திருமண சடங்குகள் தொடர்ந்து நடந்து முடிய, மணமக்கள் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். ராஜேஸ்வரியிடம் வரும் போது, அவரின் கண்கள் கலங்காமல் இல்லை. பேத்திக்காகவே மனதார வாழ்த்தியவர், ஜனக்நந்தினியை தழுவி நெற்றியில் முத்தம் வைத்தார்.
அதை தொடர்ந்து மற்றவர் காலிலும் விழுந்து எழ, உறவுகள் சூழ்ந்து கொண்டனர். தொடர்ந்து மணமக்கள் உணவுக்கு சென்றனர். போட்டோ ஒரு பக்கம் எடுத்து கொண்டே இருந்தனர்.
இன்று மாலை ரிசப்ஷன் உண்டு. எனவே கரூர் சென்று திரும்ப திருப்பூர் வர வேண்டும். மண்டபத்திலே நேரம் கொஞ்சம் அதிகம் ஆகிவிட்டது.
மணமக்களுடன் முக்கிய உறவுகள் மட்டும் கரூர் கிளம்பினர். ஆர்த்தி உடன் செல்ல முடியா காரணத்தினால், வேணி சென்றார். பாரதிக்கு கொஞ்சம் உதைப்பு தான். மஞ்சுளாவை பார்த்து கொள்ள சொன்னார்.
காரில் ரகுராம் தம்பதி செல்ல, வேனில் அவர்கள் குடும்பம் பின் தொடர்ந்தது. வேணி முன்னிருக்கையில் இருக்க, புதுமண தம்பதி அமைதியாகவே வந்தனர்.
இடையில் ரகுராம் அவளின் கை பிடிக்க, “இதுக்கு இவ்வளவு நேரமா” என்று முணுமுணுத்து கொடுத்தாள் புதுப்பெண்.
“நீயே பிடிச்சிருக்க வேண்டியது தானே. சின்ன ராஜேஸ்வரி இருக்க யோசிச்சேன்” என்றான் அவளின் காதில் கிசுகிசுப்பாக.
பெண்ணுக்கு காதோர முடிகள் சிலிர்த்து கொண்டது. அவன் நெஞ்சில் கை வைத்து மெல்ல தள்ளிவிட்டாள். இதுக்கேவா? என்பது போல் புருவம் தூக்கினான் மாப்பிள்ளை.
ஜனக்நந்தினி கன்ன சிவப்புடன் ஜன்னலோரம் முகம் திருப்பி கொண்டாள். இணைந்த கைகளுடன் ரகுராம் வீட்டை அடைந்தனர். இருவரும் இறங்க, ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்தனர்.
ஜனக்நந்தினி விளக்கேற்ற பால், பழம் சடங்கு முடிந்தது. மணமக்கள் நடுஹாலில் அமர்ந்திருக்க, ஊர்க்காரர்கள் அங்கங்கு அமர்ந்தனர். அருணகிரி எல்லோருக்கும் குடிக்க, காபி, ஜுஸ் என்று ஏற்பாடு செய்தார்.
வேணியை கவனிக்கும் பொறுப்பை மஞ்சுளா எடுத்திருக்க, அவருக்கு குடிக்க, ஓய்வெடுக்க அறை என்று பார்த்து கொண்டார். மதிய உணவு இங்கேயே பார்த்து கொண்டனர்.
ஜனக்நந்தினிக்கு உடை மாற்றினால் தேவலாம் போலிருந்தது. நேரம் ஆக ஆக, புடவை, தலை அலங்காரம் எல்லாம் கொஞ்சம் பாரமாக உணர்ந்தாள். ஆனால் மாற்ற வேறு உடை இல்லை. இரவு தான் அவளின் உடமை வரும்.
“என்னமோ பண்ணு” என்ற அனுஷா தம்பி சொன்னது போல உணவு வரவும் பந்தியை போட ஆரம்பிக்க, மெல்ல மணமக்கள் நழுவினர்.
ரகுராம்க்கு முகூர்த்த நாள் குறிக்கவும் அருணகிரி செய்த முதல் வேலை மகனுக்கு மேலே தனி அறை எடுத்தது தான். கீழேயே மூன்று அறைகள் உண்டு என்றாலும், அவர்கள் சுதந்திரமாக இருக்கட்டும் என்று செய்துவிட்டார்.
