சொன்னது போலவே ஐந்து மணிக்கு வந்து விட்டவள் ஆவலாகக் கணவனைத் தேட “மாமாவும் வில்லியும் ஃபேக்டரிக்குப் போயிருக்காங்க” என்று வேதவல்லி தகவல் சொன்னாள்.
அவள் கைகளில் தவழ்ந்திருந்த சிறுவனை ஆவலாகக் குமுதா வாங்கிக் கொள்ள
“எம் மேல கோபம் போயிருச்சா குமுதா?”
“அச்சோ! அதெல்லாம் இல்லக்கா.மாமாவை விட்டுட்டுப் போய்ட்டீங்களேன்னு கோபம் இருந்தது உண்மைதான். ஆனா நடந்த விஷயமெல்லாம் தெரிஞ்சுகிட்ட பின்னயும் கோபமாயிருந்தா நான் மனுசியே இல்ல.”
“அதுவும் எட்டு வருஷம் மின்ன நான் இங்கன வந்தப்ப மாமாவும் நீங்களும் புருஷன் பொஞ்சாதியா இருந்துருந்தா எனக்குக் கண்டிப்பா மாமாகிட்ட இருந்து உதவி கிடைச்சிருக்கும்.ஆனா மாமாவே கிடைச்சிருக்க மாட்டாரு. இப்பிடி ஒரு வாழ்க்கை எனக்குக் கெடக்கிததுக்கு நீங்கதான் காரணம்.உங்க மேல இருந்த கோபமெல்லாம் எப்பயோ காணாமப் போச்சு.இனி என் கூடப் பிறக்காத பொறப்பு நீங்க. உங்களுக்குப் பொறந்த வீடு இல்லைன்னு யோசிக்காதீக. நாங்க இருக்கோம். உங்களுக்கு லீவு கெடைக்கும் போதெல்லாம் இங்க வந்துடணும் நீங்க”
அவளின் கடைசி வாக்கியங்களைக் கேட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்திருந்த அமுதனின் முகம் மலர்ந்தது.
“ஆமா வேதா.ஒன் அண்ணனுங்க ஒனக்கு ஆதரவா இல்லையேன்னு வெசனப்படாதே. இந்த மாமனும், அத்தையும், கூடப் பொறக்காத தங்கச்சியும் இருக்கிற இந்த வீடு எப்பயும் ஒனக்குத் தாய்வீடுதான்.வந்து போய் இரி”
“சரி மாம்ஸ்” என்றவள் அமுதனையும் குமுதாவையும் தாங்கள் தங்கியிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றாள். அங்கு ஒரு பெரிய பெட்டி முழுவதும் உடைகள், அழகு சாதனைப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் என நிறைந்திருக்க,
“இந்த ட்ரெஸ் எல்லாம் நானே டிசைன் பண்ணினது. நீ சுடிதார், சாரி கட்டுவன்னு மாமா சொன்னனால அதுக்குத் தக்கவே செய்து இருக்கேன். இந்த சாரீஸ் அத்தைக்கு, இது எல்லாம் உங்களுக்கு மாமா” என எல்லாவற்றையும் அவள் கடை பரப்ப,
“இதெல்லாம் எதுக்குத்தா?” என்றாலும் மனமகிழ்வோடு அவள் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டனர் தம்பதிகள்.
வேதவல்லிக்கு நள்ளிரவில் விமானம் என்பதால் வீட்டில் உணவை முடித்துக் கொண்டு மரகதத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு பெரிய தாம்பாளத்தில் வைத்து அவள் திருமணத்துக்கும் குழந்தை பிறந்ததற்கும் மாமன் வீட்டுச் சீர் என அமுதனும் குமுதாவும் நீட்டிய உடைகள் மற்றும் பணத்தையும் மறுக்காமல் பெற்றுக் கொண்டு “மாம்ஸ்! சீக்கிரம் குட் ந்யூஸ் சொல்லணும்” என்று வாழ்த்தி விட்டுக் குடும்பத்தோடு கிளம்பினார்கள்.
மரகதம் உறங்குவதற்காக அவர் அறைக்குச் செல்ல, குமுதாவிடம் “நீ மாடிக்குப் போ ராசாத்தி. நான் வாரேன்” என்று விட்டு மரகதத்தைத் தொடர்ந்தான்.
கட்டிலில் அமர்ந்திருந்தவர் நிமிர்ந்து என்ன என்பது போல் பார்க்க எதுவும் பேசாமல் அவர் காலடியில் சென்று அமர்ந்து அவர் கையைப் பற்றிக் கொண்டான்.
