Advertisement

அத்தியாயம் – 23

கை சொடுக்கும் இடைவெளியில் முகத்திலிருந்து கால் வரை பலரை அலசி ஆராயந்து செயல்படும் மகனின் திறமை அம்மாவிற்கு கிடையாது. மகனின் தன்னிலை விளக்கத்தை கேட்டு சினேகாவின் எதிர்வினையை ஓரளவிற்கு விஜயாவின் மனது ஏற்றுக் கொண்டிருந்தாலும் அவரது மனத்தின் அலைப்புறுதல் ஓய்ந்தபாடில்லை. இன்றும் வலுக்கட்டாயமாக அவரைக் கடைக்கு அழைத்து வந்திருந்ததால் அவரது முகத்தில் ஓர் இறுக்கம் இருந்தது. அவரது மனநிலைக்கு நேர்மாறான மனநிலையில், சினேகாவின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் நிலைகொண்ட விஜயாவின் பார்வை அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அவரது அகத்தில் நிலைகொண்டிருந்த பிடித்தமின்மையை வேரோடு பிடுங்கி வெளியே எறிந்து விட்டது அவளின் மகிழ்ச்சி. மங்கையின் முகத்தில் அவரது முழுக் கவனம் இருந்தததால் அவளின் முழுங்கால்களை அவர் கவனிக்கவில்லை. வேகமாக உள்ளே சென்றவள் அதைவிட வேகமாக வெளியே வந்து ஒரு விதமான எதிர்பார்போடு அவரைப் பார்க்க, அதை எதிர்கொள்ள தைரியமில்லாமல் மகனின் புறம் பார்வையைத் திருப்பினார் விஜயா.

எங்கே அவனது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அம்மாவின் பார்வையை உணர்ந்தாலும் அவரின் புறம் திரும்பவில்லை, அவனின் பார்வையைக் கைப்பேசியில் பதித்திருந்தான் மகன். அம்மா, மகன் இருவரும் அவளின் பார்வையை சந்திக்காமல் தவிர்ப்பதற்குக் காரணம் முந்தையை சந்திப்பில் அவள் செய்த தவறினால் தான் என்ற முடிவிற்கு வந்திருந்தாள் சினேகா. ‘நான் சொன்னதை அவங்க மகன்கிட்டே சொல்லிட்டாங்க போல..அதான் இரண்டு பேரும் என் முகத்தை கூட பார்க்க விரும்பலை.’ என்று அவளுக்குத் தோன்றியது. அவளது தவறை உணர்ந்து விட்டாளென்று எப்படி அவர்களுக்குப் புரிய வைப்பதென்று சில நொடிகளுக்கு யோசித்தவள், அதன் முடிவில், ‘இன்னைக்கு அவங்ககிட்டே நல்லபடியா நடந்துகிடணும், முடிஞ்ச அவங்க மகன் முன்னாடி ஆன்ட்டிகிட்டே மன்னிப்பு கேட்டிடணும்.’ என்ற முடிவிற்கு வந்தாள் சினேகா. அது தெரியாமல், அடுத்த சில நொடிகளில், அவர்களின் சிரிப்பை அடக்கமுடியாமல் திணறிய அம்மாவும் மகனும் அவளது மன்னிப்பிற்கு அவசியமில்லாமல் செய்து விட்டனர்.

சினேகாவைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வந்த ஜோதி,”இவ தூங்கிட்டு இருக்கான்னு நினைச்சேங்க..அதான் அவளை தொந்தரவு செய்யாம உங்களுக்குத் தேவையானதை நானே எடுத்துக் காட்டினேன்..இப்போ என் மருமககிட்டே பேசினேன்..வேற ஸ்டாக் வைச்சிருக்கறதா சொன்னா..இவ எடுத்திட்டு வந்து காட்டுவா..இந்தா டீ சாவி.” என்று விஜயாவிற்கு விளக்கம் கொடுத்து விட்டு சினேகாவின் கையில் சாவியை வைத்தார்.

சாவியை வாங்கிக் கொண்டவள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்,“அம்மா, ஒழுங்கா கேட்டுக்கிட்டீங்களா? நீங்க பேசினது அவளுக்குப் புரிஞ்சுதானே பதில் சொன்னா..அது உங்களுக்கு சரியாப் புரிஞ்சுதா? இல்லை என் நேரத்தை வீண்டைக்கறீங்களா?” என்று கேட்டாள்.