“நம்ம ரூம்” என்று அவளுடன் உள்ளே நுழைந்தான்.
“புதுசா ரூம் ரெடி பண்ணீங்களா?” என்று ஜனக்நந்தினி கேட்க, மாப்பிள்ளையோ கதவை லாக் செய்தான்.
பெண்ணுக்கு அந்த தனிமை சட்டென ஒரு பதட்டத்தை கொடுக்க, ரகுராம் அவளை நெருங்கி நின்றான். பார்த்து பார்த்து நெய்த பட்டில் இவ்வளவு சோர்விலும் மினுமினுத்தாள் பெண். “நினைச்சதை விட ஜொலிக்கிறடி” என்றான் அவள் இருகைகளை பற்றியபடி.
“சேரி ரொம்ப நல்லா இருக்கு” என்றாள் அவள் மெல்லிய குரலில்.
“இப்போவாது சொல்ல தோணிச்சே” என்றவன், அவளை மென்மையாக அணைத்து கொண்டான். பெண்ணின் கைகளும் அவன் இடையோடு சேர, பொன் நிமிடங்கள் அது.
அவளை விலக்கி நெற்றி முத்தம் வைத்தவன், கழுத்து செயினை வருடி அங்கும் முத்தம் வைத்தான். “எனக்கு விட உனக்கு ரொம்ப கலக்கலா இருக்கு” என்றவன் திரும்ப அணைத்து கொண்டான். நொடிகள் நகரவே கூடாது என்ற ஆசை தான். ஆனால் தேட ஆரம்பித்துவிடுவார்களே!
ஒரு பெரிய பையை எடுத்தவன், “எல்லாம் உனக்கு தான். எடுத்துக்கோ” என்றான் கட்டிலில் வைத்து.
இவ்வளுவும் இவரே எனக்காக நெய்தாரா? ஜனக்நந்தினி உள்ளம் உருக, அவனை பின்னோடு அணைத்து கொண்டாள்.
“டெம்ப்ட் பண்ணாதடி” என்றான் அவன் அசையாமல்.
புதுப்பெண்ணுக்கான வாசம் அவன் சிந்தையை மயக்க ஆரம்பித்தது. அவளை இழுத்து முன்னால் அணைத்து கொண்டவனிடம் இப்போது இறுக்கம் கூடியது. அவளின் இடையில் அவன் கைகள் அழுந்த பதிந்தது.
ஜனக்நந்தினி அவனிடம் சரணடைந்தவள், “நான் சேரி மாத்தணும்” என்றாள் அவன் நெஞ்சிலே.
“ம்ம்” என்றவன், மனமில்லாமல் அவளை விலக்கி நிறுத்தினான்.
ஜனக்நந்தினி புடவை எடுக்க, கதவை திறந்து வெளியே சென்றான். சில நிமிடங்களில் மாற்றி கதவு திறந்துவிட்டாள். அணிந்திருந்த பிளவுஸ்க்கு ஏற்றது போல் மாம்பழ வண்ணத்தில் புடவை உடுத்தியிருந்தாள்.
“ஓகே தானே” என்று கேட்க,
“செம” என்றவன், நேரம் ஆவதை உணர்ந்து அவளுடன் கீழ் இறங்கினான். வேணி இவர்களுக்காக காத்திருந்தவர், “புடவை மாத்திட்டியா ஜானு” என்றார்.
“ஆமா அத்தை அது ஹெவியா இருந்தது. அவர் எனக்காக பெர்ஸனலா வைச்சிருந்த புடவை இது” என்றாள்.
“நல்லா இருக்குடா. சரி சாப்பிடுங்க. நாங்க எல்லாம் முடிச்சுட்டோம்” என்றார்.
மணமக்கள் சாப்பிட்டு எழ, திரும்ப ஒரு பயணம். மாலை போல் மண்டபம் வர, வழி நெடுக பேனர் வைத்திருந்தார் தணிகைவேல். ரிசப்ஷனுக்கு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.
பார்லரில் இருந்து ஆட்கள் வந்திருக்க, ஜனக்நந்தினியை அழைத்து சென்றுவிட்டனர். ரகுராம்க்கு தனியே அறையில் அடைந்து கிடக்க முடியவில்லை. ராமமூர்த்தி சமைக்கும் இடத்தில் நிற்க, தானும் உடன் சென்று நின்றான்.
