அத்தியாயம் 21

காலை மூன்றாக சில நிமிடங்கள் இருக்கும் முன்னமே வழக்கம் போல் விழிப்பு வந்து விட, எழுந்தவள் அருகில் நின்ற சீர் நெடுமாறனாகப் பள்ளி கொண்டிருந்தவனைக் கண்டு ஒருகணம் மருண்டாள்.

பிறகு முந்தைய நாள் நிகழ்வுகள் மனத்தில் அலைபாய, தனக்குத் திருமணம் ஆகி விட்டதையும் கணவனின் அருகில்தான் படுத்திருக்கிறோம் என்பதையும் மனது உணர்ந்து கொள்ள, சில வினாடிகள் கணவனின் முகத்தை ஆசையாய்ப் பார்த்துக் கொண்டிருக்க அவன் அலைபேசியில் மூன்றானதன் அறிகுறியாக அலாரம் அடிக்கவும் அவனும் கண்விழித்தான்.

உறக்கத்தின் பிடியிலேயே அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் “எழுந்துட்டியா ராசாத்தி!” என்று விட்டு மீண்டும் உறக்கத்திற்குச் சென்று விட அவள் மனமோ துள்ளியது.

முதல் நாள் காலை பஞ்சாயத்தில் வைத்து ‘ராசாத்தி’ என அழைத்த பின் அவன் அவளை அப்படி அழைக்கவேயில்லை எனும் மனச் சுணக்கம் அவளுக்கு இருந்து கொண்டுதானிருந்தது. இப்போது அவன் ‘ராசாத்தி’ என அழைத்து விட உற்சாகம் ஊற்றாகப் பெருக்கெடுக்கத் துள்ளி எழுந்தவள் சென்று பல் தேய்த்து முகம் கழுவி விட்டு வந்து படிக்க அமர்ந்தாள்.

நான்கு மணிக்கு அவன் வழக்கமாக எழுந்தவன் இப்போது நன்றாக உறக்கம் கலைந்து விட்ட நிலையில் ஆவலாய்ப் பார்த்தவளை உணர்ச்சியற்ற பார்வை பார்த்து விட்டுத் தன் வேலைகளைப் பார்க்க, ‘ரொம்பத்தான்’ என்று இதழ்களைப் பிதுக்கியவள் படிப்பைத் தொடர்ந்தாள்.

நேரம் எட்டை நெருங்கிக் கொண்டிருக்க அமுதனோ அன்று தொழிற்சாலைக்குப் புறப்படவில்லை. கீழே கூடத்தில் மெத்திருக்கையில் அமர்ந்து கொண்டு அலைபேசியில் பேசுவதும் மடிக்கணினியில் வேலை செய்வதுமாயிருந்தவன் வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தான்.

கந்தவேளைக் கண்டவன் ‘என்ன’ எனப் பார்வையால் வினவ

“போலீஸ் வந்துருக்குதுங்கையா!”

“போலீசா? என்னவாம்?”

“உங்களைப் பார்க்கணும்ன்றாக”

“ஓஹோ! சரி வரச் சொல்லு”

கோடனூர் கிராமத்தின் காவல்துறை உதவி ஆய்வாளரும் இன்னும் ஒன்றிரண்டு காக்கிச் சட்டைகளும் உள்ளே நுழைந்தனர்.

“வாங்க இன்ஸ்பெக்டர்! உக்காருங்க! எலேய்! ஐயாவுக்குக் காப்பி கொண்டு வாலே”

“இல்லைங்க மாறன்! அதெல்லாம் வேணாம். நாங்க ஒரு விசாரணை விஷயமா வந்தோம். இவர் மன்னவனூர் எஸ்ஐ.”

அவரை நோக்கிக் கைகுவித்தவன் “சொல்லுங்க! நான் ஏதாச்சும் உதவி செய்யணுமா?” என்றான்.

“ஆமா! நேத்து ராத்திரி 1 மணிக்கு நீங்க எங்க இருந்தீங்க?”

“இதென்னாங்க கேள்வி? ராத்திரி ஒரு மணிக்கு எல்லாரும் அவகவக வீட்டுலதான் இருப்பாக”

“எல்லாரும் சரி. நீங்க எங்க இருந்தீங்க?”

