Advertisement

அத்தியாயம் – 21-1

“கொஞ்ச நாள், கொஞ்ச நாள்னு நிறைய நாள் ஆகிடுச்சு விஜயாம்மா..இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா தில்லிலே குளிர் பிச்சிட்டுப் போகும்..அப்போ எப்படியும் சென்னைக்கு பறந்து வரத் தான் போறீங்க.” என்று கேலி செய்தாள் நித்யா.

“அப்படி எதுவும் நடக்காது..இங்கே இருக்கறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா? வெய்யிலைச் சமாளிக்கற மாதிரி குளிரையும் சமாளிக்கக் கத்துக்க வேண்டியது தான்.” என்று தைரியமாகப் பதிலளித்தார் விஜயா.

“வெய்யிலைச் சமாளிக்கறது தான் கஷ்டம்..குளிரைச் சமாளிக்க ஸுவட்டர், க்ளௌஸ், ஸாக்ஸ், ஷால், குல்லான்னு  எக்கச்சக்க சாமான் இருக்கு..ஸீஸன் ஆரம்பிக்கறத்துக்கு முன்னாடி அந்தத் தமிழ் கடைக்கு அழைச்சிட்டுப் போய் உங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்கறேன் ம்மா.” என்றான் ஷண்முகம்.

“அண்ணா, எனக்கு லெஹங்கா வாங்கின கடையை தானே தமிழ்க் கடைன்னு சொல்றீங்க?” என்று கேட்டாள் நித்யா.

“ஆமாம் ம்மா..அவங்க எல்லா ஸீஸனுக்கு தகுந்தபடி விற்பனை செய்வாங்க..இங்கே எல்லாக் கடைகளும் அப்படித் தான்..வெய்யில் காலத்திலே கூலர், ஏசின்னு வித்திட்டு இருக்கறவங்க குளிர்க்காலத்திலே ஆயில் ஹீட்டர், குவாட்ஸ் ஹீட்டர், ரிஃப்லெக்டர்னு வித்திட்டு இருப்பாங்க..சாப்பாடுலேர்ந்து சகலமும் வேற தான் கிடைக்கும்..துணியும் அப்படித் தான்..கரம் சூட் துணிலே அம்மா சூட் தைச்சுப் போட்டுக்கிட்டா குளிர்க்காலத்திலே கம்ஃபர்டபிலா ஃபீல் பண்ணுவாங்க.” என்றான் ஷண்முகம்.

“இப்போ தைச்சு வந்ததையே இன்னும் எங்களுக்குப் போட்டுக் காட்டலை அண்ணா.” என்று கம்ப்ளேண்ட் செய்தாள் நித்யா.

அதைக் கேட்டு,”இன்னும் ஒரு செட் கூட போட்டுக்கலையா? ஏன் ம்மா?” என்று ஆச்சரியப்பட்டான் ஷண்முகம்.

“நல்லா கேளுங்க அண்ணா..பிராகஷ் சென்னைக்கு வந்த அன்னைக்கே என்னோட லெஹங்காவை அன்னைக்கே போட்டுக்கிட்டு  ஒரு பார்ட்டிக்கு போனேன்..’எங்கே வாங்கின நித்தூ..எங்களுக்கும் வாங்கிக் கொடுன்னு நிறைய பேர் கேட்டிட்டு இருக்காங்க..அதை விஜயாம்மாகிட்டே சொல்லி சொல்லி எனக்கு உதவி செய்யுங்கண்ணு கேட்டு கேட்டு சலிப்பாகிடுச்சு..எல்லாம் சென்னைலேயே கிடைக்கும்னு சொல்லி தப்பிச்சுக்ககறாங்க..இங்கே கிடைச்சாலும் தில்லிலே வாங்கினேன்னு சொல்றது ஒரு பெருமை தானே..அதுக்காகவே பிரகாஷைத் திரும்ப தில்லிக்கு அனுப்பலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றாள் நித்யா.

“இப்போவும் அதையே தான் சொல்றேன்..சென்னைலே இல்லாத கடையா? அங்கேயே வாங்கிப் போட்டுக்க சொல்லு..இங்கேயிருந்து வாங்கிட்டுப் போய் இது சரியில்லை அது சரியில்லைன்னு சொன்னா உனக்கு தான் மனசு கஷ்டமாகிடும்..உனக்கு வாங்கிக் கொடுத்தது வேற..பிரகாஷ் இருந்தான்..நீயும் ஃபோன்லேயே எந்தக் கலர், டிசைன்னு பார்த்து செலெக்ட் செய்த..அதான் உனக்குப் பிடிச்ச மாதிரி அமைஞ்சது..எல்லோருக்கும் அப்படி அமையும்னு சொல்ல முடியாது..பிரகாஷே அந்தக் கடை வேணாம்னு சொல்லிட்டான்..எதுக்கு அந்தக் கடைலே தான் வாங்கணும்னு நீ பிடிவாதமா இருக்க? ஆன்லைன்லே அந்த மாதிரி கிடைக்குது அத்தே அதிலே வாங்கிக்க சொல்லி நித்யாகிட்டே சொல்றேன்னு பிரகாஷ் என்கிடே சொன்னான்.” என்ற விஜயா பெரிய விளக்கத்தில் பிரகாஷின் பெயர் வந்தவுடன் உண்மை காரணயென்ன என்று ஷண்முகத்திற்குப் புரிந்து போனது.