அதைக் கேட்டு கொதித்துப் போன ஜோதி, விஜயாவின் புறம் திரும்பி,”ஹிந்தி எழுத, படிக்க தெரியாம இதே தில்லிலே இத்தனை வருஷம் காலம் தள்ளியிருக்கேன்..இவளை நர்ஸரிலே சேர்த்து விட்ட போது ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் வந்தா இந்திலே  எப்படிச் சொல்லணும்னு இவளுக்குச் சொல்லிக் கொடுத்தது நானு..மூணாவது வரை இவளைப் பள்ளிக்கூடம் அழைச்சிட்டுப் போய், கூட்டிட்டு வந்தது நானு..சதுரங்கம், நீச்சல்ன்னு இவங்க அப்பா பிள்ளைங்க இரண்டு பேரையும் கிளாஸ்லே சேர்த்து விட்ட போது யார் அங்கே கொண்டு போய் விட்டாங்கண்ணு நினைக்கறீங்க..இந்தி தெரியாத இந்த அம்மா தான்..

என் பையனுக்கு அதிகம் தூரமில்லை..குவார்டர்ஸ்லே இரண்டு பிளாக் தள்ளி தான் க்ளாஸ்..இவளுக்கு இரண்டு பஸ் மாறிப் போகணும்..அவங்க அப்பாக்கு வேற வேலை இருக்கும் போது இரண்டு பஸ் மாறி இவளை நீச்சல் குளத்துக்கு அழைச்சிட்டுப் போய், இவளோட நீச்சல் ஸர் சொல்ற திருத்ததைப் புரிஞ்சுக்கிட்டு, அதை இவளுக்குப் புரிய வைச்சு, இவ அப்பாகிட்டேயும் அதை அப்படியே ஒப்பிச்சு இவளை பதக்கம் வாங்க வைச்சது நானு..

இப்போவும் எனக்கு ஹிந்திலே எழுத, படிக்க தெரியாது தான்..ஆனா நூறு வரை எண்ண தெரியும்..நூறு, இரு நூறு, ஆயிரம், இரண்டாயிரம்னு ஹிந்திலே பணக் கணக்குக்கு கூட்டி, கழிக்க தெரியும்…அதான் என் பொறுப்பிலே இந்தக் கடையை விட்டிட்டு போயிருக்கா என் மருமக..என்னைப் பார்த்து என்ன கேள்வி கேட்கறா பாருங்க என்னோட மக.” என்று படபடவென் சினேகாவை போட்டுத் தாக்கியவர், 

அதே தொனியில்,”ஷிக்கா என்னோட பேசலை..உன் அண்ணன்கிட்டே ஃபோனை கொடுத்திட்டு போயிட்டா..புடவை சரக்கை இங்கே மேல் அடுக்கலே வைச்சதுனாலே லெஹங்காவை ஸ்டோர் ரூம்லே போட்டு வைச்சிருக்கறதா அவன் தான் தமிழ்லே சொன்னான்…யாரும் உன் நேரத்தை வீணடிக்கலை..வீணா வாய் அடிக்காம போய் சரக்கை எடுத்திட்டு வா.” என்று அவரை அறியாமலேயே சினேகா சொன்னதை ஜோதி ஆமோதித்தைக் கேட்டு விஜயா, ஷண்முகம் இருவருக்கும் சிரிப்பு வர,’நோ..சிரிக்கக் கூடாது.’ என்று தலையசைவில் அவர்கள் இருவருக்கும் எச்சரிக்கை செய்த சினேகா, 

“ஆன்ட்டி, சல்வார்லே சூப்பரா இருக்கீங்க.” என்று விஜயாவின் தோற்றத்தைப் பாராட்டி அழகாக அந்த உரையாடலின் பாதையை மாற்றினாள்.

