ஆள வந்தாள் – 4

அத்தியாயம் -4(1)

மூன்று வருடங்களுக்கு முன்பு…

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தாள் மதுரா. மேலே படிக்க அவள் ஆசைப்பட தங்கள் அழகான பெண்ணை இன்னும் வெளியில் அனுப்ப பயந்தார்கள் அவளின் பெற்றோர். ஆகவே அவளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என மதுரா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவளது தந்தை சிவபுண்ணியம் கேட்பதாக இல்லை. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

சேரனுக்கு அழைத்து விவரம் சொன்னாள் மதுரா. அவன் அவனது வீட்டில் அவர்களின் காதலை சொல்ல எதிர்ப்புதான் எழுந்தது. இரு குடும்பத்து அரசியல் பகையை சொல்லி மறுத்தனர்.

தன் ஆசையை சொல்லி ஒரு வாரம் போராடி தன் வீட்டினரின் சம்மதத்தை வாங்கினான் சேரன்.

சேரன் குடும்பத்தினர் பெண் கேட்டு மதுராவின் வீடு வந்தனர். தன்னுடைய அண்ணன் சிதம்பரத்தின் பேச்சை கேட்டுக் கொண்டு வந்தவர்களை அவமதித்து அனுப்பி வைத்தார் சிவபுண்ணியம்.

“உன் விருப்பம்னுதான் பகைய மறந்து வீடேறி பொண்ணு கேட்டு போனோம். மூக்கறு பட்டதுதான் மிச்சம். பார்க்கிறவனுவோ அம்புட்டு பேரும் துக்கம் விசாரிக்க மாதிரின விசாரணை போடுறானுவோ. கழுதை விட்டுத் தள்ளு, ஆறு மாசத்துல அந்த பொண்ண விட அழகா ஒரு பொண்ண பார்த்து கட்டி வைக்கிறேங்கிறேன்” என சொல்லி விட்டார் கந்தசாமி.

கனகாம்புசம் பற்றி கேட்கவே வேண்டாம். என் மகனுக்கு பெண் இல்லை என்பார்களா என்ற ஆத்திரம்.

“அவிங்க என்னடா உன்னை வேணாம்னு சொல்றது? அந்த சிறுக்கிய நாம்பளும் வேணாம்னுடுவோம். அந்த சேப்பு தோலுகாரி இல்லைனா என்னடா வெள்ளத்தோலுகாரியா கொண்டாறேன் பாரேன். ஐயனார் கணக்கா இருக்க பையன விட்டுப்புட்டோமேன்னு வாயுலேயும் வயித்திலேயும் அடிச்சிக்கிட்டு அழுவுறாளுவளா இல்லையான்னு மட்டும் பாரு!” என புலம்பி தீர்த்து விட்டார்.

மகனின் வாடிய முகம் காண பொறுக்காத கந்தசாமி, “செத்த செவனேனு கெடடி!” என மனைவியை அதட்டி வாயை மூட செய்து விட்டு மகனின் தோளை ஆதரவாக பற்றினார்.

 ‘நீங்களாவது என்னை புரிந்து கொள்ளுங்களேன்’ என்ற பார்வை பார்த்த மகனிடம் “ஐயா ராசா, கொஞ்ச நாள் போனா சரியா போவும்டா. நீ வேணும்னா உன் கூட்டாளிங்களோட கேரளா கீரளான்னு டூர் போயிட்டு வாயேன்” என வாஞ்சையாக கூறினார்.

“என்னத்த பெருசா ராசா ராசாங்கிறிய? என்னத்த கேட்டுப்புட்டேன்? மனசுக்கு புடிச்சவள கட்டி வைக்க சொன்னா அதையும் இதையும் சொல்லிக்கிட்டு… கட்டையில போற வரைக்கும் அவளை மறக்க முடியாதுங்கிறேன், சும்மா…” என்றவனின் குரல் கலங்கி போயிருந்தது.

வாலிப பருவத்தில் முதன் முதலில் நெஞ்சில் இடம் பிடித்த பெண். தன் வாழ்க்கைத் துணை அவள்தான் என முடிவு செய்த பின்னர் எத்தனை எத்தனை கனவுகள், மரித்தாலும் மறப்பானா அவளை?

