அத்தியாயம் -26(2)
மிக சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது. மணமகன் வீட்டில் சடங்குகள் முடிந்து மணமகள் வீட்டிற்கு மணமக்கள் சென்றனர். துணைக்கு மோகனும் அவனது மனைவியும் சென்றனர்.
மதுராவுக்கு கையால் திருஷ்டி வழித்த மோகனின் அம்மா, “ஒரு ஆளா விஷேஷத்த கை அமத்திப்புட்டியே!” என புகழ்ந்தார்.
கனகாவின் முகம் இருண்டு போனது. “உனக்குத்தான் அருமை தெரியலைன்னா வேற யாருக்கும் தெரியாம போயிடும்னு நினைச்சியா? இன்னிக்காவது கொஞ்சம் விளங்கின மாதிரி வையுடி மூஞ்ச…” என மனைவியின் காது கடித்தார் கந்தசாமி.
மொய் பணத்தின் கணக்கு வழக்கை செழியனும் மதனும் ஒப்படைத்து விட்டு சென்றிருக்க, அதைத்தான் பந்தலுக்கடியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சேரன்.
அவன் பக்கத்தில் வந்தமர்ந்த மதுராவின் பார்வை பந்தக்கால் போட்டிருந்த இடத்தில் இருந்தது. அங்கு மதுராவின் கையால் போட்டிருந்த நவ தானியங்கள் தள தள என செழிப்பாக வளர்ந்திருக்க பார்க்க ரம்மியமாக இருந்தது.
பேனாவை காதில் சொருகிக் கொண்டவன், “என்னடி அங்குட்டு பார்வை?” எனக் கேட்டான்.
“தெரியலை, ரொம்ப நேரமா உங்களை கட்டிக்கணும் போல தோணிச்சு. ஆளு அகப்படவே இல்ல, அதான் நான் ஒருத்தி இருக்கேன்னு நினைவு படுத்த வந்தேன்” என சாதாரணமாக சொன்னாள்.
திகைத்த சேரன் பின் சிரிக்க, அவளும் அவனது சிரிப்பில் இணைந்து கொண்டாள்.
*****
அதிக நாளெல்லாம் சேரன் காத்திருக்கவில்லை. தம்பியின் திருமணம் முடிந்த பத்து நாட்களில் தனியாக வாடகைக்கு வீடு தேட ஆரம்பித்து விட்டான்.
மகன் தனியே சென்று விட போவதை எண்ணி ஆரம்பத்தில் கந்தசாமியிடம் கலக்கம் இருந்தது என்னவோ உண்மைதான். பிரச்சனை நடந்த குறுகிய காலத்திற்குள் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தள்ளி நிற்காமல் சரவணனின் திருமணத்தை எடுத்து கட்டி செய்த மதுரா அவரின் மனதில் உயர்ந்து நின்றாள்.
இப்படி பட்ட மருமகளுக்கு மன நிம்மதியை வழங்குவதை காட்டிலும் வேறென்ன செய்து விட முடியும் அவரால்? வீடு கட்டியதும் மீண்டும் பக்கத்தில்தானே வரப் போகிறார்கள் என்பதால் அவரே வாடகைக்கு வீடு பார்த்து மகனையும் மருமகளையும் அங்கு அனுப்பி வைத்து விட்டார்.
“என்ன மாமா, கடைசி நேரம் அழுது கிழுது அவனை கைக்குள்ள வச்சிக்கிடுவீயன்னு பார்த்தேன், நீங்களே தனியா வச்சிட்டீய?” எனக் கேட்டான் மோகன்.
“ஒரு வூட்டுக்குள்ள ஒன்னா இருந்து அடிச்சுக்கிட்டு நிக்கிறத விட தள்ளி இருந்து ஒத்துமையா இருக்கிறது மேல்தான மாப்ள? இடையில எம்மவன்கிட்டருந்து மனசளவுல தள்ளி போயிட்டேன் மாப்ள, சரி பண்ண வேணாமா?” எனக் கேட்டார் கந்தசாமி.
“சரிதான், சேரனை தள்ளி வச்சு அவன் மனசுல நெருக்கமாவ பார்க்குறீயன்னு சொல்லுங்க” என மோகன் கிண்டலாக சொன்னாலும் அதுதான் உண்மை.
மூன்றே மாதங்களில் புது வீடு கட்டிக் கொடுத்து மகனையும் மருமகளையும் மீண்டும் அருகில் அழைத்துக் கொண்டார் கந்தசாமி. அவர் வீடு கட்டி கொடுக்க அத்தனை எளிதில் சேரனும் சம்மதித்திருக்கவில்லை.
“இதை செய்யும் உரிமை கூட எனக்கில்லைனா, அப்புறம் எதுக்குடா நான் இருக்கணும்?” என கந்தசாமி சத்தம் போட்டார். சேரனின் நண்பர்களும் மோகனும் கூட எடுத்து சொன்னார்கள்.
