இருள் வனத்தில் விண்மீன் விதை -6

அத்தியாயம் -6(1)

வெள்ளையர்கள் நாட்டின் பல பகுதிகளை ஆகரமிப்பு செய்து தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்து கொண்டிருந்த காலம் அது. பெயருக்கு மட்டும் பதவியில் இருக்க வைத்து அதிகாரத்தை தங்களிடம் வைத்துக் கொண்டனர் ஆங்கிலேய பிரதிநிதிகள்.

வாரிசு இல்லாத சமஸ்தானங்கள் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரத் தொடங்கியது.

தாராசுரம் சமஸ்தானத்தின் ராஜா மிராசுதாரராக இருந்தார் வேங்கடப்பர். மனைவி தலைப்பிரசவத்தின் போது உயிரை நீத்து விட்டார். குழந்தையும் உலகம் தங்கவில்லை. வேறு திருமணத்தில் நாட்டமில்லாமல் ஒன்று விட்ட சகோதரியின் மகன் தேனப்பனை தத்தெடுத்து வளர்த்துக் கொண்டு பொழுது போக்குக்காக வேட்டையாடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

தேனப்பனுக்கு பனிரெண்டு வயது நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வேங்கடப்பர் வேட்டைக்கு செல்வதாக சொல்லி சென்றார். அடர்ந்த வனத்தில் வேட்டையாடும் ஆர்வத்தில் தன் குழுவிலிருந்து பிரிந்து சென்று விட்டார்.

எதிரபாராத விதமாக அவருக்கு காலில் அடி பட்டு விட்டது. அருகில் யாருமே இல்லாமல் வலியில் அனத்திக் கொண்டிருந்தார். அந்தக் காட்டுப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த செண்பகவள்ளி மூலிகை சேகரிக்கவென அப்பகுதிக்கு வந்தாள். அவள்தான் அவரை பார்த்து அவரது காயமடைந்த காலுக்கு முதலதவி செய்து அவரது குழுவோடு அவர் இணையவும் உதவினாள்.

பகலில் வந்த நிலவென தோற்றமளித்த செண்பகத்தை கண்டதுமே இன்னொரு துணை பற்றி யோசித்திராத வேங்கடப்பர் மனதில் சலனம் உண்டானது. தன் மாளிகை திரும்பிய பின்னும் அவளது நினைவோடே இருந்தார். செண்பகத்தை மணக்க விரும்பும் தன் மனதை புரிந்து கொண்டார்.

அவருக்கும் செண்பகத்துக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. இருபது வயது வித்தியாசமும் இருந்தது. செண்பகத்தின் குலத்தில் வேற்று குல மனிதர்களுடன் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் மிராசுதாரர் வந்து பெண் கேட்கும் போது அதை மறுக்கும் துணிவில்லாமல் அவளை மணமுடித்துக் கொடுத்தனர்.

நாற்பது வயதானாலும் தோற்றத்தில் இளமையாகவே இருந்தார் வேங்கடப்பர். செண்பகத்திற்கும் அவரை பிடித்திருந்தது.

எப்போதுமே வேங்கடப்பரின் வாரிசாக தேனப்பன்தான் இருப்பான், அவனை வைத்து தங்கள் குடும்பமும் செழிப்பாக இருக்கும் என கனவு கண்ட தேனப்பனின் பெற்றோருக்கு செண்பகத்தின் வரவு பிடிக்கவில்லை. வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் நல்லவர்கள் போலவே நடித்தனர்.

திருமணம் முடிந்த கையோடு மனைவியை சமஸ்தான மாளிகையின் பூஜையறைக்கு அழைத்து சென்றார் வேங்கடப்பர். அவளது கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது கருணை பொங்க காட்சி தந்த தேவியின் விக்கிரஹம்.

“சாமுண்டீஸ்வரி அம்மா, சமஸ்தானத்துல எந்த தவறும் நடக்க கூடாது நேர்மையும் நீதியும் தலையோங்கி நிற்க வேணும்னு முன்னோர்கள் வழிபடற தேவி. வேண்டிக்கோ செண்பகம்” என்றார்.

“நீயே துணை!” என மனமுருக வேண்டி நின்றாள் செண்பகவள்ளி.

தன் அம்மாவும் முதல் மனைவியும் காலை மாலை விளக்கேற்றி அம்மனுக்கு பூஜை செய்ததாக கணவர் சொல்ல, அந்த விளக்கை எப்போதும் அணைய விடாமல் சிரத்தையாக வழிபட்டு வந்தாள் செண்பகம்.

