Advertisement

அத்தியாயம் – 22

கடையின் வாசலை பெருக்கி விட்டு, வெளியே இருந்த விளக்கை போட்டு, கண்ணாடிக் கதவைச் சாத்திக் கொண்டு கையில் துடைப்பத்துடன் உள்ளே சென்றார் ஜோதி. வீட்டுக்கு செல்லும் கதவைத் திறந்து அதற்குப் பின்னால் துடைப்பத்தை வைத்து விட்டு வரவேற்பறை விளக்கை ஒளிர விட்டு, கதவைச் சாத்தி விட்டு கல்லாவில் வந்தமர்ந்து கொண்டார். சில நிமிடங்கள் கழித்து கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே வந்த சிறுமி ஒருத்தி,

“ஆன்ட்டி, புது பால்காரன் வந்திருக்கான்..பால் வேணுமான்னு அம்மா கேட்கறாங்க.” என்றாள்

“வேணாம் டா..இன்னும் ஷிக்கா தீதி ஊர்லேர்ந்து வரலை..வந்ததும் அவளே ஃபோன் செய்வான்னு உங்கம்மாகிட்டே சொல்லிடு.” என்று அவளை அனுப்பி வைத்தார் ஜோதி.

‘பெத்த அப்பன் பால் பண்ணைலே வேலை செய்யறான்..அம்மாகாரியான சத்தான, சுத்தமான பால்னு இப்படி ஒவ்வொரு பால்காரன் பால்காரனா மாத்தி மாத்தி கொடுத்தும் என் பேரனுக்கு எந்தச் சத்தும் சரியாப் போய் சேர மாட்டேங்குதே. நம்ம பிள்ளைங்க இரண்டும் கரந்த பால் குடிச்சா வளர்ந்தாங்க? பேக்கெட் பால் தானே குடிச்சாங்க. இன்னும் ஒரு வருஷம் போகட்டும் பேக்கெட் பால்க்கு மாத்திட சொல்லணும்..பிள்ளையை வைச்சு இப்படி ஆராய்ச்சி செய்திட்டு இருக்கா..மனோவும் வாயை மூடிட்டு இருக்கான்..அப்புறம் ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடறான்..டயமுக்கு எல்லாம் கொடுத்தா பிள்ளையும் ஆரோக்கியமா இருக்கும்..அதைச் சொன்னா,’இங்கே எதுவும் டயமுக்கு நடக்கறதில்லைன்னு தெரியுதில்லே..அப்புறம் எதுக்கு அதையே சொல்லி காட்டிட்டு இருக்கீங்க..நீங்களே அதைச் சரி செய்யலாமே.’ என்று பிள்ளை வளர்ப்பையும் அவர் தலையில் கட்டி விடுவான் மனோகர் என்பதால் இப்போதெல்லாம் வாய் வரை வந்ததை அப்படியே முழுங்கி விடுகிறார் ஜோதி. சினேகாவின் திருமணம் முடிந்ததும் மகனுடன் தான் நிரந்தரமாக இருக்கப் போவதால் அப்போது எப்படியும் அவர் தானே இதையெல்லாம் செய்ய வேண்டுமென்பதால் மகன், மருமகள் வாழ்க்கையில் தலையிடாமல் ஒதுங்கி இருக்கிறார்.

இப்போது கூட அவரிடம் முன்கூட்டியே தகவல் சொல்லாமல் திடீரென்று ஒரு வாரத்திற்கு அவளுடைய பெற்றோருடன் அவர்களின் சொந்த ஊரான சங்க்ரூக்கு சென்றிருக்கிறாள் ஷிக்கா. அப்படியே அங்கேயிருந்து பட்டியாலாவிற்கு சென்று ஒரு வேண்டுதலை முடித்துக் கொண்டு வர திட்டமிட்டிருந்தாள். இதையெல்லாம் கடைசி நிமிடத்தில் பகிர்ந்து கொண்டு, கடையைப் பார்த்துக் கொள்ள அவர்களை வீட்டோடு இருக்க அழைப்பு விடுத்திருந்தான் மனோகர். ஒரு வாரம் போல் அவனுக்கு விடுப்பு கிடைக்காதென்பதால் மூன்று நாள்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு நேற்றிரவு கிளம்பிச் சென்றிருந்தான் மனோகர். ஷிக்கா புறப்பட்டு சென்ற பின் இரண்டு நாள்களுக்கு கடையைத் திறக்கவில்லை. இரவு ஷிஃப்ட்டில் வேலை செய்தாலும் பகலில் கடையைத் திறந்து வைக்க மனோகரால் முடியவில்லை. சினேகா அலுவலகம் செல்ல வேண்டி இருந்ததால் அவர்களாலும் இங்கே வந்து தங்க முடியவில்லை. ஒரு வாரம் போல் கடையைத் திறக்காமல் இருந்தால் மொத்தமாக இழுத்து மூட வேண்டியது தான் என்று ஷிக்கா மனோகரை கோபித்துக் கொண்டதால் நேற்று இரவே அவர்களை இங்கே வரவழைத்து விட்டு வீடு, கடை இரண்டையும் ஒப்படைத்து விட்டு புறப்பட்டு போய் விட்டான். இன்று காலை கூட அவர்களால் கடையைத் திறக்க முடியவில்லை. ‘நாங்க தனியா இருக்கும் போது என்ன ரூலோ அதே தான் உங்களுக்கும்..நான் வந்த பிறகு திறந்துக்கலாம்.” என்று ஜோதிக்கு கட்டளையிட்டு விட்டு அலுவலகத்திற்குச் சென்று விட்டாள் சினேகா.

