அத்தியாயம் 24
ஆரம்பத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று தெரிந்து கொள்வதற்காக யார் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாளோ அந்த வேதவல்லியைத் தன் மாமனுடன் சேர்த்துப் பார்த்த அதிர்ச்சியில் குமுதாவுக்கு ஒன்றுமே ஓடவில்லை.
தான் அல்வா வாங்கிக் கொடுக்க நினைத்தவன் வேதவல்லியின் துணையோடு தனக்கு அல்வா கொடுக்கக் காத்திருப்பான் என அவள் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை.
அவன் முன் அவன் கையணைவில் அவனருகில் நெருங்கி நின்றிருந்த வேதவல்லியைக் கண்டவள் அதிர்ச்சியில் தூக்கிய கையை இறக்கி விட்டு அப்படியே சிலையாக நின்றாள்.
குமுதா தன்னுடன் வராததை சிறிது தூரம் சென்ற பிறகே உணர்ந்து கொண்டிருந்த வரலக்ஷ்மி, கண்முன் கண்ட காட்சிகள் மாறி இருந்ததைக் கூட உணராதவளாக திக்பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தவளின் அருகில் வந்திருந்தாள்.
“மலர்!”
………………………………….
“ஏ மலர்! என்னாச்சு உனக்கு? சிலை மாதிரி நிக்கிறே?”
………………………………………..
அப்படியும் அசையாமல் நின்றிருந்தவளை அவள் தோளைப் பிடித்து உலுக்க ‘ஹான்’ என உணர்வுக்கு வந்தவளின் பார்வை முதலில் சென்ற இடம் எதிரிலிருந்த உணவகம்தான். இப்போது அங்கே யாருமில்லை.
“என்னாச்சு மலர்? ஏன் இப்பிடி ஷாக் அடிச்ச மாதிரி நின்னுட்டே?”
“இல்ல ஒண்ணுமில்ல வரா. வா கிளம்பலாம்.”
குமுதாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. தான் கண்ட காட்சி உண்மைதானா? அல்லது தெரியாமல் உறங்கிக் கனவு ஏதும் கண்டு விட்டாளா? உட்கார்ந்திருந்தால் கூட அப்படியே உறங்கிப் போனதாக நினைக்கலாம்.ஆனால் நின்று கொண்டே யாராவது உறங்குவார்களா? அப்படி என்றால் அவள் கண்ட காட்சி மெய்தான்.
அமுதன் எப்படி இங்கே? அதுவும் வேதவல்லியுடன்.முதலில் அவள் வேதவல்லிதானா? அவள் பார்த்திருந்த புகைப்படத்தில் திருமணக் கோலத்தில் இருந்தவள் இப்போது நவீன உடையில் இருந்தாள்.
அதுவும் சுடிதார் போலக் கூட இல்லை.ஆண்பிள்ளைகள் போல் ஒரு சட்டை, இல்லை, ஆண்பிள்ளைகள் போல் என்று சொல்ல முடியாது. கச்சிதமாக அவள் உடலில் படிந்து அவள் உடல் வனப்புக்களை உயர்த்திக் காட்டுவது போல அவளுக்கென்றே தைக்கப்பட்டது போலிருந்த காலர் வைத்த இளம்பச்சை நிறச் சட்டை, இடுப்புப் பகுதியில் நிறைய மடிப்புக்கள் வைத்து முழங்காலுக்குக் கொஞ்சம் மேல் முடிந்திருந்த சிறு பிள்ளைகள் அணிவது போன்ற கறுப்பு நிறப் பாவாடை,குதிகால் உயரக் காலணிகள், முகத்தில் கண்கள் மட்டுமே தெரிய அணிந்திருந்த மெல்லிய கறுப்பு நிற முகமூடியில் முகம் கொஞ்சம் மறைந்திருந்தாலும் அந்த முகத்தின் வடிவம் அவள் வேதவல்லிதான் எனக் குமுதாவுக்கு உணர்த்தியது.
கண்களுக்குள் காட்சி விரிய, அவளது மெல்லிய இடையை வளைத்துப் பிடித்திருந்த அமுதனும் அந்தக் காட்சியில் இடம்பிடிக்க, அப்போதே அவனை அழைத்துக் கேட்டு விட வேண்டும் எனத் தோன்ற, அலைபேசியை எடுத்தவள் உடனிருந்த தோழியின் நினைவு வந்து நிதானித்தாள்.
