ஆனந்தி மைண்ட் வாய்ஸில் பேசும் நேரம் அவள் முன்னால் சொடக்கிட்டி தன் பக்கம் திருப்பிய கிழவி
“அங்க என்ன கணா காணுறவ, வெரசா ஏந்திரிடி வேலைக்கு நேரம் ஆவுதில்ல” ஒரு அதட்டலை போட்டது கிழவி.
‘பேய்க்கு வாக்கபட்டாச்சு இனி மரத்துக்கு மரம் தாவிதானே ஆகனும்’ தன் விதியை நொந்த ஆனந்தி மௌனமாய் கிழவியுடன் வீட்டை பூட்டி வெளியேறினாள்.
‘கெழவிக்கு இந்த ஐடியாவ குடுத்தது மட்டும் யாருன்னு தெரியட்டும் அப்புறம் இருக்கு’
இந்த ஐடியாவை குடுத்த நபரை திட்டியபடி கிழவியை ஏத்தி கொண்டு இருந்த டிராபிக்கில் சந்து பொந்து பார்த்து பூந்து, கிழவி சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தாள் ஆனந்தி.
அந்த இரண்டு மாடி பெரிய கட்டிடத்தின் முன்னே கொட்டை எழுத்துக்களில் இருந்தது அந்த கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பெயர்.
‘இந்த கார்மெண்ட்ஸ்ல கெழவிக்கு என்ன வேலையா இருக்கும்’ என்று யோசித்த ஆனந்தி அதை கிழவியிடமே கேட்டு வைத்தாள்.
“ஆமா அப்பத்தா இந்த கம்பெனில உனக்கு என்னா வேலை”
பெரிதாய் என்ன வேலை இருந்துவிட போகிறது என்ற எண்ணத்தில்தான் ஆனந்தியும் கேட்டாள்.
“இவ்வளோ பெரிய கம்பெனில நான் சூப்பருவைசருடி”
கெத்தாய் கிழவி கூறிய பதிலில் ஆவென்று வாயை பிளந்துவிட்டாள் பேத்தியவள்.
“எப்படி அப்பத்தா” ஆச்சரியமாய் ஆனந்தி கேட்டதற்கு “நான் அந்த கால பியூசிடி என் வெண்ணமவளே!” கவுண்டர் கொடுத்தவாறு கிழவி கம்பெனியினுள் சென்றுவிட,
“கெழவி உனக்கு சரியான கொழுப்புதான். ஆனா உனக்கு போய் ஒருத்தன் வேலை குடுத்துருக்கான்பாரு அவனை சொல்லனும்”
கிழவிக்கு வேலை கொடுத்தவனை வாய்விட்டு திட்டிய படி, இன்னும் இந்த கிழவி என்ன செய்ய காத்திருக்கோ என பயந்தவள் அவளின் அலுவகத்தை நோக்கி வண்டியை திருப்பினாள்.
பேத்தி அங்கு வராத கண்ணீரை வழித்து துடைத்து கொண்டு செல்ல, இங்கு அலுவலகத்தின் உள்ளே சென்ற அப்பத்தாவோ வெற்றிகரமாய் கையெழுத்திட்டு தன் பதவியில் சேர்ந்தது.
“ஹலோ ஒரு நிமிஷம் எல்லாரும் இங்க பாருங்க, ஒரு முக்கியமான இன்பர்மேஷன் சொல்லனும்”
அந்த கம்பெனி மேனேஜரின் குரல் அந்த பெரிய அறையில் இருந்த அனைத்து பெண்களின் கவனத்தையும் ஈர்த்தது. தங்கள் கம்பெனியின் மேனேஜர் ஒரு வயதான பாட்டியுடன் வந்து நிற்பதை அங்கிருந்த பெண்கள் குழப்பத்துடன் பார்க்க, அந்த மனிதர் தன் பேச்சை தொடங்கினார்.
“இவங்க நம்ம கம்பெனிக்கு புதுசா வந்து சேர்ந்திருக்காங்க. இவங்கதான் இனி உங்க யூனிட்டோட சூப்பர்வைசர். அதனால உங்களுக்கு இனி என்ன வேணும்னாலும் இவங்கட்ட கேட்டுக்கலாம்”
கிழவியை சார்ட்டாக அறிமுகப்படுத்திய மேனேஜருக்கு கூட தங்கள் முதலாளி எதற்காக இந்த பல்லு போன கிழவியை வேலைக்கு எடுத்தார் என்று தெரியவில்லை. ‘இந்த கெழவியெல்லாம் என்னத்த வேலைய பாக்க போகுதோ’ என்ற எண்ணம் அவர் மனதிற்குள் ஓடினாலும் தன் முதலாளி சொன்னதை கேட்டு கிழவியை அறிமுகப்படுத்தி சென்றார்.