அத்தியாயம் 16

தன்னை ஒருவன் இழிவுபடுத்த முயல்கிறான். தன் ஆடைகளைக் கிழித்து அவமானப்படுத்த முயல்கிறான். தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என அவள் தொய்ந்த நேரம் அவள் மூளைக்குள் ‘எவனாவது தப்பா கிப்பா நடக்க முயற்சி பண்ணினா காலுல கெடக்கிறதைக் கழட்டி வெளுத்து விட்டுரு.என்ன வந்தாலும் மாமன் நான் பாத்துக்கிடுதேன். சும்மா மட்டும் விட்ராதே அவனை’ என்ற அமுதனின் குரல் பெருமுழக்கமாய் ஒலிக்க ‘ஏதாவது பண்ணு மலரு’ எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் அப்போதுதான் தன் மேல், அமராமல் அமர்ந்து இருந்தவனைக் கவனித்தாள்.

படம் பிடிக்க வசதியாகத் தள்ளியும் அதே நேரம் அவள் எழுந்து விடாமல் இருக்க அணைவாகவும் அமர்ந்திருந்தவன் சரியாக அவள் முழங்காலுக்கு நேராக அமர்ந்திருந்தான்.

தானிருந்த நிலையை உணர்ந்து கொண்டவளுக்கு எங்கிருந்து வந்ததோ அத்தனை பலம்! உடலின் மொத்த சக்தியையும் முழங்காலுக்குக் கொண்டு வந்து அவன் உயிர்த்தடத்திலேயே இறக்கினாள் ஒரு இடியை.

வலி! வலி! பொறுக்க மாட்டாத வலியில் தொடைகளின் இடையில் கையால் பிடித்துக் கொண்டவன் அப்பால் போய் விழுந்தான்.

அந்த இடை நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டவள் கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து, பிரித்து என மீண்டும் மீண்டும் செய்து கட்டுக்கும் கைக்குமான இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டிருக்க அந்த நேரம் அவனது அலைபேசி ஒலித்தது.

வலியால் துடித்துக் கொண்டிருந்தவனால் உடனே அலைபேசியை எடுக்க முடியவில்லை. மூன்று முறை அடித்து ஓய்ந்த அலைபேசியை நான்காம் முறை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.

“அண்ணாச்சி! அந்த மாறன் வீட்டுல இருந்து சாப்பாட்டை முடிச்சுட்டுக் கெளம்பிட்டான். நான் ஃபோனு போட்டுகிட்டே இருக்கேன். நீங்க எடுக்கவே இல்ல. அவன் கெளம்பி அஞ்சு நிமிசமாச்சு.அங்கன வேலை முடிஞ்சுட்டா? இல்லைன்னா இன்னொரு நாப் பார்த்துக்கிடலாம். அவன் கண்ணுல மட்டும் பட்டுறாதிய”

மாறனின் வீட்டினருகில் அவன் நடமாட்டங்களை அறிந்து சொல்ல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதிவாணனின் நண்பன் பேசப் பேச சிவாவுக்கு இவளிடம் எத்து வாங்கியது போதாதென அவனிடம் மொத்து வேறு வாங்க வேண்டுமா எனத் தோன்ற “சரிடே! நான் கெளம்புதேன். வெவரம் பொறவு சொல்லுதேன்” எனத் திக்கித் திணறிச் சொல்லி விட்டு அலைபேசியை வைத்தான்.

மெல்லக் கைகளிரண்டையும் பயன்படுத்தி எழுந்து நின்ற நேரம் புல்லட்டின் உறுமல் மெலிதாகக் கேட்க அங்கிருந்து ஆலமரத்தின் பின்பக்கமாகக் கெந்திக் கெந்தி நடந்து பின் ஓட்டம் பிடித்திருந்தான்.

குமுதாவின் காதுகளையும் சேர்த்துத் துணியால் கட்டியிருக்க அவளுக்கு புல்லட்டின் சத்தம் கேட்கவில்லை. ஆனால் இதற்குள் தன் கைகளை விடுவித்துக் கொண்டிருந்தவள் வாயைக் கட்டியிருந்த துணியையும் அவிழ்க்க அதே நேரம் மரத்தின் அடியில் ஏதோ நோட்டு ஒன்று தாறுமாறாக விழுந்து கிடந்ததைக் கண்டு வண்டியை நிறுத்தியிருந்தான் அமுதன்.