மதியம் போல் திரும்பி வந்தவள் களைப்பு மிகுதியால் சாப்பாடு வேண்டாமென்று சொல்லி  விட்டு உறங்கச் சென்றவள் தான். இப்போது மாலை ஆறு மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை. ‘விளக்கு போடற நேர்த்திலே தூங்கிட்டு இருக்கா.’ என்று மனத்திற்குள் மகளை அர்ச்சனை செய்தவர்க்கு தெரியவில்லை வரவேற்பறை விளக்கை அவர் போட்டதுமே அவள் விழித்து விட்டாள், வரவேற்பறையில் அமர்ந்து அவளது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறாளென்று.

நவராத்திரி நெருங்கி விட்டதால், இரண்டு நாள்களாக கடை மூடியிருந்ததால் இரவு ஒன்பதரை மணி வரை கடையைத் திறந்து வைக்கச் சொல்லியிருந்தான் மனோகர். ஜோதிக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும் வேறு வழியில்லாம் அதற்கு ஒப்புக் கொண்டார். வழக்கமாக கோவில் மூடியதும் கால் மணி நேரம் கழித்து கடையை மூடி விடுவார்கள். அவர்களின் கடை பிரதான சாலையில் இருந்த குடியிருப்பில் இருந்தாலும், இக்கட்டான சூழ்நிலையில் யாருடையை உதவியையும் எதிர்பார்க்க முடியாதென்பதால், பத்து நிமிடம் கூட தாமதிக்காமல் கடையை நேரத்திற்கு அடைத்து விடுவது தான் வழக்கம். அந்த வகையில் ஷிக்கா மிகவும் கவனமாக இருப்பாள். யாருக்காவும் எதற்காகவும் கடையைத் திறந்து வைத்திருக்க மாட்டாள்.’நாளைக்கு வந்து வாங்கிட்டுப் போங்க பாபி..முடியாதுன்னா காசை ஃபோன்லே அனுப்பி விடுங்க பார்சலை கடை வாசல்லே வைச்சிடறேன்..உங்களுக்கு சௌகர்யப்படும் போது என்னைத் தொந்தரவு செய்யாம எடுத்திட்டுப் போயிடுங்க.’ என்று முகத்தில் அடித்தார் போல் பதில் கொடுத்து வாயை அடைத்து விடுவாள்.

‘ம்ம்..அந்தச் சாமர்த்தியம் எல்லா நேரத்திலேயும் எல்லா விஷயத்திலேயும் இருந்தா நல்லா இருக்கும்.’ என்று மருமகளை நினைத்து பெருமூச்சு விட்டார் ஜோதி.

அப்போது கடையினுள் நுழைந்தான் ஓர் இளைஞன். இது போல் தனியாக வரும் நபரிடம் ஜாக்கிரதையாக  இருக்க வேண்டுமென்பதால் வீட்டிற்குச் செல்லும் கதவு முழுவதுமாக மூடியிருக்கிறதா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு கௌண்டர் மீதிருந்த அவருடைய கைப்பேசியை கையில் வைத்துக் கொண்டார் ஜோதி.

“ஹான் ஜி.” என்று ஜோதி சொன்னவுடன், சூட் மெட்டீரியல் பார்க்க வேண்டுமென்றான் அந்த இளைஞன்.