ஏதோ புரிந்தது போல்
“வெசனப்படுதியாய்யா?” என அவர் கேட்க அமைதியாக இருந்தவனின் தலையைக் கோதியவர்,
“பெருசா ஒரு நல்லது நடக்க, சின்னச் சின்னதா ஒன்னு ரெண்டு கஷ்டம் வந்தாப் பரவாயில்லய்யா. அதப் பெருசு படுத்தக் கூடாது. வேதா அவ ஆசப்பட்ட மாரிப் படிக்கணும்னுதான செய்ஞ்சே. இன்னிக்கு ஒன்னாலதான் அவ நல்ல நெலமையில ஆசப்பட்ட மாரி இருக்கா. இதுல எனக்கு சந்தோசம்தானப்பு. ஒம் மேலயோ வேதா மேலயோ எனக்குத் துளி கூட இப்ப வருத்தமில்ல”
அவன் கேள்வியாகப் பார்க்க,
“இப்ப இல்லைன்னா முன்னம் இருந்துச்சான்னு கேக்குதியா?ஆரம்பத்துல உன் நிலையை நினைச்சுக் கஷ்டமா இருந்தாலும் இதுதான் விதின்னு ஏத்துக்கிட்டனப்பு. உங்கப்பங்கிட்ட நான் படாத கஷ்டமா? நீ தனிமரமா நிக்கியேன்னு அப்பப்ப கலக்கம் வந்தாலும் இதுல என்னவோ இருக்குன்னு எனக்கு ஒரு எண்ணமும் இருந்துச்சு. திருச்செந்தூரானுக்கு நான் வச்ச வேண்டுதல் வீண் போகலை”
அதுவரை அமைதியாக அவர் சொன்னதைக் கேட்டவன் “என்ன வேண்டுதல்மா?” என்றிருந்தான்.
“ஒனக்குன்னு ஒரு நல்ல பொண்ணமைஞ்சு நாளப்பின்ன சொந்தமாவோ தத்தெடுத்தோ பிள்ளைகள்னு ஒனக்கு ஒரு குடும்பம் அமைஞ்ச பொறவு குடும்பத்தோட வந்து தங்கரதம் இழுக்கிறம்னு வேண்டியிருக்கேனப்பு”
முகம் மலர்ந்தவனாக “சீக்கிரம் நெறவேத்திடலாம்ம்மா” என்றவன் மேலும் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க, வார்த்தைகளைக் கோர்க்கத் தயங்கும் அவன் மனம் புரிந்தவராக,
“யய்யா! இந்த அம்மையை நினைச்சு வெசனப்படாத. நானும் ஒன்னக் கன்னாலம் கட்டு கட்டுன்னு நச்சரிக்காம இருந்துருந்தா நீயும் அமைதியாத்தான இருந்துருப்பே. எம்மேலயும் தப்பிருக்குதுய்யா. அதுனால அதை இதை நெனச்சுக் கலங்காம ஒன்ன நம்பி வாழ வந்தவளை நல்லா வச்சுக்கைய்யா. இனி நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழுறதப் பார்க்குறதுலதான் என் சென்மம் ஈடேறணும். போ ராசா! புள்ள காத்துகிட்டு இருக்கும். அதை இனியும் ஏங்க விடாத. கொழந்த குட்டியெல்லாம் ஒங்களுக்குள்ள பேசி முடிவு பண்ணுங்க”
தயங்கி நின்றவனை விடாப்பிடியாகக் கிளப்பி மாடிக்கு அனுப்பினார்.
மேலே வந்தவன், அறைக்குள் செல்லாமல் தாழ்வாரத்தில் வானத்தைப் பார்த்து நின்றிருந்தவளின் பக்கவாட்டுத் தோற்றத்தில் மனம் மயங்கியவனாக விரைந்து அவளருகில் சென்று தோளோடு அவளை அணைத்தவண்ணம் அறைக்குள் நுழைந்தான்
முந்தைய நாளைப் போல் அல்லாமல் ஒரு நிதானத்தோடு இருந்தவன் சட்டையைக் கழற்றித் தாங்கியில் மாட்டி விட்டு மனையாளைக் கைவளைவில் இழுத்தான்.
“நாளைக்குப் பரீட்ச எதும் இருக்குதா ராசாத்தி?”
“இல்ல மாமா! அடுத்த வாரம்தான்”
அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டவன் தன் ஆடும் நாற்காலியில் அமர்ந்து அவளையும் மடியில் வைத்துக் கொண்டான்.
