இருள் வனத்தில் விண்மீன் விதை -14

அத்தியாயம் -14(1)

காதலை புதுப்பிக்க வருகிறான் சர்வா என ஆசையோடு காத்திருந்த லிசி வேறொரு பெண்ணுடன் ஜோடியாக அவன் வந்திருப்பதை கண்டு ஏமாற்றமும் திகைப்புமாக வரவேற்றாள்.

மித்ராவின் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறும் நெற்றித் திலகமும் சர்வாவுடன் நெருங்கி நிற்பதும் லிசியின் அடி வயிற்றை கலங்க வைத்தது.

“இவ மித்ரா, என் வைஃப், அன்அவாய்டபில் சிட்டிவேஷன்ல திடீர்னு எங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சு, யாருக்குமே சொல்ல முடியலை” என்றான் சர்வா.

சிரிக்க முயன்றாள் லிசி. சர்வாவுக்கு சங்கடமாகத்தான் இருந்தது, ஆனால் அவளது மனநிலை மாறுவதோடு அவளும் விரைவில் அவளுக்கான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்வாள் என நினைத்து இயல்பாகவே தன்னை காட்டிக் கொண்டான்.

வந்தவர்களுக்கு பழச்சாறு எடுத்து வருகிறேன் என உள்ளே சென்ற லிசி தண்ணீர் பருகி சற்றே நிதானத்திற்கு வந்தாள்.

“உள்ள போய் ரொம்ப நேரம் ஆகுது, இன்னும் காணோமே? நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டு வர்றேன்” என எழுந்தாள் மித்ரா.

“அதெல்லாம் வேணாம், நான் சும்மா…” சர்வா பேசிக் கொண்டிருப்பதை காதில் வாங்க அவள் அங்கு இருந்தால்தானே?

ஹையோ ஏதாவது சொல்லி குட்டைய குழப்பி விட போறா என பயந்த சர்வாவும் உள்ளே சென்றான்.

சமையலறையில் பழச்சாறு கலந்து கொண்டிருந்த லிசி என்ன கேட்டிருந்தாளோ, அதற்கு பதில் சொல்லும் விதமாக, “ஆமாம் லவ்தான், பார்த்த உடனே வந்த லவ். நான் இல்லைனா செத்து போயிடுவேன்னு எங்க வீட்ல கெஞ்சி கதறி கட்டிக்கிட்டார். இவங்க வீட்ல சொல்லி ஒத்துக்கலைன்னா என்ன செய்றதுன்னு இங்க யாருகிட்டேயும் சொல்லாமலே சீக்கிரம் சீக்கிரமா கல்யாணமும் பண்ணிக்கிட்டார். ரொம்ப அவசரம் எல்லாத்திலேயும்” என்றாள் மித்ரா.

இருவரின் ஜோடிப் பொருத்தம் நன்றாக இருப்பதாக பாராட்டினாள் லிசி.

“எங்களை பார்க்கிற எல்லாருமே அப்படித்தான் சொல்றாங்க, ரொம்ப அஃபெக்ஷனேட் இவர். இந்த ஜென்மம் மட்டும் இல்லை எல்லா ஜென்மமும் நாந்தான் வைஃபா வரணும்னு சொல்லிட்டே இருப்பார்” என பெருமையாக அளந்து விட்டாள் மித்ரா.

லிசி தலையாட்டிக் கொள்ள, “ஆனாலும் இந்த ஆம்பளைங்கள நம்பவே முடியாது எப்ப எப்படி மாறிப் போவாங்கன்னு, நீங்க என்ன நினைக்குறீங்க?” எனக் கேட்டாள் மித்ரா.

“அப்படியும் சொல்லிட முடியாது, சில சமயம் பொண்ணுங்க கூட அவசர பட்டு வேற முடிவை எடுத்திடுவாங்க. உறவுல விரிசல் வந்தாலும் ஆம்பளைங்க ஈஸியா மூவ் ஆன் ஆகிடுறாங்க, அவசர பட்ட பொண்ணுங்கதான் பின்னாடி வருத்தப்பட்டு ஃபீல் பண்ணுவாங்க” எனக் கூறி தானாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டாள் லிசி.

“ஏன் ஃபீல் பண்ணணும், இல்லை என்ன இதுக்கு ஃபீல் பண்ணனும்? உலகத்துல ஒருத்தந்தான் ஆம்பளையா? அட ஆம்பளையே இல்லாம பொண்ணுங்க நம்மளால வாழ முடியாதா? சொல்ல போனா அவங்களுக்குத்தான் நம்ம துணை தேவை, நமக்கு நாமே துணை” என்றாள் மித்ரா.