வழக்கமாகக் காலியாகக் கிடக்கும் மரத்தடியில் இன்று நீளமான நோட்டு ஒன்று அதுவும் கன்னா பின்னாவெனப் பக்கங்கள் திரும்பிக் கிடக்கிறதே என யோசித்தவன் மெல்ல நடந்து அதனருகில் வர, காலடிச் சத்தம் கேட்ட குமுதா யாரோ வருகிறார்கள் என நினைத்து மரத்தின் பின் பதுங்க, மரத்தின் பின் இலைகள் சரசரக்கும் ஒலியைக் கேட்டவன் “ஆரது அங்கன?” என்று குரல் எழுப்பி இருந்தான்.

அவன் குரலைக் கேட்ட மாத்திரத்தில் ஆனந்தம், ஆதங்கம், ஆசுவாசம் என அத்தனையும் ஒருங்கே தோன்ற “அமுது மாமா!” எனக் கேவலாய் வெளிப்பட்டது குமுதாவின் குரல்.

அவனுக்கோ அப்படி ஒரு அதிர்ச்சி. ‘குமுதாவா? இங்கேயா? அப்படியே வந்திருந்தாலும் எதற்கு மரத்தின் பின்னே மறைந்திருக்கிறாள்? மாமா என்றழைத்த குரல் கூடக் கொஞ்சம் தழுதழுத்தாற்போல் இருந்ததே!’

“ராசாத்தி!” என அவன் அழைக்க அவன் குரல் கேட்ட மாத்திரத்தில் பசுவைத் தேடும் கன்றாக ஓடி வந்து அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள் பெண்ணவள்.

ஒன்றும் புரியாதவனாய் அவள் மேலே வந்து விழுந்த வேகத்தில் கொஞ்சம் பின்னே சாய்ந்து பின்னர் தன்னை நிலைப்படுத்தி நின்றவன் அவள் முதுகை ஆறுதலாய் வருடியபடி,

“ஹேய்! என்னாச்சும்மா? கீழ எங்கனயும் விழுந்துட்டியா? நோகுதா? அதுக்குத்தான் அழுகையா?” அவள் முதுகு அழுகையில் குலுங்குவது கண்டு அவன் கேட்க, அவளோ அழுது கொண்டே இருந்தாள்.

அவள் வந்து ஒட்டிக் கொண்ட வேகத்தில் அவளை முழுதாய்க் கூட அவதானித்துப் பார்க்காதவன் அரைநொடிக்கும் குறைவான கணத்தில் கண்களில் விழுந்த காட்சியில் ஆடை கிழிந்தாற்போல் இருந்ததே என எண்ணித் தன்னிலிருந்து அவளைப் பிரிக்க முற்பட, அவளோ இன்னுமின்னும் அவனிடம் ஒண்டினாள்.

“ராசாத்தி! அடி எதுவும் பட்டிருக்கான்னு பார்க்க விடு”

விலக மறுத்தவளைப் பிடிவாதமாக விலக்கிப் பார்த்தவன் திகைத்துப் போனான். அவன் கண்கள் கோவைப்பழமாய்ச் சிவந்தன.

மீண்டும் அவன் மார்பிலேயே தன்னை மறைத்துக் கொள்ளப் பார்த்தவளை விலக்கியவன் சட்டெனத் தன் வேட்டியை உருவி அவள் மேல் போர்த்தினான். கீழே பேன்ட் கூடக் கிழிந்திருக்க கண்டவன் தன் சட்டையையும் வேகமாகக் கழற்றினான்.

அவன் வேட்டியைப் பற்றுக்கோல் போல் பற்றி நின்றவளின் தோளில் அவன் சட்டையையும் போட்டவன் அவளைப் பற்றித் திருப்பி “போய் உடுத்திட்டு வா” என்று விட்டுத் திரும்பி நின்றான்.