“அவர் என்னத்தடா செய்யணும் இப்ப? நாங்களா மாட்டோம்னோம்? அவ்வோ இல்லை முறுக்குறாவோ? வேற ஏதாவது பேசுன மரியாதை கெட்டு போவும் சொல்லிப்புட்டேன்” என கத்தினார் கனகா.

சேரன் கோவமாக வெளியே சென்று விட, “அந்த பொண்ண அவனும் மறக்கணும்ன? உடனே எப்படி நடக்கும், காலம் வேணும்ன? நீயும் சேர்ந்து படுத்தாம அனுசரிச்சு நட. இல்லைனா அவனுக்கு அந்த பொண்ணு மேல உள்ள நாட்டம் மாறவே மாறாது” என மனைவியிடம் சொல்லி விட்டு கந்தசாமியும் வெளியேறி விட்டார்.

மதுராவின் கைப்பேசியை பறித்து வைத்து விட்டார் சிவபுண்ணியம். நிலவரம் அறிய சென்ற மதன் யாருக்கும் தெரியாமல் அவனது கைப்பேசியை அவளிடம் கொடுத்து சேரனிடம் பேச சொன்னான்.

அவளும் அவனிடம் பேச, “நடுசாமம் நான் வர்றேன், நீ என் கூட வந்திடு, எங்குட்டாவது போயிடலாம்” என்றான் சேரன்.

அதிர்ந்து போனவள், “அதெல்லாம் தப்புங்க, காலத்துக்கும் ஓடிப் போனவங்கிற பேரு கூடவே வரும். ரெண்டு வீட்டு சம்மதத்தோடு ஊரறிய கல்யாணம் ஆகுதுன்னா சரி… இல்லைனா…” என அவள் சொல்லிக் கொண்டிருக்க இடையிட்டான் அவன்.

“இல்லனா என்னடி என்னங்கிறேன்? உன் அப்பன் சொல்றவனை கட்டிகிட்டு…” என அவன் கோவமாக பேச அவனை பேச விடாமல், “அவ்ளோதான் உங்களுக்கு சொல்லிட்டேன், உங்கள லவ் பண்ணிட்டு இன்னொருத்தவனை கட்டிப்பேன்னு எப்படி நினைச்சீங்க? எல்லாத்திலேயும் அவசரம், நல்லா தெரிஞ்சுக்கோங்க, எனக்கு கல்யாணம் ஆனா அது உங்க கூடத்தான், இல்லைனா கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். எம் மனசுக்குள்ள எப்பவோ உங்களை புருஷனா நினைக்க ஆரம்பிச்சிட்டேன், அது புரியாம கண்டமேனிக்கு பேசிக்கிட்டு…” அழுகையும் ஆத்திரமுமாக சொன்னாள்.

அதற்குள் இவள் சேரனுடன் பேசிக் கொண்டிருப்பது வனராஜனுக்கு தெரிந்து விட்டது. மதனின் கைப்பேசியை பிடுங்கி அடித்து உடைத்தவன் மதனையும் அடித்து விட்டான்.

அண்ணனின் கோவத்தில் திகைத்துப் போனவளாக மதுரா நிற்க, “பொட்ட புள்ளய அடிக்க கூடாதுன்னு விடுறேன், ஒழுக்கமா இரு” என தங்கையிடம் அதட்டலாக சொல்லி மதனை இழுத்துக் கொண்டு போய் வீட்டின் வெளியில் தள்ளாத குறையாக விட்டான்.

மாலையில் தன் சொந்த வேலை விஷயமாக வனராஜனின் ஊர் வந்திருந்த சரவணனை காரணமே இல்லாமல் வனராஜனும் அவனது சகாக்களும் சேர்ந்து அடிக்க ஆரம்பித்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி வந்தவனை எதிரில் பைக்கில் வந்து கொண்டிருந்த செழியன் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து விரைந்து விட்டான்.

