இவள் எந்தன் சரணமென்றால் 14-2 14464 வீட்டை பார்த்துக் கொண்டே சென்றாலும் தானாக திருவிடம் அழைத்து செல் என்றோ, போகிறேன் என்றோ எதுவும் சொல்லவோ கேட்கவோ இல்லை அவள். ஏனோ அவள் அன்னை அவளை அழைக்காதது இதுவரை குறையாகவே இருந்தது துர்காவுக்கு. அதுவும் தான் கேட்டும் கூட வரவேண்டாம் என்று சொல்லி விட்டிருக்க, இன்னமும் வீம்புதான். அவருடன் இயல்பாக பேசினாலும் வீட்டிற்கு செல்ல மனம் வரவில்லை. திருவுக்கு இதெல்லாம் தெரிந்து இருந்தால் அப்போதே அவளை அழைத்து சென்றிருப்பான். ஆனால் அவனுக்கு அன்னை மகளுக்குள் நடக்கும் இந்த பனிப்போர் தெரியாத காரணத்தால் அவன் வீட்டுக்கு வந்துவிட்டான். அதன்பிறகான நேரம் அவனின் கைவளைவிலேயே கழிய, இரவு மதியம் வைத்த உணவையே உண்டு முடித்து படுத்துவிட்டனர் இருவரும். ——————— அன்றைய தினம் மிகவும் சவாலாக இருந்தது அந்த டிஎஸ்பி க்கு. சண்முகநாதன் அவளுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான். இவள் போடும் திட்டங்களிலிருந்து அவன் தப்பித்து செல்ல,செல்ல இங்கே அவளுக்கு உக்கிரம் கூடிக் கொண்டிருந்தது. அவனை முடிக்கா விட்டால் இந்த சீருடைக்கே அவமானம் என்று நினைத்துக் கொண்டவள் தன் முன் இருந்த லேப்டாப்பில் அவனுக்கு எதிரான தகவல்களை ஒருவரி விடாமல் அலசிக் கொண்டிருந்தாள். எப்படியும் அவனை முடிக்க தான் திட்டமிட்டிருந்தாள் அவள். அவனை பிடிப்பதாக எல்லாம் எண்ணம் இல்லை அவளுக்கு. இன்றும் அவனுக்கான வலையை விரித்துவிட்டு அவள் காத்திருக்க, அவள் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த ஒரு சிறிய தவறால் தப்பி இருந்தான் சண்முகநாதன். அவன் தப்பி விட்டதை நினைத்து வெறி பிடித்தாலும், தன்னுடன் இருந்தே குழி பிரித்த சிலரை அடையாளம் கண்டு கொண்டதில் திருப்தியாகவே உணர்ந்தாள் அவள். சண்முகநாதனின் வலது கை என்று சொல்லப்படும் அவனின் கையாள் ஒருவனை இன்று அவள் முடித்திருக்க, அது போதவே இல்லை அவளுக்கு. அவளுக்கு சண்முகநாதனின் ரத்தம் பார்க்க வேண்டும். அப்போதுதான் உக்கிரம் அடங்கும் என்ற நிலையில் இருந்தாள் அவள். இதோ அவனுக்கான அத்தனை திட்டங்களும் முடிந்து இருக்க, அந்த நள்ளிரவில் அவனுக்கான முடிவை அத்தனை கட்சிதமாக எழுதி முடித்திருந்தாள் அவள். அவளுக்கு நெருக்கமான சிலரிடம் பேசி முடித்து அழைப்பை துண்டித்து வைத்தவள் நேரத்தை பார்க்க மணி மூன்று. “உனக்கு இருக்குடா.. இதுக்கெல்லாம் சேர்த்து செய்யுறேன்..” என்று கையை தூக்கி நெட்டி முறித்தவள் லேப்டாப்பை அருகில் போட்டுவிட்டு, சோஃபாவில் அப்படியே சாய்ந்து உறங்க ஆரம்பித்தாள். அவளுக்காக இரவு வைக்கப்பட்டு இருந்த உணவு கேட்பாரற்று கிடக்க, அவளின் பெல்ட்,ஷூ எல்லாம் அருகில் சிதறிக் கிடந்தது. காலை மூன்று மணிக்கு படுத்தவள் அலாரம் எதுவும் இல்லாமலே ஐந்து மணிக்கு எழுந்து விட்டாள். சீருடையை மாற்றிக் கொண்டு அவள் கிளம்பிவிட, அங்கே சண்முகநாதனும் அவன் வீட்டிலிருந்து கிளம்பி இருந்தான். அவனுக்கும் அந்த டிஎஸ்பி தன்னை துரத்துவது தெரியும். அவள் இன்று நாள் குறித்திருப்பதும் எப்படியோ இவனுக்கு தெரிந்து விட்டிருக்க, இதோ கிளம்பிவிட்டான். இவர்களின் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எத்தனை