உள்ளாடைகளுடன் நின்றிருந்தவன் அதைப் பற்றிக் கிஞ்சித்தும் யோசித்தானில்லை.அவன் மனம் முழுவதும் ஒரு பெண்ணிற்கு, அதுவும் தன் மனதிற்கு இனியவளுக்கு இதைச் செய்தவன் யார்? இப்படி ஒரு காரியத்தைச் செய்து விட்டு அவன் உயிருடன் நடமாடும் ஒவ்வொரு நிமிடமும் தான் ஆணாக இருந்து என்ன பயன் என்ற சிந்தனையே ஓடிக் கொண்டிருந்தது.

தன் அலைபேசியை எடுத்தவன் கண்ணாயிரத்துக்கு அழைத்தான்.

“சொல்லுங்கையா!”

“நீ ஒடனே வண்டி எடுத்துகிட்டு அம்மை வீட்டுக்குப் போயி மலரோட உடுப்பு ஒன்னை வாங்கிக்கிட்டு ஃபேக்டரிக்கு வா! முன்வாசலுக்கு வராத! பின்னால குடிசைக்கு வா!”

“ஆட்டுங்கையா!”

தன் அன்னைக்கு அழைத்தவன் “குமுதா வழியில கீழ விழுந்துட்டா. உடுப்புல கொஞ்சம் ரத்தமாயிட்டு. பயப்படுறாப்புல ஒன்னுமில்ல. கண்ணாயிரம் வருவான். மாத்துத் துணி குடுத்து விடு” என்றவன் அவர் “யய்யா…” என ஏதோ பேச வந்ததைப் பொருட்படுத்தாதவனாய் அலைபேசியை வைத்திருந்தான்.

இதற்குள் அவன் சட்டையை அணிந்து அவன் வேட்டியையும் இடுப்பில் சுற்றிக் கொண்டு வந்து நின்றவளை அணைத்துக் கொண்டவன் அவள் மீண்டும் விசும்பவும் “ஒன்னுமில்ல, ஒன்னுமில்ல ராசாத்தி! எல்லாம் சரி செய்துடலாம் வா” என்றவன் அவளைப் பின்னால் அமர வைத்துக் கொண்டு வண்டியைத் தொழிற்சாலை நோக்கிச் செலுத்தினான்.

ஆனால் முக்கிய வாசல் வழியாக உள்ளே செல்லாமல் சுற்றிக் கொண்டு சென்றவன் தொழிற்சாலையின் பின்னாலிருந்த ஒரு குடிசையின் முன் வண்டியைக் கொண்டு சென்று நிறுத்தினான்.

அந்தக் குடிசை இந்தத் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு முன் முத்துக் குமாரசுவாமி கட்டியது. என்னதான் தொழிற்சாலையின் உள்ளே குளிர்பதன வசதி இருந்தாலும் முத்துக்குமாரசுவாமி உயிருடன் இருந்தவரை மதியம் சிறிது நேரம் அந்தக் குடிசையில் தங்கித்தான் ஓய்வெடுப்பார். அவர் இறந்த பின்னரும் அதை இடிக்க மனம் வராமல் அப்படியே விட்டு வைத்திருந்தான் அமுதன்.

இப்போது மதிய உணவு வேளையாதலால் தொழிற்சாலையைச் சுற்றிலும் அதிக நடமாட்டமில்லாது போக யாரும் பார்க்காமல் அவளை அந்தக் குடிசைக்குள் அனுப்பி விட்டவன்,

“இங்கனயே இரி!” என்று விட்டுக் குடிசையின் வாசலிலேயே நின்று மேலும் சில அலைபேசி அழைப்புக்களைச் செய்து கொண்டிருந்தான்.

தொழிற்சாலையின் மேல் திறந்த வெளியில் கூடாரம் போட்டு அனைவருக்கும் உணவுண்ணும் இடம் அமைந்திருக்க அதில் ஒரு சில தலைகள் அங்கே அவன் அப்படி உள்ளாடைகளுடன் நின்று கொண்டிருந்ததை அதிசயமாய்ப் பார்த்துத் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டதை அவன் அறியவில்லை.

சில நிமிடங்களில் தனது டிவிஎஸ் ஃபிஃப்டியில் குடிசை வாசலுக்கு வந்து சேர்ந்த கண்ணாயிரம் தான் கண்ட காட்சியில் அதிர்ந்து போய் நின்று விட்டான்.

சட்டென இறங்கியவன் உடையைக் கொண்டு அமுதனிடம் நீட்ட வாங்கிக் கொண்டவனோ எதுவும் பேசாமல் குடிசைக்குள் சென்றிருந்தான்.

