“உன்ற உடுப்பை துவைச்சுக் கூட போடமாட்டாளா உங்கண்ணு?” என்று மகனை முறைத்தபடி அவன் நீட்டிய பையிலிருந்து அவன் நேற்று போட்டிருந்த உடுப்பை எடுத்து துவைக்கும் இடத்தில் சென்று போட்டு வந்தார் பரிமளம்.
“சம்மந்திங்க பங்காளிங்க விருந்துக்கு சாப்பாடு சொல்ல போயிருக்காரு. என்ன சோலிடா? வந்ததும் வாராததுமா அப்பாவை தேடுறவ?”
“அவரு வரட்டும் ஒட்டுக்கா எல்லாருக்கும் சொல்லிப்புடுறேன்… இப்போ போயி சுடச்சுட காபி கொண்டா… விடியாலேந்து ஒரே அலைச்சல்.” என்ற அஞ்சன் சாவுகாசமாய் கைகளை மேலுயர்த்தி நெட்டி முறித்து கால் நீட்டி நாற்காலியில் அமர, அவ்வீட்டின் மற்ற வாரிசுகள் தங்கள் வீட்டிற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
“கண்ணாலம் பண்ணி என்ன பிரயோசனம் இன்னும் எல்லாத்துக்கும் என்னையவே விரட்டுறான்…” என்ற முணுமுணுப்புடன் பரிமளம் அடுக்கலை செல்ல, அண்ணனின் வாரிசுகள் சித்தப்பனிடம் ஏறி விளையாட அவன் முகத்தில் சோர்வையும் மீறி புன்னகை உதித்தது.
“இன்னைக்கு ராப்பொழுது எங்கடா அஞ்சு?” பெரிய அண்ணனிடமிருந்து வந்தது கேள்வி.
“இன்னும் முடிவு பண்ணல…”
“அது சரி… எத்தினி நாள் லீவு எடுத்திருக்க?” இம்முறை கேள்வி சுந்தரநாதனுடையது.
“ஒரு வாரம் போட்டிருக்கேன். இன்னும் மூணு நாள்ல கிளம்போணும்.“
“எப்போ கீர்த்தியை வூட்டுக்கு கூட்டியார்ர? விருந்து வைக்கோணும்.” பெரியவன் கேள்வி எழுப்ப,
“வருவோம் வருவோம்… கொஞ்ச நாள் போகோட்டும்…” என்றான் அஞ்சன் அலட்சியமாய்.
“கூடப்பொறந்தவனுங்க வூட்டுக்கு விருந்துக்கு போறதுக்கு நோவுதா உனக்கு? உன்ற பொண்டாட்டி ஆசைப்படுறானு மாமியார் வூட்டுல ஜம்முனு தங்க தெரியுது இங்குட்டு போக நொட்டம் சொல்லிக்கிட்டு இருக்க…” சண்டை கீர்த்தியை மையமாய் வைத்து திரும்பியது பரிமளத்திடமிருந்து.
“ம்மா… வுடு… கண்ணால அலைச்சல் எல்லாம் போனதும் பொறுமையா வரட்டும்… நம்ம வூடுதான… வராம எங்க போயிட போறான். நீ இதை வச்சி ஒரண்டை இழுக்காத…” இரண்டாவது அண்ணன் பூமிநாதன் அமைதிப்படுத்தப் பார்க்க, அதற்கு தம்பி விடவேண்டுமே!
“புது வூட்டுக்கு போயி எல்லாம் பழகுன பொறவு வரோம்.” என்று அஞ்சன் பெரிய அண்ணனிடம் சொல்ல,
“என்ன புது வூடா?” அதிர்ந்து வந்தது வீட்டுனுள் நுழைந்த பழனியிடமிருந்து.
இயல்பாய் பிள்ளைகளை கீழே இறக்கிவிட்டு ஒற்றைக்காலை மடித்து அமர்ந்தவன், “ஆமா… வூடு பாத்திருக்கேன். சீக்கிரம் அங்க போயிட்டா வசதியா இருக்கும் வேலைக்குப் போக…” என்றிட,
“தனியா போவுற அளவுக்கு ஆயிடுச்சா? கண்ணாலம் ஆகி ரெண்டு நாள்தான் ஆவுது அதுக்குள்ள என்ன வந்துச்சு? பொசுக்குனு எங்களை விட்டுட்டு போறேன்னு சொல்ற…” பரிமளம் ஆற்றாமையில் வினவ,
“கீர்த்தியும் தான் அவங்க அம்மாவை தனியா வுட்டு இங்குட்டு வந்திருக்கு.” பட்டென்று சொன்னவன் தொடர்ந்து, “என்னமோ நான் மட்டும் போற மாதிரி சொல்ற… அண்ணங்க கண்ணாலம் ஆனதும் நீங்களே வூடு பார்த்து தனியாத்தான வச்சீக… இப்போ எனக்குன்னு நானே பாத்துக்கிட்டா பாஞ்சிகிட்டு வந்து கேள்வி கேக்குறீக? அவனுகளுக்கு ஒரு நாயம் எனக்கொரு நாயமா?”
“அதுவும் இதுவும் ஒன்னா? நம்ம வூட்டுல ரெண்டு ரூமுத்தான் இருக்கு. நாலு வயசுப் பசங்க இருக்குற வூட்டுல பெரியவன் கண்ணாலம் கட்டி எல்லாம் ஒண்ணா இருந்தா சரி வராதுன்னு தனியா வச்சோம்… எல்லாருக்கும் கண்ணாலம் ஆனா இடமும் பத்தாதுன்னு பாத்து பாத்து செஞ்சா நீ என்ன ஏத்தமா பேசுற?” என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்தார் பரிமளம்.
“அதுதான் எல்லோருக்கும் பாத்து பாத்து செஞ்சீகல்ல அதே மாதிரி எனக்கும் செய்க… நான் வூடெல்லாம் பாத்துட்டேன்… இந்த வாரத்துக்குள்ள எப்போ பால் காய்ச்சலாம்னு தேதி பாத்து சொல்லி பால் காச்சுற அன்னைக்கு அங்குட்டு வர்றது மட்டுந்தான் உங்க வேலை.”
மகன் இப்படி பேசியது தாய்க்கு ஆறவே இல்லை, “ஓ… உன்ற சோலி மூஞ்சதும் எங்களை கழட்டி வுடுறீயா?”
“உன்ற மத்த புள்ளைங்க எல்லாம் அப்போ உங்களை கழட்டி வுட்டுத்தான் தனியா இருக்காகளா?” என்று சரிக்குசரி வாயாடியவன் தன் அண்ணன்கள் புறம் திரும்பி,
“கேட்டுக்கோங்க… நீங்க அவங்களை கழட்டி வுட்டுட்டு உங்க வாழ்க்கையை பாக்க போயிட்டிங்கனு சொல்லுது… நங்கைகளே கேட்டுச்சா…” என்று அண்ணிகளையும் உசுப்பிவிட,
அதுவரை அமைதியாக இருந்த பழனிவேல் குரல் உயர்த்தி, “பேசுனது போதும்… குடும்பத்துல கலகம் பண்ணாத… இங்குட்டு என்ன இல்லைன்னு நீ தனியா போவணும்னு குதிக்குறேன்னு தெரியல… தனியாத்தான போகணும்… கிளம்பு… இன்னைக்கே வேணும்னாலும் கிளம்பு. பெத்த கடமைக்கு நாங்க வந்து நிக்குறோம். என்னைக்கு இருந்தாலும் இந்த வூடு உன் வூடுதான் நாங்க இருந்தாலும் சரி இல்லைனாலும் சரி…” என்றிட,
“என்னப்பா நீங்களும் இப்படி பேசுனா எப்புடி? அஞ்சு புரியாம பேசுறான்…” என்று சமாதானம் பேச வந்த பெரியவன் சிறியவன் புறம் திரும்பி,
“அவங்க தனியா இருக்குறதுதான் பிரச்சனைன்னா நீ இங்குட்டு வந்து இரு… இல்லை உங்கூட கூட்டிட்டு போ… நான் என்ன இங்குட்டு வழக்கத்துல இல்லாததையா கேக்குறேன்? உங்களை எல்லாம் தனியாத்தானே வச்சாங்க… அப்போ நான் மட்டும் ஏன் இங்குட்டு இருக்கணும்? நானும் என்ற பொண்டாட்டியும் நிம்மதியா இருக்கணும்னு நினைச்சா பேசாம இருங்க…”
“ஓ… இப்போதான் புரியுது பேசுற வாய் மட்டுந்தான் உன்னோடது வார்த்தை அங்குட்டிருந்து வருது… அம்மா வூட்டுல போயி உக்காந்துகிட்டு உன்னை ஏத்துவுட்டு அனுப்பி இருக்காளா அந்த மகராசி?” மகனின் முடிவு அன்னையின் ஆதங்கத்தை தூண்டிவிட்டிருந்தது.
ஏனோ புது மருமகள் அத்தனை நல்லெண்ணத்தை அவர் மனதில் விதைக்காமல் போக, முடிவு மகனுதாய் இருந்தாலும் பழி சொல் அனைத்தும் மருமகளின் மீது விழுந்தது. அது பொறுக்காத கணவன்,
“ஏன் எனக்கு சுயமா ஓசிச்சு முடிவு எடுக்கத் தெரியாதுன்னு முடிவே பண்ணிட்டீகளா… அவ சொல்லித்தான் இதெல்லாம் செய்யணும்னு இல்லை. நான் இதை முன்னமே ஓசிச்சு வச்சிருந்ததுதான். வூடு தான் எங்க பாக்குறதுன்னு ஓசனை பண்ணிட்டு இருந்தேன் இப்போ பாத்துட்டேன்.” என்றான் முடிவாய்.
“அவன் முடிவு எடுத்துபுட்டு நம்மட்ட சொல்றான். நீயும் சரிக்குச் சரி மல்லுக்கு நிக்குற… போயி வேலையைப் பாரு… மருமவ பேரப்புள்ளைங்களுக்கு மறக்காம பலகாரம் எல்லாம் கொடுத்துவுடு…” என்று பழனி இறுகிய முகத்துடன் மனைவியை விரட்ட, பரிமளம் மனம் கேளாது அங்கேயே நின்றார்.
“நீயாவது சொல்றதை கேளு.” என்று அழுத்தமாய் பழனியின் கட்டளை வர, அவ்விடமும் அமைதியானது பரிமளமும் நகர்ந்தார்.
சும்மாவே புரணி பேசும் நடுநங்கையும் சின்னநங்கையும் இதுதான் சாக்கென்று முணுமுணுக்க, அலைபேசியை எடுத்துச் சென்ற குருங்கை உடனே கீர்த்திக்கு அழைத்துவிட்டாள்.
“பத்து நாள் ஒத்தாசையா என்னை இங்க தங்க சொல்லிபுட்டு நீ இந்த வாரமே கிளம்புறியே… இதெல்லாம் நாயமா? நான் இதை உங்கிட்ட இருந்து எதிர்பாக்கல… கொழுந்தனார் புரியாம ஏதாவது செஞ்சா நீ எடுத்து சொல்ல மாட்டியா? ரெண்டே நாள்ல இப்படி போகணும்னு நின்னா வூட்டுல உள்ள பெரியவங்க என்ன நினைப்பாக… என்னவோ போ கண்ணாலம் ஆனா கொழுந்தனார் இன்னும் ஒட்டுதலா இருப்பாருனு பாத்தா இப்படி ஒட்டுக்கா இல்லாத மாதிரி ஆகுது… பாத்துக்கோ.” என்று அழைப்பை துண்டிக்க, அவளை கண்டிப்புடன் முறைத்தபடி வந்து நின்றான் அவள் கணவன்.
“அஞ்சு எடுத்த முடிவுக்கு அந்த பொண்ணு என்ன பண்ணும்? அந்த பொண்ணே உங்கிட்ட மட்டுந்தான் கொஞ்சம் சகஜமா பேசுது. நீயே இப்படி முகம் காட்டுனா பொறவு எப்படி அந்த பொண்ணு இங்குட்டு ஒட்டும்?”
“அஞ்சு புடிவாதம் பத்தி உனக்கு தெரியாதா கண்ணு? புடிச்சா உடும்பு புடிதான் எதுவும் அதுல மாறுதல் இல்லை… அந்த பொண்ணு சொன்னா மட்டும் கேட்டுருவானாக்கும்?”
“கேட்டுத்தான் ஆகணும்… இன்னும் என்ற முடிவு உன்ற முடிவுன்னு பேசிகிட்டு இருந்தாகன்னா குடும்பம் எப்படி தழைக்கும்? ஏற்கனவே கீர்த்தி கொழுந்தனார்கிட்ட அனுசரணையா இருக்காளான்னு தெரியல… தள்ளித்தான் இருக்குற மாதிரி இருக்கு. இதுல தனியா போயி ஆளுக்கு ஒரு மூளைன்னு இருந்துட்டா ஆருக்கு தெரியப்போகுது? அவுக வாழ்க்கை தான் வீணாப்போகும்…”
“இங்க பாரு கண்ணு… அவங்களுக்கு கண்ணாலம் பண்ணி வச்சாச்சு… இன்னும் சின்ன புள்ளைங்க இல்லை… அடிச்சிக்கிட்டாலும் புடிச்சிக்கிட்டாலும் எல்லாம் அவுக தான் பாத்துக்கோணும். நீ இதுல தலையிடாத…” என்று அழுத்தமாய் தன் மறுப்பை பதிவிட்டான் குருநாதன்.
“வுட்டு தான் ஆகணும்… பொறவு உங்களால தான் நானும் என்ற அம்மணியும் நிம்மதியா இல்லைனு காலம் முழுக்க சொல்லிக்காட்டுவான். நீ பேசாம இரு… வூட்டுக்கு கிளம்பு போகலாம்.” என்று குருநாதன் அவளை விரட்ட, அஞ்சனின் குணம் அறிந்து பொட்டிக்கட்ட தயாராகினாள் குருங்கையும்.
அங்குமிங்கும் முணுமுணுப்புகள் கேட்டபடி இருக்க, நேரம் ஆக ஆக அதுவும் குறைந்து பெரியவர்கள் மட்டும் வீட்டினுள் அடங்கிக்கொண்டனர்.
“அகராதி புடச்சிவன் கண்ணாலம் ஆனா வூட்டை புரிஞ்சிகிட்டு தொழிலையும் பாத்துகிட்டு மேல வருவான்னு பாத்தா இவன் என்ன இப்புடி போகோணும்னு நிக்குறான்? கண்டிக்காம நீங்களும் அவன் இழுப்புக்கு போறீக… ரொம்ப பெருசு இல்லைனாலும் இந்த வூடு அவனுக்குத்தானே? சொந்த வூட்டலையே இருக்க மாட்டேன்னு வாடகை வூட்டுல இருக்க போறான்… இதெல்லாம் கேக்க மாட்டீகளா?”
“கடைசி காலத்துல நம்மள பாத்துக்க ஆரும் இல்லைனு நினைக்குறீயா?” மனைவியின் புலம்பலுக்கு பழனியின் கேள்வியும் பார்வையும் அழுத்தமாய் வந்தது.
கணவரின் கேள்வியில் பரிமளத்தின் கண்கள் பனித்தது.
“அஞ்சு விரல் வெவ்வேற மாதிரி இருக்க காரணம் இருக்கு கண்ணு. எல்லாம் ஒரே மாதிரி இருந்தா அதால எதையும் புடிச்சு வைக்க முடியாது. கெட்டியா ஒன்னை புடிச்சிக்க ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு அளவுல இருந்தாத்தான் சரியா வரும். அதை ஓசிச்சுதானே நாமளே எல்லா பசங்களையும் தனியா வச்சோம். இப்போ அஞ்சுவு தப்பு சொல்ல முடியாது.
போகட்டும் வுடு… எங்க போயிடப் போறான். இங்குட்டு தான் பக்கத்துல இருப்பான். பாத்துக்கிடலாம். எல்லாம் குடும்பமா ஆகிட்டாங்க… நாமளும் எல்லாத்துக்கும் அவங்களை புடிச்சு தொங்க முடியாது… இந்த உடம்புல தெம்பு இருக்குற வரை இப்படியே இருப்போம்… மீறி முடியாமப் போனா எந்த மருமவளுக்கு நாம தொந்தரவா இல்லாம இருப்போமோ அங்குட்டு இருந்துப்போம்…”
பழனிவேலின் எண்ணங்களும் முடிவுகளும் தெளிவாய் இருக்க பரிமளதிற்கு அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
பெற்றவர்களின் நிலைக்கு சற்றும் சளைக்காத கலக்கத்துடன் இருந்தாள் புது மருமகளும்.
“வூடு பாத்திருக்கேன் கீர்த்தி. இந்த வாரத்துல அங்குட்டு போய்டலாம். என்னென்ன தேவைன்னு பாத்து சொல்லு வாங்கிபுடலாம்.” என்ற அஞ்சனை மனைவி புரியாது கலக்கத்துடன் பார்க்க,
“என்ன இப்புடி முழிக்குற? நீதான எல்லாம் விசுக்குனு நடந்துபோச்சு கண்ணாலம் பண்ணிக்குற ஓசனையில இல்லைனு சொன்ன… என்னால நடந்த கண்ணாலத்தை மாத்த முடியாது… அப்போ அதை எப்படி சரி செய்யுறதுனு பாக்கனோம்ல?
“ம்ம்… இங்கிட்டிருந்து பக்கமா பாத்திருக்கேன். நீ வேலைக்கு போகவும் சுலபமா இருக்கும் அத்தையை அடிக்கடி பாத்துகிட்ட மாதிரியும் இருக்கும். பொறவு என்னையும் அப்பப்போ நல்லா கவனிச்சிக்கலாம்…” என்று கண்சிமிட்டி அவளை சற்று நெருங்கிச் சொல்ல,
நாசியை தீண்டிச் செல்லும் அவன் மணத்தை உள்ளிழுக்க விரும்பாது இரண்டடி பின் நகர்ந்தாள் கீர்த்தியும். அதை கண்டு கொண்டவன் இரண்டடி முன்னெடுத்து வைத்து மூச்சுக்காற்று அவளை உரசும்படி குனிந்தவன்,
“அங்குட்டு உன்னையும் என்னையும் தவிர ஆரும் இருக்க மாட்டாங்க. ஆரு தொல்லையும் கிடையாது. நிதானமா என்ற ஆசையை புரிஞ்சிகிட்டு நீயும் கொஞ்சம் என்ற மேல ஆசைப்படலாம் கண்… ஆசைப்படலாம் கீர்த்தி தங்கம்.” என்று அவள் மூக்கை செல்லமாய் விரல் கொண்டு தீண்டியவன், சட்டையை கழட்டி அங்கிருந்த ஜன்னலில் மாட்டிவிட்டு கைகால் கழுவச் சென்று வந்தான்.
அவன் திரும்பி வரும் வரையிலும் அவன் விட்டுச் சென்ற இடத்தை விட்டு நகராது அவள் நிற்க, நெற்றிக் சுருக்கத்துடன் அவளை அழைத்தவன், “என்ன ஓசனை கீர்த்தி? நாளைக்கு அங்க வூட்டுக்கு போகோணும். அப்பாகிட்ட எல்லாம் சொல்லிட்டேன் அவுக நல்ல நேரம் பாத்து சொல்லிடுவாங்க… என்ன பண்ணனும்னு கேட்டுக்கோ.” என்றிட, யோசனையிலிருந்து கலைந்தவளாய் முகத்தில் தீவிரம் கூட்டி,
“எதுலையுமே என் விருப்பம் கேக்கல… நீங்களா முடிவெடுத்து நீங்களா உங்களுக்கு புடிச்ச மாதிரி வீடு பாத்துட்டு எங்கிட்ட தகவல் சொல்றீங்க.” என்று குற்றம்சாட்டி நின்றாள் பெண்.
“நான் தகவல் சொல்ற நிலைமையில தான் நீ என்னை நிறுத்தியிருக்க கீர்த்தி… என்றகூட சகஜமா பழகுனாதான் என்னாலையும் உன்கிட்ட கலந்து பேசி முடிவெடுக்க முடியும். உன்னை பேச வைக்குறதுக்கே நான் மூக்கால தண்ணி குடிக்க வேண்டியதிருக்கு… இதுல எங்கிட்டிருந்து நான் உங்கிட்ட எல்லாம் கலந்து பேசிட்டு செய்ய?” பேசிய சொற்களில் இயல்பு மாறி இறுக்கம் கூடியிருக்க அவன் முகமும் இறுக்கத்தை தத்தெடுத்திருந்தது.
எத்திசை சென்றாலும் பேசவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே வந்து நிற்கிறதே என்ற ஆயாசம் பெண்ணுக்கும் தோன்றாமல் இல்லை. வாயை திறக்காது இருந்தால் அவன் ஆட்டிவிக்கும் பொம்மையாய் மாறி விடுவோம் என்று உணர்ந்த பெண் தன் இறுக்கம் தளர்த்தி இணக்கம் கூட்ட, என் எண்ணத்திற்கு நீ உடன்படவில்லையென்றால் அந்த இணக்கம் கூட எனக்கு வேண்டாம் என்று பிடிவாதமாய் நின்றான் அஞ்சன்.