நில்லு… உன் கிட்ட பேசணும்” என்ற ரஹ்மான் வாழ்த்து அட்டையை கையில் கொடுக்க பெரிய ரோஜா மலர்களை தாங்கி “ஐ லவ் யு” என்று இருப்பதை கண்டதும் விஷயம் புரிய பயத்தில் ஷஹீராவின் உடல் உதற, கண்கள் கலங்கி கண்ணீர் எட்டிப் பார்த்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரஹ்மான் பதட்டமடைய “நான் உன்ன லவ் பண்ணுறேன் டி… நீ யோசிச்சு சொல்லு. ப்ளீஸ் அழாத” அவன் புரிய வைக்க முயற்சி செய்ய

அவ்வழியாக சாப்பிட வீட்டுக்கு வந்த ஷஹீராவின் தாய்மாமன் அக்பர் இவர்களைக் கண்டு “ஷஹீரா என்னமா பிரச்சினை?” வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கியாறே விசாரிக்க

அழுதவாறே இவர்கள் வழிமறித்து கலாட்டா செய்வதாக கூறி விட்டாள். அந்த பதின் வயதில் காதலை அறியாத வயதில் ஒருவன் மனதில் தான் பல வருடங்களாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அழகு அறியாமல் அவன் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்று அறியாமல் கலாட்டா செய்வதாக சொல்ல

ரஹ்மானின் கையில் இருந்த அட்டையும், அவன் நோக்கமும் புரிந்தவர் அட்டையை சுக்குநூறாக கிழித்தெறிந்து, அவனின் சட்டையை பிடித்திருந்தார்.

“ஏன் டா… பொம்பள புள்ளைய படிக்க அனுப்பினா அதுங்க பின்னாடி அலைஞ்சி, மனச கெடுத்து, இழுத்துட்டு ஓடலாம்னு பாக்குறீங்களா”

“அசிங்கமா பேசாதீங்க?” கத்தினான் ரஹ்மான்.

பல வருடங்களாக மனதில் மறைத்து வைத்திருந்த காதலை ஷஹீராவின் தாய்மாமனேயானாலும் இப்படி பேசியது ரஹ்மானுக்கு பிடிக்கவில்லை.

“என்ன டா… அசிங்கம்? நீ பண்ணது அசிங்கமில்லையா?” அவர் கத்தின கத்தில் கூட்டமும் கூட ரஹ்மானை கன்னத்தில் அறைந்திருக்க அஷ்ரப் அவரை தடுத்துக் கொண்டிருந்தான்.

ஊர் மக்கள் கூடி ஒருவாறு அவர்களை பிரித்துவிட்டு வீட்டுக்கு அனுப்ப வீட்டுக்கு வந்த ஷஹீராவை

“பொம்பள புள்ள ஒழுக்கமா போனா.. வந்தானு இருக்கணும்.. இவ அவனை பாத்து இழுச்சி இருப்பா.. அதான் வந்துட்டான் பின்னாடியே” அத்தை மஸீனா பேச

ஷஹீராவின் அன்னை தலையில் அடித்தவாறு “இதுக்காடி உன்ன படிக்க வச்சேன். நல்லா படிக்கிற பொண்ணுன்னு படிக்க வச்சா.. இப்படி பண்ணிட்டியே! வாப்பா இல்லாம உங்க ரெண்டு பேரையும் வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டேன். இந்த பேச்சு கேக்க வச்சிட்டியே!”

“அல்லாஹ் மேல சத்தியமா இதற்கு முன்னாடி நான் அவங்கள பார்த்ததே இல்ல. எனக்கு தெரியாது உம்மா… இன்னைக்குத்தான் வந்து பேசினாங்க. மாமா வந்ததால அவர் கிட்ட உண்மையை சொல்லிட்டேன்”

“மஸீனா புள்ளய கண்டபடி பேசாத, அல்லாஹ் மேல சத்தியம் பண்ணுதில்ல” அக்பர் மனைவியை அதட்ட கழுத்தை நொடித்தாள் மஸீனா.

ஷஹீராவின் தந்தை அன்னையை தலாக் செய்து {விவாகரத்து} வேறொரு திருமணம் செய்து கொள்ள, அன்னை பேகம் ஊறுகாய், வத்தல், பாக்கெட் உணவுத் தயாரித்து விற்று குழந்தைகளை வளர்க்க, தம்பி அக்பரின் உதவியும் அவளுக்கு கிட்டியதில் பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.

