ஜனக்நந்தினிக்கு அன்றைய நாள் மிக கடினமாக தான் இருந்தது. புது வீட்டில் பால் காய்ச்சிட்டு விட்டு, அவசரமாக அலுவலகம் ஓடினால் மேனேஜர் அழைத்துவிட்டார்.
“உங்க இஷ்டத்துக்கு வீட்ல உட்கார்ந்துட்டு வேலை பார்ப்பீங்களா?” என்று ஆரம்பித்து நிறைய பேச்சு.
“சார் நான் எந்த வேலையும் பெண்டிங் வைக்கலை” என்று ஜனக்நந்தினி சொன்னதெல்லாம் அவர் காதிலே ஏறவில்லை.
“முக்கியமான மீட்டிங் எல்லாம் நீங்க மிஸ் பண்ணிட்டீங்க. உங்க ப்ரஸண்டேஷன் அடுத்த வாரம் வரும். என்ன பண்ண போறீங்க?” என்று தொடர்ந்து பேசினார் மனிதர்.
சூழ்நிலை. கேட்டுவிட்டு தான் வீட்டில் இருந்து வேலை பார்த்தாள். சரியென்றுவிட்டு, இப்போது இப்படி பேசினால் என்ன செய்வது? பெண்ணுக்கு கொஞ்சம் கடுப்பானது.
மதியத்துக்கு மேல் மேனேஜரின் கரைச்சல் பெண்ணுக்கு தாங்க முடியவில்லை. “உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருந்தா ஏன் எனக்கு பெர்மிஷன் கொடுத்தீங்க?” என்று ஒரு கட்டத்தில் கடுப்பாகி கேட்டுவிட்டாள்.
“நீங்க வீட்ல உக்காந்துட்டு கேட்டா நான் வேற என்ன பண்ணட்டும்? பெர்மிஷன் கொடுத்ததுக்கு என்னையே குற்றம் சொல்றீங்களா?” என்று அதை வைத்து பேச ஆரம்பித்துவிட்டார்.
“இவ்வளவு எபிஷியன்ட்டா வேலை பார்த்தும் இந்த பேச்சு தானா? இவங்களுக்கு ஏன் நான் ஓடி ஓடி உழைக்கணும்?” பெண்ணுக்கு ஆதங்கம்.
தலைவலி வெடிக்க ஆரம்பித்துவிட்டது. “கொஞ்சம் நல்லா வேலை பார்க்கறாங்கன்னு பார்த்தா உடனே தலையில ஏறிடுறாங்க” என்று டீமில் வைத்து பேச, ஜனக்நந்தினிக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
“எனக்கு பெர்மிஷன் வேணும். நான் கிளம்புறேன்” என்று மெயில் அனுப்பிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.
இன்று ஒரு நாள் என்றால் பரவாயில்லை. இதையே இவர் தொடர்ந்தால் என்னால் அங்கு வேலை பார்க்க முடியுமா? பெண்ணுக்கு யோசனை.
தணிகைவேலிடம் பேசலாம் என்றால், அவர் ஊருக்கு கிளம்பி நின்றார். ‘சரி அப்புறம் பேசிக்கலாம்’ என்று அப்பா, அம்மாவை வழியனுப்பி வைத்தாள்.
இரவு ரகுராம் வர, அவளை பேசவிடாமல் கைகளில் அள்ளி கொண்டான். பெண்ணின் அவ்வளவு நேர மன அழுத்தத்துக்கு கணவனின் நெருக்கம் மிகவும் தேவைப்பட்டது.
அவனை குளிக்க அனுப்பி வைத்து, உணவின் நேரம் பேசினாள். இன்று அலுவலகத்தில் நடந்ததை சொன்னாள். “அவர் இதையே கன்டினியூ பண்ணா எனக்கு அங்க ஒர்க் பண்ண முடியும்ன்னு தோணலை” என்றாள்.
“எனக்காக தான் இங்க வீடும் எடுத்தோம். நீங்களும் அவ்வளவு தூரம் தினமும் அலையுறீங்க. எதுக்கு இந்த கஷ்டம்? நாம உங்க ஆபிஸ்கிட்டே வீடு பார்க்கலாம்”
“அதோட நான் ஜனக் முகூர்த்தம்ல ஜாயின் பண்ணலாம்ன்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க?” என்று கேட்டாள்.
ரகுராம் சாப்பிடவே இல்லை. எழுந்து கொண்டான். “என்ன ஆச்சு? ஏன் எழுந்துட்டீங்க, சாப்பிடுங்க” என்று கேட்டாள் மனைவி.