லேசாக முகம் சிவக்க “நானும் என் ரூம்புலதாங்க இருந்தேன்.அதுவும் நேத்துக் காலையிலதான் எனக்குக் கன்னாலம் வேற நடந்துச்சு. கேள்விப்பட்டிருப்பீகளே!”

“ஆமா! அங்கதான் ப்ரச்சனையே! உங்க மனைவி குமுதாவோட மாமான்னு ஒருத்தன், பேரு சிவஞானம். அவனை யாரோ பயங்கரமாக் காயப்படுத்திப் போட்டிருக்காங்க. ஆஸ்பத்திரியில இருக்கான். அதுதான் உங்களை விசாரிக்க வந்தோம்”

“நான்தான் அடிச்சேன்னு அவன் சொன்னானா?”

“இல்ல.அது வந்து…அவனால எதும் சொல்ல முடியல.அவன் நாக்கையும் அறுத்துப் போட்டிருக்காங்க”

“ஓ!”

“ஆமா. ஆனா உன்னை யாரு இப்பிடிப் பண்ணினதுன்னு கேட்டு நாங்க சில பேர்களை சொன்னோம். அப்போ உங்க பேரைச் சொல்லும் போதே பீதியாகிக் கத்த ஆரம்பிச்சுட்டான். அதுதான் உங்களை விசாரிக்க வந்தோம்”

“அவன் ஆயிரம் பண்ணுவான் இன்ஸ்பெக்டர்.ஒடனே என்னை விசாரிக்க வந்துருவீகளா? என் பொண்டாட்டியோட மாமன் மகன் அவன். அவளைத்தான் கட்டுவேம்னு ஒத்தைக் காலுல நின்னான்.ஆனா அவளுக்குப் பிடித்தம் இருக்கணுமில்ல. அவளுக்கு எம் மேல ஆசை. கல்யாணமும் முடிஞ்சு போச்சு.இதுல அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் ஏன் அவனை அடிக்கணும்?”

இதற்குள் கண்ணாயிரம் மூலம் குமுதாவுக்குத் தகவல் போய் விட போலீசா என அதிர்ந்து போனவள் விரைந்தோடிக் கீழே வந்தாள்.

அவளைப் பார்த்த இன்ஸ்பெக்டர்,

“இங்க வாங்கம்மா!”

அவள் தயங்கித் தயங்கி வர

“ஒன்னும் பயப்படாதீங்கம்மா. இங்க வந்து உக்காருங்க!”

அவனருகில் வந்தவளைக் கைப்பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டவன் “அதெல்லாம் தைரியமான புள்ள. சும்மாக் கேளுங்க. டான் டான்னு பதில் சொல்லும்.மடியில கனமில்லாதவகளுக்கு வழியில என்ன பயம்?”

“சிவஞானம்கிறது உங்க மாமாதானே?”

“ஆமா!”

“அவருக்கும் உங்களுக்கும் என்ன ப்ரச்சனை?”

“அவனுக்கு என்னைக் கன்னாலம் கட்டிக்கிட ஆசை. ஆனா எனக்குப் பிடித்தமில்ல.அதுனால்தான் மன்னவனூரை விட்டு வந்தேன். அப்போல இருந்து எங்க அமுது மாமன் பாதுகாப்புலதான் இருக்கேன்.”

“அவரை சமீபமா எப்போ பார்த்தீங்க?”

“சமீபமாப் பார்க்கல.ஒரு வருச மின்ன நான் பன்னண்டாப்பு முடிச்சப்போ டீவில எல்லாம் எம் பேரு வந்தது பார்த்து நான் இங்கனதான் இருக்கேன்னு தெரிஞ்சுகிட்டு என்னத் தேடி வந்தான்.மறுபடி என்னக் கட்டிக்கோன்னு என்னைப் பிடிச்சு இழுத்துட்டுப் போகப் பார்த்தான்.எம் மாமன் அவனை அடிச்சு வெரட்டிட்டாரு”

“அதுக்கப்புறம் நீங்க அவரைப் பார்க்கலையா?”

“இல்ல பார்க்கல”

அவர் எழுந்து கொண்டார்.