அக்கா குடும்பத்துக்கு செலவழிப்பது மஸீஹாவுக்கு பிடிக்காததால் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இவர்களை குத்தி பேச காத்திருப்பவள் இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன் படுத்திக்க கொள்ள, நெருப்பில்லாமல் புகையாது என்பதால் ஷஹீராவின் மேல் தப்பு இருக்கும் என்றே எண்ணினார் அக்பர்.

ஒரு வழியாக பிரச்சினை முடிந்தது என்று ஒரு மூலையில் அழுதவாறு ஷஹீரா இருக்க, கடையிலிருந்து வீடு வந்த முபாரக் காதில் விஷயத்தை போட்டாள் மஸீஹா.

அதன் பின் மீண்டும் கலவரம் தான். முபாரக் ஷஹீராவை அடிக்க, பேகம் தடுக்க, அக்கம் பக்கத்தினரோடு மஸீஹாவும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இரு குழந்தைகளும் ஹசன் மற்றும் ருகையா அழுதவாறு இருக்க, அக்பர் அந்த சமயத்தில் வீட்டில் இல்லை.

அண்ணனின் கையால் அடி, உதைகளை வாங்கியவள் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்க, உள்ளே நுழைந்த அக்பர் முபாரக்கை திட்டி விட்டு மாடியேறி சென்று விட்டார்.

முடிந்தது எல்லாம் ஒரு வழியாக முடிந்தது. ஷஹீராவுக்கு பசி வயிற்றை கிள்ளியது. ஆனால் சாப்பிடவோ! பசிக்குது என்று அன்னையிடம் கூட சொல்லவோ! பயமாக இருந்தது.

முபாரக் பெல்டால் விளாசியத்தில் அங்கங்கே கன்றிச் சிவந்த காயங்களும், தோல் வெடித்தும் இரத்தம் கசிந்துக் கொண்டிருக்க, உடல் முழுவதும் வலிக்க, அதை விட ரனக்கொடுரமாய் மனம் வலிக்க ஆரம்பித்திருந்தது. செய்யாத தப்புக்கு தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனை நெஞ்சை இறுக்க விம்மி விம்மி அழுத்தவள் கேவலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த பேகமும் கொண்டையை முடிச்சிட்டுக் கொண்டு “ஷஹீரா வா… வந்து சாப்பிடு. இன்னைக்கு ஸ்கூலுக்கு சாப்பாடும் கொண்டு போகலேயே! ஸ்கூல் போயிட்டு வந்தும் ஒன்னும் சாப்பிடல. வாம்மா… மக்ரிப் நேரத்துல இப்படி இருக்க கூடாது” மாலை மங்கி சூரியனும் மறைய ஆரம்பித்து மஃரிப் தொழுகைக்கு அதானும் சொல்லபட்டிருந்தது.

“எனக்கு பசிக்கல” என்று வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டும் என்று அவள் மூளை எச்சரித்தாலும், பசி வெறி அவளை அவ்வாறு சொல்ல விடவில்லை அமைதியாக எழுந்தவள், பின் பக்கம் சென்று கைகால் முகம் கழுவ, காயங்கள் எரிய ஆரம்பிக்க மீண்டும் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

குளிர் நீரை முகத்தில் அடித்துக் கழுவியவள் கைகளையும் முழங்கை வரை கழுவிக்கொண்டு கால்களையும் கழுவிக் கொண்டு உள்ளே வர அவளின் முடியை கொத்தாக பிடித்த முபாரக்

“ஒழுங்காக நடந்துக்க, இல்ல கொன்னுடுவேன்” என்று சுவரில் மோதி விட்டு செல்ல பலமாக மோதிய நெற்றியும் கன்றிச் சிவந்தது.

அழுகையை அடக்கியவள் அன்னை தந்த தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்த மாத்திரம் வாசலில் யாரோ கத்துவது கேட்க, முபாரக்கும் கத்திக் கொண்டு செல்வது தெரிய தட்டை வைத்தவள் அன்னையின் பின்னால் ஓடியிருந்தாள்.

வாசலில் நவ்பர் பாய் கத்திக்கு கொண்டிருந்தார். அக்பரைத்தான் அவர் திட்டிக்கொண்டிருந்தார். ரஹ்மானை அடித்ததை பற்றி வீட்டுக்கு வரும் பொழுது யாரோ அவருக்கு சொல்ல அக்பரை  தேடி வந்தவர் கத்தலானார்.

மாடியிலிருந்து அக்பரும் வர, உள்ளே இருந்து முபாரக்கும் செல்ல வாக்கு வாதம் முற்ற, மீண்டும் ஒரு இலவச கூத்து அக்கம் பக்கத்தினருக்கு வேடிக்கையாகியது.

