Advertisement

அத்தியாயம் – 24

ஜோதியின் பேச்சு ஓய்ந்தவுடன் அந்த இடமே அமைதியானது. அவருடைய ஆதங்கம், ஆத்திரம், அங்கலாய்ப்பு அனைத்திற்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று விஜயாவிற்குத் தெரியவில்லை. ஆறுதல் சொல்லும் அளவிற்கு அறிமுகம் இல்லாததால் அமைதியாக இருந்தார். அவர் சொன்னதை உள்வாங்கிய ஷண்முகமும் அவனுடைய அம்மாவைப் போல் அமைதியாக தான் இருந்தான். அந்த அமைதி தான் அறிமுகம் இல்லாதவர்களிடம் மிக அதிகமாக பேசி விட்டோம் என்று ஜோதிக்கு புரிய வைத்தது. ‘எல்லாம் இந்தப் பொண்ணாலே வந்திச்சு..எதுக்கு அப்படி அர்ஜெண்ட்டா வெளியே போனா..அதுவும் அன்னிய ஆண்பிள்ளை முன்னாடி..அரைகுறையா உடுத்தியிருக்கறது தெரியாம அப்படி என்ன அவசரமா ஓடி வந்தா? நான் கூப்பிடலைன்னா அங்கேயே நின்னுட்டு இருந்திருப்பா..அவளைப் பற்றி யார் என்ன நினைச்சாலும் அவளுக்கு கவலை இல்லை..அவளுக்கும் சேர்த்து கவலைபட தான் நாம இருக்கோமே..அவளைத் தப்பா நினைச்சிட கூடாதுன்னு பேசப் போய் அந்தப் பேச்சு வேற எங்கே எங்கேயோ போய் என்னவோ இவங்களுக்காக தான் இத்தனை வருஷம் காத்திருந்த மாதிரி எல்லாத்தையும் கொட்டிட்டோம்..

அந்த மனுஷன் உயிரோட இருந்த போது படுத்தாத பாடா..அப்போ கூட யார்கிட்டேயும் வாயைத் திறந்ததில்லையே…உடப்பிறந்தவங்க, பெத்த பிள்ளைங்ககிட்டே கூட நாம பட்ட அவஸ்தையை சொன்னதில்லையே..எல்லாத்தையும் உள்ளேயே போட்டு தானே வைச்சிப்போம்..இன்னைக்கு என்ன ஆகிடுச்சு எனக்கு? சினேகா எந்த உடை போட்டுக்கிட்டா என்ன? இவங்க நம்ம ஊர்க்காரங்களா இருந்தா என்ன? இவங்க அவளைப் பத்தி என்ன நினைச்சா என்ன? அவர் போன பிறகு நம்ம ஊர்க்காரங்க யார் துணையா இருந்தாங்க? சாகேத் தானே மனோக்கு உதவியா இருந்தாரு..மனோ கல்யாணத்துக்கு பிறகு நம்மகிட்டே மூஞ்சியைத் திருப்பிட்டு போனவங்களே ஷிக்காகிட்டே வாய்க் கூசாம மதராஸி உறவுன்னு சொல்லி தள்ளுபடி வாங்கிட்டு போகலை…

ஷிக்காவை மனோ கல்யாணம் செய்துகிட்டதாலே அண்ணன், தம்பியே ஒதுங்கிப் போயிட்டாங்க..சினேகாக்கு அந்தப் பக்கத்திலே வரன் அமையறது கஷ்டம்னு மறைமுகமா சொன்னாங்க..அப்போ கூட அவளுக்குன்னு யாரையாவது முடிச்சு போட்டு வைச்சிருப்பார் கடவுள்ன்னு நம்பிக்கையோட இருந்த எனக்கு இன்னைக்கு என்ன ஆகிடுச்சு? தமிழ்னு தெரிஞ்சதும் கட்டுப்பாட்டை எல்லாம் மீறி எல்லாத்தையும் கொட்டியிருக்கேன்..உள்ளேயே அடக்க வைச்சிருக்க முடியலைன்னா சாமி முன்னாடி உட்கார்ந்து கொட்டியிருக்கணும் தானே..ஆசாமிங்கிட்டே எதுக்கு கொட்டினேன்..மடைச்சி..மடைச்சி..ஜாக்கிரதையா இரு இருன்னு சினேகாக்கு தினமும் பாடம் எடுத்திட்டு நீ இப்போ என்ன செய்து வைச்சிருக்க..அறிவுகெட்டவ.’ என்று மனத்தினுள் அவரது செயலுக்கு அவரையே வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார் ஜோதி.

