ஆள வந்தாள் -5
அத்தியாயம் -5(1)
பீமனாக வேடமிட்டு ஆட என ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அனைத்து ஊர் தலைவர்களும் சேர்ந்து ஒரு மனதாக தேர்ந்தெடுப்பார்கள். திருவிழாவின் தொடக்க நாளில் இருந்து தினமும் முன் மாலை நேரத்தில் கொட்டு மேளம் முழங்க பீமன் வீதி உலா புறப்படும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நாள் என கணக்கு. ஒரு வீடு பாக்கி இல்லாமல் எல்லா வீடுகளுக்கும் செல்லும். அன்றைய தினம் வீட்டை கழுவி மதியமே பெரிய கோலமிட்டு, மரைக்கால் நிறைய நெல் வைத்து, உரிக்கப் படாத தேங்காயையும் வாசலில் வைத்து விடுவார்கள்.
நெல்லை எடுத்துக் கொண்ட பீமன் கையில் இருக்கும் கதாயுதம் வைத்து தேங்காயை அடித்து உடைத்து விட்டு வணங்குபவர்களுக்கு திருநீறு பூசி விடும். கோயிலுக்கு வேறு ஏதேனும் காணிக்கை கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் பணம், அரிசி என கொடுப்பார்கள். பீமனுடன் வருபவர்கள் காணிக்கையை வாங்கி யார் என்ன கொடுத்தார்கள் என பெயர் மற்றும் ஊர் குறித்துக் கொள்வார்கள்.
நல்ல வாட்ட சாட்டமான திடகாத்திரமான ஆள்தான் பீமனாக வேடமிட்டு வருவார்கள். அத்தனை ஊர்களுக்கும் காலணி இல்லாமல் சென்று தேங்காயை அடித்து உடைத்து என பலம் வேண்டுமே. அப்படியும் கூட சில சமயங்களில் பீமன் வேடமிடுபவருக்கு கால் வீங்குதல், சோர்வு என உபாதைகள் வரும். அந்த நேரம் ஆளை மாற்றி விடுவார்கள்.
ஆனால் ஆள் மாறாமல் ஒரே ஆள் எந்த குறையும் இல்லாமல் செய்ய வேண்டும், அதுதான் நல்லது என நினைப்பார்கள்.
பீமன் சாமி வரும் போது மிளகாய், புளி போன்றவற்றை எதிரில் காய வைக்க கூடாது என்பது சம்பிராதயம். அப்படி இருந்தால் கோவத்தில் அந்த பொருட்களை வாரி இறைத்து ஆட கிளம்பி விடும் பீமன். ஆட்டம் அடங்க வெகு நேரம் ஆகும். இது செவி வழி செய்தியே தவிர பல வருடங்களாக அப்படி ஒரு சம்பவம் நடந்தததாக வரலாறு இல்லை.
உடல் முழுதும் கருப்பு வண்ணம் பூசி, கருப்பு நிறத்தில் பாவாடை போன்ற உடை தரித்து, இரண்டு பூ மாலைகளை மார்புக்கு குறுக்காக அணிந்து, காலிலும் இடுப்பிலும் சதங்கைகள் கட்டி, முகத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு வர்ணக் கலவை பூசி, நெற்றியில் திலகமிட்டு, கையில் பெரிய கதை சுமந்து, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்து வரும் பீமனை கண்டு பெண்களும் குழந்தைகளும் அஞ்சுவார்கள்.
தூரத்தில் கொட்டு மேளம் சத்தம் கேட்கும் போதே பயம் கொள்பவர்கள் அடுக்களையில் அண்டா குண்டான்களுக்கு இடையில் போய் ஒளிந்து கொள்வார்கள்.
மதுராவின் ஊரில் உள்ளவர்கள் சிலர் ஆற்றங்கரை பக்கம் இருக்கும் மாடசாமி என்பவரது மாட்டுக் கொட்டகைக்கு போய் விடுவார்கள்.
