ஆள வந்தாள் -25(pre final 3)
அத்தியாயம் -25(1)
கனகாவை சேரனும் மதுராவும் முற்றிலுமாக தவிர்க்க ஆரம்பித்து விட்டனர்.
மகனால் வெகு நாட்களுக்கு தன்னிடம் பேசாமல் இருக்க முடியாது. புதுப் பொண்டாட்டி மீதுள்ள மோகம் கலைந்தால் தன்னால் என்னிடம் பேசி விடுவான் என பகல் கனவு கண்டு கொண்டிருந்தார் கனகா.
புதுக் கதவு போடப் பட்டு அதற்கு மூன்று சாவிகளும் தயாராக இருந்தன. ஒரு சாவியை மட்டும் மதுராவின் கையில் கொடுத்த கந்தசாமி இன்னொன்று சின்ன மருமகளுக்கு மூன்றாவது சாவி தனக்கு என சொல்லிவிட்டார்.
அதில் கணவரின் மீது கனகாவுக்கு பெருத்த மனவருத்தம் மற்றும் கோவம். என்ன சண்டையிட்டும் மனிதர் கிணற்றில் போட்ட கல்லாக இருந்து கொண்டார்.
திருச்சியில் நடக்க இருக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பெரிய கூட்டத்தை திரட்டிக் கொண்டு வாருங்கள், சரவணனின் திருமணத்திற்கு மாநில தலைவரை தலைமை தாங்க வைக்கிறேன் என மாவட்ட தலைவர் சொல்லியிருந்தார்.
மகனின் திருமண வேலைகளுக்கு கூட இரண்டு நாட்கள் முழு ஓய்வு கொடுத்து விட்ட கந்தசாமி, சின்னையனோடு சேர்ந்து கொண்டு ஆட்களை திரட்டும் பணியில்தான் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
மாலையில்தான் கூட்டம். மூன்று வேளையும் உணவு, பகலில் முக்கொம்புக்கும் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கும் அழைத்து சென்று காட்டுகிறேன் எனவெல்லாம் டீல் பேசி கட்சி புடவைகளை கட்ட வைத்து மகளிர் அணியையும், கைப்பேசிக்கு டேடா ரீசார்ஜ் செய்து தருகிறேன் என சொல்லி இளைஞர் பட்டாளத்தையும் தயார் செய்திருந்தார் கந்தசாமி.
ஒரு பேருந்தும் இரண்டு வேன்களும் நிறைந்து போகும் அளவுக்கு ஆட்களை கந்தசாமி திரட்டியிருக்க மாவட்டத் தலைமை குளிர்ந்து விட்டது.
ஊரிலிருக்கும் பெருவாரியான ஆண்கள் எல்லாம் திருச்சிக்குத்தான் புறப்பட்டிருந்தனர். சேரனின் காரில் அவன், அவனுடைய நண்பர்கள், சரவணன் மற்றும் மோகன் என ஏதோ சுற்றுலா செல்வது போல கல கலப்பாக பேசிக் கொண்டே பயணம் செய்தனர்.
மதுரா அவளது காலை உணவை முடித்துக் கொண்டு, மற்ற மேல் வேலைகளையும் செய்து விட்டு அறைக்கு சென்று கதவை அடைத்து விட்டாள். ஏதோ பாடல்கள் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது.
தான் எத்தனை மறுப்பு சொல்லியும் சேரனுக்கு தனியாக வீடு கட்டுவதில் கந்தசாமி மிகவும் உறுதியாக இருக்க அந்த கோவத்தில் தானாக புலம்பிக் கொண்டே குருமா குழம்பு செய்து கொண்டிருந்தார் கனகா.
மதிய சமையலையும் முடித்து விட்டால் சீரியல்களை தடங்கல் இல்லாமல் பார்க்கலாம் அல்லவா?
சூடான வானலியில் எண்ணெயை ஊற்றியவர் தீயை அதிகமாக வைத்துக்கொண்டே கடுகை போட்டவர் அது பொரிந்ததா என்றெல்லாம் கவனமில்லாமல் பூண்டையும் போட்டார். அவர் போட்ட வேகத்தில் பட் என அவரது முகம் மற்றும் வலது கண்ணில் எண்ணெய் தெறித்து விழுந்தது.
கனகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தாள் மதுரா. தரையில் ஏனோ தானோ என அமர்ந்து அலறிக் கொண்டிருந்த கனகாவிடம், “என்னாச்சு?” எனக் கேட்டுக் கொண்டே அடுப்பை அணைத்தாள் மதுரா.
“ஐயையோ மூஞ்சு கண்ணெல்லாம் எண்ணெய் தெறிச்சிட்டே… கண்ணு தெரியலையே…” வலி தந்த வேதனையில் புலம்பி அழுதார்.
விரைவாக பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வந்து அவரது முகம் கண்ணை கழுவிக் கொள்ள செய்தாள் மதுரா. முகத்தில் ஆங்காங்கே சிறு சிறு கொப்பளங்கள் வந்திருக்க கண்ணில் கருவிழியே தெரியாமல் வெள்ளையாக இருப்பது போலிருந்தது. ஏதோ பெரிதாக ஆகி விட்டது என பயந்து போன மதுராவுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
கணவனுக்கு அழைத்து சொல்வதால் தற்போதைக்கு பிரயோஜனம் இல்லை என்பதால் உடனே தன் அண்ணுக்கு அழைத்து விவரத்தை சொல்லி காரெடுத்துக் கொண்டு வரும் படி சொன்னாள்.
வனராஜனும் வீம்பு பாராட்டாமல் அவன் ஊரிலிருந்து யாரிடமிருந்தோ கார் பெற்றுக் கொண்டு புறப்பட்டான். அதற்குள் பூங்கொடிக்கு விஷயத்தை சொல்லி அவளையும் வர வைத்து விட்டாள்.
வெளி விவகாரங்கள் அதிலும் மருத்துவமனை என்றாலே பூங்கொடிக்கு மிகுந்த பயம். தன்னையே பார்த்துக் கொள்ள சொல்லி வராமல் போய் விடுவாளோ என தம்பியின் மனைவியைத்தான் தவிப்பாக பார்த்திருந்தாள்.
பூங்கொடியின் மாமியாரும் அக்கம் பக்கத்து பெண்கள் சிலரும் கூடியிருந்தனர்.
அவசரத்துக்கு தேவைப்படும் என பை ஒன்றில் கனகாவுக்கு தேவையானவை எடுத்து வைத்துக்கொண்டு மதுரா வாசல் வர, காரோடு வந்து விட்டான் வனராஜன். பூங்கொடியும் கனகாவும் காரில் ஏறிக் கொள்ள வீட்டை பூட்டிய மதுராவும் முன் பக்கம் ஏறிக் கொண்டாள். அப்போதுதான் பூங்கொடிக்கு சற்று தெம்பாக இருந்தது.
வழியில்தான் மதுராவும் பூங்கொடியும் தங்களின் கணவர்களுக்கு அழைத்து விவரம் சொன்னார்கள்.
கந்தசாமியோ, “சின்ன விஷயத்துக்கு ஊர கூட்டுவா, பெருசா ஒன்னுமிருக்காது” என சொல்லி தன்னால் வரமுடியாது, இதுதான் முக்கியம் என சொல்லி விட்டார். சரவணனின் திருமணத்திற்கு அவனை வைத்துக்கொண்டுதான் தலைவருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என சொல்லி அவனையும் விடவில்லை.
ஆகவே சேரன், மோகன், செழியன் மற்றும் மதன் ஆகிய நால்வரும் கனகாவை காண காரில் புறப்பட்டனர்.
முத்துபேட்டைக்கு அழைத்து செல்ல அங்கு அந்த நேரம் கண் மருத்துவர் இல்லை. உடனே பட்டுக்கோட்டைக்கு காரை செலுத்தினான் வனராஜன். அங்கு கனகாவின் கண்ணில் கரு விழிக்குள் மாட்டியிருந்த பூண்டு தோலின் பிசிறை எடுத்து விட்டு, முகத்தின் காயத்திற்கும் முதல் உதவி செய்த மருத்துவர் மேற்சிகிச்சைக்காக தஞ்சை அழைத்து செல்லும் படி கூறி விட்டார்.
