இருள் வனத்தில் விண்மீன் விதை -7
அத்தியாயம் -7(1)
செண்பகவள்ளி இறந்த உடனேயே அவளிட்ட சாபம் பற்றி தேனப்பன் குடும்பத்துக்கு தெரிய வந்தது. அவள் சொன்னால் அப்படியே பலித்து விடுமா என ஆணவத்தோடே இருந்தனர்.
ஆனால் அவள் சொன்னது போலவே நடக்க ஆரம்பித்தது. செல்வமும் செல்வாக்கும் ஒரு பக்கம் உயர்ந்தோங்க துர்மரணங்களும் கொடிய வியாதிகளும் அவனது குடும்பத்தை ஆட்டிப் படைத்தது.
தேனப்பன் மரணப் படுக்கையில் இருந்த போது அவனது வாயாலேயே செண்பகவள்ளியின் சாபம்தான் குடும்பத்தை வதைக்கிறது என்பதை கண்ணீர் மல்க கூறினான்.
உயிரோடிருந்த அவனது வாரிசுகள் பல தர்ம காரியங்கள் செய்தனர், கோயில் கோயிலாக பரிகார பூஜைகள் செய்தனர், விடிவுதான் கிட்டவில்லை. அந்த சமஸ்தானத்தில் நிம்மதி என்பதே இல்லாமல் போக அங்கிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டனர்.
இடம் மாறிச் சென்ற போதும் வாலிப வயதில் யாராவது இறப்பதும் உடல் அல்லது மன நலன் பாதிக்கப் பட்ட குழத்தைகள் பிறப்பதும் தொடர் கதையாகத்தான் இருந்தது.
தற்போது சர்வாவின் குடும்பத்தில் மூத்த உறுப்பினர் சதானந்தம்தான், நம்பியின் பெரியப்பா. இரட்டையரில் ஒருவராக பிறந்தவர். கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயத்தில் சுற்றுலா சென்ற போது கடலில் மூழ்கி இறந்து விட்டார் அவருடன் பிறந்தவர்.
கண் முன்னால் தன் மூத்த சகோதரனின் இழப்பை பார்த்தவர் சில மாதங்கள் பேதலித்து போய் சிகிச்சை எடுத்துக் கொண்டுதான் சரியாகியிருக்கிறார். செண்பகவள்ளியின் சாபம் விடாமல் துரத்துகிறது என்பதை ஆணித் தரமாக நம்பியவர் பதினெட்டு வயதிலேயே ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்து விட்டார்.
காவி வேஷ்டியும் மேலாடையாக காவி துண்டு மட்டும் உடுத்தி காலணிகள் இல்லாமல் தன் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டார்.
வீட்டை விட்டே செல்ல இருந்தார். அவரது தாயார்தான், “என் கண்ணு முன்னாடியாவது இரு. ஒரு மகனை இழந்திட்டேன் அவன் உருவுல உன்னைய பார்த்தாவது மனசை தேத்திக்குவேன், நீயும் என்னை விட்டு போனா இப்பவே உயிரை விட்ருவேன்” என அழுது அவரை அங்கேயே இருக்க வைத்தார்.
எந்நேரமும் பூஜை, வழிபாடுகள் என இருந்தவர் மாளிகையில் வாழாமல் வெளியில் குடில் அமைத்து அங்கேயே தங்கிக் கொண்டார். நினைத்த நேரம் பால் பழம் என ஏதாவது சாப்பிடுவார். மற்றவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டவர் தானாகவே பேசிக் கொள்வார், நடு இரவில் ஏதேதோ சொல்லி புலம்புவார். அவருக்கு மனநலன் பிறழ்ந்து விட்டதாகவே மற்றவர்கள் நினைத்துக் கொண்டனர்.
சதானந்தத்தின் அப்பாவும் சில வருடங்கள் நோய் வாய்ப்பட்டு அவஸ்தை பட்டுத்தான் இறந்து போனார். தனக்கு முந்தைய தலைமுறையிலும் இப்போதும் இப்படியானவற்றை கண் கூடாக கண்டவர் அவர்.
அவருடைய இளைய தம்பியின் (நம்பியின் அப்பா) கடைசி மகனும் மனநலன் பாதிக்க பட்ட மாற்றுத் திறனாளி. இந்த பாதிப்பு வழி வழியாக வர மரபணுக்கள்தான் காரணம் என மருத்துவர்கள் சொன்னாலும் சதானந்தன் அதை நம்பவில்லை.
