அத்தியாயம் -25(2)

இரண்டு நாட்கள் கனகா மருத்துவமனையில்தான் இருக்க நேரிட்டது.

சேரனின் நண்பர்களும் மோகனும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுடனே மதுராவையும் அனுப்பி வைத்து விட்ட சேரன் அவனும் பூங்கொடியுமாக மருத்துமனையில் தங்கி அம்மாவை பார்த்துக் கொண்டனர்.

கூடவே இருந்தாலும் ஒரு வார்த்தை அம்மாவுடன் பேசியிருக்கவில்லை சேரன். அவன் முகம் பார்த்து பார்த்து அவனது ‘நல்லா இருக்கியாமா?’ என்ற ஒற்றை கேள்விக்காக ஏங்கித் தவித்து ஏமாந்து போனார் கனகா.

 பூங்கொடிக்காக கூட காத்திராமல் அனைத்து சேவைகளும் அம்மாவுக்கு செய்தவன், கனகாவே பேச்சு கொடுத்தாலும் காது கேளாதவன் போல இருந்தான். அது அவரின் மனதை அதிகம் பாதித்தது.

கண்ணில் போட சொட்டு மருந்து எழுதிக் கொடுத்து இரண்டு வாரங்களுக்கு பின் வந்து காட்டும் படி சொல்லி மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.

கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு காரிலிருந்து கனகா இறங்கவுமே அக்கம் பக்கத்தினர் நலம் விசாரிக்க கூடி விட்டனர்.

“என் மகமாயி என்னை கை விடல, பார்வை போவாம காப்பாத்திபுட்டா” என வந்தவர்களிடம் சொன்னார் கனகா.

இந்த நிலையில் கனகாவால் வெளிக் கிளம்ப முடியாது என்பதால் பத்திரிக்கை வழங்கும் பொறுப்பு தன்னால் சேரன் மதுரா வசம் சென்று விட்டது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த பின் பூங்கொடி வந்து அம்மாவை பார்த்துக் கொண்டாள்.

இரண்டு நாட்கள் கழித்து செழியன் அவன் மனைவியோடும் மதன் அவனது அம்மாவோடும் கனகாவை காண வந்திருந்தனர். அவர்களை துணைக்கு இருக்க சொல்லி விட்டு துணி துவைக்க தன் வீடு சென்று விட்டாள் பூங்கொடி.

அவர்களிடமும் கனகா தன் பிரத்யேக வசனத்தை சொல்ல, “உன் பார்வையை காவந்து பண்ணிக் கொடுத்தது நீ கும்பிடுற மகமாயி இல்லை, இந்தூட்டுக்கு வாழ வந்த மகமாயி, என் அண்ணன் பொண்ணு மதுராதான். காலத்துக்கும் அவளுக்குத்தான் நீ நன்றிகடன் பட்ருக்கணும்” என்றார் மதனின் அம்மா. அவர் அப்படித்தான் பட் என முகத்திற்கு நேரே பேசி விடும் ரகம்.

“நல்லா சொன்ன அத்த, கனகாத்த வாய்க்கு வாய் அடி மகமாயி உனக்கு கண்ணில்லையா கண்ணில்லையான்னு கேள்வி கேட்டுகிட்டே இருந்தது. எனக்கு ஆயிரம் கண்ணு இருக்குடின்னு ஆத்தா காட்டிபுட்டா” என்றான் செழியன்.

கனகா முறைக்க, “உன் பார்வைய திரும்ப கொடுத்திட்டுன்ன சாமி? அத சொன்னேன் அத்த” என சமாளித்தவன், “என்ன நீ… இவ்ளோ பழம் வந்து கெடக்கு, சும்மா போட்டு வச்சிருக்க?” எனக் கேட்டுக் கொண்டே சாத்துக்குடி பழங்களை அள்ளினான்.

அனைத்து பழங்களையும் இரண்டாக அறுத்து சாறு பிழியும் சாதனம் வைத்து பிழிந்து எடுத்தவன் மதனை பாத்திரம் டம்ளர்கள் சர்க்கரை எல்லாம் எடுத்து வர சொல்லி பழச்சாறு தயாரித்தான்.