“எனக்கு வேணாம்” ரகுராம் மறுத்து அறைக்கு வந்துவிட்டான்.
ஜனக்நந்தினிக்கு புரியவில்லை. பின்னாலே சென்றவள், “என்னன்னு சொல்லுங்க” என்று கேட்டாள்.
“இப்போ என்னால உன்கிட்ட பொறுமையா பேச முடியாது. டைம் கொடு. என்னை தனியா விடு” என்றான்.
“கோவமா இருக்கீங்களா? அப்படியென்ன சொல்லிட்டேன்?”
“ஜனக் என்னை விடுன்னு சொன்னேன்”
மனைவி அப்படியே நின்றுவிட்டாள். முதல் முறையாக ‘ஜனக்’ என்று அழைக்கிறான். ஆனால் மகிழத்தான் முடியவில்லை.
“கோவத்துல தான் ‘ஜனக்’ கூப்பிடுவீங்களா?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.
“இனி கூப்பிடலை” என்று கட்டிலில் படுத்து கொண்டான்.
ஜனக்நந்தினிக்கும் கோவம் வர ஆரம்பித்தது. “என்னன்னு சொல்லாம இதென்ன?” என்று அவனை நெருங்கி கேட்டாள்.
ஜனக்நந்தினி வேகமாக அறையை விட்டு வெளியே வந்துவிட்டாள். கண்கள் கலங்கி போனது.
ரகுராம்க்கு தான் செய்வது தவறு என்று நன்றாகவே புரியும். ஆனால் பேசி இதை பெரிதாக்க அவன் தயாரில்லை.
அவளுக்கு சில விஷயங்கள் புரியாது. அவள் வேறு. மனதிற்கு இது நன்றாக தெரிகிறது. ஆனால் ஏற்கத்தான் முடியவில்லை.
ஹாலில் இருந்த ஜனக்நந்தினிக்கு கணவன் சாப்பிடாமல் இருப்பது வருத்தியது. நாள் முழுதும் ஓடி ஓடி உழைக்கிறான். சத்தான ஆகாரத்துக்கே சில நாள் சோர்ந்து விடுவான்.
மனது கேட்காமல், பாதாம் பால் எடுத்து சென்று அறையில் வைத்தவள், “இதையாவது குடிச்சுட்டு தூங்குங்க” என்று வந்துவிட்டாள்.
ரகுராம் எழுந்தமர்ந்து கொண்டான். பால் குடிக்காமல் வெளியே வந்து பார்க்க, மனைவி போனில் “வீட்டுக்கு போயிட்டீங்களா?” என்று பாரதியிடம் பேசி கொண்டிருந்தாள்.
கட்டிலுக்கு வந்தவன், பால் குடித்து கட்டிலில் சாய்ந்தமர, ஓட்டத்தில் அசந்துவிட்டான். ஒருநேரமாக கழுத்து வலியில் முழிப்பு வர, வெளியே வந்து பார்த்தான்.
ஜனக்நந்தினி சோபாவில் தூங்கியிருக்க, கட்டிலுக்கு தூக்கி வந்தான். மனைவி முழித்துவிட்டாள். ரகுராம் அவளை தன் நெஞ்சில் சாய்த்து தட்டி கொடுக்க, இருவரும் தூக்கத்தை தொடர்ந்தனர்.
மறுநாள் ரகுராம் அலுவலகம் கிளம்ப, ஜனக்நந்தினிக்கு அலுவலகம் செல்ல அறவே பிடிக்கவில்லை. கிளம்பாமல் இருந்தாள். கணவன் உணவுக்கு அமர்ந்தான்.
ஜனக்நந்தினி பரிமாற வராமல் இருக்க, “நான் போகவா?” என்று கேட்டான்.
நேற்றிரவும் அவன் சாப்பிடாமல் இருக்க, எழுந்த கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டு பரிமாறினாள். பேச்சின்றி உண்டு கிளம்பிவிட்டான்.
ஜனக்நந்தினி விடுமுறை என்று மெயில் செய்து அமர்ந்து கொண்டாள். தணிகைவேல் வழக்கமான பிரேக் நேரம் அழைக்க, “நான் ஆபிஸ் போகலைப்பா” என்றாள் மகள்.
“ஏன் பாப்பா. உடம்பு ஏதும் சரியில்லையா?” என்று கேட்க,
“மேனேஜர் ரொம்ப பேசுறார்ப்பா” என்றவளுக்கு குரல் தழுதழுத்துவிட்டது.
மகளுக்கு அப்பாவின் ஆதரவில் கண்ணீர் கூடிவிட்டது. கணவனிடம் இதை தான் எதிர்பார்த்தாளோ?