‘இவள் அலைபேசியில் அவனிடம் பேசினால் அவனை இவள் பார்த்தது வரலக்ஷ்மிக்குத் தெரிய வரும்.பார்த்தும் ஏன் பேசவில்லை எனக் கேட்பாள்.வேண்டாம். இப்போது அழைக்க வேண்டாம்’ என முடிவு செய்து கொண்டவள் கல்லூரிக்கு வரும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்தாள்.
கல்லூரிக்கு வந்ததும் “நீ போ வரா! நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்” என அவளைக் கழற்றி விட்டு விட்டுக் கல்லூரி வளாகத்தில் இருந்த ஒரு மரத்தடிக்கு வந்து அமுதனை அழைத்தாள்.
“சொல்லு ராசாத்தி!”
‘இந்தக் கொஞ்சலுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல’ மனத்துள் பொருமியவள் “எங்கன இருக்கீக மாமா?”
“ஏம்த்தா? ஃபேக்டரிலதான்.”
“ஓ! கொஞ்சம் வீடியோ கால்ல வாங்களேன்”
“அது…வீடியோ கால் எதுக்குத்தா? இங்கன ஒரே கவுச்சியா… கழிவாக் கெடக்கு. இப்ப எதுக்கு வீடியோ கால்? சரி நீ க்ளாசுக்குப் போகாம என்ன பண்ணுதே?”
பேச்சை மாற்றுகிறான் என்பது புரிய ‘என்னைப் பார்த்தா அம்புட்டு லூசாவாத் தெரியுது’ எனத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் அவனிடம்,
“இல்ல, இப்போ ஃப்ரீதான்.ஒங்களைப் பார்க்கணும் போல இருந்துச்சு. அதான் கூப்புட்டேன்”
“எதும் ப்ரச்சனையா ராசாத்தி? நான் கெளம்பி வரட்டுமா?”
அவன் குரலில் ஒலித்த நிஜமான அக்கறையில் நெகிழ்ந்தவள் இது நடிப்பாக இருக்கக் கூடுமா என்ற ஐயமும் ஒருங்கே தோன்ற,
“அப்போ வீடியோ கால்ல வர மாட்டீயளா?” என்றாள் சாதாரணமாகக் கேட்பது போலவே.
“அது…சூழ்நிலை சரியில்ல ராசாத்தி அதாம்.ஒன்னு செய்யலாம்.இப்பமே மூனரையாயிருச்சு.ஒனக்கு அஞ்சு மணி வரைதானே க்ளாஸ். அஞ்சு மணிக்கு நான் அங்கன இருப்பேன். சரியா?”
அவளுக்கு சோர்வாக இருந்தது.
“இல்ல வேணாம் மாமா. நானே எப்பவும் போல வந்துருதேன்.”
“இல்ல.ஒம் பேச்சும் கொரலும் ஒன்னும் சரியில்ல.நீ ஃபோனை வையி. நான் இப்பமே கெளம்பி வாரேன்”
“இல்ல மாமா.வேணாம்.”
அவன் அழைப்பைத் துண்டித்திருந்தான். அவள் பல முறை அழைத்தும் அவன் எடுக்கவில்லை.
வகுப்பிற்குப் போகாமல் அங்கேயே அமர்ந்திருந்தாள் குமுதா.மனதிலோ அலைமோதும் பல எண்ணங்கள்.
மறுநாள் சிவாவுடன் கல்யாணம் என்ற நிலையில் கூட அவள் இத்தனை கலங்கியதில்லை.அதன் பின் எத்தனையோ ப்ரச்சனைகள்.எதிலும் அவள் மனத் துணிவை இழந்தது இல்லை.படிப்பைப் புறக்கணித்தது இல்லை. எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளி விட்டுப் படிக்க அமர்ந்து விடுவாள்.
ஏன், அவர்களின் திருமணத்தன்று கூட முதல் நாள் உடலில் அத்தனை வலியையும் வேதனையையும் தாங்கிக் கொண்டு மறுநாள் வாழ்வின் முக்கியமான பெரிய முடிவை எடுத்து அவள் திருமணமே முடிந்த போதும் கூட இப்போது படிப்புத்தான் முக்கியம் என்று படித்துக் கொண்டு இருந்தவள்தானே!