“நீ உக்காந்து எனக்குக் கால் வலிக்குதா?” எனக் கேலியாகக் கேட்டவன் கொஞ்சம் கிசுகிசுப்பாக “கட்டில்ல உக்காந்தா அப்புறம் பேச மாட்டேன்” எனக் கண்ணைச் சிமிட்ட அவளோ முகம் சிவந்து அவன் மார்பில் புதைந்தாள்.
“நேத்து ராத்திரி என்னவோ மாமா மாமான்னு சொல்ல வந்தியே. இப்பச் சொல்லு”
“அது வேதாக்கா வீட்ல வந்து சொன்ன விஷயம்தான் மாமா”
“அப்போ அது ஒனக்கு முன்னமே தெரியுமா? எப்ப? எப்பிடி?”
“அது, நம்ம கன்னாலத்துக்கு முன்னமே தெரியும். சிவா ஜெயில்ல இருந்து வந்தான்ல, அதுக்கு மறுநாக் காலைல செல்லக்கிளி சொல்லித் தெரியும்”
“அப்போ பெருசா வெவரமெல்லாம் தெரியாதுன்னாலும் எனக்கு நீங்க வேணும்கிறதைத் தவிர மனசில ஒண்ணுமே ஓடல மாமா.நீங்க எப்பவும் எம் பக்கத்துல இருக்கணும். அதைத் தவிர வேறொண்ணும் வேணாம் எனக்கு. அப்பமும், இப்பமும் அப்பிடித்தான்”
தன் மேல் பூமாலையாய் விழுந்து கிடந்தவளை இன்னுமே இறுக்கிக் கொண்டான் தன்னோடு.சம்சாரத்தின் அடிப்படையான தாம்பத்தியமே கேள்விக்குறியாக இருக்கும் போதும், கொண்ட காதலுக்காகத் தன்னை மணந்து கொண்ட, அதுவும் வேண்டாமென்று மறுத்தவனை வற்புறுத்தி மணந்து கொண்ட மனைவி வரமல்லவா?
“ம்ம்ம்.வரா கூட சாந்தி ஸ்வீட்க்கு வந்தேன்.எதிர்ல இருந்த ஹோட்டல் வாசல்ல உங்க ரெண்டு பேரையும் பார்த்த நிமிஷம் அதுவும் அவகளைக் கொஞ்சம் அணைச்சா மாதிரிப் பிடிச்சிருந்தீகளா! ஒலகமே நின்னு போச்சு எனக்கு.வேற யாரையும் பார்த்திட்டமோன்னு சந்தேகத்துல ஃபோன் பண்ணி வீடியோ கால் வாங்கன்னா மழுப்பினீக நீங்க.ஃபேக்டரில இருக்கேன்னு சொல்லிட்டு அடுத்த இருவதாவது நிமிஷம் காலேஜ் வாசல்ல நிக்குதீக.எனக்கு அப்போ அப்பிடியே செத்துப் போய்டணும் போல இருந்துச்சு” என்றவள் முடிக்கும் முன்னே “ஏய்!” என அதட்டி இருந்தானவன்.
“அப்போ அப்பிடித்தான் இருந்துச்சு மாமா. நன்றிக் கடனுக்காகக் கன்னாலம் கட்டினா இப்பிடி எல்லாம் தோனுமா? நீங்க எனக்கு இல்லையோன்னு தவியாத் தவிச்சுப் போய்ட்டேன் மாமா.அந்த மூணு நாளும் நான் பட்ட அவஸ்தை…”
அவள் முடிக்கும் முன்னே அவளை இழுத்துத் தன்னோடு சேர்த்துக் கொண்டவன் அவள் என்றோ பட்ட துன்பத்தை இப்போது துடைத்து அழிப்பவன் போல் அவள் முகம் முழுவதும் மென்மையாகத் தன் இதழ்களைப் பதித்து இறுதியாக அவள் இதழ்களிலும் பதிந்தான்.
வழக்கமாக ஆறுதல் தருவதாக இருக்கும் அவன் இதழணைப்பை அமைதியாகப் பெற்றுக் கொள்பவள் இன்று அந்த நிலையெல்லாம் கடந்து அவளும் ஆவேசமாக பதில் கொடுக்க நேரம் நீண்டு கொண்டே சென்றது.
அவன் மீதே மயங்கிச் சரிந்திருந்தவளை மெல்ல விலக்கியவன் அவள் கூந்தலை வருடிக் கொடுத்தவாறு,
“ராசாத்தி!” என்றான்.