நாள் நீடிக்குமோ… ———————– துர்கா காலையில் எப்போதும் போல் ஏழு மணிக்கு கண்விழிக்க திரு கிளம்பி இருந்தான். அது ஒன்றும் பெரிய அதிசயமாகவெல்லாம் தோன்றவில்லை அவளுக்கு. அவன் நேற்று ஒருநாள் உடன் இருந்ததே பெரிய விஷயம் என்று அவளுக்கும் புரிந்து தான் இருந்தது. இதெல்லாம் அவன் இன்று நேற்று செய்வதில்லை. பலகாலமாக அவனின் வழக்கம் இது. உடனே மாற்றிக் கொள்ள முடியாது என்று சொல்லிக் கொண்டவள் முடிந்தவரை தானும் அவன் கிளம்பும்நேரம் எழுந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டாள். இந்த யோசனைகளுடனே அவள் சமைத்து முடிக்க, திருவும் நேரத்திற்கு வந்து விட்டான். அவன் வீட்டுக்குள் நுழைந்த நேரம் துர்கா கிச்சனில் இருக்க, அவள் பின்னால் சென்று நின்றான் அவன். அவள் சமைத்த பாத்திரங்களை அலசி வைத்து கொண்டிருக்க, அவள் இடையில் கிள்ளி வைத்தான் வழக்கம் போல். அவள் அதிர்ச்சியிலும், பயத்திலும் சத்தமாக கத்திவிட்டாள். அதன்பிறகே பின்னால் நின்றிருந்த திருவை பார்க்க பதட்ட ம் லேசாக குறைந்து கோபம் குடிகொண்டது அங்கே. திரு அதை கண்டுகொள்ளாமல் அவளை நெருங்கி அணைத்து கொண்டான். அவளின் அந்த பயம் அவன் எதிர்பார்க்கவே இல்லை. திட்டுவாள் என்று நினைக்க, அவள் பயந்து நின்றாள். இப்போது திரு அணைத்து கொள்ளவும், அவன் நெஞ்சில் ஈரத்தின் சுவடுகள். அவள் கண்ணீரை உணர்ந்தவன் “ஏய் என்னடி.. இதுக்கா அழற..என்ன ஆச்சு..” என்று பதற, முகத்தை நிமிர்த்தவே இல்லை அவள். திரு அழுத்தமாக “துர்கா என்னை பாரு.. பாருன்னு சொல்றேன்ல” என்று அதட்ட, அவனை நிமிர்ந்து பார்த்தாள் துர்கா. அவள் நிமிரவும் “எதுக்கு அழற..” என்று முறைப்பாகவே கேட்டவன் “பிடிக்கல ன்னா பிடிக்கல சொல்லணும். அதை விட்டுட்டு அழுவியா.. ” என்று முறைத்து கொண்டு நிற்க அவன் மனைவி கிளம்பிவிட்டாள். அவனை விட்டு விலகி நின்றவள் “நான் பிடிக்கல சொன்னேனா உங்ககிட்ட… நீங்களே நினைச்சுப்பிங்களா..” என்று கேள்வி கேட்க “அப்புறம் ஏண்டி அழற. கேட்டா பதிலும் சொல்லல. என்ன நினைக்கட்டும் நான்.” என்று கத்தினான் திரு. “எனக்கு ன்னு வந்து வாய்ச்சிருக்கீங்க பாருங்க.. ரெண்டு நாளா இவர்கூட இருக்கும்போது…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் வாயை பொத்தியவன் “நீ என்ன சொல்லவர ன்னு புரிஞ்சிடுச்சு எனக்கு. இப்போ அழுத்தத்துக்கு மட்டும் காரணம் சொல்லு.” என்று முறைக்க கண்ணால் அவன் கையை காட்டினாள் அவள். அவன் கையை எடுக்கவும் “ஆளில்லாத வீட்டுக்குள்ள இப்படி திருடன் மாதிரி வந்து கிள்ளி வச்சா பயமா தான் இருக்கும். ஒருநிமிஷம் நடுங்கியே போய்ட்டேன்.” என்று முறைத்தாள். அவளை மென்மையாக அணைத்து கொண்டவன் “நம்ம வீட்டுக்குள்ள யார் வருவா.. எவனுக்கும் அந்த தைரியம் கிடையாது… நீ இப்படி பயந்தா நான் எப்படிடி நிம்மதியா இருப்பேன். எதுவுமே என்னை மீறி தான் உன்னை தொடணும்.. இந்த திரு இருக்கவரைக்கும் துர்கா எனக்குத்தான்…” “எப்பவும் துர்கா திருவுக்குத்தான். உன்னை அத்தனை அவசரமா கல்யாணம் பண்ணது இப்படி பயந்து போய் நிற்க இல்ல. நீ என் கைக்குள்ள இருக்க துர்கா.. நிம்மதியா இரு. என்மேல நம்பிக்கை இருந்தா இந்த பயத்தை