அமுதனும் எழுந்து நிற்க உடன் எழுந்த குமுதாவின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டவன்,

“இங்கன பாருங்க இன்ஸ்பெக்டர்! அவனுக்கு ஊர்ல அவ்வளவு நல்ல பேரு கிடையாது. யாருக்கிட்டயாவது வம்பிழுத்துருப்பான்.நேரம் பார்த்துப் பழிவாங்கிட்டாகளா இருக்கும்.எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் கிடையாது. அவன் ஒரு காவாலிப்பய.அவன் சொன்னதைக் கேட்டு நீங்க வந்து எங்களை விசாரிப்பீகளோ?”

“இவளுக்கு இன்னும் கொஞ்ச நாளுல நீட்டுப் பரீட்சை இருக்கு. நீ போத்தா! போய்ப் படி! இனமே நான் பார்த்துக்கிடுதேன்” என்றவன் அவள் சென்றதும் “இங்க பாருங்க இன்ஸ்பெக்டர். உங்க விசாரணைக்கு என்ன ஒத்துழப்பு வேணும்னாலும் நான் கொடுக்கேன்.ஆனா வீட்டுக்கு வராதீக.எம் பொண்டாட்டி மனசுத் தும்பப்படும். அதுனால அவ படிப்பும் பாதிக்கப்படும். சொல்லுங்க! ஸ்டேஷனுக்கு நீங்க எப்போ கூப்பிட்டாலும் நான் வாரேன்”

அவர்கள் கிளம்பி விட்டனர்.

மெத்திருக்கையில் அமர்ந்தவன் முகத்தில் இளநகை. கண்களிலோ ஒரு வித வெறி. அவனுக்குத் தெரியும்.சிவா என்னதான் பீதியாகிக் கத்தியிருந்தாலும் தன்னைக் காட்டிக் கொடுக்கத் துணிய மாட்டான் என்று.ஏனென்றால் அவன் அமுதனிடம் வாங்கியிருந்தது அப்படி.

முதல் நாளிரவு குமரவேலழகன்தான் அமுதனை அழைத்திருந்தான்.

உழவர்கள் மற்றும் வணிகர்கள் சங்கத்தில் இருவருமே உறுப்பினர்கள். சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்கையில் இருவருக்குமிடையே நல்ல நட்பு நிலவி வந்தது.தொழிலில் ஏதாவது ப்ரச்சனை என்றாலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் வழக்கமுமிருந்தது.

ஆனால் சொந்த வேலை தொடர்பாக அமுதன் குமரனைத் தொடர்பு கொண்டது இதுதான் முதல் முறை.

முதல் நாள் தோப்பு வீட்டில் அவன் படுத்திருந்த போது அலைபேசி அடிக்க எடுத்துக் காதில் வைத்தான்.

“சொல்லுலே டிஎஸ்பி!”

“அந்த சிவா இருக்கிற எடம் தெரிஞ்சு போச்சுலே.”

அவன் உடல் இறுகியது “ம்ம்ம். சொல்லுல! எங்கன இருக்கு அந்த நாயி?”

“மஞ்சளூர்ல பதுங்கி இருக்கிறதாத் தகவல்.அவனை நேர்ல பார்த்து இருக்காக.ஆனா எங்கன தங்கி இருக்கான்னு கண்டுபிடிக்க முடியலையாம்”

“மஞ்சளூரா?” அவன் தாடையைத் தடவியபடி யோசிக்க,

“ஏம்லே மஞ்சளூரான்னு இழுக்கே?”

“அந்தூருப் பண்ணையாரு நமக்கு ரொம்ப நெருக்கம்தான். வியாபாரத்துல கொடுக்கல் வாங்கலெல்லாம் கூட இருக்கு. நமக்கு ஒன்னுன்னா உறுதியா செய்வாப்ல”

“இப்ப நீ என்ன சொல்ல வாரே?”

“இனி நீ விட்டுரு. நான் பார்த்துக்கிடுதேன்னு சொல்லுதேன்”

“சர்த்தான்.வேற ஏதானும் வேணுமானாக் கூப்புடு”

“ம்ம்ம்”

இணைப்பைத் துண்டித்தவன் குமரனுக்கு அழைத்தான்.