“ம்ம்ம்”
“இதையெல்லாம் மொதல்ல இருந்து சொன்னாத்தான் ஒனக்கு வெளங்கும்”
“ம்ம்ம்”
“இப்பச் சொல்லவா? இல்ல பொறவு…”
சட்டென நிமிர்ந்து அவன் மடியில் சரியாக அமர்ந்து கொண்டவள் “இப்பமே சொல்லுங்க மாமா” என்றாள்.
அவனும் சொல்ல ஆரம்பித்தான்.
“சின்ன வயசுலயே அசாத்திய வளர்ச்சித்தா எனக்கு. நான் உங்குறது பார்த்துருக்கேல்ல.நல்லா வகை தொகையாச் சாப்பிடுவேன்.”
‘இதை எதற்கு இப்போது சொல்கிறாய்’ என்பது போல் பார்த்தவளின் நெற்றியில் செல்லமாக முட்டியவன் “அங்கயிருந்துதான் ஆரம்பிக்குது இந்தக் கதை” எனவும் சரி என்பதாகத் தலையாட்டியவள் அப்போதுதான் அவன் சொன்னது மனத்தில் உறைக்க,
சட்டென அவன் நெற்றியோடு கன்னம் வழித்துத் தன் நெற்றியில் வைத்துச் சொடக்கிட்டவள் “கண்ணு வைக்காத மாமா!” என்றாள்.
அவள் செய்கையில் வாய் விட்டுச் சிரித்தவன் தொடர்ந்து பேசினான்.
“நெசத்தச் சொன்னேன் ராசாத்தி. ஒரு வயசு வந்ததும் பொம்பளைப் புள்ளைகளுக்கு மட்டுமில்ல பசங்களுக்கும் இதப் போலக் கஷ்டமெல்லாம் இருக்குது.ஒரு பக்கம் இதுன்னா, இன்னொரு பக்கம் அம்மை எங்க நான் எங்கப்பன மாரிக் காதல் கீதல்னு விழுந்துருவேனோன்னு கண்கொத்திப் பாம்பா என்னக் கண்காணிச்சுகிட்டே திரிஞ்சா.”
“பதினெட்டு முடியவும் எங்கப்பன் சாகவும் என் ஜாதகக் கட்டைத் தூக்கிருச்சு அம்மை.தாத்தாதான் இருபத்தி ஒன்னுக்கு மின்ன பண்ணக் கூடாது சட்டப்படிக் குத்தம்னு அடக்கி வச்சாரு.தாத்தா எறந்ததுமே இருபது வயசு நடக்குதப்போவே ஜாதகத்தை எடுத்துப் பொண்ணும் பார்க்க ஆரம்பிச்சாச்சு.வேதவல்லியைப் பேசி முடிச்சு இருபத்தி ஒண்ணு பொறந்த மறுவாரமே கன்னாலம்னு முடிவும் பண்ணியாச்சு”
“அது ஒரு மாரி எனக்கு ஆசுவாசமாத்தான் இருந்துச்சு.இனியாவது இந்தப் பொம்பளைக தொல்லை இல்லாமல் இருக்குமேன்னு சந்தோஷப் பட்டுகிட்டேன். வேதவல்லியப் பார்த்ததும் பிடிச்சதுதான். இல்லைங்கல. ஆனா வேதா இல்லாம அங்க பொண்டாட்டின்னு யாரை வச்சுருந்தாலும் எனக்குப் பிடிச்சிருக்கும்.அவ்வளவுதான்.”
“கன்னாலமும் முடிஞ்சு வேதா விஷயம் தெரிஞ்சதுமே எனக்கு ஏமாற்றமா இருந்தாலும் வருத்தமெல்லாம் இல்ல. அப்போமே அது காதல் இல்லைன்னு எனக்கு வெளங்கிப் போச்சு.அப்போ காதல்னா என்னன்னு யோசிச்சுப் பார்க்கப் பார்க்க என்னமோ அலுப்புஞ் சலிப்புமாத்தான் இருந்துச்சு. இனி காதல், கன்னாலம், குடும்பம், குழந்தை இதெல்லாம் அமையும்னும் தோனலை. அமையணும்னு ஆசையும் இல்ல. ஒரு மாரி வெறுமையா இருந்துச்சு”
“கன்னாலத்தோட ப்ரச்சனை எல்லாம் முடிஞ்சதுன்னு பார்த்தா மறுபடி வேதா போனதும் பழைய கதை தொடருமேன்னு இருந்துச்சு.அதுனாலதான் வெளிய ஆள் நிக்குற நேரமாப் பார்த்து வேதாவை அப்பிடிப் பேசச் சொன்னேன்.இந்த விஷயம் வெளிய பரவினதுல ஒரு வருஷம் நிம்மதியாவும் இருந்தேன்.எல்லாம் நீ வார வரைதான்.”
