Advertisement

அத்தியாயம் – 24 1

“சரியா சொன்ன கண்ணு..நான் கூட அவளை மறந்திட்டேன்..பிள்ளைத்தாச்சியா வேற இருக்கா..எல்லோருக்கும் பொருந்தற மாதிரி நீயே எடுத்துக் கொடு..இந்தா அவங்களோட ஃபோட்டோ.” என்று அக்காவின் மகள்கள் மூவரும் இணைந்து இருந்த புகைப்படம் ஒன்றை அவரது கைப்பேசியில் திரையில் காட்டினார் விஜயா.

புகைப்படத்தில் வசந்தி விறைப்பாக நின்றிருக்க, ஜெயந்தியும் சிந்துவும் புன்னகைத்துக் கொண்டிருந்தனர். புகைப்படத்தைப் பெரிதுபடுத்தி மூவருக்கும் பொருந்தி வரும் புடவைகளைத் தேர்வு செய்து கொடுத்தாள் சினேகா. அதோடு அவர்களின் பர்சேஸ் முடிந்தது என்று நினைத்த ஷண்முகம் அவனது கடன் அட்டையை வெளியே எடுக்க,”ஆன்ட்டி, உங்களுக்கு நவராத்திரிக்கு வாங்கலையே.” என்றாள் சினேகா.

உடனே,”சும்மா இரு டீ.அவங்க  வீட்டுப் பழக்கம் என்னென்னு தெரியாமப் பேசிட்டு இருக்க.” என்று அவளைக் கடிந்து கொண்டார் ஜோதி.

அந்தக் கூற்றிலிருந்து அவரைப் போல் தானும் ஒரு விதவை என்று முடிவு செய்து விட்டாரென்று புரிய, அவரது திருமண வாழ்க்கை, விவாகரத்து பற்றி பேசி பல வருடங்களாகி விட்டதால், கொஞ்சம் போல் தொண்டையை அடைக்க, அதைச் சரி செய்து கொண்டு,”இவனுக்கு ஒரு வயசு இருக்கும் போது எனக்கும் இவங்க அப்பாக்கும் விவகாரத்து ஆகிடுச்சு..கொஞ்ச வருஷம் என் அப்பா, அம்மாவோட இருந்தேன்..அப்புறம் என் அண்ணன், அக்கா குடும்பத்தோட இருக்க ஆரம்பிச்சேன்..இப்போவரை அப்படித் தான் இருக்கேன்..கொஞ்ச நாள் முன்னாடி தான் இவனுக்கு தில்லிக்கு மாற்றல் கிடைச்சது..எனக்கும் இவனோட இருக்கணும்னு தோணிச்சு..இவன்கிட்டே சொன்னேன்..அழைச்சிட்டு வந்திட்டான்.” என்றார்.

அதற்கு அம்மா, மகள் இருவரும் எதிர்வினை ஆற்றும் முன்,”எனக்கு இந்தி சுத்தமாத் தெரியாது..ஆங்கிலமும் தடுமாற்றம் தான்..சென்னைலே எல்லோரும் சேர்ந்து தான் வெளியே போவோம்..தெரிஞ்ச ஊர்லேயே தனியா எங்கேயும் போனது கிடையாது..இங்கே, இந்த பாஷை தெரியாத ஊர்லே எப்படியோ இத்தனை மாசம் சமாளிச்சுட்டேன்..குளிர்க்காலத்தை நினைச்சா தான் கொஞ்சம் பயமா தான் இருக்கு.” என்று ஜோதியைப் போலவே அவரைப் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் விஜயா.