சில வினாடிகளில் மீண்டும் வெளியே வந்தவன் அடுத்த ஐந்தாவது  நிமிடத்தில் கண்ணாயிரம் கொண்டு வந்து கொடுத்த உடையில் வெளியே வந்த குமுதா அவனிடம் நீட்டிய அவன் உடையைப் பெற்றுக் கொண்டு அங்கேயே தன் வேட்டியைச் சுற்றிக் கொண்டு சட்டையையும் போட்டுக் கொண்டான்.

வெண்ணிற வேட்டியில் ஆங்காங்கே குருதியின் தீற்றல்கள் இருக்கக் கண்டவன் கண்கள் சிவந்தன.

தலையைக் கோதி விட்டுக் கொண்டவன் குமுதாவிடம் “வா!” என்று விட்டுக் கண்ணாயிரத்திடம் “ரெண்டு பேத்துக்கும் டீ அனுப்பு” என்று விட்டுத் தொழிற்சாலைக்குள் நுழைந்தான்.

ஆங்காங்கே தென்பட்ட தலைகளின் மதிய வணக்கங்களைக் கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் நுழைந்தவன் தன் அறையில் இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தான்.

கீழே மண் தரையில் உருண்டு புரண்டிருந்ததில் முகத்திலும் இன்னும் கை கால்களிலும் கூட சிராய்ப்புக்கள் இருந்தன அவளுக்கு.

கிருமி நாசினி திரவத்தைக் (சாவ்லான்) கொண்டு துடைத்து சுத்தப்படுத்தி விட்டுப் பின் புண்ணாற்றும் களிம்பைப் பூசி விட்டான்.

அவன் துடைக்கும் போதெல்லாம் எரிச்சலில் அவள் “ஸ்ஸ்ஸ்” “ஸ்ஸ்ஸ்” என சப்தமெழுப்ப ஒவ்வொரு சத்தத்துக்கும் அவன் மனம் துடித்தது.

“வேற எங்கனயும் அடி பட்டிருக்குதா? டாக்டர்கிட்டப் போகலாமா?”

“இல்ல, வேணாம் மாமா!”

கண்ணாயிரம் தேனீருடன் உள்ளே வர அவனிடத்தில் போய் அமர்ந்தவன்,

“டீ எடுத்துக்கோ ராசாத்தி!”

டீ குடித்து முடித்ததும் கண்ணாயிரத்தை அனுப்பியவன் அவளைப் பார்த்து,

“சொல்லு! எதுக்கு அந்த ஆலமரத்துக்கிட்டப் போன?”

அங்கு நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்து விட மீண்டும் அவள் கண்கள் கலங்க “ஷ்ஷ்ஷ்” என்றவன் “என்ன நடந்துச்சுன்னு சொன்னியானா நான் அடுத்தது என்ன செய்யலாம்னு பார்ப்பேன்”

ஏற்கனவே தொழிற்சாலைப் பக்கம் தனியாக வராதே என அவன் சொன்னதை மீறியிருந்ததில் அவனுக்குக் கோபம் என்பது புரிந்து விட இன்னும் கலெக்டரிடம் சென்று புகார் கொடுத்த விஷயத்தை அவனிடம் சொல்லாமல் மறந்து விட்டதற்கு வேறு என்ன சொல்லப் போகிறானோ என அச்சமாக இருக்க அவள் அமைதியாக இருந்தாள்.

“அந்த சிவஞானமா?”

“ம்ம்ம்.”

“அவனைப் பார்க்க ஆலமரத்தடிக்குப் போனியா?”

“ம்ம்ம்ஹூம்.அவனைப் பார்க்க இல்ல.அந்த ஜெயக்கொடிதான்…” என ஆரம்பித்தவள் நடந்தவைகளைச் சொல்ல ஆரம்பிக்க, நடந்த நிகழ்ச்சிகளின் தாக்கத்தில் விம்மலும் விசும்பலுமாகச் தொடர்ந்தவளின் கண்களில் நீரைக் கண்டதுமே எழுந்து அருகில் வந்திருந்தவன் அவள் சொல்லி முடிக்கையில் நின்றவாக்கிலேயே நாற்காலியில் அமர்ந்திருந்தவளை அணைத்துத் தன் மேல் சாய்த்துக் கொண்டிருந்தான்.