சாங்கியம் அனைத்தும் கூட வீட்டு ஆண்கள்தான் செய்வது வழக்கம்.
“என்னால முடியாதுடா நான் செய்ய மாட்டேன்டா, எம்புருஷன் காதுக்கு சேதி போனா என்னாகும்ங்கிறேன்?” என பயந்து போய் கூறினாள் தனம்.
“யாரு நீயி உன் வூட்டுகாரருக்கு பயந்து நடுங்குற? நம்புற மாதிரி இருக்கான்னு நீயே ரோசனை பண்ணு அத்தாச்சி” என்றான் செழியன்.
“அதானே உன் வார்த்தையை மீறிப்புட்டா அடித் தொடைய புடிச்சு நரடி விட்டுடுறேன்னு அத்தான் ஊர் முழுக்க சொல்லி வச்சிருக்காப்டி, அதனால அந்த அப்புராணி மனுஷனுக்கு பயப்படுறேங்கிற கதையெல்லாம் வுடாதக்கா” என்றான் மதன்.
தனம் பாவமாக பார்க்க, “இந்தா அக்கா, நானும் அவளும் சேரணும்னு ஆசையில்லைன்ன உனக்கு?” எனக் கேட்டான் சேரன்.
“அப்படிலாம் இல்ல தம்பி, இல்லாமதான் அங்குட்டு நடக்குற விஷயத்தை எல்லாம் ஒண்ணு வுடாம சொல்றேனா?” எனக் கேட்டார் தனம்.
“அப்ப நாங்க சொல்றத கேளு, பெரிய கம்பசித்திர காரியம் ஒண்ணும் இல்ல, பீமன் சாமி வர்ற நேரம் பார்த்து வழியில மிளகாய காய வச்சிடு, அவ்ளோதான்” என்றான் சேரன்.
“எல்லாம் சரி, வழில மொளவா கெடந்தா விசிறி எறிஞ்சிட்டு பீமன் சாமி ஆடும்னு சொல்லிப்பாவோ, ஆனாலும் என் வயசுக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்தத பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்ல, ஒரு வேளை சாமி ஆடலைனா என்ன செய்றதா இருக்கீய?” என சந்தேகம் கேட்டாள் தனம்.
நண்பர்கள் மூவரும் குறும்பாக சிரித்தனர். “எல்லாம் நம்ம சாமிதான? மொளவாய பறக்க வுட்டுட்டு சாமி எப்படி ஆடுதுன்னு மட்டும் பாரு அத்தாச்சி” என்றான் செழியன்.
மோவாயில் கை வைத்து அவர்களை வியப்பாக பார்த்த தனம், “அடப்பாவி பயலுவளா! பீமன் சாமிய கூட கரெக்ட் பண்ணிப்புட்டியளா?” எனக் கேட்டாள்.
தனத்தின் கன்னத்தில் விளையாட்டாக இடித்த செழியன், “காதல்னா சாமி கூட ஹெல்ப் பண்ணும்ன?” என்றான்.
சிரித்த தனம், “சரி சரி… காசு எடுங்க, நானும் மொளவா வாங்கணும்ன?” என்றாள்.
“அட கசினாரி அத்தாச்சி!” நொடித்தான் செழியன்.
சேரனின் சட்டைப் பையிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்த மதன் தனத்தின் கையில் திணித்தான்.
“எந்தூர்லடா ரெண்டு கிலோ மிளகா ஆயிரத்துக்கு விக்குது?” எனக் கேட்டான் சேரன்.
“பக்கத்தூரு கவுன்சிலரே! மொத கல்யாணத்தைதான் சிக்கனமா நடத்திப்புட்டிய, இப்பவும் ஒருத்தருக்கு கூட கறி சோறு வேணாம்… காய்கறி சோறு கூட போடாமன்ன காதும் காதும் வச்சா மாதிரி கட்டினவளையே கட்டிக்க பாக்கிறிய? ஆயிரம் ரூபாக்கு மூக்கால அழாம இருங்க” என்றாள் தனம்.
“நான் கறி சோறு போட்டா நீ மொய் வைக்கணும்ன? ரெண்டுக்கும் சரியா போயிட்டு” என சேரன் சொல்லிக் கொண்டிருக்க, “டேய் பங்கு, தனம் அக்காவும் அவ்வோ வீட்டுக்கும் சேர்த்து மொளவா மல்லி எல்லாம் வாங்கிக்கனும்ன? இப்ப என்ன கொறைஞ்சு போச்சுங்குறேன்?” எனக் கேட்ட மதன் இன்னொரு ஐநூறு ரூபாய் தாளையும் சேரனிடமிருந்து உருவி தனத்திடம் கொடுத்தான்.
தனம் மூன்று நோட்டுக்களையும் கையில் வைத்துக்கொண்டு சேரனை நக்கலாக பார்க்க, “ஒம்பொண்ணு சடங்கானா முறை செய்யணும்ன? அதுல கழிச்சிக்கிறேன்” என கிண்டலாக சொன்னான் சேரன்.
தனத்தின் முகம் சுருங்கி விட, “விளையாட்டு பேச்சு புரியாதாக்கா உனக்கு? சும்மா சொன்னேன், இன்னும் எவ்ளோ வேணும் உனக்கு?” எனக் கேட்டு பையிலிருந்து இன்னும் பணம் எடுத்தான்.
“உள்ள வையு தம்பி, எம்மூட்டு மவ சடங்கானா அரை முழம் பூ வாங்கி வந்து கொடுத்திட்டு வாழ்த்திட்டு போ, யாருக்கு வேணும் சீரும் செனத்தியும்?” எனக் கேட்ட தனம் கிளம்பி விட்டார்.
சேரனின் கையிலிருந்த பணத்தை பட்டென பறித்துக் கொண்ட செழியன், “காருகாரனுக்கு கொடுக்கணும்ன?” என சொல்லி பைக்கில் ஏறி அமர்ந்தான்.
“அடேய் நாதாரி, ஏழாயிரம் இருக்குடா, தேங்கா வித்த காசு, அப்பாக்கு என்ன கணக்குடா சொல்ல?” சேரன் கேட்க, “உள்ளதை சொல்லுடா மாப்ள, நீதான் உண்மை விளம்பி ஆச்சே?” எனக் கேட்டுக் கொண்டே புறப்பட்டு விட்டான் செழியன்.
சேரன் மதனை பார்க்க, “எல்லாம் ரெடிடா, சொதப்பினா கூட பாதகம் இல்ல, அவிய்ங்க சுதாரிப்பு ஆவறதுக்குள்ள ஆள திரட்டிகிட்டு வந்து நின்னுடுவேன்” என்றான் மதன்.
சென்னையிலிருந்து வந்ததிலிருந்து சேரனிடம் பேச முயல்கிறாள் மதுரா.
அம்மாவை விட சித்தியிடம்தான் அவளுக்கு ஒட்டுதல் அதிகம். கிராமத்தில் பிறந்தவர் என்றாலும் பதினெட்டு வயதில் திருமணம் முடிந்து சென்னை சென்றவருக்கு ‘காதல் கல்யாணம்’ என்பது பெரிய தவறு இல்லை. மதுராவின் விஷயத்தில் அவர்கள் வீட்டினர் நடந்து கொண்ட முறையில் அவருக்கு ஒப்புதலும் இல்லை.
மூன்று வருடங்களுக்கு முன்பிருந்த சூழலில் மதுராவை அங்கிருந்து அழைத்து வந்து அவளுக்கு அமைதி அளிக்க வேண்டும் எனதான் நினைத்தார். அவரிடம் மதுராவாக சேரனை பற்றி எதுவும் கூற மாட்டாள், அவரும் கேட்டுக் கொண்டதில்லை.
ஊருக்கு வந்த பின்னர்தான் சித்தியிடம் மனம் திறந்தாள். அவரும் அவரது அக்காவிடம் பேசுகிறேன் என சொன்னவர் பேசவும் செய்தார். முதல் முறை பேசிய போது ‘அந்த பேச்சே எடுக்காத’ என சத்தம் போட்ட அஞ்சலை அடுத்தடுத்த முறை அப்படி சத்தம் போடாமல் அமைதியாக தங்கையின் பேச்சுக்கு செவி மடுத்திருந்தார்.
சித்தி மூலமாக மதுராவுக்கு இவ்விஷயம் தெரிய வர, அம்மா மூலமாகவே தனக்கு ஒரு நல்லது நடக்கும் என நம்பினாள். இதையெல்லாம் சேரனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. எங்கே… மதுரா மீது கொண்ட கோவத்தினால் அவளின் எந்த அழைப்பையும் ஏற்காமல் அவன்தான் போக்கு காட்டிக் கொண்டிருக்கிறானே.
சதீஷ் அவனது பெற்றோரோடு வனராஜனை காண வந்திருந்தான். பேச்சு வாக்கில், “உங்க தங்கச்சிய சதீஷுக்கு ரொம்ப புடிச்சு போயிட்டுதாம். நடந்தது எல்லாம் எங்களுக்கு தெரியும், என்ன சொல்றீய?” எனக் கேட்டார் சதீஷின் அம்மா.
வனராஜனிடம் ஏற்கனவே சதீஷ் சொல்லியிருந்ததுதானே? அவனுக்கும் இவனை மாப்பிளை ஆக்கிக் கொள்ள விருப்பம் இருந்தது. அம்மாவிடம் சொல்லி வைத்திருந்தான். அவரும் யோசித்து சொல்வதாக சொல்லியிருந்தார்.
இப்போது அவனது பெற்றோரே நேரில் வந்திருக்க ஏதாவது முடிவு சொல்ல வேண்டுமே. கூடத்தில் இருந்த டிவியை போட்டு விட்டவன் அவர்களை காத்திருக்க சொல்லி விட்டு அம்மாவை காண சென்றான்.
“இன்னும் எதையும் மறக்கலடா அவ. ஏற்கனவே கட்டின தாலிய கழட்டி கொடுக்க வச்சதே எனக்கு ஒப்பல. அவ்வோளும் வேத்தாளுங்க இல்லையே, நம்ம சனம்தானே, திருவிசா முடிஞ்சதும் அந்த கவுன்சிலர் தம்பிக்கே அவளை கட்டி கொடுத்திடலாம்டா” என்றார் அஞ்சலை.
பற்களை நெறித்துக் கொண்டு கோவமாக அம்மாவை பார்த்த வனராஜன், “வீட்டுல வெளியாளுக இருக்காவோளேன்னு பார்க்கிறேன், இந்த எண்ணத்துலதான் கமுக்கமா இருக்கியா நீ? என் நெஞ்சுல மிதிச்ச பய எம்மூட்டு மாப்ளயா? ஆத்தாளுக்கும் மவளுக்கும் பால்டாயில ஊத்தி பாடைல ஏத்திப்புடுவேன்!” என மிரட்டினான்.
“ராசா… தங்கம்… கொஞ்சம் ரோசனை பண்ணி பாருடா, இவள பத்தின சேதி ஊரு முழுக்க தெரியும், போற இடத்துல இப்ப நல்லா வச்சுக்கிட்டாலும் நாள பின்ன ஏதும் சொல்லி காட்டிப்புட மாட்டாவோளாடா? எதித்து நிக்க தெரியாதவடா…” அஞ்சலை பேசிக் கொண்டிருக்க அருகிலிருந்த மண் சட்டியை எடுத்து தரையில் உடைத்தான் வனராஜன்.