விவாகரத்து ஆனவர் என்று கேட்டவுடனேயே ஜோதிக்கு விஜயாவுடன் ஒரு பிணைப்பு ஏற்பட,“அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க.இப்போ தான் உங்களுக்கு என்னைத் தெரியுமே…நான் இருக்கேன்.” என்று விஜயாவிற்கு தைரியம் கொடுத்தவர், அப்படியே சினேகாவிடம்,”ஆன்ட்டியோட நம்பரை எனக்கு அனுப்பி விடு.” என்று சொன்னவர், விஜயாவிடம்,”எப்போ வேணும்னாலும்  எனக்கு ஃபோன் செய்யுங்க..என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க..செய்திடலாம்.” என்று ஹோம் மினிஸ்ட்ரியில் வேலை பார்க்கும் உயர் அதிகாரியின் அம்மாவிற்கு உதவிக்கரம் நீட்டிய அவளுடைய அம்மாவை பார்த்து தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது சினேகாவிற்கு.

அவரால் மேலும் சங்கடம் ஏற்படும் முன்,”ஆன்ட்டி, உங்களுக்கும் உங்க அக்காக்கும் புடவை பார்க்கறீங்களா?” என்று கேட்டாள் சினேகா.

“அக்காக்கு வாங்கிட்டு அண்ணிக்கு வாங்கலைன்னா தப்பாகிடும்..எங்க மூணு பேருக்கும் பொருந்தற மாதிரி புடவை காட்டு கண்ணு.” என்று அவருடைய அண்ணி, அக்காவின் புகைப்படங்களை சினேகாவிற்குக் காட்டினார் விஜயா.

அடுத்து வந்த நிமிடங்கள் புடவை தேர்வில் கரைய, இரண்டு அம்மாக்களும் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு நெருக்கம் கூடிப் போக,”எங்க கடையைப் பற்றி உங்களுக்கு யார் சொன்னாங்க விஜயாம்மா?” என்று கேட்டார் ஜோதி.

“இவன் கூட ஷர்மான்னு ஒருத்தர் வேலை பார்க்கறார்..அவர் தான் தமிழ்க் கடை ஒண்ணு இருக்குன்னு சொன்னார்.” என்றார் விஜயா.

“ஷர்மாவா?” என்று ஜோதி உரக்க யோசனை செய்ய, ஹோம் மினிஸ்ட்ரி என்று வாயை விட்டால், அவனைப் பற்றி விசாரித்திருக்கிறோம் என்று தப்பாக எடுத்து கொண்டால் உறவைப் புணரமைக்க அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடுமென்று பயந்து,”அம்மா, ஷர்மா அங்கிளை நியாபகமில்லையா? ‘போன மாசம் கடைக்கு வந்திருந்தாரே’ என்று சொல்லாமல், “நாம சி டைப்லே இருந்த போது நம்ம பிளாக்கு எதிர் பிளாக்லே மூணாவது மாடிலே, இடதுப் பக்க ஃபிளாட்லே இருந்தாரே..அப்புறம் வேற இடத்துக்கு மாறிப் போயிட்டாரே..அவர்தான்.” என்று பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வை சொல்ல, ஜோதிக்குச் சத்தியமாக அடையாளம் தெரியவில்லை.

அப்போது அவர் வேலை பார்த்த துறை வேறு இப்போது வேலை பார்க்கும் துறை வேறு. அதை இழுத்தால் சமீபத்தில் நடந்த சந்திப்பு வெளியெ வரும் என்பதால் அதை இழுக்காமல் எப்படி அம்மாவிற்கு அடையாளம் சொல்வது என்று சினேகா யோசித்துக் கொண்டிருக்கும் போது,”சொட்ட தலை ஷர்மாவா?” என்று கேட்டார் ஜோதி.

உடனே,”அம்மா” என்று சினேகா கத்த, அதற்கு,”இங்கே யாரை பெயர் கேட்டாலும் ஷர்மான்னு தான் சொல்லுவாங்க..ஷர்மா பெயர்லே நிறைய பேரைத் தெரியும்.. சொட்ட தலை, மருதாணி தலை, ஸ்கூட்டி ஷர்மா, பைக் ஷர்மா, ஒல்லி, குண்டுன்னு டக்குனு அடையாளம் தெரிஞ்சுக்க இந்த மாதிரி பெயர் வைப்பேன்..அந்த பழக்கத்திலே சொல்லிட்டேன்..அதுக்கு இந்தக் கத்து கத்தறா.” என்று விளக்கம் கொடுத்தார் ஜோதி.