அதுவரை லேசாக ஓட்டிக் கொண்டிருந்த தயக்கம் ஓடிப் போக,”தாங்க்ஸ் கண்ணு.” என்று அந்தப் பாராட்டை ஏற்றுக் கொண்டு அவர்கள் உறவில் புத்தம் புதிய பக்கத்தை ஆரம்பித்தார் விஜயா. அதுவரை மனத்தில் இருந்த கலக்கம் நீங்க, பெரிய புன்னகையுடன், 

“உங்களை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்.” என்று ஜோதியின் கையிலிருந்த அவளது கைப்பேசியை வாங்கி விஜயாவை சினேகா புகைப்படம் எடுக்க நினைக்க, அவனது கைப்பேசியை பேக்கெட்டில் போட்டு கொண்டு அவளது கைப்பேசிக்காக ஷண்முகம் கையை நீட்ட, நொடிப் பொழுதில் கைப்பேசி கை மாற, “நீங்களும் அம்மாவோட நில்லுங்க ஆன்ட்டி.” என்று ஜோதியிடம் சொன்னான் ஷண்முகம்.

அதை எதிர்பார்த்திராத ஜோதி,”நான் எதுக்கு தம்பி..உங்கம்மாவை மட்டும் எடுங்க..என் மருமககிட்டே அவ தைச்சுக் கொடுத்த சுடிதார் உங்கம்மாக்கு எவ்வளவு அழகா பொருந்தி இருக்குன்னு காட்டா தான் அவங்களை ஃபோட்டோ எடுக்க நினைச்சா சினேகா.” என்று ஒரு காரணத்தைச் சொல்லி அவனது கோரிக்கையை மறுக்க,

“நீங்களும் அடிக்கடி இந்த ஃபோட்டோவை பாருங்க..அப்போ தான் இதைப் பார்க்கும் போதெல்லாம் அம்மாவைப் போல சுடிதார் போட உங்களுக்கும் ஆசை வரும்..அதை போல உங்களுக்கும் ஒண்ணு தைச்சுக் கொடுக்கணும்னு உங்க மருமகளுக்கும் தோணும்.” என்றான் ஷண்முகம்.

அது போல் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால்,“யெஸ்..அம்மா, நீங்க ஆன்ட்டி பக்கத்திலே போய் நில்லுங்க.” என்று அவளுடைய அம்மாவை விஜயா அருகில் சினேகா நிற்க வைக்க, பெரியவர்களைப்  புகைப்படம் பிடித்த ஷண்முகம்,”அம்மா உங்க ஃபோனைக் கொடுங்க.’ என்று கையை நீட்ட, விஜயாவும் அவரது கைப்பையினுள் இருந்த ஃபோனை எடுத்து அவனிடம் கொடுக்க, இரண்டு கைப்பேசிகளோடு அவன் சினேகாவை நோக்க, அவளும் அவனோடு பார்வையைக் கலந்தபடி அவளுடைய கைப்பேசி இலக்கை அவனிடம் ஒப்பிக்க, அவனுடைய அம்மாவின் கைப்பேசியிலிருந்து சினேகாவின் அழைப்பு விடுத்தவன்,”அப்புறமா அம்மாக்கு ஃபோட்டோவை அனுப்பி விடுங்க.” என்று சொல்லி அவளது கைப்பேசியை சினேகாவிடம் கொடுத்தான்.

 “ஓகே..அனுப்பி விடறேன்” என்று அவளது கைப்பேசியை டிராக் பேண்ட் பேக்கெட்டில் போட்டுக் கொண்டவள்,”ஸ்டோர்லே இருக்கற லெஹங்கா செட்டை கொண்டிட்டு வரேன்.” என்று பொதுவாகச் சொல்லி விட்டு கடையின் கதவைத் திறந்து வெளியே சென்றாள். 

அவனுடைய அம்மாவின் கைப்பேசியை அவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு அவனுடைய கைப்பேசியை பேக்கெட்டிலிருந்து வெளியே எடுத்த ஷண்முகம் அவனது காண்டாக்ட்டில், ‘சகி’ என்ற பெயரில் ஓர் இலக்கை பதித்து வைத்தான்.

கல்லா அருகே இருந்த ஸ்ட்டுலை வெளியே இழுத்துப் போட்டு,”உட்காருங்க” என்று விஜயாவிடம் ஜோதி சொல்ல, விஜயாவும் அதில் அமர, கல்லாவில் அமர்ந்து கொண்ட ஜோதி, தமிழில் பேச கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

“விலை அதிகமா இருந்ததை ரூம்லே போட்டு வைச்சிருக்கா ஷிக்கா..இங்கே மாடிப்படி கீழே தான் இருக்குது அந்த ரூம்..மூணு அடுக்கு அலமாரி உயரம், அகலம் தான் ஆனா அதுக்கு பெயர் ஸ்டோர் ரூம்..அதுக்கும் வாடகை கொடுத்திட்டு இருக்கா..சரக்கு இருக்கற போது அந்த ரூமோட சாவி எங்ககிட்டே இருக்கும்..சரக்கு இல்லாத போது செக்ரெட்ரிகிட்டே இருக்கும்..’வீட்டு உள்ளேயே ஒரு கப்போர்ட்லே போட்டு வை எதுக்கு வீணா செலவு செய்யறேன்னு’ சொன்னா ‘வீடு வேற கடை வேற..இங்கே இரண்டுக்கும் நடுவுலே ஒரேயொரு கதவு..அதனால் தான் இந்த இடம் வேணாம்னு சொன்னேன்….நல்ல லொகேஷன்னு எல்லோரும் சேர்ந்து என் முடிவை மாத்திட்டாங்க..

சின்ன கவர்மண்ட் குவார்டர்ஸ்லே இருந்ததாலே வீட்டை எப்படி வைச்சுக்கணும்..ஒவ்வொரு ரூமையும் எப்படி அலங்கரிக்கணும்..எந்தப் பொருளை எங்கே வைக்கணும்னு உங்களுக்கு ஓர் ஐடியாவும் கிடையாது..சின்ன வீட்டை அலங்கரிக்கறது எப்படின்னு நிறைய வீடியோ வருது..உங்களுக்கு அனுப்பி விடறேன் பாருங்கண்ணு.’ எனக்கு நாகரீகம் கத்துக் கொடுக்கற என் மருமக..அவளுக்கு பெரிய கடை, பஎரிய வீடுன்னு பெரிய பெரிய ஆசைகள்..ஆசை இருந்தா மட்டும் போதுமா அதை நிறைவேற்றிக்க காசு வேணாமா? சின்னதா ஆரம்பிச்சு மெல்ல மெல்லா பெரிசாகற வரை காத்திருக்க அவளுக்கு பொறுமை இல்லை..மகனுக்கு சேர வேண்டியது எல்லாம் கொடுத்து முடிச்சிட்டேன்..சினேகாவுக்கு ஒரு வழி செய்து கொடுத்திட்டு மிச்சம் மீதி ஏதாவது இருந்தா பேரனுக்கு கொடுக்கலாம்னு நினைச்சேன்..அதுக்கு வாய்ப்பே இல்லாம வாழ்க்கை போகுது..சினேகா சம்பாதிக்கறது, அவங்க அப்பாவோட பென்ஷன் எல்லாம் செலவாகிடுது..அப்படியே சேமிச்சு வைச்சாலும் பேரனுக்கு உடம்பு முடியலைன்னு கேட்கும் போது எப்படிக் கொடுக்காம இருக்க முடியும்?”…என்னோட மருமகளும் கடை, தையல்ன்னு என்னென்னவோ செய்து வருமானத்தை பெருக்க பார்க்கறா..நாளுக்கு நாள் ஏறிக்கிட்டு இருக்கற விலைவாசிலே கைலே ஒண்ணும் பெரிசா மிஞ்சறது இல்லை..

இப்போ நானும் சினேகாவும் இருக்கற வீடு இதை விட சின்னது..அதுக்கும் இதே அளவு வாடகை கொடுக்கறேன்..அந்த ஏரியா பாதுகாப்பான ஏரியா..இராத்திரி எத்தனை நேரமானாலும் ஆள் நடமாட்டம் இருக்கும்..பயமில்லை..இங்கே அப்படிக் கிடையாது..மெயின் ரோடா இருந்தாலும் ஒன்பது மணிக்கு மேலே பயம் தான்..எல்லோரும் கதவை அடைச்சுக்கிட்டு உள்ளே இருப்பாங்க..குளிர்க்காலத்திலே ஏழு மணிக்கே வெறிச்சோடிப் போயிடும்..

ஒரு சிசி டிவி போடுங்கண்ணு என் பையன் சொன்னதை பில்டிங் கமிட்டி காது கொடுத்து கேட்கலை..உங்களுக்கு வேணும்னா கடை முன்னாடி போட்டுக்கோங்கண்ணு சொல்லிட்டாங்க..அது தான் சாக்குன்னு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்லே வேற கடை பார்த்துக்கலாம்  என் மருமக சொல்றா.. இந்தக் கடை ஆரம்பிச்சு இரண்டு வருஷம் போல ஆகிடுச்சு..என் பேரன் பிறந்த கொஞ்ச நாள்லே ஆரம்பிச்சோம்..என் மருமகளோட பிறந்த வீடு இரண்டு செக்டர் தாண்டி இருக்குது..அங்கே தான் தையல் மிஷின் வைச்சிருக்கா..தையல் வேலை எல்லாம் அவங்க வீட்லே தான் செய்வா..இங்கே இடம் போதாது..மிஷின் ஓட்டினா என் பேரன், பையன் இரண்டு பேரோட தூக்கமும் கெட்டுப் போகும்..அவங்க வீடு கோட்டி..மேலே, கீழேன்னு தனி வீடு..நிறைய ரூம் இருக்கு..கதவைச் சாத்திக்கிட்டு தைச்சா யாருக்கும் தொந்தரவா இருக்காது..

அவங்களும் அப்பப்போ வந்து கடையைப் பார்த்துக்குவாங்க..அது போக நானும் சினேகாவும் எங்களாலே முடிஞ்ச உதவியை செய்யறோம்..ஆனாலும் என் மருமக எதிர்பார்பிற்கு வியாபாரம் நடக்கலை..வீட்டோட துணி கடை வைச்சது தப்புன்னு இப்போ எனக்கும் தோணுது..தனியா வைச்சிருக்கணும்..மனைவிக்குத் துணி பார்க்கணும், தங்கைக்கு கொடுக்கணும், அம்மாக்கு வாங்கணும்னு ஒத்த ஆம்பிளையா நிறைய பேர் வரானுங்க..சில பேர் ஜோடியா வந்தாலும் சரியா நடந்துக்கறதில்லை..ஃபோனை கைலே வைச்சுக்கிட்டு துணியை ஃபோட்டோ எடுக்கறேன்னு வீட்டுப் பிள்ளைங்களை எடுக்கறாங்க..அவங்களைக் கடைலேர்ந்து விரட்டறதுக்குள்ளே போதும் போதும்னு ஆகிடுது..இதே இந்தக் கடை ஷாப்பிங் செண்டர்லே இருந்தா செக்யுரிட்டி, சிசி டிவிக்கு பயந்து இந்த மாதிரி ஆளுங்க வர மாட்டாங்க..இங்கே அந்த இரண்டு வசதியும் கிடையாது..

மெயின் ரோட்லே இருக்கறதுனாலே எப்போதும் இந்தக் கேட் திறந்து தான் இருக்கும்..பின்பக்கதிலிருந்து மெயின் ரோட்டுக்குப் போக இது தான் குறுக்கு வழி..திடீர்னு பின்பக்கத்திலிருந்து டூவீலர்லே பறந்து வந்து அப்படியே மெயின் ரோட்லே சேர்ந்திப்பாங்க..அதே போல மெயின் ரோட்லெர்ந்து இந்த வழியா பின்பக்கம் போவாங்க..அவங்களை எல்லாம் கேள்வி கேட்க முடியாது..கேட்டை அடைச்சு வைச்சா அதை உடைச்சு வழி செய்துக்கறாங்க..

மெயின் ரோட்னு நினைச்சு தான் கடையோட இருந்த இந்த வீட்டிற்கு குடி வந்தான் என் மகன்..இங்க இருக்கற பிரச்சனை எல்லாம் குடி வந்த பிறகு தான் தெரிஞ்சது.. துணைக்கு ஆளில்லைன்னா என் மருமக கடையைத் திறக்கற மாட்டா..அவங்க அம்மா வீட்லேர்ந்து யாரையாவது துணைக்கு வைச்சுக்கிட்டு தான் கடையைத் திறப்பா..தினமும் என்னாலேயும் வர முடியறதில்லை..ஆட்டோக்காரன் அந்தப் புறத்திலே தான் இறக்கி விடுவான்..அங்கே இருந்து இந்தப் பக்கம் க்ராஸ் செய்யறத்துக்குள்ளே நெஞ்சு படபடன்னு அடிச்சுக்குது..மெயின் ரோட்லே கூட ஒரு ரூல் ஃபாலோ செய்யறது இல்லை..கண்ணை மூடிட்டு வண்டியை கண்டபடி ஓட்டிட்டுப் வராங்க..இதிலே கார், பஸ், ஆட்டோ எல்லோரும் ஒரே ஜாதி, காடுத்தனமா ஓட்டறாங்க..

இந்த ஊர் ஆட்டோகரன் பத்தி சொல்ல ஒரு நாள் போதாது..எங்கே கூப்பிட்டாலும் வர மாட்டேன்னு வம்பு செய்வான்..அப்புறம் எதுக்குடா வீதிலே நின்னுட்டு இருக்கேன்னு கேட்டா நீ கூப்பிடற இடத்துக்கு தான் சவாரி வராதுன்னு வேணும்னு நம்மளை எரிச்சல் படுத்துவான்..அப்படியே வரேன்னு சொன்னா முன்னாடியே பேரம் பேசிட்டு தான் ஏறணும் இல்லைன்னா இறக்கி விடும் போது ஒரு மாச சம்பளத்தைக் கேட்டு சண்டை பிடிப்பான்..அவன் ஹிந்திலே கத்தினா நாமளும் நாலு கெட்ட வார்த்தையை விடணும் இல்லைன்னா அவ்வளவு தான் கைலே இருக்கறதை எல்லாம் பறிச்சிடுவான்..

‘ஹாங் ஜி ஹாங் ஜி’ பவ்யமா வண்டிலே ஏத்திகறவன் பக்கத்திலே இருக்கற இடத்துக்கு பத்து கிலோமீட்டர் சுத்தி அழைச்சிட்டுப் போய் சொத்தை எழுதி வாங்கிடுவான்..நல்லவன்னு எவனையும் நம்பமுடியாது…தெரிஞ்சவங்களா இருந்தாலும் ஜாக்கிரதையா தான் இருக்கணும்னு சின்னதிலிருந்து சினேகாவுக்கு சொல்லிக் கொடுத்திட்டு வரேன்..அவளும் என் பேச்சை கேட்டு தான் நடக்கறா..சில சமயம் முடியவே முடியாதுன்னு என்கூட சண்டைலே இறங்கிடு வா..எத்தனை வருஷம் இதே ஊர்லே குப்பை கொட்டினாலும் அவங்களைப் போல உணவு, உடைன்னு மாறிக்கிட்டாலும் நம்மளை மதராஸின்னு தான் சொல்லுவாங்க..அதனாலே எப்போதும் உஷாரா தான் இருக்கணும்..

சினேகா காலேஜுக்கு போன போது இருந்த பயத்தை விட இப்போ அவளைப் பற்றின பயம் ஜாஸ்தியா இருக்கு..’ஊர்லே நடக்கறதைக் கேட்டு, பார்த்து மனசு பக்பக்குன்னு இருக்குது இந்த ஊர் பிள்ளைங்க மாதிரி உடுத்திக்காதேன்னு சொன்னா எங்கே என் பேச்சை கேட்கறா..’தில்லி மட்டுமில்லை எங்கேயுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை..எல்லா ஊர்லேயும் எல்லோரும் எல்லாமும் உடுத்தறாங்கண்ணு’ பட்டு பட்டுன்னு பதில் கொடுக்கறா..

அவ சொல்றதும் உண்மை தானே..கிராமம், டவுன், சிட்டின்னு எல்லா இடத்திலேயும் தான் பெண்கள் கஷ்டப்படறாங்க..நீங்களும் சென்னைலே இருக்கறவங்களுக்கு லெங்ஹா சோலி வாங்கிக் கொடுத்திருக்கீங்க..இப்போ அவங்க சொல்லி திரும்ப வாங்க வந்திருக்கீங்க..லெஹங்கா சோலி அங்கே வரை போனது எங்களுக்கு நல்லதாகிப் போச்சு.” என்று விலாவாரியாக அவரது தில்லி வாழ்க்கைமுறையை அலசி அதை மற்ற இடங்களோடு ஒப்பிட்டு, கடைசியில் கணக்காக வியாபாரத்தில் கொண்டு வந்து முடித்தார் ஜோதி.

அந்த உரையாடலின் முடிவில் பெண்களின் பயங்களைப் பற்றி ஆரயாச்சிக் கட்டுரை எழுதும் அளவிற்கு விஜயாவிற்கு மெட்டீரியல் கிடைத்ததோடு சினேகாவின் அன்றைய செய்கைக்கான விடையும் கிடைத்தது. அவனுடைய கைப்பேசியில் கவனம் போல் இருந்தாலும் ஒரு வார்த்தை விடமால் ஜோதி சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான் ஷண்முகம்.

Advertisement