அழைப்பு எடுக்கப்பட,

“அண்ணாச்சி! சொகமா இருக்கியளா?”

“ஆரு? மாறன் தம்பியா? போன மீட்டிங்குல பார்த்தது.நான் நல்லா இருக்கேன்.நீங்க சொகமா இருக்கியளா?

“ஒங்களை விட வயசில ரொம்பச் சின்னவன்.ஆனாலும் சொல்ல சொல்லக் கேக்காம மருவாதி குடுத்தே பேசுதிய”

“ஒங்க ஒழப்புக்குன்னு ஒரு மருவாதி இருக்குல்ல தம்பி. இந்தச் சின்ன வயசுல கடல் கடந்து வியாபாரம் பண்ணுதிய. அதுக்கான மருவாதி நான் குடுக்கணும்லா. ம்ம்ம். சொல்லுங்க. எப்பிடி இருக்கீய?”

“நல்லா இருக்கேன் அண்ணாச்சி.வீட்ல அண்ணி பிள்ளைகள்லாம் சுகந்தானே?”

“எல்லாரும் நல்லா இருக்காக தம்பி.சொல்லுங்க! என்ன விசயம்?”

“எனக்கு ஒங்களால ஒரு ஒபகாரம் ஆகணுமே!”

“சொல்லுங்க தம்பி செய்ஞ்சுடலாம்”

அவன் ஆதியோடந்தமாக அனைத்தையும் விவரிக்கக் குமரன் வெகுண்டெழுந்தான்.

“பண்றதையும் பண்ணிட்டு இங்கன வந்து பதுங்கியிருக்கா அந்தப் பன்னாட. நீங்க ஒன்னும் கவலப்படாதீய.அவனத் தேடிக் கண்டுபிடிச்சு உங்க கைல ஒப்படைக்க வேண்டியது எம் பொறுப்பு.நம்ம கன்னியப்பங்கிட்டச் சொன்னாக் கட்டிகிட்டு வான்னா வெட்டிகிட்டே வந்துருவாம்.நான் அந்த சிவஞானத்தைக் கண்டுபிடிச்சுட்டுக் கூப்பிடுதேன்.”

சொன்னது போல் இரவு பதினோரு மணிக்கு அழைத்து சிவஞானத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் கன்னியப்பனுடன் ஜீப்பில் அனுப்பி இருப்பதாகவும் சொல்ல உடனே கிளம்பினான் அமுதன்.

உறங்கிக் கொண்டிருந்தவளைத் தொந்தரவு செய்து விடாமல் இருட்டிலேயே கவனமாக வெளிவந்தவன் அவனும் வேதவல்லியும் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தான்.

ஒரு டீஷர்ட்டையும் ஜீன்ஸ் பேன்டையும் அணிந்து கொண்டவன் முடியையும் வித்யாசமாக வாரிக் கொண்டு கண்ணாடியில் பார்க்க இரவு நேரத்தில் அவனை நேருக்கு நேர் பார்ப்பவர் கூட அமுதன் என அடையாளம் கண்டுவிட முடியாதபடி இருந்தது அவன் தோற்றம்.

அந்த அறையில் சுவரோடு சுவராக இருந்த கதவைத் திறந்தவன் படிகளின் வழியாகக் கீழிறங்கி வீட்டின் பின்பக்கச் சுற்றுச் சுவரை அடைந்தான்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இருந்த போது அந்த வீட்டைக் கட்டிய முத்துக்குமாரசுவாமி ஏதாவது அவசர நேரத்துக்கு வீட்டிலிருந்து தப்பிக்கவென இப்படி ஒரு வழியை ஏற்பாடு செய்து வைத்திருந்தார். மற்ற பல விஷயங்களை நாகரீகத்துக்குத் தகுந்தாற்போல் அமுதன் மாற்றியிருந்த போதிலும் இந்த ஒன்றை மட்டும் அப்படியே விட்டிருந்தான்.

பின்வழியாக வெளியேறியவன் பின்னாலிருந்த கந்தவேளின் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு தன் தொழிற்சாலைக்குச் சென்றான்.