முதலில் ஒரு டம்ளர் சாறை அவனே பருகியவன் மற்றவர்கள் முக்கியமாக செல்வி கோவமாக பார்ப்பதை கண்டு விட்டு, “சர்க்கரை சரியா இருக்கான்னு பார்த்தேன்” என அலட்சியமாக சொன்னான்.

“சரியா இருக்கா?” மதனின் அம்மா கேட்க, அவரின் கையில் ஒரு டம்ளரை கொடுத்தவன் மற்றவர்களுக்கும் கொடுத்து விட்டு, “அப்புறம் அத்த, பாரு வந்தவங்கள உன்னால கவனிக்க முடியாதுன்னு நானே கவனிச்சிப்புட்டேன்” என்றான்.

“சரிதான் டா, எனக்கு ஒரு வாய் ஊத்தியிருந்தா புண்ணியமா போயிருக்கும்” என்றார் கனகா.

“சுகர் இருக்குன்ன உனக்கு?”

“அது ஏன்டா எனக்கு இருக்கு?”

“வியாதியா கூட இனிப்பு இல்லயா உங்கிட்ட?” எனக் கேட்டு அவரின் முறைப்பை சம்பாதித்தவன், “சரி வுடு, சளி கிளி பிடிச்சா இப்ப இன்னும் தொந்தரவுன்ன உனக்கு?” என விடாமல் வம்பு செய்தான்.

“இடியே விழுந்தாலும் இந்தாளோட எகத்தாளம் மட்டும் குறையாது” என சொல்லிக் கொண்டே பெரிய டம்ளர் நிறைய பழச்சாறு ஊற்றி கனகாவிடம் கொடுத்தாள் செல்வி.

பூங்கொடியும் வந்து விட, அவளுக்கும் பழச்சாறு கொடுத்த செழியன், “இதென்ன அத்தாச்சி இத்தன ஆர்லிக்ஸ், பூஸ்ட்டுன்னு பாட்டிலுவோ வந்து குவிஞ்சு கெடக்கு?” என வியப்பாக கேட்டான்.

“ஆமான் டா, இந்தா காம்ப்ளான் பாட்டில நீ உன் மவனுக்கு ஆத்திக் கொடு. நான் ரெண்டு எடுத்துக்கிறேன்” என சொல்லி காம்ப்ளான் பாட்டிலை செழியனின் கையில் கொடுத்தாள் பூங்கொடி.

“காளியப்பன் கடைல வித்தா பத்து ரூவா கம்மி பண்ணி வாங்கிக்குவான். ஏன் எல்லார்கிட்டேயும் அள்ளி அள்ளி கொடுக்குறங்கிறேன்?” எனக் கேட்ட மதனின் அம்மாவும் ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டார்.

“ஏன் க்கா, இந்த காம்ப்ளானுக்கு பேட் ஒன்னு கொடுத்திருப்பாவோளே… எங்குட்டு அது? அதையும் செல்வி மவன்கிட்ட கொடுத்தா அடிச்சு விளையாடுவான்ன?” எனக் கேட்டான் மதன்.

“எங்குட்டுடா, பூஸ்ட் பாட்டிலுக்கு கூட பிளாஸ்டிக் டப்பா தர்றாவோ. வெறும் பாட்டில மட்டும் இங்குட்டு தந்திட்டு மத்தத அவ்வோளே வச்சுக்கிறாவோ” என குறை படித்தாள் பூங்கொடி.

“அது தேவலாம்டா, பக்கத்தூட்டு பவுனுக்கு கிட்னில கல் ஆபரேஷன் அப்போ ஒரு சீப்பு வாழபழமும் ஒரு கிலோ ஆப்பிளும் கொண்டு போனேன். நாலு காஞ்சு போன கொய்யாக்காவ கொடுத்திட்டு வக்கனையா காபி கேட்டு குடிச்சிட்டு போறாங்கிறேன், கசினாரி” என்றார் கனகா.

