“ஏ புள்ள ஆனந்தி! அந்த பொட்டியில என்னத்த பராக்கு பாக்குறவ. அங்க ஒலையில சோறு கொலைய போவுது, போயி சோத்த வடிச்சுவுடு. எனக்கு நேரத்துக்கு உண்கலைனா வெடவெடன்னு வாருன்னு உனக்கு தெரியாதாக்கு”
     வாயில் ஒரு கை வெற்றிலையை அதக்கியபடி எகனை முகனையோடு தன் முன்னால் அமர்ந்திருந்த பெண்ணை அதட்டியது கிழவி.
     கிழவி பேசியதற்கு முடிந்தமட்டும் அவளை முறைத்து வைத்த ஆனந்தி
     “ஐய்யோ அப்பத்தா! அங்க ஒலையும் கொதிக்கல ஒரு எலையும் கொதிக்கல. அது எலக்ட்ரிக் குக்கர், அதுல அரிசி தண்ணீ மட்டும் ஊத்துனா போதும் அதுவே வெந்துரும். அப்புறம் இது பொட்டியில்ல லேப்டாப். எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புரியாதா, என் வேலையே இந்த பெட்டியிலதான் இருக்குன்னு”
     ஆனந்தி கிழவியை கடிந்துக் கொண்டாலும், சமையலறைக்கு சென்று அடுப்பை பார்த்து வந்தாள். என்னதான் இந்த பாட்டி பேத்தி கூட்டணி இப்படி பேசிக்கொண்டாலும் ஒருவரின் மீது ஒருவருக்கு அன்பு அதிகம்.
     பேத்தி ஆனந்தி தங்கள் சொந்த ஊரான காரைக்குடியை விட்டு வெளியூரில் வேலைக்கு வந்திருக்க, கூடமாட ஒத்தாசை செய்கிறேன் என்ற பேரில் யார் பேச்சையும் கேட்காது தன் பேத்தி வசிக்கும் ஊருக்கே சட்டிப்பானையை கட்டிக் கொண்டு வந்துவிட்டது கிழவி.
     கடந்த ஒரு வருடமாக வேறொரு தோழியுடன்தான் ஆனந்தி தங்கியிருந்தாள். சிறிது நாட்களுக்கு முன்னால் அவள் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றிருக்க பேத்திக்கு துணைக்கென வந்து தங்கியது கிழவி. ஆனால் கிழவி மனதுக்குள் வேறொரு பிளானை போட்டே இங்கு கிளம்பி வந்தது பேத்திக்கு தெரியவந்தால் என்னாகுமோ.
     கிழவி, ஆனந்தியுடன் தங்க வந்து இத்தோடு முழுமையாக ஒரு மாதம் முடிந்துவிட்டது. இங்கு வந்ததிலிருந்து கேட் அருகில் இருக்கும் வாட்ச்மேன் முதல் பக்கத்து பில்டிங் நண்டு சுண்டு வரை நட்பு பாராட்டி அனைவரிடமும் தோழியாகிவிட்டது கிழவி. கிழவியின் சிறப்பே இதுதான் யார் எவரென பார்க்காது அனைவரிடமும் பேசி பழகிவிடும்.
     தங்கள் வீட்டு கிழவி எந்த பயனும் இல்லாது ஒரு காரியத்தில் இறங்காது என்பது ஆனந்தி அறிந்ததே. அப்படி இருக்க தன் மேல் உள்ள பாசத்தினால் மட்டுமே கிழவி தன்னுடன் வந்து தங்கியிருக்கிறது என மனம் அடித்து சொல்லியும் மூளை நம்ப மறுத்தது ஆனந்திக்கு.
     அதுவும் பேத்திக்கு ஒத்தாசை செய்கிறேன் என்று வந்த கிழவி இதுவரை ஒரு துரும்பைகூட நகர்த்தி வைத்ததாய் சரித்திரம் இல்லை.
     “அப்பத்தா இதக்கொஞ்சம் செஞ்சுக்குடே” என்று ஆனந்தி ஒரு கத்திரிக்காயை நறுக்கி தர சொன்னால் கூட
     “ஏன்டி நானே வயசான காலத்துல உடம்பு சொகம் இல்லாம கெடக்கேன். எதோ இங்கன ஊரு பேரு தெரியாத எடத்துல தனியா கெடக்கியேன்னு உன் தொணைக்கு வந்தா எனக்கே வேலை வக்கிரியா” என்று ஒரு சீனை போட்டு ஆனந்தியின் வாயை அடைத்துவிடும் கிழவி.
     ‘இந்த லட்சத்தினத்தில் கிழவி தனக்கு துணையென இருக்கிறது. இதோடைய மோட்டிவ் என்னவாக இருக்கும்’ என்ற நினைவிலே ஆனந்தி தன் தோழியிடம் போனில் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள்.