தென்னந்தோப்பில் கயிற்று கட்டிலில் மல்லாந்து படுத்திருந்த சேரனின் அருகில் வீங்கிய கன்னத்தோடு அமர்ந்திருந்தான் மதன். அப்போதுதான் சரவணனும் செழியனும் வந்து சேர்ந்தனர். நண்பனும் தன் தம்பியும் இப்படி அடி வாங்கியதை சேரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அன்றைய இரவில் வனராஜனின் நெல் குடவுனுக்கு சென்ற சேரனும் செழியனும் வனராஜனை அடி வெளுத்து விட்டனர். சத்தம் கேட்டு வேறு ஆட்கள் வருவதற்குள் சுவர் ஏறிக் குதித்து தப்பித்தும் சென்று விட்டனர்.

இது எதுவும் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே இருந்த மதுராவைத்தான் அவளது வீட்டினர் குற்றம் சுமத்தினார்கள். வனராஜன் சரவணனை அடித்ததை விட்டு விட்டனர், சேரன் சரியான அடாவடி ஆள் என்பது போல அவனை மட்டும் திட்டினார்கள்.

உடல் வலியில் முனகிய மகனை காணப் பொறுக்காத அஞ்சலை, “எம்மூட்டு மவன அடிச்சவன் கை வெளங்காம போவ… அவன் தலையில இடி விழுக…” என சாபம் கொடுத்தார்.

தாள முடியாத மதுரா, “அவரோட தம்பிய அண்ணன் அடிக்க போயிதானம்மா அவர் இப்படி பண்ணிட்டார், இப்படிலாம் சாபம் விடாதம்மா, கோவக்காரரே ஒழிய கெட்டவர் இல்லம்மா அவர்” என சேரனுக்காக பரிந்து பேசி விட்டாள்.

பெருக்குமாறை கையில் எடுத்துக் கொண்ட அஞ்சலை அவளை அடித்து நொறுக்கி விட்டார். அவருக்கே கை வலி எடுக்கவும்தான் விட்டார்.

உடல் வேதனையிலும் மன வேதனையிலும் அழுது அழுது அவளுக்கு காய்ச்சலே வந்து விட்டது. தோப்பிலிருந்த சேரனுக்கு விஷயம் தெரிய வர, அவளை காண வீட்டுக்கு செல்கிறேன் என தயாரானான்.

அப்படி சென்றால் இவனை சும்மா விட்டு விடுவார்களா மதுராவின் வீட்டினர். ஆதலால் அவனது நண்பர்களும் சரவணனும் அவனை போக விடாமல் தடுத்து பிடித்துக்கொண்டனர்.

“பொறந்ததிலிருந்து ஒரு அடி வாங்கினவ இல்லடா அவ, எனக்காக பேசி இப்படி அடி பட்டு கெடக்கா, ஒரு தடவ அவளை பார்த்தாதான் எனக்கு நிம்மதி, என்னை விடுங்கடா” என அவர்களின் பிடியிலிருந்து சேரன் திமிற சரவணன் சொன்ன தகவலின் பெயரில் அவ்விடம் வந்து விட்டார் கந்தசாமி.

அவரும் மகனை அங்கு செல்லக்கூடாது என திட்டி தடுக்க, இயலாமையில் அருகிலிருந்த தென்னை மரத்தில் ஓங்கி குத்தினான் சேரன்.

மற்றவர்கள் திகைக்க, மீண்டும் மீண்டும் மரத்தில் கையை குத்த ஆரம்பித்தான். அவனது நண்பர்கள் மீண்டும் சென்று அவனை பிடித்துக்கொண்டனர்.

“பிக்காலி பயலா போயிட்டியாடா?” என கத்தினார் கந்தசாமி.

“ஆமாம்!” என அவனும் பதிலுக்கு இரைந்து நண்பர்களை முறைக்க அவர்கள் அவனை விட்டனர்.

மதனுக்கு கைப்பேசி அழைப்பு வர ஏற்று பேசியவன், “வீட்டுக்கெல்லாம் போக வேணாம்டா, மதுவை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போயிட்டு வந்திட்டாங்களாம், இப்ப நல்லா இருக்காளாம். வேணும்னா சாயந்தரம் அக்காவை போய் ஒரு எட்டு பார்த்திட்டு வர சொல்றேன்” என்றான் மதன்.

“போன் எடுத்திட்டு போவ சொல்லு, நான் பேசணும் அவகிட்ட” என்ற சேரனை அவனது அப்பா முறைத்தார்.

