அவர் சொன்ன படியே மதுராவும் செய்ய “அப்படித்தான் ஆயி, நல்லா புழியுற, எம்மூட்டுல கொப்பரை தேங்கா காயுது, நான் கெளம்புறேன்” என சொல்லி கிளம்பி விட்டார் பாட்டி.
மதுராவுக்கு சரியாக செய்ய வந்தாலும் குனிந்து கொண்டு செய்ய சிரமப்பட்டாள். எட்டு மணிக்கே சூரியன் தன் இருப்பை வலிமையாக உணர்த்திக் கொண்டிருந்தது. காய வைக்காத கூந்தலை அள்ளி முடிந்திருக்க லேசாக தலை வலிக்க ஆரம்பித்தது.
புதிய மணப் பெண்ணுக்கே உரிய உடல் அயர்வின் காரணமாக அவளால் ஐந்து நிமிடங்கள் கூட செய்ய முடியவில்லை. அடி வயிறு வேறு வலிப்பது போலிருந்தது. இன்னும் சொல்ல முடியாத உடல் உபாதை வேறு. காலையில் எழுந்த போது சாதாரணமாக இருந்த தொந்தரவு இப்போது அதிகமாகி விட்டது.
சரவணனும் உடனிருக்க அவளால் தன்னுடைய உபாதைகளை கணவனிடமும் பகிர முடியவில்லை. அவளின் கண்கள் கலங்க காத்திருக்க, மேலுதட்டை மடக்கி பற்களால் அழுத்தி அழுகையை அடக்கினாள்.
என்னவென தெரியா விட்டாலும் ஏதோ அவளுக்கு செய்கிறது என புரிந்து கொண்ட சேரன் பதறிப் போனான்.
மதுராவிடமிருந்து உரலை வாங்கிக் கொண்டவன் கண்களால் ஆறுதல் சொல்லி ஓரமாக நிற்க சொன்னான்.
சரவணன் தன் அண்ணியின் முகத்தை பார்க்க, தலையை திருப்பி கண்களை துடைத்துக் கொண்டவள் சிரிக்க முயன்றாள். இது கூட செய்ய வரவில்லை என நினைத்து விடுவானோ என சங்கடமாக வேறு இருந்தது.
“புதுசா செய்றப்போ அப்படித்தான் அண்ணி இருக்கும். கலங்காதீய, வெயில்ல நிக்காம கீழ போங்க அண்ணி” என அக்கறையாக சொன்னான் சரவணன்.
“இல்ல இருக்கட்டும், நான் செய்றேன்” என சொல்லி கணவனிடம் உரலை பெற கை நீட்டினாள்.
வீட்டின் பக்கவாட்டில் இருந்த தென்னை மரம் தந்த நிழலில் மனைவியை நிற்க வைத்த சேரன், வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவனே வத்தல் பிழிய ஆரம்பித்தான்.
“நேத்து தோசை, இன்னிக்கு வத்தல், நாளைக்கு என்ன ண்ணா?” கிண்டல் செய்தான் சரவணன்.
“வாயடிக்காம வா, ரெண்டு உரல் இருக்குன்ன, ஒன்னுல நான் புழிய புழிய இன்னொன்னுல கூழை வச்சு தா” என ஏவினான் சேரன்.
சரவணனும் மறுக்காமல் உதவ, சட சட என வேலை ஆகிக் கொண்டிருந்தது.
பத்து மணிக்கு ஊர்க் குளத்தில் மீன் பிடிக்கும் குத்தகை நடக்க இருக்க அது சம்பந்தமாக பேச சேரனை தேடினார் கந்தசாமி. அவனை காணவில்லை எனவும் மனைவியிடம் விவரம் கேட்டார்.
“இந்த வூட்டுக்குன்னு ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாதவ வந்து வாச்சிருக்கான்ன? மேல போய் பாருங்க” என்றார் கனகா.
“என்னடி சம்பந்தம் இல்லாத பேசுற?” எரிந்து விழுந்தார் கந்தசாமி.