ஒன்றரை வருடங்களுக்கு முன் சர்வாவின் பெற்றோரும் நம்பியின் பெரிய பையனின் குடும்பமும் காரில் சென்ற போது விபத்து நிகழ்ந்து விட்டது. சர்வாவின் அப்பா இறந்து போக மற்றவர்கள் பிழைத்துக் கொண்டனர்.
நம்பியின் பதிமூன்று வயது பேரன் பிரதீப் கோமா நிலையிலிருந்து மீண்டான். ஆனால் முழுதாக குணமடையவில்லை. வெளிநாட்டுக்கு அழைத்து செல்லவில்லையே தவிர அங்கிருந்து மருத்துவர்கள் இங்கே வந்து பார்த்து சென்றனர்.
அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதில் ஏதோ சிக்கல், தற்போது மருந்து மாத்திரைகள் மூலமாக சிகிச்சை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். எப்போது அறுவை சிகிச்சை என்பதை அவனுடைய உடல் நலனை கண்காணித்து அதற்கு தகுந்த படி முடிவு செய்வார்களாம்.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்பும் அவன் உயிர் பிழைக்க நேரிட்டாலும் நிரந்தர கோமா நிலைக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
கணவரை பறி கொடுத்து விட்ட சர்வாவின் தாயார் களை இழந்து விட்டார். தான் அழைத்ததின் பெயரில்தான் பிரதீப் தங்களோடு வந்தான், அவனுக்கும் இப்படி ஆகி விட்டதே என குற்ற உணர்வில் குமைகிறார்.
அந்தக் குடும்பத்தின் புதிய தலைமுறையின் மூத்த வாரிசு பிரதீப். அனைவரின் செல்லப் பிள்ளை, அவனுக்கு இப்படியானதில் குடும்பம் சோகத்தில் தவிக்க ஆரம்பித்தது.
அப்போதுதான் சதானந்தன் சர்வாவிடம் செண்பகவள்ளியின் சாபத்தை பற்றி கூறினார். இந்தக் கால இளைஞனான சர்வா அதை நம்பத் தயாராக இல்லை.
“நல்லவர்களுக்கு அநீதி நடக்கும் போது மனம் வருந்தி அந்த உன்னத ஆன்மா சாபம் கொடுத்தா பலிக்காம போகாது. இந்த வம்சம் சபிக்க பட்ட வம்சம்!” என அழுத்தம் திருத்தமாக கூறினார்.
“எவ்வளவோ நல்லது செய்றோம், இப்ப நாம யாரும் யாருக்கும் மனசறிஞ்சு எந்த தப்பும் செய்யல, எப்பவோ யாரோ செஞ்சதுக்கு யாரோ சொன்னது இப்ப வரை எப்படி நடக்கும்? அதெல்லாம் இல்லை” என மறுத்தான் சர்வா.
“பாஞ்சாலி விட்ட கண்ணீர்தான் கவுரவர்கள் அழிய காரணம். அப்படித்தான் செண்பகம் அம்மாவோட கண்ணீர் நம்மளை வாழ விடாம செய்யுது”
“புராண கதையெல்லாம் சொல்லாதீங்க தாத்தா”
“மைசூர் ராஜ குடும்பம் அலமேலு அம்மாவோட சாபத்தால பல தலைமுறைகளுக்கு நேரடி வாரிசே இல்லாம போயிடுச்சு. இது புராணம் இல்லை, வேணும்னா ஆராஞ்சு பாரு” என்ற தாத்தாவின் கூற்றை தீவிரமாக எடுத்துக் கொண்டான்.
அதிலிருக்கும் உண்மைத் தன்மையை அவனே ஆராய்ந்து அறிந்து கொண்ட பிறகுதான் தன் வம்சமும் சாபத்தால் நிம்மதி இழந்து நிற்கிறதோ என்ற சந்தேகம் அவனுக்கும் வந்தது.
தனக்கு முந்தைய தலைமுறையினர் பற்றி விலாவாரியாக விவரித்தார் சதானந்தன்.
“நாம என்ன நல்லது செஞ்சாலும் நம்ம மூதாதையரால துயரப் பட்ட செண்பகவள்ளியோட ஆன்மா சாந்தி கொள்ளாதவரை அந்த தாய் மன்னிப்பு கொடுக்காதவரை நம்ம குல தெய்வம் மனமிறங்க மாட்டா” என உறுதியாக சொன்னார்.
திகிலோடு பார்த்திருந்தான் சர்வா.