     அப்போது கிழவி குறுகுறுவென ஆனந்தியை பார்த்து வைக்க, தன்னை கிழவி பார்ப்பாதை சற்று நேரம் கழித்தே கவனித்தாள் ஆனந்தி.
     ‘எதுக்கு கெழவி இப்புடி குறுகுறுன்னு பாக்குது. என்னவா இருக்கும்’ ஆனந்தி யோசித்தவள் கிழவியிடம் நேரடியாக கேட்டுவிடுவோம் என கேட்டாள்.
     “அப்பத்தா! என்னாச்சு எதுக்கு என்னைய குறுகுறுன்னு இப்படி பாக்குற. அப்புறம் என்னவோ யோசிக்கிற, திரும்பவும் பாக்குற. என்னதான் உன் மனசுல நெனச்சுக்கிட்டு இருக்க சொல்லிதான் தொலையே”
     பின்னே எவ்வளவு நேரம்தான் கிழவியின் ஆளை மொய்க்கும் பார்வையில் அமர்வதென கடுப்பில் கேட்டுவைத்தாள் ஆனந்தி.
     “அது ஒன்னுமில்லடி உன் கையில வச்சிருக்கியே போனு, அதுல என்னவோ புக்கு இருக்காம் ஐசு இருக்காம். இதுல எல்லாம் ஒரு அக்கவுண்ட தெறந்துக்க சொல்லி இந்த பக்கத்துவீட்டு பரசு பையன் இருக்கான்பாரு அவன் சொன்னான்டி. தெறந்தா அதுல என்னை பெரண்டு ஆக்கிகிடுவானாம், என் போனுலையும் அதை எல்லாம் தெறந்துக்குடு புள்ள”
     ஆனந்தி கேட்கவே காத்திருந்த கிழவி, பக்கத்துவீட்டு பையன் போன் தோண்டும்போது அவன் வாயை கிளறி தான் கலெக்ட் செய்த தகவல்களை வைத்து, தனக்கும் இதெல்லாம் வேணுமென தன்னுடைய பட்டன் செல்லை எடுத்து அப்பாவியாக நீட்டியது கிழவி.
      ‘எதே புக்கு ஐசா? புக்கனா பேஸ்புக்கு சரி. இந்த ஐசுனா என்னவா இருக்கும். கெழவிக்கு சோசியல் மீடியால அக்கவுண்ட் வேற ஓப்பன் பண்ற எண்ணம் வருதா. இது ரொம்ப ஆபத்தாச்சே’
     கிழவி புதுசுபுதுசாய் ஏதேதோ சொல்ல ஆனந்தி உள்ளே பயந்தாலும், அதில் சிலது என்னவென்று புரியாமல் ‘ஆமா ஐசுனா என்னாவ இருக்கும்’ என ஆனந்தி கிழவியிடமே கேட்டு வைத்தாள்.
      “அட கூறுகெட்ட பயபுல்ல ஐசுனா என்னான்னு ஊருக்கே தெரிஞ்சுருக்கு ஒனக்கு தெரியாதாக்கும். என்ன பெரிய படிப்பு படிச்சியோ ஒரு மண்ணும் தெரியலை. ஐசுனா இண்டாடி இண்டா” முடித்தது கிழவி.
     ‘அட அரசைஸ் அண்டா! இன்ஸ்டாவதான் இண்டா அண்டா ஐசுன்னு ஒளரிக்கிட்டு இருந்துதா இந்த கெழவி. இதுல எனக்கு ஒன்னும் தெரியலைனு டயலாக் வேற’
     கிழவியின் பதிலில் வெளியே திட்டக்கூட முடியாது மனதிற்குள் கிழவியை திட்டிவிட்டு அதன் கையில் இருந்த போனை வாங்கி அப்படி இப்படி திருப்பி பார்த்த ஆனந்திக்கு தலையை முட்டுவதற்கு எந்த சுவரு வாகாக இருக்கும் என்ற எண்ணமே.
     ‘டேய் பரசு இந்த கெழவிக்கு இதையெல்லாம் சொல்லிக் குடுத்த நீ என் கையில கெடைக்காமையா போவ, அப்ப இருக்குடா உனக்கு’ மனதிற்குள் கருவிக்கொண்டவள், ஒரு பெருமூச்சுடன் கிழவியிடம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தாள்.