ஏற்கனவே அழுது கரைபவளை மேலும் அதட்ட மனம் வராமல் அவள் முகத்தை நிமிர்த்திக் கண்களைத் துடைத்து விட்டவன்,

“நீ கம்ப்ளைன்ட் கொடுத்தது தப்பில்ல ராசாத்தி. இம்புட்டுத் தைரியமாச் செய்ஞ்சுருக்கியேன்னு பெருமையாத்தானிருக்கு எனக்கு. ஆனா ஒரு வார்த்தை எங்கிட்டச் சொல்லி இருந்தியானா நாமும் கொஞ்சம் கெவனமா இருந்துருக்கலாமில்ல.நானும் என்ன ஏதுன்னு விசாரிச்சு அந்த சிவா மேல ஒரு கண்ணு வைக்கச் சொல்லி இருப்பேனில்ல.எப்பவுமே நாம நல்லது செய்ய நினைக்கிறப்போ அது பிடிக்காம நமக்கு எதிரியா மாறுறவனும் கண்டிப்பா இருப்பான். அவன் மேல கெவனம் வக்கலைன்னா அசந்த நேரம் அடிச்சுத் தூக்கிருவானுக”

“கன்னாலம் நின்னுட்டதா வளர்மதி கூப்பிட்டுச் சொன்னதும் ஒடனே ஒங்களுக்குத்தான் ஃபோன் போட்டேன்.லைன் கெடைக்கல.பொறவு மறந்துட்டேன்”

“சரி! இப்ப நீ கண்ணாயிரத்தோட வீட்டுக்குக் கெளம்பு. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு”

“ம்ம்ம்.” என்றவள் எழுந்து செல்ல, அலைபேசியை எடுத்து யாரையோ அழைக்க முற்பட்டவன் நேரம் கடந்தும் கதவு திறக்கும் ஒலி கேட்கவில்லையே எனத் திரும்பி அவளைப் பார்க்க அவளோ கண்களில் தளும்பிய கண்ணீருடன் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சட்டென அலைபேசியை மேஜையில் வைத்தவன் அருகில் சென்று அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.

“என்னடா?”

அவனிடம் ஒண்டிக் கொண்டவள் “ஒரு மாரி பயமா இருக்கு மாமா. மறுபடி அந்த சிவா வந்தான்னா…”

அவள் உடல் நன்றாகவே நடுங்கியது.

“ஏய் சீ! நான் உன்ன வீர மங்கை வேலு நாச்சியார் கணக்கா யோசிச்சு வச்சுருக்கேன்.போயும் போயும் அந்த வெறும் பயலுக்குப் பயப்படுதியே. நீ விட்ட ஒதைக்கு எங்கன சுருண்டு கெடக்கோ கழுத”

அவன் பேச்சில் அவள் இதழ்களில் புன்னகை மலர்ந்தாலும் விழிகளில் கலவரம் விடவில்லை.

“சரி! நானே வீட்டுக்குக் கொண்டு வந்து விடுதேன்.போதுமா” எனவும் அவள் முகம் மலர, அவள் நெற்றியில் புரண்ட கூந்தலை ஒதுக்கி விட்டவன் அங்கே இதமாக இதழ்களைப் பதித்தான்.

மேஜையில் கிடந்த அலைபேசியை எடுத்துக் கொண்டவன் வண்டியில் அவளையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர, மரகதத்தைக் கண்டதும் அடங்கியிருந்த அழுகை மீண்டும் அணையுடைக்க அவரைக் கட்டிக் கொண்டு ஒரு மூச்சு அழுதாள் குமுதா.

மரகதத்திடம் சுருக்கமாக விவரம் சொன்னவன்,

“வீட்டு வாசல்ல நம்மாளுக ரெண்டு பேரை நிப்பாட்டி வச்சுருக்கேன். வழக்கமான நம்பிக்கையான ஆட்கள் தவிர யாரும் உள்ள வந்துக்கிட முடியாது.நீங்களும் எங்கனயும் வெளிய தெருவ போகண்டாம் (போக வேண்டாம்)” என்றவன் குமுதாவிடம் “இன்னும் பரீட்சைக்கு இருக்கிற கொஞ்ச நாளுல திருநேலிக்கும் போகண்டாம். வீட்ல இருந்து உள்ளதைப் படிச்சாக் காணும் (போதும்).”