இப்படிப்பட்ட வேலைகளுக்கு அவன் தொடர்பு கொள்ளும் செந்தில்வேலுக்கும் அவன் முதலிலேயே தகவல் தெரிவித்திருக்க அவனும் வந்து சேர்ந்திருந்தான்.

வாசலிலேயே ஜீப்பில் காத்திருந்த கன்னியப்பனுடன் சேர்ந்து மயக்க நிலையில் கிடந்த சிவஞானத்தைத் தூக்கிக் கொண்டு செந்தில்வேல் உள்ளே வர, இறால் மற்றும் மீன்களை சுத்தம் செய்யும் இடத்திற்கு வழிகாட்டியவாறு அமுதன் முன்னே நடந்தான்.

அங்கே சென்றதும் நாற்காலியில் சிவஞானத்தை உட்கார வைத்துக் கயிறு கொண்டு செந்தில்வேல் கட்ட, கன்னியப்பனிடம் வந்த அமுதன் “அண்ணாச்சி! ரொம்ப நன்றி! இவனைக் கண்டுபிடிச்சுக் கூட்டி வந்ததுக்கு. இனி நான் பார்த்துக்கிடுதேன்”

“விடுங்க தம்பி! நமக்குள்ள நன்றில்லாம் என்னத்துக்கு? சரி நான் கெளம்புதேன்.குமரன் ஐயாகிட்ட நீங்க பேசிக்கிடுங்க”

“ஆட்டும் அண்ணாச்சி!”

அவன் கிளம்பியதும் செந்தில்வேலிடம் கண்ணைக் காட்ட அவன் தண்ணீரை எடுத்துப் பளிச் பளிச் என சிவாவின் முகத்தில் அடிக்க ஆரம்பித்தான்.முதலில் கொஞ்சமாக அசைந்தவன் பின் சில நிமிடங்களிலேயே தெளிந்து விட்டான். அமுதனைக் கண்டதும் அங்கமெல்லாம் உதற ஆரம்பித்து விட்டது அவனுக்கு.

அவன் எதிரில் நாற்காலியை செந்தில்வேல் கொண்டு வந்து போட அதில் அமர்ந்தவன்,

“போன வாட்டிப் பார்த்தப்பவே நான் என்ன சொன்னேன் ஒன்னட்ட? மறுக்கா ஒன்ன இந்தூர்ல பார்த்தா உசுரை மட்டும் விட்டுட்டு மத்ததை எடுத்துருவேன்னு சொன்னேனா?”

கைகள் நாற்காலியின் பின்னால் கட்டப்பட்டு வாயும் திறக்க முடியாதவாறு துணியால் கட்டப்பட்டிருக்க சிவா பரிதாபமாகத் தலையை ஆட்டினான்.

“நான் அம்புட்டுச் சொல்லியும் இந்தூருக்கு வந்துருக்கே. பொறவு எம் பேச்சுக்கு என்னா மருவாதி? வந்தது மட்டுமில்லாம எம் பொண்டாட்டி மேல கை வச்சுருக்கே.”

பேசப் பேச அமுதனின் முகமும் கண்களும் சிவந்து செந்தணலென ஜொலித்தது.

உண்மையில் அந்தப் புகைப்படங்களை சிவஞானம் எடுக்கவில்லை.குமுதா கொடுத்த இடியில் அலமந்து போனவன் அமுதனின் வண்டிச் சத்தமும் பீதியைக் கொடுக்க, மாட்டினால் தொலைந்தோம் என்பது புரிபட ஓடிச் சென்று அங்கிருந்த வாழைத் தோப்பின் ஊடாகப் பதுங்கிக் கொண்டிருந்தான்.

அமுதனின் வீட்டின் முன் காத்திருந்து சிவஞானத்துக்கு அலைபேசியில் அழைத்துச் சொல்லி விட்டு அமுதனின் பின்னோடு வந்திருந்த மதிவாணனின் நண்பன் அமுதன் வண்டியை நிறுத்தவும் தானும் தன் வண்டியை ஓரமாகச் சாய்த்து விட்டு சற்று தள்ளி இருந்த மரத்தின் பின் பதுங்கிக் கொண்டான்.ஏதோ நடக்கப் போகிறது என அவன் உள்ளுணர்வு உந்த அலைபேசியையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டான்.

