இருள் வனத்தில் விண்மீன் விதை -8
அத்தியாயம் -8(1)
தன்னோடு வந்து விடும் படி சர்வாவிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார் அறிவுடைநம்பி. அவனோ பிடிவாதமாக அவரோடு செல்ல மறுத்தான்.
“உன் சம்மதமே இல்லாம உன்னை இங்கேருந்து அழைச்சிட்டு போக தெரியும் எனக்கு, பார்க்கிறியா?” கோவமாக கேட்டார் நம்பி.
“உங்களால முடிஞ்சுத பார்த்துக்கோங்க பெரியப்பா” அலட்சியமாக சொன்னான் சர்வா.
“சர்வா!” பற்களை கடித்தார்.
“மித்ரா என்னை நிஜமா விரும்பினா, என்னை தவிர வேற எவனையும் அவ பக்கத்துல கற்பனையா கூட அவளால வச்சு பார்க்க முடியாது. இப்ப அவ என் பொண்டாட்டி இல்லியா? அதனால எனக்கும் அப்படித்தான் எவனையும் அவ… பாருங்க பெரியப்பா எனக்கு அத சொல்லக்கூட பிடிக்கல. என் பொண்டாட்டிக்கு இன்னொரு கல்யாணம்னு கேட்க நாராசமா இல்லை? ‘போன்னு சொன்னா அப்படியே போயிடுவியா, சமாதானம் செஞ்சு அழைச்சிட்டு போக உனக்கு துப்பில்லையா’ன்னு நாளைக்கு அவளே என்கிட்ட கேட்பா, அப்போ எம்மூஞ்ச எங்க போய் வச்சுக்குவேன்?” என்றான்.
“டேய் அந்தப் பொண்ணு தெளிவா உன் கூட வர மாட்டேன்னு சொல்லிச்சு”
“அவ அப்படித்தான் சொல்வா, அது வாய் வார்த்தை. அவ மனசுல உள்ளது உங்களுக்கென்ன தெரியும், எனக்குதான் தெரியும்”
“அப்படியே உருகி உருகி லவ் பண்ணினவன் கணக்கா பேசாதடா” எரிச்சலாக சொன்னார்.
பெரியப்பாவை முறைத்தவன், “உங்களுக்கு நிறைய வேலை இருக்கும், நீங்க கிளம்புங்க பெரியப்பா. என் கணக்கு என்னன்னு தெரிஞ்சு உங்களுக்கு ஏதும் ஆகப் போறதில்ல” என்றான்.
“சர்வா…”
“மித்ராவுக்கு எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டேன். அவளே வருவா, அப்படி அவ என்னை தேடி வரும் போது நான் இங்க இருந்தாகனும்தானே பெரியப்பா?”
“அவ்ளோ நம்பிக்கையாடா உனக்கு?”
“அவ லவ்வை ஃபீல் பண்ணிருக்கேன், நான் வேணும்னா அவளுக்கு கெட்டவனா இருக்கலாம், ஆனா அவ எனக்கு அப்படியில்லை”
இரண்டு நொடிகள் அவனை ஆழ்ந்து பார்த்த நம்பி தன்னுடைய ஆள் ஒருவனை சர்வாவுடன் இருக்க பணித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
ராஜனும் ஜெயந்தியும் யோசனையாகவே இருந்தனர். சற்று முன்தான் இன்னொரு திருமணம் பற்றியெல்லாம் பேசாதீர்கள், வற்புறுத்தினால் எங்கேயாவது சென்று விடுவேன் என பெற்றோரிடம் தீர்மானமாக சொல்லியிருந்தாள் மித்ரா.
“எனக்கும் அந்த தம்பி மேல கோவம்தாங்க, ஆனா அவரும் அவர் பெரியப்பாவும் வந்து பேசினதுக்கு அப்புறம்…” என்ற ஜெயந்தி அடுத்து சொல்ல வந்ததை சொல்ல அஞ்சி கணவரை பார்த்தார்.