“வத்த புழிய சொன்னேன், வேலை கஷ்டம் தெரியாம இருக்க புருஷனோடையும் போதாத குறைக்கு கொழுந்தனோடையும் கதையடிச்சிட்டு இருப்பா, நீங்களும் போய் கதை வைங்க, அவளுக்கு அலுப்பு தெரியாது…” கனகா பேசிக் கொண்டிருக்க இரண்டு மகன்களும் அங்கிருப்பதால் கந்தசாமியும் மாடி சென்றார்.
“என்னடா செய்றீய!” என்ற கந்தசாமியின் குரலில் அதிர்ந்து, பின் அசடு வழிய பார்த்தனர் சகோதரர்கள் இருவரும். பயமும் சங்கடமுமாக நின்றிருந்தாள் மதுரா.
“மீன் புடி குத்தகை இருக்கு, அத கூட வுடு, அடுத்த தெருவுல குப்பை எடுக்க யாரும் வரலையாம், கோவிலடில தண்ணி வரலையாம், வார்டு மெம்பரா இருக்கவன் அத என்ன ஏதுன்னு பாக்க காணோம். காலை மொத கொண்டு என்னத்தடா செய்ற?” பெரிய மகனிடம் கோவமாக கேட்டார்.
மாமனாரின் முகத்தையே காண இயலாமல் மதுரா தலை குனிந்து நிற்க, அலட்டிக் கொள்ளாத சேரன், “பார்க்குறீயல்ல ப்பா, என்ன செய்றேன்னு தெரியலையா உங்களுக்கு?” எனக் கேட்டான்.
“எலேய்!” அதட்டினார் கந்தசாமி.
“இவள அடுப்படில விட மாட்டேங்குது அம்மா, செய்ய தெரியாத வேலைய கொடுத்துப்புட்டு என்ன ஏதுன்னு கூட கண்டுக்க மாட்டேங்குது. போதாதுக்கு கண்டதையும் பேசுது. என்னைய நம்பி வந்தவ ப்பா. வீட்ல கட்டின பொண்டாட்டிய ஒழுங்கா பாத்துக்காம ஊர் பிரச்சனைய என்னன்னு போய் பாப்பேன்?” கேட்டுக் கொண்டே வத்தல் பிழிந்தான் சேரன்.
கந்தசாமி ஏதோ சொல்ல வருவதற்குள், “கோணலா போவுது ண்ணா, லைனா புழிஞ்சு வுடு, உனக்கு வரலைன்னா நீ தள்ளு, நான் புழியுறேன்” என்றான் சரவணன்.
“கோணிக்கிட்டு இருந்தா என்னடா இப்போ? அதுவும் ஒரு தினுசா நல்லாத்தான்டா இருக்கு” என்றான் சேரன்.
இடுப்பில் கை வைத்து இரண்டு மகன்களையும் முறைத்து நின்றார் கந்தசாமி.
“சாரி மாமா, எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லயா, அதான்…” என்ன பேச என தெரியாமல் ஏதோ பேசி வைத்தாள் மதுரா.
மருமகளை இரக்கமாக பார்த்தவர், பெரிய மகனிடம், “எப்படாய்யா முடியும்?” எனக் கேட்டார்.
“அரை மணி நேரத்துல முடிஞ்சும் ப்பா, நீங்க போங்க இன்னும் நேரமிருக்குன்ன? செழியன்கிட்ட சேதி சொல்லிட்டா வார்டு வேலையெல்லாம் அவன் பார்த்துக்குவான், குத்தகைக்கு ஒம்பதே முக்காவுக்கு போனா கூட போதும், மத்த வேலையையும் ஒன்னொன்னா பாத்து வுடுறேன்” என்றான் சேரன்.
“கவுன்சிலர் நீயா இல்ல அந்த செழியன் பயலா?” என கோவமாக கேட்டார்.
“இந்த அரசியல் எல்லாம் எனக்கு செட் ஆவாதுன்னு அப்பவே சொன்னேன். நீங்கதான் மல்லுகட்டி எலெக்ஷன்ல நிக்க வச்சீய. கவுன்சிலர் நான்தான்னாலும் நீங்களும் சின்னையன் மாமாவும்தான் எல்லாம் பார்க்குறீய, நீங்க சொல்றத நான் செய்றேன், இன்னிக்கு செழியன் செய்ய போறான். ரூல்ஸ் எல்லாம் பேசாதீயப்பா” என்றவன் வத்தல் பிழிவதை மட்டும் நிறுத்தவில்லை.