இப்படியாக தஞ்சாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற கண் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் கனகா.
சேரன் மற்றவர்களுடன் மருத்துவமனை வந்து சேர்ந்த போது முன் மாலையாகி விட்டது. சரியான நேரத்தில் அழைத்து வந்து விட்டதால் பார்வைக்கு பாதிப்பு இருக்காது என சொல்லியிருந்தனர்.
சிகிச்சை பெற்று மருந்துகளின் உபயத்தால் உறங்கிக் கொண்டிருந்தார் கனகா.
“எலேய் சேரா, மதுரா இல்லைனா நான் என்னடா பண்ணியிருப்பேன்? படிச்ச புள்ள படிச்ச புள்ளதான்டா, பயப்படாம ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு வந்திட்டா” என்றாள் பூங்கொடி.
“ஏ அத்தாச்சி! நீ அலறி வச்சதுல ஒப்புறானா என்னமோ ஏதோன்னு ஓடியாறோம், அத்த என்னடான்னா ஏசி ரூம்ல ஃபேர் அண்ட் லவ்லி தடவிகிட்டு சொகுசா தூங்குது, நெசமா கண்ணுல எண்ணெ பட்டுச்சா?” என விசாரணை போட்டான் செழியன்.
“தீக்காயத்துக்கு ஆயிண்ட்மெண்ட் தடவியிருக்காவோடா” என மதன் விளக்கம் சொல்ல, “ஓஹோ!” என பொய்யாக வியந்தான் செழியன்.
“ஏன் டா, எங்கம்மா கஷ்டம் உனக்கு கிண்டலா போச்சுதா?” செழியனின் தோளில் அடித்துக் கேட்டாள் பூங்கொடி.
“அதான் நல்லா போச்சுல்ல? என்னையும் உன்னைய மாதிரி ஒப்பாரி வைக்க சொல்றியா?” என்ற செழியனை சேரன் முறைக்க, “சொல்லு அத்தாச்சி… அத்தைக்கு எப்படி இப்படி ஆச்சு?” என நல்லவனாக விசாரித்தான்.
“ஏன்டா கேக்குற! மதுராதான் போன் போட்டு கூப்பிட்டா. அடிச்சு புடிச்சு ஓடிப் போய் பார்த்தா… அம்மாவோட கண்ணு முழியவே காணும்ங்கிறேன்” என்றாள் பூங்கொடி.
“ஹான்… நம்மூர்ல காணாப் போன கருப்பு முழி தஞ்சாவூர்லதான் கெடச்சுதா? நல்ல சங்கதியா இருக்கே… ஆமாம் யாரு தூக்கிட்டு வந்து இங்குட்டு போட்டது?” செழியன் கேட்க, பூங்கொடி ஆ என பார்த்தாள்.
“உதை பட போறடா ராஸ்கல். எப்ப விளையாடுறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சுதுன்ன? போடா அங்குட்டு” என நண்பனை அதட்டி அடக்கி வைத்தான் சேரன்.
மருத்துவர் என்ன சொன்னார் என மதுரா கணவனிடம் விளக்கமாக சொல்ல, கேட்டுக் கொண்டவன் அறைக்குள் சென்று அம்மாவை ஒருமுறை பார்த்து வந்தான்.
என்னதான் அம்மா மீது கோவமிருந்தாலும் அவருக்கு ஒன்று என்றால் உள்ளமும் உடலும் பதறித்தான் போகிறது. பார்வைக்கு ஆபத்து இல்லை என்பதில் சேரனுக்கு பெரிய நிம்மதி.
வனராஜன் தனியாக அமர்ந்திருக்க அவனை தேடிக் கொண்டு சென்றான் சேரன். தங்கையின் கணவனை கண்டதும் எழுந்து நின்ற வனராஜன் வேறெங்கோ பார்த்துக் கொண்டு, கைகளை பின்னால் கட்டிக் கொண்டு, “பயப்பட ஒன்னுமில்லைனு சொல்லிப்புட்டாவோ, கவல படாத, சரியா போயிடும்” என்றான்.