என்ன் விலையில் என்று விசாரித்து பின்பு எந்த எந்த நிறத்தில் என்று கேட்டுக் கொண்டு அதன்படி சிலவற்றை எடுத்துப் போட்டார் ஜோதி. அவனுடைய கைப்பேசியை உயிர்ப்பித்து அழைப்பு விடுத்தவன் கௌண்டர் மீதிருந்த செட்டுக்களை அந்தப் புறத்தில் இருந்தவருக்கு காட்டிக் கொண்டிருந்தான். அவன் இயர் ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததால் அந்தப் புறத்திலிருந்து பேசியது ஜோதிக்கு கேட்கவில்லை. இந்தப் புறத்திலிருந்து இவன் சொன்னது கொஞ்சம் போல் தான் அவருக்குப் புரிந்தது. ஹிந்தி உரையாடலில் வந்த சில வார்த்தைகள் அவருடைய அகராதியில் இல்லை என்பதால் அந்த உரையாடல் அவருக்குப் புரியவில்லை. சினேகாவிற்கு ஃபோன் செய்து அவளை எழுப்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது கடையின் கதவைத் திறந்து உள்ளே வந்தனர் விஜயாவும் ஷண்முகமும்.

ஜோதியைப் பார்த்தவுடன் சினேகாவின் அம்மாவாக தான் இருக்க வேண்டுமென்று சரியாக யுகித்திருந்தனர் இருவரும். வேறொரு வாடிக்கையாளர் கடையில் இருந்ததால் எப்படி உரையாடலை ஆரம்பிப்பது என்று விஜயாவிற்குப் புரியவில்லை. இரண்டு நாள்களாக தொடர்ந்து கோவிலுக்கும் கடைக்கும் வந்து போகிறார்கள். கோவிலில் நல்ல தரிசனம் அமைந்தாலும் கடை மூடியிருந்ததால் சினேகாவைச் சந்திக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரிக்காலாமென்ற அவரது ஆலோசனையைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை ஷண்முகம். ‘தொடர்ந்து போக வேணாம் சாமி..ஒரு நாள் விட்டிட்டு அடுத்த நாள் போகலாம்..அவங்க வீட்டுப் பிள்ளைக்கு திரும்ப உடம்பு சரியில்லையோ என்னவோ.’ என்ற விஜயாவின் அனுமானத்தைப் புறக்கணித்து, கடந்த இரண்டு நாள்களாக அவனுக்கு அலுவலகத்தில் வேலை இருந்ததால் மாலையில் வீடு திரும்பியதும் அம்மாவை புது சுடிதார் போட வைத்து கோவிலுக்கு அழைத்து வந்தவன் அப்படியே கடைக்கும் அழைத்துச் வந்தான். இன்று கடை திறந்திருக்க, அவனது தொடர் முயற்சி வெற்றியடந்ததில் லேசான சந்தோஷம் உண்டானது.

தனியாக அந்த இளைஞனைச் சமாளித்துக் கொண்டிருந்த ஜோதிக்கு விஜயா, ஷண்முகம் இருவரையும் பார்த்து ஆசுவாசம் ஏற்பட்டது. விஜயாவைப் பார்த்ததுமே அவர் தமிழ் என்று தெரிந்ததால், தமிழில்

“வணக்கம்மா..என்ன பார்க்கறீங்க?” என்று மெலிதான சிரிப்போடு விஜயாவை வரவேற்றார் ஜோதி.

அவருக்கு என்ன பதில் கொடுப்பதென்ற குழப்பத்தில் வார்த்தை வராததால் ஜோதியைப் போலவே மெலிதாகப் புன்னகைத்தார் விஜயா. கடையில் ஜோதியைத் தவிர யாருமில்லை என்றவுடன் லேசான சந்தோஷம் மொத்தமாக காணாமல் போக, அது வெளியில் தெரியாமல்,”ஒரு மாசம் முன்னாடி எங்கம்மா உங்க கடைலே ஒரு லெஹங்கா செட் வாங்கினாங்க..இப்போ அதே போல கிடைக்குமா.” என்று ஜோதியிடம் வியாபாரம் பேசினான் ஷண்முகம். 

அந்த அவகாசத்தில் அவரை நிதானப்படுத்திக் கொண்ட விஜயா,”உங்க மக தான் அந்த செட்டை எடுத்துக் கொடுத்தா..என்னோட அண்ணன் பையன் அவனோட மனைவிக்கு வாங்கிட்டுப் போனான்..அவன் சென்னைலே இருக்கான்..அங்கே அவளோட சினேகிதீங்க சில பேர் அதே போல வேணும்னு கேட்கறாங்க..இதுதான் அந்த லெஹங்கா செட்.” என்று பின்னணியைப் பகிர்ந்து கொண்டு அவரது கைப்பேசியில் இருந்த புகைப்படத்தை ஜோதியிடம் காட்டினார் விஜயா. அதைக் கையில் வாங்கிப் பார்த்தார் ஜோதி.

Advertisement