அவரைப் போலவே அவரைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான் ஷண்முகம். இன்றைக்கும் தெரிந்தவர்களிடம் கூட ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று வேலைக்கும் போகும் மகளுக்கு எச்சரிக்கை செய்து கொண்டிருப்பவர், முன்பின் அறிமுகமில்லாத அவர்களிடம், கடைக்கு வந்த வாடிக்கையாளர்களிடம், அவரின் சரித்திரத்தை பகிர்ந்து கொண்ட  முரணான செயலானது அவர் மிகப் பெரிய சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறார் என்று ஷண்முகத்திற்கு சொன்னது. நாட்டு நடப்போடு வீட்டு நடப்பைக் கலந்து, மகனின் கலப்புத் திருமணம், மருமகள், கடை, வருமானம், மகளின் எதிர்காலம் என்று கிட்டதட்ட அவரது மொத்த வாழ்க்கையையும் அவர்களிடம் தெரியப்படுத்தியது அவருமே எதிர்பார்க்காத ஒன்று என்று ஷண்முகத்திற்குப் புரிந்தது. 

உறவினர்களோடு வசிக்கும் சென்னைவாசியான அவனுடைய அம்மாவும், மகன், மகள், மருமகள், பேரன் என்று குடும்பத்தோடு வசிக்கும்  தில்லிவாசியான சினேகாவின் அம்மாவும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று சரியாக கணித்திருந்தான் ஷண்முகவேல். அதுவும் தற்போது சில நொடிகளாக அவர்களைப் பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரைப் பார்க்க அவனுக்குமே சங்கடமாக இருந்தது. என்ன சமாதானம் சொன்னாலும் அது இரு தரப்பிற்கும் சங்கடமாக இருக்குமென்பதால் அவனுடைய கைப்பேசியில் புதைந்து கொண்டான் ஷண்முகம். ஸ்ட்டூலிருந்து எழுந்து வந்து கௌண்டர் மீதிருந்த லெஹங்கா செட்டை மீண்டும் புரட்டினார் விஜயா.

சில நிமிடங்கள் கழித்து பெரிய பண்டில் ஒன்றோடு கடையினுள் நுழைந்த சினேகாவை அந்த அமைதி என்னவோ செய்தது. கல்லாவிலிருந்து எழுந்து வந்த ஜோதி அதை மகளிடமிருந்து வாங்கி கௌண்டர் மீது வைக்க, ”இரண்டு நாளா நாங்க கடையைத் திறக்கலை..என் அண்ணன் அவன் குடும்பத்தோட வெளியூர் போயிருக்கான்…இன்னைக்கு காலைலே கடையைத் திறக்கச் சொல்லியிருந்தான்..ஆனா வீட்லேர்ந்து வேலை செய்ய எனக்கு அனுமதி கிடைக்கலை..காலைலே ஆபிஸ் போயிட்டு மதியம் போல தான் வந்தேன்..அப்புறமா தான் கடையைத் திறந்தாங்க.” என்றபடி கடையின் அமைதியைக் குலைத்து அந்தப் பண்டிலை சினேகா பிரிக்க, ஏற்கனவே பிரித்து வைத்திருந்த உருப்படிகளை அமைதியாக ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார் ஜோதி.

