திரும்பி வந்த மதுரா மாமியார் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாமல் வேகமாக அறைக்கு சென்று விட்டாள்.

மதியமே பூங்கொடியை மோகன் அவனது வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தான். 

இரவு உணவாக சாதம், பூண்டு குழம்பு, வத்தல் என இருக்க இரண்டு தட்டுகளில் தானே பரிமாறிக் கொண்டவன் அறைக்கு வர, “இன்னும் என்னென்ன கேட்கணும் நான்? இருபத்தி நாலு மணி நேரமும் உங்கம்மாவோட வில்லுபாட்ட கேட்டுகிட்டே இருக்க முடியாது என்னால” என கோவமாக இரைந்தாள் மதுரா. 

“அம்மா ரொம்ப கோவத்துல இருக்குடி, இப்படியே இருந்திடாது” சமாதானமாக சொன்னான் சேரன். 

“எப்டி எப்டி என் அண்ணன் மட்டும் மனசு மாறி வர மாட்டார், உங்கம்மா மட்டும் மாறிடுவாங்களா? என் அண்ணன் உங்களை அடிச்சதுக்கு கொஞ்சமும் குறையாத கொடுமை உங்கம்மா எனக்கு செய்றது. சுதந்திரமா நடமாட கூட முடியலை என்னால” என்றாள். 

“உன் அண்ணன் விட்டா என்னை கொலையே செய்வான், என் அம்மா அப்படி கிடையாது. நான்தான் பேசுறேன்னு சொல்றேன்ல, அமைதியா இருடி” சலிப்பாக சொன்னான். 

உறங்கா விட்டாலும் அவளாவது வீட்டில் ஓய்வாக இருந்தாள். அவனுக்கு ஓய்வும் இல்லையே என நினைத்தவள் வேறெதுவும் பேசாமல் உணவுத் தட்டை கையில் எடுத்து அவனையும் சாப்பிடும் படி சொன்னாள். 

 

அவனுக்கு நல்ல பசி. வேகமாக சாப்பிட ஆரம்பித்தான். அவளுடையதிலிருந்தும் அவனுக்கு எடுத்து வைத்தாள். 

அவன் மறுக்க, “நல்ல பசில இருக்கீங்க, நான் இவ்ளோ சாப்பிட மாட்டேன், வயித்துக்கு சாப்பிடுங்க” என்றாள். 

“நீ சாப்பிடு, வேணும்னா இன்னொரு முறை சாப்பாடு போட்டு எடுத்திட்டு வர்றேன்” என்றான். 

“ம்ஹூம், நைட்ல டிஃபன் சாப்பிட்டு சித்தி வீட்ல இருந்ததிலிருந்து பழக்கம். அம்மா வீட்ல கூட எனக்கு மட்டும் தோசை இட்லி இல்லைனா உப்புமா இப்படி ஏதாவது செஞ்சுக்குவேன். சாதம் மதியம் மட்டும்தான்” என்றாள். 

“ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க, நாளையிலேருந்து உனக்கு என்ன சாப்புடணுமோ செஞ்சுக்க” என சேரன் அக்கறையாக சொல்ல கனகா விட வேண்டுமே என்றெண்ணியவள் அவனிடம் சொல்லவில்லை. 

“நானே அதிகம் சாப்பிட்டேன் போல, உனக்கு பத்தாது, நண் எடுத்திட்டு வரேன்” என்றவனை தடுத்து விட்டாள். 

“அதிகமாதான் எடுத்திட்டு வந்திருக்கீங்க, எனக்கு போதும், திரும்ப போய் உங்கம்மாகிட்ட ‘ரெடி, ஸ்டார்ட் மியூசிக்’னு சொல்ல போறீங்களா?” 

சின்ன சிரிப்புடன், “ஊமைகுசும்பி, மதன் பய அப்படித்தான் பீப்பி ஊதுது பெரியம்மானு கிண்டல் பண்ணுவான்” என்றான். 

“மதன்கிட்ட சொல்லுங்க, பீப்பி இல்லை ட்ரம்ஸ் கச்சேரின்னு”

“ஏட்டி என் அம்மாடி, அப்படின்னா உனக்கு மாமியார்”

“ம்ம்… மாமியாதான் நானென்ன சேமியான்னா சொன்னேன்?”

“மதுரா!”

“தெரியாமையா கேட்குறேன், மூச்சு விடாம எப்படிங்க இப்படி பேசுறாங்க? போன்ல ஆடியோ ஸ்பீட் கூட்டி வச்சு கேட்ட ஒப்பாரியாட்டம்…”

“மதுரா செல்லம் போதும்டி, வேற பேசு” என கெஞ்சலாக அவன் சொல்ல நொடித்துக் கொண்டவள் பின் பேசவே இல்லை. அவன்தான் பேசினான். வயிராற சாப்பிட்டான். 

உறங்க தயாராகும் நேரம், “பகல்ல தூங்கினியா?” என விசாரித்தான். 

இல்லை என்றவள், “மனசு முழுக்க குழப்பமா இருக்கும் போது தூக்கம் எங்கேருந்து வரும்?” எனக் கேட்டாள். 