“இன்னிக்குப் படிப்பு கிடிப்பு எதும் வேணாம். பாராசெட்டமால், அதான் காய்ச்ச மாத்திர ஒன்னக் குடுத்துப் பேசாமப் படுக்கப் போடு இவளை. நல்லா ஒறங்கி எழும்பட்டும். எதுன்னாலும் எனக்குக் கூப்பிடுங்க”

அவன் கிளம்பப் போகிறான் என்றதும் சரேலெனத் தலை தூக்கிப் பார்த்தவளைக் கண்டவன் என்ன நினைத்தானோ,

“யம்மோவ்! கொஞ்சம் குடிக்கத் தண்ணி கொண்டா!” என்று விட்டு அவர் தலை மறையவும் சட்டென குமுதாவின் அருகில் சென்றவன் அவளை ஒருகணம் இறுக்கி அணைத்துப் பின் விடுத்தான்.

அவள் காதருகில் “எல்லாத்தையும் மாமன் பார்த்துக்கிடுதேன். ஒறங்கி எழுந்து படிப்பைப் பாரு” என்று விட்டு விலகி முன்னிருந்த இடத்தில் வந்து நின்றான்.

தண்ணீரை அருந்தி விட்டு அவளிடம் கண்களால் விடைபெற்றுச் சென்றவன் முதலில் சென்றது ஜெயக்கொடியின் வீடு.

சட்டமாக நடுவீட்டில் நாற்காலியில் அமர்ந்தவன்,

“பிள்ளைகளைப் பெத்துட்டா மட்டுங் காணாது. அதுக என்ன செய்யுதுக, நல்ல சகவாசமா கெட்ட சகவாசமா எல்லாத்துலயும் ஒரு கண்ணு இருக்கணும்”

ஜெயக்கொடியின் தந்தை நல்லசிவம் அமுதன் மீது நன்மதிப்புக் கொண்டவர். எனவே அவன் திடுமென வீட்டில் நுழைந்து கடிவது போல் பேசுவதைக் கண்டவர் ஒன்றும் புரியாமல்,

“ஐயா என்ன சொல்லுதிய? ஒன்னும் வெளங்கலையே!”

“ஒங்க பொண்ணு வீட்ல இருந்தாக் கூப்பிடுங்க!”

“இந்தா புள்ள செயக்கொடி! ஐயா கூப்பிடுதாக. இங்கன வா!”

வெளிப்படையாகவே மேனி நடுங்க வந்து நின்றவள் குனிந்த தலையை நிமிரவேயில்லை.

“செய்ஞ்ச காரியத்துக்கு ஒடம்பு கூசுதோ?”

அவள் பதில் சொல்லாமல் நிற்க,

“சொந்த ஒழைப்பைக் கொடுத்து முன்னுக்கு வர நெனைக்கணும்.அடுத்த புள்ளையைக் ………… குடுத்து முன்னுக்கு வர நெனக்கக் கூடாது”

அவன் பேசிய வார்த்தைக்கு நல்லசிவம் “ஐயா!” என இடைப்புக

“பெரியவங்க மன்னிச்சுக்கிடுங்க.ஆனா ஒங்க பொண்ணு செய்ஞ்ச காரியத்துக்கு இந்நேரம் மலருக்கு மட்டும் ஏதாச்சும் ஆயிருந்துச்சுன்னா… நெடுமூச்செரிந்தவன் “நான் என்ன செய்ஞ்சுருப்பேன்னு எனக்கே தெரியல”

இத்தனை நேரம் ஜெயக்கொடியின் தாய் அமைதியாக நின்றிருந்தவர் அவளருகில் சென்று ஓங்கி ஒரு அறை விட்டார்.

“ஐயா இம்புட்டு வெசனப்படுத அளவுக்கு என்னடி செய்ஞ்சு தொலைச்ச?”

ஏற்கனவே அமுதனின் மிரட்டலில் மருண்டு நின்றிருந்தவள் அன்னை திடீரென அடிக்க விசும்பி அழுதவாறு நடந்ததை விளக்கி முடித்தாள்.