மேலும் எதையாவது பேசி சேதம் அதிகமாகும் முன்,”ஆன்ட்டி, புடவைக்கு ஃபால், பிக்கோ செய்து கொடுக்க ஒரு வாரம் எடுக்கும்..ஷிக்கா வந்த பிறகு தான் அந்த வேலை நடக்கும்.” என்றாள்.

“அதெல்லாம் வேணாம் ம்மா.. நான் ஊர்லே போய் பார்த்துக்கறேன்.” என்றார் விஜயா.

“நவராத்திரிக்குன்னு வாங்கிட்டு எப்படி அதை அப்படியே வைச்சிருக்க முடியும்?” என்று கேட்டாள் சினேகா.

அதற்கு விஜயா பதிலளிக்கும் முன்,”இவளாலே புதுசை புதுசா வைச்சுக்கவே முடியாது..தீபாவளிக்கு முதல் நாள் தான் துணி எடுப்பேன்..முதலே எடுத்தா அன்னைக்கே தீபாவளி கொண்டாடிடுவா.” என்றார் ஜோதி.

“அம்மா, அதெல்லாம் சின்ன வயசுலே அப்படி இருந்தேன்..இப்போ அப்படியில்லை.” என்று சினேகா மறுக்க,

“இப்போ பெரிய மாற்றம் என்னென்னா ஷிக்கா தைச்சுக் கொடுக்கறவரை காத்திருக்க அவ்வளவுதான்.” என்றார் ஜோதி.

“அவகிட்டே தைக்க கொடுக்கறதில்லை..ஏற்கனவே தைச்சு இருந்ததை கொஞ்சம் ஸ்டைல் மாத்த சொன்னேன்.” என்றாள் சினேகா.

“நல்லா தைக்கறான்னு ஊரே வந்து அவகிட்டே தைச்சுக்குது..இவளுக்கு மட்டும் செட்டாகலைன்னு சொல்றா.” என்றார் ஜோதி.

“இப்போ எதுக்கு அந்தப் பேச்சு?” என்று ஜோதியின் வாயை அடைத்தவள், விஜயாவின் புறம் திரும்பி,”ஆன்ட்டி, ஃபால், பிக்கோ ஷிக்கா செய்து கொடுப்பா..பிளவுஸ் அம்மா தைச்சுக் கொடுப்பாங்க.” என்றாள்.

“நீங்களும் தைப்பீங்களா ஜோதி?” என்று விஜயா விசாரிக்க,

“முன்னே நிறைய தைச்சுக் கொடுத்திட்டு இருந்தேன்..இப்போ எங்களுக்கு மட்டும் தான்..உங்களோட அளவு பிளவுஸைக் கொடுங்க..தைச்சுக் கொடுக்கறேன்..அளவு எடுத்து தைச்சா எனக்குச் சரியா வராது.” என்றார் ஜோதி.

“அளவு பிளவுஸ்ஸா? இன்னொரு நாள் தான் கொண்டிட்டு வரணும்..என்னை அழைச்சிட்டு வர இவனுக்கு நேரம் கிடைக்கணும்.” என்றார் விஜயா.

“ஒண்ணும் பிரச்சனை இல்லை..உங்க வீட்டு முகவரியை எனக்கு அனுப்பி விடுங்க..ஷிக்காகிட்டே ஆள் இருக்கு..அவன் வீட்டுக்கே வந்து வாங்கிப்பான்..டெலிவரியும் கொடுப்பான்..ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் இந்த ஏற்பாடு.” என்றார் ஜோதி.