எல்லாம் விட்டுடு.. நான் இருக்கேன்.” என்று கண்டிப்புடன் கூற, அவனின் நெஞ்சில் புதைந்து கொண்டாள் மனைவி. திரு உண்டு முடித்து மார்கெட்டிற்கு கிளம்ப, அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் தேவா வந்தான் வீட்டிற்கு. ஏற்கனவே திரு அழைத்து சொல்லி இருந்தான் துர்காவிற்கு. திரு வந்தபோதே பணம் எடுத்து செல்ல நினைத்து தான் வந்தான், துர்கா அழுது வைத்ததில் அவன் மறந்து கிளம்பி இருக்க, தேவாவை அனுப்பி இருந்தான் இப்போது. தேவாவிடம் துர்கா சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கூற, அவனும் அமர்ந்துவிட்டான். தேவாவுக்கு உணவை வைத்தவள் அவன் அருகில் அமர, நண்பர்களுக்கு பேசிக் கொள்ள ஆயிரம் கதைகள் இருந்தது. திரு வீட்டிற்கு வந்த அன்று அவனை பார்த்ததுதான் துர்கா. இப்போது பார்க்கவும் பேசிக் கொண்டு இருக்க, பேச்சின் நடுவில் “வள்ளிம்மா.. இப்போ பரவால்ல துர்கா.. நல்லா இருக்கு, வாய் தான் தாங்க முடியல.. ரொம்ப கடுப்பாக்குது..” என்று அடுக்கி கொண்டிருக்க, “நீ எப்போடா போய் பார்த்த..” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் துர்கா. ‘நான் எங்க போனேன்.. அதுதான் வள்ளிம்மாவே டெய்லி கடைக்கு வருதே..” என்று உடைத்துவிட்டான் தேவா.. துர்கா அதற்குமேல் எதுவும் பேசவில்லை அவனிடம். அமைதியாகவே அவனுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தாள். அவன் சென்ற அடுத்த நிமிடம் திருவிற்குத் தான் அடித்தாள். அவன் அழைப்பை எடுக்கவும் “என் அம்மா கடைக்கு வேளைக்கு வந்து இருக்காங்களா..?” என்று கேட்க, மனைவியின் குரலில் ஏதோ மாற்றம் தெரிந்தது திருவுக்கு. “என்ன ஆச்சு துர்கா.. எதுவும் பிரச்சனையா..” என்று அவன் கேட்க “நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்று நின்றாள் அவள். “வந்து இருக்காங்கடி.. அவங்க தினமும் தான வராங்க” என்று அவன் சாதாரணமாகவே கூற, அந்த பாவனை பிடிக்கவே இல்லை அவளுக்கு. “ஏன் என்கிட்டே சொல்லல நீங்க..”என்று அவள் கோபமாக கேட்க, திருவுக்கு அப்போதுதான் புரிந்தது அவளுக்கு அவர் வேலைக்கு வருவதே தெரியவில்லை என்று. என்ன முயன்றும் அவளின் குரலில் சிறு கண்ணீர் தடமும் தென்பட்டுவிட, திருவால் தாங்கவே முடியவில்லை. அவளுக்கு பதில் சொல்லாமல் அவன் அமைதியாக இருக்க “எல்லாரும் சேர்ந்து ஏமாத்தறீங்க இல்ல.. ” என்று சோர்வாக கேட்டவள் அழைப்பை துண்டித்துவிட்டாள். கோபம், வருத்தம், ஆதங்கம் எல்லாம் சேர்ந்து அவளை ஆட்டுவிக்க என்ன செய்வது என்று புரியாதவள் வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள் அன்னையின் வீட்டுக்கு. அவர் வழக்கமாக வைக்கும் இடத்திலிருந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று அமர்ந்துவிட்டாள். அவள் அந்த வீட்டிற்கு வந்த அடுத்த பத்து நிமிடங்களில் மாமியாரும், மருமகனும் அங்கு வந்து சேர்ந்திருந்தனர். அதன்பின் அவர்கள் எத்தனை போராடியும் அவளை சமாளிக்க முடியாமல் போக திருவுடனும் கிளம்பவில்லை அவள். அவன் அழைத்ததற்கு “எனக்கே வழிதெரியும்.. ” என்று முடித்துக் கொண்டு சட்டமாக அமர்ந்துவிட்டாள். வள்ளியை வைத்துக் கொண்டு என்ன பேசுவது என்று புரியாமல் திருவும் கிளம்பி சென்றுவிட்டான்.