கையைத் திருப்பி மணி பார்த்தவளுக்கு இப்போது அடுத்த வகுப்பு ஆரம்பித்திருக்கும் என்பது தெரிந்தாலும் அது மிக முக்கியமான வகுப்பு என்பது புரிந்தாலும் ஏனோ எழுந்து வகுப்புக்கு செல்லத் தோன்றவில்லை. என்னவோ எல்லாம் சலிப்பாக வந்தது அவளுக்கு.
அவள் கண்களில் எதிரே சென்று கொண்டிருந்த நிகிலா தென்பட்டார். மருத்துவமனையில் ஹௌஸ் சர்ஜனாகப் பணியில் இருப்பவர். அவரைப் பற்றி வரலக்ஷ்மி சொல்லியது நினைவு வந்தது.
“பாவம் மலர் அந்தக்கா… அவங்களும் ராஜதுரைன்னு ஒரு பீஜி ஸ்டூடென்டும் ரொம்ப சின்சியரா லவ் பண்ணினாங்களாம். அந்த ராஜதுரை வீட்டுல இவங்க கிறிஸ்டியன்னு ஒத்துக்கலையாம். அதுக்கு அந்த அண்ணா அவங்க பேரன்ட்ஸை சும்மா மிரட்டறதுக்காக, மாடியில நின்னுகிட்டுக் குதிச்சுருவேன்னு சொல்ல, விளையாட்டு விபரீதமாகி நிஜமாவே கால் இடறிக் கீழ விழுந்துட்டாராம். கழுத்து எலும்புல அடிபட்டு சில வாரங்கள் கோமாவுல கிடந்து நினைவு திரும்பாம இறந்துட்டாராம். அதுல இருந்து அந்த அக்கா நடைப்பிணமாத்தான் இருக்காங்களாம்.”
அவள் சொன்னதிலிருந்து அந்த நிகிலாவைப் பார்க்கும் போதெல்லாம் குமுதாவுக்கு வயிற்றுக்குள் ஏதோ பிசைவது போலிருக்கும். கிறிஸ்துவர் என்பதால் பொட்டு வைத்திருக்காமல் இருக்கும் அவர் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் இழையோடும். நோயாளிகளைக் கனிவாக விசாரிப்பதிலும் நண்பர்களைக் கண்டதும் புன்னகைப்பதிலும் அந்த சோகம் மறைந்து பின் தனியாக இருக்கையில் மீண்டும் குடிகொள்ளும்.
காதல் இத்தனை துன்பமானதா? நிகிலாவைப் பார்க்கையில் குமுதா யோசித்திருக்கிறாள். அதற்கான விடை அன்றுதான் அவளுக்குக் கிடைத்தது.
அமுதனும் வேதவல்லியும் மீண்டும் சந்தித்து இருக்கிறார்கள். இதுதான் முதல் சந்திப்பா? அல்லது இதைப் போல் பல சந்திப்புக்கள் நடந்தேறி உள்ளனவா? ஒருவேளை அவளை இரவில் ஒன்பது மணிக்கு மேல் விழித்திருக்க வைக்க எனப் பேசினானே அது வேதவல்லியுடன்தானா?
தடுமாறிய சிந்தனை கடிவாளமில்லாக் குதிரை போல், காட்டாற்று வெள்ளம் போல் இலக்கில்லாமல் தறிகெட்டு ஓடியது.
அவள் முதல் முதலில் அமுதனைச் சந்தித்த தினம் அவள் மனதில் நிழலாடியது. அன்று முதல் இன்று வரை அவன் அவளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறானே ஒழிய அவளால் அவனுக்கு நன்மை என்று ஏதும் இல்லை. அவனைத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அதனால் அவன் மகிழ்ந்ததாக இதுவரை அவன் காட்டிக் கொள்ளவில்லை. அன்று அவளை விடுதிக்குப் போகச் சொன்ன போது கூட உன்னை எனக்குப் பிடிக்கும் என்று சொன்னானே தவிர உன்னை நான் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை.