குரலை செருமிக் கொண்ட சேரனும் வனராஜனை பாராமல் அவன் பக்கத்தில் கிடந்த இரும்பு நாற்காலியில் உரிந்து வந்திருந்த பெயிண்ட் தோலை இன்னும் உரித்துக் கொண்டே, “நீ இல்லைனா ரொம்ப சிரமம் ஆயிருக்கும் என் அம்மாவுக்கு. தேங்க்ஸ்…” என்றான்.
தூரத்தில் நின்று பார்த்திருந்த மதுராவுக்கு நிம்மதியாக இருக்க, “ஏன் தங்கச்சி… நம்ம பய உங்கிட்ட லவ் சொல்றப்போ கூட இப்படி பம்மலையே… அப்படி என்னா சொல்றான், சமைஞ்ச புள்ள கணக்கா குனிஞ்ச தலை நிமிராம இருக்கான்?” எனக் கேட்டான் செழியன்.
“போங்க அண்ணா, எப்பவும் விளையாட்டுத்தான் உங்களுக்கு” என்ற மதுரா தள்ளி சென்று விட்டாள்.
“ஒரு வேளை உன் விஷயமா பேசி சினா தனா வ கூட்டணி சேர்க்கிறானோ?” மதனிடம் செழியன் கேட்க, “அர்ச்சனா படிப்பு முடியற வரை வாய தொறக்க கூடாதுன்னு என்கிட்ட சொல்லி வச்சிட்டு அவன் போய் அத பத்தி பேசுவானா? ஒரு வேளை நான் உங்கிட்ட பேசி நல்ல விதமாதான் மதுவை கட்ட இருந்தேன், என் கூட சுத்திட்டு இருந்த கரிமேட்டு கருவாயன்தான் திருட்டு கல்யாணம் பண்ண ஐடியா கொடுத்தான்னு சொல்றானோ என்னவோ?” என்றான் மதன்.
“ஆமாம் இவரு அப்படியே ஆலியா பட்டு நெறம்?” என அந்த நேரத்திலும் நண்பர்களின் வாரிக் கொள்ளும் வழக்கம் நின்றதாக இல்லை.
செலவெல்லாம் வனராஜன் செய்திருக்க எவ்வளவு ஆனது என கேட்டான் சேரன்.
“அதுக்கென்ன அவசரம், எல்லாம் சரியாகி வீடு வா” என்ற வனராஜன் கிளம்ப தயாராக இருந்தான்.
ஆனால் போய் வருகிறேன் என இயல்பாக சேரனிடம் சொல்ல வரவில்லை. சேரனுக்கும் அது புரிந்தாலும் அவனாலும் மேற்கொண்டு என்ன பேச என தெரியாமல் வார்த்தைகளை தேடிக் கொண்டு நின்றான்.
“அது…” தடுமாறிய வனராஜன் பிடரியை சொறிந்து கொள்ள, வராத இருமலை இருமி கன்னத்தை தடவிக் கொண்டான் சேரன்.
“ஏ தங்கச்சி… இந்த கொடுமைய எல்லாம் கண்ணால காண முடியல ஆயி. என் கண்ணு அவியறதுக்குள்ள போயி என்னன்னு கேட்டு பைசல் பண்ணி விடும்மா” செழியன் மதுராவிடம் சொல்ல அவளும் சிரித்துக்கொண்டே அவர்களை நோக்கி சென்றாள்.
மதுரா வந்து “அண்ணனுக்கு நேரமாச்சு, அது கிளம்பட்டும்” என கணவனிடம் சொல்ல, சேரன் தலையாட்டிக் கொண்டே வனராஜனை பார்த்தான்.
அசைந்ததா இல்லையா என பார்த்தவர்களுக்கு விளங்காத வகையில் வனராஜனும் தலையசைத்து விட்டு புறப்பட்டான்.