அத்தியாயம் -1(2)
பின்னொரு நாள் அவளின் முன் பிரசன்னம் ஆனவன் மீண்டும் காதல் உரைத்தான்.
அவன் அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கோவத்தை தாண்டி அவளின் அடி வயிற்றில் ஏதோ பரபரப்பு ஏற்படுகிறது, விழிகளை அவனிடமிருந்து விலக்க முடியாமலும் அவனையே பார்க்க முடியாமலும் அவஸ்தை ஏற்பட வலிந்துதான் தன்னை நிலைப் படுத்திக் கொண்டாள்.
கண்டு கொண்டானோ என்னவோ அவளை பார்த்து பற்கள் பளிச்சிட சிரித்தான்.
“என்ன… எதுக்கு சிரிக்கிறீங்க?” தன்னைக் கடிந்து கொள்ள முடியாமல் அவனை அதட்டினாள்.
“எதிர்ல இருக்கிறவன் மனசு புரிஞ்சும் உங்க மனச எதுக்கு மறைக்கணும்?” கிண்டல் தொனியில் கேட்டான்.
இவன் சொல்வது போல ஏதுமில்லை என அழுத்தமாக தனக்குள் சொல்லிக் கொண்டவள், “கற்பனையா ஏதாவது பேசாதீங்க” என்றாள்.
“என் கற்பனை நிஜம் ஆகாதா?” என அவன் கேட்ட விதத்தில் நிச்சயமாக வசீகரிக்கத்தான் பட்டாள். அவளுக்கே அதை நினைத்து அதிர்வு. கூடவே தன் குடும்பத்தையும் நினைத்துப் பார்த்தவளுக்கு என் நெஞ்சம் ஏன் இப்படி அலைபாய்கிறது என மனது பிசைந்தது.
பேச ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள்ளாக தன்னிடம் இத்தனை அல்லாட்டத்தை ஏற்படுத்துபவன் மீது கோவம், ஈர்ப்பு என்பவற்றை தாண்டி சொல்லொனா பயமும் எழுந்தது.
அவளது கண்களையே படித்துக் கொண்டிருந்தவன், “ரிலாக்ஸ் மித்ரா, என் விருப்பத்தைத்தான் சொன்னேன் மத்த படி ஃபோர்ஸ் பண்ணல நான்” என்றான்.
அவள் அவனையே பார்த்திருக்க சிறிது இடைவெளி கொடுத்து, “ஆனா உனக்கும் விருப்பம்னா சொல்லிடு, இப்படி தவிக்காத” என்றான். அவன் ஒருமைக்கு தாவியது கூட அவளது மனதில் பதிந்திருக்கவில்லை.
அவனது வசியத்தில் உடனே கட்டுண்டவள் அல்லாமல் தெளிவாகவே தன்னை பின் தொடர வேண்டாம் என அப்போதும் கடுமையாக எச்சரிக்கை செய்து விலகித்தான் போனாள்.
என்னை பற்றி தெரிந்து கொள்ளாமல் என்னுடன் பழகிப் பாராமல் இப்படி சொல்லாதே என்றவன் பிடிவாதமாக அவளை சுற்றி சுற்றி வந்தான். எந்த சமயத்திலும் கண்ணியம் மீறாமல் காதலை உணர்த்திக் கொண்டே இருந்தான். எளிதாகவே அவள் மனதை கவர்ந்து விட்டான்.
ஐந்து வருடங்கள் கோவையில் உள்ள கல்லூரியில்தான் படித்தாள். இது போல பின்னால் சுற்றி வந்தவர்களை எளிதாக கையாண்டவளால் இவனை அப்படி இலகுவாக கடக்க முடியவில்லை. அவனை கண்டதுமே மனதுக்குள் ஏற்படும் தவிப்பை அவளால் கட்டுப் படுத்தவே முடியவில்லை.
ஒரு நாள் தனியாக ஸ்கூட்டியில் வந்தவள் மழையில் மாட்டிக் கொள்ள சோதனையாக அவளது வண்டியும் நின்று விட்டது. அப்பாவுக்கு அழைத்து சொல்லலாம் என அவள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் எங்கிருந்து எனத் தெரியாமல் அவளின் முன் தோன்றினான் சர்வா.
குடை விரித்து அவளிடம் கொடுத்து ஓரமாக நிற்க வைத்தவன் வண்டியையும் ஓரம் கட்டினான். மழைக் கோட் அணிந்திருந்தவன் அங்கிருந்த படியே ஸ்கூட்டரின் பழுதை சரி செய்ய ஆரம்பித்தான்.
அவனை தடுக்கவும் இல்லை பேசவும் இல்லை. எப்படி வந்தான் என சிந்தித்துக் கொண்டே லாவகமாக அவன் ஸ்கூட்டரை கையாள்வதை வேடிக்கை பார்த்திருந்தாள்.