இதையெல்லாம் எண்ணிப் பார்க்கப் பார்க்கத் தான் ஏதோ ஒட்டுண்ணி போல் அவனை உறிஞ்சிக் கொண்டிருப்பதாகத் தோன்றி விட அப்படியே காற்றோடு காற்றாகக் கரைந்து விட வேண்டும் போலத் தோன்றியது அவளுக்கு.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்று பெரியவர்கள் சொல்லி இருந்தாலும் அப்படி ஒரு இழிநிலைக்குத் தள்ளப்படுபவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அந்த நிமிடம் பரிபூரணமாக உணர்ந்தாள் குமுதா.
விழிநீர் அவளை அறியாமல் பெருக்கெடுக்க நேரம் சென்று கொண்டிருப்பதை உணராமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அலைபேசி அதிர்ந்தது.
கண்களைத் துடைத்துக் கொண்டவள் எடுத்துப் பார்க்க அமுதன்தான் அழைத்திருந்தான்.
“சொல்லுங்க மாமா!”
“எங்கன இருக்கே?”
“ஏன் மாமா?”
“காலேஜுக்கு வெளிய நிக்கேன்.ஒன் க்ளாஸ்க்கு வரவா? இல்ல நீ இங்கன வாரியா?”
கையைத் திருப்பி மணியைப் பார்த்தவள் அவன் முதலில் பேசி இருபது நிமிடங்களே ஆகி இருக்கக் கண்டு விரக்திச் சிரிப்பொன்றை உதிர்த்தாள்.
கோடனூரிலிருந்து வண்டியை வாயு வேகத்தில் செலுத்திக் கொண்டு வந்திருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியாது.வேதவல்லியை அனுப்பி விட்டு வர இந்த இருபது நிமிடங்கள் ஆகி இருக்கின்றன.
இப்போது இதைக் குறிப்பிட்டுக் கேட்டாலும் ஏதாவது சமாளிப்பான் என அவள் நினைத்துக் கொண்டேயிருக்க அதற்குள் “ராசாத்தி! என்னாச்சு நான் கேட்டுகிட்டே இருக்கேன். ஹலோ! ஹலோ!” எனப் படபடத்துக் கொண்டிருந்தான் அமுதன்.
தன்னுணர்வு பெற்றவள்,
“ஹான் மாமா! இன்னும் அஞ்சு நிமிசத்துல நானே வாரேன்!” என்று விட்டு அலைபேசியை அணைத்தாள்.
ஓய்வறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டவள் வகுப்பை நோக்கிச் சென்றாள்.
மதிய நேர இரண்டாம் வகுப்பும் முடிந்திருக்க அடுத்த வகுப்பு ஆசிரியருக்காக மாணவர்கள் காத்துக் கொண்டிருக்க நேராகத் தன் இருப்பிடத்துக்குச் சென்று தன் பையை எடுத்துக் கொண்டவள் கேள்வியாகப் பார்த்த வரலக்ஷ்மியிடம், “வீட்ல ஒரு துக்கம் வரா. மாமா கூப்பிட வந்துருக்காக. நான் கெளம்புதேன்” என்று மெல்லிய குரலில் சொல்லியவள் மறக்காமல் தான் வாங்கிய இனிப்புக்களையும் அவளிடமே கொடுத்து விட்டு “இந்நேரம் இனிப்பு வாங்கிட்டுப் போனா நல்லா இருக்காது. இதையும் உன் வீட்டுக்கே கொண்டு போய்க்கிடு” என்று விட்டு வெளியேறினாள்.
வாசலில் காரில் சாய்ந்து காத்து நின்றவனைக் கண்டவள் ஒரு கணம் அப்படியே நின்று முழுதாக அவனை விழிகளில் நிரப்பினாள்.
வெண்மை நிற முழுக்கை சட்டை அணிந்து அதை முழங்கைக்கு மேல் அரைக்கையாக மடித்து விட்டிருந்தான். கீழே நீல நிற ஜீன்ஸ்.ஆம், சட்டையும் பேன்டும் அணிந்துதான் வந்திருந்தான்.
மதியம் பார்த்த போதே வேதவல்லிக்குப் பொருத்தமாக என்றுதான் அவளுக்குத் தோன்றியது. எப்போதாவது திருநெல்வேலி வரும் போது வேட்டி சட்டையை விடுத்து இப்படி அணிந்து பார்த்திருக்கிறாள்.
அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள்புறம் பார்வையைத் திருப்பியவன் அவளைக் கண்டதும் பளிச்சென சிரித்தான்.
