காலையிலேயே குளித்து துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள் மதுரா. எழுந்து வந்த சேரன் அம்மாவிடம் சூடாக காபி கேட்டு வாங்கி மனைவியிடம் எடுத்து சென்று நீட்டினான்.
“இவன் பொண்டாட்டிக்கு நான் என்ன வேலையாளா?” என அப்போதே முணு முணுப்பாக புலம்ப ஆரம்பித்து விட்டார் கனகா.
“சும்மான்னு இல்லாம நீங்களே ஏன் வம்பை விலை கொடுத்து வாங்குறீங்க? எனக்கு நானே போட்டுக்கிறேன், அதை நீங்களே குடிங்க” என்றாள் மதுரா.
“விடிய காலைல பசிக்குதுன்னவ, பிகு பண்ணாம புடிடி” அவளது தோளை பிடித்து இழுத்து, கையில் காபி டம்ளரை திணித்தவன் மிச்சமிருந்த துணிகளை அவனே காயப்போட ஆரம்பித்தான்.
மதுராவின் ரவிக்கை ஒரு தோளில் கிடக்க அவளது பாவாடையை இறுக்கிப் பிழிந்து கொண்டிருந்த மகனை ஜன்னல் வழி பார்த்த கனகா தலையில் அடித்துக் கொண்டார்.
“அச்சோ… பக்கத்தூட்டு அக்கா பார்த்துட்டு சிரிச்சிட்டு போறாங்க. இன்னிக்கு இந்த தெரு முழுக்க உங்களை பத்திதான் கிசு கிசுக்க போறாங்க, வச்சிட்டு உள்ள போங்க” என்றாள்.
“அப்படி என்னத்தடி தகாத காரியம் செய்றேன் நான்னு அத்தாச்சி சிரிக்குது?” எனக் கேட்டானே ஒழிய தன் வேலையை மட்டும் நிறுத்தவில்லை.
“நைட் உன் உடம்புலேயே நான் தொடாத இடம் பாக்கி இல்ல, இதுல நீ போடுற துணிய தொட்டேன்னு துள்ளுற, தெரியாமதான் கேட்குறேன், ராத்திரி நாந்தானேடி இதையெல்லாம் உன்கிட்டேருந்து…”
“போதும் போதும்…” சுற்றம் பார்த்துக் கொண்டே அச்சத்தோடு சொன்னாள்.
“புருஷன் தொடாத பொண்டாட்டி பிராப்பர்ட்டினு எதுவும் இல்லைனு இப்ப புரிஞ்சுதா? இல்ல இன்னும் விளக்கமா சொல்லவா?”
வீட்டு ஆண்களுக்கு விடிந்த உடனே வேலை இருக்கும். காபி, நீர் மோர் என எதையாவது பருகி விட்டு சென்று விடுவார்கள். பின் காலை சாப்பாட்டுக்குத்தான் வருவார்கள். நேற்று கந்தசாமியே பெரிய மகனிடம் புதிதாக திருமணம் முடித்திருப்பதால் காலை வேலைகளை எல்லாம் தானும் சின்ன மகனும் பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டார்.
ஆகவே கவலை இல்லாமல் வீட்டில் இருந்தான் சேரன்.
கனகா அடுப்பை பிடித்துக்கொண்டு மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தார். இன்னொரு முறை காபி போட சொல்லி கணவன் கேட்டால் என்ன சொல்வாரோ என பயந்த மதுரா இண்டக்ஷன் ஸ்டவ்வில் காபி தயாரித்து கணவனுக்கு எடுத்து சென்றாள்.
மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து கொண்டிருந்தவன் கைகளை சுத்தம் செய்து கொண்டு வந்து காபியை பருகினான்.
முன்னரெல்லாம் அதிக மாடுகள் வைத்திருந்தனர். பராமரிக்க முடியாமல் இப்போது வீட்டு உபயோகத்துக்கு என ஒரு கறவை பசுவும் அதன் கன்று குட்டியும் சினையாக இருந்த இன்னொரு பசுவும் மட்டும் நின்றன. இரண்டு ஆடுகளும் இருந்தன. கனகாவே பால் கறந்து விடுவார். சேரனோ சரவணனோ கொட்டகையை சுத்தம் செய்து விடுவார்கள்.
மதுரா அங்கேயே நின்றிருக்க, “அம்மா தனியா சமைக்குதுன்னடி, போய் ஒத்தாசை பண்ணு” என்றான்.
“வேணும்னா அவங்களே கூப்பிடட்டும்” என்றாள்.
“நீயும் ஒதுங்கி ஒதுங்கி போனா இப்படியே இருக்க வேண்டியதுதான். தானா போய் நில்லு மதுரா” தன்மையாக அவன் சொல்ல, அவனுக்காக சரி என்றவள் தயக்கமாக வீட்டை நோக்கி பார்த்தாள்.
“நான் அங்குட்டுத்தான் இருப்பேன், நீ கேளு, என்ன சொல்லுதுன்னு நானும் பார்க்கிறேன்” என அவன் சொல்ல அந்த தைரியத்தில் அவளும் சென்றாள்.
மாமியாரிடம் “எதுவும் செய்யணுமா அத்தை?” எனக் கேட்டாள்.
“ஏன் உன் புருஷனோட அடிக்க வேண்டிய கூத்தெல்லாம் ஆடி முடிச்சிட்டியா? குடும்பம்னு நினைச்சியா என்னன்னு நினைச்ச? வீட்ல இன்னும் ரெண்டு ஆம்பளைங்க இருக்கிறது தெரியலையா? கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம போச்சாடி?”
“ம்மா!” என்ற சேரனின் அதட்டலில்தான் தன் பேச்சை நிறுத்தினார்.
மகன் இங்குதான் இருப்பான் என எதிர்பார்க்காதவர் திகைத்து விழிக்க, கணவனை கோவமாக பார்த்த மதுரா அங்கிருந்து சென்று விட்டாள்.
“என்னம்மா பேசுற நீ?” முகத்தை அருவருப்பாக்கி கொண்டு கேட்டான் சேரன்.
“உனக்கும்தான் டா சொல்றேன், எதுவா இருந்தாலும் நாலு செவுத்துக்குள்ள வச்சுக்க, அவ உள்ள போடுறது வரை காய போடுற, கருமம், கருமம்! கவுரதியா வாழ்ந்திட்டு இருக்கோம்ங்கிற நெனப்பு இருக்கா இல்லயா உனக்கு?”
“உனக்குத்தான் விவஸ்தங்கிறதே இல்லாம போயிட்டு. எந்த காலத்துலம்மா இருக்க நீ? புருஷன் பொண்டாட்டின்னா வேற வேற இல்ல. அத மொதல்ல புரிஞ்சுக்க”
“ஆமாம் இந்த உலகத்திலேயே நீதான் மொத மொத கல்யாணம் கட்டியிருக்க, ரூம விட்டு வெளில வந்தா மருவாதிக்கு அவள வுட்டு தள்ளி நில்லு சொல்லிப்புட்டேன்”
“தனியா சமைக்கிறேன்னு உனக்கு போய் பாவம் பார்த்த என்னையதான் சொல்லணும்”
“நல்லதுக்கே காலம் இல்லடா. நீ போ, இதான் சாக்குன்னு உன் பொண்டாட்டிய ராணி மாதிரி ரூமுக்குள்ள ஒளிச்சு வச்சுக்க. நான் இடுப்பொடிய சமைச்சு கொட்டுறேன் அவளுக்கு”
“தெரிஞ்சுக்க சொல்லு, என்னால மாடில ஏற முடியுமா? இல்ல குனிஞ்சு குனிஞ்சு புழியத்தான் முடியுமா? அப்படியும் இவ்ளோ நாள் நான்தான் இதெல்லாம் செஞ்சேன், அவ வந்த பொறவும் நானே அல்லாடனுமா?” என்ற அம்மாவிடம் என்ன பேசுவதென்றே அவனுக்கு தெரியவில்லை.
தோப்பில் நீர் பாய்ச்சி விட்டு அப்போதுதான் வந்த சரவணனை அழைத்த சேரன் வத்தலுக்கு பிழிய தெரியுமா என கேட்டான்.
என்ன என அவன் கேட்க அம்மா சொன்னதை சொன்னவன், “சென்னைல வளர்ந்தவடா, இங்குட்டு இருந்தப்ப கூட வீட்டு வேலையெல்லாம் செய்வாளே ஒழிய இதெல்லாம் செஞ்சிருக்க மாட்டா. கத்துக்கொடுக்க யாராவது வேணுமில்ல, அம்மாகிட்ட சொல்லித் தர சொல்லி அவளை இன்னும் டார்ச்சர் செய்ய முடியாது” என கவலையாக சொன்னான்.
“எனக்கும் தெரியாதே ண்ணா” என சரவணனும் கவலையாக சொல்ல, அந்த தெருவில் இருக்கும் சின்னப்பொண்ணு என்கிற பாட்டியை அழைத்து வர சொன்னான்.
மதுராவிடம் சென்று விஷயத்தை சொல்ல, “என்ன உங்கம்மா கொடுமை பண்றாங்களா? நீங்களும் உடந்தையா அதுக்கு? எல்லாத்துக்கும் பொறுமையா போவேன்னு நினைச்சீங்களா?” என கோவமாக கேட்டவளுக்கு அழுகை வந்து விட்டது.
“அடடா என்னடி பேசுற? இதுவும் வீட்டு வேலைதான? இதுக்கு முன்னாடி அம்மாதான செஞ்சது. சமையகட்டை எத்தன நாளைக்கு உங்கிட்ட வுடாம இருக்குன்னு பார்க்கிறேன். நான் கூட இருக்கேன்ன? வா” என பொறுமையாக சொல்லவும் எழுந்து கொண்டாள்.
கூழ் காய்ச்சியிருந்த அந்த பெரிய குண்டானை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு சேரன் படி ஏற உரல், வெள்ளை வேஷ்டிகள் என எடுத்துக் கொண்டு மதுராவும் அவன் பின் சென்றாள்.
ஒரு கவுளி வெற்றிலை, பாக்கு என வாங்கிக் கொடுத்து பாட்டியை அழைத்து வந்தான் சரவணன்.
“இதெல்லாம் வெயில் ஏறுறதுக்குள்ள செய்யணும்னு உன் மாமியாக்கு தெரியாதா? வக்கணையா வாப்பட்டாதான் போடுவா” என கனகாவை குறை படித்துக் கொண்டே எப்படி பிழிவது என சொல்லிக் கொடுத்தார் பாட்டி.