“எனக்கு தெரிஞ்சு நம்ம வம்சத்துல பெண் குழந்தை பிறந்ததே இல்லை, அவ மனசு வைக்காம இன்னொரு பொண்ணு இங்க பொறக்க மாட்டா” என்றார்.
யோசித்துப் பார்த்தால் தாத்தா சொல்வது போல வம்சத்தில் அனைவருமே ஆண்களாகவே இருந்தனர்.
தாத்தா சொன்னதை சர்வாவின் வீட்டினர் யாரும் நம்பத் தயாராக இல்லை. “எந்த காலத்துல இருக்கீங்க, அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருக்கும் போது சாபம் அது இதுன்னு, உங்க கற்பனையை உங்களோடவே வச்சுக்கோங்க” எனதான் பேசினார்கள்.
சர்வாவால் முழுதாக நம்பவும் முடியவில்லை, மற்றவர்களை போல கற்பனை என ஒதுக்கி தள்ளவும் முடியவில்லை.
முழுதாக ஒரு மாதம் எடுத்துக் கொண்டான், நிறைய ஆராய்ந்தான். முடிவில் செண்பகவள்ளியின் கதை உண்மைதான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டான்.
பிரதீப் வலிப்பு வந்து ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினான்.
“இது இத்தோட நிக்காது, நீ, உன் தம்பி, உங்களுக்கு பொறக்கிற பசங்க, உன் அண்ணன் பசங்கன்னு இந்த சாபம் தொடர்ந்துகிட்டேதான் இருக்கும்” என தாத்தா சொன்னதில் ஒரேயடியாக பயந்து போய் விட்டான்.
“இதுக்கு என்னதான் தாத்தா தீர்வு?” எனக் கேட்டான்.
“சாப விமோசனம் கிடைக்கணும்”
“அதுக்கு என்ன பண்ணனும் நாம?”
“செண்பகவள்ளி குலத்தை சார்ந்த பொண்ணை இங்க அழைச்சிட்டு வா” என்றவரை குழப்பமாக பார்த்தான்.
“யாரை இழிவு படுத்தி யாருக்கு இங்க உரிமை இல்லைனு கொடுமை பண்ணி தொரத்தி அனுப்பினாங்களோ அந்த தாயோட குடும்பத்தை சேர்ந்த பொண்ணை அவ இடத்துக்கு திரும்ப கொண்டு வா” என்றவரை இன்னும் குழப்பம் தெளியாமல் பார்த்திருந்தான்.
இறப்பதற்கு முன் செண்பகவள்ளி பேசியதை விளக்கியவர், “அந்தம்மாவோட குல பெண்களுக்கு கெடுதல் வராம செண்பம் அம்மா துணையா இருக்காங்க. நம்ம குலதெய்வமும் அவங்க பக்கம் இருக்கு. அப்ப அந்த குல பொண்ணோட வேண்டுதலுக்கு பலன் இல்லாம போகாது. அந்த பொண்ணு வழியா உதிக்கிற வம்சத்தை சாபம் எதுவும் செய்யாது” என்றார் தாத்தா.
“வழி வழியா தொடர்ற சாபம் வரப் போற பொண்ணு மூலமா பிரேக் ஆகிடும்னு சொல்றீங்களா? நடக்குமா தாத்தா?” சந்தேகமாக கேட்டான்.
“சாபம்னு இருக்கும் போது அதுக்கான தீர்வு இல்லாம போகாது. எத்தனையோ தலைமுறையா அதிகமாவே வேதனை அடைஞ்சாஞ்சு. நடந்த அநியாயத்தை பத்தி கூட அறியாத தெரியாத வாரிசுகள் இன்னுமே துன்ப படுறது நியாயம் இல்லை. விமோசனம் கிடைக்க வேண்டிய நேரம் இதுதான்னு சாமுண்டீஸ்வரி தேவி தீர்மானம் பண்ணிட்டா. அதுக்கான வழியை நீதான் உருவாக்கணும்” என்றவர் சிறிது இடைவெளி விட்டு,
“என்ன இருந்தாலும் இந்த ஆஸ்திக்கு சொந்தக்காரி அந்த செண்பகவள்ளி அம்மாதான், அப்போ அவங்கள சார்ந்த யாரோ அதை அனுபவிக்கிறதுதான் நியாயமும் கூட. அதை நீ நிறைவேத்து, அந்த தேவியும் செண்பகவள்ளியம்மாவும் துணையா இருக்க பொண்ணை கண்டுபிடிச்சி அழைச்சிட்டு வா” என்றார்.