Advertisement

அத்தியாயம் – 21

பிரகாஷின் தில்லி விஜயம் நடந்து கிட்டதட்ட ஒரு மாதமாகி இருந்தது. அந்த விஜயத்திற்குப் பின் பிரகாஷின் சொல்வளத்திலிருந்து போலீஸ்க்காரன் என்ற வார்த்தை நிரந்தரமாகக் காணாமல் போயிருந்தது. அதே சமயம் அந்த ஒரு மாதத்தில் மகன் மீது சினேகாவிற்கு ஏற்பட்ட தவறான அபிப்பிராயமானது அவள் மீது தவறான அபிப்பிராயத்தை விஜயாவின் மனத்தில் ஏற்படுத்தியிருந்தது. பெரிய படிப்பு முடித்து கௌரவமான உத்யோகத்தில் இருக்கும் அவரது மகனைப் பற்றி எப்படி அப்படி நினைக்கலாமென்று ஆதங்கம், கோபம் கொண்டதால் தைத்து வந்த சுடிதார் செட்டை அலமாரியில் வைத்ததோடு சரி அதன் பின் அந்தப் புறம் பார்வையைத் திருப்பவேயில்லை. 

அந்த ஒரு மாதத்தில் அலுவலக பணி காரணமாக முக்கால்வாசி நாள்களை தில்லியின் வேறொரு பகுதியில் கழித்ததால், அம்மாவுடன் செலவழிக்க நேரமில்லாததால் சினேகா மீது அவருக்கு இருந்த வருத்தம், கோபம் ஷண்முகத்திற்குத் தெரிய வரவில்லை. தில்லியில் வீடு இருந்தாலும் வீட்டில் இருக்கும் கொடுப்பினை ஷண்முகத்திற்குக் கிட்டவில்லை. வடகிழக்குப் பகுதியிலிருந்து தலை நகருக்கு வேலையை மாற்றிக் கொண்டு வந்திருக்க அங்கே அவன் செய்து கொண்டிருந்த வேலையும் அவனைப் போலவே தில்லிக்கு குடியேறியிருந்தது. அந்த வேலையைச் செய்ய இங்கே புதுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அவனை விட அனுபவசாலிகள் பலர் அந்தக் குழுவில் இருந்தாலும் அவனுடைய அனுபவத்திற்காக அவனை உள்ளே இழுத்துக் கொண்டு விட்டனர். இது அவன் முற்றிலும் எதிர்பார்க்காதது. ஒரு மணி நேரப் பயணத்தில் வீடு இருக்க, அங்கே அம்மாவும் இருக்க, அவரோடு நேரம் செலவிட முடியாத அவனது நிலையை நினைத்து, கோபத்தில் ஆரம்பமான உணர்வுகள் ஏக்கத்தில் போய் முடிந்தன.

இந்தப் புது வேலை புது புது பரிமாணம் எடுத்துக் கொண்டிருந்ததால் அவனது பங்கேற்பும் நாளுக்கு நாள் ஆழமாகி அதிகமாகிக் கொண்டிருந்ததால் அம்மாவை சென்னைக்கு அனுப்பி விடலாமென்று கூட சமீபக் காலமாக யோசிக்க ஆரம்பித்திருந்தான். அதே சமயம் பிரகாஷ் வந்து போனதிலிருந்து, அம்மாவைப் பற்றி அவன் சொன்னவைகளைக் கேட்டதிலிருந்து இனி எப்போதும் அம்மாவை அவனுடனேயே வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை தோன்றியிருந்தது. அதற்கு,’இந்த வேலைலே இருக்கறவரை அவங்களை உன் வீட்லே வைச்சுக்கிட்டாலும் உன்னாலே அவங்களோட இருக்க முடியாது..நேரம் கிடைக்கற போது விருந்தாளி மாதிரி கொஞ்ச நேரத்துக்கு இல்லை சில நாள்களுக்கு வீட்டுக்குப் போயிட்டு வரத் தான் முடியும்..அவங்க கூடவே இருக்கணும்னா அதுக்கு இன்னும் பத்து வருஷம் போகணும்..அப்போ உனக்கு ஓர் இடத்திலே உட்கார்ந்து வேலை செய்யற மாதிரி பதவி உயர்வு கிடைச்சிருக்கும்..ஆனா இந்த வேலையை தொடர்ந்து செய்திட்டு இருந்தா பத்து வருஷம் கழிச்சு நீ இருப்பேன்னு நீயே கியாரண்ட்டி கொடுக்க முடியாது அதனாலே இந்த நொடியை நல்லபடியா நடத்திக்க..அடுத்து வர்றதெல்லாம் தானா நல்லபடியா நடக்கும்.’ என்று அவனே அவனுக்கு அறிவுரை, ஆலோசனை என்று பலவிதமாக அவனுடைய நிகழ்கால, எதிர்காலத் திட்டங்களை விமர்சனம் செய்து, கடைசியில், இப்போது அம்மாவுடன் இருக்கும் பொழுதுகளை நல்லபடியாக உபயோகிக்க வேண்டுமென்ற முடிவிற்கு வந்து அதன்படி செயல்படுகிறான். 