அது சரியான ஏற்பாடாக ஷண்முகத்திற்குத் தோன்ற,”அம்மா, இனி நீங்க என்னை நம்பிட்டு இருக்க வேணாம்..நம்ம வீட்டு அட்ரெஸ்ஸை ஆன்ட்டி நம்பருக்கு அனுப்பி விட்டிடுங்க.” என்றான்.

புடவைகளுக்கு பில் போட்டபடி பிக்கோ, ஃபால் செய்து கொடுப்பதற்காக அவைகளைத் தனியே சினேகா எடுத்து வைத்த போது,”இந்தச் சுடிதாரை உன்கிட்டே காட்டிட்டு லெஹங்கா வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்..இப்போ இத்தனை புடவை வாங்கியிருக்கேன்.” என்றார் விஜயா.

“நீங்க சொல்றது ரொம்பச் சரி..நாம ஒண்ணை மனசுலே வைச்சுக்கிட்டுக் கடைக்குப் போவோம்..வேற எதை எதையோ வாங்கிட்டு வருவோம்.” என்றார் ஜோதி. 

அதற்கு,”நல்லவேளை உங்க கடைலே வெறும் லேடீஸ் துணிமணி தான் இருக்கு.” என்றார் விஜயா.

அவனுடைய கடன் அட்டையை சினேகாவிடம் நீட்டியபடி,“ஆமாம் ம்மா..சரியா சொன்னீங்க.” என்று ஆமோதித்தான் ஷண்முகம். 

உடனே, பில் போட்டுக் கொண்டிருந்த சினேகா அவளது தலையை உயர்த்தி,“ஜெண்ட்ஸுக்கும் ஒரு பொருள் வைச்சிருக்கோம்..ரொம்ப அவசியமான பொருள்..காமிக்கவா?” என்று கேட்டாள்.

“ஆம்பிளைங்களுக்கு தேவையான பொருளா? என்னது கண்ணு?” என்று விசாரித்தார் விஜயா.

“சின்ன பொருள் தான் ஆன்ட்டி..எல்லோருக்கும் புடவை வாங்கிக் கொடுத்த உங்க மகனுக்கு அந்தப் பொருளை நீங்க வாங்கிக் கொடுக்கலாம்.” என்று பீடிகையாக பேசினாள் சினேகா.

“அம்மா, ஏற்கனவே நம்ம தலைலே நிறைய கட்டிட்டா..இன்னைக்கு இது போதும்..இவகிட்டே வாயைக் கொடுத்து மாட்டிக்காதீங்க.” என்று இயல்பாக ஒருமையில் சினேகாவை கிண்டல் செய்தான் ஷண்முகம். 

“சரியா சொன்னீங்க தம்பி..விஜயாம்மா நீங்க கிளம்புங்க..அளவு பிளவுஸ்க்கு ஆள் அனுப்பும் முன்னே உங்களுக்கு நான் ஃபோன் செய்யறேன்.” என்றார் ஜோதி.

“ஆன்ட்டி..இன்னும் என் மேலே நம்பிக்கை வரலையா உங்களுக்கு?” என்று விளையாட்டாக சினேகா கேட்க, விஜயாவின் முகம் கலங்க, அதைக் கவனித்த ஷண்முகம்,

“எனக்காக என்ன வைச்சிருக்க? டவல் லா? தலைக்கு மேலே போட்டிட்டு போக சரியா இருக்குமில்லே?” என்று கேலியாக அந்த உரையாடலின் பாதையை மாற்றப் பார்க்க,

கேஷ் கௌண்டர் கீழே இருந்த அலமாரியைத் திறந்து,“கொஞ்சம் கரெக்ட்டா சொல்லிட்டீங்க..தலைலே போட்டுக்கலாம் ஆனா முழுமையா கவர் ஆகாது.” என்றபடி வெள்ளை நிறத்தில் ஆண்பிள்ளைகளுக்கான கைக்குட்டை சிலவற்றை வெளியே எடுத்து பில் புத்தகத்திற்கு அருகே வைத்தாள் சினேகா.

Advertisement