“அடிப் பாதகத்தி! நீயும் ஒரு பொண்ணுதான? ஒரு பொண்ணுக்கு இப்பிடி நடக்க நீ காரணமாயிட்டியே!”

“இப்பயும் ஒன்னுக் கெட்டுப் போகல.நீ செய்ஞ்ச தப்ப நேராக்கிடலாம். ஒங்கண்ணனும் அந்த சிவாவும் எங்க? ஒனக்கு எதும் வெவரம் தெரியுமா?” அமுதன் கேட்டான்.

“இல்ல முழுசாத் தெரியாது.ஆனா வேல முடிஞ்சதும் துபாய்க்குப் போறதாப் பேசிகிட்டாவ”

“அவன் ஜாமீன்லல்லா வந்துருக்கான்.அப்பிடி எங்கனயும் போய்க்கிட முடியாதே”

“ம்ம்ம்.அதும் அண்ணன் சொல்லுச்சு.அதெல்லாம் போலியாப் பாஸ்போர்ட் தயார் பண்ணிறலாம்னு பேசிக்கிட்டாவ”

“சரி! இனமே நான் பார்த்துக்கிடுதேன்.” என்றவன் நல்லசிவத்திடம் “ஒங்க மகன் ஃபோனெதுவும் பண்ணினா அந்த சிவாவுக்கு ஒபகாரம் பண்ணி வீணாப் போகாம நல்லபடியா வீடு திரும்பச் சொல்லுங்க. அது மட்டுமில்லாம இதுல எந்த வெவகாரமும் வெளிய போகக் கூடாது. அந்த சிவா அங்க வந்ததோ மலரைப் பார்த்ததோ எந்த விஷயமும் வெளிய வரக் கூடாது.வெளங்குச்சா? மீறி வந்துச்சு, பொறவு நடக்குத எதுக்கும் நான் பொறுப்பில்லை கேட்டியளா. இப்பயே ஒங்களுக்காக மட்டும்தான் ஒங்க புள்ளைகளை விட்டு வச்சுருக்கேன். பார்த்துக்கிடுங்க. நான் கெளம்புதேன்” என்றவன் கைகூப்பி விடை பெற்றான்.

வெளியே வந்தவனை அலைபேசி அழைத்தது. காவல்துறையில் பணியில் இருந்த அவனது பள்ளித் தோழனிடம் அவன் ஏற்கனவே விஷயத்தைச் சொல்லியிருக்க அவன்தான் அழைத்திருந்தான்.

“மாறா!”

“சொல்லுலே டிஎஸ்பி”

“நீ சொன்ன அடையாளமும் சொல்லி நீ அனுப்புன ஃபோட்டோவும் குடுத்து எல்லா செக் போஸ்டும் அலெர்ட் பண்ணி இருக்கேன்.ஜாமீன் கைதினால அவன் நெதமும் ஸ்டேஷனுக்குக் கையெழுத்துப் போடப் போவணும். அப்படி ஒரு நா போகலைன்னாலும் திரும்ப அரெஸ்ட் வாரன்ட் இஸ்யூ பண்ணிருவாக.நீ கவலப்படாத.ரெண்டு நாளுல ரௌண்டப் பண்ணிறலாம்”

“கவனம்லே! அவன் போலி பாஸ்போட்டுல வெளிநாடு தப்பிச்சுப் போற மாரியும் திட்டம் போட்டிருக்கான்”

“ஓ! ஓகே! ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் எல்லா இடத்துலயும் அலெர்ட் பண்ணிடுதேன்”

அவனது ஆட்களும் சிவாவின் தேடுதல் வேட்டையில் இருக்க இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் வீடு வந்து சேர்ந்தவன் இரவு பத்து மணிக்கு அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர்களில் ஒருவரான முத்துவேலின் மகன் கதிரவன் அவனுக்கு அழைத்துச் சொன்ன செய்தியில் அவசர அவசரமாக வாட்ஸாப் செயலியைத் திறந்து அதில் வந்திருந்த படங்களைக் கண்டு அதிர்ந்து போய் நின்றான்.

சுமை போட்டு பேசும் ஊரென்றால் மனம் தவித்திடும் மானே
இமை மீறும் கண்ணின் நீரென்றால் தினம் துடிப்பவன் நானே
நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா
மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே
இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே