அடுத்த சில நிமிடங்களில் சரத் திருவின் வீடு வாசலில் காரை நிறுத்திவிட, அக்கம்பக்கத்து பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்தனர் மணமக்களை. துர்கா அந்த வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி முடிக்கவும்,அவர்களே மாப்பிள்ளை, பெண்ணுக்கு பால் பழமும் கொடுத்துவிட, பாலில் மிதந்து கொண்டிருந்த வாழைப் பழங்களை கண்டதுமே உமட்டிக் கொண்டு வரும் போல் இருந்தது துர்காவிற்கு.
அவளுக்கு பாலும் பிடிக்காது… வாழைப்பழமும் பிடிக்காது… சிலருக்கு ஒருசில விஷயங்கள் வாசனையே பிடிக்காது என்பார்களே.. அதுபோல துர்காவிற்கு இவை இரண்டும். டீயோ, காஃபியோ குடித்து விடுபவள் இந்த பால் மட்டும் தொடவே மாட்டாள்.
இதில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேறு கொடுக்க, என்ன செய்வது என்று முழித்தாள் அவள். திருவுக்கு அதெல்லாம் எதுவும் இல்லை போல, அவன் இலகுவாகவே உண்டு முடித்தவன், பாலையும் கொஞ்சமாக அருந்திவிட்டு அவளிடம் நீட்டிவிட்டான்.
அத்தனை பேர் இருக்கையில் மறுக்க முடியாமல் கையில் வாங்கி கொண்டவள், கண்களை இறுக மூடிக்கொண்டு பாலை மட்டும் ஒரு சிப்பாக அருந்திவிட்டு டம்ளரை கீழே வைத்துவிட்டாள். அருகில் இருந்தவர்களுக்கு சாதாரணமாக தெரிந்தாலும் திருவால் அவள் முகத்தில் தெரிந்த பிடித்தமின்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
“என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்..” என்று ஆத்திரம் தான் மிகுந்தது அவனுக்கு. பொதுவாகவே அத்தனை பொறுமையானவன் கிடையாது திரு. சட்டென கோபம் வந்துவிடும். பல நேரங்களில் வாய் பேசுவதற்கு முன்பே கை பேசிவிடும். அவன் ஆரம்பத்திலிருந்தே தன் பொறுமையை இழுத்து பிடிக்கும் ஒரே இடம் துர்கா தான்.
இப்போதும் அவள் செயலில் முயன்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டான் அவன். வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் ஒருவர்பின் ஒருவராக கிளம்பிவிட, எஞ்சி இருந்தது வள்ளி, தேவா, சரத் மட்டுமே. திருமண வேலைகளால் சரத்தும், தேவாவும் களைத்து போயிருந்தனர்.
இருவரும் சொல்லிக் கொண்டு புறப்பட, வள்ளி தானும் வருவதாக கூறி தேவாவை நிறுத்தி வைத்தவர் மகளிடம் வந்து நின்றார். அவர் ஏதோ பேச வந்ததை புரிந்து கொண்டு, திரு அமைதியாக எழுந்து சென்றுவிட, வள்ளி மகளின் கையை பிடித்துக் கொண்டார்.
துர்கா அவர் முகத்தையே பார்க்க, மகளை புரிந்தவராக அவள் கன்னத்தில் தட்டியவர் “அம்மாக்கு என்னடா.. இதே தெருவுல தானே இருக்க போறேன். நீ தினமும் வந்து பார்த்துக்கோ.” என்றவர் “ஆனா.. உன் புருஷனையும் நீ ஞாபகத்துல வச்சுக்கணும் துர்கா.. அவனும் உன்னை மாதிரிதான், உனக்காவது அம்மா ன்னு நான் கூடவே இருந்தேன்,அவனுக்கு அப்படிகூட யாருமில்ல… தனியாவே வாழ்ந்துட்டான், நீ மட்டும்தான் அவனோட ஒரே உறவு.. இன்னிக்கு நிலைமைக்கு அவனுக்கு எல்லாமே நீதான். எல்லாமும் நீதான்.