“என்னாச்சு ஏன் இவ்ளோ அக்ரெஸிவா பேசுறீங்க?” எனக் கேட்டாள் லிசி.

“நாட்டு நடப்ப பார்த்து மனசு தானா குமுறுது, அத விடுங்க. எங்க ஒர்க் பண்றீங்க?” பேச்சை மாற்றினாள் மித்ரா.

 லிசி பதில் சொல்லத் துவங்க, அங்கு வந்த சுவடு தெரியாமல் திருப்பி விட்டான் சர்வா.

 மித்ராவின் பேச்சில் லிசி வேதனை கொள்வாள் என தெரியும், ஆனால் இதுதான் அவளை நல்ல முடிவாக எடுக்க வைக்கும் என புரிந்து அப்படியே விட்டு விட்டான். ஆனால் ஏதோ சொல்லப் போவதாக வந்து வேறு எதையோ பேசிய தன் மனைவியை நினைத்து, ‘கேடி பில்லி கில்லாடி ரங்கி எல்லாம் நீதான்டி!’ என பாராட்டினான்.

கணவனை வில்லங்கமாக பார்த்துக் கொண்டே வந்த மித்ரா அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். பின்னால் பழச்சாறு எடுத்துக் கொண்டு வந்தாள் லிசி.

“ரெண்டு பேரும் அப்படி என்ன பேசிகிட்டீங்க?” என பொதுவாக கேட்டான் சர்வா.

லிசி ஏதோ சொல்ல போவதற்குள் அவளது கைப்பேசி அழைக்கவும் இதோ வருகிறேன் என சென்று விட்டாள்.

“சொல்லிட்டேன், இனிமே உங்களுக்கு இடைஞ்சலா நான் இருக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். இனிமே ரெண்டு பேரும் ஜாலியா இருங்க, சந்தோஷம்தானே?” எனக் கேட்டாள் மித்ரா.

“ஓ தேங்க் யூ மித்ரா, உன் மனசு யாருக்கு வரும்?” என பொய்யாக சிலாகித்தான்.

“ஸாரி, அஃபிஸியல் கால் அதான் கட் பண்ண முடியலை” என சொல்லிக் கொண்டே வந்தாள் லிசி.

பரவாயில்லை என்ற சர்வா, “மேரேஜ்தான் யாருக்கும் சொல்ல முடியலை, அதான் எல்லாருக்கும் சொல்லி ரிசப்ஷன் வைக்கலாம்னு பிளான் பண்ணிருக்கோம். அதுக்கு இன்வைட் பண்ணத்தான் வந்தோம்” என்றான்.

இதென்னடா புதுக்கதை என அதிர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள் மித்ரா. எங்கு எப்போது என விவரங்கள் சொன்னவன் பரிசுப் பொருளை கொடுத்தான்.

“இதெல்லாம் என்ன?” எனக் கேட்டுக் கொண்டே வாங்கிய லிசி அதை பிரித்துப் பார்த்தாள்.

ஷோகேசில் வைக்க கூடிய கலை நயம் மிக்க சிறிய கப்பல் இருந்தது.

அதைக் கண்ட லிசி உடனே சர்வாவை நிமிர்ந்து பார்த்து வெறுமையாக சிரித்தாள். அர்த்தங்கள் தாங்கிய புன்னகையை உதிர்த்தவன், “உனக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன்” என்றான்.

நினைவு வந்தவளாக அவனுடைய திருமண வரவேற்பு நடக்கவிருக்கும் நாளன்று வெளியூர் பயணம் இருப்பதாக சொன்னாள் லிசி.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பவில்லை அவள் என்பதை புரிந்து கொண்ட சர்வா, “இட்ஸ் ஓகே, நீ பாரு, நாங்க கிளம்பறோம்” என எழுந்து கொண்டான்.

என்ன நினைத்தாளோ, “ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” எனக் கேட்டாள்.

இனி எப்படியும் தான் அவளின் நினைவில் இருக்க வேண்டாம் என கருதிய சர்வா, “கொஞ்ச நாளைக்கு ஃபோட்டோஸ் எடுக்க வேணாம்னு வீட்ல சொல்லிருக்காங்க” என வாய்க்கு வந்த காரணத்தை சொல்லி மறுத்தான்.

இதென்ன இப்படியொரு காரணம் என கேட்டுக் கொள்ளாமல் நாகரீகம் காத்தாள் லிசி.

இங்கு வந்ததன் காரணத்தை முன்னரே இவன் சொல்லியிருந்தால் தன் பங்குக்கு இவளை வெறுபேற்றியிருக்க வேண்டாமே என நினைத்த மித்ராவுக்கு லிசியை காண பரிதாபமாக இருந்தது. அதற்கு மாறாக சர்வா மீது கோவம் பொங்கியது.