அமுதன் நின்றது, குமுதா அவன் மேல் வந்து விழுந்தது போன்றவைகளை அலைபேசியில் படம் பிடித்தவன் அவர்கள் கிளம்பியதும் அவனும் இடைவெளி விட்டுப் பின்தொடர்ந்தான்.

பிறகு குடிசை வாசலில் நிகழ்ந்ததையும் படமெடுத்தவன் சிறிது நேரம் கழித்து சந்தித்த சிவஞானத்திடம், தான் எடுத்த புகைப்படங்களைக் கொடுக்க, குமுதாவின் புகைப்படங்களை வெளியிட்டு அவளை இழிவுபடுத்த நினைத்தவன் இப்போது அமுதன், குமுதா இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டு அவர்கள் பேரைக் கெடுக்கத் திட்டமிட்டான்.ஆனால் இருவருக்கும் திருமணமே முடியும் என அவன் எதிர்பார்க்கவில்லை.

மஞ்சளூர் செல்லம்பெருமாளின் மகன் லட்சுமணன் துபாயில் இருந்து வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அவனிடம் துபாய் செல்வது குறித்துப் பேசச் சென்றவன் பிறர் கண்களில் பட்டு இப்போது குமரனின் ஆணைப்படிக் கன்னியப்பனால் பிடிக்கப்பட்டு அமுதனிடம் வசமாக மாட்டிக் கொண்டிருந்தான்.

இருக்கையிலே துள்ளியபடி சிவா தலையைத் தலையை ஆட்டி ஏதோ சொல்ல முற்பட அமுதனின் கண்ணசைவில் செந்தில்வேல் சிவாவின் அருகே சென்று அவன் வாயைச் சுற்றிக் கட்டியிருந்த துணியைக் கொஞ்சம் தளர்த்தி விட,

“ஐயோ மாறா! அந்தப் போட்டோவையெல்லாம் நான் எடுக்கல.” என ஆரம்பித்து நடந்ததைச் சொல்ல,

“நீ எடுக்கலைன்னாலும் வாட்ஸாப்புல அனுப்பச் சொன்னது நீதானலே!”

தலையைக் குனிந்து கொண்டவன் “தெரியாமப் பண்ணிட்டேன் மாறா! இனி இந்தப் பக்கமே தல வச்சுப் படுக்க மாட்டேன்.என்ன மன்னிச்சு விட்டுடு” என்று உயிர்ப்பயத்தில் ஒப்பாரி வைத்தான்.

“இந்தப் பக்கமே வராதேன்னு சொன்னேன்.அத மதிக்காம வந்ததுக்கே ஒன்ன மிதிக்கணும் நான்.வந்தது மட்டுமில்லாம நீ செய்ஞ்சது…” என்றவன் தலையை இருபுறமும் ஆட்டியபடி,

“அதுக்கு மன்னிப்பெல்லாம் தர முடியாது.ஏண்டா! பதினெட்டு வயசு நெரம்பாத பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு சட்டம் போட்டா நீ தேடித் தேடிப் பொண்ணுக வாழ்க்கையைக் கெடுக்க முயற்சி பண்ணுவே. தட்டிக் கேட்டா உடுப்பைக் கிழிச்சு அவமானப்படுத்துவே. எல்லாம் முடிஞ்சு நீ மன்னிப்புக் கேட்டுப் பம்முனா நாங்க மன்னிச்சு விட்டுடணும். இல்ல?”

“இன்னிக்குக் குமுதா படிச்சு ஃபர்ஸ்ட் மார்க்கு வாங்கினனால எத்தன பிள்ளைக நாங்களும் குமுதாக்கா மாரிப் படிச்சு மார்க்கு வாங்கி டிவியில பேட்டி குடுப்போம்னு படிக்குதுங்க தெரியுமால ஒனக்கு? புள்ளையப் பெத்தவுக எத்தன பேரு குமுதாவப் போல அவக புள்ளைகளும் படிச்சு முன்னேறணும்னு பள்ளிக்கோடத்துல சேர்த்து விடுதாக தெரியுமால ஒனக்கு? ஒரு பொம்பளைப் புள்ள படிச்சு முன்னுக்கு வருததுன்றது ஒரு தலமொறையே முன்னுக்கு வார மாரி.அதைப் போய்க் கெடுக்கப் பார்த்தியேலே.”