அவருடைய மகனது வேலையில் இருக்கும் அபாயங்களை அறியாதவர் இல்லை விஜயா. ஆனால் அதைப் பற்றி யோசிக்க இதுவரை அவருக்கு நேரம், அவகாசம், தனிமை கிடைத்ததில்லை. இப்போது மகனது அருகாமை, அவனது வீட்டில் கிட்டும் தனிமை இரண்டும் அவரது யோசனைகளை மகனின் புறம் திருப்பியிருந்தது. அவனது எதிர்காலம் பற்றிய சஞ்சலம் அவரைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவனது பாதையில் அவனை விட்டிருக்கக் கூடாது. போலீஸ் வேலையைத் தேர்ந்ததெடுத்த போது மறுப்பு தெரிவித்திருக்க வேண்டுமென்று தோன்றியது. அவனைக் கட்டாயப்படுத்தி ஒரு கால்கட்டைப் போட்டிருக்க வேண்டுமென்றும் இப்போது தோன்றியது. 

‘பிரகாஷ் கல்யாணம் நடந்த போதாவது அவனோட கல்யாணத்தைப் பற்றி யோசிச்சு ஏதாவது முயற்சி எடுத்திருக்கணும்..நம்ம காலம் எப்படியோ அக்கா, அண்ணன் வீட்லே ஓடிப் போயிடுச்சு..நமக்குப் பிறகு இவனை யார் கண்டுக்க போறாங்க..நாமளும் தானே இவனை நம்ம கூட வைச்சுக்கலை..அவன் நல்லதுக்கு ஹாஸ்டல் அனுப்பி விட்டது இப்போ வரை தொடர்கதையா மாறிடுச்சு..இனியும் தாமதம் செய்யக் கூடாது..அக்கா, மாமா ஊர்லேர்ந்து வந்த பிறகு அவங்களையும் அழைச்சிட்டு அண்ணன் வீட்டுக்குப் போய் எல்லோருமா சேர்ந்து இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரணும்..பிரகாஷுக்குப் பதிச்சு வைச்ச அதே இடத்திலே இவனோட ஜாதகத்தையும் பதிச்சு வைக்கச் சொல்லணும்..கல்யாணமாகி குடும்பஸ்தனா மாறிட்டா அவனைப் பற்றின தப்பான எண்ணம் வர வாய்ப்பிருக்காது.’ என்று மகனது எதிர்காலத்தைப் பற்றி பலமாக யோசித்து ஒரு முடிவிற்கு வந்தார் விஜயா. கல்யாணம், மனைவி, குடும்பம், குழந்தை என்று எந்த நிகழ்வும் உறவும் ஒரு மனிதனின் நல்லொழுக்கத்தை தீர்மானிக்க முடியாதென்பதை சொந்த அனுபவத்தில் உணர்ந்த பின்னும் மகனின் மரியாதையை, மதிப்பை உயர்த்த, கூடிய விரைவில் அவனிற்குக் கல்யாணம் செய்து விடவேண்டுமென்று திட்டமிட்டார் விஜயா.

கூடிய விரைவில், அதாவது அண்ணனின் மகள் வனிதாவின் திருமணத்திற்கு முன் சினேகாவின் திருமணத்தை முடித்து, காசியப்பனின் கடனை முழுவதுமாக அடைத்து, மிஞ்சி இருக்கும் காலத்தை மன நிம்மதியோடு கழிக்க வேண்டுமென்ற முடிவிற்கு வந்திருந்தார் ஜோதி. அதைப் பிள்ளைகள் இருவருக்கும் மிகத் தெளிவாகத் தெரியப்படுத்தி விட்டார். இதுவரை சினேகாவின் திருமணத்தை ஸீரியஸாக எடுத்துக் கொள்ளாத மனோ கூட இப்போது அண்ணனாக அவனது கடமையை ஆற்றுவதில் ஆர்வம் காட்டினான். திருமணப் பேச்சுக்கள் சினேகாவிற்குப் புதிதில்லையென்றாலும் பழையபடி அம்மாவின் தினசரி புலம்பல்களுக்கு வெடுக்வெடுக்கென்று எதிர்வினை ஆற்றாமல் அதை அமைதியாகக் கடந்து போய் கொண்டிருந்தாள். 