அதைக் கண்டவளோ இன்னும் சோர்ந்து போனாள்.
‘இப்படி எல்லாம் சிரிச்சு என்னை மயக்காத மாமா! பொறவு மானமாவது ரோஷமாவது, ஒரு பக்கம் வேதா இன்னொரு பக்கம் குமுதான்னு இருந்துக்கலாம்னு சொன்னாலும் சொல்லிருவேன்’ என முணுமுணுத்துக் கொண்டவள் தலையைக் குனிந்தவாறே அவனை நெருங்கினாள்.
குனிந்திருந்த தலையை யோசனையோடு பார்த்தவன், “ராசாத்தி!” என்று அழைத்தான்.
இவள் அவனறிந்த குமுதா இல்லை. எந்த நிலையிலும் அவனைப் பார்த்ததும் முகம் கொள்ளாமல் புன்னகைத்துத் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி வரும் அவன் ராசாத்தி இவளில்லை.
அவன் கூப்பிட்டது அறிந்தும் முகத்தை நிமிர்த்தாமல் காரின் அருகே சென்றவள் பின்னால் உட்காரப் போக “ஏம்த்தா? இப்பிடி முன்ன வந்து இரி” என்றிருந்தான்.
முதலில் மறுக்க நினைத்தவள் பின் மனதுக்குள் ‘அவன் என்ன உனக்கு ட்ரைவரா? முன்ன போய் உக்காரு’ என ஒரு குரல் ஒலிக்க முன்னால் வந்து அமர்ந்தாள்.
அவனும் உள்ளே ஏறி அமர்ந்தவன் அவள் முகத்தைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் வண்டியைக் கிளப்பினான்.
அவன் பக்கமே திரும்பாமல் ஜன்னலின் வழியே பார்த்துக் கொண்டே வந்தவளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டியவன் சிறிது தூரம் கடந்து பாளையங்கோட்டை வந்ததும் அனாமத்தாக இருந்த ஒரு கிளைச்சாலைக்குள் வண்டியை விட்டுப் பின் நிறுத்தினான்.
ஏதேதோ நினைவுகளில் அமர்ந்திருந்தவள் வண்டி நின்றதும் திடுக்கிட்டு, பின் திரும்பி அவனைப் பார்த்தாள்.
கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்திருந்தவனைக் கண்டதும் சட்டென விழிகளில் நீர் நிறைய மீண்டும் அந்தப் பக்கம் திரும்ப முயற்சித்தவளைத் தாடை பற்றித் தடுத்தவன் வலுக்கட்டாயமாக அவள் முகத்தை அவன் பக்கம் திருப்பினான்.
வேறு வழியில்லாமல் அவனை அவள் ஏறிட்டுப் பார்க்க “என்னாச்சு? என்னன்னு வாய விட்டுச் சொன்னாதான எனக்கும் ப்ரச்சனை புரியும். காலேஜுல எதும் ப்ரச்சனையா?”
‘இல்லை’ என்பது போல் தலையாட்டினாள்.
“பொறவு மேலுக்கு எதும் சொகமில்லையா?”
இப்போதும் அவள் இல்லை எனத் தலையாட்ட
“பொறவு எம் மேல எதும் வருத்தமா?”
ஒரு கணம் அமைதியாக இருந்தவளுக்குள் கேட்டு விடலாமா என்று ஒரு எண்ணம்.
முதன் முதலில் தைரியமாக அவன் தொழிற்சாலைக்குச் சென்று உங்களுக்குக் கல்யாணமாகி விட்டதா எனக் கேட்ட குமுதா உள்ளிருந்து முரண்டினாள். ஆனால் அப்போது அவன் என்ன பதில் சொல்லி இருந்தாலும் அது அவளைப் பெரிதாகப் பாதித்திருக்காது. இப்போது அப்படி இல்லையே!
அவள் கேட்டு அவன், ‘ஆம் வேதா திரும்பவும் வந்து விட்டாள். என் அருமை புரிந்து மீண்டும் வந்தவளுடன் இனி நான் என் வாழ்வை இணைத்துக் கொள்ளப் போகிறேன்’ என்று சொல்லி விட்டால் அவள் அங்கேயே மனமுடைந்து மடிந்து விட மாட்டாளா?