     “இங்கபாரு அப்பத்தா நீ சொல்ற அந்த அக்கவுண்ட் எல்லாம் உன்னோட இந்த பட்டன் செல்லுல ஏத்த முடியாது. இங்க பாத்தியா என் டச்போன் இதுலதான் ஏத்த முடியும் பாக்கவும் முடியும்”
     பொறுமையை மிகவும் இழுத்துப்பிடித்துதான் பேசி முடித்தாள் ஆனந்தி. அவள் கையிலிருந்த இரண்டு போனையும் மாறி மாறி பார்த்த கிழவி, சிறிதுநேரம் எதையோ யோசித்தது.
     “அப்ப இந்த பெரிய போனுலதேன் அதையெல்லா பாக்க முடியூங்கற”
     கிழவி இழுத்து பேசியதில், அது பெரிதாக ஒரு பிளாங்கை போட்டுவிட்டது ஆனந்திக்கு புரிய வயிற்றுக்குள் புளியை கரைத்தது.
     ‘இந்த கெழவி என்னவோ பெருசா திட்டம் போடுற மாதிரி தெரியுதே, என்ன குண்டு போட போகுதோ. ஆத்தா மகமாயி இந்த சூன்யகார கெழவிக்கிட்ட இருந்து என்ன எப்படியாவது காப்பாத்திவிட்டுரு ஆத்தா’ என அவள் வேண்டி முடித்த நேரம்
     “அப்படியான சேரிபுள்ள, நான் போய் கெளம்பறேன்” கிழவி துவங்கியதும் ‘ஊருக்கு எதுவும் கெழவி கெளம்புதா ஹேய் சூப்பர்’ என உள்ளே குத்தாட்டம் போட்டாள் ஆனந்தி. ஆனால் அது அரைநிமிடம் கூட நீடிக்கவில்லை.
     “அங்க என்னத்த பராக்கு பாக்குறவ நீயும் போயி கெளம்பு புள்ள, ரெண்டு பேருமா போயி நீ வச்சிருக்கமாரியே எனக்கும் ஒரு பெரிய போனா வாங்கிப்புட்டு வந்துப்புடுவோம். அப்பொறம் அதுலையே நானும் அக்கவுண்ட தெறந்துக்கறேன்”
     கிழவி சொல்லியதுதான் தாமதென தன் அறைக்குள் குடுகுடுவென கிளம்ப ஓடிவிட, இங்கோ ஆனந்தியின் தலைக்குமேல் சங்கூதும் சத்தமெல்லாம் கேட்டது. கிழவி போன திசையை பார்த்து தன் விதியை நொந்துபடி தானும் கிளம்ப சென்றாள்.
     அவர்கள் வீட்டிலிருந்து பத்து நிமிடம் நடக்கும் தூரத்திலே ஒரு புகழ்பெற்ற செல்போன் கடையிருக்க, ஆளுக்கு முன்னால் சென்று புகுந்துக்கொண்டது கிழவி. அந்த கடைக்காரனிடம் இருப்பதிலையே காஸ்ட்லியான போனை எடுத்துபோட சொல்லி கடையை ஒருமணிநேரம் ரெண்டாக்கி, அங்கிருந்தவர்களை சக்கையாய் புழிந்தெடுத்தது கிழவி.
      கட்டகடைசியாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஐபோன் ஒன்றை கையில் எடுத்து பில்லை ஆனந்தியை கட்ட சொல்லி நிறுத்த, விட்டால் அழுதுறுவேன் என்ற நிலையில்தான் ஆனந்தி. இது இப்படிதான் போகுமென அவளுக்கு முன்னாலே தெரியுமே. எனவே கிழவியை தாஜா செய்ய கெஞ்ச துவங்கிவிட்டாள்.
     “அப்பத்தா கடைன்னுகூட பாக்காம உன் கால்லவேனா விழறேன். தயவு செஞ்சு அந்த போனை வச்சிறு அப்பத்தா. இங்க பாரு என் போனு வெறும் இருபதாயிரம்தான். நான்வேனா உனக்கு இன்னும் ஒரு பத்தாயிரம்கூட சேத்துபோட்டு ஒரு போன் வாங்கி தரேன். அதை மட்டும் வச்சிறு அப்பத்தா அந்தளவுக்கு என்ட்ட பணம் இல்ல”
     தன் முன்னால் பாவமாய் நிற்கும் பேத்தியை பார்த்து, போனால் போகிறதென பாவம் பார்த்து விட்ட கிழவி முப்பதாயிரம் ரூபாயிக்கே ஒரு போனை வாங்கியது. அதுபோக ஒரு மஞ்சா கலரு ஹெட்போனை தூக்கி மேலும் ஒரு மூன்றாயிறம் தண்டம் வைத்தே விட்டது கிழவி.
     ‘ஹப்பாடா இதோட கெழவி விட்டதே’ ஆனந்தி எண்ணி பெருமூச்சு விட்டு கிழவி நின்ற இடத்தை திரும்பி பார்க்க, கிழவியை காணவில்லை.