என்ன நடந்தது என்று வந்தவர் பொறுமையாக கேட்டிருந்தால் இந்த மாதிரியான சம்பவங்களை அழகாக தவிர்க்கலாம். அதை விட்டு விட்டு “என் பையனின் மேல் நீ எப்படி கை வைப்பாய்” என்று கத்தியவாறு வருவரிடம் எவ்வாறு பேச?

“உன் பையன் எங்க வீட்டு பொண்ணு பின்னாடி சுத்துவான், லெட்டர் கொடுப்பான். அத பாத்து கிட்டு நாங்க சும்மா நிக்கணுமா?” அக்பர் கத்த

“லெட்டர் தானே கொடுத்தான் என்னமோ கைய புடிச்சி இழுத்த மாதிரி அவன் கன்னத்துல அறஞ்சிருக்க? நான் கூட என் பையன அடிச்சதில்லையா? தங்கமான பயன்யா? பொறுப்பான பயன்யா அவன்”

“பொறுப்பான பையன்தான் பொம்பள புள்ளைங்க பின்னாடி சுத்துவானா” முபாரக் எகிற

“ஏன் உன் தங்கச்சிய கிழவியாகும் வர வீட்டுலயே வச்சிருக்க போறியா? யாருக்காவது கட்டி கொடுப்பல? பசங்கனா நாலு பொம்பள புள்ள பின்னாடி சுத்ததான்பா செய்வாங்க, ஏன் நீ சுத்தல” 

“உன் பையனும் நானும் ஒண்ணா… பெருசா பேச வந்துட்டாரு. ஒழுக்கம் கெட்ட பையன பெத்தவரு”

“இங்க பாரு. என் பையன பத்தி பேசினா உன் தங்கச்சிய பத்தியும் தான் பேசுவேன். அவன் கூப்பிடாமத்தான் அவ வந்தாளா? சொல்லு. உங்க அப்பன் என்ன ஒழுக்கமானவனா? கட்டின பொண்டாட்டி இருக்கும் போதே இன்னொருத்தியை கூட்டிக்கிட்டு ஓடினவன் தானே!” அவரின் பேச்சில் முபாரக்கின் இரத்தம் கொதிக்க,

ஷஹீராவை முற்றத்துக்கு இழுத்தவன் “கேட்டியா.. டி கேட்டியா? இந்த ஆளு சொல்லுறத கேட்டியா? உன்னால இன்னும் என்னெல்லாம் பேச்சு கேக்க வேண்டி இருக்கோ” கன்னம் கன்னமாக அறையலானான் முபாரக்.

தந்தை முபாரக்கின் வீடு சென்றதை அறிந்த ரஹ்மான் வண்டியை வேகமாக ஒட்டி வந்தவன் ரோட்டிலையே வண்டியை போட்டு விட்டு ஓடி வர கண்டது முபாரக் ஷஹீராவை அடிப்பதைத்தான்.

 பாய்ந்து வந்த ரஹ்மான் முபாரக்கை எட்டி உதைத்திருக்க முபாரக் ஒருபக்கம் விழ, மறுபக்கம் விழப்போன ஷஹீராவின் இடது கையை பற்றிப் பிடித்தவன் தன்னோடு சேர்த்தனைத்திருந்தான்.

சாப்பிடிடாத சோர்வு. அடி, உதை என்று உடல் மரத்துப்போக என்ன பேசுகிறார்கள், என்ன நடக்கிறது என்று கூட புரியாமல் ரஹ்மானின் அணைப்பில் இருந்தாள் அவள்.

பானுவின் நெற்றிக்காயத்தைக் கண்டு பதறியவன் உதடுகளை குவித்து மெதுவாக ஊதியவாறு “ரொம்ப அடிச்சானா? ரொம்ப வலிக்குதா?” கலங்கியவாறு கேட்க அவன் மூச்சுக்கு காற்று தீண்டி செல்ல தேகம் சிலிர்க்க மெல்ல சுயஉணர்வுக்கு வந்தவள் மெதுவாக கண்களை திறந்து ரஹ்மானை பார்க்க அந்த கண்களில் தான் எத்தனை பரிதவிப்பு. கண்களாளேயே ஆறுதல் சொல்லலானான் ரஹ்மான்.

அவள் நிலை கண்டு தன்னிலை மறந்தான். சுற்றி இருந்தவர்கள் அவன் கண்ணுக்கு தெரியவில்லை. பானு மட்டும் தான் தெரிந்தாள். அவள் நிலை கண்டு, அவள் வேதனை நெஞ்சம் தாக்க, அவன் மனம் ஓலமிட….