‘உன் கழுத்திலும் அவன் தாலி கட்டி இருக்கிறான் மலர்.’
‘ஊரும் உறவும் கூடி நல்ல நாள், நேரம் பார்த்து வேதவல்லியின் கழுத்தில் அமுதன் கட்டின தாலியும் அவளாக ஊரைக் கூட்டிப் பஞ்சாயத்து வைத்துக் கட்டாயத்தின் பேரில் அமுதனிடம் வாங்கிக் கொண்ட தாலியும் ஒன்றாகுமா?’
மனதிற்குள்ளேயே ஓங்கி ஒலித்தன குரல்கள்.
‘என் மேல் ஏதும் வருத்தமா என்று கேட்கிறானே! அவள் யார் அவன் மேல் வருத்தப்பட? அவனை வேதவல்லியுடன் பார்த்ததும் வந்த கோபம் கூட இப்போது அவளுக்கு இல்லை. கோபமோ வருத்தமோ உரிமை உள்ளவரிடம்தானே வெளிப்படுத்த முடியும். நகர முடியாதபடி நிறுத்தி அவன் கையால் தாலி வாங்கிக் கொண்டால் அவள் உரிமை உள்ள பெண்டாட்டி ஆகி விடுவாளா?’ என்ற கழிவிரக்கம் தோன்றத் தலையைக் குனிந்து கொண்டவள் “அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா. வீட்டுக்குப் போகலாம்” எனவும் அதிகம் போக்குவரத்து இல்லாத தெருவாக இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் நடமாடிக் கொண்டிருக்க அங்கு வைத்து எதுவும் செய்ய இயலாதவனாக அவனும் வண்டியை எடுக்க, கண்மூடிப் பின்னால் சாய்ந்து கொண்டாள்.
ஆனால் கொஞ்ச தூரம் போகவுமே அதீத மன உளைச்சலின் காரணமாக வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வர வாயை ஒரு கையால் மூடிக் கொண்டு ‘வண்டியை நிறுத்து’ என்பது போல் சைகை செய்ய அவனும் அடித்துப் பிடித்து வண்டியை ஓரங்கட்டினான்.
வண்டி நின்றதுமே விழுந்தடித்துக் கொண்டு இறங்கியவள் ஓரமாகச் சென்று மதியம் கடைக்குப் போக வேண்டும் என்பதற்காக அவசரம் அவசரமாகச் சாப்பிட்டிருந்த உணவு மொத்ததையும் வெளியே எடுக்க அமுதனோ அவளருகில் வந்து அவள் நெற்றியைப் பிடித்துக் கொண்டான்.
சில நிமிடங்களில் எல்லாம் வெளியேறி விட அவன் ஓடிச் சென்று வண்டியிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வர வாய் கொப்பளித்து முகம் கழுவிக் கொண்டாள்.
மீண்டும் வந்து வண்டியில் அமர அவளை ஒரு பார்வை பார்த்தவாறே அவன் வண்டியை மீண்டும் கல்லூரியை நோக்கித் திருப்ப,
“எங்க போறீக மாமா?”
“ஒனக்கு டாக்டர்கிட்டப் பார்த்துடலாம்”
“ம்ம்ஹூம். அதெல்லாம் ஒண்ணும் வேணாம். ராவுல கொஞ்சம் எழுத்து வேலைனால தூங்கல.மதியம் சாப்பிட்டது சரியா மென்னு சாப்பிடாம செரிக்கல.வேற ஒண்ணும் ப்ரச்சனை இல்ல.வழியில ஒரு ஜெலுசில் மட்டும் வாங்கிக் குடுங்க போதும்”
அவனுக்கு மனதே இல்லை. அவள் மீண்டும் வற்புறுத்த வீடு செல்லும் பாதையில் வண்டியை விட்டான்.
பயணம் முழுவதும் கண்மூடியே கிடந்தவள் வீட்டிற்கு வந்தும் அறையில் முடங்கி விட்டாள்.
அமுதனின் தொழிற்சாலையில் மின்சார இணைப்பில் ஏதோ ப்ரச்சனை ஏற்பட்டதாக அவன் திருநெல்வேலியில் இருக்கும் போதுதான் தகவல் வந்திருக்க அவளை வீட்டில் விட்டவன் மரகதத்திடம் “அவளுக்கு மேலுக்குச் சொகமில்ல. பார்த்துக்கிடுங்க. சாப்பாடும் பார்த்து லேசா எதுனாக் குடுங்க” என்று விட்டுக் கிளம்பி விட்டான்.