பத்து நிமிடங்களில் வண்டியை சரி செய்து விட்டான். தனது மழைக் கோட்டை கழட்டியவன் அவளிடம் நீட்டினான். மறுப்பாக அவள் பார்க்க, “இத போட்டுக்கிட்டு குடைய என்கிட்ட கொடு, குடை பிடிச்சுகிட்டே ஸ்கூட்டர் ஓட்டுற சாகசம்லாம் செய்யாத, ரொம்ப ரிஸ்க்” என்றான்.
அவள் முறைக்கும் வேளையில் அவளது அம்மா அழைத்தார். எங்கிருக்கிறாய் என விசாரணை செய்தார். தாமதம் ஆனாலோ மழையில் நனைந்து சென்றாலோ பிடி பிடி என பிடித்துக்கொள்வார், அத்தோடு ‘சின்ன பெண் எதையும் சமாளிக்க தெரியாது’ என அப்பாவின் மனதிலும் ஆழமாக பதித்து விடுவார். அதை விரும்பாதவள் அவன் கொடுத்த மழைக்கோட்டை வாங்கிக் கொண்டாள்.
அந்த கோட்டை அவள் அணியும் வரை அவள் நனைந்து போகாமல் குடை பிடித்திருந்தான். அதே குடைக்குள் அவனும் புகுந்து அவளை சங்கடம் செய்யாமல் தள்ளி நின்றே மழையில் நனைந்திருந்தான்.
அவனது வெப்பம் சுமந்திருந்த அந்த உயர்தர மழைக் கோட் அவளது உடலை தழுவியதுமே ஏதோ அவனே தழுவியது போல கூச்சமாக உணர்ந்தாள். கைகள் சில்லிட்டு போயிருந்ததில் அதன் ஜிப்பை சரியாக போட முடியாமல் தடுமாறினாள்.
குடையை மீண்டும் அவளிடமே கொடுத்தவன், “இஃப் யூ டோண்ட் மைண்ட்…” என சொல்லி அவனே ஜிப்பை பூட்ட அவளின் சம்மதம் வேண்டி நின்றான்.
மழை வலுத்துக் கொண்டிருந்தது. அந்நிய ஆடவன் இவன் என எண்ணவே முடியவில்லை அவளால். அரைகுறையாக தலையாட்டினாள்.
மிக மிக நாசூக்காக அவளை தீண்டி விடாமல் ஜிப்பை போட்டு விட்டவன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து விட்டு அவளை பார்த்தான். குடையை அவனிடமே தந்து விட்டு ஏறிக் கொண்டவள் நன்றி சொல்வதற்காக அவனை பார்த்தாள்.
இருட்டிய அந்த மலைச் சறுக்கலில் மழையின் ஈரத்தோடு குளிரால் சிவந்து விட்ட கன்னங்களை ஒரு கையால் தேய்த்து விட்டுக் கொண்டு “கிளம்பு மித்ரா” என அக்கறையாக சொன்னான்.
நன்றி உரைக்கவும் மறந்து போனவளாக தலையசைத்து புறப்பட்டாள். அன்றிலிருந்து கண்களை மூடினாலே அவனுடைய உருவம்தான் அவளது இமைகளுக்குள் வந்து நின்றது.
அவனது மழைக் கோட் வேறு அவளது அறையிலேயே இருந்தது. திருப்பிக் கொடுக்க நினைத்து அவனது வருகையை எதிர் பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றத்தை கொடுத்தான்.
அவளை சரியாக கணித்துதான் வரவில்லை அவன். ஒரு வாரம் வரை பொறுத்திருந்தவள் அதற்கு மேல் முடியாமல் அவளே அவனை தேடிக் கொண்டு வந்தாள்.
எஸ்டேட்டில் விசாரித்து அவனுடைய இருப்பிடத்துக்கே வந்து சேர்ந்தாள்.
“ரொம்ப சீக்கிரமே எதிர்பார்த்தேன், ஒரு வாரம் ஆறப் போட்டுட்டியே!” கேலியோடுதான் அவளை வரவேற்றான்.
“இத கொடுத்திட்டு போகத்தான் வந்தேன்” மழைக் கோட்டை நீட்டினாள்.
“நான் கொடுத்த எல்லாத்தையும் திரும்ப கொடுத்திடுவியா?” எனக் கேட்டவனை பார்த்து விழித்தாள்.
“என் அன்பை எப்பவோ மொத்தமா உன்கிட்ட கொட்டிட்டேன், அதோட சேர்த்து இதையும் வச்சுக்கோ. என்னை வேணாம்னு சொன்னவளோட நினைவுல எப்பவும் இருப்பேன்னாவது சின்ன திருப்தி இருந்திட்டு போகட்டுமே எனக்கு. அதைக் கூட செய்ய முடியாத அளவு கல் நெஞ்சுக்காரி இல்லையே நீ” தீவிர தொனியில் சொல்வது போலவே விளையாட்டாக சொன்னான்.
“ரொம்ப டிராமாத் தனமா இருக்கு” கிண்டலாக சொன்னாள்.
“காபி ஆர் டீ?” எனக் கேட்டவனுக்கு, “எது வேணும்னாலும்” என்றாள்.