அவளை பார்க்க அவனுக்கு இரக்கமாக இருந்தது. அப்பாவை விட்டுத்தான் அம்மாவிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டவன் படுத்து, அவளையும் அருகில் படுக்க வைத்துக்கொண்டான். என்ன நேர்ந்தது என்றே தெரியாமல் இரண்டு நிமிடங்களுக்குள் இருவருமே உறங்கிப் போனார்கள். 

காலையிலும் கனகா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டுதான் இருந்தார். அம்மாவின் தொண்டையில் சுண்ணாம்பு பத்து போடப் பட்டிருந்ததை பார்த்த சேரன் “என்னம்மா ஆச்சு?” என விசாரித்தான். 

கனகா பதில் தராமல் முறைக்க, “நேத்து வச்ச கச்சேரில அம்மாக்கு தொண்டை கப்புன்னு அடைச்சுக்கிட்டு. வெறும் காத்து மட்டும்தான் வருதுண்ணா” என்றான் சரவணன். 

“கொஞ்ச நஞ்சமா கத்தணும், தொண்டை நரம்பு அந்து போச்சுடா உன் அம்மாவுக்கு, இனி ஆயுசுக்கும் வாய தொறக்க முடியாதுன்னு நினைக்கிறேன். இந்த கருமம் முப்பத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாடி எனக்கு தெரியாம போயிட்டுது, இல்லைனா அப்பவே இவ கத்தும் போதெல்லாம் வாய மூட சொல்லாம நல்லா கத்த விட்ருப்பேன்” என்றார் கந்தசாமி. 

கனகா தன் கணவரை பார்வையால் சுட்டு பொசுக்க, “சும்மா இருங்கப்பா” என அப்பாவிடம் சொன்ன சேரன், “ஆஸ்பத்திரி போலாமாம்மா?” என அம்மாவிடம் கேட்டான். 

கனகா எதுவும் சொல்வதற்குள், “அட இருக்கட்டும் விடுடா, ஒத்த நாளாவது வீடு அமைதியா இருக்கட்டுங்கிறேன்” என்றார் கந்தசாமி.

சமையல் வேலையை அப்படியே விட்ட கனகா கோவமாக அறைக்கு சென்று விட, “ஓவரா பேசிப்புட்டியளே ப்பா, இன்னிக்கும் காலை சாப்பாடு  கடைலதான் போல நமக்கு” என்றான் சரவணன். 

தள்ளி வேடிக்கை பார்த்திருந்த மதுராவை அழைத்த சேரன், “சாப்பாடு என்னன்னு பாரு” என்றான். 

“நானா?” என அவள் திகைக்க, “வாங்கண்ணி, எது எங்குட்டு இருக்குன்னு நான் காட்டுறேன்” என்றான் சரவணன். 

சரவணன் மதுராவை விட மூன்று வயது பெரியவன். அப்படியிருக்க அவன் மரியாதையாக பேசுவது கூச்சத்தை கொடுக்க, பெயர் சொல்லியே அழைக்கும் படி கேட்டுக் கொண்டாள். 

“வயசுல என்ன ஆயி இருக்கு? நீ அவன் அண்ணனோட சம்சாரம், முறையா கூப்பிட்டாதான மருவாதயா இருக்கும்?” என்றார் கந்தசாமி. தலையாட்டிக் கொண்ட மதுரா சமையலறை செல்ல, அவள் கேட்டது எல்லாம் எடுத்துக் கொடுத்தான் சரவணன். 

இந்த வருடம் மீன் பிடி குத்தகை எடுப்பது குறித்து சேரனும் அவனது தந்தையும் பேசிக் கொண்டிருந்தனர். 

“எல்லாம் எங்க இருக்குன்னு தெரியுதே உங்களுக்கு? சமையலும் தெரியுமா?” சரவணனிடம் கேட்டாள் மதுரா. 

“ஓரளவுக்கு அண்ணி. என் அண்ணன்லாம் செய்றத சாப்பிடறதோட சரி. அக்காக்கு கல்யாணம் பண்ணி கொடுத்ததும் அம்மாக்கு நான் நல்லா ஒத்தாசை பண்ணுவேன், அப்படி கொஞ்சம் போல இதெல்லாம் தெரியும்” என்றவன் மதுரா எடுத்து வைத்த காய் எல்லாம் நறுக்கி கொடுத்தான். 

“என்னண்ணி செய்ய போறீய?” 

“ரவா பாத்” என்றாள்.

அவள் செய்வதை கண்டு விட்டு, “உப்புமாவ பாத்னு பேர் வச்சு ஏமாத்த பாக்குறீயளோ?” என கிண்டல் செய்தான். 

“நிஜமா இதுக்கு இதான் பேரு. எங்க சித்தி அப்படித்தான் சொல்வாங்க” 

“என் அண்ணனுக்கு தமிழ்ல புடிக்காத வார்த்தை உப்புமா, மொத மொத சமைக்கும் போதே அவனுக்கு சத்திய சோதனை வச்சிப்புட்டியளே?”

பாவமாக பார்த்தவள், “மாவு கூட இல்லை, அவருக்கு புடிக்காதுன்னு எனக்கு தெரியாது, இப்ப என்ன செய்ய?” எனக் கேட்டாள். 