“என் மக நல்லா படிச்சிருக்க, நல்ல வேலைக்கு போயிருக்க எல்லாமே ஒரு அம்மாவா எனக்கு சந்தோஷம் தான். ஆனா நீ திருவோட வாழப்போற வாழ்க்கைதான் என்னோட நிம்மதி… இனி உன் வாழ்க்கை அவன் தான். அவரையும் விட்டுட கூடாது.. உன்னையும் நீ இழந்திட கூடாது.. என் பொண்ணு இதையும் சரியா செய்யணும்… அது மட்டும் தான் வேணும் எனக்கு..” என்று முடித்து விட்டவர் அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு “பார்த்துக்கோ…” என்று கூறி, திருவையும் அழைத்து சொல்லிவிட்டே அங்கிருந்து புறப்பட்டார்.
அவர்கள் மூவரும் கிளம்பியதும், துர்கா அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்துவிட, திரு அவளை பார்த்தவன் “எழுந்து அந்த ரூம்ல டிரஸ் மாத்திக்கோ.. உன் ட்ரெஸ் எல்லாம் அங்கேதான் இருக்கு..” என்று கூறிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான்.
துர்கா அவன் காட்டிய அறைக்குள் நுழைந்தவள், பார்வையை சுழலவிட அங்கே ஒரு ஓரத்தில் அவள் பெட்டி இருக்க, அதை திறந்தவள் ஒரு சேலையை எடுத்து மேலே வைத்துவிட்டு, தன் தலையில் இருந்தவற்றை முதலில் எடுத்து ஓரமாக வைத்தாள். ஏதோ பாரம் இறங்கியது போல் தோன்ற, அந்த அறையில் இருந்த குளியல் அறைக்குள் நுழைந்தவள் நிதானமாக குளித்து முடித்து சேலையை மாற்றிக் கொண்டாள்.
அவள் அந்த அறையை விட்டு வெளியே வர, திரு அந்த ஹாலில் அமர்ந்து டிவியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு அவன் அருகில் செல்லவா? வேண்டாமா? என்று புரியவே இல்லை.
சிறிது நேரம் அங்கேயே நின்றவள் மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து அங்கிருந்த கட்டிலில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள். காலையில் நேரத்தில் எழுந்தது கண்களை சொருக, அமைதியக கண்களை மூடி சாய்ந்தவள் உறங்கியே போனாள். திருவும் எழுந்து வந்து பார்த்தவன் அவள் உறங்கவும், வெளியில் வந்து தானும் சோஃபாவில் படுத்து உறங்கிவிட்டான்.
நன்றாக இருட்டிய பிறகே துர்காவுக்கு விழிப்பு வர, எழுந்து கொண்டவள் முகம் கழுவி புட்டத்தை கொண்டு வெளியில் வர, திரு சோஃபாவில் உறங்குவதை கண்டவள் சத்தம் போடாமல் பூஜையறை சென்று விளக்கேற்றி வைத்தாள்.
கண்மூடி இருநிமிடங்கள் நின்றவள், அந்த வீட்டின் சமையலறைக்குள் நுழைய, மதியம் திரு காய்ச்சிய பால் அடுப்பில் இருந்தது. சர்க்கரை, டீத்தூளை தேடி எடுத்தவள் பாலில் கலந்து கொதிக்கவிட, உறக்கம் கலைந்திருந்த திரு எழுந்து அவள் அருகில் வந்து நின்றான்.
சமையலறையில் அவள் அரவம் உணர்ந்தவன் “என்ன செய்றா..” என்ற ஆர்வத்தில் தான் எழுந்து வந்திருந்தான். அவள் அந்தப்பக்கம் திரும்பி நின்றிருக்கவும் அமைதியாக அவளை வேடிக்கை பார்த்து நின்றிருந்தான் அவன்.
துர்கா யாரோ தன்னை நெருங்கும் உணர்வில் சட்டென திரும்பி பார்க்க, திரு நின்றிருக்கவும் அமைதியாக பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள். இதயம் வேகமாக அடித்துக் கொண்டிருக்க, அவனுக்கு காண்பிக்காமல் இருக்கவே, சட்டென திரும்பிக் கொண்டிருந்தாள் அவள்.
டீயை நடுங்கும் கைகளுடன் வடிகட்டியவள், அவனிடம் டம்ளரை நீட்ட, புன்னகையுடன் வாங்கி கொண்டான் அவன். கைகளில் வாங்கி கொண்டவன் வெளியில் சென்றுவிட, அவன் பின்னால் நடந்தாள் அவள். அவன் சோஃபாவில் அமர்ந்துகொள்ள, ஏதாவது சமைக்க வேண்டுமா? என்று கேட்க நினைத்தவள் எதுவுமே கேட்காமல் மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்து விட்டாள்.