“ஒன்னையெல்லாம் மன்னிச்சு விட எவனாவது கேணக் கோட்டிக்காரன் இருப்பான். அவங்கிட்டப் போய்க் கேளு உன் மன்னிப்பை. உனக்குக் குடுத்த கெடு முடிஞ்சு போச்சு.இனி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்” என்றவன் செந்தில்வேலிடம் “ஆட்டும்!” எனவும் அவன் சிவஞானத்தின் அருகே சென்று அவன் வாயை மீண்டும் இறுக்கிக் கட்டி விட்டான்.

செந்தில்வேல் அமுதனின் பள்ளிக்காலத்தில் அவனுக்கு மூத்தவன். காவல்துறையில் சேர வேண்டும் என வெறியோடு இருந்தவன் விருப்பப்படியே காவல்துறையில் ஆய்வாளராகச் சேர்ந்து நேர்மையாக இருந்ததன் பலனாக அவனும் அவன் மனைவி, குழந்தையும் செல்லும் வண்டி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அதில் அவன் மட்டும் பிழைத்துப் பின் காவல்துறை வேலையை வெறுத்து ராஜினாமா செய்து விட்டு ஒரு உடற்பயிற்சிக் கூடம் வைத்து நடத்தி வந்தான்.

அமுதன் அவனிடம் உடற்பயிற்சி தொடர்பாக நிறைய கற்றுக் கொண்டது உண்டு.அரிதிலும் அரிதாக ஏற்படுகின்ற இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அமுதனுக்கு அவன் உதவுவதுமுண்டு.

ஊமைக்குத்தாகக் குத்தி உடலின் ஒன்பது துவாரங்களிலும் உதிரத்தை வரவழைக்கும் வித்தையை அவனிடமிருந்து அமுதனும் கற்றுக் கொண்டிருந்தான்.

செந்தில்வேலின் லட்டி அமுதனின் கையில் விளையாண்டதில் நைந்து உருக்குலைந்துதான் போனான் சிவஞானம். தண்ணீரில் நனைந்த சாக்குப்பையை உடலில் சுற்றி எண்ணெய் தேய்த்துப் பதமாக வைத்திருந்த லட்டிக் கம்பால் விளாசு விளாசென விளாசித் தள்ளி விட்டான்.

கைவிரல்களின் எலும்புகளையும் அதே போலக் கால் விரல்களின் எலும்புகளையும் முழுமையாக நொறுக்கி விட்டான். எதைச் செய்யவும் நடக்கவும் அவன் இனி மற்றவர் உதவியைத்தான் நாட வேண்டி இருக்கும். இறுதியாகக் கத்தியுடன் வந்த செந்தில்வேலைக் கண்டு, ஓய்ந்து போய்த் கிடந்த சிவாவின் கண்களில் தோன்றிய மரண பீதியைக் கண்ட பின்னரும் கூட அமுதனின் மனம் அடங்கவில்லை.

செந்தில்வேல் அமுதனின் தோளில் கையை வைத்தான்.

“ஷ்ஷ்ஷ். மாறா! போதும்! இதுக்கு மேல அடிச்சாச் செத்துடுவான். இனி என் வேலையைப் பாக்க விடு”

காவலனாக இருந்தவனுக்கு எந்த எல்லை வரை அடிக்க வேண்டுமென்பது தெரிந்திருந்ததால் அமுதனைத் தடுத்து நிறுத்தியிருந்தான். இல்லை என்றால் சிவாவின் உயிர் உடற்கூட்டை விட்டுப் பறந்திருக்கும்.

மொத்தமாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அவனை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி மன்னவனூர் எல்லையில் தூக்கிப் போட்டு விடச் சொல்லி விட்டு வந்த சுவடறியாமல் வீடு திரும்பி உறங்கியிருந்தான் அமுதன்.

காலையில் காவல்துறையினரின் வருகையை எதிர்பார்த்தே வீட்டில் காத்திருந்தான். சிவாவால் வாயைத் திறந்து சொல்லவோ, எழுதிக் காட்டவோ முடியாது என்பது தெரியுமாதலால் தைரியமாகவே அவர்களை எதிர்கொண்டான்.