“அவ அப்படித்தான்… ஏன் உன் எதித்த வூட்டு பரிமளா மட்டும்…” என மதனின் அம்மா வேறு பெண்ணை குறை பேசினார்.

மதனின் காதில், “பாத்துக்கடா, முடியாம படுத்துக் கெடந்தாலும் எத்தன பழம் வருதுங்கிற வரைக்கும் எண்ணி வச்சிருக்கிறத? ரெண்டு அத்தையும் கில்லாடிதான்” என்றான் செழியன்.

 செழியனின் காதில், “உன் வூட்டு கொல்லையில இருக்க மாமரத்துல தொங்குற மாங்காய கூட எண்ணி வச்சுக்குது உன் அம்மா. ஒன்னு குறைஞ்சாலும் பக்கத்தூட்டு பையன்தான் கல் விட்டெறிஞ்சு பறிச்சுபுட்டான்னு பொழுது போவுற வரைக்கும் திட்டிக் குமிக்குது. அணி கடிச்சா கூட தன்னத்தான் திட்டும்னு பயந்து பக்கத்தூட்டு பையனே காவ காக்குறான் மரத்தை. அப்ப யாருடா கில்லாடி?” என பதில் கொடுத்தான் மதன்.

ஒரு வழியாக அவர்கள் கிளம்பவும் அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்ட பூங்கொடி, “இனிமேலாவது மதுராவோட நல்ல முறையில பொழங்கி கொண்டு இரும்மா. வர்றவ எப்படி இருப்பான்னு எல்லாம் சொல்ல முடியாது. நாளைக்கே உனக்கு முடியலைன்னா ஒரு பொம்பள ஒத்தாசை வேணாமா உனக்கு? எப்பவும் என்னால என் குடும்பத்தை வுட்டுட்டு ஓடியார முடியுமா சொல்லு? அவளை தள்ளி வைக்கிறதா நினைச்சு நீ நடந்தா சேரன்தான் தள்ளி போயிடுவான், பார்த்துக்க” என பொறுமையாக எடுத்து சொன்னாள் பூங்கொடி.

கனகாவின் வீம்பும் ஆங்காரமும் கொண்ட மனதால் இன்னுமே மதுராவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் மகனின் தனிக் குடித்தன முடிவை மட்டும் மாற்றி விட எண்ணி தற்போதைக்கு வாயை மூடிக் கொண்டிருப்பது என முடிவு செய்து கொண்டார்.

இவரை போலவே நப்பாசை கொண்டு கந்தசாமியும் காலையிலேயே மகனிடம் இது பற்றி பேசியிருந்தார்.

சேரனோ தெளிவாக, முடிவாக “சேர்ந்து இருந்தா இப்ப இருக்க மனக் கசப்பு இன்னும் இன்னும் கூடித்தான் போவும். தள்ளி இருந்தே ஒத்துமையா இருந்துப்போம் ப்பா” என கூறி விட்டான்.

கந்தசாமியின் அக்கா முறை உள்ள ஒருவரின் வீட்டுக்குத்தான் சேரனும் மதுராவும் பத்திரிக்கை வைக்க சென்றிருந்தனர்.

இவர்களே புது மண தம்பதிகள்தான் என சொல்லி மதிய விருந்து அமர்க்கள படுத்தி விட்டார். அங்கேயே அரை மணி நேரம் இளைப்பாறி விட்டு மீண்டும் பத்திரிக்கை வைக்க புறப்பட்டனர்.

மதுராவின் பிறந்த ஊர் வழியில் வர, என்ன நினைத்தானோ நேராக வனராஜனின் வீட்டுக்கு பைக்கை விட்டான் சேரன். மதுராவே எதிர்பார்க்கவில்லை என்றால் வனராஜன் பற்றி கேட்கவும் வேண்டுமா?

எண்ணி வைத்தது போல ஐந்து நிமிடங்கள்தான் அங்கு இருந்தான். காபி போடுகிறேன் டீ போடுகிறேன் என பர பரத்த அஞ்சலையிடம் வெறும் தண்ணீர் போதும் என சொல்லி வாங்கிக் குடித்தான்.