மேலும் பேச்சை வளர்க்காமல் மனைவியை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான் சர்வா.

பார்க்கிங் ஏரியாவில் காரில் ஏறாமல், “லிசி வீட்ல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா நான்?” எனக் கேட்டாள். கேட்ட விதமே விஷயம் தெரியாமல் காரில் ஏற மாட்டேன் என்பதை சொன்னது.

அவர்கள் காதலித்த சமயத்தில் லிசியின் பிறந்தநாள் வந்தது. அதற்காக என்ன பரிசு கொடுக்க எனத் தெரியாமல் தன் நண்பனுக்கு பிறந்தநாள் வருகிறது சிறப்பான பரிசுப் பொருலாக சொல் என அவளிடமே கேட்டான்.

சட்டென அவள் சொன்னதுதான் கப்பல்.

புதிய சவால்களை எதிர் கொள்ள, வாழ்க்கையில் முன்னேற ஒருவரை ஊக்குவிப்பதற்காகவும் வளர்ச்சி, வளம், நம்பிக்கை மற்றும் வெற்றி என பலவித வாழ்த்துகளை சொல்லவும் கப்பல் பரிசாக கொடுக்க படுகிறது.

“மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப், நல்ல நண்பனுக்கு ஷிப் கொடுக்கலாம்” என கிண்டலாக சொன்ன சர்வா, விலை உயர்ந்த கனிமங்கள் கொண்டு கலைப் பொருளாக கப்பலை வடிவமைக்க பிரத்யேகமாக ஆர்டர் கொடுத்தான்.

பிறந்தநாள் பரிசாக அதைக் கொடுக்கும் போது திகைத்த லிசி அதை வாங்க மறுத்து விட்டாள்.

தூய்மையான நட்புக்கு மட்டுமே இந்தப் பரிசை வழங்க வேண்டும் எனவும் காதலிக்கு கொடுக்க கூடாது எனவும் காரணம் சொன்னாள்.

“அப்படிலாம் யார் சொன்னா? ஆசையா உனக்குன்னு செஞ்சது இது, வாங்கிக்க” என வற்புறுத்தினான் சர்வா.

“என் மனசுல இந்த பரிசுக்கான அர்த்தம் இப்படித்தான் பதிஞ்சு போயிருக்கு. ஒரு வேளை இதை வாங்கிக்கிட்டா நமக்குள்ள நட்பை தவிர வேற எதுவுமே இல்லைனு அர்த்தம் ஆகிடும். இதைத்தான் எனக்கு சொல்ல வர்றீனா கொடு வாங்கிக்கிறேன்” என லிசி சொல்ல, பரிசுப் பொருளை அவளிடம் தராமல் எடுத்து சென்று விட்டான்.

ஐந்து வருடங்களுக்கு பின்னர் லிசியின் மனம் மீண்டும் தன் பக்கம் சாய்கிறதோ என முன்னரே சந்தேகமிருந்தது, ஆனால் உறுதியாக தெரியாத ஒன்றைப் பற்றி தான் ஏதாவது சொல்லப் போய் அவளை காயம் செய்து விடுவோமோ என எண்ணி அமைதியாக இருந்தான்.

நேரில் பார்த்து இவளின் மனதை உடைக்காமல் இதைப் பற்றி பேசி தெளிவு படுத்தி விடத்தான் நினைத்திருந்தான். அதற்கு இன்றுதான் சந்தர்ப்பம் வாய்த்தது. வார்த்தைகள் தேவையில்லாமல் சிறு பரிசு மூலமாக சொல்ல வேண்டியதை சொல்லி விட்டான்.

அதை மனைவியிடம் சொன்னவன், “என்னை இப்போ புரிஞ்சுக்கிட்டிருந்திருப்பா” என்றான்.

“கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னா போதாதா? கப்பல் கொடுத்துதான் ஆகணுமா?”

“குடும்ப கப்பல் கவுராம இருக்க இப்படி அழுத்தி சொல்ல வேண்டியதாகிடுச்சு” என்றான்.

மித்ரா மேலும் ஏதோ பேசப் போக, “கார்ல ஏறேன் மித்ரா, இங்கேயே வச்சுத்தான் உன் குறுக்கு விசாரணைய நடத்தணுமா?” எனக் கேட்டான். அவளும் ஏறிக் கொள்ள காரை எடுத்தான்.

லிசி அழக் கூடும், ஏமாற்றத்தை ஜீரணம் செய்து கொள்ள சில நாட்கள் ஆகலாம். விரைவில் அவளுக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் தெளிவுக்கும் வந்து விடுவாள் என்ற நம்பிக்கை இருந்ததால் அவளை அடியோடு ஓரம் கட்டி விட்டான் சர்வா.