“அல்லாஹ் மேல சத்தியம் பண்ணிட்டு, எப்படி கட்டி புடிச்சுக்கிட்டு நிக்கிறா?” மஸீஹா கத்த பேகம் மகளை தன் புறம் இழுக்க அன்னையின் மேல் சரியலானாள் ஷஹீரா.

முபாரக்கின் மேல் கொலைவெறியே! வர “இப்படி மாட்ட அடிக்கிற மாதிரி அடிச்சி இருக்க, என்ன தான் பிரச்சினை உனக்கு” ரஹ்மான் எகிற எழுந்து கொண்ட முபாரக் மீண்டும் அவனை அடிக்க வர விஷயம் கேள்விப்பட்டு பள்ளிவாசலில் இருந்து இமாம் அவர்கள் வருகை தர அவ்விடம் அமைதியானது.

“வீட்டுக்குள்ள போய் பேசலாமா? அவர் தன்மையாக கேட்க” அவருக்கு மரியாதையளித்து அனைவரும் உள்ளே சென்று ஆண்கள் அமர்ந்து கொள்ள பெண்கள் ஒரு பக்கமாக நின்று கொண்டனர்.

“நான் பேசுறவரைக்கும் யாரும் பேசக் கூடாது, சண்டை போடக் கூடாது சரியா” என்று ஆரம்பித்தவர் “இங்க வாம்மா” என்று ஷஹீராவை அழைத்து நடந்ததை விசாரித்தார்.

சோர்வாக அவளும் நடந்ததை சொல்ல, ரஹ்மானிடம் விசாரிக்க அவனும் உண்மையை உள்ள படியே கூற

“பொண்ணு மேல எந்த தப்பும் இல்லையே! எதுக்கு இப்படி அடிச்சிருக்கீங்க? தப்பே பண்ணி இருந்தாலும் சொல்லி புரிய வைக்கணும். இப்படி அடிச்சி கண்ட இடத்துல பட்டு ஏதாவது ஆகிட்டா? நாளைக்கு எப்படி கட்டி கொடுப்பீங்க?” இமாம் முபாரக்கை பார்த்து கேட்க அவன் ரஹ்மானை முறைத்துக் கொண்டிருந்தான்.

“இங்க பாரு தம்பி. நம்ம பொண்ணுங்கள படிக்க வைக்கிறதே பெரிய விஷயம். அதுலயும் மஹ்ரம் இல்லாம வெளிய கூட அனுப்ப இஸ்லாம் அனுமதிக்கல, அப்படி இருந்தும் நாலு தெரு தள்ளி இருக்குற பாடசாலைக்கு எல்லா புள்ளைங்களும் சேர்ந்து போகுதே! நம்ம தெருவுக்குள்ள இருக்குறவங்க, நம்ம ஜனங்க பாத்துப்பாங்க என்ற நம்பிக்கைல தான். நீங்களே! இப்படி செய்யலாமா?

{மஹ்ரம் :- ஒரு பெண் திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத ஆண்கள். அப்பா, சகோதரன், தாத்தா அப்பாவின் சகோதர்கள், அம்மாவின் சகோதரர்கள் ect.. ஆண்களுக்கும் இதேபோல் அன்னையின் உறவுகள் வரும்}

பிரச்சினை இவ்வளவு தூரம் வந்தது உன்னால. அந்த பொண்ணு வீணா அடி பட்டு கிடக்குது. இத்தோட விட்டுடு. ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன். மூணு நாளைக்கு மேல் கோபமாக இருக்கவும் கூடாது. அல்லாஹ்வின் கோபப் பார்வை உங்க மீது திரும்பிடும். முஸாபஹா செய்து கொண்டு சமாதானமா போங்க” என்றவர் முபாரக்கையும், ரஹ்மானையும் முஸாபஹா செய்ய வைத்தார். அக்பரும், நவ்பர் பாயும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டவர்கள் முஸாபஹா செய்து கொள்ள ரஹ்மானை அழைத்துக்கொண்டு நவ்பர் பய் வீடு நோக்கி செல்ல இமாமும் விடை பெற்றார்.

{முஸாபஹா :- ஒருவரையொருவர் கட்டித்தழுவி ஸலாம் சொல்லுதல்}

போகும் போதே அந்த பார்வை பார்த்து விட்டு போனான். அதன் பின் அடங்கினானா அவன். அவன் தான் பா… அந்த ரஹ்மான்.

ஆமா யாரை பார்த்து விட்டு போனான் ஷஹீராவையா? முபாரக்கையா?