“எனக்கும் குழப்பமா இருக்கு ஜெயந்தி, அந்தக் குடும்பத்துக்கே நம்ம பொண்ணை எப்படி அனுப்புறதுன்னு தயக்கமா இருக்கே. இன்னொரு பக்கம் மித்ராவுக்கு நல்லது செய்றேன்னு நம்ம ரிலேட்டிவ்ஸ் வேற போட்டு படுத்துறாங்க. உன் அண்ணனுங்க, மிருதுளாவோட மாமனார்னு யாரையும் பகைச்சுக்கவும் முடியாது” என்றார் ராஜன்.
“அப்ப இன்னொரு கல்யாணத்துல என்னை போலவே உங்களுக்கும் இஷ்டம் இல்லை அப்படித்தானே?” மலர்ந்த முகத்தோடு கேட்டார் ஜெயந்தி.
“அப்படி செஞ்சா மித்து நொந்து போயிடுவா, டைம் கொடுத்தா மாப்ளய மன்னிப்பாளோ என்னவோ? அவகாசமே இல்லாம அடுத்து அடுத்துன்னு ஏதாவது செஞ்சு அவ மனசை நோகடிக்க கூடாது”
“நான் சொல்றேன் கேளுங்க, மித்ராவை அவ வீட்டுக்காராரோட அனுப்பி வைக்கலாம்” என மனைவி சொல்லவும் ஆமோதிக்கவும் முடியாமல் மறுக்கவும் இயலாமல் பார்த்தார்.
“அவங்க குடும்பம் கஷ்டத்துல இருக்கவும் என்னவோ இப்படி பண்ணிட்டார். ஊரறிய நடந்த கல்யாணத்தை இல்லைனு ஆக்க முடியாது. சென்னைக்குதானே போய் வாழப் போறா. ஒரு ஃபோன் போட்டு சொன்னா அவ நிலைமை என்னன்னு நம்மாள தெரிஞ்சுக்க முடியாதா? நீங்க சொன்னா கேட்டுப்பா” என தன் முடிவை சொன்னார் ஜெயந்தி.
“என்னடி நீ கொஞ்சமும் பயமே இல்லாம சொல்லிட்ட. எம்பொண்ணுக்கு எதுவும்னா…. ஹையையோ… எடுத்தோம் கவித்தோம்னு எதுவும் செய்யக்கூடாது” பதறினார் ராஜன்.
“நம்ம பொண்ணு வாழ்க்கைல நாமதான் முடிவெடுக்கணும், நமக்கில்லாத அக்கறையா மத்தவங்களுக்கு? ஒரு வாரத்துல ஏறின தாலிய கழட்டிட்டு இன்னொருத்தன் வந்து தாலி கட்டுவான்னு ஆளாளுக்கு நேரம் குறிக்கிறாங்க. ஆறப் போட்டு முடிவு எடுக்க விடுவாங்களா அவங்க? உங்களையும் நம்புறதுக்கு இல்லை, சொந்தக்காரங்க பண்ற பிரைன் வாஷ்க்கு அடி பணிஞ்சு போனாலும் போவீங்க, அவ எந்தளவு பிடிவாதம் பண்ணி அவரை கட்டிக்கிட்டா, நாம எடுக்கிற தப்பான முடிவால மனம் வெறுத்து போய் அவ ஏதாவது தப்பா தற்கொலை…”
“ஜெயந்தி!” மனைவி பேசி முடிக்கும் முன் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார் ராஜன்.
“நல்லா யோசிங்க, நல்ல முடிவா எடுத்திட்டு அவகிட்ட பேசுங்க” என சொல்லி சென்றார் ஜெயந்தி.
தன் மகளை சர்வாவின் குடும்பத்துக்கு அனுப்பி வைக்கலாம் என ராஜனால் துணிந்து முடிவெடுக்க இயலவில்லை. பழைய கதை பயத்தைதான் கொடுத்தது.