கண்களைக் கவர்ந்த புது லெஹங்கா செட்டுக்களைப் பார்த்து,”இதோட விலை எவ்வளவுங்க?” என்று ஜோதியிடம் விசாரித்தார் விஜயா.

அம்மா செய்த முயற்சியைப் பற்றி அறியாததால், அவள் சார்பாக,“இதெல்லாம் ஆறாயிரம் ஆன்ட்டி..வேலைப்பாடு அதிகம்..ட் ரை க்ளீன் தான் செய்யணும்..முன்னாடி நீங்க வாங்கிட்டு போனதை வீட்லே கூட துவைக்கலாம்.” என்று ஜோதியை முந்திக் கொண்டு அந்தக் கேள்விக்குப் பதில் அளித்து புது ஆரம்பித்திற்கு அவளது பங்களிப்பை அளித்தாள் மகள்.

அந்த நேரம் நித்யாவிடமிருந்து மெசேஜ் வந்தது ஷண்முகத்திற்கு. அதைப் படித்து விட்டு,”அவளுக்கு வாங்கி கொடுத்த மாதிரி தான் வேணும்னு சொல்றா ம்மா நித்யா.” என்றான்.

“அந்த டைப் இல்லை ஆன்ட்டி.” என்று விஜயாவிற்குப் பதில் சொன்னவள், அப்படியே இந்தப் புறத்திலிருந்து அந்தப் புறத்திற்கு தாவிச் செல்ல, அதைக் கண்டு அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்த ஜோதியும், வாயில் கை வைத்து அதிர்ச்சியை வெளியிட்ட விஜயாவும் ஒரே போல்,”என்ன டீ பண்ற? என்ன கண்ணு பண்ற?” என்று வெளியிட, அதைக் கண்டு கொள்ளாமல், எம்பி, மேல் அடுக்கில் இருந்த சில பண்டில்களை எடுத்து கௌண்டர் மீது போட்டாள் சினேகா. 

ஸ்டோர் ரூமிலிருந்து கொண்டு வந்ததை அப்படியே கீழே தள்ளி விட்டு, புதுப் பண்டிலைப் பிரித்து,”இதைப் பாருங்க ஆன்ட்டி..எல்லாம் புது டிசைன்.” என்றாள். அவை அனைத்தும் செமி பனராஸி ஜார்ஜட்டில் பூட்டா டிசைன் புடவைகள். பல வண்ணங்களில், உடல் முழுவதும் தங்க நிறப் பூட்டாக்கள், பார்டரில் உள்ளங்கை அளவு சரிகை என்று வெகு அழகாக இருந்தன. 

“என்ன டீ சென்னைக்காரங்களுக்குப் புடவையைக் காட்டிட்டு இருக்க?” என்ற கருத்தை ஜோதி வெளியிட்ட நொடி, 

“அங்கே நவராத்திரிக்கு புடவை கட்ட மாட்டாங்களா?” என்று அவள் பதிலிற்கு சினேகா கேட்க, வாயை மூடிக் கொண்டார் ஜோதி.

அம்மா, மகளுக்கு இடையே அவர்களால் வாக்குவாதம் வேண்டாமென்று நினைத்து,“வேணாம் கண்ணு..அந்தப் பிள்ளைங்க லெஹங்கா தான் கேட்டிருந்தாங்க.” என்று மென்மையாக மறுத்தார் விஜயா.

உடனே,”அம்மா, அக்கா இரண்டு பேருக்கும் புடவை எடுங்க.” என்று கட்டளையிட்டான் மகன்.

‘ஓ இவங்களுக்கு ஒரு பையன் இரண்டு பொண்ணுங்களா?’ என்று விஜயாவைப் பற்றி ஜோதியும் சினேகாவும் ஓரே போல் நினைத்தாலும் அதை வெளியே சொல்லவில்லை.