“எனக்கும் என் பொண்டாட்டிக்கும் யாரும் செய்ய வேணாம், நான் பார்த்துப்பேன்” எனதான் நின்றான் சேரன்.
“முன்ன இருந்த நிலைமை வேறடா. உன்னால அப்படி செஞ்சுக்க முடியும்னு எங்களுக்கு தெரியாதா? அதுக்காக உன்னை பெத்தவரை நோகடிக்கணுமா? அவர் ஒரு முறை தவறிப் போய் நடந்ததுக்கு நீ தர்ற நினைக்கிற தண்டனை ரொம்ப பெருசுடா. வேணாம் சேரா” என மோகன் எடுத்துக் கூற, அவனது நண்பர்களும் அதையே சொல்ல பின்னர்தான் சம்மதித்தான்.
புது மனை குடி போகும் சமயம் அண்ணன் சீரோடு வருவானே அப்போது என்ன செய்ய என சங்கடம் கொண்டாள் மதுரா.
வனராஜனின் மனமாற்றம் சேரனுக்கு தெரிந்திருந்தது. மதுராவுக்கு அவளுக்குண்டான உரிமைகளை தடுத்து விடக்கூடாது என்ற புரிதலும் அவனுக்கு வந்திருந்தது.
வனராஜனும் மன்னிப்பு என கேட்டுக் கொள்ளா விட்டாலும் சேரனை தரக் குறைவாக பேசியதற்காக உண்மையாக மனம் வருந்துகிறான். அதை சேரனும் உணர்ந்திருக்க வார்த்தையால் மன்னிப்பு கேட்டால்தான் ஆகிற்று என நிற்கவில்லை.
வண்டி வண்டியாக சீரை இறக்கி சேரனை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்க கூடாது என எண்ணி வீடு குடி போனால் பிறந்த வீட்டிலிருந்து என்ன செய்வார்களோ அதை மட்டும் முறையாக செய்தான் வனராஜன். சேரனும் ஏற்றுக்கொண்டு விட்டான்.
என்னாகுமோ ஏதாகுமோ என கனகாவை தவிர ஏனைய சேரனின் குடும்பத்தினருக்கும் வனராஜனின் குடும்பத்தினருக்கும் நல்ல பதற்றம்.
ஆனால் அப்படி ரசாபாசம் ஏதும் ஆகாமல் போய் விட, “இதுக்கே வீணா டென்ஷன் ஆகி இரத்தத்த கொதிக்க விடுறாய்ங்கடா, சீக்கிரமாவே இவனுங்க ரெண்டு பேரும் சிம்லால டூயட் ஆடி ரீல்ஸ்ல வுடப் போறாய்ங்க. அப்போ கொதிச்ச இரத்தமெல்லாம் வெடிச்சுக்கிட்டு வெளில வரப் போவுதா இல்லையான்னு மட்டும் பாரு” என மதனிடம் சொன்ன செழியன், பொதுவாக, “ம்ம்ம்… ஷாக்க கொறைங்க ஷாக்க கொறைங்க” என்றான்.
“தம்பிக்கு எப்பவும் ஒரே தமாசு…” வனராஜன் அவனது தோளில் தட்டி சிரித்தான்.
அவன் தட்டிய வேகத்தில் விழப் போன செழியன் சமாளித்து நின்று சேரனை முறைக்க, அவனோ நண்பனை கண்களால் கெஞ்சி சமாதானம் செய்தான்.
*****
கனகா வழக்கம் போல சின்ன மருமகளிடமும் ஆளுகை செய்ய நினைத்தார். சுகந்தி கணவனின் உதவியை எல்லாம் நாடுவதில்லை. உடனே உடனே திருப்பிக் கொடுத்தாள். வெளிப்படைத்தன்மையும் தெளிவும் சுகந்தியிடம் அதிகமாகவே இருக்க யார் எப்படி என அவளே ஆராய்ந்து புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டாள்.
மனைவிக்கும் சின்ன மருமகளுக்கும் பெரிய சண்டை வரட்டுமே என்றெல்லாம் கந்தசாமி காத்திருக்கவில்லை. கையோடு மாடியில் வீடு கட்ட ஆரம்பித்து விட்டார். வீடு தயாராகவும் சின்ன மகன் மருமகளை கூட தனியே வைத்து விட்டார்.
கனகாவால் கணவரிடம் எதற்குமே எதிர்த்து பேச முடியவில்லை. “உன் வீடு உன் சமைய கட்டுன்னு நீ பாட்டுக்கும் ராஜாங்கம் நடந்துடி, வேறெந்த கேள்வியும் என்னை கேக்கபடாது” என தீர்மானமாக சொல்லி விட்டார் கந்தசாமி.
