அண்ணனிடம் நெருங்கியவன், “வா அடுத்த முறைக்கும் இப்படி ஏதாவது தோசை வத்த ன்னு சிக்குவன்ன? அப்ப வச்சிக்கிறேன்” என மிரட்டி விட்டு சென்றான்.
வேகமாக குளித்து வந்த சேரன் அறைக்கு வர படுத்திருந்தாள் மதுரா. தனக்கு செய்யும் தொந்தரவுகளை எல்லாம் கணவனிடம் சொல்ல, “என்னடி இத்தனை அடுக்குற, விடிய காலைல நல்லாத்தான இருந்த?” என்றான்.
“இப்பதான் எல்லாம் செய்யுது, யார்கிட்ட போய் கேட்பேன். அம்மாகிட்ட சொல்ல கூட கூச்சமா இருக்கு” என்றாள்.
“நான் அப்படி ஒன்னும் முரடா நடந்துக்கலையே மதுரா” தன்னால்தானோ என்ற பயத்தோடு கேட்டான்.
“உங்களை எங்க சொன்னேன்? நடக்கவே கஷ்டமா இருக்கு” என சொல்லி அடி வயிறை பிடித்துக்கொண்டாள்.
“நீ கிளம்பி இரு, குத்தகை எம்பேர்ல எடுக்குறார் அப்பா, நான் போயே ஆவணும். ஒரு மணிக்குள்ள வந்திடுறேன், ஹாஸ்பிடல் போலாம்” என்றான்.
மதுராவுக்கும் மருத்துவமனை சென்று வந்து விட்டால் தேவலாம் என்றே தோன்ற சரி என்றாள். அவனுக்கு அவளை விட்டு செல்ல மனமே இல்லை. போகவில்லை என்றால் அப்பா கோவித்துக் கொள்வார் என்பதால் அவனுக்கும் வேறு வழியில்லை.
அந்த அவசரத்திலும் காலை சாப்பாட்டை அவளது அறைக்கு கொண்டு சென்று தந்து விட்டு அம்மாவிடம், “அவளுக்கு முடியலை, தொந்தரவு செய்யாத” என சொல்லி விட்டுத்தான் புறப்பட்டான்.
இனிமேல் வேலையே கொடுக்க கூடாது என மகனை விட்டு சொல்ல வைப்பதற்காகத்தான் இப்படி உடம்புக்கு முடியவில்லை என நடிக்கிறாள் என்பதாக நினைத்துக்கொண்டார் கனகா.
மீன் பிடிக்கும் குத்தகை சேரனுக்கே கிடைத்து விட்டது. வார்டில் உள்ள வேலைகளை எல்லாம் செழியனும் மதனுமாக பார்த்துக் கொண்டனர். பனிரெண்டு மணிக்கெல்லாம் வீடு வந்தவன் மதுராவிடம் நலன் விசாரித்தான்.
தலை காய வைத்து நன்றாக ஓய்வு எடுத்ததில் தலை வலி நீங்கி விட்டதாகவும் மற்ற தொந்தரவுகள் கூட பரவாயில்லை போல இருப்பதாகவும் சொன்னாள்.
“முழுசா சரியாகலைன்ன? அவசரத்துக்கு நம்மூர்ல ஆஸ்பத்திரி இருக்கா, ஒரு தடவ போயிட்டு வந்திடுவோம்” என சொல்லி மனைவியோடு திருத்துறைப்பூண்டி கிளம்பி விட்டான்.
மதிய சாப்பாட்டுக்கு வந்த கந்தசாமியிடமும் சரவணிடமும், “சும்மா ஊர் சுத்துனா ஏதாவது சொல்வோம்னு ஆஸ்பத்திரிக்குன்னு பொய் பேசிட்டு போயிருக்காங்க. சேரனை கெடுத்து வுடுறா அவ” என குறை பேசினார்.
“அப்படி என்னடா உடம்புக்கு? ஜுரம் இல்லன்னுட்டான், நல்லாத்தான் சாப்பிடுறா, சாயந்தரம் ரெண்டு பை நிறைய துணிமணி அது இதுன்னு வாங்கிட்டு வர்றாளா இல்லையான்னு மட்டும் பாரு” என்ற கனகாவை அதட்டி அடக்கினார் கந்தசாமி.
பெண் மருத்துவரிடம் அழைத்து சென்றிருந்தான் சேரன். பரிசோதனை செய்தவர் திருமணம் ஆன புதிதில் சில பெண்களுக்கு இப்படி ஆவதுண்டு, பயப்பட ஒன்றுமில்லை என கூறி மருந்துகள் கொடுத்து, நீர் ஆகாரமாக அதிகம் எடுத்துக் கொள்ள சொல்லி கணவன் மனைவிக்கு எப்படி இருக்க வேண்டும் என அறிவுரைகளும் கூறி அனுப்பி விட்டார்.
மதிய உணவுக்கு முன் கிளம்பியிருந்ததால் வரும் வழியில் இளநீர் வாங்கிக் கொடுத்திருந்தான். மருத்துவரை பார்க்க நேரமெடுக்கவும் மருத்துவமனையிலேயே ஐஸ் இல்லாமல் பழச்சாறும் வாங்கி கொடுத்தான். இப்போது மருத்துவரும் வைத்தியம் செய்திருக்க மதுராவுக்கு பெருமளவு சரியானது போல இருந்தது.
வெயில் தணிந்ததும் புறப்படலாம் என்றாள். உணவகம் ஒன்றில் அவன் மீல்ஸும் இவள் தயிர்சாதமுமாக சாப்பிட்டனர்.
துணிச்சல்காரி இல்லை, கண்ணை கவரும் அழகி. அந்த அழகுதான் அவனை ஈர்த்தாலும் அதை தாண்டி தனக்கான பெண் என்ற உணர்வு ஏற்பட போய்த்தான் காதல் சொன்னான். முதலில் மிரண்டாலும் போக போக அவளும் அவனது காதலை ஏற்றுக்கொண்டாள்.
அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ என்ற பயத்தில் தாலியை கழட்டி தந்திருந்தாலும் அவனை மனதிலிருந்து அகற்றவே இல்லை. நகர வாழ்க்கையை எட்டிப் பார்க்கும் நிறைய பெண்கள் கிராமத்து வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தயங்குவார்கள். ஆனால் சேரன்தான் வாழ்க்கை என அவனோடு சேர்த்து கிராமத்தையும் ஏற்றுக்கொண்டவள்.
எதிரில் அமர்ந்திருக்கும் அழகிக்கு என்னைத்தான் மிகவும் பிடிக்கும், நான்தான் அவளது கணவன் என்பதில் அவனுக்கு அத்தனை பெருமை. கவனமெல்லாம் அவள் மீதுதான்.
வெறும் மஞ்சள் கயிறோடுதான் இருந்தாள் மதுரா. வரப் போகும் மருமகள்களுக்காக எப்போதோ தாலி செயின் வாங்கி வைத்து விட்டார் கந்தசாமி. கொஞ்ச நாள் பொறுத்து கேட்டு வாங்கி இவளிடம் கொடுக்க வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
காதில் அணிந்திருந்த சின்ன ஜிமிக்கி தவிர அவளிடம் வேறு நகைகள் கிடையாது. வயல் வரப்பு, தோப்பு துரவு மூலம் வருமானம் எல்லாம் இன்னும் கந்தசாமிதான் வரவு செலவு பார்க்கிறார்.
வார்டு மெம்பர் ஆனதிலிருந்து இவனுக்கு தனியாக மாதா மாதம் சம்பள பணம் வருகிறது. அதில் இவன் கையே வைப்பதில்லை. இரண்டு தினங்களுக்கு முன் அதிலிருந்துதான் அவளுக்கு தேவையானவை எல்லாம் வாங்கிக் கொடுத்தான். நல்ல கணிசமான தொகை இன்னுமே இருக்க அவளுக்கே சொல்லாமல் நகைக் கடை அழைத்து சென்று விட்டான்.
இரண்டு சவரனில் மெல்லிய அட்டிகை ஒன்று வாங்கினான்.
இப்போது வேண்டாம் என மதுரா மறுக்க, “அம்மா எதுவும் சொல்லும்னு வேணாம்ங்கிறியா? எப்ப வாங்கினாலும் அது பேசும்தான். இப்ப என் கைல காசு இருக்கையில வாங்கி கொடுத்தாதான் மதுரா, வாங்கிக்க” என அழுத்தமாக சொல்லி விட்டான்.
முதன் முதலாக ஆசையாக கணவன் வாங்கித் தரும் நகை என்ற பூரிப்பில் மதுராவும் அதிகம் எதிர்ப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டாள்.
இன்னும் அவளுக்கும் வீட்டினருக்கும் தனித்தனியாக என நொறுக்குத் தீனிகள், பழங்கள் என வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்கையில் கந்தசாமி வீட்டில்தான் இருந்தார்.
மனைவி சொன்னது போலவே கை நிறைய பைகளுடன் வாட்டமில்லாத பூரித்த முகத்துடன் வரும் மருமகளை பார்த்தவர், “என்னம்மா உடம்புக்கு?” என விசாரித்தார்.
மாமனாரிடம் போய் என்ன சொல்வதென சட்டென தெரியாமல் பதில் சொல்லாமல் விழித்தாள் மதுரா.
பின்னால் வந்த சேரன், “வயித்து வலிப்பா, சாப்பிட்டது எதுவோ சேரலை” என்றான்.
கந்தசாமி வேறு எதுவும் கேட்டுக் கொள்ளாமல் போக, மதுரா உள்ளே சென்று விட்டாள். வாங்கி வந்திருந்த நகையை வெளியில் எடுத்த சேரன் அப்பாவின் கையில் கொடுத்து அம்மாவையும் அழைத்து காண்பித்தான்.
கனகா வெளிப்படையாக தன் அதிருப்தியை காட்டினார். கந்தசாமியின் மனதிலும் சுணக்கம் ஏற்பட்டது, ஆனாலும் காண்பித்துக் கொள்ளாமல், “சாமி முன்னாடி வச்சு எடு” என மட்டும் சொன்னார்.
சேரன் நகர்ந்ததும் கணவரிடம், “நான் சொல்லலை, இந்த நகை வாங்கதான் ஆஸ்பத்திரி போறதா நாடகம் போட்ருக்காங்க. அவளை இழுத்து புடிக்கலைனா நாளைக்கு வீடு ரெண்டாகிடும்” என ஏற்றி விட்டார்.
மகனிடம் இது பற்றி பேச வேண்டும் என நினைத்துக் கொண்டார் கந்தசாமி.
மாமனாரும் மாமியாரும் தேநீர் பருகி விட்டதை உறுதி செய்து கொண்டு தங்களுக்கு மட்டும் போட்டு எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றாள் மதுரா.
படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் மனைவி கொடுத்த தேநீரை பருகிக் கொண்டே கைப்பேசி வழியே நண்பர்களிடம் பேசி அவன் சொல்லி சென்ற எல்லா வேலைகளும் முடிந்து விட்டனவா என உறுதி படுத்திக் கொண்டான். இவளோ அவனருகில் அமர்ந்து பார்வையால் அவனை பருகிக் கொண்டிருந்தாள்.
பேசி முடித்தவன், “காலைல பயமுறுத்தி விட்டுட்டு இப்படி பார்க்காத, டாக்டர் ரெண்டு நாளைக்கு நம்மள தள்ளி இருக்க சொன்னது நெனப்பிருக்குன்ன?” என்றான்.
“ம்ம்… அவங்க அந்த தள்ளித்தான் இருக்க சொன்னாங்க. இப்படி இருக்கலாம்” என்றவள் நெருங்கி வந்து அவன் மார்பில் தலை வைத்து, உடலை அவன் மீது அணைவாக வைத்து, கால்களையும் அவன் மீது போட்டு கண்களை மூடிக் கொண்டாள்.
ஒரு கையால் அவளை அணைவாக பிடித்துக் கொண்டவன், “என்னடி?” என்றான்.
“ஏன் உங்களை லவ் பண்ணினேன்னு இப்ப வரை தெரியாது, சில சமயம் தோணும் சரியான கோவக்காரனை லவ் பண்றோம்னு. நிறைய என்னை… ஒரு மாதிரி டாமினேட் பண்ற மாதிரியே நடப்பீங்க. ரெண்டு தடவ தாலி கட்டினதும் கூட உங்க இஷ்ட படிதான்”
“நீ எம்மேல சாஞ்ச தோரணைக்கு அத்தான், அழகு மச்சான்னு ஆசையா ஏதாவது பேசப் போறியோன்னு நெனச்சேன், நல்லா குறை சொல்றடி என்னை” என்றான்.
“ப்ச்… முழுசா சொல்ல விடுங்க. எத்தன குறை இருந்தாலும் எல்லாத்தையும் எம்மேல காட்டுற அக்கறையில அன்புல ஒன்னுமில்லாம செஞ்சிடுறீங்க. எனக்கு வாச்சவன் கோவக்காரன்தான் அவசரக்காரன்தான்னாலும் எம்மேல பித்து பிடிச்சவன்” லேசாக நிமிர்ந்து அவன் தாவாயை பிடித்துக் கொஞ்சிக் கொண்டே கூறினாள்.
“உனக்கு பிடிச்சவன்னு சொல்ல மாட்டியே” குறையாக சொன்னான்.