வேங்கடப்பர், செண்பகம் தம்பதியினருக்கு அவர்களின் காதல் வாழ்க்கைக்கு சான்றாக ஒரு பெண் பிறந்தாள். மரகதம் என பெயரிட்டு மகிழ்ந்தனர்.

நன்றாக சென்ற அவர்களின் வாழ்க்கையில் இடி விழுந்தது போல திடீரென நெஞ்சு வலி வந்து இறந்து போனார் வேங்கடப்பர்.

துக்கம் அனுசரித்து முடித்து தன்னை பற்றி சிந்திக்கும் போதுதான் இரண்டாவது முறையாக தான் கருவுற்றிருப்பதை உணர்ந்தாள் செண்பகம். இன்னொரு உயிர் உண்டானதை கூட தெரிந்து கொள்ளாமல் தன்னை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்ற கணவரை நினைத்து நினைத்து அழுதாள்.

கணவரின் தைரியத்தை தனதாக்கிக் கொண்டு சமஸ்தான பொறுப்புகளை கவனிக்க ஆரம்பித்தாள் செண்பகம்.

பத்தொன்பது வயது நிறைந்த தேனப்பன் தீய பழக்க வழக்கங்களோடு இருக்க அவனிடம் பொறுப்புகளை ஒப்படைக்க தயாராக இல்லை செண்பகம்.

அந்த சமஸ்தானத்தில் செண்பகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும் அன்பும் இருந்தது. அவளை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப் படுத்தினால் மக்கள் கொந்தளிக்க கூடும் என புரிந்து கொண்டு தேனப்பனை கொண்டே அவளை அங்கிருந்து வெளியேற்ற தந்திரமாக திட்டமிட்டான் ஆங்கிலேய தளபதி.

சமஸ்தானத்தின் வாரிசாக தேனப்பன் இருந்தால் சமஸ்தானத்தை எளிதாக தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வரலாம் என நினைத்த ஆங்கிலேய படைத் தளபதி அவனை தவறாக வழி நடத்தி காய் நகர்த்தினான்.

தேனப்பனால் மட்டும் செண்பகத்தை எளிதாக அங்கிருந்து வெளியேற்ற முடியுமா? ஆதலால் குணவதியான அவளது நடத்தையில் கலங்கம் ஏற்படுத்த முடிவு செய்தான். மற்றவர்கள் சொன்னால் மக்கள் நம்புவார்களோ என்னவோ, வேங்கடப்பரின் வளர்ப்பு மகனே அவனது வாயால் அம்மா என்றழைக்கும் பெண்ணை பற்றி தவறாக சொன்னால் மக்கள் மத்தியில் அது நம்பப் படும்தானே?

செண்பகத்திற்கும் சமஸ்தானத்தின் கணக்கருக்கும் தவறான தொடர்பு இருப்பதாகவும் அந்த கணக்கரின் கருவைத்தான் செண்பகம் சுமந்து வருகிறாள் என்றும் அவதூறு பரப்பினான் தேனப்பன். இந்த அவமானத்தை தாங்க முடியாமல்தான் வேங்கடப்பர் இறந்து போனார் என்ற செய்தியையும் தீயாக பரவச் செய்தான்.

கணக்கரை தூக்கிலிட்டு கொன்று உண்மை வெளிப் பட்டு போனதால் அவரே தற்கொலை செய்து கொண்டாரென மக்களை நம்ப வைத்தான்.

செண்பகத்திற்காக பேசும் நிலையில் இல்லை அவளது குலத்து மக்கள். சமஸ்தானத்திற்குள்ளேயே அவர்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை. செண்பகத்திற்கும் அவளது மகளுக்கும் தீங்கு நேரமால் இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள மட்டும்தான் அவர்களால் முடிந்தது.

தேனப்பனின் இந்த கொடிய செயலால் அதிர்ந்து, வருந்தி, கோவமுற்று அவனிடமே நியாயம் கேட்டாள் செண்பகம். அவனும் அவனது பெற்றோர் மற்றும் சகோதரர்களும் அவளையும் அவளது குலத்தையும் தரக் குறைவாக பேசினார்கள்.

வயது வித்தியாசம் கூட பாராமல் அரைக் கிழவனை சொத்து சுகத்திற்காக மணந்து கொண்டாள் என அபாண்டமாக பேசினார்கள். மரகதத்துக்கே தகப்பன் வேங்கடப்பராக இருக்காது என தேனப்பனின் தந்தை சொல்ல, சில காவல்காரர்கள் பெயர்களை சொல்லி இவர்களில் யாரின் உருவத்தோடு ஒத்துப் போகிறாள் மரகதம் என நக்கலாக கேட்டான் தேனப்பன்.