அதற்கு மேல் கனகா புலம்ப ஆரம்பித்தாலோ சண்டை போட்டாளோ தனியாக கத்திக் கொள் என நினைத்து வெளியே கிளம்பி விடுவார். கனகாவுக்குத்தான் தொண்டை வறண்டு போனது.
“ஒரு மருமவள கூட அனுசரிக்காம தனியா அனுப்பிட்டியாமே? நல்ல மனுஷிடி நீ!” என அவர் வயதை ஒத்த பெண்கள் எல்லாம் சொல்லும் போது நாக்கை பிடுங்கிக் கொள்ளலாம் போல அவமானத்தில் குமைந்து போனார் கனகா.
தான்தான் பெரிய மருமகள் என சுகந்தியிடம் எந்த முறுக்கையும் காட்டுவதில்லை மதுரா. சுகந்திக்கு சமையல் அவ்வளவாக வராது. தன் கணவனுக்கு மதுராவின் சமையல் பிடிக்கும் என அறிந்து அடிக்கடி மதுராவின் வீடு சென்று விடுவாள். அவளுக்கு சமைக்க உதவி தங்களுக்கும் எடுத்துக் கொண்டு வருவாள்.
கோயிலுக்கு செல்ல வேண்டும், ஏதாவது வாங்க வேண்டும் என்றால் ஓர்ப்படிகள் இருவரும் கூட்டணி அமைத்துக் கொண்டு சேர்ந்து சென்றனர். இதையெல்லாம் கண்டு மனதிற்குள் பொறுமிக் கொண்டார் கனகா.
வீடு புதிதாக இருந்தாலும் பொருட்கள் என அதிகம் இல்லை. அன்றுதான் சேரன் ஆர்டர் செய்திருந்த புதிய கட்டில் வீட்டில் வந்திறங்கியது. ஒரு டம்ளரில் சர்க்கரை கடன் வாங்க வந்திருந்த பக்கத்து வீட்டு அத்தாச்சிக்கு சேரன் வீட்டில் இருப்பது தெரியவில்லை.
“மாசம் ஒரு கட்டிலு உடைஞ்சு போவுதாம். சேரன் காசெல்லாம் கட்டிலு வாங்கியே கரைஞ்சு போயிடும் போலயே, அப்படி என்னடி கபடி விளையாடுறீய?” என மதுராவை கிண்டல் செய்தார்.
எட்டிப் பார்த்த சேரன், “கிண்டல் செய்றதிலேயும் ஒரு நியாயம் வேணாமா அத்தாச்சி?” எனக் கேட்க, அசடு வழிய சிரித்துக்கொண்டே எழுந்து சென்றார்.
“சும்மா என்ன எப்ப பார்த்தாலும் இப்படியே கிண்டலடிக்கிறாங்க?” என அலுத்துக் கொண்டாள் மதுரா.
“ஏட்டி… இதை நிறுத்த ஒரு ரோசனை சொல்லவா?”
“என்ன?”
“சீக்கிரம் எம்புள்ளைய பெத்து என் கைல கொடு, பொறவு எல்லார் கிண்டலும் ஓஞ்சு போவும்” என்றான்.
“ஆள பாரு! யாரும் கிண்டல் செய்யாம இருக்க இடுப்பொடிய நான் புள்ள பெத்துக்கனுமா?” எனக் கேட்ட மதுரா கன்னங்கள் பூரிக்க சேரனை பார்த்தாள்.
“என்னடி!” என ஆவலாக கேட்டுக் கொண்டே ஆசையாக அவளின் கையை பிடித்தான்.
“உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்ல போறேன்? அதெல்லாம் எதுவும் இல்ல. ஆனா சீக்கிரமாவே குழந்தை பெத்துப்போம்” என்றவளை ஆசையாக தூக்கிக் கொண்டவன், “கட்டிலு ஸ்டராங்கா இருக்கான்னு இப்பவே டெஸ்ட் பண்ணிடுவோம்” என்றான்.
“ஆமாம்… கிட்ட நெருங்கிட்டாருன்னா ராத்திரி பகலு வித்தியாசம் தெரியாது. போங்க வேலைய பாத்துகிட்டு…” என சொல்லி அவனிடமிருந்து இறங்கிக் கொண்டாள்.
“நான் அந்தாண்ட நகந்ததும் கட்டில ஏக்கமா பாக்க மாட்டியே… நெசத்த சொல்லுடி” எனக் கேட்டு அவளிடமிருந்து இன்னும் கொஞ்சம் திட்டுக்கள் வாங்கிக் கொண்டே புறப்பட்டான்.
கணவனை வழி அனுப்பி வைத்தவளுக்கு மனம் நிறைந்து கிடந்தது.