அந்தப் பெண்ணனைச் சந்திக்க அம்மாவிற்கு விருப்பமில்லை. அதைத் தவிர்க்க தான் ஏகப்பட்ட காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார் என்று புரிந்தது. அதே சமயம் அன்று நடந்த விஷயம் அனைத்தும் அவனுக்குத் தெரியுமென்று பிரகாஷ் அவரிடம் சொல்லவில்லை என்று புரிய, யோசனையாக அம்மாவைப் பார்த்தவன், கைப்பேசியில் காத்திருந்த நித்யாவிடம்,

“அந்தக் கடைலே தானே உனக்கு வாங்கணும்..வாங்கிடலாம் நித்யா..கவலையை விடு.” என்று கியாரண்ட்டி கொடுத்து, அவளது நன்றியைப் பெற்றுக் கொண்டு அழைப்பைத் துண்டித்தான் ஷண்முகம்.

ஏன் அந்தக் கடைக்கு போக பிடிக்கவில்லை என்று எப்படி மகனிடம் சொல்வது என்று தயங்கிய விஜயா, மெல்லியக் குரலில்.”சாமி, என்ன சொன்னாலும் நித்யா பிடிவாதமா இருக்கா..இப்போ நீங்களும் அவளைப் போல பிடிவாதம் பிடிக்கறீங்க..அங்கே வேணாம் சாமி..வேற கடைக்குப் போகலாம்.” என்றார் விஜயா.

“எப்படி வேற கடைக்குப் போக முடியும்? அங்கே தானே நீங்க சுடிதார் துணி வாங்கினீங்க..அவங்ககிட்டே தானே தைச்சுக்கிட்டீங்க..’உங்களுக்கு சுடிதார் சூப்பரா இருக்கும்னு’ அந்தப் பொண்ணு சொன்ன போது,’இப்போ சொல்லாதே நான் போட்டிட்டு வந்து காட்டறேன் அப்போ சொல்லுன்னு சொன்னீங்க தானே..சுடிதார் வாங்கிட்டு வந்து ஒரு மாசமாகிடுச்சு..இன்னும் அதை ஒருமுறை கூட போட்டுக்கலை..ஏன் ம்மா?” என்று கேட்டான் ஷண்முகம்.

“எனக்குப் பிடிக்கலை சாமி.” என்று மொட்டையாக பதிலளித்தார் விஜயா.

ஒருவேளை தைத்து வந்த சுடிதார் பிடிக்கவில்லையோ என்று நினைத்து,”உங்களுக்குப் பிடிச்சு தானே துணி எடுத்தோம்..அதைத் தானே தைக்க கொடுத்தோம்..இப்போ வந்து பிடிக்கலைன்னு சொல்றீங்க..அதைக் கொண்டிட்டு வாங்க..எப்படி தைச்சிருக்காங்க, ஏன் உங்களுக்குப் பிடிக்கலைன்னு நான் பார்க்கறேன்.” என்று சொல்லி விட்டு சோஃபாவில் அமர்ந்தான் ஷண்முகம்.

அவருடைய படுக்கையறைக்குச் செல்லாமல் அங்கேயே சில நொடிகளுக்கு அமைதியாக நின்றிருந்த விஜயாவைப் பார்த்தவன், அவன் யுகித்த காரணம் சரியென்று புரிய, அதை அவரது வாயிலிருந்து வரவழைக்க,”இங்கே வாங்க.” என்று அழைத்து அவன் பக்கத்தில் அவரை அமர வைத்த ஷண்முகம்,”என்ன உங்களுக்கு பிடிக்கலை?” என்று கேட்டான்.