பெற்றோர் பார்க்கும் வரன்கள், திருமணப் பந்தத்தில் முடியும் முன், மாப்பிள்ளை, பெண் இரு குடும்பங்களின் வரலாறில் ஆரம்பித்து, கல்யாணப் பெண், மாப்பிள்ளை இருவரின் தனி சரித்திரம் அலசப்பட்டு, ஜாதகப் பொருத்தத்தை உறுதி செய்து, குடும்பங்கள் சந்தித்து, நேரில் இருவரின் பலம், பலவீனத்தை எடை போட்டு, அதை ஒப்புக் கொண்டு, பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவர்க்கும் ஒரு பிடித்தம் ஏற்பட்டு, புது மனிதர்களுடனான புது உறவு புது விதமான சந்தோஷம், மகிழ்ச்சியோடு ஆரம்பமாகும். இப்படிப் பல கட்டங்களை கடக்கும் போது அதில் எந்தப் படியிலும் சறுக்கி விடலாமென்பதால் ஜோதியின் திருமணப் பேச்சில் கவரப்படாமல் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் புதிதாக கிடைத்திருந்த வேலையில் அவளது உழைப்பை கொட்டிக் கொண்டிருந்தாள் சினேகா. 

அத்தனை உழைப்பிற்கு இடையே அவ்வப்போது விஜயாவும் அவரது மகனும் அவளது சிந்தையில் வலம் வந்து கொண்டிருந்தனர். கடந்து சென்ற ஒரு மாதத்தில் ஷர்மா அங்கிளையும் அவருடைய மனைவியையும் அவர்கள் கடையிலேயே இரண்டு முறை சந்தித்து விட்டாள். அன்று விஜயா ஆன்ட்டியின் மறைமுகமான விளக்கத்திற்கு பின் அவருடைய மகனைப் பற்றி சிந்திக்கவே அவளுக்குத் தயக்கமாக இருந்தது. ‘போலீஸ் தான் ஆனா நாம நினைக்கற போலீஸ் இல்லை’ என்ற கூற்று அவளது மனத்தை குடைந்து கொண்டிருந்தாலும் அந்தக் குறுகுறுப்பை ஒதுக்கி வைக்க கற்றுக் கொண்டிருந்தாள். அன்றைய சூழ்நிலையில் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தையை விட்டது தவறு, நிதானமாக அந்த நிகழ்வைக் கையாண்டிருக்க வேண்டுமென்று காலம் கடந்து அறிவு வந்திருந்தது. 

எனவே, விஜயா ஆண்ட்டியின் ஆலோசனையைப் புறக்கணித்தாள். ஷர்மா அங்கிளிடம் வாயைத் திறக்கவில்லை. மறைமுகமாக கூட ஷண்முகவேலைப் பற்றி விசாரிக்கவில்லை.  ஆனால், ஹோம் மினிஸ்ட்ரியில்  ஷர்மா அங்கிள் இருக்கிறாரென்று அவருடைய ஹோம் மினிஸ்டர் ஷர்மா ஆன்ட்டி அவளுடைய அம்மாவிடம் சொன்னதைக் கேட்டு தொண்டையிலிருந்து அடிவயிறு வரை வெறுமையாக உணர்ந்தாள். ஷண்முகவேலுடன் நடந்த முதல் சந்திப்பு நினைவிற்கு வந்தது. அவளுக்குத் தெரியாமல், அவள் உணராமல் அவளுடைய இடத்தில் அவன் காட்சி அளித்தது எப்படி என்ற கேள்விக்கு விடை கிடைத்தது. ஹோம் மினிஸ்ட்ரியில் வேலை செய்யும் ஆன்ட்டியின் மகன் எந்த விதமான போலீஸ்யென்று அவளுக்குப் புரிந்து போன போது அவனைப் பற்றிய அவளது அபிப்பிராயத்தை அவனிடம் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்று அனைத்து கடவுள்களுக்கும் பலமான வேண்டுதல் வைத்தாள் சினேகா.

கண்களை மூடி கடவுள் படத்தின் முன் நின்றபடி பலமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்த விஜயாவை அழைப்பு மணி சத்தம் வாசலுக்கு அழைத்தது. யாராக இருந்தாலும் காத்திருக்கட்டும் என்ற தீர்மானத்துடன் பிரார்த்தனையை தொடர்ந்தார் விஜயா. சில நொடிகள் கழித்து வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்க, பிரார்த்தனையைப் பாதியில் கைவிட்டு அவசரமாக சமையலறையிலிருந்து வெளியே வந்து பார்க்க, அவர் நினைத்தது போல் அவருடைய மகன் தான்.