குண்டான் ஒன்றை திறந்தவன், “வேறென்ன பழைய கஞ்சிதான், அப்படியே உரிச்ச சின்ன வெங்காயமும் சுட்ட கருவாடும் சைட் டிஷ்ஷா கொடுத்திட்டீயன்னா அவன் பிரேக் ஃபாஸ்ட் அமர்க்களமா முடிஞ்சிடும்” என்றான். 

“கருவாடா?” முகம் சுளித்தாள் மதுரா. 

விளையாட நினைத்த சரவணன், “இதுக்கே இப்படியா? இத்தனை வருஷம் லவ் பண்ணி என்னத்த தெரிஞ்சுக்கிட்டீய அவனை பத்தி? அவன் ஃபேவரைட்டே உடும்பு கறிதான்” என்றான். 

நிஜமாகவே மதுராவின் முகம் வெளுத்துப் போய் விட்டது. “திருவிழாங்கிறதால இப்போ கவிச்சு பொழங்க கூடாது. அதனால வெங்காயத்தோட ஊறுகாய எடுத்து வச்சுக்கோங்க. மெதுவா அண்ணனுக்கு புடிச்ச உடும்புக் கறி, முயல் கறிலாம் செய்ய கத்துக்கிடுங்க” என்றவன் இன்னும் என்னவெல்லாம் சொல்லி அவளை பயமுறுத்தியிருப்பானோ அதற்குள் சேரன் வந்து விட்டான். 

“அப்பாக்கு பசிக்க ஆரம்பிச்சிட்டுது, இன்னும் என்ன செய்றீய ரெண்டு பேரும்?” என சேரன் கேட்க, உணவு பாத்திரங்களை எல்லாம் கூடத்துக்கு எடுத்து சென்றனர் மற்ற இருவரும். 

மாமனாருக்கும் கொழுந்தனுக்கும் ரவா பாத் பரிமாறியவள் சேரனுக்கு பழைய கஞ்சியை வைக்க, அவன் கேள்வியாக பார்த்தான். 

“அது மீந்து போயிட்டுதுன்ன? என்ன செய்யன்னு நான் கேட்டேன். உன் அண்ணன் எதுக்கு இருக்கார்னு அண்ணித்தான் உனக்காக எடுத்திட்டு வந்து வச்சாங்க” சிரிக்காமல் சொன்னான் சரவணன். 

கணவனிடம் இல்லை என தலையாட்டியவள் சரவணனை கண்டனமாக பார்க்க, “சாரி அண்ணி, நீங்க இத சொல்லாம அண்ணனை சாப்பிட வைக்கிறேன்னு சொன்னதை மறந்திட்டு சொல்லிப்புட்டேன்” என்றான். 

தம்பியை பற்றி நன்கறிந்த சேரன், “அவன் விளையாடுறான், நீ நார்மலா இரு” என்றான். 

“எதுக்குடா மருமவள கலவரம் பண்ற? சாப்பிட்டு முடிக்கிற வரை வாய தொறக்கப்படாது ஆமாம்” கந்தசாமி அதட்ட விளையாட்டை கை விட்டான் சரவணன். 

சேரன் பழைய சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்க, “போதும், இதுவும் கொஞ்சம் சாப்பிடுங்க” என சொல்லி ரவா பாத் பரிமாறினாள். 

முதலில் விழிகள் தெறிக்க பார்த்தவன், “உப்புமாவா?” என்றான். 

“இல்ல… பாத் பாத்… ரவா பாத்!” நக்கல் செய்தான் சரவணன். 

“மொத தடவ செஞ்சது, இன்னிக்கு மட்டும் கொஞ்சமா சாப்பிடுங்களேன்” என மதுரா சொல்ல, “அதென்னடா அந்த முழி முழிக்கிற? அதான் ஆயி சொல்லுதுன்ன? சாப்பிட்றான்னா…” அதட்டல் போட்டார் கந்தசாமி. 

வெளி வேலைகள் இருக்கும் சமயங்களில் வேகமாக சமைக்க வேண்டும் என எப்போதாவது கனகா உப்புமா செய்வார்தான். அப்போதும் சாப்பிட சொல்லி மகனை அதட்டுவார் கந்தசாமி. அதையெல்லாம் காதில் வாங்கவே மாட்டான் சேரன். 

இப்போது மனைவியின் ஆர்வமான பார்வையை பார்த்தவன் அப்பாவை எதிர்த்து பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான். அவனது தந்தையும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்து சத்தமில்லாமல் சிரித்துக்கொள்ள, “நெஜமாவே நல்லா இருக்கு, அதான் சாப்பிடுறேன், சிரிக்காதீய” அசடு வழிய சொன்ன சேரனுக்கும் சிரிப்பு வந்து விட்டது. 

மெல்ல மெல்ல அவர்களின் சின்ன சிரிப்பு பெரும் சிரிப்பாக மாறியிருக்க, அறையின் கதவோரத்தில் நின்று பார்த்திருந்த கனகாவுக்கு திகு திகு என இருந்தது.