அவனது சகோதரர்களும் ‘இவனை போல’ ‘இல்லையில்லை அவனை போல…’ என கேலியாக சொல்லி, அவமானத்தில் கண்ணீர் வடிய நின்றிருந்த செண்பகத்தை பார்த்து கை கொட்டி சிரித்தனர்.

“வயிற்றில் உள்ளது மட்டும் நமது கணக்கனை அச்சில் வார்த்திருக்கும்!” இகழ்ச்சியாக சொன்னான் தேனப்பன்.

நயவஞ்சகர்களின் எக்காளிப்பு சிரிப்பு சத்தம் இன்னுமே கூடிப் போனது.

“ச்சீ! அம்மான்னு சொன்ன வாயால என்ன வார்த்தை சொல்ற?” கோவப்பட்ட செண்பகம் தேனப்பனின் கன்னத்தில் அறைந்தாள்.

கோவத்தில் அவளை தள்ளி விட்டான் தேனப்பன். தூணில் தோள் மோத தள்ளாடி தரையில் அமர்ந்தாள் செண்பகம். இந்த ஏச்சு பேச்சுக்கள் புரியாமல் மருண்டு விழித்த சிறுமி மரகதம் தன் அம்மாவை கட்டிக் கொண்டாள்.

ஐந்து வயது குழந்தை என்றும் நிறை மாத கர்ப்பணி என்றும் பாராது செண்பகத்திற்கும் மரகதத்துக்கும் உணவளிக்காமல் அறைக்குள் அடைத்து வைத்து வருத்தினார்கள்.

தன் மகளுக்காகவும் வயிற்றில் இருந்த சிசுவுக்காகவும் எப்படியாவது இங்கிருந்து தப்பிச் செல்ல நினைத்தாள் செண்பகம்.

வேலை செய்யும் பெண் ஒருத்தி யாருக்கும் தெரியாமல் பூட்டியிருந்த கதவை திறந்து அவர்களை விடுவித்தாள். அவளுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து வெளியேற மகளோடு நடந்தாள்.

 பூஜை அறையை கடக்கும் போது அப்படியே நின்றாள். தினம் அவர் தொழும் அந்த தேவி நடக்கும் அநியாயங்களை கேட்காமல் இருப்பதை கண்டு கண்ணீர் வடித்தாள்.

ஆனால் அந்தத் தாயின் மீது அவளுக்கிருந்த நம்பிக்கை அற்றுப் போய் விடவில்லை. தனக்கு துணையாக வா என வேண்டிக் கொண்டவள் அந்த விக்கிரஹத்தையும் கையோடு எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

ஒரு காலத்தில் செண்பகத்திற்கு விசுவாசிகளாக இருந்த காவல்காரர்கள் தங்களால் அவளுக்கு உதவ முடியாத நிலை எண்ணி வருந்தினாலும் அவள் தப்பிச் செல்வதை தடுக்கவில்லை.

வழியில் தென்பட்ட ஓடையில் தாயும் மகளுமாக நீர் அருந்தி வயிற்றை நிறைத்துக் கொண்டனர். இரண்டு நாட்கள் உணவில்லாமல் ஓய்ந்து போயிருந்த குழந்தையால் மேலும் நடக்க முடியவில்லை. தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு மூச்சு வாங்க நடந்தாள் செண்பகவள்ளி.

அவளது இருப்பிடத்தை அவள் வந்தடைந்த போது சூரியன் மேல் எழும்பியிருந்தது. மயங்கி சரிந்தவளை மீட்டு சிகிச்சை கொடுத்தனர் அவளது ஆட்கள். நினைவு வந்த பின் நடந்தவற்றை சொல்லி அழுதாள். இன்னும் அவளது மகள் கண் விழிக்காமல் கிடப்பதை கண்டு புலம்பினாள்.

அவளை தேற்றி படுக்க வைத்தனர், உடல் பலஹீனத்தின் காரணமாக உறங்கி விட்டாள். மாலையில் அவள் விழித்த போது மரகதம் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

பேதலித்து விட்டாள் செண்பகம். இரண்டு நாட்கள் ஏதும் பேசாமல் எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தாள். வற்புறுத்திதான் அவளை சாப்பிட வைத்தனர்.