துவைத்து உலர்த்திய துணிகளை மதுரா மடித்து வைத்துக்கொண்டிருக்க அவனுடைய வெள்ளை உடுப்புகளை எடுத்துக் கொண்டு கூடம் வந்த சேரன் தொலைக்காட்சியில் பாடல்களை ஒலிக்க விட்டு இஸ்திரி செய்ய ஆரம்பித்தான்.

சரவணன் அவனுடைய ஆடைகள் சிலவற்றை எடுத்து வந்து வைக்க, “என்னடா என்னை பாத்தா எப்படி தெரியுது, எடுத்திட்டு ஓடிப் போயிடு” என்றான் சேரன். 

முறைத்த சரவணன் நாற்காலியில் அமர்ந்து பாடலை ரசிக்க ஆரம்பித்தான். சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த அவனுடைய கைப்பேசி, “வா வா வசந்தமே, சுகம் தரும்  சுகந்தமே” என பாடியது. 

சின்ன சிரிப்புடன் சேரன், “யார்டா அந்த சுகந்தம்?” என கேட்டுக் கொண்டே யாரென பார்க்க அவன் நினைத்த மாதிரியே சுகந்தியின் அழைப்புதான் அது. 

வேகமாக கைப்பேசியை எடுத்த சரவணன் அண்ணனை அசடு வழிய பார்த்தான். “போ போ பொழச்சு போ” என சொல்லி அவனை அனுப்பி வைத்த சேரன் தன்னுடையதை தள்ளி வைத்து விட்டு தம்பியினுடைய ஆடைகளை இஸ்திரி போட்டு வைத்தான். 

மதியம் வைத்த மீன் குழம்பும் வறுவலும் இருக்க இரவுக்கு சாதம் மட்டும் வைத்துக்கொண்டால் போதும் என்பதால் மகளின் வீடு வரை சென்றிருந்த கனகா இன்னும் இங்கு திரும்பியிருக்கவில்லை. 

அறையை எட்டிப் பார்த்த சேரன் கைப்பேசி பார்த்துக் கொண்டிருந்த மதுராவை, “அம்மாதான் இல்லன்ன? வா வந்து உனக்கு புடிச்சத டிவில வச்சு பாரு” என அழைத்தான். 

மறுப்பாக தலையசைத்தவள் எழுந்து வந்து அவனிடம் நின்று கொண்டாள். மின் விசிறி ஓடிக் கொண்டிருந்தாலும் இஸ்திரிப்பெட்டி கக்கிய வெப்பத்தில் முத்து முத்தாக அவனுக்கு வியர்த்துப் போயிருந்தது. புடவையின் முந்தானை கொண்டு அவனது முகம், கழுத்து என துடைத்து விட்டாள். 

தொலைக்காட்சியில் ‘மான் குட்டியே’ பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அடிக்கடி மதுராவை பார்த்து பார்த்து வைத்தான். 

‘ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத இடமென்ன, உதட்டு மேல வேர்க்காதய்யா, நீ நம்பணும் அத நீ நம்பணும்’ என்ற வரிகள் வர, “அப்படியாடி?” எனக் கேட்டான். 

புரியாமல் அவள் விழிக்க, பாடலை சொல்லி கேட்டான். 

“நான் பயாலஜி ஸ்டூடெண்ட் இல்ல, அதனால சரியா தெரியலை. ஆனா அப்படித்தான் போல” என்றாள். 

“என்னடி நீ எவ்ளோ இம்பார்ட்டண்ட் மேட்டர். தெரிஞ்சு வச்சுக்கிறது இல்லயா?” 

“இனிமே  கவனிச்சு பாக்குறேன், ஆனா அதென்ன இத போய் இம்பார்டண்ட்னு சொல்றீங்க?” 

“இல்லையா பின்ன? லிப்ஸ் எவ்ளோ முக்கியம்? இன்னிக்கு நைட் தெரிஞ்சுக்குறோம்” என்றவன் இஸ்திரி செய்த அவனது ஆடைகளை அவளின் கையில் கொடுத்தான். 

“நைட்லயா?”

“ம்ம்… வேர்த்து விறு விறுத்து உன்கிட்டருந்து நான் தள்ளிப் படுக்கும் போது நாம தெரிஞ்சுக்கலாம். பழக்க தோஷத்துல பட்டுன்னு முத்தம் கித்தம் கொடுத்துப்புடாதடி. அப்புறம் கண்டுபுடிக்க முடியாம போயிடும். விவரத்த தெரிஞ்சுக்கிட்ட அப்புறமா எப்பவும் போல என் உதட்டை உண்டு இல்லைனு செய்ற, என்ன?” என்றான். 

குப் என சிவந்த முகத்தோடு, “எங்க எத பேசணும்னே தெரியாது. சொல்லி காட்டுறத பாரு, இனிமே முத்தமே கொடுக்க மாட்டேன், போதுமா?” பொய் கோவத்தோடு சொல்லி அறைக்குள் சென்றவளுக்கு சிரிப்பாக வந்தது. 

அவளை தொடர்ந்து அறைக்கு வந்தவன் கதவை வெறுமனே சாத்தி அவளை பிடித்திழுத்தான். அவன் மீது மோதி நின்றாள் மதுரா. 

“ஹப்பா சரியான முரடன்!” என கடுப்படித்தாள். 

“என்ன சொல்லிட்டேன்னு அவ்ளோ கோவம் உனக்கு? எல்லாம் முடிஞ்ச பொறவும் நீ கொடுக்கிற அந்த ஒத்த முத்தத்துலதான் திருப்தி ஆவுறேன் தெரியுமா?” 

“விடுங்க என்னை” வெட்கம் வழிய சொன்னாள். 

“நீ சந்தோஷமா இருந்ததா எனக்கு அப்படித்தான் சொல்ற? ம்ம்ம்… சொல்லுடி? முத்தம் கொடுக்கலைனா நான் வேற எப்படி தெரிஞ்சுக்கிறது? முத்தம் கொடுக்கிறேன்னு சொல்லு, விடுறேன்” என வம்பு செய்தான். 

“ம்ம்…” என வெட்க சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னாள். 

“சந்தோஷமாதான் இருக்கியா என்கிட்ட?” அவளை தன்னோடு நெருக்கிக் கொண்டு கேட்டான். 

“ம்” என்றாள். 

“ப்ச் ஒழுங்கா சொல்லு. நைட் சொல்ற மாதிரி…” என்றான். 

அவன் இதழ்களில் இதழ் பதித்து அவள் விலக, “இதென்னடி உப்பு சப்பில்லாம? சுள்ளுன்னு பதில் சொல்லு” என விடாமல் வம்பு செய்தான். 

“அச்சோ… அது… நைட்ல இருட்டுல… இப்ப போய்… போங்க உங்களுக்கு விவஸ்தையே இல்லாம போச்சு. உங்கம்மா வந்திட போறாங்க. தள்ளுங்க” என்றாள். 

“கண்ண மூடிக்க, இருட்டி போயிடும்” என்றான். 

ஆசையோடு அவள் அவனது முகத்தை நெருங்க அவனது கைப்பேசி அழைத்தது. சட்டைப் பையிலிருந்த கைப்பேசியை எடுத்து பார்த்தான். தோப்பை குத்தகைக்கு தரப் போகிறவரின் அழைப்பு. 

சட்டென மதுராவை விலக்கி விட்டவன் அவளின் முன்னால் அழைப்பை ஏற்காமல் வெளியேறி விட்டான். பத்து நிமிடங்களுக்கு பின் வந்தவன் வெளியில் செல்வதாக சொல்லி சென்று விட்டான். 

குத்தகை தாரரிடம் வேறு ஒருவர் குத்தகைக்கு கேட்டு வந்திருப்பதாகவும் அவருக்கு பண நெருக்கடி இருப்பதால் நாளைக்கே பணம் தரா விட்டால் அந்த இன்னொரு ஆளிடம் தோப்பை கொடுக்க நினைப்பதாகவும் கூறினார். 

நண்பர்கள் இருவரும் இரண்டு நாட்களில் பணத்தை புரட்டி தருவதாக சொல்லியிருக்க, சேரனும் இரண்டு நாட்கள் மட்டும் நேரம் தரும் படி கேட்டான். 

“தப்பா நினைக்காதீய தம்பி, எம்மூட்டு மவளுக்கு வீடு கட்ட இடம் வாங்குறேன். ஓனருக்கு அவசரமா அட்வான்ஸ் பணம் தந்து உறுதி செய்யணும். அதனாலதான் கண்டிஷனா உடனே பணம் கேட்குறேன்” என்றவர் பின் அவராகவே, “நீங்களும் ரெண்டு நாள்தான் டைம் கேட்குறீய, என் கைல நாப்பதினாயிரம் இருக்கு, நீங்க ஒரு அறுபதினாயிரம் ரொக்கம் காலைல கொடுத்திடுங்க தம்பி, மிச்சத்தை ரெண்டு நாளைக்கு அப்புறமா தாங்க” என்றார். 