அன்றைய தினம் அப்படியே முடிவுக்கு வந்தது. அடுத்த நாள் விடிந்த சில மணி நேரங்களில் காலை உணவுக்கு முன்னரே கோயிலுக்கு சென்றாள் மித்ரா. அப்பா மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட போது வேண்டியிருந்தாள். ஆகவே தினம் காலை இங்கு வருகிறாள். அவளுக்கு முன் அங்கு காத்திருந்தான் சர்வா.
சர்வா ஏதோ அந்நியன் என்பது போலவே பாவித்து தன் வழிபாட்டை முடித்துக் கொண்டு சென்று விட்டாள். பேசவே அனுமதிக்காத அவளை எப்படி அணுகி பேசி புரிய வைப்பது என்ற பரிதவிப்போடே அவனது தங்குமிடம் வந்து சேர்ந்தான்.
ராஜனின் முன்னோர்களால் கட்டப் பட்டிருந்த கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு நாள் குறித்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்திருந்தனர் அவரது பங்காளிகள். அன்றைய தினமே கோயிலில் வைத்து திருமணத்தை நடத்தி விடலாம் எனவும் ராஜனிடம் சொன்னார்கள்.
ராஜன் தன் மனைவியிடம் பகிர, “உங்களுக்கு மறுப்பு சொல்ல பயமா இருந்த நான் பேசுறேன், என்ன நினைச்சிட்டு இருக்காங்க அவங்கலாம்? உங்க பொண்ணு முடிவு செய்றது இருக்கட்டும் முதல்ல நீங்க முடிவுக்கு வாங்க, நாளைக்கு நல்ல முடிவா நீங்க எடுக்கலைனா நான் சொல்றதுக்கு தலையாட்டுங்க” என கராறாக சொல்லி விட்டார்.
அடுத்த நாளும் வழக்கம் போல கோயிலுக்கு சென்றாள் மித்ரா. நேரம் தவறாமல் சர்வாவும் அங்கே இருந்தான். திரும்பி செல்ல நினைத்தவள் பின் இவருக்கு பயந்து நான் ஏன் ஓட வேண்டும் என எண்ணியவளாக சந்நிதிக்குள் சென்றாள். அவளோடு இணைந்து நடந்தான் சர்வா.
மனதில் கோவம் தீயாக கொழுந்து விட்டெரிய அவனை விட்டு விலகிச் செல்வதற்காக வேகமாக நடந்தாள். அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து அவனும் அவளுக்கு இணையாகவே நடந்தான்.
தீபமேற்றும் இடத்தில் நின்று விளக்குகளில் திரி போட ஆரம்பித்தாள். அவளுக்கு உதவுகிறேன் பேர்வழி என அவள் கொண்டு வந்திருந்த நெய்யை அகல் விளக்குகளில் நிறைக்க நினைத்து நெய் டப்பாவை திறந்தான்.
உறைந்து போயிருந்த நெய்யை ஊற்றும் வழி தெரியாமல் அவளது முகத்தை பார்த்தான். வெடுக் என நெய் டப்பாவை அவனிடமிருந்து பிடுங்கியவள் கொண்டு வந்திருந்த ஸ்பூனால் நெய்யை எடுத்தாள்.
“நான் நெய் ஃ பில் பண்றேன் மித்ரா, நீ விளக்கேத்து” என்றவனின் பேச்சை அவள் காதில் வாங்கிக் கொண்டது போலவே தெரியவில்லை.
அவனை எதுவும் செய்ய அனுமதிக்காமல் தானே தீபமேற்றி முடித்தவள் அவனை கண்டு கொள்ளாமல் அரச்சனை செய்ய சென்றாள். மனம் தளராமல் அவளின் பின்னாலேயே சென்றான்.
தன் அப்பாவின் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனைக்கு கொடுத்தாள். அவளின் பக்கத்தில் வந்து நின்று கொண்டான். அவனுக்கு திருநீறு பிரசாதம் கையில் கொடுத்து அவளுக்கும் கொடுத்தார் பூசாரி.
தன் கையில் உள்ளதை அவளின் கையிலேயே வைத்தவன், “நீயே வச்சு விடு” என்றான்.