தோளில் கிடந்த பச்சை துண்டை உதறி மீண்டும் தோளில் போட்டுக் கொண்ட கந்தசாமி கீழே செல்ல திரும்பினார்.
“அப்படியே அம்மாகிட்ட கொஞ்சம் புத்திமதி சொல்லி வையுங்க ப்பா” என்றான் சேரன்.
“ஆமான்டா நான் சொன்னதும் அப்படியே நடந்துக்க போறா” புலம்பலாக சொல்லி சென்றாலும் கீழே போய் மருமகளிடம் கடினமாக நடக்காதே, நம் வீட்டு பெண் அவள் என மனைவியிடம் கூறத்தான் செய்தார்.
என்னை பற்றி உங்களிடம் கோள் மூட்டி கொடுத்தாளா என அதற்கும் மதுராவைத்தான் பேசினார் கனகா.
“உன்னையெல்லாம் மாத்த முடியாதுடி, ஏதோ அம்மா பாசத்துல நீக்கு போக்கா இருக்கான் உம் மவன், நீ இப்படியே இருந்தா எப்ப என்ன செய்வான்னு சொல்ல முடியாது, அப்புறம் உன் பாடு” என எச்சரிக்கை செய்தார்.
“என்னத்த செய்வான்? அவனை எங்க அடிக்கணும் எங்க புடிக்கணும்னு எனக்கு நல்லா தெரியும், அவளா நான்னான்னு பார்க்கிறேங்கிறேன்” என சவாலாக சொன்னார் கனகா.
“நீ அவனை என்னமோன்னு நினைச்சுட்டு பேசுறடி. நம்ம பய அந்த புள்ள மேல உசுரா இருக்கான். சின்னவன் மாதிரி பதிவுசும் கிடையாது இவன். எல்லை மீறி போனீன்னா என் பேச்சே அவன்கிட்ட எடுபடாது, சொல்லிப்புட்டேன் பார்த்துக்க” என சொல்லி நகர்ந்து விட்டார்.
ஏதாவது கனகாவின் புத்தியில் ஏறினால்தானே?
மாடியிலிருந்து மூவரும் கீழே வந்த பின்னர் “ஒழுங்கா பிழிஞ்சியா இல்ல தரட் தரட்ன்னு கடமைக்கு இழுத்து வுட்டுட்டு வந்தியா? மெனெக்கெட்டு கிண்டின கூழு உரு சேருமா?” என இடக்காக விசாரணை செய்தார்.
மதுரா பதில் தருவதற்குள், “அவளுக்கு தெரிஞ்சதை செஞ்சிருக்கா, சரியா வரலைனா இனிமே செய்ய சொல்லாத. நானும் என் பொண்டாட்டியும் வத்தல் சாப்பிடவே மாட்டோம். உனக்கு வேணுங்கிறத நீயே செஞ்சுக்க” கோவத்தை அடக்கிக் கொண்டு சொன்னான் சேரன்.
கொஞ்சம் சத்தத்தை குறைத்தவர், “சரி சரி, சாப்பிட்டுட்டு அவளை போய் பாத்துக்க சொல்லு, இல்லைன்னா காக்கா கொண்டு போயிடும் எல்லாத்தையும்” என்றார்.
இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு முறைத்த சேரன், “தென்னை மர நிழல் கூட செத்த நேரத்துல மறைஞ்சு போவும். மாடில வத்த காயனும்னா என் பொண்டாட்டியும் சேர்ந்து காயனுமா? காக்கா தின்னா தின்னுட்டு போவுது” என அம்மாவிடம் அதட்டலாக சொல்லி மனைவியிடம், “சாப்பிட்டு போய் தூங்கு, அவ்ளோ வத்த புழிஞ்சு உடம்புக்கு ஆவாம வந்திடும்” என்றான்.
குளித்து விட்டு வந்த சரவணன், “ண்ணா நானும் ரெண்டு மணி நேரம் கழிச்சு வர்றேன், தோப்புல காய் இறக்குறானுவோ ஒரு எட்டு பார்த்துக்க” என்றான்.