கீழே இறங்கி வரும் முன்னமே குமுதாவிடம் ஆலமரத்தின் அருகில் வைத்து சிவாவைப் பார்த்ததை இனி மறந்து விடுமாறும் யார் கேட்டாலும் தான் சொல்லிக் கொடுப்பது போலவே சொல்ல வேண்டும் என்றும் சொல்லித் தயார் செய்து விட்டே வந்திருந்தான். அவளும் அச்சுப் பிசகாமல் அவன் சொன்னதை நிறைவேற்ற சிவஞானத்தின் சகாப்தம் அத்துடன் முடிந்திருந்தது.

அந்தப் புகைப்படங்களை எடுத்த மதிவாணனின் நண்பன், சிவஞானத்தின் நிலையைப் பார்த்தே பாதி இறந்து விட்டான். வட நாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்றவனை வளைத்துப் பிடித்த செந்தில்வேல் இனி சொந்த ஊருக்குத் திரும்பினால் பரலோகம்தான் என எச்சரித்துக் கொஞ்சம் தட்டி அனுப்ப அத்தோடு அவனும் தொலைந்து போனான்.

மதிவாணனை அவன் தந்தை, அமுதனின் அறிவுரையின் பேரில் கேரளாவில் ஒரு வேலையை ஏற்பாடு செய்து அனுப்பி விட்டு விட்டார். சிவஞானத்தின் நிலையைப் பார்த்து அவருக்குமே பயம் பிடித்துக் கொண்டது. தன் மகனையும் மகளையும் எதுவும் செய்யாமல் விட்ட அமுதனின் சொல்லே வேதவாக்காகிப் போனது அவருக்கு.

இனி குமுதா படிப்பைத் தவிர வேறு எதைக் குறித்தும் யோசிக்கக் கூடாதெனக் கட்டளையிட்டவன் அந்தப் பத்து நாட்களும் முழுக்க அவளருகில் இருக்க முடியாவிட்டாலும் வீட்டிலிருக்கும் போதெல்லாம் அவர்கள் அறையில்தான் இருந்தான்.

தொழிற்சாலைக்குச் சென்றாலும் மணிக்கொருமுறை அவளை அழைத்து விடுவான். தொடர்ந்து அமர்ந்து படிக்கையில் உடல் சூடாகி விடும் என்று காலை எலுமிச்சைப் பழச்சாறு, மதியம் நீர்த்த மோர், மாலை மாதுளை பழச்சாறு என அவளை அடிக்கடிப் பருகச் சொல்லி இருந்தான்.

அவளும் விடாது படித்தாள்.சில நேரம் அவனே ‘போதும்! கொஞ்ச நேரம் கீழ போய்க் காலாற நடந்துட்டு வா’ என்று சொல்லும் அளவுக்கு உட்கார்ந்த இடத்தில் பசை போட்டு விட்டது போல் அமர்ந்திருப்பாள்.

தேர்வு நடைபெறும் நாளும் வந்தது.

கட்டுத் தரி அத்துகிட்டு பறக்கும் காளைடா
சுத்து பட்டி எட்டு ஊரும் கலக்கும் பாருடா
எதிராளா வந்துராதே
நரிவேல செஞ்சிராதே

நெஞ்சுக்குள்ள அச்சம் இல்ல ஒரசி பாருடா

பஞ்சுக்குள்ள அக்கினிய மறைச்சதாருடா
எத கட்டி ஆள போற
சரி கட்டி வாழ போற

ஹேய் வெல்லும் புலி ஒரு நாளும் புல்ல திங்க போகாது

ஒத்தைக்கு ஒத்தையா தாக்கும் புது ரத்தது வாசத்த கேக்கும்
வெறி உச்சத்தில் ஆடி தான் தீா்க்கும்
இது சொல்லாம கொள்ளாம வெளங்கும்
அத சொன்னாலே தன்னாலே கலங்கும்
எவன் பின்னாலும் நிக்காத வீரத்த
தானே எந்நாளும் நம்பூமி வணங்கும்

கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்