“நீங்க.. நீங்க ஏன் இங்க? உள்ள போங்க” என்று தணிகைவேல் எங்கிருந்தோ வேகமாக வந்து சொன்னார்.
“சும்மா தான் நிக்கிறேன்” என்றான் இவன்.
“பார்றா மாப்பிளைக்கு கவனிப்பை” ராமமூர்த்தி முணுமுணுக்க, தணிகைவேல் இருவரையும் பார்த்து சென்றார்.
“என்னை பார்த்து பொறாமை படுறதை விட்டு, நீங்க உங்க மாப்பிள்ளையை இப்படி கவனிக்க வேண்டியது தானே” ரகுராம் அவரிடம் வம்பு வளர்த்தான்.
“எனக்கு மட்டுமில்லை உனக்கும் அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை தான். ஏன் நீ கவனிக்கிறது?” ராமமூர்த்தி கேட்டார்.
“என்ன இருந்தாலும் உங்களுக்கு தான் முதல் உரிமை. நீங்க கவனிச்சுட்டு விட்டா அடுத்து நான் கவனிப்பேன்” என்றான் ரகுராம்.
“அதுவும் சரி தான். இங்கேயே கவனிப்போமா” ராமமூர்த்தி கேட்க,
“ம்ம்.. ஆரம்பிங்க” என்றான் ரகுராம்.
“இரு.. எதாவது இருக்கா பார்க்கிறேன்” அவர் தேட,
“எது கட்டையா” என்று ப்ரவீன் கேட்டான்.
“நீ எங்க?” ராமமூர்த்தி கேட்க,
“எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன். என் அப்பாவை கவனிக்க இரண்டு பேருக்கு எவ்வளவு ஆர்வம்” என்றான்.
“ஸ்வீட் இருக்கான்னு தான் தேடினேன். நீ என்ன நினைச்ச?” என்றார் ராமமூர்த்தி.
“நம்பிட்டேன்” ப்ரவீன் சொல்ல,
“அப்போ நம்பலை” என்றவர், தயாராக இருந்த ரசகுல்லா, ஜாமூன், லட்டுவை மூன்று பெரிய பவுலில் நிறைத்து எடுத்து சென்றார். தணிகைவேல் யாரிடமோ பேசி கொண்டிருக்க, “மாமா” என்றழைத்தார் ராமமூர்த்தி.
“மாமாவா.. யாருடா இது” என்று தணிகைவேல் திரும்பி ராமமூர்த்தியை பார்த்தவர், அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.
ரகுராம், பர்வீன் பின்னாலே சென்றவர்கள், சற்று தள்ளி நின்று கொண்டனர்.
“ஸ்வீட் சாப்பிடுங்க மாமா” என்றார் ராமமூர்த்தி.
‘என்ன புதுசா பண்றார்’ நம்பாமல் பார்த்தவர், “இல்லை. இல்லை எனக்கு வேணாம்” என்றார்.
“அட மச்சான் பாசமா கொடுக்கிறார் இல்லை. ஒன்னாவது எடுத்துக்கோங்க” என்றனர் உடன் இருந்தோர்.
‘பாசமா.. அது தான் சந்தேகமே. பெரியவரை ஒரு கணக்கில் சேர்த்துடலாம். இவரை எதிலும் சேர்க்க முடியாது’
ஆட்கள் இருக்க தணிகைவேல் வேறு வழி இல்லாமல், ஸ்பூனில் ரசகுல்லாவை எடுக்க, அது வருவேனா என்றது.
“அட இருங்க மாப்பிள்ளை” என்றவர், தானே எடுத்து அவர் வாயில் வைத்துவிட, தணிகைவேல்க்கு வாய் வேலை நிறுத்தம் செய்துவிட்டது.
“அடுத்து ஜாமூன் கொடுக்கவா?” என்று கேட்க, தணிகைவேல் வேணாம் என்று பலமாக தலையாட்டினார்.
“சரி லட்டு” என்று கையில் எடுத்து வாய்க்கருகில் வர, அதன் சைஸில் தணிகைவேல் முழி பிதுங்கி போனது. ரசகுல்லா தொண்டைக்குள் இறங்கிவிட, லட்டு நின்றேவிட்டது.
“நீங்களும் எடுத்துக்கோங்க” என்று அவர்களுக்கும் கொடுக்க, “இப்போவாவது கொடுத்தியே” என்று பவுலை வாங்கி கொண்டனர்.
ரகுராம் தண்ணீர் பாட்டிலை ப்ரவீனிடம் கொடுத்தவன், “உங்க அப்பாவுக்கு கொடுங்க. மச்சான் பாசத்துல தொண்டை அடைச்சு நிக்கிறார்” என்றான்.
ப்ரவீன் எடுத்து சென்று கொடுக்க, தணிகைவேல் முழுதும் காலி செய்தார். ராமமூர்த்தி மகனிடம் வர, “மாப்பிள்ளைக்கு ஊட்டி எல்லாம் விடுறீங்க. ம்ஹ்ம்ம்ம்” என்றான்.
“என்னமோ தெரியல.. திடீர்ன்னு ஒரு பாசம்” என்றார் ராமமூர்த்தி.
“உங்க பெர்பார்மன்ஸ்ல என் அப்பா கண்ணே கலங்கிடுச்சு. திரும்ப இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டாம். அவர் பாவம்” என்று வந்தான் ப்ரவீன்.
“இப்போ தான் இன்னும் பொங்குதே. எப்படி கட்டுப்படுத்துறது” ராமமூர்த்தி சீரியசாக கேட்க,
“உணர்ச்சிவசத்தை அடக்குங்க. அவர் தாங்க மாட்டார்” என்றான் ப்ரவீன்.
“அப்படிங்கற. இதை முதல்ல பாரதிகிட்ட சொல்லணும். நான் அவருக்கு ஊட்டி விட்டது தெரிஞ்சா பூரிச்சு போயிடுவா” என, ப்ரவீனே அம்மாவை வரவழைத்துவிட்டான்.
அவரிடம் நடந்ததை சொல்ல, “என்ன பண்ணி வைச்சண்ணா அவரை?” பாரதி அவசரமாக கணவரிடம் ஓடினார்.
தணிகைவேல் மனைவியிடம் சிறு பிள்ளை கம்பளைண்ட் செய்வது போல் ராமமூர்த்தியை கை காட்டி சொல்லி கொண்டிருந்தார். “இன்னொரு முறை உன் அண்ணா என்கிட்ட வர கூடாது சொல்லிட்டேன்” என்றார்.
“சரி சரி நான் சொல்றேன். நீங்க டென்சன் ஆகாதீங்க” பாரதி கணவரை சமாதானம் செய்தபடி அண்ணனை முறைத்தார்.
“பாசம் காமிச்சது தப்பா” ராமமூர்த்தி கேட்க,
“நீங்க அவர்கிட்ட காமிச்சா தப்பு தான். திடீர் அதிர்ச்சியை அவர் நெஞ்சு தாங்கணும் இல்லை” என்றான் ரகுராம் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“அந்தளவு பூஞ்சை உடம்பா உன் அப்பா” என்று பிரவீனிடம் கேட்க,
“ஆமா அவர் வீக் பாடி. உங்க தங்கச்சிக்காகவாது அவரை விட்டுடுங்க” என்றான் ப்ரவீன்.
கட்டுப்படுத்த முடியாமல் ரகுராம் சிரித்துவிட, மற்ற இருவரும் கூட சிரித்துவிட்டனர். தணிகைவேல் மூவரையும் கோவமாக பார்த்து உள்ளே சென்றார்.
பாரதி வந்து அண்ணனிடம் சண்டையிட்டவர், “இனி அவர் பக்கமே நீங்க போக கூடாதுண்ணா” என்றார்.
“இது எங்க மாமா மச்சானுக்குள்ளது பாரதி. நீ தள்ளி நில்லு”
“ண்ணா”
“என்ன எங்க பாச பயிரை பிடுங்க பார்க்கிறியா?”
“இது பாச பயிரான்னு தான் சந்தேகமே”
“இப்படி உன் மகன் சந்தேகப்பட்டு தான் ப்ரூவ் பண்ணேன். இப்போ உனக்காக ப்ரூப் பண்றேன் இரு”
“இல்லை.. இல்லைண்ணா.. நான் தெரியாம கேட்டுட்டேன். இது ஒரிஜினல் பாசம் தான். நீ என்னோட வா. அங்க மேடை அலங்காரம் பார்க்கலாம்” என்று அண்ணனை கையோடவே அழைத்து சென்றுவிட்டார்.