சரி என ஒத்துக் கொண்டு விட்டான் சேரன். நண்பர்களிடம் கேட்டால் உடனே ஏற்பாடு செய்வார்கள்தான், ஆனால் அப்படி சிரம படுத்த விரும்பாதவன் எப்படியாவது அவனே தயார் செய்து விடலாம் என முடிவெடுத்துக் கொண்டான். 

இரவு உணவுக்கு பின் யோசனையாகவே இருந்த கணவனிடம் என்னவென விசாரித்தாள் மதுரா. வழக்கம் போல உடல் அசதி என அவன் சமாளிக்க பார்க்க, அவளின் முகம் சோர்ந்து விட்டது. 

அவனுக்கு முதுகு காண்பித்து படுத்தவளுக்கு அழுகையாக வர, அடக்க முடியாமல் அழுதும் விட்டாள். 

இவன் சமாதானம் செய்ய, “விடுங்க, என்னத்தயோ மறைக்கிறீங்க. என்னன்னு நினைச்சு நினைச்சே பயந்து வருது. உங்க உடம்புக்கு ஒன்னுமில்லதானே?” என அழுது கொண்டே கேட்டாள். 

சிரித்தவன், “ஆமாம், பிளட் கேன்சர் எனக்கு, பொட்டுன்னு போவ போறேன்” என்றான். 

எழுந்த கோவத்தில் என்ன செய்கிறோம் என தெரியாமல் அவனது வாயில் நன்றாக அடித்து விட்டவள் பின் பயந்து விழித்தாள். 

அவளை முறைத்துக் கொண்டே வாயை தடவி விட்டுக் கொண்டவன், “கொழுப்பு கூடிப் போச்சுடி உனக்கு” என்றான். 

“சத்தியமா உள்ளுக்குள்ள சொர சொரப்பா இருக்குங்க. நான் வருந்துவேன்னு நீங்க சொல்லாம இருக்கீங்கன்னா தயவுசெஞ்சு சொல்லிடுங்க. எதுவும் தெரியாம என்னென்னவோ நினைக்க தோணுது” என்றாள். 

அவளது பரிதவிப்பை கண்டவன், என்னவென சொல்லி விட்டான். நம்மிடமே வசதிகள் இருக்கையில் ஏன் தனியாக இப்படி செய்கிறீர்கள் என குடைய ஆரம்பித்து விட்டாள். 

ஏற்றுக்கொள்ளும் படி எதையாவது அவளிடம் சொல்லியாக வேண்டுமே.

 அப்பாவுடன் அவனுக்கு ஏற்பட்ட மனக் கசப்பை கூறாமல், “இந்தூட்டுக்கு இன்னொரு மருமக வர போவுது. பொது பணத்துல உனக்குன்னு… அது… நமக்கு தேவையானது எல்லாம் செஞ்சுக்க… என்னத்த சொல்லடி? அப்படி செஞ்சா சரியா வராதுன்ன? உனக்கு புரியுதா? எனக்குன்னு தனியா வரும்படி இருக்கணும்னு தோணிச்சு, நடத்திக்கிறேன்” என்றான். 

“உடனே பணம் கேட்டா மாமாகிட்ட கேட்டு வாங்கி கொடுக்க வேண்டியதுதானே? ரெண்டு நாள்ல உங்க ஃப்ரெண்ட்ஸ் கொடுத்ததும் திருப்பி கொடுங்க” என யோசனை சொன்னாள். 

“அப்பாக்கு தெரியாம குத்தகை எடுக்கிறேன் மதுரா. மெல்லதான் அவருக்கு சொல்லணும். அவர்கிட்ட பணம் வாங்குறதா இல்ல” என அவன் சொல்ல திகைத்து விட்டாள். 

“மாமாக்கு தெரியாம செஞ்சா தப்பா போவாதாங்க? இப்படி வேணாங்க. அவர் மனசு வருந்தும். உங்களுக்கு இதெல்லாம் புரியாதா?” என நியாயம் பேசினாள். 

“கண்டதையும் கற்பனை பண்ணி பயந்தேன்னுதான் விஷயத்தை உங்கிட்ட சொல்லிட்டேன். சும்மா வேற எதுவும் பேசி எரிச்சல் பண்ணாத” என கடுப்படித்தான். 

திட்டினாலும் பரவாயில்லை என எடுத்து சொல்லி நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள். கோவம் வந்தால் சுள் என பேசுவது போலவே இப்போதும் பேசி விட்டான். 