பிரிட்ஜ்ஜை திறந்து பார்க்க, மாவு இருந்தது. தக்காளி, கூடவே சில காய்கறிகளும் இருக்க, தக்காளியை எடுத்துக் கொண்டவள் கழுவி நறுக்கி கொண்டிருக்க, சமையலறைக்குள் நுழைந்தான் அவன்.
“என்ன செஞ்சிட்டு இருக்க..” என்று சட்டென அவன் கேட்டுவிட, அவன் சத்தத்தில் கத்தியை தவற விட்டவள் மீண்டும் இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.
அவனை நிமிர்ந்து பார்த்து “நைட்க்கு சமைக்கணும்ல.. நான் செஞ்சிடறேன்..” என்று கூற
“விட்டுடு.. வெளியில வாங்கிக்கலாம்.. நிலையில இருந்து சமைக்கிறவங்க வந்துருவாங்க..” என்றுவிட்டான் திரு.
“ஏன் நான் சமைச்சா என்ன? ” என்று மனதில் திட்டிக் கொண்டவள் “எனக்கு சமைக்க முடியும். நானே செஞ்சிக்கறேன்..” என்றுவிட்டு திரும்பிக் கொண்டாள். திருவும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. அதன் பின்னான நேரங்கள் அமைதியில் கழிய, இரவு உணவும் ஒருவித அமைதியுடனே கழிந்தது.
அவன் அருகில் நின்று கொண்டு, அவன் சாப்பிட சாப்பிட பரிமாறிக் கொண்டிருந்தாள் அவள். அவள் செய்தது என்னவோ கடமையாக எண்ணித்தான். ஆனால் எதிரில் இருந்தவனுக்கு அப்படி அல்லவே. இதுவரை கிடைத்தே இருக்காத நொடிகள் அவை. தன் தேவை உணர்ந்து அருகில் நின்று ஒருவர் இப்படி கவனிப்பது.
சற்றே நெகிழ்ந்த நிலையில் இருந்தான் அவன். அவளின் இந்த செயலில் மதியம் அவள் மீது தோன்றிய வருத்தம் கூட மறைந்துவிட, இலகுவாகவே இருந்தான். இருவரும் சாப்பிட்டு முடிக்கவும், பிரிட்ஜில் இருந்த பாலை அவள் காய்ச்சிக் கொண்டிருக்க, அவள் கைகள் வெளிப்படையாகவே நடுங்கி கொண்டிருந்தது.
ஒருவித பதட்டத்துடனே அவளின் நிமிடங்கள் நிறைவடைந்து கொண்டிருக்க, திரு அவளைத் தேடி வந்தவன் கிட்சன் வாசலில் நின்றிருந்தான். அவள் இருந்த பதட்டத்தில் அவனைக் கூட கவனிக்கவில்லை அவள். உள்ளங்கைகள் முழுவதுமாக வேர்த்து விட்டிருக்க, கையில் இருந்த அந்த மாத்திரை ஈரத்தில் முழுவதுமாக நனைந்து இருந்தது.
கையை இறுக்கி மூடி இருந்தவள் அதை அந்த டம்ளரில் சேர்ப்பதா? வேண்டாமா? என்று தடுமாறிக் கொண்டிருந்தாள். பயத்தில் நடுங்கிய கைகள் அவளுக்கு ஒத்துழைக்காமல் போக, திருவுக்கு அவளின் பதட்டம் புரிந்தாலும் அவள் கையில் இருந்த மாத்திரை எல்லாம் கண்ணில்படவே இல்லை.
அவள் தடுமாற்றத்தை வேறுவிதமாக புரிந்து கொண்டவன் அவளை நெருங்கி இருந்தான். அவள் கையை பிடித்து அவன் உயர்த்த, பயந்து போனவளாக கையை மேலும் இறுக மூடிக் கொண்டாள் பெண். அவள் அழுத்தத்தில் சிரிப்பு வந்தது திருவிற்கு.
சிரிப்புடனே அவள் கையை தன் சட்டையில் தேய்த்தவன் அவள் கையை திறக்க, பிசுபிசு வென அவள் கைகளில் ஒட்டிக் கொண்டு கரைந்து இருந்தது அந்த தூக்கத்திற்கான மாத்திரை.