“ஏம்ப்பா, என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி பார்க்குறிய? அவ எம்மனசுல வந்தப்பவே எம் பொறுப்பு ஆகிட்டா, அவளுக்கு ஒண்ணுன்னா எனக்கு பதறாதா?” எனக் கேட்டான் சேரன்.

மகன் கலங்கி நின்று கண்டதே இல்லை கந்தசாமி. என்ன வந்தாலும் துணிந்து நிற்பான், எதற்காகவும் அவர் சற்று சோர்ந்தால் கூட ‘ஒண்ணுமில்லப்பா சரி பண்ணிடலாம் விடுங்க’ என்பான். நண்பர்களுடன் சேர்ந்து விட்டால் இடத்தையே கல கலப்பாக்கி விடுவான். அப்படிப்பட்டவன் மதுரா விஷயத்தில் வெகுவாக கலங்குகிறான் என்பது அவரை அசைத்துப் பார்த்தது.

மனமிறங்கிய கந்தசாமி, “அவிங்க வீட்ல பேசி ஆவ போறது ஒண்ணுமில்ல. செவனேன்னு அந்த பொண்ண அழைச்சிட்டு வா, கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேங்கிறேன்” என சொல்லி விட்டார்.

“சோழ நாட்டுல பொறந்தவனுக்கு சேரன்னு பேர் வச்சியளே… என்ன ரோசனைல பேர் வச்சார்னு உங்க மேல ஒரு இதுவாதான் இருந்தேன். ரெண்டே லைன் பேசி ஒரு கலக்கு கலக்கிப்புட்டீய மாமா, என் அப்பாவுக்கும் கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க” என செழியன் கலாய்த்துக் கொண்டிருக்க அப்பாவை நன்றியாக பார்த்தான் சேரன்.

“உன் அம்மாவும் இதுக்கு ஒத்துக்கிட மாட்டாடா, பொறவு சொல்லிக்கிடலாம் அவகிட்ட, அந்த ஆயிகிட்ட பேசிட்டு சொல்லு, ஏற்பாடு பண்றேன்” என சொல்லி கிளம்பி விட்டார் கந்தசாமி.

ஆனால் அப்படி சேரனின் தாயையும் அவளது வீட்டினரையும் எதிர்த்துக் கொண்டு அவனை மணமுடிக்க மதுரா சம்மதிக்கவில்லை. அவர்களின் சம்மதத்தை பெற பொறுமையாக போராடலாம் என அவனிடம் சொல்லி விட்டாள்.

சொன்னது போலவே சாப்பிடாமல், யாரிடமும் பேசாமல் என முடிந்த வரை போராடியும் பார்த்தாள் மதுரா. நீ இப்படியெல்லாம் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என சிவபுண்ணியம் மிரட்ட அதற்கு மேல் போராட மனதில் சக்தியில்லாமல் ஓய்ந்து போய் விட்டாள்.

சிவபுண்ணியத்திற்கு இது வாடிக்கைதான். அவரது இளம் பிராயத்தில் இருந்தே நெருங்கிய உறவுகளிடம் காரியம் சாதிக்க இப்படி தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவார்.

ஒரு முறை அவரது பெற்றோருக்கும் இன்னொரு முறை அவரது மனைவிக்கும் பயம் காட்ட அளவாக பூச்சி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்ல படியாகி விட்டார்.

அப்பாவை பற்றி மதுராவுக்கும் தெரியும் என்றாலும் வயதான காலத்தில் ஏதாவது ஆகி விட்டால் என பயந்து சேரனை பற்றிய பேச்செடுக்காமல் ஒடுங்கி விட்டாள்.

அவசரத்திற்கு மாப்பிள்ளை கிடைக்காமல் போக மதனை மகளுக்கு மணமுடிக்க நினைத்தார் சிவபுண்ணியம். தான் அந்த எண்ணத்தில் அவளிடம் பழகவில்லை என மறுத்து விட்டான் மதன்.

மதுராவின் காதல் விஷயம் அக்கம் பக்கம் பரவியிருக்க எளிதில் எந்த சம்பந்தமும் தகைந்து வரவில்லை.