அவன் தோளில் சாய்ந்தமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து அமர்ந்து இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து,
அவள் புசுபுசுவென மூச்சு விட “இப்படி நிம்மதி கெடுதது கூட ஒரு சுகமான இம்சைடி என் செல்லப் பொண்டாட்டி” என அவள் கன்னங்களைப் பிடித்துக் கிள்ளியவனிடம்
“ஆனா அத்தை பாவமில்ல மாமா. அவககிட்ட மட்டுமாவது உண்மையைச் சொல்லி இருக்கலாமில்ல?”
நெடுமூச்செரிந்தவன் “அப்ப நெறைய யோசிச்சேன் ராசாத்தி. கண்டிப்பா அம்மை மனசு இதுனால வெசனப்படும்னு தெரியும். ஆனா அந்த நேரம் நான் வேதாவுக்காகத்தான் யோசிக்க வேண்டி இருந்துச்சு. அம்மா என் கூடவே இருப்பா. அவளைப் பார்த்துக்கிட என்னால முடியும். எப்பவோ ஒரு காலம் வேதா நல்லா வந்ததும் விஷயத்தை எடுத்துச் சொன்னாப் புரிஞ்சுக்கிடுவான்னு நெனச்சேன்.அதே மாரி இப்பம் புரிஞ்சுக்கிட்டா”
“அம்மைகிட்ட விஷயத்தைச் சொல்றதுல இன்னொரு ப்ரச்சனையும் இருந்துச்சு. அப்பதைக்கு அமைதியாயிட்டாலும் பொறவு மறுக்கா எனக்குக் கன்னாலம்னு ஆரம்பிக்காம அவளால இருக்க முடியாது.ஏன் நீ வந்தப்பமே மொறப்பொண்ணுன்னு ஏதோ ஆரம்பிச்சாதான. இந்தப் ப்ரச்சன மட்டும் இல்லையின்னா ஒன்ன எனக்கு கட்டி வச்சுட்டுதான் மறுவேலை பார்த்துருப்பா.”
“அது மட்டுமில்லாம கிராமத்துல யாராவது என்னைப் பத்தித் தப்பாப் பேசுதப்போ கோபம் வந்து எம்புள்ள மேல தப்பில்ல, வேதா மேலதான் தப்புன்னு உண்மையைச் சொல்லிட்டான்னா பொறவு பட்ட பாட்டுக்கெல்லாம் பலனில்லாமப் போயிருந்திருக்கும்”
அவன் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டவளுக்கு அவன் கூற்றில் உள்ள நியாயம் புரிந்திட அமைதியானாள்.
அவள் தாடையில் இரு பெருவிரல்களை வைத்து அவள் முகம் நிமிர்த்திக் கண்ணோடு கண் பிணைத்தவன்,
“நீ எப்பக் காதலிச்சேன்னு சொன்னியே! நான் எப்பக் காதலிக்க ஆரம்பிச்சேம்னு கேட்டியா?
அவள் முகம் பூவாக மலர்ந்தது.
“சொல்லு மாமா!” என்றாள் ஆர்வமாக.
“மொத மொதல்ல அந்த மரத்தடியில வச்சுப் பார்க்குதப்போவே அந்தக் கள்ளங்கபடில்லாத கண்ணு என்னக் கவர்ந்துருச்சு”
“ஐயே! அப்போ நான் ஆம்பளை வேசத்துல இருந்தேன் மாமா.ஓ! அப்போ அவனா நீ?” அவள் ராகமிழுத்துக் கண்சிமிட்டிக் கேட்க வாய் விட்டுச் சிரித்தவன்,
“நேத்து ராத்திரிக்கப்புறமும் அவனா நீன்னு கேட்டயின்னா இப்போமே நான் அவனில்லைன்னு ருசுப்படுத்துறதுல (நிரூபிப்பது) எறங்கிருவேன்” என அவன் அவள் இடையில் குறுகுறுப்பூட்ட அவன் கைகளில் நெளிந்தவள் “வேணாம் மாமா! மாமா! மாமா!” என்றவள் அவன் கைகளை எடுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.
கையை விலக்கியவன் மீண்டும் அவளை அணைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தான்.