“நீ வருத்தி வேலை பார்க்கணும் எல்லாம் இல்லை பாப்பா. உனக்கென்ன நீ ராஜகுமாரி, நீ ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறவ. உன்னை ஒருத்தன் பேசுவானா?” தணிகைவேல்க்கு கோவம்.
“உடனே அந்த வேலையை தூக்கி போடு. என்ன வேணும் சொல்லு. நான் பண்ணி தரேன்” என்றார் தந்தை.
“சென்னையிலேன்னாலும் ஓகே, இங்க கரூர்ன்னாலும் ஓகே பாப்பா. முடிவெடுத்து சொல்லு” என்றவர், நினைவு வந்தவராய், “மாப்பிள்ளைகிட்ட பேசுனியா. என்ன சொன்னார்?” என்று கேட்டார்.
முகம் துடைத்து தண்ணீர் குடித்தவள், “இன்னும் அவர்கிட்ட பேசலைப்பா” என்றுவிட்டாள்.
இதில் அப்பா ஏதும் கணவனை பேசிவிட்டால்?
“சரி சரி.. நீ பேசு. அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசி. நம்ம தொழில் எதாவது பார்க்கிறியா, இல்லை உனக்கு பிடிச்சதா புது தொழில் ஏதும் ஆரம்பிக்கலாமான்னு பாரு. எல்லாத்துக்கும் நாம ரெடி தான்” என்றார்.
ஜனக்நந்தினி சரியென்று வைக்க, அடுத்த சில நிமிடங்களில் ப்ரவீன் அழைத்துவிட்டான். “என்னாச்சு பாப்பா? அப்பா உனக்கு ஏதாவது பிஸ்னஸ் பார்க்கணும்ன்னு சொல்லிட்டிருக்கார்” என்று விசாரித்தான்.
ஜனக்நந்தினி கொஞ்சம் தெளிந்திருந்தவள், “மேனேஜர் கொஞ்சம் பேசிட்டார்ண்ணா, அங்க வேலை செய்யணுமான்னு இருக்கு” என்றாள்.
ப்ரவீன்க்கு வேலை இடத்தில் இதெல்லாம் சகஜம் என்று தான் தோன்றியது, ஆனால் தங்கையிடம் சொல்லவில்லை. வருத்தத்தில் இருக்கிறாள் என்று விட்டுவிட்டவன், மேலும் பேசி வைத்தான்.
ஜனக்நந்தினியின் உடன் வேலை செய்பவர் சிலர் அழைத்து பேசினர். “சீனியர் மேனேஜர் நம்ம மேனேஜரை கூப்பிட்டு பேசினார். நல்லா வேலை பார்க்கிற பொண்ணு. நீங்களே பெர்மிஷன் கொடுத்துட்டு அவங்ககிட்ட ஏன் ஹார்ஷா நடந்துகிட்டிங்கன்னு கேட்டிருக்கார்” என்று சொன்னார்கள்.
“எடுத்ததும் நல்ல கம்பெனில பிளேஸ் ஆகியிருக்க. இவருக்காக எல்லாம் பேக் அடிக்கலாமா? வேலைன்னா வந்துட்டா எல்லாம் தான் இருக்கும். நீ வா. பார்த்துக்கலாம்” என்றார்கள்.
இவளுக்கு போட்டியாக இருப்பவனோ, “உனக்கென்ன தலையெழுத்து நந்தினி இவர்கிட்ட பேச்சு வாங்க. நீ உங்க பிஸ்னஸ் பக்கம் போ” என்றான்.
பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு வந்தது. அதன்பின்னே குளித்து சாப்பிட அமர்ந்தாள். மாலை ஆக, கணவனை பார்த்தே ஆக வேண்டும் போல் இருந்தது.
‘ரீசனே சொல்லாம உன்கிட்ட கோவப்பட்டிருக்கார், அவரை பார்க்க போறியா’ மூளை துப்பியது.
‘அவருக்கு எதாவது காரணம் இருக்கும்’ மனம் உடனே சப்போர்ட்டுக்கு வந்தது.
ஒருமாதிரி குழம்பிய நிலையில் இருந்தவளுக்கு, கணவனிடம் இருந்து மெசேஜ். “இந்த காபி ஷாப் வரியா?” என்று.
மனைவி முகம் மலர்ந்து போனது. உடன் கோவமும். பதில் அளிக்காமல் இருந்தாள். “ப்ளீஸ் வாடி” என்று அடுத்த மெசேஜ்.
உதடுகளில் புன்னகை நெளிந்தது. “ஜனக். வாடி” அடுத்து வர, பெண் கிளம்பிவிட்டாள்.
வரேன் என்று சொல்லாமல் தான். வருவேனா மாட்டேனான்னு எதிர்பார்த்துட்டு இருக்கட்டும். அவளுக்கான பழிவாங்கல்.
கணவன் கொடுத்த புடவை அணிந்து கொண்டாள். நேர்த்தியாக, பார்த்து பார்த்து அலங்காரமும் செய்து கொண்டாள்.
ஏனோ ஒரு படபடப்பு. கொஞ்சம் ஆர்வம், தீரா கோவமுமாக காபி ஷாப் வந்து சேர்ந்தாள்.
ரகுராம் சிஸ்டமில் இருந்தபடி வாசலையே பார்த்திருந்தவன் மனைவி நுழையவும் புன்னகையில் மின்னினான்.
அவன் மனைவியோ கணவனிடம் செல்லாமல், நேரே டேபிளுக்கு சென்றாள். கால் மேல் காலிட்டு அமர்ந்தாள்.
“கிளாஸ்டா என் பொண்டாட்டி” கணவன் ரசித்தான்.
ஜனக்நந்தினி அவன் பக்கமே திரும்பாமல் ஆர்டர் கொடுத்தாள். ரகுராம் பார்வை குறுகுறுப்பை மறைக்க, மொபைல் பார்த்தாள்.
உடலும், மனமும் அடிக்கடி சிலிர்த்தது. பார்க்கிறதை பாரு! புடவையை இழுத்துவிட்டு கொண்டாள்.
பெண்ணின் டேபிளுக்கு வந்த உணவுகள், ரகுராமின் டேபிளிலும் வைக்கப்பட்டது. வெய்ட்டர் ரகுராமை பார்த்து சிரித்தவர், “இந்த டேட்டிங்குக்கு என்ன பெயர் சார்” என்று கேட்டு சென்றான்.
ரகுராம்க்கும் அப்படி ஒரு சிரிப்பு. மனைவி தனக்காக பார்த்து பார்த்து சொல்லியிருந்ததை விரும்பி சாப்பிட்டவன், பில்லை தன்னிடம் கொடுக்க சொல்லி கட்டினான்.
வேலையையும் சீக்கிரம் முடித்து கொண்டவன், பேக் மாட்டியபடி மனைவி அருகில் வந்து நின்றான். அவள் அவனை பார்க்க வேண்டுமே?
ரகுராம் மனைவி முன் கை நீட்ட, தீவிரமாக மொபைலில் இருந்தாள். “ஜனக்” என்றான்.
காதோர முடிகள் சிலிர்த்தெழ, கை கொண்டு வேகமாக தேய்த்துகொண்டாள்.
“தூக்கிட்டு போகணுமா? நேத்து மாதிரி” என்று மென்குரலில் கேட்க, மனைவி எழுந்து நடந்துவிட்டாள்.
கோவம் போய்விடுமோ? கார் எடுக்க, ரகுராம் அவனின் பைக்கில் மனைவியை தொடர்ந்தான்.
வீடு திறந்து அடைத்த நொடி, ஜனக்நந்தினியை பின்னிருந்து அணைத்து கொண்டான். இவள் திமிற, இதுதான் வாய்ப்பென்று இன்னும் இறுக்கமான பிடி.
கைகள் இடை சேலைய கசக்கி உள்நுழைய, தட்டிவிட்டாள். “அப்படி தான் போவேன்” என்று அவன் இன்னும் ஜோராக அவளின் இடையை முழுதாக ஆக்கரமித்தான்.
“நேத்து நைட் சாப்பிடாம கூட கோவப்பட்டுட்டு இப்போ என்ன?” என்று கேட்டாள்.
“கோவம் தான். ஆனா பட்டிருக்க கூடாதுன்னு புரிஞ்சது” என்றான் கணவன்.
பெண் கணவன் முகம் பார்க்க நின்றவள், பட் பட்டென அவன் நெஞ்சில் அடித்தாள். உடன் கண்களில் நீரும். “சாரி” என்றான் நெற்றி முட்டி முத்தமிட்டபடி.
“ஒன்னும் வேணாம் போங்க” என்று ரோஷத்துடன் சொன்னவள், கண்களை அவன் ஷர்ட்டிலே துடைத்தாள்.
“நான் நீ இல்லை தானே. அப்புறம் என்னை உன்கிட்ட எதிர்பார்க்க கூடாது இல்லை” என்றான்.
“தெளிவா சொல்லுங்க” ஜனக்நந்தினி கேட்க,
“முதல் கோவம். நீ வேற வீடு பார்க்கலாம்ன்னு சொன்னது” என்றான்.