அவனுக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார் விஜயா. சில நொடிகள் பொறுத்தவன்,”இத்தனை நாள் புடவை உடுத்திட்டு திடீர்னு பழக்கமில்லாத உடையை போட்டுக்கிட்டா கொஞ்சம் அசௌகர்யமா தான் இருக்கும் ம்மா..முதல்லே வீட்லே போட்டுக்கோங்க..அப்புறமா வெளிலே போட்டிட்டு போங்க..உடுத்திக்காமலேயே பிடிக்கலைன்னு சொல்லாதீங்க..ஒருமுறையாவது உடுத்திப் பாருங்க ம்மா..தில்லிக்கு வரேன்னு முடிவு எடுத்திட்டு இங்கே வராமலேயே இந்த ஊர் உங்களுக்கு ஒத்து வராது, உங்களாலே இங்கே பொருந்திப் போக முடியாதுன்னு எவ்வளவு காரணம் சொல்லி சென்னைலே இருக்கப் பார்த்தீங்க..இப்போ இந்த ஊர், நம்ம வீடு எல்லாம் பழகிப் போயிடிச்சுயில்லே..

ஆரம்பத்திலே நமக்கு தெரியாதது, புரியாதது எல்லாமே வித்தியாசமா தான் தெரியும் ம்மா அப்புறம் பழகிப் போயிடும்..எனக்கு கூட உங்களை இங்கே அழைச்சிட்டு வர முடிவு செய்த போது எப்படிச் சமாளிப்பேன்னு  யோசனையா இருந்திச்சு..இப்போவும் இருக்கு..உங்களுக்கு பாஷை தெரியாது..தெரிஞ்ச ஆளுங்கண்னு யாரும் பக்கத்திலே கிடையாது..எனக்குச் சாதகமா ஒண்ணு கூட இல்லைன்னாலும் உங்களை இங்கே அழைச்சிட்டு வரணும்னு எடுத்த முடிவிலிருந்து நான் மாறலை..இந்த வீட்டை செட் செய்த போது பயமா தான் இருந்திச்சு..இப்போவும் இருக்கு..ஆனா அதை விட இது நம்ம வீடுங்கற உணர்வு பெரிசா இருக்கு..எங்கேயாவது சின்னதா ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது கூட வீட்டுக்கு ஓடி வந்திடறேன்..இதை முன்னாடியே செய்திருக்கணும், பெரியம்மா, மாமா வீட்லே உங்களை விடாம என்னோட அழைச்சிட்டு வந்திருக்கணும்னு இப்போ தோணுது ம்மா.” என்று உடையில் ஆரம்பித்து அவனது உள்ளம் உணர்வதில் கொண்டு போய் முடித்தான்.

மகனது மனத்தில் இருப்பதை கேட்டு விஜயாவின் கண்களிருந்து தொடர்ந்து கண்ணீர் கசிய, மகனது உள்ளத்தில் இருந்ததை கேட்டபின் அவர் உணர்வதை வெளியிட அதுவே போதுமானதாக இருந்தது. அம்மாவின் கைகளை அழுந்தப் பற்றி அவருக்கு ஆறுதல் அளித்தவன் அப்படியே மேஜை மீது பரப்பியிருந்த பொருள்களில் அவனது ஸுவிஸ் ஆர்மி கத்தியை காட்டி,”பாருங்க..தேவைப்படற நேரத்திலே கர்சீப்பைக் காணும்..கத்தி தான் கண்ணுலே படுது..இனி ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் அவ்வளவு தான்..ஜாக்கிரதை.” என்று  விளையாட்டாக மிரட்டினான் ஷண்முகம்.  

கன்னத்தில் வழிந்த கண்ணீரை அவரது புடவைத் தலைப்பால் துடைத்தபடி,”நீ சொன்னது நூத்துக்கு நூறு உண்மை சாமி..இவ்வளவு வருஷமா அக்கா, அண்ணன் குடும்பத்தோட இருந்திட்டு இங்கே தனியா உன்னோட இருக்க முதல்லே கஷ்டமா தான் இருந்திச்சு..இப்போ அப்படியில்லை..பழகிப் போயிடுச்சு..பிடிச்சும் போயிடுச்சு..எனக்கு கூட ஆச்சரியமா தான் இருக்கு சாமி.” என்றார் விஜயா.

அவன் எதிர்பார்த்தது இன்னும் அவரது வாயிலிருந்து வரவில்லை என்பதால்,“அப்போ சுடிதாரைப் போட்டிட்டுக் கிளம்புங்க..நானும் ஃப்ரேஷாகிட்டு வரேன்..அந்தக் கடைக்குப் போய் நித்யா கேட்கறது இருக்கான்னு பார்க்கலாம்.” என்று தூண்டில் போட்டான் ஷண்முகம்.

சில நொடிகள் கழித்து,”எனக்குப் பிடிக்கலை சாமி.” என்று மீண்டும் அதே பல்லவியைப் பாடினார் விஜயா.