தட்டில் பத்திரிக்கை வைத்து, மதுராவையும் பிடித்துக்கொள்ள செய்து, “தம்பிக்கு கல்யாணம், குடும்பதோட வந்திடனும்” என சேரன் சொல்ல, வனராஜனும் சரஸ்வதியும் பெற்றுக் கொண்டனர்.

அஞ்சலைக்கு கண்கள் கலங்கிப் போயின. குலசாமியை நினைத்து கையெடுத்துக் கும்பிட்டு கொண்டார்.

இருங்கள் என வனராஜன் சொல்ல, “பத்திரிக்கை வைக்க வேண்டியது நிறைய இருக்கு” என சொல்லி மனைவியோடு கிளம்பி விட்டான்.

பைக்கில் செல்கையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கணவனின் முதுகில் முகம் பதித்து சாய்ந்து கொண்ட மதுரா, “தேங்க்ஸ்…” என்றாள்.

ஆண்களுக்கு பெண்களை விட அதிக ஈகோ உண்டு. கனகா செய்ததை எண்ணிப் பாராது மதுரா அவருக்கு உதவி செய்தது சேரனின் நெஞ்சை தொட்டிருந்தது. வனராஜனுடன் அவனுக்கு ஏற்பட்ட பழைய கசந்த அனுபவங்களை எல்லாம் அவனால் மறக்க முடியா விட்டாலும் அவளுக்காக இறங்கி வந்து விட்டான்.

சேரனும் வனராஜனும் சகஜமாக பேசுவார்களா பழகுவார்களா என்றால் சந்தேகம்தான். ஆனால் மதுரா அவளது பிறந்த வீட்டில் உறவாடுவதை இனி யாராலும் தடுக்க முடியாது.

பைக்கை நிறுத்தி அவளை இறங்க சொல்லி தானும் இறங்கிக் கொண்ட சேரன், “உன் சித்திக்கும் பத்திரிக்கை அனுப்பி வைக்கலாம், அவ்வோளையும் வர சொல்லு” என்றான்.

சரி என வேகமாக தலையாட்டி சிரித்த மதுராவின் கண்ணுக்கு கீழே துடைக்கப் படாத கண்ணீர் மின்னிக் கொண்டிருந்தது. அது இன்பத்தின் சாயல் என்பதால் துடைக்க முற்படாமல் ரசனையாக பார்த்திருந்தான் சேரன்.

அவள் என்ன என கண்களால் கேட்க, “சின்ன புள்ளன்னும் சொல்ல முடியாது, குமரின்னும் சொல்ல முடியாது. திருவிழால ஆட பச்ச கிளி கணக்கா வந்த உன்னை தெரியாம நான் இடிச்சு, யாருடா அதுன்னு பார்த்த பாரு ஒரு பார்வை… அப்பவே கண்ணுக்கு தெரியாத கயித்த போட்டு என்னையும் உன்கூட சேர்த்து வச்சு கட்டிபுட்டடி. இப்ப வரை உன்கிட்டதான் இழுத்து வச்சுக்கிற” என சொல்லி அவளை நெருங்கி நின்றான்.

வெட்கத்தில் மலர்ந்தவள், “நைட்லதான் உளறுவீங்கன்னு பாத்தா பகல்லேயும் ஆரம்பிச்சிட்டீங்க” என்றாள்.

சுற்றிலும் பார்த்தவன் அவளின் கன்னத்தில் அவசரமாக முத்தமிட்டு விலக, முடியாமல் இன்னும் நெருங்க நினைத்தான். தூரமாக ஏதோ வாகனம் வரும் சத்தம் கேட்க அவனுமே வெட்கம் கொண்டவனாக விலகி பைக்கை எடுக்க அவளும் அமர்ந்து கொண்டாள்.

சில்லென்ற தென்றல் அவர்களை முட்டி மோதி இன்னும் பல மடங்கு அவர்களை மகிழ்ச்சி படுத்தியது.