சமையலறை சென்றவனை எட்டிப் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவ்ளோ கஷ்ட பட வேணாம், தாராளமா இங்கேயே என்கிட்டேயே வரலாம். என் மூஞ்ச காட்ட மாட்டேன்னு எப்பவும் சொல்ல மாட்டேன், வா மித்ரா” என சத்தம் கொடுத்தான்.
நெற்றியில் கை வைத்து வெட்கப்பட்டு சிரித்தவள் தயக்கத்தை உடைத்து அவனிடமே சென்றாள். ஆவி பறக்கும் காபி கோப்பையை அவளிடம் கொடுத்தான்.
ஒரு வாய் பருகியவள், “ஹ்ம்ம்… நாட் பேட், சமைக்கவும் தெரியுமா?” எனக் கேட்டாள்.
“இதுவரைக்கும் பெருசா தெரியாது, நீ சொன்னீனா கத்து வச்சுக்கிறேன்” என்றான்.
“ஓரளவு சமாளிக்கிற அளவுக்கு சமையல் வரும் எனக்கு” என்றாள்.
“உன்னை இங்க தனியா விடாம கூடவே இருப்பேன்” என்றான். திகைத்தவளிடம், “சமைக்க ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன்” என்றான்.
சிரிப்பும் பயமுமாக பார்த்தவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தவன், “உனக்கு நான் ஹெல்ப் பண்ணலாம்ல… என்ன சொல்ற மித்ரா?” எனக் கேட்டான்.
அவனருகில் தானிருக்க வேண்டும் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் வலுத்து விட்டது. ஆனாலும் அப்பாவும் அம்மாவும் மனக்கண் முன் வந்து அவளை மௌனியாக்கினார்கள்.
அமைதி காத்தவளின் மனம் புரியாமல் ஏமாற்றம் சூழ அவளை பார்த்தவன் பெருமூச்சு விட்டான். கோப்பையை மேடையில் வைத்து விட்டு ஹால் பக்கம் செல்லத் திரும்பினான்.
அவனது சோர்ந்த முகத்தில் மனமுருகிப் போனாள்.
“வீட்ல ஒத்துக்கலைனா என்னால… நான்… என் வீடு பத்தி உங்களுக்கு தெரியாது” தயக்கமாக சொன்னாள்.
மலர்ந்த முகமாக திரும்பியவன், “அவங்க சம்மதம் இல்லாம நம்ம கல்யாணம் நடக்காது மித்ரா. என்னை நம்பு” என்றான்.
அவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தவளை அதற்கு மேல் முன்னேற விடாமல் அவனே வந்து அவளின் கையை பற்றிக் கொண்டான்.
அவனது காதலை தானும் அங்கீகாரம் செய்த அந்நாளை நினைத்துக் கொண்டே வீடு வந்தடைந்தாள் சங்கமித்ரா.
சேர்ந்து பழக ஆரம்பித்து நான்கு மாதங்களாகி விட்டன. கடந்த இரு வாரங்களாக திருமணம் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறான்.
பாவம் அவர், தனியாக இருக்க முடியாமல் கல்யாணத்துக்கு கேட்கிறார், நானே அவரை புரிந்து கொள்ளாவிட்டால் அவரும் என்ன செய்வார், அப்பாவிடம் பேச வேண்டும் என தீர்மானித்துக் கொண்டாள் மித்ரா.
இரவு உணவுக்கு பிறகு வானில் மின்னும் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டே அறையின் பால்கனியில் நின்றிருந்த சர்வாவின் கவனத்தை கைப்பேசி அழைப்பு ஈர்த்தது.
அடுத்த அரை மணி நேரம் கைப்பேசி உரையாடலில்தான் கழிந்தது. எதிமுனையில் யாரிடம் பேசியிருந்தானோ தெரியவில்லை, பேசி முடித்த பின் அவனது மனம் சோர்வாகி விட்டது. குளிருக்கு இதமாக கைகளை சூடு பறக்க தேய்த்து விட்டுக் கொண்டான்.
மித்ராவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வது? அவர்களை என்னால் சமம்திக்க வைக்க முடியுமா? முடியாமல் போனால் அடுத்து என்ன? பெற்றோரை மீறி என்னுடன் வருவாளா மித்ரா? என யோசனை செய்தவன் உடனடியாக ‘உன் அப்பாவிடம் பேசினாயா? என்னவானது?’ எனக் கேட்டு அவளுக்கு செய்தி அனுப்பி வைத்தான்.
இப்போதுதான் அப்பாவுடன் சேர்ந்து நடக்க தயாராவதாகவும் உறங்குவதற்கு முன் தானே அழைப்பதாக பதில் செய்தி அனுப்பினாள்.
அதற்கு பின் சர்வாவுக்கும் உறங்கப் போகும் எண்ணமில்லை, அவளின் அழைப்பு வரும் வரை நட்சத்திரங்களையே எண்ணிக் கொண்டிருக்கலாம் என முடிவு செய்தவனாக அங்கேயே நின்று கொண்டான்.