“முதல் தடவை அப்படித் தான் இருக்கும் ம்மா..அப்புறம் பழகிப் போயிடும்..பிடிச்சுப் போயிடும்.” என்று ஷண்முகமும அவரைப் போலவே அதே பல்லவியைப் பாடினான்.

ஏன்யென்று காரணம் சொல்லாமல்,”அந்தக் கடை வேணாம் சாமி..எனக்குப் பிடிக்கலை.” என்று அந்த உரையாடலை முடிக்க நினைத்தார் விஜயா.

அவர் காரணத்தை சொல்லவில்லை என்றாலும் அதுயென்ன என்று தெரிந்திருந்ததால்,”அந்தப் பொண்ணு சொன்னதிலே கொஞ்சம் போல உண்மை இருக்கு ம்மா.” என்று சொல்லி விஜயாவிற்கு அதிர்ச்சி கொடுத்தான் ஷண்முகம்.

சினேகா சொன்னது எப்படி மகனுக்கு தெரிய வந்தது என்று புரியாமல்,“சாமி, என்ன சொல்றீங்க?” என்று கேட்க,

“அன்னைக்கு அந்தப் பொண்ணு என்னைப் பற்றி என்ன சொன்னான்னு பிரகாஷ் என்கிட்டே சொல்லிட்டான். அவளைக் காட்டுன்னு நான் கேட்கலை பிரகாஷ் தான் கேமராவை மாற்றி அவளை எனக்குக் காட்டினான்..ஆனா முதல் நாள் கடைக்குள்ளே வந்த போது அந்தப் பொண்ணை வைச்ச கண்ணு எடுக்காம பார்த்தேன்..அவ எதையோ தேட்டிட்டு இருந்ததாலே நான் பார்த்தது தெரியலை..அவ போட்டிட்டு இருந்த டிரெஸ், ஜம்ப்ஸுட் என்னை பார்க்க வைச்சது.” என்றான்.

அதற்கு விஜயாவிடமிருந்து எதிர்வினை எதுவுமில்லை என்றாலும் அதைப் பொருட்படுத்தாமல்,”அந்தப் பொண்ணு ஸுவிம்மிங் போகுதுன்னு நினைக்கறேன் ம்மா..முழுங்கை, முகமெல்லாம் கருத்துப் போயிருந்திச்சு..தண்ணீர்லே சேர்க்கற க்ளோரின்னாலே சில பேருக்கு அந்த மாதிரி ஆகும்.” என்றான்.

அதற்கு விஜயாவிடம் எந்த எதிர்வினையும் இல்லை. அவரது தோளைப் பற்றி அவன் புறம் அவரது முகத்தைத் திருப்பியவன்,”அவளைத் தப்பாப் பார்க்கலை..ஆனா..” என்றவனின் வாக்கியத்தை முடிக்க விடாமல் அவனது வாயை அவரது கைகளால் பொத்தி,”என் பையனைப் பற்றி எனக்குத் தெரியும் சாமி.” என்றார் விஜயா.

“அப்போ போய் புது சுடிதாரைப் போட்டிட்டு வாங்க..கோவிலுக்கு போயிட்டு அப்படியே அந்தக் கடைக்கும் போயிட்டு வரலாம்.” என்றான் ஷண்முகம்.

அதற்கு, யோசனையான முகத்தோடு,”புதுசு போட்டிட்டு போயிட்டு அந்தப் பொண்ணு கடைலே இல்லைன்னா என்ன செய்யறது சாமி?” என்று கேட்டார் விஜயா.

“இன்னொரு நாள் போவோம்..ஆறு செட் இருக்குயில்லே ஆறு முறை முயற்சி செய்வோம்.” என்றான் ஆறுமுகம்.

*****

வெளி வேலை, அலைச்சல்னு தினமும் நேரம் போயிடுது. கதை பக்கம் வர நேரம் கிடைப்பதில்லை. அடுத்து வரும் மாதங்களும் இப்படித் தான் இருக்கும் என்பதால் கதையைத் தளத்திலிருந்து நீக்கிட்டு, திரும்ப வரும் போது ஆரம்பத்திலிருந்து பதிவேற்றம் செய்யலாம்னு முடிவு செய்திருக்கேன். சைட்லே கதை இருந்தா அதைப் பார்க்கும் போதெல்லாம் எழுதி முடிக்கணும்னு எண்ணம் வரும். அது எனக்குமே stress கொடுக்கும். இருபத்தியோரம் பதிவு கொஞ்சம் போல எழுதி வைச்சிருந்தேன் இன்னைக்கு முழுசா எழுதி முடிச்சு பதிவேற்றம் செய்திட்டேன். 

Thanks for the support readers.  Stay blessed.

Advertisement