முகம் திருப்பிக் கொண்டவள் அரச்சனை கூடையை பெற்றுக் கொண்டு பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தாள்.
அவளுடனே சேர்ந்து சுற்றியவன், “பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறவங்க இல்லயா, அப்படி எடுத்துக்க மித்ரா. இதுவரைக்கும் உன்னை நான் லவ் பண்ணாம இருந்திருக்கலாம், என் வைஃபை என் மொத்த அன்பையும் கொட்டி பார்த்துக்குவேன்” என்றான்.
இதுவரையிலும் தன் மீது அவனுக்கு காதல் இல்லை என்பதை அவனது வாயாலேயே கேட்டவளுக்கு கண்கள் கலங்கிப் போயின. சில நொடிகள் அப்படியே நின்று விட்டாள்.
“என்னாச்சு மித்ரா?” எனக் கேட்டான்.
“என்னை நிம்மதியா இருக்க விடுங்களேன், தயவுசெஞ்சு இனிமே என்னை பார்க்க வராதீங்க. உங்க மூஞ்சியில முழிக்கவே கடுப்பா இருக்கு, உங்களை பார்த்தாலே… இப்போ உங்ககிட்ட பேசுறது கூட அவ்ளோ வெறுப்பா இருக்கு” என சொல்லி நடையை தொடர்ந்தாள்.
சர்வாவுக்கும் சுள் என கோவம் உச்சிக்கு ஏறத்தான் செய்தது, ஆனால் அதை காண்பிக்கும் நிலையில் இல்லையே அவன்.
“இது வரைக்கும் உனக்கு உண்மையானவனா இல்லாம போயிருக்கலாம், இனி பொய்ங்கிறதே நமக்கு இடைல வராம பார்த்துப்பேன் மித்ரா” என்றான். அவள் பதில் பேசவே இல்லை.
“என்னை நம்பாமதானே வர மாட்டேங்குற? எனக்கு சேர வேண்டிய பிராப்பர்ட்டி மொத்தத்தையும் உன் பேருக்கு மாத்திடுறேன் மித்ரா” என்றான்.
அதீத கோவத்தினால் அவளின் முகம் சூரிய ஒளிக்கு இணையாக ஜொலித்தது.
“நான் சொன்னதை ராங் சென்ஸ்ல எடுத்துக்கிட்ட போல. என்னோடது எல்லாமே உனக்குதான் சொந்தம், உன்னை எந்த விதத்திலேயும் இல்ட்ரீட் பண்ண மாட்டேன், நீதான் அங்க எல்லாமேன்னு உனக்கு புரிய வைக்கிறதுக்காக அப்படி சொன்னேன்” என விளக்கம் சொன்னான்.
பிரகாரத்தை சுற்றி முடித்திருந்தவள் ஒரு ஓரமாக அமர்ந்தாள். அவனும் அமர அடுத்த நொடி எழுந்து கொண்டாள்.
‘ஹையோ கண்ண கட்டுதே!’ என்பது போல கண்களை மூடித் திறந்தவனும் எழுந்து கொண்டான்.
அவள் வெளியில் சென்று விட்டாள். அவளது காலணிகளை காணாமல் தேடிக் கொண்டிருந்தவளிடம், “என்ன மிஸ் ஆகிடுச்சா?” எனக் கேட்டான்.
உச்சு கொட்டியவள் வெறுங்கால்களுடன் நடக்க ஆரம்பித்தாள். முந்தைய இரவில் மழை பெய்திருந்ததால் வழி சேறும் சகதியுமாக இருந்தது. பொருட்படுத்தாமல் அந்த வீதியில் பத்தடிகள் நடந்திருப்பாள்.
வழிப்போக்கன் யாரோ எச்சிலை உமிழ்ந்து விட்டு அவன் பாட்டுக்கும் நடந்து சென்றான். இதைப் போல யார் யாரெல்லாம் அசுத்தம் செய்து வைத்தார்களோ என்ற நினைவில் அருவருப்பாக முகம் சுழித்தவளுக்கு அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை.