கடந்து விடலாம் என்று முடிவெடுத்த பின்னரும் ஏதோவொரு வகையில் பழையது அவர்களுக்கு இடையில் புகுந்து அவர்களை பின்னோக்கி இழுத்துவிடுகிறது. வேண்டாத நினைவுகளை மனதிலிருந்து ஒதுக்கி முழுமையான ஒரு வாழ்வு வாழ முடியுமா என்ற சந்தேகமும் ஏக்கமும் ஏகத்திற்கு மண்டிக்கிடக்கும் நேரமெல்லாம் அவர்களின் மொழி மெளனமாகிவிடுகிறது. இதை கடந்துதான் ஆகவேண்டும் என்று மனம் சொன்னாலும் கீர்த்தியை விட அஞ்சனால் தான் சட்டென வெளிவரமுடியவில்லை தற்சமயம் போல. இந்நேரங்களில் எல்லாம் யோசிக்கட்டும் என்று கீர்த்தி அவனை தனியாய் விட்டுவிடுவாள்.
திருவிழா என்று இப்போது ஊருக்குள் வந்துள்ளதால் அவனை அப்படியே தனித்து விடமுடியாமல் கடைகளுக்கு அழைத்துச் சென்று வளையல், போட்டு, கிளிப் என கண்ணில் பட்டது பிடித்தது எல்லாம் வாங்க, பேசாது தன் சட்டை பையிலிருந்து பணம் கொடுத்தான் எல்லா இடத்திலும். ஒரு மணி நேரம் சுற்றித் திறிந்தவர்கள் குருங்கையை தேட,
“அவங்க வூட்டுக்கு போயிருப்பாங்க. அம்மன் ஊர்வலம் ஆரம்பிச்சிடும். நாமளும் வூட்டுக்கு போலாம்.” என்று அஞ்சன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்ல, வீடு முழுதும் ஆட்களால் நிரம்பி இருந்தது.
சில நொடி தயங்கியவள் பின் தன்னையும் அவர்களோடு இணைத்துக்கொள்ள இரவு பாலோடு அறைக்கு வந்தாள் கீர்த்தி. உடன் முதல் இரவுக்கு இதே போல அவ்வறைக்கு வந்த நினைவும்.
“பசங்களுக்கு எதுவுமே வாங்கல. எனக்குதான் நியாபகம் இல்லை நீங்களாவது சொல்லி இருக்கலாம்ல.” வீடு முழுதும் அஞ்சன் உடன்பிறந்தவர்களின் வாரிசுகள் சுற்றி வர அவர்களுக்கென எதுவும் வாங்கி வரவில்லை என்று வீடு வந்ததும்தான் நினைவு வந்தது கீர்த்திக்கு.
பாலை வாங்கி பருகியபடியே மனைவியை ஏறிட்டவன், “இம்புட்டு நேரம் எதுவும் வாங்காம இருப்பாங்கன்னு நினைக்குறியா?”
“அவங்க வாங்குறாங்க அதில்லை இப்போ பிரச்சனை. நம்ம வாங்கிக் குடுக்கணும்ல. கல்யாணம் ஆனதுலேந்து அவங்களோடவும் சரியா பழகல. இனிமேலும் அப்படியே இருந்தா தப்பு. நாளைக்கு அவங்களுக்கும் ஏதாவது வாங்கிட்டு வரலாம்.” என்க, அஞ்சன் மெச்சுதலாய் பார்த்தான்.
“இந்த குடும்பத்துல நல்லா ஐக்கியம் ஆகிட்ட.”
“உங்ககூடவே ஐக்கியம் ஆக ரெடி ஆகிட்டேன் இதெல்லாம் பெரிய விஷயமா?” என்று அவள் கண்சிமிட்ட, கரம் பிடித்து சுண்டி தன்னிடம் இழுத்துக் கொண்டான் மனைவியை.
மற்றவரது மூச்சுக்காற்றை உணரும் நெருக்கமெல்லாம் வெகு நாட்கள் பிறகு கிட்ட, இருவரது இதயத்துடிப்பும் மெல்ல உயர்ந்தது. நாசியோடு நாசி இழைத்து இதழோடு இதழணைத்து கரத்தோடு கரம் பிணைத்து தேகங்கள் உரச, மின்சாரம் பாய்ந்தது போல் விருட்டென விலகினாள் கீர்த்தி. அவர்களின் முதல் நெருக்கமும் அதன் பின்னான விலகலும் மின்னலென அஞ்சன் நினைவில் வந்து போக, முகம் கறுத்தது.
அவனின் மாறுதலில் தவித்துப் போன கீர்த்தி தானே அவன் இதழ் ஒற்றி பிரிந்தவள், “இன்னும் கொஞ்ச நேரத்துல சாமி வந்துரும்னு எல்லாரும் வெளில காத்துட்டு இருக்காங்க. பால் குடிச்சிட்டு நீங்களும் வாங்க.”
நாவின் மொழி அவள் செயலுக்கு பின்னான காரணம் விளக்க, விழி மொழி நான் சொல்வதை நம்பு என்று மன்றாடியது. அவள் விழிகளுக்கு கட்டுண்டவன் வருகிறேன் என்பதாய் தலையசைக்க நிம்மதி மூச்சுடன் வெளியேறினாள் கீர்த்தி.
“அவனை தூங்க வேண்டாம்னு சொல்லிட்டியா?” என்ற மாமியாரின் கேள்விக்கு தலையசைத்தவள் பாந்தமாய் தன்னை அங்கே பொருத்திக்கொண்டாள்.
சின்ன நங்கையும் நடுநங்கையும் வம்பிழுத்த போது பெரிதாய் அலட்டவும் இல்லை பெரிய நங்கையுடன் இழையவுமில்லை. குருங்கையுடன் சற்று கூடுதலாய் பேசினாள் குழந்தைகளுடன் பேச்சு கொடுத்து இயல்பாக்க முயன்றாள். அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த அஞ்சனுக்கு அவளின் மாற்றம் பட்டவர்த்தமாய் தெரிந்தது. என்னதான் தனக்கு மட்டுமே சொந்தமாகி தன்னை மட்டும் முன்னிறுத்தி அனைத்தும் செய்ய வேண்டும் என்று மனம் விழைந்தாலும் மனைவி தன் குடும்பத்துடன் பொருந்திக்கொள்ள முனைவது அத்தனை ஆசுவாசம் தந்தது.
இவர்கள் அறியாமல் இவர்கள் இருவரையும் கண்காணித்த பழனிவேலுக்கு நிம்மதி மூச்சொன்று அக்கணம் வெளியேறியது. அருணை இடமாறச் சொன்னது சரிதான் என்ற எண்ணம் எழ, பெரிய மகனை அழைத்து இனி எக்காரணம் கொண்டும் அருணை தங்களின் தொழிலில் சேர்த்திடக்கூடாது என்று மட்டும் சொல்லி வைத்தார். சுவாமிநாதன் காரணம் கேட்டும் உண்மையை மறைத்து அஞ்சனுக்கும் அவனுக்கும் வேலை விஷயத்தில் சண்டையாகிவிட்டது என்று சமாளித்துவிட்டார். அதன்பின் அவனும் வாய் திறக்கவில்லை.
சுமூகமாய் ஊர்வலம் முடிந்து அனைவரும் உறங்க ஆயத்தமாக, குழந்தைகளுடன் உள்ளே நுழைந்த மனைவியை முறைத்தான் அஞ்சன். அவளோ அவனை கண்டுகொள்ளாது பாய் விரித்து அனைவரையும் உறங்க வைக்கும் ஏற்பாட்டில் இறங்க,
“என்ற கூட எல்லாம் இவங்க தூங்க மாட்டாங்க. பழக்கம் இல்லை.” என்றான் அஞ்சன்.
“இனிமே எல்லாரும் இங்க வரும்போது உங்ககூடதான் தூங்கணும்னு சித்தி சொல்லியிருக்காங்க சித்தப்பா…” என்றபடி அஞ்சன் அருகில் படுத்தான் அவ்வீட்டின் மூத்த பேரன்.
அதில் இன்னும் அதிர்ந்து போனவன் மனைவியை இடுங்கும் பார்வை பார்க்க, போர்வை போர்த்திவிடும் சாக்கில் அஞ்சன் அருகில் வந்தவள், “வீட்ல எல்லாருக்கும் இடம் பத்தாது. சமாளிச்சுதான் தூங்கணும். சும்மா முகத்தை தூக்காதீங்க. எல்லாம் உங்க பசங்கதான்.” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாய்.
அதற்கும் அவன் முறைத்து வைக்க, என்ன என்ற கேள்வி மனைவியின் விழிகளில். குழந்தைகளை காட்டி அவன் மறுப்பாய் தலையசைக்க, பிள்ளைகளுக்கு மறுபக்கம் சென்று படுத்தவள் கண்களால் மிரட்டினாள்.
கரம் நீட்டி அவளை இழுத்து அணைத்துக் கொள்வது போல் தன்னையே கட்டிக்கொண்டு கண்களால் அவன் இறைஞ்ச, கண்களை மூடி இடவலமாய் தலை சிலுப்பினாள் கீர்த்தி. இவனும் சைகையிலேயே போடி என்றான். உதடு சுழித்தவள் மறுபுறம் திரும்பி படுத்துக்கொள்ள, பிள்ளைகளை தாண்டி அவளிடம் செல்லத் துடிக்கும் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ள அரும்பாடு படவேண்டியதிருந்தது அஞ்சனுக்கு. அன்று மட்டுமல்ல அதன் பின் வந்த பத்து நாட்களும் அது போலவே நடக்க, அவளை எப்போது தனிமையில் பிடிப்போம் என்றாகிவிட்டது.
திருவிழா என்பதால் அந்த பத்து நாட்களும் அங்கிருந்தே வேலைக்கு சென்றுவர, திருவிழாவின் இறுதி நாள் சனிக்கிழமையாய் இருந்தாலும் அன்றே தங்கள் வீட்டிற்கு கிளம்புகிறோம் என்று நின்றான் அஞ்சன்.
“நாளைக்கு ஞாயித்துக்கிழமை தானே இருந்துட்டு போறதுக்கு என்ன?” என்ற பரிமளத்தின் கேள்விக்கு முடியாது என்ற தலையசைப்பு மகனிடம்.
“அதிசயமா உன்ற பொண்டாட்டி எல்லாம் இழுத்து போட்டு செய்யுறான்னு நினைச்சா அதுக்குள்ள வூருக்கு போகணுமா அவளுக்கு?”
“ந்தா வாய் இருக்குன்னு அவளை சும்மா மெல்லாத. எனக்குத்தான் இப்போ அவகூட தனியா இருக்கணும். இங்க முடியுமா அதுதான் கிளம்புறேன்.” என்றிட, அடுத்து பேசிடுவாரா பரிமளம். தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்துவிட்டார்.
அனைவரையும் சரிகட்டி கீர்த்தியை திருப்பூர் கூட்டிவந்தவன் அவளை நகரவே விடவில்லை கை அணைப்பிலேயே வைத்திருந்தான்.
“என்னது இது? இப்படியே கட்டிட்டு இருந்தா வீட்டு வேலையெல்லாம் யார் பார்ப்பா?” அவன் நெஞ்சிலிருந்து தலை உயர்த்தி அவள் கேட்க, அவள் நெற்றி முட்டியவன், “வூட்டு வேலை பாக்கவா உன்னை அங்கிருந்து களவாடிட்டு வந்திருக்கேன்.” என்று கள்ளப் பார்வை பார்க்க,
“இம்புட்டு நாள் இல்லாம இப்போ என்ன கள்ளத்தனம் வேண்டிக்கிடக்கு?” கிட்டத்தட்ட ஒரு மாதமாய் தள்ளி இருந்தவன் திருவிழா என்று என்றைக்கு ஊருக்கு சென்றனரோ அன்றிலிருந்து தள்ளி இருக்க முடியாது ஒட்டி உரச, அவன் மனது சமாதானம் அடைந்துவிட்டதோ என்ற எண்ணவோட்டத்தில் அவள் கேள்வி இருந்தது.
அவளின் வினாவிற்கு தோதாய் இருந்தது அவனது அடுத்தடுத்த செயல்கள். வார்த்தைகள் கோர்த்த பதிலாய் இல்லாமல் அவனது பதில் செயல் வடிவம் கொண்டது. ஹாலில் நின்றபடி மனைவியை தன்னோடு கட்டிக்கொண்டிருந்தவன் இருகரம் கொண்டு மனைவியை அப்படியே தூக்கி தங்களின் அறைக்குச் சென்றான்.
அவர்களின் பிரிவுக்கு பின் உடை மாற்றுவதற்கு மட்டுமே அவ்வறை உபயோகப்படுத்தப்பட்டிருக்க, இன்று அவளை மெத்தையில் கிடத்தவும் கீர்த்தியின் தேகத்தை உரசிக்கொண்டிருந்த மயிற்கீற்றுக்கள் அனைத்தும் செங்குத்தாய் தலைதூக்கி நின்றது.
மின்விசிறியை போட்டுவிட்டு அஞ்சன் கதவடைத்து வர சிலிர்ப்பு ஓடியது பெண்ணினுள்.
“என்ன திடீர்னு?” காதலுடன் தன்னை நெருங்கிய கணவனின் வசீகரத்தை ரசித்தபடி அவள் விழி நோக்கி கேட்டிட, தன்னை இமைக்காமல் வெறிக்கும் மனைவியின் இமைகளுக்கு முத்தத்தை அச்சாரமாக்கினான்.
“ஊருக்கு போனதிலேந்து இந்த கண்ணு உரிமையா பாக்குற பார்வை என்னை கொல்லாம கொல்லுதுடி கண்ணு…” மீண்டுமொரு முத்தம் அவளது இமைகளுக்கு.
“எங்குட்டு இருந்தாலும் எப்போதும் என்னை தேடுற இந்த கண்ணு எல்லாத்தையும் மறக்க வச்சிடுது.”
“ஆசையா கைபுடிச்சி ஊர் சுத்திகிட்டு இருந்தப்போ ஆருக்கும் தெரியாம நீ என்ற தோள் சாஞ்ச… இதைவிட வேற என்னடா வேணும் மடையானு என் மனசாட்சி கேக்குது.” வார்த்தைகளோடு இதழ்களும் பயணித்து அவள் தோளில் இறங்கியது.
“வேணும்னே புள்ளைங்களை கூட்டிட்டு வந்து இடையில படுக்க வச்சி என்னை சீண்டி அதிகாரம் பண்ணவளை இதுக்கு மேலையும் சும்மா விடுறதான்னு…” பேசிக்கொண்டே அவளது புடவை முந்தானையை தளர்த்தியவன் சிறு சிறு முத்தங்களை ஆடை மறைக்கா இடங்களுக்கு பரிசளிக்க, மங்கியிருந்த அவளது டேட்டூ பளிச்சென அவன் கண்களுக்கு புலப்பட்டது.
சட்டென எழுந்த அதிருப்தியை மறைக்காது அவ்விடத்திலேயே தன் பற்தடம் பதித்து வெளிப்படுத்த, வலியில் கத்திய கீர்த்தி அவனை தள்ளிவிட்டாள். அவள் கண்களில் நீர்கோர்த்துவிட மீண்டும் அவள் மேல் வந்தவன் பற்தடத்தை சுமந்து சிவந்திருந்த சருமத்திற்கு ஈர ஒத்தடம் கொடுத்தான். எரிந்த இடத்தில் ஜில்லென்று பதிந்த அவனின் ஈரமுத்தத்தை இதழ் கடித்து அமைதியாய் பொறுத்துக்கொண்டவள் அவன் பிடரி முடியை வலிக்கும் அளவுக்கு இழுத்து வைத்தாள். இப்போது வலியில் முனங்குவது அவன் முறை.
“எனக்கும் வலிச்சிடுச்சு… சந்தோஷமாடி என் கண்ணு…” செல்லமாய் கடிந்தவன் அவளை கடித்து கொஞ்சி வைக்க, சளைக்காது அவனுக்கு பதில் கொடுத்தாள் பெண்ணும்.
இருவரின் கரங்களும் அத்துமீறி தங்களின் இணை மீது ஊற, அத்தனை நாள் வலியையும் ஏக்கத்தையும் அன்றே தீர்க்க நினைப்பது போன்றதொரு வேகம். அருணின் நினைவை வேரோடு அறுத்து அஞ்சனை கணவனாய் மனதில் பதிக்க வேண்டும் என்று சென்ற முறை முயற்சி எடுத்து தோல்வி கண்ட கீர்த்தி இம்முறை எந்தவொரு பிரத்யேக முயற்சியுமின்றி மனதாலும் உடலாலும் நேசத்துடன் கணவனிடன் ஒன்றினாள். அதற்காக அருணின் நினைவு அறவே இல்லை என்றில்லை அவனது நினைவை எப்படி எங்கு ஒதுக்க வேண்டுமோ அங்கு அப்படி ஒதுக்கி வைத்தாள்.
கணவனை தன்னுடன் இறுக அணைத்துக்கொண்டு அவனை தனக்கு போர்வையாக்கிக் கொண்டாள். ஆனால் அவனால் அப்படி அமைதியாய் மனைவிக்கு போர்வையாய் மட்டும் இருக்க முடியவில்லை. அடம்பிடிக்கும் குழந்தையென அவளை நெருக்கி அவளிடம் முட்டி மோதினான். அனைத்திற்கும் அவள் இசைந்து ஈடு கொடுக்க, கரை எட்டும் ஆழியின் அலை போல ஆர்ப்பரிப்புடன் அவன் அவளுள் புதைந்து மீள அதுவே தொடர்கதையாகிப் போனது அவ்விரவு முழுவதும்.