அவனது பேக்கெட்டிலிருந்த சாமான்களை வரவேற்பறை நடுவில் இருந்த மேஜை மீது கடை பரப்பிக் கொண்டிருந்த ஷண்முகவேல்,”மணி அடிச்சேன்..ஆளைக் காணும்..வாஷ்ரூம்லே இருக்கீங்கண்ணு நினைச்சு என்னோட சாவி போட்டு நானே திறந்திட்டு வந்திட்டேன்..சமையலறைலேர்ந்து வரீறிங்க.ஆனா வீட்லே எந்த வாசனை வரலை..சுத்தம் செய்திட்டு இருந்தீங்களா?” என்று கேட்டான்.

“இல்லை சாமி..ஒத்த சாமிப்படத்தை மொத்த சாமியா நினைச்சு..எல்லோரையும் நம்ம வீட்டுக்கு அழைச்சு..என் சாமியை நல்லபடியா வைங்கண்ணு பிரார்த்தனை செய்திட்டு இருந்தேன்.” என்று சிரித்தபடி பதிலளித்தார் விஜயா.

அவனுடன் வம்பு செய்யும் அம்மாவைப் பார்த்து ஷண்முகத்திற்கு சந்தோஷமாக இருந்தது. முதன் முதலில் இங்கே வந்த போது இருந்த அம்மா இப்போது அவன் கண்களில் தென்படுவதில்லை. அவனிடமே யோசித்து யோசித்து பேசும் அம்மா காணாமல் போய் விட்டார். அவரைக் கிண்டல் செய்ய எண்ணி,”அதெல்லாம் எந்தச் சாமி கைலேயும் இல்லை..இந்தச் சாமி கைலே தான் இருக்கு.” என்று தற்புகழ்ச்சியாகப் பேச,

“சரியா சொன்னீங்க சாமி.” என்று மகனிடம் சரணடைந்தார் விஜயா.

அப்போது மேஜை மீதிருந்த அவரது கைப்பேசி ஒலி எழுப்ப, அழைத்தது நித்யா. எதற்காக என்று தெரிந்திருந்ததால் அந்த அழைப்பை ஏற்க தயங்கினார் விஜயா. அது அடித்து ஓய்ந்து போனது.

”என்ன ம்மா? ஏன் ஃபோனை எடுக்க மாட்டேங்கறீங்க?” என்று விசாரித்தான்.

“என்னாலே முடியாதுன்னு நான் மறுத்த பிறகும் இரண்டு, மூணு நாளா ஒரே விஷயத்தைப் பேசிட்டு இருக்கா சாமி..” என்று பதில் கொடுத்து கொண்டிருந்த போது விஜயாவின் கைப்பேசி மீண்டும் ஒலித்தது. அதை ஷண்முகம் கையில் எடுக்க,”வேணாம் சாமி.” என்று விஜயா மறுக்க, நான் பார்த்துக்கறேன் என்று செய்கையில் சொல்லி, அழைப்பை ஸ்பீக்கரில் ஏற்று,”ஹலோ” என்றான் ஷண்முகம்.

அவனை எதிர்பார்த்திராத நித்யா,”ஹலோ அண்ணா, போன வேலை முடிஞ்சிடுச்சா? எப்போ டூர்லேர்ந்து வந்தீங்க?” என்று கேட்டாள். அவளைப் பொறுத்த வரை ஷண்முகத்தின் வெளியூர் பயணங்கள் அனைத்தும் டூர் தான். அவனைப் பற்றி விஜயாவிடம் விசாரிக்கும் போதெல்லாம்,’வேலை விஷயமா வெளியூர் போயிருக்கான் கண்ணு.’ என்ற பதில் தான் கிடைக்கிறது. எனவே அந்த அடிப்படையில் அவள் விசாரிக்க, ஷண்முகத்தின் மனத்தில் டூர் என்ற அந்த வார்த்தை டூர் ஆஃப் டியுட்டியாக போய்ச் சேர,”என்னோட வேலை எதுவும் டக்குன்னு முடியாது ம்மா..ஒண்ணு முடிஞ்சா அடுத்ததுன்னு வேற இடம், வேலைன்னு தொடர்ந்திட்டே இருக்கும்.” என்று ஒரளவிற்கு உண்மையாகப் பதில் அளித்தான்.

அதற்கு,“அதுக்கு தான் பிரகாஷ்கிட்டே சொன்னேன் விஜயாம்மாவை கையோட அழைச்சிட்டு வந்திடுங்கண்ணு.” என்றாள் நித்யா.

“இப்போ தானே இங்கே வந்திருக்கேன் நித்யா..கொஞ்ச நாள் போகட்டும்.” என்று அவளுக்குப் பதில் கொடுத்தார் விஜயா.

Advertisement