இரவும் உணவை மறுத்து அவன் வரும் முன்பாக அவள் உறங்கி இருக்க அவனோ என்ன நடந்தது எனப் புரியாமல் குழம்பினான்.
அடுத்த மூன்று நாட்களும் கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் தன் புத்தகங்களுடன் படிப்பதாக அமர்ந்திருந்தாலும் எப்போதும் சிந்தனை வயப்பட்டே இருந்தாள் குமுதா.
அமுதனும் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாலும் அணைத்து ஆறுதல்படுத்த முயற்சித்தாலும் அவளுக்குள்ளாகவே ஒடுங்கிக் கொண்டு அவனுக்கு உடன்பட மறுத்தாள்.
தொழிற்சாலையின் மின்சாரக் கோளாறு உடனே சரிப்படுத்த முடியாததாகிப் போயிருக்க மிகப் பெரிய பவர் பேக்கிங் சிஸ்டமும் முடிவதற்குள் பதப்படுத்தப்பட்ட மீன், இறால் போன்றவைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டி இருக்க அது விஷயமாக அலைந்து கொண்டிருந்தவன் அலுவல்களுக்கு இடையிடையில் வந்து பார்த்து விட்டுப் போய்க் கொண்டிருந்தான். அப்படிப் பார்த்த போது குமுதாவின் முகம் தெளியாமலே இருக்கக் கண்டு மரகதத்திடம் என்னவென விசாரிக்கும்படிச் சொல்ல குமுதாவோ அவருக்கும் பிடி கொடுக்கவில்லை.
“மனசுக்குள்ள என்னத்தையோ வச்சுகிட்டு மறுகுதாய்யா. நீதான் கொஞ்சம் கொஞ்சமாப் பேசி என்னன்னு கண்டுக்கிடணும்” என்று பொறுப்பை அவனிடமே தள்ள அவனோ பெருமூச்செரிந்தான்.
இப்படியே மூன்று நாட்களும் ஓடி இருக்க மூன்றாம் நாள் மாலை அவளிடம் சில காகிதங்களுடன் வந்தவன் அதில் அவளது கையெழுத்தைக் கேட்க அவளோ முழுவதுமாக உடைந்து போனாள்.
“எதுக்கு மாமா கையெழுத்து?”
“ஏன்? சொன்னாத்தான் போடுவியோ? அதான. இந்த மாமன் மேல என்னிக்கு நம்பிக்க இருந்துருக்கு ஒனக்கு?”
ஏற்கனவே தொழிற்சாலைக் குளறுபடிகளில் இருந்தவன் வீட்டில் அவளும் வெளிப்படையாக எதுவும் பேசாமல் முகம் திருப்ப எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து அவளிடமே காய்ந்தான்.
“போதும் மாமா!”
‘மொத்தமாகத் தன்னைத் தலைமுழுக முடிவு செய்து விட்டானோ? பிடிக்காத திருமணத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ளத்தான் தன் கையெழுத்தைக் கேட்கிறானோ?’ என்றெல்லாம் அவள் எண்ணங்கள் தறிகெட்டோட விரக்தியின் விளிம்பில் அவன் கொண்டு வந்த காகிதங்களை எல்லாம் என்னவென்று கூடப் பார்க்காமல் அவன் நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்திட்டாள்.
“நாளை காலம்பற திருனேலில ஒரு வேலையிருக்கு. முடிச்சதும் நானே ஒன்னக் காலேஜுல விட்டுருதேன்.காலை பத்து மணி இல்ல பதினோரு மணின்னு முன்னப் பின்ன ஆகலாம்.பெர்மிசன் சொல்றதுன்னா சொல்லிக்கிடு!”
சொல்லி விட்டு அவன் சென்று விட அவள் அப்படியே சுவரில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.
சாடை எழுதி வைச்சேன் சாந்து சுவத்தில் எல்லாம்
ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு
தாங்கலையே தாங்கலையே ஆசை வைச்ச இந்த மனம்
வாழ வைச்சு பாக்கலயே சேர்ந்திருந்த ஊரு சனம்.
ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா..