Advertisement

அத்தியாயம் – 22-1

அதுவரை பொறுமையாக இருந்த அந்த இளைஞன்,”ஆன்ட்டி” என்று ஜோதியை அழைத்து, அவனது கைப்பேசித் திரையைக் காட்டி ஹிந்தியில் ஏதோ சொன்னான். அவனது கைப்பேசியைத் தீவிரமாக சில நொடிகளுக்குப் பார்த்த ஜோதி,”ஆன்லைன்லே வாங்கிக்கோங்க.” என்று இரண்டே வார்த்தைகளில் நிர்தாட்சண்யமாக பதில் கொடுக்க,”டீக் ஹே ஜி” என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டான் அந்த இளைஞன்.

விஜயாவின் கைப்பேசியை அவரிடம் கொடுத்து விட்டு,“ஆன்லைன்லே இதே பொருள் குறைஞ்ச விலைலே கிடைக்குதுன்னு என்கிட்டே காட்டறான்..எப்படி இத்தனை மலிவா விக்கறாங்கண்ணு தெரியலை..கொஞ்ச நாள்லே கடையை மூட வேண்டி வரும் போல.” என்று தமிழில் புலம்பியபடி விஜயாவை தலை முதல் கால் வரை ஆராய்ந்தார் ஜோதி. நெத்தியில் இருந்த சின்ன கறுப்பு பொட்டையும் கழுத்தில் தாலி இல்லாததைக் கவனித்தாலும் கவனிக்காதது போல் அவரது உடையில் கவனம் செலுத்தியவருக்கு அது அவர்கள் கடையில் வாங்கியது என்று தெரிய,  யார் இவர்? என்று அவரது நினைவடுக்கை தேட, ‘மதராஸி ஆன்ட்டி’ என்று ஷிக்கா சொன்னது நினைவுக்கு வர, அதை உறுதி செய்து கொள்ள,

“இது எங்களோட கடைலே வாங்கினது தானே..ஷிக்கா தானே தைச்சுக் கொடுத்தா?” என்று கேட்டார்.

“ஆமாங்க..என்னோட நிறத்துக்கு பொருந்தற மாதிரி உங்க மக தான் தேர்ந்தெடுத்து கொடுத்தா..உங்க மருமக தான் தைச்சுக் கொடுத்தாங்க..எனக்கு புடவை தான் பழக்கம்..என் பையன் இவன் தான் ‘சுடிதார் போட்டு பழகுங்க..வெளியே வாசல்லே போக சௌகர்யமா இருக்கும்னு’ சொல்லி வாங்கி கொடுத்திருக்கான்.” என்று பதில் அளித்தார் விஜயா.

“நல்ல காரியம் செய்தீங்க தம்பி..என்னைப் பாருங்க எப்போதும் புடவை தான்..இங்கே வந்து பல வருஷமாகிடுச்சு..அவர் இருந்த போதும் சரி இப்போவும் சரி சிலதை பழகிக்க முடியலை..குளிர் காலத்திலே ரொம்பவே கஷ்டமா இருக்குது..பிள்ளைங்களும் மாறிக்க சொல்றாங்க..எப்படியோ இப்போவரை சமாளிச்சிட்டு வரேன்..முதல்லேயே மாறியிருக்கணும்னு  இப்போ தோணுது.” என்று அவரைப் பற்றி பேசியபடி அலமாரி அடுக்கிலிருந்து சில லெஹங்கா செட்டுக்களை எடுத்து வந்து கௌண்டர் மீது போட்டார் ஜோதி.

அடுத்து வந்த நிமிடங்களில் சகஜமாக உரையாடியபடி அவர்களிடம் லெஹங்கா செட்டுக்களைப் பிரித்துக் காட்டினார் ஜோதி. சினேகாவைப் போல் சினேகிதமாக பேசும் அவரது சுபாவம் விஜயாவிற்குப் பிடித்து போய் விட்டது. ஆனாலும் அவருடைய மகள் இல்லையா என்று நேரடியாக கேட்க தயக்கமாக தான் இருந்தது. அன்றைக்கு விட இன்றைக்கு வெரைட்டி குறைவாக இருந்ததால்,”அன்னைக்கு உங்க மக நிறைய விதமான லெஹங்கா காட்டினா.” என்று விஜயா சொல்ல,

“அதெல்லாம் வித்துப் போயிருக்கும்..நவராத்திரி நெருங்கிடுச்சுயில்லே எல்லோரும் வாங்கிட்டு போயிருப்பாங்க..மிச்சம் இருக்கறது இவ்வளவு தான்..பெரும்பாலும் லெஹங்கா ஷாப்பிங்கு ஜனங்க சாந்தினி ச்வுக் போகறது தான் வழக்கம் ..அங்கே பழசை புதுசாக்கி கொடுப்பான்..வாயைத் திறக்காம அவன் சொல்ற விலைக்கு வாங்கிட்டு வருவாங்க..இங்கே நாங்க நியாயமான விலைலே புதுசு கொடுத்தாலும் விலையைக் குறைக்க சொல்வாங்க..அதான் நிறைய ஸ்டாக் வைச்சுக்கறதில்லை.” என்றார் ஜோதி.

“இவ்வளவு தான் இருக்குன்னு மெசேஜ் போட்டு இங்கே இருக்கறதை ஃபோட்டோ எடுத்து நித்யாவுக்கு அனுப்பி விடு சாமி.” என்று மகனுக்குக் கட்டளையிட்டார் விஜயா. உடனே அனைத்து செட்டுக்களையும் தனி தனியாக பிரித்து வைத்து ஃபோட்டோ எடுக்க வசதி செய்து கொடுத்தார் ஜோதி. 

வீட்டினுள்ளே அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த சினேகாவிற்கு கடையில் நடந்து கொண்டிருந்த உரையாடல்கள் லேசாக காதில் விழுந்தாலும் அவளது கவனத்தை கவரவில்லை. ஓவர் சைஸ் அரைக் கை ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்திருந்தாள். சட்டையின் நீளம் பெரிதாக இருந்ததால் ஷார்ட்ஸ் அதன் அடியில் மறைத்திருந்தது. அவளைப் பார்த்தால் கீழே ஒன்றும் போட்டுக் கொள்ளாதது போன்ற தோற்றம் கொடுக்கும் என்பதால் உறங்கும் போது மட்டும் அதை அணிய அனுமதி அளித்திருந்தார் ஜோதி. உறக்கதிலிருந்து விழித்து வரவேற்பறையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாலும் வேறு உடைக்கு மாற வேண்டுமென்று சினேகாவிற்கு தோன்றவில்லை. அம்மா அழைத்தால், அவசியம் ஏற்பட்டால் ஷார்ட்ஸ் மீது அணிய டிராக் பேண்ட் ஒன்றை கைக்கு எட்டும் தூரத்தில் வைத்திருந்தாள். 

அவள் அருகே இருந்த கைப்பேசி ஒலி எழுப்ப, அழைத்தது ஷிக்கா. மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்ததால் அவளது அழைப்பை ஏற்க விரும்பவில்லை சினேகா. னவே,”அம்மா, அம்மா” என்று ஜோதிக்கு அழைப்பு விடுத்தாள். அதே நொடி அழைப்பு ஒலி நின்று போனது.

கடையில் இருந்த மூவரிடமும் அந்த அழைப்பு போய் சேர,”என் பொண்ணு கூப்பிடற..நீங்க ஃபோட்டோ எடுத்திட்டு இருங்க..என்னென்னு கேட்டிட்டு வரேன்.” என்று சொல்லி விட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார் ஜோதி. கதவை முழுதாக மூடாமல் லேசாக திறந்து வைத்திருந்ததால் அம்மா, மகள் இடையே நடந்த உரையாடல் கடையில் இருந்த அம்மா, மகன் ஜோடிக்கு தெளிவாகக் கேட்டது.

“கடைலே கஸ்டமர் இருக்கற போது எதுக்கு இப்படிக் கத்தற..அப்படியென்ன அவசரம்?” என்று சினேகாவைக் கோபித்துக் கொண்டார்.

“ஷிக்கா ஃபோன் செய்தா..நான் எடுக்கலை..என் ஃபோனை எடுத்திட்டுப் போய் நீங்களே பேசுங்க எனக்கு தலைக்கு மேலே வேலை கொட்டிக் கிடக்கு..அவ கேள்வி பதிலுக்கு என்கிட்டே நேரம் கிடையாது.” என்று சொல்லி அவளுடைய ஃபோனை அவரின் கையில் திணித்தாள்.

“நான் மட்டும் ஹாயா உட்கார்ந்திருக்கேனா? வியாபாரம் செய்திட்டு இருக்கேன்..லெஹங்கா செட் வேணும்னு வந்திருக்காங்க..ஒரு மாசத்துக்கு முன்னே நீதான் அவங்களுக்கு செலெக்ட் செய்து கொடுத்திருக்க..அதே போல வேணும்னு சென்னைலே இருக்கறவங்க கேட்கறாங்களாம்..அதெல்லாம் அப்போவே வித்துப் போயிடுச்சேன்னு மிச்சம் இருக்கறதைக் காட்டிட்டு இருந்தேன்.” என்ற ஜோதியின் விளக்கத்தை அரைகுறையாக கேட்டுக் கொண்டிருந்தவளிடம்,

“கடைலே இருக்கறதை எல்லாம் காட்டிட்டேன் டீ..ஃபோட்டோ பிடிச்சு ஃபோன்லே அனுப்பி வைச்சிட்டு இருக்காங்க..சென்னைலே இருக்கறவங்களுக்கு அது பிடிக்கும்மான்னு தெரியலை..வேற எங்கேயாவது ஸ்டாக் வைச்சிருக்காளா ஷிக்கா?” என்று விசாரித்தார்.

“எனக்கு எப்படித் தெரியும்? நான் தான் கடை பக்கம் வரலையே.” என்றாள் சினேகா.

இப்போது செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தபடி புது வேலை விஷயமாக மும்பைக்கு சென்று வந்து கொண்டிருந்ததால் மனோவின் வீட்டுப்பக்கம் வர அவளுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. அவள் தில்லியில் இல்லாத நாள்களில், தனியாக இருக்க வேண்டாமென்று அம்மாவை அவனுடைய வீட்டிற்கு மனோகர் அழைக்க, ஜோதி வரவில்லை. மகன் வீட்டிற்கு சென்றால் கடை, பேரன் என்று அவரது நேரம் மொத்தமும் செலவாகி விடுமென்பதால் தனியாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்து விட்டார். அந்த நாள்களில் சினேகாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் தீவிரமாக இறங்கினார். புதிதாக திறந்திருந்த திருமணப் பொருத்த நிலையங்களுக்கு நேரடியாக சென்று மகளின் ஜாதகத்தையும் மற்ற விவரங்களையும் பதித்து வைத்து விட்டு வந்திருந்தார். 

“நானும் இந்தப் பக்கம் வரலையே..எனக்கும் தெரியலையே..அலமாரிலே இருந்ததைக் காட்டினேன்..ஸ்டோர் ரூம் சாவி நம்மகிட்டே தான் இருக்குதா?” என்று கேட்டார் ஜோதி. 

“அவ இப்போ ஃபோன் செய்வா..அவகிட்டேயே கேட்டுக்கோங்க.” என்று பதில் அளித்த போது சினேகாவின் கைப்பேசி ஒலித்தது.

ஷிக்கவின் அழைப்பை ஏற்றவுடன், ‘துக்கான் மே தோ லோக் ஆயா..லெஹங்கா லேனா ஹே போலா…மதராஸி ஆன்ட்டி’ என்று கடைக்கு வந்திருக்கும் கஸ்டமர்களைப் பற்றி கர்ணகடூரமான ஹிந்தியில் விவரிக்க, அதைக் கேட்க முடியாமல் சினேகா அவளது காதை பொத்திக் கொள்ளும் முன் ‘மதராஸி ஆன்ட்டி’ என்ற  வார்த்தை சினேகாவின் மண்டையில் போய் அமர, டக்கென்று எழுந்து, வேகமாக சென்று, லேசாக திறந்திருந்த கதவை அகலத் திறந்து, கடையில் இருந்தவர்களைக் கண்டதும் அவளது கண்கள் விரிய, உதட்டில் புன்னகை மலர, சினேகலதா ஆனந்தலதாவாக மாறிய நொடி,“சினேகா, வா டீ உள்ளே.” என்று மகளை அதட்டி வீட்டிற்குள் அழைத்தார் ஜோதி. 

அப்போது தான் அவளது அரைகுறை உடையை உணர்ந்தவள், வீட்டினுள் திரும்பிச் செல்ல, சென்ற வேகத்திலேயே திரும்பி வர, ஷார்ட்ஸ் மீது டிராக்ஸ் இருந்தது ஷண்முகவேலின் வேல் விழிகளிருந்து தப்பவில்லை. ‘பழைய கணக்கைப் பைசல் செய்யறத்துக்கு முன்னே புதுக் கணக்கை ஆரம்பிச்சு இவ்வளவு ஈஸியா போலீஸ்காரனை குற்றவாளி ஆக்கிட்டாளே.’ என்று தன்னுணர்வு இழந்து சினேகா செய்த செயலை மனத்தினுள் விமர்சனம் செய்தவன், அவனுடைய அம்மாவின் கண்களில் மீண்டும் அம்முக்கள்ளனாகிப் (Thievish person, dissembling rogue; அயோக்கியன்) போனானோ என்ற அச்சத்தில் அவனது முழுக் கவனத்தையும் கைப்பேசிக்குக் கடன் கொடுத்தான் காவலன்.

Advertisement