‘ஐயோ இவன் வேற..இரண்டு பேருக்கும் ஒரே போல எடுத்தாலும் பிரச்சனை..வேற வேற மாதிரி எடுத்தாலும் பிரச்சனை.’ என்று மனத்தில் நினைத்தவர்,”புடவை வேணாம் சாமி..அவங்க இரண்டு பேரும் எனக்கு வாங்கி கொடுத்த மாதிரி சுடிதார் தான் கேட்டாங்க.” என்றார் விஜயா.

சினேகாவின் முயற்சியைக் கண்டு கொண்டிருந்ததால்,”அது அவங்க இங்கே வரும் போது வாங்கித் தரேன்னு சொன்னேன்..இப்போ புடவை வாங்குங்க..கூரியர்லே அனுப்பி விடலாம்.” என்று அவனது ஆதரவை அதற்கு அளித்தான்.

“உங்க அக்காக்கு தானே..இது வேணாம்..வேற காட்டறேன்.” என்று மேலே இருந்த சில பண்டல்களை கீழே இறக்கினாள்.

“சாஃப்ட், கோட்டா, கோரா, கட்டன்னு எல்லாமே செமி பனராஸி..ஆயிரத்தி இரு நூறுலேர்ந்து இரண்டாயிரத்து ஐ நூறு வரை ரேஞ்.” என்று புடவைகளைப் பிரித்துக் காட்டினாள். 

அதில் இரண்டு புடவைகளைத் தேர்ந்தெடுத்த ஷண்முகம்.”இது இரண்டையும் தனியா வைங்க.” என்று சொல்ல,

ஜோதியைப் போல் அவரது குடும்பப் பிரச்சனையைக் கடை விரிக்க வேண்டாமென்று நினைத்த விஜயா,“சாமி, இரண்டு பேருக்கும் ஒரே போல வாங்கிடலாம்.” என்றார்.

“ஜெயந்தி அக்கா குண்டாகிட்டாங்க ம்மா..அவங்க உடுத்தறது வசந்தி அக்காக்குப் பொருத்தமா இருக்காது.” என்றான் ஷண்முகம்.

உடனே,”ஸர் சொல்றது சரி..ஒவ்வொருத்தர் உடல்வாகை வைச்சு தான் டிசைன் செலெக்ட் செய்யணும்..அக்கா, தங்கை டுவின்ஸ் இருந்தா கூட ஒரே டிசைன் பொருந்தி வராது.” என்று அவளை அறியாமல் விஜயாவின் குடும்ப விஷயத்தில் காலடி எடுத்து வைத்தாள் சினேகா.

அதற்கு,”எங்கக்காக்கு கல்யாணமாகி ரொம்ப வருஷம் குழந்தைங்க இல்லை….ஜெயந்தி, வசந்தி இரண்டு பேரும் அவங்களோட இரட்டைப் பிள்ளைங்க..அவங்களுக்கும் இவனுக்கும் ஒரு வயசு தான் வித்தியாசம்..இப்போ அவங்களுக்கு முப்பதி நாலு நடக்குது.” என்றார் விஜயா.

“அக்கான்னு உங்க மகன் சொன்னவுடனே உங்களுக்கு மூணு பிள்ளைங்கன்னு நான் நினைச்சேன்.” என்றார் ஜோதி.

“எனக்கு இவன் ஒருத்தன் தான்..அக்காக்கு தான் மூணு பிள்ளைங்க..மூணும் பெண் பிள்ளைங்க..மூத்தவங்க இரண்டு பேரும் சென்னைலே இருக்காங்க..மூணாவது சிந்து..அவளுக்கு தலைப்பிரசவம்..அதுக்காக தான் அக்கா, மாமா இரண்டு பேரும் வெளி நாடு போயிருக்காங்க.” என்றார் விஜயா.

“அப்போ அந்தத் தங்கச்சிக்கும் ஒரு புடவை வாங்கிக் கொடுக்கணுமில்லே..அவங்களை எப்படி விட முடியும்?” என்று சரியான கேள்வி கேட்டாள் சினேகா.

Advertisement