“ஏன் அதுல என்ன?”
“இந்த வீட்டுக்கு இரண்டு லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருக்கோம். நேத்து தான் பால் காய்ச்சியிருக்கோம். திங்க்ஸ் மூவ் பண்ண தனி செலவு. நம்ம பணத்துல இங்க கொஞ்சம் ஆல்டர் வேற பண்ணோம். எல்லாம் எனக்கு கொஞ்சம் டென்சன் கொடுத்துடுச்சு” என்றான்.
“இரண்டு லட்சமா?” பெண்ணுக்கு இப்போது தான் தெரியும்.
“ம்ம். ஆறு மாசம் முன்ன காலி பண்ணா ஒரு மாச வாடகை பிடிச்சுப்பேன்னு சொல்லியிருக்கார்” என்றான்.
பெண்ணுக்கு மலைப்பு தான். ‘எதையும் யோசிக்காம பேச கூடாது’ முதல் குடும்ப அனுபவம்.
‘எனக்கு பணம், இந்த கமிட்டமென்ட் எல்லாம் இல்லை, கணவனுக்கு இருக்குன்னும் போது நிதானிக்கனும்’ உணர்ந்து கொண்டாள்.
“உன்னோட சம்பளம் அளவு ஜனக் முகூர்த்தமோட வருமானம் கிடையாதுடி”
“உண்மையாவா?”
“பொய் சொல்வேனா? பெரிய கடைங்களுக்கு இப்போதான் சப்ளை பண்ண ஆரம்பிச்சிருக்கோம். சேல்ஸ் பார்த்து தான் பணம் வரும்”
“அப்புறம் ஏன் அவங்ககிட்ட கொடுக்கணும்? நாமளே வருமானம் பண்றோம் தானே?”
“என்னோட டார்கெட் வேறடி. அதுக்கு இது அவசியம்” என்றான்.
“இதுக்கா கோவம்? சம்பளம் எல்லாம் நான் கேட்க மாட்டேன்” மனைவி கண்களை சுருக்கி சொன்னாள்.
“அப்புறம் கஷ்டப்பட்டு படிச்ச படிப்பை விட்டு தர்மத்துக்கு வேலை பார்க்க போறியா? இதுக்கெதுக்கு MTECH வரை படிக்கணும். ப்ளஸ் டூவிலே நின்னிருக்க வேண்டியது தானே” என்றான் கிண்டலாக.
ஜனக்நந்தினிக்கு கோவம் வந்துவிட்டது. கணவன் பிடியில் இருந்து விலக பார்க்க, விடாமல் இடை வளைத்து நிற்க வைத்தவன், “கேட்கும் போதே கோவம் வருது தானே?” என்றான்.
“நாம படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காதவங்க பெயின் என்னன்னு உன்னை சுத்தி இருக்கிறவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோ. உனக்கு எடுத்ததும் கிடைச்சிருக்கு. மேனேஜர் ஏதோ பேசிட்டார்ன்னு ஈஸியா தூக்கி போட நினைக்கிற”
“பிஸ்னஸ்ல மட்டும் சிவப்பு கம்பளம் விரிப்பாங்கன்னு நினைக்கிறியா? எல்லாம் முள் தான். நமக்கான அடையாளம் வலியோட தான் வரும். இங்க எதுவும் ஈஸி இல்லை ஜனக்” என்றான்.
“அப்பாகிட்ட பேசிட்டேன். அவர் வேலையை விட்டு பிஸ்னஸ் பார்க்கலாம் சொன்னார்” என்றாள் மனைவி.
“அவர் அப்பா. பொண்ணு கஷ்டப்பட கூடாதுன்னு தான் யோசிப்பார்”
“ம்ம்.. எனக்கும் புரிஞ்சது. அவர் பேசிட்டார்ன்னு நான் ஏன் கிவ் அப் பண்ணனும்?” என்று கேட்டாள்.
“இதுக்கு தான் நான் நேத்து நைட் பேசல. டைம் கொடுத்தா நீயே புரிஞ்சுப்பன்னு தோணுச்சு. கூட நானும் கோவத்துல வார்த்தையை விட்டுட கூடாது இல்லை” என்றான் கன்னத்தில் முத்தமிட்டபடி.
“ஓஹ் கோவத்துல வார்த்தையை விடுவீங்களா?” மனைவி கண்களை சுருக்கி கேட்டாள்.
“நம்ம இயல்புல இருந்து விலகிற நேரம் தான் கோவம். அப்போ நிதானம் இருக்குமா என்ன?”