இப்படியாக சண்டையை சமாதானம் செய்து கொள்ளாமல் படுத்து விட்டனர். விடியற்காலையில் மனைவியை எழுப்பி விட்டவன், இரண்டு நாட்களில் திருப்பித் தந்து விடுவதாக சொல்லி அவளுக்கு அவன் வாங்கிக் கொடுத்த நகையை கேட்டான். 

“நைட் பூராவும் இதையே யோசிச்சிட்டு இருந்தீங்களா? தூங்கலையா?” சிவந்திருந்த அவனது கண்களை பார்த்துக் கொண்டே கேட்டாள். 

பதில் தராதவன் நகையை எடுத்து வைக்க சொல்லி விட்டு சென்று விட்டான். காலை வழக்கங்கள் பிசகாமல் நடக்க, உணவுக்கு பின் நகையோடு வெளியே சென்று விட்டான். மதுராவுக்கு அவனை நினைத்து கவலையாகிப் போனது. 

கோயிலுக்கு செல்வதாக மாமியாரிடம் சொல்லி விட்டு போனவள் கடவுளிடம் கணவனுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது, குடும்பத்தில் பிரச்சனை வந்து விடக்கூடாது என வேண்டிக் கொண்டாள்.

 செல்வியும் கோயிலுக்கு வந்திருக்க அவளும் கடவுளை தரிசித்து விட்டு வந்து அவளோடு அமர்ந்து கொண்டாள். 

செல்வியின் மகனை வாங்கிக் கொஞ்சியவள் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாள். பேச்சு வாக்கில் சேரன் தோப்பை குத்தகைக்கு எடுக்க போவது பற்றி விசாரித்தாள் செல்வி. செழியன் மூலமாக அவளுக்கு தெரிந்திருந்தது.

 மற்றவர்களுக்கு எதுவும் கணவன் செய்யதான் போர்க்கோடி தூக்குவாள் செல்வி. சேரன் அவளுக்கு உடன்பிறவா அண்ணன். அவளது மகனுக்கு காதணி விழா நடைபெற்ற போது அவளது பிறந்த வீட்டினரோடு பேச்சுவார்த்தை இல்லை. தாய்மாமன் சீர் எல்லாம் குறைவில்லாமல் சேரன்தான் செய்தான். 

மதுராவுக்கு தற்சமயம் இது குறித்து மனம் விட்டு பேசக்கூடிய ஆள் இவள் மட்டும்தானே, ஆகவே தன் கவலையை சொன்னாள். 

“உன் மாமனாருக்கு தெரியாம செய்றதுக்கு போய் கவலை படுறியே, அவராலதான் அண்ணன் இப்படி செய்றாவோ” என்ற செல்வி அனைத்தையும் சொல்லி விட்டாள். 

மதுராவின் முக மாற்றத்தை கண்டவளுக்கு இப்போதுதான் இந்த விஷயமெல்லாம் தன் மூலமாக இவளுக்கு தெரிகிறது, இவளை பயப் படுத்தி விட்டோம் என புரிந்தது. 

“கவல படாத மதுரா, ஆரம்பத்துல இப்படித்தான் ஏதாவது நடக்கும். போவ போவ சரியாகிடும். நாங்களும் வீட்ட எதித்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம்தானே? அண்ணன்தான் எங்களுக்கு கல்யாணம் முடிச்சு வச்சது. கல்யாணம் ஆன புதுசுல என்  மாமனாமாமியா கூட இப்படித்தான் ஏதாவது குத்தி காமிச்சு பேசிட்டே இருந்தாவோ. இவனுக்கு ஒரு வயசு முடியவும் என் வூட்டுல என்னை மன்னிச்சு ஏத்துகிட்டு செய்ய வேண்டிய முறையெல்லாம் செஞ்சதும்தான் வாய மூடினாவோ” என்றாள் செல்வி. 

தன்னால்தான் தனக்காகத்தான் தன் கணவன் சிரம படுகிறான் என்பது தெரிந்து மலையளவு மதுராவின் மனதில் பாரம் ஏறிக் கொண்டது. 

 கோயிலில் இருந்து வீடு வந்ததும் தன் சித்திக்கு அழைத்து பேசினாள் மதுரா. இதனால் நேரப் போகும் விளைவுகளால் சேரன்  கோவம் அடைவான் என தெரியும், ஆனால் அந்த கோவத்தின் அளவை அவள் அறிந்திருக்கவில்லை.